top of page

மூன்று முடிச்சு 13

மூன்று முடிச்சு


முடிச்சு - 13


தயாராக இருந்த கொள்ளு பேத்தியின் கையை பிடித்து கொண்ட சத்யா தாத்தா, “இங்க இருந்தே நீ காலேஜுக்கு போவியாம்,” கெஞ்சலாக கேட்டார்.


“இல்ல தாத்தா, எனக்கு கார் ட்ராவல் ஒத்துக்காததால நான் ஹாஸ்டல் போயிடறேன்,” என்றவளை தடுக்க முடியாமல்,


“இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு கிளம்பு கண்ணம்மா,” இறைஞ்சுதலாக மன்றாடிய தாத்தாவின் அன்பு கட்டி போட பார்த்தாலும், தான் அங்கே அதிகப்படி என்ற எண்ணமும் அழுத்த,


“இப்போவே ரெண்டு நாள், வேஸ்டா கிளாஸ் கட் தாத்து,” கண்களை சுருக்கி கெஞ்சலாக பார்த்த விது, தான் அவசியம் செல்ல வேண்டிய காரணத்தை விளக்கினாள்.


“அப்ப சரி… நானும் கூட வந்து உன்னை விடறேன்” என்ற பெரியவரிடம்,


அதுவரை அவர்களின் சம்பாஷணையில் குறுக்கிடாத சுபா, “நீங்க எதுக்கு போறது? உங்களுக்கு வீண் அலைச்சல் மாமா. நான் போய் விட்டுட்டு வரேன்.” மருமகள் உடன் போவதாக தெரிவிக்கவும் தான் பெரியவர் அமைதியானார்.


ஜாகிங் முடித்து வந்த திவாவும், இப்பேச்சைக் கேட்டுக் கொண்டு அங்கே தான் நின்றிருக்க, “சுபிம்மா, நான் வந்து விடறேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல நாம கிளம்பலாம்” என்று விட்டு, யார் பதிலையும் எதிர்பாராமல் தன் அறைக்கு சென்றான்.


அவன் தலை மறையவும், “ஸ்வீட்… உங்க பையன் ஒரே கப்பு. அழுக்கு மூட்டை… உவ்வே! எப்போவும் வெறும் காக்கா குளியல்!” தன் மூக்கை பிடித்து அபிநயித்த விதுவிடம்,


“அவனை கிண்டல் பண்ற அளவுக்கு உனக்கு கொழுப்பு கூடிடுச்சா?” சுபா சிரிக்கவும்,...


“அதெல்லாம் எங்களுக்கு எப்போவும் ஜாஸ்தி தான் ஸ்வீட். இந்த டூ மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி, உங்க பையன் குளியலும் டூ மினிட்ஸ் தான். யக்...” விது விடாமல் கிண்டல் செய்ய,...


“அவன் கதை தெரியாம பேசாதே, அப்புறம் நீதான் வருத்தப்படுவ குட்டி.” மகனின் பழக்கவழக்கமறிந்து எச்சரித்த சுபாவை பார்த்து, அலட்சியமாக சிரித்தாள் வித்யாலட்சுமி.


சுபாவின் கூற்று நிஜம் என்பது ஐந்து நிமிட காத்திருப்பு பதினைந்து நிமிடமாக நீண்ட போது மெல்ல புரிய, “எனக்கு நேரமாகுது ஸ்வீட்டி… நாமே கிளம்பலாம்” நடுவே விது கிளப்ப பார்த்தும்,...


“திவா கோபப்படுவான், அவனே கூட்டிட்டு போகட்டும் குட்டி” சுபா மறுத்து விட்டார்.


கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து, ஸ்டைலாக தலையை கோதி கொண்டு மெதுவே இறங்கி வரும் திவாவையும், தன் கடிகாரத்தையும் மாறி மாறி கோபமாக பார்த்தவளை கண்டுக் கொள்ளாமல், “டிஃபன் எடுத்து வைங்கம்மா” என்று சுபாவுக்கு குரல் கொடுத்தான்.


மகனுக்கு காலை சிற்றுண்டியை சுபா பரிமாற, அவளுக்கு நேரமாவதை பொருட்படுத்தாமல், மெதுவே ரசித்து சாப்பிடுபவனை பார்த்து, தன் நகத்தை கடித்து துப்ப மட்டுமே விதுவால் முடிந்தது.


மேலும் பத்து நிமிடங்கள் கரைய, பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருந்த விதுவின் காதில், “சுபிம்மா, சீக்கிரம் வாங்க... உங்களை திரும்ப கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு தான், நான் ஆஃபீஸ் போகணும். எனக்கு ரொம்ப லேட் ஆகிடும்.” திவா கத்தியது விழ,...


“மவனே… உன்னை…” என்று அவன் கழுத்தை நெறிக்கும் சைகையை செய்து, பல்லைக் கடித்தாள் வித்யா.


“போடி…” என்று அவன் சத்தமில்லாமல் வாயசைத்து பதில் கொடுத்து விட்டு, “என் புது ப்ளாக் ஷூ எங்கம்மா?” என்றவன், ஷூ அடுக்கி இருந்த இடத்தில் மேலும் சில நிமிடங்கள், ‘இதுவா, அதுவா?’ என்று மாற்றி மாற்றி கையில் எடுத்து பார்த்தான்.


ஏற்கனவே கடுப்பில் இருந்த விதுவின் காதில் வந்த புகையில், ஊட்டி மலை ரயிலையே ஒட்டி இருக்கலாம். க்ர்ர்…!


“எல்லாம் எடுத்துக்கிட்டாளா? அப்புறம் மறந்துட்டேன்னு சொல்லப் போறா! என்னால திரும்ப வீட்டுக்கு வர முடியாது” என்றவனை முறைத்தவள், ‘லேட் பண்றதும் பண்ணிட்டு, இப்போ வெட்டி அலட்டல் வேற!’ மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டே, தன் பைகளை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே வந்தாள்.


“நீ முன்ன உக்கார் குட்டிமா,” என்ற சுபா... “மெல்ல ஓட்டு திவா.” என்று மகனுக்கு கட்டளையிட, அதை காதில் வாங்காதவனாக தன் பாட்டில் எப்போதும் போல் வண்டியை ஓட்டினான்.


சீட்டில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டு வந்த விது, ‘எப்போதடா ஹாஸ்டல் வரும்?’ என்று நினைக்க ஆரம்பித்தாள்.


திடீரென்று கார் நிற்கவும், ‘அதற்குள் வந்து விட்டோமா?’ என்று விது கண்ணை திறக்க, ஒரு மெடிக்கல் ஷாப் தான் கண்ணில் பட்டது.


“பிரிஸ்கிப்ஷனைக் குடு…” என்று கையை நீட்டினான் திவாகர் சத்யா பிரபாகர்.


“எதுக்கு திவா மருந்து?” என்று சுபா அவனை கேள்வியாக பார்க்க,...


“அவ ரொம்ப அனீமிக்கா இருக்கா சுபிம்மா! டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்து இருக்கார்.”


“மதி என்ன கவனிக்கறா உன்னை? வயசு பிள்ளைக்கு சத்தான ஆகாரம் கொடுக்கணுமில்ல!” சுபா கோபமாக கேட்க,.


அக்கறையோடு மருந்துச் சீட்டை கேட்ட திவாவின் முகமோ, அக்காவின் பெயரைக் கேட்ட நொடி, விரல் தொட்டதும் ஓட்டுக்குள் ஒளிந்துக் கொள்ளும் நத்தையாக மாறி, சுணங்கியது. அருகில் இருந்த விதுவும் அவன் முக பாவத்தை கவனித்து விட்டாள்.


“நானே அப்புறம் வாங்கிக்கறேன்…” காட்டமாக சொன்னவளிடம்,


“விளையாடாத குட்டி…” அவளிடம் கண்டிப்பாக சொன்னவர், “ரெண்டு நாளா நீ ஏன் இதை சொல்லலை?” என்று மகனையும் சாடி விட்டு, அவன் முறைப்பை பொருட்படுத்தாமல், விதுவிடம் இருந்து மாத்திரை சீட்டை வலுக்கட்டாயமாக வாங்கி, திவாவிடம் நீட்டினார்.


அவன் வாங்கி வந்த மாத்திரைகளை விது மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொள்ள, மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, அதன் பின் விதுவின் ஹாஸ்டல் வளாகத்தில் தான் கொண்டு போய் காரை நிறுத்தினான்.


ஹாஸ்டலில் அங்கே இங்கே நின்று இருந்தவர்கள், காரில் இருந்து இறங்கிய விதுவை, ஒரு மாதிரி பார்க்க, வெளியே நின்றிருந்த ஹாஸ்டல் வார்டன் அவளை கவனித்து விட்டு, “கம் டு மை ரூம் வித்யா…” கடின குரலில் உரைத்து விட்டு போனார்.


“அவங்க யாரு கண்ணம்மா?” என்ற சுபாவிடம்,...


“ம்ம்… எங்க வார்டன்!” என்றவளிடம், ‘அந்த நித்தி எருமையால, இந்த இம்சையை சமாளிக்கணும்’ என்று புலம்பிக் கொண்டே தன் பைகளை எடுத்துக் கொண்டாள்.


“ம்மா… நாமும் போய் அவங்ககிட்ட சொல்லிட்டு, அப்புறம் விடலாம்” என்ற திவா, வண்டியில் இருந்து இறங்கினான்.


வார்டனின் அறைக் கதவை தட்ட, “கம் இன்…” என்ற பதிலுக்கு பின், மூவரும் உள்ளே நுழைந்தனர்.


“ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட் திஸ் பிஹேவியர் ஃப்ரம் யூ வித்யா!” எடுத்தவுடன் அர்ச்சித்தவாறே நிமிர்ந்தவர், கூட நின்றிருந்த மற்ற இருவரையும் ‘யார்?’ என்பது போல் பார்த்தார்.


“இவங்க என்னோட பாட்டி, அண்ட் அங்… கிள்…!” ‘அங்கிளில்’ சற்றே கூடுதல் அழுத்தத்தை விது கொடுத்ததை கேட்ட திவா நறநறவென பல்லைக் கடித்தான்.


விது விளக்கம் தர ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, “உன்னால இந்த ஹாஸ்டலுக்கே கெட்ட பெயர் வித்யா!” பொரிய தொடங்கிய வார்டனிடன்,


“எக்ஸ்கியூஸ் மீ மேடம், தப்பு செஞ்சது நித்யா! இவ, ஐ மீன் வித்யா, ஹாஸ்டலைட் தான். பட், வீக்கென்ட் அவ வீட்டுக்கு போயிடுவா தானே?” திவா குறுக்கிட்டு வார்டனை கேள்வியாக பார்க்க,...


“ஆம்…” என்று தலையசைத்த வார்டனின் முகத்தில், ‘இதை எதற்கு கேட்கிறான்?’ என்ற யோசனை தோன்றியது.


“அதனால தான் நித்யா லவ் செஞ்சதோ, இல்ல இப்படி ப்ளான் பண்ணினதோ, வித்யாவுக்கு தெரியலை. இன்ஃபேக்ட், ஷி இஸ் அஃபெக்டட் எ லாட் பிகாஸ் ஆப் நித்யாஸ் இர்ரெஸ்பான்சிபிள் ஆக்க்ஷன்ஸ்!” திவாவின் கூற்றை நம்பாதவராக,


“நித்யா, உன்கிட்ட எதுவும் சொன்னது இல்லைன்னு என்னால நம்ப முடியலை” என்ற வார்டனின் பதிலடிக்கு,


“இல்லை மேம்… நெஜமாவே எனக்கு எதுவும் தெரியாது” விது உறுதியாக சொல்லவும், அதே நம்பாத அழுத்த பார்வையை கை விடாது முறைத்த வார்டனிடம்,


“லுக் மேடம், உங்களுக்கு வேண்டப்பட்ட, ஃபிரெண்டை யாரோ தெரியாதவங்க, காரில் ஏத்துனா நீங்க என்ன பண்ணுவீங்க?” திவா சீரியசாக கேள்வியெழுப்ப,


எதற்கு கேட்கிறான் என்று புரியாவிட்டாலும், “கத்தி கூச்சல் போடுவேன். காப்பாத்த முயற்சி பண்ணுவேன்.” வார்டன் பதில் கொடுக்க,...


“எக்சாக்ட்லி மேடம்! அதே தான் வித்யாவும், ட்ரை செஞ்சா. பட், அவ வாயை அடைச்ச நித்யா, இவளை காருக்குள்ள ஏத்திட்டா.”


“நிஜமாவா?” கண்ணை விரித்த வார்டனிடம், அன்று போலீஸ் எஸ்.ஐ.யிடம், சொன்னதையே மீண்டும் ஒப்பித்தாள் விது.


சில நொடிகள் அவர்களின் பேச்சை யோசனையாக பரிசீலித்தவர், “ஓகே விது, உங்க ரெண்டு பேரால இந்த ஹாஸ்டலோட பேரே கெட்டு போயிடுச்சு. இனி உன் மேல ஒரு சின்ன கம்ப்ளையின்ட் வந்தாலும், நீ காலி பண்ண வேண்டியது தான், ஜாக்கிரதை” என்றவர், “இப்போ நீ உன் ரூமுக்கு போ.” என்றார்.


“நீ கிளம்பு குட்டிமா, நாங்க மேடம்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு கிளம்பறோம்.” சுபா சொல்லவும், வகுப்புக்கு நேரமாகும் காரணத்தால், “பை ஸ்வீட்டி,” என்றவள், திவாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, கிளம்பி விட்டாள்.


“மேடம், நாங்க விதுவோட அம்மா வீட்டு ஆளுங்க. இனி அவளுக்கு நாங்க தான் கார்டியன்! வெள்ளிக்கிழமை எப்போவும் போல வீட்டுக்கு கிளம்புவா, பட் எங்க வீட்டுக்கு!” என்ற சுபா மேலும் சில நிமிடங்கள் வார்டனிடம் பேசி விட்டு கிளம்பினார்.


தன் அறைக்கு போக ஆரம்பித்தவளை மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு, “என்ன ஆச்சு?” என்று சிலர்... “ஏண்டி இப்படி செஞ்சீங்க?” என்று ஒரு சாரர், “உங்களைக் காணாம பயந்துட்டோம் தெரியுமா?” என்ற வாணி, இப்படி ஆளாளுக்கு ஒரே மூச்சில் கேள்விகளை தொடுத்து, அவர்கள் கூற நினைத்ததை படபடக்க, விதுவுக்கு மயக்கம் வராத குறை.


அவளை வாயே திறக்க விடவில்லையே அந்த கூட்டம். ஒரு வழியாக சற்று முன் திவா போட்ட கோட்டை பிடித்து வார்டனிடம் கூறியதை இங்கே தோழிகளிடம் திருப்பி படித்தாள்.


அவர்களும் வார்டனை போல சில பல சந்தேகக் கேள்விகளை எழுப்ப, அதே பதிலை இங்கேயும் கொடுத்தாள். நடந்ததை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில், வினாக்களால் தோழிகள் துளைத்தெடுக்க, பதில் சொல்லிக் கொண்டிருந்த வித்யாவுக்கு அந்த நிலையிலும் திவாவை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.


என்ன தான் தன் வரவை அவன் துளியும் விரும்பவில்லை என்பதை இந்த இரு நாள் வீசிய எரிச்சல் பார்வையாலும், முக திருப்பலாலும் அழுத்தமாக பதிந்தாலும், தனக்காக வார்டனிடம் பரிந்து பேசி, எல்லோரையும் சமாளிக்க வழி காட்டிய திவாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள்.


“வீக்கெண்ட்டுல நித்யா கூட ஊர் சுத்தின உங்களுக்கே அவ லவ்வை பத்தி தெரியாதப்பா, எனக்கு எப்படி தெரியும்?” தோழிகளை விது மடக்க,...


“டீ விது, அன்னைக்கு பிள்ளையார் கோவில்ல ஒருத்தர்கிட்ட நீ பேசினியே! அவரா, நித்யாவோட ஆளு?” வாணி ஆர்வமாக கேட்க,...


‘ஆஹா… அந்த மோகனை முன்னையே பார்த்து இருக்கிறோமா?’ விது குழம்பி நிற்க, அதற்குள் மற்றவர்கள் “அப்போ அவ லவ் விஷயம், உனக்கு முன்னாடியே தெரியுமா குரங்கு?” என வாணியின் மேல் பாய்ந்தனர்.


“ஐயோ… இல்லடீ! ரெண்டொரு வாட்டி நாங்க வெளிய சுத்த போனப்ப, நித்யாக்கிட்ட ஒருத்தர் வந்து தனியா பேசினப்ப, நான் கேட்டதுக்கு, அவங்க ஊர்காரர்னு சொன்னா, வேற எதுவும் எனக்கு தெரியாது. அதை வெச்சு, நானா கெஸ் பண்ணேன்” வாணி சமாளித்தாள்.


என்ன யோசித்தும் நினைவுக்கு வராததில், “லூசு வாணி, அவர்கிட்ட பேசினேனா! என்னைக்குடீ?” வித்யா கேட்டதற்கு,


“அதான் எருமை, பொங்கல் லீவ் முடிஞ்சு வந்தப்புறம், சினிமாவுக்கு போக நாங்க எல்லாம் ஒரு வெள்ளிக்கிழமை கிளாஸ் கட் பண்ணோமே! நீயும், நித்தியும் ‘கோவிலுக்கு மட்டும் வரோம்’னு, கூட வந்தீங்களே! இதுக்கு முன்ன அவகிட்ட பேசின அதே ஆள், அன்னைக்கு உன்கிட்ட ஏதோ பேசுறதை கவனிச்சேன். நித்தியும், உங்க கூட நின்னுட்டு இருந்தாளே!” சம்பவத்தை வாணி நினைவுக் கூற,...


வாணி சொன்ன தருணம் ஞாபகத்துக்கு வர, “ஓ… அன்னைக்கா? அது அவளை யாரோ ஃபாலோ பண்றதா, எங்கிட்ட சொன்னாளா, நான் போய்…” என்ற விது, அன்று நடந்ததை நினைத்து பார்த்து, மேலும் பேசாமல், “அச்சோ, லூசி விது..!” என்று தன் தலையில் குட்டிக் கொண்டாள்.


“என்னடி ஆச்சு?” பதிலுக்காக அவள் முகத்தை மற்றவர்கள் ஆவலாக பார்த்தனர்.


“ஹா… அது… ஒண்ணுமில்ல…”


“எருமை, சொல்லித் தொலைடீ! நீங்க பண்ணி வெச்ச வேலைக்கு, எங்க வீட்டுக்கெல்லாம் லெட்டர் போயிருக்கு. வார்டன் எங்க எல்லாரையும் கிழிச்சு தோரணம் கட்டிடுச்சு.” அனாவசியமாக தாங்கள் அனுபவித்த கஷ்டத்தை, மற்றவர்கள் எரிச்சலாக வாய் மொழிந்தனர்.


“ஓ…” என்றவளின் வாயில், விட்டால் அடி கொடுக்கும் வெறியில் அவர்கள் முறைக்க,...


“இந்த நித்தி எருமை என்கிட்ட புலம்பினதை நம்பி, இவ லவ் விஷயம் தெரியாம, நான் பாட்டுக்க, அந்த அவர்கிட்ட போய், ‘ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’னு நீங்க ஸ்கூல்ல சொன்னதில்லையா அண்ணா! அப்படி இப்படின்னு உளறிக் கொட்டி, அட்வைஸ் எல்லாம் செஞ்சு தொலைச்சேன் டீ!”


நடந்ததை கூறி விட்டு பெப்பே என்று முழித்தவளை பார்த்து, “நீ கண்டிப்பா லூசே தான்டீ…” என்று கெக்கே பிக்கேவென்று மற்றவர்கள் கேலியாக சிரித்தனர்.


“வேணாம்... நானே கொலை வெறியில இருக்கேன்.” கடுப்பின் உச்சத்தில் இருந்த விதுவின் பேச்சை அவர்கள் காதில் வாங்கினால் தானே, அதுவரை நிலவிய இறுக்கம் தளர, அவளை ஓட்டித் தள்ளினர்.


“சரிசரி, அதை விடுங்க… முக்கியமான மேட்டருக்கு வருவோம். உன் கூட இப்போ வந்த ஹீரோ யாரு?” ஒருத்தி புது விசாரணையை ஆரம்பிக்க,...


“ஏய் கிளாசுக்கு நேரமாச்சு. இன்னைக்கு முசுட்டு முரளியோடது ஃபர்ஸ்ட் கிளாஸ் டீ!” விது அலற, அதில் கவனம் கலைந்தவர்கள்,


“ஐயோ… அந்தாள்கிட்ட யார் பேச்சு வாங்கறது? வாங்கடீ போலாம்.” அனைவரும் அரக்க பரக்க காலேஜுக்கு ஓடினர்.


அடுத்து வந்த நாட்களில், காலேஜில் ஒரே துக்கம் விசாரிக்கும் படலம் தான். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் முதல், பி.ஜி. படிக்கும் மாணவர்கள் வரை வித்யாவை விதவிதமாக பேட்டி எடுத்தே நோகடித்தனர்.


வெள்ளியன்று மதியம்,


லீவில் இருந்து அன்று தான் டியூட்டியில் சேர்ந்த ப்ரோஃப்பெசர் ஒருவர், தன் பங்குக்கு லவ்டேல் விஷயங்களை மீண்டும் ஒரு முறை விதுவிடம் கேட்டு, அவளை ஒரு வழியாக்கி, தன் பங்குக்கு அறிவுரைகளை வேறு அள்ளி விட்டு, அவளை அனுப்ப, ‘ஷப்பா… தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஸ்டாஃப் ரூமில் இருந்து வெளியே வந்தவள், கால் போன போக்கில் கல்லூரி வளாகத்தில் நடக்க ஆரம்பித்தாள்.


“ஹாய் பிரின்சஸ், கண்டுக்காம போற?” பழகிய குரலில், நிமிர்ந்து பார்த்த வித்யாவின் முன், க்ளோசப் டூத் பேஸ்ட் விளம்பர மாடல் போல் பிரகாசமாக புன்னகைத்து நின்றிருந்த இளைஞனின் உற்சாகம், அவளையும் தொற்ற... “விவேக் சார்!” என்றாள் முகமெல்லாம் இவளும் பல்லாக.


“அதே விவேக் தான். அப்புறம் மேடம் எப்படி இருக்கீங்க?” அவனின் ஆராய்ச்சி பார்வை சங்கடமாக இருக்க, வெறுமே தலையை அசைத்தாள்.


“ம்ம்… எல்லாம் கேள்விப்பட்டேன்!”


‘இவருக்கும் விஷயம் தெரியுமா?’ விது நிமிர்ந்து அதிர்ச்சியாக அவனை பார்க்க,...


“டவுட் கேட்க மட்டும் சீனியர் இல்ல. ஏதாவது உதவி வேணும்னாலும் நீ தயங்காம என்கிட்ட கேட்கலாம் பிரின்சஸ்.” மிக சின்சியராக ஒலித்த அவன் குரலில், அவனை நேரடியாக பார்த்த விதுவிடம்,...


“சும்மா அடுத்தவங்க தப்புக்கு உன்னையே வருத்திக்காம, படிப்பில் கவனம் வை… புரிஞ்சுதா?” என்றவனிடம், அதன் பின் பாடம் சம்பந்தமாக சிறிது நேரம் பேசிய விதுவுக்கு புது உற்சாகம் பிறந்தது.


புன்னகை முகமாக பரீட்சைக்கு விவேக் சொன்ன வாழ்த்தை ஏற்றவள், அவனிடம் விடைபெற்று, வகுப்பு நோக்கி நடந்தாள். இத்தனை நாளில், அவளிடம் சரியாக பேசிய ஒரே ஜீவன் விவேக் தான். அதிகம் பழக்கம் இல்லை என்றாலும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல், புண்பட்டிருந்த மனதுக்கு ஆறுதலாக பேசியவனின் பேச்சு மட்டுமல்ல, அவனின் அந்த குணமும் அவளை கவர்ந்தது.


அதன் பின் மதியம் மற்ற வகுப்புக்களை உற்சாகமாகவே அட்டென்ட் செய்த விது, காலேஜ் முடிந்து தோழிகளோடு, அரட்டை அடித்து கொண்டு ஹாஸ்டலுக்கு நடந்த வர, அங்கே ஹாஸ்டலின் முன் சுபா நிற்பதைக் கண்டதும் சந்தோஷமும், அழுகையும் ஒன்றாக பொங்கியது.


“ஹாய் ஸ்வீட்… எப்படி இருக்கீங்க? இங்க என்ன பண்றீங்க?” குரல் கமர கேட்டவளிடம்,...


“உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தேன் செல்லக் குட்டி. போடா, உனக்கு தேவையானதை எடுத்துட்டு வா, கிளம்பலாம்!” என்றவரின் கொஞ்சலான பேச்சில் விதுவின் கண்கள் மேலும் கலங்கி விட்டது.


அம்மாவை பிரிந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. தினமும் அவரிடம் பேச முயன்றும் முடியாமல், தனிமையில் அழுதுக் கொண்டு இருந்தவளுக்கு சுபாவை பார்த்ததும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது, அவரை இறுக கட்டிக் கொண்டாள்.


தோழிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி வீட்டுக்கு வந்தவளை சுபாவும், சத்யா தாத்தாவும் வழக்கம் போல் உபசரித்து தாங்க... பிரபாவும், திவாவும் கண்டுக் கொள்ளவே இல்லை.


இதில் திவாவின் பாராமுகம் விதுவை பெரிதும் பாதித்தது. அன்று அத்தனை அக்கறையும், கரிசனமும் காட்டியவன் இன்று அவளை எதிரியை போல் முறைப்பதும், அவள் இல்லாதது போன்ற பாவனையில் அவளை ஒதுக்கி நடந்துக் கொள்வதும் விதுவால் ஏற்க முடியவில்லை.


உடன் பிறந்த ஆதியின் அலட்சியத்தை சுலபத்தில், ஒதுக்க முடிந்தவளால், ஒரே ஒரு நாள் நண்பனாக, நலம் விரும்பியாக இருந்த திவாவின் ஒதுக்கத்தை ஏனோ கண்டுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதை, இதை நினைத்து வருந்தியவள், நேரம் கழித்து உறங்கினாள்.


சனியன்று மெதுவே எழுந்து, குளித்து கிளம்பி வந்தவளை பார்த்து, “இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமே கண்ணம்மா…” சத்யா தாத்தா கனிவாக கேட்க, அப்போதே மணி, காலை பத்தரையை தாண்டியிருக்க, வெளியே செல்ல கிளம்பி வந்த திவாகரின் காதில் தாத்தாவின் பேச்சு விழவும், காண்டானான்.


அவன் முகத்தில் தோன்றிய ஏளனத்தைக் கண்டு, முகம் சிறுத்த விது, “என்னை சீக்கிரம் எழுப்பி விட்டு இருக்கலாம்ல ஸ்வீட்டி,” சலுகையாக சுபாவிடம் செல்லமாக சிணுங்குவதைப் பார்த்து மேலும் எரிச்சலான திவா,...

“ம்மா… நைட் நான் வர நேரமாகும். டின்னர் வெளியே சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது, மெதுவே எதுவோ விஷயமாக சுபாவின் காதை கடித்து கொண்டிருந்தாள் வித்யா.


“அம்மா…” என்று பொறுமையிழந்து திவா அழைக்க, அவன் புறம் திரும்பாமல், விதுவிடம் அவர் எதுவோ முணுமுணுக்க, “ஹூஹும்… நீங்களே கேளுங்க ஸ்வீட்டி…” என்ற விதுவின் பதில் காதில் விழ,...


வெளியே கிளம்பும் தன் மீது கவனமில்லாமல், அவளிடம் வார்த்தையாடும் அம்மாவின் மேல் கோபம் வர, அதற்கு காரணமான விதுவை நோக்கி, “என்ன கேக்கணும்?” காட்டமாக அவன் அருகே வந்த தோரணையில், பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள்.


“மோகன் பத்தி உன்கிட்ட கேக்கணும்னு, நேத்தே சொன்னா திவா.”


“மோகனை பத்தி என்ன தெரியணும் உனக்கு?”

இறங்கி வந்ததில் இருந்து உர்ரென்று முறைப்பவனின் மீது எழுந்த எரிச்சலில், “ம்ம்… அவர் எந்தக் கடையில அரிசி வாங்கறாருன்னு தெரிஞ்சிக்கணும்!” வெடுக்கென்று விது பதில் தர, அவளை மேலும் முறைத்தான் முறை மாமன் திவா.


“ஹாப்பி மாரிட் லைஃப் மச்சின்னு, இளிச்சுக்கிட்டே வாழ்த்திட்டு, எங்கிருந்தாலும் வாழ்கன்னு அவங்களை நீங்க வழியனுப்பி வெச்சுட்டு, அதுக்கு நான் வேற சாட்சி…” கோபமாக விது தன் பாட்டில் பேச துவங்க,


“ஏய் லூசு… வாயை மூடு…” எரிச்சல் த்வனியில் திவா கடியவும்,


“திவா…” சுபாவும், தாத்தாவும் ஒன்றாக அவனை அதட்டினர்.


சுபாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு, “பாருங்க ஸ்வீட்டி, உங்க முன்னையே என்னை சும்மா சும்மா திட்டறார்.” சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கும் தைரியத்தில் இளையவள் ராகம் இழுக்க,...


“இவகிட்ட சொல்லி வைங்கம்மா. இப்போ இங்க யோசிக்காம பேசினது மாதிரி, வேற யார்கிட்டயாவது லூசுத்தனமா உளறி வெக்க போறா. மோகன் விஷயத்துல நமக்கு சம்பந்தம் இல்லைன்னு நாம எட்டி இருக்க வரை தான் நம்ம எல்லாருக்கும் நல்லது. பாண்டியன் அங்கிள் சாதியை சேர்ந்தவங்க, அந்த பொண்ணு வீட்டு ஆளுங்களை ஊரை விட்டே துரத்திட்டாங்கலாம்!”


“என்ன திவா சொல்ற?” என்ற சுபா அதிர்ச்சியாக மகனை நோக்க,


“ஏற்கனவே சொந்தத்துலயே முடிவு செஞ்ச கல்யாணம் நடக்காம போன ஏமாற்றத்துல, நித்யாவோட உறவுக்காரங்க கோபப்பட்டு, பஞ்சாயத்தை கூட்டி, மொத்த குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி தள்ளி வெச்சுட்டாங்களாம். ஆள் பலத்தோட போன பாண்டியன் அங்கிள், அவங்க வீட்டுல மிரட்டினப்ப, பாவம்... உதவிக்கு சொந்தக்காரங்க யாருமே வரலையாம். என்னாகுமோன்னு நித்யாவோட குடும்பம் நித்தமும் படற பாட்டை கேட்கவே சங்கடமா இருக்கு சுபிம்மா.”


“இந்த மோகனுக்கு புத்தி ஏண்டா இப்படி போச்சு? லவ் பண்றது சரி… அதுக்கு இப்படியா? பின் விளைவுகளை பத்தி யோசிக்காம, சுயநலமா, தங்களோட வாழ்க்கையை பத்தி மட்டுமே அவங்க ரெண்டு பேரும் நினைச்சதால, எத்தனை பேருக்கு இப்போ கஷ்டம்!” சுபா வருந்த,...


“நம்ம ஃபீல் பண்ணி என்ன ஆகப் போகுது சுபிம்மா. பாண்டியன் அங்கிளும் கொஞ்சம் இறங்கி வரலாம். மோகன் அவருக்கு ஒரே பையன்! அவன் இஷ்டத்துக்கு விட்டு இருந்து இருக்கலாம். அவர் இன்னும் எங்க மூணு பேரையும் முழுசா நம்பலை. போனுக்கு மேல போன் போடறார். சந்து, விஜி வீட்ல எல்லாம் கூட போய் பேசியிருக்கார். இவ்ளோ ஏன், நம்ம ஆனந்தோட ஃபிரெண்ட்ஸ் மட்டுமில்ல, ஹனிமூனுக்கு போயிருக்க ஆனந்தையும் விடலைன்னா பார்த்துக்கோங்க.”


“என்னமோ போ கண்ணா, இந்த பிரச்சனை எங்க போய் முடியப் போகுதோ? நீ ஜாக்கிரதையா இரு” என்ற சுபா, மகனை வழியனுப்பி வைத்து விட்டு வந்தார்.


அதன் பின் கொஞ்ச நேரம் விது, சுபா, சத்யா தாத்தா, தமக்குள் ஏதோ பேசினாலும், மூவருக்கும் மனம் ஒரு நிலையில் இல்லை.


**************************


அன்று மாலை நண்பர்களோடு திவா அரட்டை அடித்துக் கொண்டு இருந்த வேளை, வேண்டுமென்றே விஜய், “அப்புறம் சொல்லு மச்சி, சிஸ்டர் எப்படி இருக்காங்க?” என்று திவாவை சீண்டினான்.


“உன் சிஸ்டரை பத்தி என்கிட்டே ஏண்டா கேட்கற?” என்ற திவா, தன் போனில் பார்வையை பதிக்க,


‘என்கிட்டேயேவா…’ என்று தோழனை பார்த்த விஜய் விடுவதாக இல்லை.


பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

பூத்திருச்சு வெக்கத்த விட்டு

பேசிப் பேசி ராசியானதே

மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே

ரொம்ப நாளானதே…


பாடலை சத்தமாக முணுமுணுத்தான்.


“வேணாம் விஜி…” என்று ஒரு சேர சந்தோஷும், திவாவும் பாய்ந்தனர்.


“நீ எதுக்குடா பொங்குற?” கோபமாக திவா கேட்கவும்,


“டேய்… விது எனக்கு சிஸ்டர்டா…” சந்து அவசரமாக வார்த்தைகளை துப்ப, அது என திவா கெத்தாக பார்த்து வைத்தான்.


‘மச்சி, என்னடா நடக்குது இங்க?’ என்று விஜய் அவர்களை குறுகுறுவென அளவிட,


“ப்ளீஸ் விஜி, அவளை பத்தி எதுவும் பேசாதே. வீட்ல அம்மாவும், தாத்தாவும் அவளை கொஞ்சுறதை பார்த்து செம கடுப்புல இருக்கேன்” என்ற திவாகரை நன்கு அறிந்தவர்களாக,...


“இதே கோயம்பத்தூர்ல ‘இந்த பொண்ணு மதியக்கா பொண்ணா இருப்பாளோ’ன்னு, போற வர பொண்ணுங்களை லோ லோன்னு பார்த்த ஆளு நீ! இப்போ, உங்க வீட்லயே இருக்கறவக்கிட்ட முறுகிக்கிட்டு இருக்கறங்கறது நம்ப முடியலையே நண்பா! நம்ப முடியலையே!” என்று விஜய் வெளிப்படையாக சொல்ல,...


“உன்னை…” என்று அவன் கழுத்தை நோக்கி கைகளை கொண்டு போன திவா, “ப்ச்… எங்க யாரையும் அவளுக்கு தெரியாது. அம்மா சொல்லி தான், நாங்க எப்படி சொந்தம்னே அவளுக்கு தெரிய வந்துருக்கு.” வலியோடு விளக்கிய நண்பன் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்தவர்கள், திவாவின் மனநிலையை புரிந்துக் கொண்டு, தோளை தட்டி ஆறுதல் தந்தனர்.


“என்னை யாருன்னு அடையாளம் தெரியாதது முக்கியம் இல்லடா. இப்படி உறவுங்க இருக்காங்கன்னு கூட சொல்லி, அவங்க அம்மா வளர்க்கலைங்கறதை கேக்கறப்ப, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. நாங்க அவ்ளோ வேண்டாதவங்களா ஆகிட்டோம் இல்ல!” வருத்தத்தோடு பேசியவன், தூரத்தில் இலக்கில்லாமல் வெறித்தான்.


தங்களை தாழ்த்தி பேசி ருக்மிணி அம்மாள் அவமானப்படுத்தியதை சுபா என்றும் பெரிதாக எடுத்ததில்லை. மகனையும் அதே மனநிலையில் தான் வளர்த்து இருந்தார். ஆரம்பத்தில் மதியை பற்றி திவாவிடம் பேச்சு கொடுத்து, பழைய மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்து பிரிந்த உறவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தார்.


மாதங்கள், வருடங்களாக வளர, தன் அப்பாவை முன் மாதிரியாக பார்த்த திவா, அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய தன் அக்கா மதியை பற்றி அம்மா பேச ஆரம்பிக்கும் போது அப்பேச்சை விரும்பவில்லை என்று அவருக்கு உணர்த்த ஆரம்பித்தான். அதன் பின் சுபாவும் கொஞ்சம் கொஞ்சமாக மகளை பற்றி மகனிடம் பேசுவதைக் குறைத்து, முற்றிலுமாக நிறுத்தி விட்டார்.


பருவ வயது வந்த போது, பெண்கள் பற்றி நண்பர்கள் அளவளாவும் போது, திவாவின் மனக்கண்ணில் தோன்றிய ஒரே பெண் சின்னுவான வித்யா மட்டுமே!


காலேஜ் நாட்களில் விதுவை பற்றி நண்பர்களிடம் உளறி இருக்கிறான். அதை வைத்து தான், விஜய் இன்று பேசியது. அக்கா மற்றும் அவள் மகளை பற்றி மனம் திறந்து வெளிப்படையாக வீட்டில் பேசாவிட்டாலும், அவர்கள் நினைவை திவாவால் முற்றிலும் அகற்ற முடிந்ததில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு வளர்ந்தவனுக்கு விதுவுக்கு தங்களை யாரென்று தெரியவில்லை என்பதை அத்தனை சாதாரணமாக எடுக்க முடியவில்லை.


அதே நேரம் இத்தனை ஆண்டுகள் கழித்து, விதுவை எதிர்பாராமல் சந்தித்த போது தந்தைக்கு நேர்ந்த அவமானம், தன்னால் அப்பாவுக்கு வந்த தலைக் குனிவு, அதன் விளைவான அப்பாவின் பாராமுகம், எல்லாம் சேர்ந்து ‘இவள் எனக்கு வேண்டாம்’ என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு (denial) இருந்தான் திவாகர்.


முடிச்சு விழுமா…?© KPN NOVELS COPY PROTECT
bottom of page