top of page

மூன்று முடிச்சு 12

மூன்று முடிச்சு


முடிச்சு - 12


நள்ளிரவு தாண்டியும் இருவரும் உறங்காமல் உரையாடிக் கொண்டிருந்ததால், தொண்டை வறண்டு இருமல் வர, அவருக்கு நீரை ஊற்றி வித்யா கொடுக்க, ஒரு மடக்கு விழுங்கி விட்டு, விட்ட இடத்தில் இருந்து பேச்சை தொடர்ந்தார் சுபத்ரா.


“உனக்கு ரெண்டு வயசு முடிஞ்ச சில மாசம் கழிச்சு, உடுமலையில இருக்கற உங்க குலசாமி கோவில்ல வெச்சு முடியிறக்க ஏற்பாடு பண்ணாங்க. தாய்மாமன் முறைக்கு திவா மடியில, உன்னை உட்கார வைக்க போறோம்னு நினைச்சதால, உன் பிரபா தாத்தா, ‘கண்ணா, மொட்டை அடிக்கும் போது பாப்பா அசைவா, அழுவா ராஜா. நீயே சின்ன கண்ணா தானே, சாஸ்திரத்துக்கு உன் மடியில உட்கார வைப்போம். அப்புறம் அப்பா, பாப்பாவை வாங்கிக்கறேன். சரியா’ன்னு திவாவுக்கு நிறைய விளக்கம் தந்து, விழாவுக்கு அவனை ஆசையாசையா தயார் செஞ்சார்.”


“வாவ் டி.எஸ்.பி சார் மடியில எனக்கு மொட்டை!” இளையவள் குதூகலிக்க, கண்களில் வலியோடு, குரல் கமர,


“இல்ல கண்ணு… அவரோட தூரத்து சொந்தத்துல, உனக்கு மாமா முறை உள்ள வேற யாரையோ, உன் அப்பா, சபையில உட்கார வெச்சுட்டதை கவனிச்சு, ‘நாராயணா, என்னய்யா நடக்குது இங்க?’ நடப்பது புரியாம சத்யா தாத்தா பதறினார்.”


“ஆனா, உன் அப்பா, அசராம, அலட்சியமா ஒரு பார்வை பார்த்து, ‘கண்ட **** சாதிப் பய மடியில, என் பொண்ணுக்கு மொட்டையா’ன்னு ஆக்ரோஷமா கேட்கவும், உன் பிரபா தாத்தா ஆத்திரத்துல, மாப்பிள்ளைன்னு பாராம உங்கப்பாவோட சட்டையை கொத்தா பிடிச்சு, ‘யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன’ன்னு கோபமா கத்திட்டார்.”


“உன் அம்மா மதி அழுகையோட, புருஷனை ‘ஏன் இப்படி செய்யறீங்க’ன்னு கேட்க பாக்குறா, இவங்களை பிடிச்சு வைக்க பார்த்து ‘பிரபா விடுப்பா’ன்னு லக்ஷ்மி அத்தை வேற கெஞ்சறாங்க, போதாததுக்கு இவங்க ரெண்டு பேரையும் பிரிக்க வந்த மற்ற உறவுகளின் முயற்சியும் தோற்றது.”


“உன் ருக்மிணி பாட்டியோ, ‘**** சாதி தானே! அதை பொதுவுல சொன்னா ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ! அவ கூட *******இருக்கும் போது’ன்னு, மேலும் அசிங்கமா தொடர்ந்து பேச ஆரம்பிக்க, மொத்த உறவும் கூடியிருந்த, பொது இடத்துல, காது கூசுற அந்த அநாகரிக பேச்சால, ஏற்பட்ட அவமானம் பிடுங்கி தின்ன, உன் அப்பாவை சட்டுன்னு உதறி தள்ளிட்டு, சம்பந்தியம்மாளை அடிக்க கையை ஓங்கிட்டு, ஆவேசமா போயிட்டார் உன் பிரபா தாத்தா.”


“தன் அம்மாவை அடிக்க மாமனார் கையை ஓங்கவும், பதிலுக்கு அவர் தோளை புடிச்சு உன் அப்பா ஆவேசமா தள்ளி விட்டதில், நிலை தடுமாறி விழ இருந்த பிரபா தாத்தாவை எங்க உறவினர் ஒருவர் பிடித்து நிறுத்த, அங்கே ஒரே கைகலப்பாகி, விசேஷ வீடு போர்க்களமா மாறிடுச்சு. இரு பக்க பேச்சுக்களும் எல்லை மீறி, வார்த்தைகள் தடிச்சு போக, புருஷனையும் எதுவும் சொல்ல முடியாம, பிறந்த வீட்டினரையும் சமாதானம் செய்ய முடியாம பாவம் மதி ரொம்பவே திணறி போயிட்டா.”


“என் அம்மா, ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’னு சொல்லுவாங்க. அது போல, சம்பந்தி வீட்டாரோட கேவலமான பேச்சு மனைவி, மகனை இழிவுபடுத்தினது பொறுக்காம, கோபத்தின் உச்சத்தில் இருந்த உன் பிரபா தாத்தா, திவாவை தூக்கிக்கிட்டு, “போலாம் வாங்க”ன்னு அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பிச்சுட்டார்.”


“நம்ம பக்கத்து மற்ற உறவுகளும், அங்கிருந்து வெளியேறிடவும், மதியோட பிறந்த வீட்டினர் பங்களிப்பு இல்லாமல், உனக்கு முடியிறக்கம் செஞ்சு முடிச்சாங்க.” சுபா முடிக்கவும்,


அலுப்பாக, “ஐயோடா… ஒரு மொட்டைக்கு இத்தனை அக்கப்போரா? கடவுளே!” சலித்தவள், “அன்னைக்கு பிரிஞ்சது தானா பாட்டி?” என்று வினவ,


“இல்ல குட்டிம்மா!”


“திரும்பவும் இன்னொரு சண்டையா?” இம்முறை ஆயாசமாக கேட்ட சின்னவளிடம்,...


“ஹும்… ஆமா கண்ணம்மா.” என்றார் அவரும் அலுப்பாக.


“ஓ மை கடவுளே! இந்த முறை என்ன ஆச்சு?”


“ஒரு பத்து நாள், ரெண்டு வீட்டுக்கும் நடுவுல சுத்தமா பேச்சு வார்த்தை இல்ல. நாங்க இல்லாம உனக்கு மொட்டை போட்டது எங்களுக்கு மனசே ஆறலை. உன்னை பிரிஞ்ச, எங்களால நிம்மதியாவே இருக்கவே முடியலை. உன்னை பார்க்கணும்னு கேட்டு, உன் நினைவா திவாவும் அழுவான்.”


“லக்ஷ்மி அத்தைக்கு இருப்பே கொள்ளலை. இப்படியே விட்டா பிரச்சனை ஒரு முடிவுக்கு வராதுன்னு, இவர் ஆஃபீஸ் போயிருந்த நேரமா, உங்க வீட்டுக்கு போயிட்டு வர முடிவு செஞ்சாங்க.”


“அன்னைக்கு ஏதோ காரணத்தால ஸ்கூல் அரை நாள் லீவ் விடவும், திவாவும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டான். ‘நானும் வருவேன்… சின்னுவை பார்க்கணும்’னு அவன் அழ ஆரம்பிக்கவும், நாங்க மூணு பேரும் உங்க வீட்டுக்கு வந்தோம்.”


“எங்களை நல்ல விதமா தான் வரவேற்று ரெங்கா அம்மா, உபசரிச்சாங்க. உன் ருக்மிணி பாட்டி அப்போ வீட்ல இல்லை. ‘சின்னு, சின்னு’ன்னு உன்னை பார்க்கற ஆர்வத்துல திவா குதிக்க, என் கையில பிடிச்சுருந்த ஜூஸ் கிளாசை தெரியாம தட்டிட்டான். ஜூஸ் கொட்டின சட்டையை துடைக்க இவனை பாத்ரூம் அழைச்சுட்டு போனேன். ”


“தூங்கிட்டு இருந்த உன்னை பார்க்க லக்ஷ்மி அத்தை, மதியோட ரூமுக்குள்ள போனாங்க. பாத்ரூமில் இருந்து நாங்க வெளிய வந்தப்ப, ருக்மிணி அம்மா, வீட்டுக்கு வந்துட்டாங்க.”


“எங்களை பார்த்து ஒரே லபோதிபோன்னு வாய்க்கு வந்ததை பேச ஆரம்பிச்சாங்க. எங்க? ரெங்கா அம்மா சொல்ல வரதைத் தான், அவங்க காதுல வாங்கிக்கவே இல்லையே.”


“எல்லாத்துக்கும் மேல, நாங்க ஜூஸ் குடிச்ச கிளாசை தீட்டுன்னு சொல்லி, வேலைக்காரங்களை அது மேல தண்ணி தெளிக்க சொன்னாங்க. ‘ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ண, உன்னை மாதிரி பொம்பளையை உசுரோட கொளுத்தியிருக்கணும். அதை விட்டுட்டு, உன்னை எல்லாம் நடு வீட்டுல, சோஃபால உட்கார விட்ட இவங்களை சொல்லணும்’னு ரெங்கா அம்மாவையும் மரியாதை குறைவா அலட்சியமா பேசினாங்க. ‘பின் வாசல் வழியா வரதுக்கென்ன’ன்னு என்னை பார்த்துக் கேட்டாங்க.”


“அவங்க பேசுறது தான் எட்டு ஊருக்கு கேக்குமே. ரூம் உள்ள இருந்த அத்தை காதுல விழுந்து, எனக்கு சப்போர்ட்டா அவங்க சண்டைக்கு போக, பேச்சு வளர்ந்தது. லக்ஷ்மி அத்தையால ருக்மிணி அம்மாவோட அசிங்கமான பேச்சை தாங்கிக்கவே முடியலை. அங்கேயிருந்து கிளம்பி வந்துட்டோம். உன்னையும், மதியையும் கடைசியா அன்னைக்கு தான் அத்தை பார்த்தாங்க. ஹும்… ஒரு பிரச்சனையை தீர்க்க போய், அதுக்கு பதிலாக புதுசா இன்னொரு சண்டையாகி, முடிவில்லாம மனஸ்தாபங்கள் வளர்ந்துட்டே தான் இருந்துச்சு கண்ணு.”


“வீட்டுக்கு வர வழி எல்லாம் அத்தை புலம்பிட்டே வந்தாங்க. சத்யா மாமாக்கிட்ட எதையும் மறைச்சு பழக்கம் இல்லாததால, அவர்கிட்ட சொல்லி அழ... மாமாவும், மனசு கேட்காம இவர், அதான் உன் பிரபா தாத்தாக்கிட்ட நடந்ததை சொல்லிட்டார்.”


“அப்புறம் என்ன? பழைய படி உன் அப்பாவுக்கும், இவருக்கும் வாய் தகராறு முத்தி, இனி ரெண்டு வீட்டுக்கும் ஒட்டுமில்ல உறவுமில்லங்கற நிலைமை வந்துடுச்சு. லக்ஷ்மி அத்தை, அன்னைக்கு படுத்த படுக்கையானவங்க தான்.”


“அதுக்கப்புறம் ரொம்ப நாள் அவங்க உயிரோட இல்லை. ‘என் பொண்டாட்டி, பிள்ளையை கீழ்த்தரமா பேசிடுவானா அவன்’னு பொங்கின உன் பிரபா தாத்தா, உன் அப்பாவுக்கு வியாபாரத்துல குடைச்சல் கொடுத்தார். அப்போ தான் பிசினெஸில் வளர்ந்துட்டு இருந்த உன் அப்பாவுக்கு, அதனால பெரிய நஷ்டம் ஏற்பட்டுடுச்சு.”


“நம்ம பொண்ணை கட்டிக் குடுத்து இருக்கோமேன்னு உன் பிரபா தாத்தா கொஞ்சம் தணிஞ்சு போயிருந்தா, விஷயம் விபரீதமாகி இருக்காது. ஆனா, நீயா, நானான்னு ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டு நிக்க, மாத்தி மாத்தி ஓயாம பிரச்சனை மேல பிரச்சனை தான் ஆச்சு.”


“அத்தை உசுருக்கு போராடிட்டு இருக்கும் போது, அவங்களை வந்து மதி பார்க்க, ருக்மிணி அம்மா அனுப்ப மறுத்துட்டாங்க. உன் அம்மாவும், தன் அத்தை பேச்சை தட்டலை!”


“லக்ஸ் பாட்டி… இந்த சண்டையால தான்…” கேள்வியை முடிக்காமல் இளையவள் பார்க்க,...


ம்ம் என்று தலையசைத்தவர், “நடந்த கலாட்டாவில் இருந்து லக்ஷ்மி அத்தை, மீளவே இல்ல. அவங்க இறந்தப்ப கூட உங்க வீட்ல இருந்து யாருமே… உன் அம்மா உட்பட யாருமே வரலை. என்னால என்ன நம்ப முடியலைன்னா, சாவுக்கு வராதது! என்ன சொல்ல? ஏற்கனவே கோபமா இருந்த திவா அப்பா, மனசுல அது பெரிய அடியா விழுந்துடுச்சு!”


“என்ன? லக்ஸ் பாட்டி இறந்தப்ப கூட அம்மா வரலையா?”


“ஆமா குட்டிமா…” என்றவரின் முகம், மனதின் வலியை அப்பட்டமாக காட்டியது.


“துக்க வீட்ல இவர் வாய் விட்டு ‘அவன் அனுப்பலைன்னா, இவ வரமாட்டாளா? அவளை எங்க அம்மா எப்படி எல்லாம் வளர்த்தாங்க தெரியுமா?’ன்னு அப்படி கதறி அழுதார். துக்கத்துக்கு கூட மதி வராதது, இவரை மனசளவில் ரொம்ப பாதிச்சு, உடைஞ்சு போயிட்டார்.”


“அம்மா ஏன் வரலைன்னு நீங்க கேட்கலையா?”


“எங்க கண்ணு, துக்கம் நடந்த வீடு. போய், எங்க கேட்க முடிஞ்சுது? ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. ஹம்… இவரை சமாதானப்படுத்தக் கூடிய ஒரே ஆளு அத்தை தான். அவங்களும் இல்லாம, உங்களைப் பத்தி இவர்கிட்ட வாயே திறக்க முடியலை. உங்கம்மாவை, தன் பொண்ணா பார்க்காம நாராயணனோட பொண்டாட்டியா மனசுல பதிஞ்சுட்டு, அப்படியே பிடிவாதமா ஒதுங்கி நின்னுட்டார். மாமா பேச்சையோ, என் கெஞ்சலையோ இவர் காதுல போட்டுக்கவே இல்லையே.”


“அவரை வழிக்கு கொண்டு வர நாங்க பண்ண முயற்சி எல்லாம் வீணாகிடுச்சு. ஆரம்பத்துல, சொந்தத்துல நடக்கற விசேஷத்துக்கு உன் அம்மா உன்னையும் சிங்காரிச்சு கூட்டிட்டு வருவா. பேசிக்க மாட்டோமே தவிர, தூரத்துல இருந்து உங்க ரெண்டு பேரையும் கண்ணார பார்த்து மனசுல நிறைச்சுக்கவாவது முடிஞ்சுது.”


“போக போக நீங்க ரெண்டு பேரும் விசேஷ வீடுங்களுக்கு வரது நின்னுடுச்சு. அதுக்கப்புறம் அந்த பக்கத்து உறவுல நடக்கற நல்லது, கெட்டதுக்கு நாங்களும் போறதை நிறுத்திட்டோம். எங்களை மதிச்சு, வருந்திக் கூப்பிடற சில உறவுகளும் உண்டு. அவங்க வீட்டுக்கு தனியா போய் மரியாதை செய்யற வழக்கம் வந்துடுச்சு.”


“இன்னைக்கு தான் உன்னை இத்தனை வருஷம் கழிச்சு பார்க்கறேன். நிலைமையை பார்த்தியா குட்டிமா? சொந்த பேத்தியை எனக்கு அடையாளம் தெரியலை. நான் உனக்கு என்ன உறவுன்னு உனக்கு தெரியலை.”


மிகவும் சிறு வயது நிகழ்வுகள் அவளுக்கு நினைவில் இல்லை. ‘ஆனால், இந்த அம்மா ஏன் தன் உறவுகளை பற்றி ஒரு முறை கூட வாய் திறக்கவில்லை?’ என்ற கேள்வி விதுவுக்கு தோன்றிய அதே நேரம்,...


“என்ன தப்பு பண்ணோம்னு எனக்கு இன்னைய வரைக்கும் புரியலை. எங்க யார் பத்தியும் தெரியாம வளர்ந்து இருக்கீங்க! என் மேல அவளுக்கு என்ன கோபம்னு புரியலையே!” இரவின் நிசப்தத்தை அவரின் கேவல் கலைத்தது. இருவர் கண்களும் கண்ணீரால் நிறைய, பார்வை மங்கியது.


“முன்ன அவங்க குடியிருந்த வீடும், உங்கம்மாவுக்கு நாங்க கொடுத்த வீடும் தெரியும். பழைய அட்ரெஸ் நல்லாவே தெரியும். உடனே, உன்னை யாருன்னு தெரிஞ்சு இருப்போம். வீடு வரை அவர் வந்து இருக்க மாட்டார். இது புது வீடா? ஹம்… நாங்க வீட்டுக்கு வந்ததும் ஒரு விதத்துல நல்லதுக்கா போயிடுச்சு.”


ஒரே மூச்சில் சுபா பழைய விஷயங்களை விவரித்து முடித்தார். ருக்மிணி பாட்டியின் ஆசிட் பேச்சுக்களும், ஜாதி வெறியும், இரு ஆண்களின் ஈகோவும், அழகிய கூட்டை கலைத்து, தன் அம்மாவை தனிமைப்படுத்தியதை அறிந்தவள், கேட்டதை ஜீரணிக்க முயன்று, மெதுவே சுபாவுக்கு பதில் தந்தாள்.


“ஹாங்… ஆமா பாட்டி, போன வருஷம் தான் இங்க குடி வந்தோம். பழைய வீட்டை இடிச்சு, அப்பா பெருசா கட்டிட்டு இருக்கார். வேலை முடிஞ்சவுடனே திரும்ப அங்க போய்டுவோம்.”


“உங்க வீட்டுக்கு வந்து யார் என்னன்னு புரிஞ்சது பெரிய அதிர்ச்சி. ஆனா, இத்தனை வருசம் கழிச்சு உன்னை பார்த்தது, ஆனந்த அதிர்ச்சி கண்ணம்மா. சின்னவனை தான் இன்னுமே சரியா பார்க்கலை. தம்பி அங்க கதவோரம் நின்னுட்டு இருந்தான்ல? முகம் சரியா கவனிக்கலை. உங்க சின்ன வயசை எல்லாம் நான் மிஸ் செஞ்சுட்டேன். உங்களை எல்லாம் நினைக்காம என்னோட ஒரு நாளும் போனதில்லை குட்டிமா.”


இத்தனைக்கு பின்னும், ஆதியை பார்க்காததை குறையாக சொல்லி வருந்தியவரை ஆச்சரியமாக பார்த்த விதுவுக்கு, ‘இவர் பாவம்… மிகவும் நல்லவர்’ என்றே நினைக்க தோன்றியது.


“அம்மா மேல உங்களுக்கு கோபம் இல்லையா பாட்டி?”


“மதி மேலயா! எனக்கு என்ன கோபம் குட்டி? சின்ன வருத்தம் உண்டு… ஆனா, அவ காரணங்களை விளக்கறதுக்கு சந்தர்ப்பம் அமையலையே!”


இத்தனை ஆண்டுகள் கழித்தும் அம்மாவின் மேல் இருந்த அவரின் பாசம், நம்பிக்கை விதுவின் உள்ளத்தை பரவசப்படுத்தியது.


“உங்களை பார்க்க முடியலை என்ற வேதனை தான் என்னை வாட்டுச்சு. சின்னவன் பொறந்த விஷயம் கேள்விப்பட்டப்ப உன் தாத்தாவை கெஞ்சி பார்த்தேன். மனுஷன் பிடி கொடுக்கலை. நீ பெரிய மனுஷி ஆனப்ப, எங்களுக்கு சொல்லி அனுப்பலை. விஷயம் தெரிஞ்சப்ப, உன்னை கண்ணார பார்த்து, ஆசையா வாழ்த்த முடியலைன்னு கஷ்டப்பட்டேன். ஹ்ம்ம்… என்ன சாதியோ! இப்படி சொந்தத்தை கூறாக்கி, என்ன சந்தோஷத்தைக் கண்டாங்க!”


“ஸ்வீட் பாட்டி…” அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், ஓவென்று அழ ஆரம்பித்தாள்.


“ஹே கண்ணு குட்டி, அழாதடா… உன் அப்பாக்கிட்ட பேச முடியாது செல்லம். இன்னைக்கு அவங்க பேசினது, நடந்தது எல்லாம் அவங்க திட்டம் போட்டே எங்களை அசிங்கப்படுத்தினதா மனசுக்கு படுது. இவர் ரொம்ப அப்செட், திவா மேலயும் பயங்கரமா கோபமா இருக்கார்.” என்று தன் பாட்டில் சுபா சொல்ல,...


“எனக்கு உங்க யாரையும் தெரியாது பாட்டி, ப்ராமிஸ்.” என்ற பேத்தியை பார்த்து சிரித்தவர்,...


“உன் தாத்தாவை பார்த்து பயப்படாதே. ‘எப்படி என்னையும், எங்க அம்மாவையும் விட்டுடலாம்னு’ நல்லா கேளு குட்டி” என்ற சுபாவை கட்டிக் கொண்டவள்,...


“நீங்க சொல்லலைன்னாலும், அவரை ஒரு வழி பண்ணத் தான் போறேன் பாட்டி” மேலும் சிறிது நேரம் பேசியவர்கள், அசதியிலும், ஒரு வித மன நிறைவிலும், அப்படியே உறங்கி விட்டனர்.


மறுநாள் காலை, சுபாவை பொறுத்தவரை அழகிய விடியலாக இருந்தது. இரவு உறக்கம் போதவில்லை. ஆனாலும், உற்சாகமாகவே துயில் கலைந்தவர், சிறு குழந்தையாக அருகே உறங்கும் பேத்தியை கண்களில் நிறைத்து ரசித்தார்.


சுபா குளித்துக் கிளம்பி வந்த போது, பிரபா ஏற்கனவே காலை நடைபயிற்சியில் இருந்தார்.


சுபாவுக்கு மாறான மனநிலையில் இருந்தான் திவா. எழும் போதே படு டென்ஷனாக இருந்தான். திவாவை பொறுத்தவரை சூரியன் உதிப்பதும், மறைவதும் அவனுடைய அப்பாவிடம் தான். தவறிழைத்த சிறு பிள்ளை, தந்தை முகத்தை ஏக்கமாக பார்க்குமே, அது போன்ற தவிப்பான நிலையில் இருந்தான்.


கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன

நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்

நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்

வாழட்டும் கண்ணா என்றென்றும்


வழமை போல் பின்னணியில் பாடல்கள் ஒலிக்க, தங்கள் இருவருக்கும் காபி தயாரித்து காத்திருந்த சுபா, கணவன் வந்தவுடன் தோட்டத்தை பார்த்தவாறு இருந்த பின் வெராண்டாவில் போய் அமர்ந்தார்.


தொடர்ந்து வந்து, எதிரே அமர்ந்த பிரபாகர் பேசவில்லை. அமைதியாகவே தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர், தங்கள் தனிமையை மிகவும் விரும்பினார் என்று அனுபவசாலியான சுபாவுக்கு புரிந்தது.


மெல்ல விழிப்பு தட்டிய விதுவுக்கு, முன் தினம் அருவியாக நினைவில் வர, பதறி எழுந்து அமர்ந்தாள். ‘நடந்தது எதுவும் கெட்டக் கனவு இல்லை. விடிந்ததும், கண்ணை விட்டு மறையாமல், இதோ அவளுக்கு பழக்கமில்லாத அறையில் படுத்து இருக்கிறாள்’, என்று தோன்ற அழுகை வந்தது.


கை அன்னிச்சையாக மதியின் எண்ணை அழைத்தது. சுவிட்ச் ஆஃப் என்ற பதிலே வர, மெதுவே எழுந்து, குளித்து கிளம்பியவள், தன் பைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.


தயங்கிக் கொண்டே சுபாவை கண்களால் தேடியவள், அவரை காணாமல், சமையலறைக்கு செல்ல, அங்கேயும் சுபா இல்லை என்றவுடன், அவர் எங்கே என வேலையாளைக் கேட்டாள்.


“அம்மா, பின் வெரண்டாவுல இருக்காங்க” என்ற பதிலில், லிவிங் ரூமுக்கும் வெரண்டாவுக்கும் இடைப்பட்ட கண்ணாடிக் கதவு சாற்றியிருக்க, அதனருகே வந்தவள் காதில்,...


அதிகாலை நேரமே, புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை

கூடாத நெஞசம் இரண்டும் கூடுதே பாடுதே

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது

காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது

காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது

புது சங்கமம் சுகமெங்கிலும்

ஒன்றை ஒன்று எந்நாளும் சேர்வதே ஆனந்தம்


திரைப்பாடல் மெலிதாக விழுந்தது. அதன் மெட்டை முணுமுணுத்துக் கொண்டே கதவை திறக்க அதில் கை வைத்த போது,


“ஹே… எங்க போற?” என்ற திவாவின் குரல் மிக அருகில் கேட்க, திடுக்கிட்டு, அவன் புறம் திரும்பினாள்.


“பாட்டி…” என்று கதவை பார்க்க, “நீ போ… அவங்க கொஞ்ச நேரத்துல வருவாங்க” என்று எரிச்சலாக வார்த்தைகளை துப்பினான்.


“உங்க கழுத்து வலி எப்படியிருக்கு?” அக்கறையாக விது விசாரிக்க, வெறும் முறைப்பை பதிலாக தந்தவனின் அலட்சியம் மனதை தைக்க, கண்ணுக்குள் குளம் கட்டிய கண்ணீரை மென்று விழுங்கினாள்.


மீண்டும் கதவின் புறம் விது திரும்ப, “சொல்லிட்டு இருக்கேன்ல, அங்க எங்க போற?” என்று கத்தியவன் மீது இப்போது சுறுசுறுவென கோபம் வர,...


“எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு, பாட்டிக்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு நினைச்சேன். நீங்களே அவங்கக்கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ். கொஞ்சம் வழியை விடுங்க,” அவள் பாதையை மறித்துக் கொண்டு நின்றவனிடம் காட்டமாக சொன்னவளிடம்,...


“நீ இன்னைக்கு காலேஜுக்கு போக முடியாது” என்றவனை, சட்டை செய்யாமல் வித்யா நடக்க ஆரம்பித்தாள்.


அதே சமயம் தன் காலை நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அப்போது தான் ஹாலுக்குள் நுழைந்த சத்யா தாத்தா, “குட் மார்னிங் குட்டிமா, ரூம் சவுகரியமா இருந்துச்சா, நல்லா தூங்கினியா ராஜாத்தி?” சினிமா ஹீரோ கணக்கில் கண்ணெதிரே நின்றிருந்த தனக்கு காலை வணக்கம் தெரிவிக்காமல், நேரே விதுவிடம் பேச ஆரம்பித்தவரை முறைத்தான் திவாகர்.


பேரனின் முக சுணக்கம் பாவம் தாத்தாவின் கண்களில் படவில்லை. கொள்ளு பேத்தியின் கரத்தில் இருந்த பைகளில் தன் பார்வையை பதித்த சத்யா தாத்தா, “அதுக்குள்ள கிளம்பிட்டியா குட்டி?” அதிர்ச்சியும், வருத்தமும் கலந்த குரலில் கேட்டவர், விதுவை ஏக்கமாக பார்க்க,...


“அவ எங்கேயும் போகலை” பதில் தந்த பேரனின் புறம் இப்போது தான் பார்வையை திருப்பினார். பேத்தியின் முடிவுக்காக அவள் முகத்தை மீண்டும் ஆவலாக பார்த்தார் அந்த பாசக்கார முதியவர்.


“காலேஜுக்கு போகணும் தாத்தா” என்று விது சொல்லும் போது, லிவிங் ரூமுக்குள் சுபாவும், பிரபாகரும் நுழைந்தனர்.


“முழிச்சுட்டியா குட்டி, நீ காப்பி குடிப்ப தானே?” என்று விதுவின் பதிலுக்கு பார்க்க... அவளோ, தன்னை துளியும் கண்டுக் கொள்ளாமல் விறுவிறுவென படியேறி செல்லும் பிரபாகரை ஆவென பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.


விதுவின் ஏக்கமான பார்வையை கண்ட மாமனாரும், மருமகளும் பெருமூச்சை விட்டனர்.


“உங்க கஞ்சி ரெடி மாமா, இதோ கொண்டு வந்துட்டேன்” என்ற சுபா சமையலறைக்குள் செல்ல, அங்கேயே நின்றிருக்கும் தன்னை மட்டும் கண்டுக் கொள்ளாமல், காலை வணக்கம் கூட சொல்லாமல் செல்லும் அம்மாவை தொடர்ந்து, கோபமாக சென்ற திவா,


“குத்துக்கல்லாட்டம் நான் நிக்கறது, உன் கண்ணுக்கு தெரியலையா? பேத்தியை பார்த்தவுடனே என்னை மறந்தாச்சா?”


“கண்ணா, அவளுக்கு புது இடம்டா. நான் தானே அவளை கவனிக்கணும்.” பேத்திக்கு பரிந்துக் கொண்டு வந்தார் சுபா.


“அப்பா என் முகத்தை கூட பார்க்கலை சுபி. ஒரு குட் மார்னிங் இல்ல… ஆமா, உங்ககிட்ட என்ன சொன்னார் அப்பா?”


“ம்ம்ம்… காஃபியில உப்பு போதலைன்னார்!”


“சுபி...ம்ம்மாஆ…!” பல்லை கடித்தவனிடம்,...


“இந்தா உன் காப்பி...” அவன் கையில் கப்பை திணித்தவர், “நான் என்ன மந்திரவாதியா? சும்மா ‘ஓம் க்ரீம்னு’ எதையோ முணுமுணுத்து, கையை ஆட்டினா இல்லாத மரத்துல இருந்து மாங்காய் விழ வைக்க? அவரா கோபம் தணிஞ்சு வந்தாத் தான் உண்டுன்னு உனக்கு தெரியாதா என்ன?” என்றவர், மற்றவர்களின் பானத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.


அம்மாவின் விட்டேத்தியான பேச்சில் எரிச்சல் கூட, அவர் பின்னேயே ஹாலுக்கு வந்தான் திவாகர்.


விதுவின் பைகளை அப்போது தான் பார்த்தவர், பேத்தியை கேள்வியாக நோக்க, “நீ கவலைப்படாதே சுபா... அவ எங்கேயும் போகலை” சத்யா தாத்தா சமாதானம் சொன்னார்.


“ப்ளீஸ் பாட்டி, நான் அவசியம் காலேஜுக்கு போகணும்.” செல்லமாக சிணுங்கியவளை, கொலை வெறியாக முறைத்த திவா,...


“ம்மா, பாண்டியன் அங்கிள் லேசுப்பட்ட ஆளில்லை. ஒரு ரெண்டு நாள் அவ லீவ் எடுக்கட்டும். அப்புறம் நிலைமையை பார்த்துட்டு காலேஜ் போகட்டும்” என்றவன், ‘நான் சொல்வதை சொல்லி விட்டேன், இனி உங்கள் இஷ்டம்’ என்பது போல், ஒரு பார்வையை சுபாவின் புறம் செலுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.


மகனின் பார்வையை வைத்தே, விஷயத்தின் தீவிரம் புரிந்தவராக, “திவா சொல்றதும் சரி தான் கண்ணம்மா” என்ற சுபாவிடம் வேறு வழியின்றி, “சரி… ஓகே பாட்டி…” என்று தயக்கத்தோடு ஒப்புக் கொண்டாள் விது.


காலை டிஃபன் நேரம்,...


சுபாவை வால் பிடித்துக் கொண்டு விது சுற்ற, பிரபாவுக்கு உதவ அவர் சென்ற நேரம், தனியே ஹாலில் நியூஸ் பேப்பரை புரட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.


“குட் மார்னிங் சிஸ்டர்…” என்று உற்சாகமாக அவளிடம் வந்த விஜய்யையும், சந்தோஷையும் கண்டு முறைத்தாள்.


“நீங்க மதியக்கா பொண்ணாமே?” தோழமையாக அவர்கள் பேச்சை வளர்க்க முயல, மீண்டும் முறைப்பை பதிலாக பெற்றனர்.


“மதியக்காவுக்கு எங்களை நல்லாத் தெரியும். சின்ன வயசுல நாங்க எல்லாம் ஒண்ணா விளையாண்டிருக்கோம்.”


“நித்யா சிஸ்ஸை போல, அப்போ நீங்களும் ஹார்டிகல்ச்சர் தான் படிக்கறீங்களா?”


விஜியும், சந்துவும் மாற்றி மாற்றி பேச்சு கொடுத்து பார்த்தனர். ஆனால், ‘வாயை திறப்பேனா?’ என்ற விது பேசாமடந்தையாக பேப்பரை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.


இதையெல்லாம் கவனித்துக் கொண்டு படி இறங்கிய திவாகர், “அவக்கிட்ட என்ன வெட்டிப் பேச்சு? வாங்கடா, நாம சாப்பிடலாம்” நண்பர்களை உணவு கூடம் அழைத்து சென்றவன்,


“ஆஃபீசுக்கு லேட்டாச்சு சுபிம்மா, சீக்கிரம் வாங்க...” வீடே அதிர குரல் கொடுத்தான்.


“இதோ வரேன் திவா!” என்றவர், “வா செல்லம், நீயும் டிஃபன் சாப்பிடுவ” என்று தனியாக அமர்ந்திருந்த விதுவையும் தன்னோடு அழைத்து சென்றார்.


அப்போது, “நான் ஆஃபீசுக்கு கிளம்பறேன்…” பொதுப்படையாக சொல்லிக் கொண்டு பிரபாகர் வாசல் நோக்கி விறுவிறுவென நடக்க, மகனை விடுத்து, கணவரின் பின் ஓடிச் சென்றார் சுபா. இந்த இடைவெளியில் விது தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்தாள்.


எவ்வளவு சொல்லியும் பிரபா சாப்பிடாமல் கிளம்பி விட, அவர் பிடிவாதம் பார்த்து சலித்தவராக கடுகடுவென வீட்டின் உள்ளே வந்தார் சுபா.


மகனுக்கும், அவன் நண்பர்களுக்கும் பார்த்து பரிமாறியவர், இடையே சென்று மாமனாரையும் அழைத்து வந்தார். அப்போது தான் விதுவின் ஞாபகம் வர, ‘அவ எங்கே?’ என்று சுற்றிலும் பார்த்தார்.


“சிஸ்டர் தோட்டத்துக்கு போனாங்க ஆன்ட்டி” திவாவின் முறைப்பை கணக்கில் கொள்ளாமல் விஜய் தான், அவருக்கு செய்தி வாசித்தான்.


சாப்பிட்ட பின் ஆண்கள் மூவரும் கிளம்ப, “போன் எடுத்துக்கிட்டியா திவா? ஜாக்கிரதையா டிரைவ் பண்ணு” என்றவர் நினைவு வந்தவராக, “உன் கழுத்து வலி எப்படி இருக்கு ராஜா, டாக்டர் கொடுத்த மாத்திரை போட்டியா?” என்று பரிவாக கேட்க,...


“பரவாயில்லையே என் மேலயும் ஏதோ துளி அக்கறை இருக்கே” சற்று குத்தலாக திவா பதில் தரவும்,


“என்னடா கண்ணா பேசற?” சுபா வருத்தமாக அவனை பார்த்தார்.


“போம்மா… போய் உன் பேத்தியையே நல்லாக் கொஞ்சு” கோபமாக பொரிந்து விட்டு, ஆஃபீசுக்கு கிளம்பிய மகன், காரை தானே ஓட்டவில்லை என்பதை கவனித்தவர், நிம்மதி அடைந்தார்.


“அப்பாவுக்கும், மகனுக்கும் இத்தனை பிடிவாதமும், பொறாமையும் கூடாது” என்று முனகியவாறு உள்ளே வந்தவர், “விதும்மா…” என்று குரல் கொடுத்தார்.


பின் வெராண்டாவில் தனியே அமர்ந்து இருப்பவளிடம், “வாடா ம்மா…” என்று அவளை சாப்பிட அழைத்து வந்தார்.


பேத்தியும், பாட்டியும், கொள்ளு தாத்தாவும், இடைப்பட்ட இத்தனை வருட கதைகளை பேசி அன்றைய நாளை இனிதே கடத்தினர்.


அன்று மாலை


“சுபிம்மா…” என்று உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்த திவா, தன் வருகையை கூட உணராமல், விதுவுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்த பெரியவர்களை பார்த்து முகத்தை சுருக்கினான்.


“வாடா கண்ணா…” என்று மகனை வரவேற்ற சுபா, அவன் முகத்தில் தெரிந்த சுணக்கத்தை கண்டுக் கொண்டார்.


“திவா…” என்றவர் அழைப்பை கண்டுக் கொள்ளாமல், படிகளில் ஏறிய மகனை பார்த்து சுபாவால், பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.


பிரபாகரோ ஒரு படி மேலாக, வீட்டில் யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வித இறுக்க முகபாவனையோடு இருந்தார்.


“சாப்பிடறீங்களா? மாத்திரை போட்டீங்களா?” என்பது தவிர கணவனிடம் அதிகம் பேச முயலாமல் சுபாவும், தன் பாட்டில் இருந்தார். தன் மாமனாரிடம் ஆண்கள் இருவரையும் பற்றி சலித்துக் கொண்டார்.


மறுநாள், காலையிலேயே வீடு நிறைய விருந்தினர் வந்து குவிந்தனர். “மதியோட பொண்ணு வந்து இருக்காளாமே?” என்று ஆளாளுக்கு விதுவை சூழ்ந்துக் கொண்டனர்.


பிரபாவும், திவாவும், வந்தவர்களிடம் சம்பிரதாயமாக நலம் விசாரித்து விட்டு, தத்தம் வேலைக்கு கிளம்பியது சுபாவுக்கு சங்கடமாகி விட்டது.


‘இவர்களிடம் பேசி பிரயோஜனமில்லை’ என்று நினைத்தவர், சத்யா தாத்தாவுடன் சேர்ந்து, வந்திருந்தவர்கள் யார்யாரென்றும், உறவு முறைகளை விளக்கி சொல்லி விதுவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


‘தன் அம்மாவுக்கு இத்தனை உறவுகளா?’ நம்ப முடியாது வாய் பிளந்தவள், ‘இவர்களில் ஒருவர் கூட பிரிந்த இரு குடும்பத்தையும் சேர்க்க நினைக்கவில்லையா?’ என்று தான் உடனே நினைத்தாள்.


சந்திரமதி பற்றிய தங்கள் நினைவுகளை அவளிடம் பகிர்ந்ததோடு மட்டும் அல்லாமல், சத்யா தாத்தாவையும் தங்கள் பேச்சில் இழுத்தனர்.


“இதை பார்க்க எங்க அக்காளுக்கு குடுப்பனை இல்லாம போயிடுச்சே?” என்று சத்யா தாத்தாவை பார்த்து ஒரு வயதான பெண்மணி அழ ஆரம்பித்தார்.


“உங்கம்மாளை, அப்படி பொத்தி வளர்த்தாங்களே எங்கண்ணி! கடைசியில, போற வழிக்கு தீபம் பிடிக்க நீயோ, மதியோ, இல்லாம அவங்களை காடு சேர்த்தோமே!” என்று வேறொரு பெரியவர் கண்ணீரில் கரைந்தார்.


இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்லி வருந்துவதும், அல்லது நினைவு கூறுவதுமாக இருக்க, அன்றைய தினமும் நிமிஷமாக ஓடி மறைந்து, இரவானது.


“என்ன கண்ணம்மா, உன் முகம் வாட்டமா இருக்கு?” பேத்தியை சுபா ஆராய்ச்சியாக பார்த்தார்.


நாள் முழுதும் தன் அம்மாவை பற்றி கேட்ட பேச்சின் விளைவாக, உணர்ச்சி குவியலாக கொந்தளித்துக் கொண்டிருந்தவள், “எப்படி பாட்டி, என் அம்மாவை ‘எப்படியோ போன்னு’ உங்களால விட முடிஞ்சுது? நீங்க சொந்தக்காரங்க இத்தனை பேர் இருந்தும், புகுந்த வீட்டுல யாருமில்லாத அனாதையா, என் அம்மாவை கஷ்டப்பட விட்டுட்டீங்கல்ல! இதே உங்க சொந்த மகளா இருந்திருந்தா, இப்படி கண்டுக்காம விட்டு இருப்பீங்களா?” என்று கேட்டு விட்டாள்.


“விதும்மா… போதும்!” சத்யா தாத்தா கோபமாக குரல் கொடுத்தார்.


இரவு வணக்கம் சொல்ல, கொள்ளு பேத்தியின் அறைக்குள் வந்தவர் காதில், அவள் பேச்சு விழுந்ததால், ஏற்பட்ட கோபம் அது.


சுபாவோ விக்கித்து சிலையாக அமர்ந்திருந்தார். இப்படி யாரும் குற்றம் சாட்டி விடக் கூடாது என்று தானே அவர் எவ்வளவோ முயற்சி செய்தார்! விதுவே கேள்வி எழுப்பி விட்டது அவரை மிகவும் பாதித்தது.


“நடந்தது என்னன்னு தெரியாம, வாய்க்கு வந்ததை பேசக் கூடாது கண்ணம்மா! எங்க சுபாவா இருக்க போய், நிறைய விஷயங்களை பொருத்தது மட்டுமில்லாம, பெருசு பண்ணாம விட்டுட்டா! உன் அப்பாவும், பாட்டியும் கொஞ்ச நஞ்சமா அவளை அவமானப்படுத்தினாங்க?”


சில நொடிகள் மௌனம் சாதித்தவர், “என் லக்ஷ்மி, படுத்தப் படுக்கையா ஹாஸ்பிடலில் கிடந்தப்ப, ஒரு வாட்டி, ஒரே ஒரு வாட்டி... அவ உசுரு பிரியறதுகுள்ள உங்களை பார்க்கணும்னு ஆசைபட்டா. அத்தையை அந்த கோலத்துல பார்க்க முடியாம, புருஷன் பேச்சை மீறி, சுபா உங்க வீட்டுக்கு ஓடி வந்தா! ‘உங்களை ஹாஸ்பிடலுக்கு அனுப்ப சொல்லி’ அவங்கக்கிட்ட எத்தனை கெஞ்சினா தெரியுமா? உன் பாட்டி, என்னல்லாம் பேசினாங்க தெரியுமா?”


“மாமா... வேணாம் மாமா, இப்போ அந்தக் கதை எதுக்கு? ப்ச்… விடுங்க!” குறுக்கிட்ட மருமகளை விடுத்து,...


“இன்னைக்கு வந்ததுல, அத்தனை பேருமே ஒரு நேரம் இல்லைன்னா இன்னொரு நேரம், உன் அப்பாக்கிட்ட சமாதானம் பேச போய், அசிங்கப்பட்டு திரும்பி வந்த ஆளு தான்! இன்னைய வரைக்கும் யாருமே அவங்கப்பட்ட அவமானத்தை, பெருசுப்படுத்தி குறையா பேசினது இல்லை. எல்லாம் எங்க மேல இருக்க அன்பு, பாசத்தால தான், பொறுத்து போனாங்க. இனி ஒரு முறை இப்படி பேசாத தாயி” என்றவர், தளர்ந்த நடையோடு அறையை விட்டு வெளியேறினார்.


“சாரி பாட்டி” என்ற விதுவை பார்த்தவர், “விடு கண்ணம்மா, ஏதோ இப்படியெல்லாம் அனுபவிக்கணும்னு எழுதி இருந்து இருக்கு. நீ சும்மா மனசை போட்டு வருத்திக்காம, பேசாம படு குட்டி.”


“நான் நாளைக்கு காலேஜ் போகலாம்னு இருக்கேன் பாட்டி.”


“எதுக்கும் திவாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, அப்புறம் முடிவு பண்ணலாம் செல்லம்.”


“ப்ளீஸ் பாட்டி…” என்று கெஞ்சியவளிடம்,...


“அவசியம் போயாகணுமா செல்லம்? இன்னும் ஒரு வாரம் எங்க கூட இருக்கலாம் தானே!”


“ஐயோ ஸ்வீட்டி, நோ வே… இது ஃபைனல் செம். எக்ஸாம் வேற நெருங்குது. ப்ளீஸ்…” அவள் கண்களை சுருக்க,...


“உனக்கு ட்ராவல் பண்றது ஒத்துக்கலை, இல்லைன்னா இங்க இருந்தே போன்னு சொல்லியிருப்பேன். ஹம்… சரி… கண்ணம்மா… படுடா…” என்றார் சுபா.


‘ஐயோ, இனி அடுத்த பூதத்தை சந்திக்க வேண்டும்! ஹாஸ்டல் மற்றும் கல்லூரியில் அனைவரின் கேள்விகணைகளையும் சமாளிக்க வேண்டுமே!’ என்று அலுத்துக் கொண்டே புதன் காலை எழுந்து காலேஜ் கிளம்பினாள் வித்யா.

முடிச்சு அவிழும்……….


© KPN NOVELS COPY PROTECT
bottom of page