top of page

மூன்று முடிச்சு 11


மூன்று முடிச்சு


முடிச்சு - 11


கோவையில் பெரும் தொழிலதிபர்களும், பரம்பரை செல்வமும், கூடவே நிறைய நல்ல பண்புகளும் நிரம்ப பெற்ற அருமையான தனலக்ஷ்மி - சத்தியமூர்த்தி தம்பதியரின் ஒரே வாரிசு தான் பிரபாகர்.


ஒரு உறவினர் விசேஷத்தில் பார்த்த வாசுகியை, அவர்களுக்கு மிகவும் பிடித்து விட, அவள் நடுத்தர குடும்பத்து பெண் என்ற போதும், அவளை பற்றி விசாரித்த வரையில் நல்ல விதமாக சொல்லப்படவும், தங்கள் ஒரே மகனான பிரபாகருக்கு ‘பண்புள்ள பெண்’ தான் முக்கியம், என்று அந்தஸ்து பாராமல் திருமணத்தை நிச்சயித்தனர்.


வாசுகியின் அப்பா ராஜகோபாலன், பொள்ளாச்சியில் சிறு அளவில் ஜவுளி வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அம்மா ரெங்கநாயகி, வாசுகியின் உடன் பிறந்த அண்ணன் சக்ரபாணி, அண்ணி - ருக்மிணி, அவர்களின் மகன் தான் நாராயணன், அதாவது விதுவின் அப்பா. இது தான் வாசுகியின் பிறந்த வீடு.


சக்ரபாணி ஒரு அப்பிராணி ஜீவன். அப்பா ராஜகோபால் நடத்தும் வியாபாரத்தை தான் அவரும் உடன் இருந்து கவனித்து கொண்டிருந்தார். தொழிலில் அப்படி ஒன்றும் கெட்டிக்காரர் இல்லை. சக்ரபாணியின் கடும் முயற்சி இருந்தும், ஓஹோ என்று சொல்லிக் கொள்ளும் முன்னேற்றம் எதுவும் அவர்கள் வாழ்க்கையில் இல்லாமல், மிக சாதாரண ஜீவனமாக இருந்தது.


திருமணம் சிறப்பாக நடந்தேற, மகள் பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு, அருமையான வாழ்க்கை அமைந்து விடவும், ராஜகோபாலன் தம்பதியினரை கையில் பிடிக்க முடியவில்லை.


நல்ல வசதியான வீட்டில், நாத்தனார் இளவரசியாக வலம் வருவதைக் கண்டு பொறாமையில் வெந்த ருக்மிணி, பெரிய பிசினெஸ்மேனான, நாத்தனாரின் கணவர் தங்களுக்கு எதுவும் உதவுவார் என்று ஆவலாக எதிர்பார்க்க, அப்படி எதுவும் பிரபாகர் தானே முன் வந்து அவர்களுக்கு செய்யாத போது, ‘சரி, நாமே களத்தில் இறங்குவோம்’ என்று கணவர் சக்ரபாணியை, முடுக்கி பார்த்தார்.


மச்சினரிடம் உதவி கேட்க கூச்சப்பட்டு தயங்கி, அவரும் மறுத்து விட, ருக்மிணியின் மனதில் பொறாமை தீ கொழுந்து விட்டு வீசியது.


தன் அண்ணியை போல் அல்ல வாசுகி. மிகவும் இனிமையான பெண். திருமணத்திற்கு பின்னர் அவ்வப்போது அண்ணி, சில பல சாடை பேச்சுகளை பேசிய போதெல்லாம், அதனை ஒதுக்கி தள்ளி விட்டு, பிறந்த வீட்டுக்கு எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தாள்.


வாசுகிக்கு பெண் குழந்தை பிறக்கவும், தன் மகனுக்கே மணம் முடித்து தர வேண்டும் என்று உடனே கேட்டு விட்டார் ருக்மிணி. அப்படியாவது ஒரு வசதியான வாழ்க்கை அமையும் என்று நப்பாசை அவருக்கு.


ரெங்கநாயகி அம்மாவும் ‘என் பேத்தி இந்த வீட்டு மருமகளாக வர வேண்டும்’ என்று விரும்பி கேட்டதும், கணவனிடம் கூட ஆலோசனை கேட்காமல், பிறந்து சில வாரங்களே ஆன மகள் சந்திரமதியை, அண்ணன் மகன் நாராயணணுக்கே மணம் முடிப்பதாக அம்மாவுக்கும், அண்ணிக்கும் வாக்கு கொடுத்தாள் வாசுகி.


பிள்ளைப்பேற்றுக்கு தாய் வீட்டுக்கு வந்தவள், மூன்றாம் மாதம் கண்ட விஷ ஜுரத்தில் எதிர்பாராமல் உயிரை விட, மனைவியை பறிக் கொடுத்த பிரபாகர், பச்சிளம் மகளை தன்னுடன் அழைத்துக் கொண்டார்.


“எங்க பேத்தியை, எங்கக்கிட்ட கொடுத்துடுங்க, நாங்க வளர்த்துக்கறோம்.” மருமகனைக் கேட்டார் ரெங்கநாயகி.


“அவ இந்த வீட்டு வாரிசு சம்பந்தி. அவ இங்க தான் வளரணும்.” சத்தியமூர்த்தி மறுத்து விட்டார்.


இப்படியே இரு வீட்டினரும் குழந்தை சந்திரமதி விஷயத்தில் வழக்காடிக் கொண்டு இருக்க, பிரபாவோ ‘அவ என் மகள். என்னிடம் தான் வளருவாள்’ என்று ஒரேடியாக அந்தப் பேச்சுக்கு, முற்று புள்ளி வைத்தார்.


அதன் பின் குழந்தை சந்திரமதியை, கண்ணும் கருத்துமாக அப்பா வழி பாட்டியான லக்ஷ்மி தான், வளர்த்து வந்தார். குழந்தைக்கு ஒன்பது மாதங்களான போது, திடீரென்று லக்ஷ்மி பாட்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அச்சமயத்தில் குழந்தை வளர்ப்பில் தன் அத்தையிடம் உதவி கேட்க விரும்பாத பிரபா, வீட்டின் அருகே இருந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தினரை நாடினார்.


“என் அம்மா ‘தளிர்’ என்ற குழந்தைங்க காப்பகத்தை (creche) நடத்திட்டு இருந்தாங்க. காலேஜ் படிப்பை முடிச்சுட்டு, அம்மாவுக்கு உதவியா நான் அங்க வேலை செஞ்சுட்டு இருந்தேன்.”


“ஆபரேஷன் முடிஞ்ச கையோட லக்ஷ்மி அத்தையால, சரி வர மதியை கவனிக்க முடியலை. தவழற குழந்தை பின்னால அவங்களால ஓடி ஆடி சுத்த முடியலை. வீட்டோட ஆள் வெச்சு பார்த்தாங்க. ஆனா, அது சரி வரலை.”


"எங்க காப்பகத்துக்கு வந்து, ‘எனக்கு உடம்பு சரியாகற வரைக்கும், கொஞ்ச நாளைக்கு நீங்க குழந்தையை பார்த்துக்கோங்க. ஆனா, இங்க தினமும் நானும் வந்து குழந்தை கூடவே இருப்பேன்’னு கேட்டாங்க லக்ஷ்மி அத்தை. வழக்கமா, நாங்க வாங்கற ஃபீஸை விட அதிகம் கொடுக்க நாங்க கேட்காமலேயே ஒப்புக்கிட்டாங்க. அதனால, எங்கம்மாவும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க.”


“அப்போ தான் இவரை எனக்கு பழக்கம் ஆச்சு. மதியை ரொம்ப அருமையா, நல்லா ஹாண்டில் பண்ணுவார். எனக்கு அது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். ஏன்னா, சாதாரணமா நம்ம ஊர்ல ஆம்பளைங்க, பிள்ளை வளர்ப்பு தாயோட பொறுப்புன்னு அக்கடான்னு இருப்பாங்க. ஆனா, குழந்தையின் எல்லா தேவைகளையும் தானே பார்த்துபார்த்து கவனமா இவர் தான் செய்வாரு.”


“ராணுவத்துல இருந்த எங்கப்பா, நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போதே இறந்துட்டார். எனக்கு எல்லாமே என் அம்மா தான். அதனால, ‘மதிக்கு அம்மா இல்லை’ங்கற ஒரு காரணமே, அவளோட ஒரு ஒட்டுதல் வர, எனக்கு போதுமா இருந்துச்சு. ”


“குழந்தையை பத்தி என்கிட்ட இவர் அப்பப்போ விசாரிப்பார். மத்தபடி வேற எதுவும் எங்க ரெண்டு பேர் இடையேயும் இல்ல.”


“ஒரு மாசம் போல தினமும் மதியை நான் தான் பார்த்துக்கிட்டேன். லக்ஷ்மி அத்தைக்கு உடம்பு கொஞ்சம் தேறினதுக்கப்புறம் காப்பகத்துக்கு வரதை அவங்க நிறுத்திட்டாங்க.”


“காப்பகத்துல எத்தனையோ குழந்தைங்க இருந்தாலும், எனக்கு மதி நினைவாவே இருந்துச்சு. அதனால, மத்தியான வேளையில எனக்கு கொஞ்ச ஓய்வு நேரம் கிடைக்கறப்ப, இவளை வீட்ல வந்து பார்த்துட்டு போக ஆரம்பிச்சேன். நான் முழுக்க மதிக்காக, அவ மேல இருந்த இனம் புரியாத பாசத்தால தான் வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தேன். லக்ஷ்மி அத்தையும் நான் வந்து போறதை தடுக்கலை.”


“இப்படியே சில மாசம் போச்சு. மதியோட முதல் பிறந்த நாளை வீட்டோட கொண்டாடினாங்க. என்னையும், அம்மாவையும் அந்த விழாவுக்கு கூப்பிட்டு இருந்தாங்க. சொந்தக்காரங்கக்கிட்ட எல்லாம் என்னை அறிமுகம் செஞ்சு வெச்சு, ‘நான் ரொம்ப உதவினதா’ அத்தை பெருமையா பேசினாங்க.”


“போகப்போக மதிக்கும், என்னை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஒரு முறை, என்னால ஒரு வாரத்துக்கும் மேல மதியை பார்க்க, வீட்டுக்கு வர முடியலை. நான் அவளை தேடினது போய், குழந்தை என்னை தேட ஆரம்பிச்சு, ரொம்ப ஏங்கி போய்ட்டா.”


“சுப்பு…” என்று மழலையாக தன் காலை இறுக கட்டிக் கொண்ட மதியின் முகம் நிழலாடியது சுபத்ராவுக்கு. ‘இனி இப்படி சொல்லாம கொள்ளாம வராம இருந்துடாதே சுபாம்மா. உன்னை பார்க்காம, பிள்ளை ரொம்ப தவிச்சுட்டா…’ என்ற லக்ஷ்மி அம்மாளின் பேச்சும் நினைவுக்கு வந்தது. தன் நினைவில் இருந்து மீண்டவர், ஆர்வமாக தன் முகம் பார்த்திருந்த விதுவிடம் மேலே சொல்ல ஆரம்பித்தார்.


“லக்ஷ்மி அத்தை என்கிட்ட என்னத்தை கண்டாங்களோ, தெரியலை? அத்தை மனசுல, ‘மதிக்கு நான் நல்ல அம்மாவா இருப்பேன்’னு ஒரு எண்ணம் விழுந்துடுச்சு. இவர்கிட்ட பேசியிருப்பாங்க போல! இது தெரியாம, திரும்பவும் நான் இங்க சகஜமா வந்து போயிட்டு இருந்தேன். ஆனா, இவரை ஆரம்பத்துல எங்க காப்பகத்துல பார்த்தேனே, அதுக்கப்புறம் ஒரு நாளும் வீட்ல பார்த்ததேயில்லை.”


“எங்களுது ரொம்ப சாதாரண லோயர் மிடில் கிளாஸ் குடும்பம் குட்டிமா. நாங்க வேற ஜாதி கூட! ஜாதியிலும் சரி, அந்தஸ்துலயும் சரி, உங்க தாத்தாவுக்கு எந்த வித பொருத்தமும் இல்லாம, சில படிகள் கீழ இருந்தோம்!”


“சொந்தமா இருந்த வீட்டை தவிர, சொல்லிக்கும் படி எதுவும் எங்ககிட்ட இல்ல. நர்சரியில வர வருமானத்தில் எங்க வாழ்க்கை ஒரு குறையும் இல்லாம நல்ல விதமா நடந்துட்டு இருந்துச்சு. என்ன? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிற வரதட்சிணையை கொடுக்க முடியாம ‘என் கல்யாணம் தான், தள்ளி போய்கிட்டே இருக்கு’ன்னு என் அம்மாவுக்கு வருத்தம்.”


“இவர் ஒத்துக்கிட்டப்புறம், என் அம்மாகிட்ட சம்பந்தம் பேசியிருக்காங்க லக்ஷ்மி அத்தை. அம்மாவுக்கு இஷ்டமில்ல. அதனால, ‘இனி அங்க போகாதே’ன்னு என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டாங்க.”


“நான் ‘என்ன ஏது’ன்னு விவரம் கேட்டப்ப, கல்யாண விஷயத்தை பத்தி சொன்னாங்க. கேட்டதும் எனக்குமே பக்குன்னு இருந்துச்சு. ஒரு நாளும் நான், அப்படி நினைச்சு பார்த்தது இல்லை. அப்புறம் மதி மட்டுமே என் மனசுல நின்னா.”


“கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம்னு நான் சொல்லவும், என் அம்மா ஆடி போயிட்டாங்க. ‘ரெண்டாம் தாரமா வேணாம்’னு அவங்க எவ்வளவோ எனக்கு புத்தி சொல்லி பார்த்தாங்க. நான் கேட்டுக்கலை. அப்படி, இப்படி ரெண்டு பக்கமும் பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சாங்க. அப்போ தான் ஒரு நாள் உன் ருக்மிணி பாட்டியும், ரெங்கநாயகி அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து அசிங்கசிங்கமா கேவலப்படுத்தி பேசினாங்க.”


அதுவரை அமைதியாக சுபாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த விது, “நினைச்சேன்… எங்கடா வில்லி என்ட்ரி ஆகலையேன்னு!”


“அவங்க வந்து கத்திட்டு இருந்தப்ப, லக்ஷ்மி அத்தையும் எங்க வீட்ல தான் இருந்தாங்க. உள்ள ரூம்ல, அம்மா கூட பேசிட்டு இருந்த அத்தை, கோபமா வெளிய வரவும், அப்புறம் என்ன? இவங்க பேச, அவங்க பதில் கொடுக்கன்னு, பெரிய சண்டை தான் நடந்தது.”


“என்னை பத்தியும், என் அம்மாவையும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் குதறி எடுத்தது மட்டுமில்லாம, எங்க ஜாதியை குத்திக் காட்டி, காது கொடுத்து கேட்க முடியாத அளவு தரக்குறைவா பேசிட்டாங்க. ‘நம்ம ஜாதியில இல்லாத பொண்ணா… போயும் போயும் நமக்கு கிழே இருக்க சாதியிலையா கட்டுவீங்க? எங்க மானம், மரியாதை என்ன ஆகிறது?’ அது இதுன்னு ஏதேதோ பேசினாங்க. அத்தை அவங்களுக்கு சரியான பதில் கொடுத்து, அவங்க வாயை அடைச்சாங்க.”


“அவங்க எதிர்ப்பையும் மீறி, அப்படி இப்படி ஒரு வழியா, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது. அப்போ மதிக்கு கிட்டத்தட்ட ரெண்டரை வயசு! எங்க கல்யாணத்தை சாக்கா வெச்சு, ‘மதியை அவங்க வளர்க்க பிரியப்படறதா’, ரெங்கா அம்மா திரும்ப வந்து இவர்கிட்ட பிரச்சனையை கிளப்பினாங்க.”


“இவர் பதிலுக்கு மறுத்துடவும், ‘என் பேத்தி, கண்ட ஜாதியை சேர்ந்த சித்தி கையில கஷ்டப்படற தலையெழுத்தை எழுதி வெச்சுட்டான், அந்த ஆண்டவன்! இதையெல்லாம் நான் பாக்கணும்னு, என் தலையெழுத்து.’ இப்படி ஏதேதோ திரிச்சு பேசியும், ‘மதி எங்க பொண்ணு… உங்ககிட்ட கொடுக்க முடியாது’ன்னு சொல்லி உன் தாத்தா, தன் முன்னாள் மாமியாரை அனுப்பிட்டார்.”


“அப்புறம் என்ன ஆச்சு?” என்று ஆர்வமாக கேட்ட விதுவிடம்,...


“புகுந்த வீட்டில் என் கல்யாண வாழ்க்கை சுமூகமா போச்சு. லக்ஷ்மி அத்தை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சு இருந்து இருக்கணும். அத்தனை அருமையானவங்க. எனக்கும், மதிக்கும் ஏற்கனவே நல்ல புரிதல் இருந்ததால, சந்தோஷத்துக்கு அளவே இல்லாம இருந்துச்சு.”


மேலும் நடந்ததை சொல்ல தயங்கி சுபா யோசனையாக பார்க்க,...


“சொல்லுங்க ஸ்வீட்டி…” என்றவளின் அன்பான அழைப்பில் கரைந்தவர்,...


“வேணாம் குட்டி, நீ சின்ன பிள்ளை! அதெல்லாம் உனக்கு தெரிய வேணாம்.”


“யாரு... நான் சின்ன பிள்ளையா? எனக்கு இருபத்தியொரு வயசாக்கும்!” என்று ரோஷமாக சொன்னவளிடம்,...


“இல்லைடா… நீ கல்யாணம் ஆகாத சின்ன பிள்ளைடா” தயங்கினார் சுபத்ரா.


“ஹ ஹா ஹா… யூ ஆர் சோ ஸ்வீட்…” என்று அவர் மூக்கை திருகியவள்...


“ருக்மிணி அம்மா வீட்டில் வளர்ந்த நான், இதுவரை அசிங்கமான பேச்சை கேட்கலைன்னு சொன்னா தான், நீங்க ஆச்சரியப்படணும்! அதிர்ச்சியாகணும்! இதெல்லாம் எனக்கு சகஜம் ஸ்வீட்டி, ம்ம்… மேல செப்பண்டி."


“அது குட்டி, என் மனசை அரிச்ச ஒரே விஷயம், உன் ருக்மிணி பாட்டி பேசினது தான்! ‘பிள்ளையை சாக்கா வெச்சு, எப்படியோ வீட்டுக்குள்ள வந்துட்ட! இனி நீ ஒரு பிள்ளையை பெத்துக்கிட்டு, இவளை கொடுமைப்படுத்துவ”ன்னு ரொம்ப குத்தலான அவங்க பேச்சு என் மனசுல ஆழமா பதிஞ்சதுல, எனக்குன்னு ஒரு குழந்தை வேணாங்கற முடிவில் இருந்தேன்.”


“ஓ!” என்பது தவிர என்ன சொல்ல என்று தெரியாமல் அவரை பார்த்தாள் வித்யா.


“லக்ஷ்மி அத்தை புதுசா கல்யாணம் செஞ்சவங்க என்று எங்களுக்கு தேவையான தனிமையை கொடுத்தாங்க. ஆனா, என்னால ஒரு சாதாரண கல்யாண வாழ்க்கையை வாழ முடியலை.”


புரிந்தது என்று அவர் கையை விது ஆறுதலாக பற்ற, அவளை சங்கடமாக பார்த்தவரிடம் “சொல்லுங்க” என்று உந்தினாள்.


“மதியை பார்க்க, அவளோட அம்மா வழி பாட்டி வீட்ல இருந்து மாசத்துக்கு ஒரு முறை இங்க வருவாங்க. என்னோட நரகமான நாட்கள் அந்த நாட்கள் தான். லக்ஷ்மி அத்தை வீட்ல இல்லைன்னா, கிடைச்சது சான்ஸ்னு, என்னை வார்த்தையாலேயே குத்திக் கிழிப்பாங்க ரெங்காம்மா. நானும், ‘நம்மளால பிரச்சனை கூடாதுங்கற’ எண்ணத்துல இவர்கிட்டயோ, அத்தைகிட்டையோ சொல்லாம இருந்தது, அவங்களுக்கும் வசதியா போச்சு.”


“இப்படியே வருஷம் ரெண்டு ஓடிடுச்சு. என் அம்மா, லக்ஷ்மி அத்தை, மாமா, எல்லாருமே என் மூலமா இந்த குடும்பத்துக்கு வரப் போற பேரக்குழந்தைக்காக ஆவலா இருந்தாங்க. ஒரு கட்டத்துல என் முடிவை அவங்கக்கிட்ட தெரிவிக்கவும், பெரியவங்க கலங்கி போயிட்டாங்க.”


“அவங்களோட எந்த அறிவுரையும் நான் காதுல வாங்கிக்கலை. இவரும் கூட என்கிட்ட பேசிப் பார்த்தார். நான் என் முடிவில் மாறலை. இந்த வருத்தத்துலேயே என் அம்மா சீக்காகி, இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் என் வாழ்க்கையில் எனக்கு உறவுன்னு இருந்தது இந்த குடும்பம் மட்டும் தான்.”


“இப்போ மதியும் கொஞ்சம் வளர்ந்துட்டா, ஸ்கூல் நேரம் தவிர மத்த எல்லா நேரமும் என்கிட்டே ஒட்டிட்டு இருப்பா. என்னை அவ அம்மான்னு மட்டுமே கூப்பிடுவா!”


“இத்தனைக்கும் இங்க வரும் போது எல்லாம் பச்சைக் குழந்தைக்கிட்ட, ‘இவ உன் சித்தி’ன்னு தான் ரெங்காம்மா சொல்லிக் கொடுப்பாங்க. லக்ஷ்மி அத்தை தான் எனக்கு பரிஞ்சுட்டு அவங்கக்கிட்ட சண்டை போடுவாங்க.”


“அப்போ தான் ஒரு நாள் லக்ஷ்மி அத்தை வெளிய போயிருந்தப்ப, வீட்டுக்கு வந்த ரெங்கநாயகி அம்மா, உன் தாத்தா வீட்ல இருக்கறது தெரியாம வழக்கம் போல என்னை திட்ட, எதேச்சையா இவர் அதை கேட்டுட்டார்.”


“திரும்ப ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை. இந்த முறை, ‘இனி நீங்க இங்க வரக் கூடாது’ன்னு இவர் சத்தம் போட்டுட்டார். எனக்கு தான் கஷ்டமாகிடுச்சு. நம்மால ஒண்ணா இருந்த குடும்பம் பிரிஞ்சுடுச்சுன்னு மனசுக்கு வருத்தமாகிடுச்சு.”


“ஒரு மாசம் நிம்மதியா போச்சு. ‘வீட்டுக்கு தானே வரக் கூடாது, ஸ்கூல்ல பார்த்துக்கறோம்னு’, அங்க போய் புது பிரச்சனை கிளப்பினாங்க. அதுவரை மதியோட அம்மாவா என்னை பார்த்தவங்கக்கிட்ட, ‘நான் அவளோட சித்தி’ன்னு உண்மையை சொல்லி, எனக்கு நட்பா இருந்தவங்க என்னை வேறு விதமா பார்க்கும் படி ஆகிடுச்சு. இப்படி சில பல குழப்பங்களை அவங்க செஞ்சாலும் அத்தை, மாமா, இவர், எல்லாத்துக்கும் மேல மதி என் மேல வெச்ச அன்பும், பாசமும் தான் என்னை இதெல்லாம் தாங்க வெச்சுது.”


தன் ருக்கி பாட்டியின் உண்மை சொருபம் தெரிந்தவளாதலால், சுபாவின் பேச்சை விதுவால் புரிந்து மட்டுமல்ல, உண்மை என்று ஏற்றுக் கொள்ளவும் முடிந்தது.


“இதுக்கு நடுவுல, ஒரு பேரப்பிள்ளைக்காக, என்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டாங்க லக்ஷ்மி அத்தை. நான் என் பயத்தை சொல்லி, ‘வேணாம் அத்தை, மதிக்காக கல்யாணம் செஞ்சேன். அதுவே போதும்’னு மறுத்துட்டேன்.”


“இப்படி இருக்கப்ப, எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு, பத்து வருஷம் போன நிலையில, யாருமே எதிர்பாராம, நான் குழந்தை உண்டானேன். விஷயத்தை கேட்டு லக்ஷ்மி அத்தைக்கு, சத்யா மாமாக்கு, இவருக்கு, மதிக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிடுச்சு.”


“வயித்துல இருக்க குழந்தை, உன் அம்மாவோட பேச்சையும், சிரிப்பையும் கேட்டுத் தான் நித்தமும் வளர்ந்தான். அந்த பத்து மாசமும், ரெங்கா அம்மா கண்ல கூட என்னை பட விடாம, கண்ணுக்கு கண்ணா அப்படி பார்த்துக்கிட்டாங்க அத்தை.”


“திவா, பொறந்த நிமிஷமா, அவனை பார்த்துக்கிட்டது உன் அம்மா தான்.” தன் தம்பியின் பிஞ்சு கால்களை தன் பட்டுக் கன்னத்தில் அழுத்திக் கொடுத்த மகள் மதியின் முகம் கண் முன் விரிந்தது சுபாவுக்கு.


அக்காளும், தம்பியும் ஒன்றாக இருக்கும் அழகே அழகு. தம்பிக்காக விட்டுக் கொடுக்கும் மதி, மற்ற பிள்ளைகளிடம் அவனுக்காக சண்டைப் போடும் மதி, அவனுக்கு ஒன்றென்றால் துடித்து விடும் மதி!!


“மதிக்கா… மதிக்கா…” என்று திவாவும், “தம்பா… தம்பா செல்லம்…” என்று அழைக்கும் பெரியவள், அவங்க ரெண்டு பேரையும் பார்க்க, எங்களுக்கு கண்ணு இரண்டும் பத்தலை.”


“ரெங்கா பாட்டி இங்க வரது நின்னுடுச்சா பாட்டி?”


“இல்லடா கண்ணு, திவா பொறந்தப்புறம் என்ன நெனைச்சாங்களோ, இங்க வந்தாலும் பிரச்சனை பண்றது இல்ல. உன் ருக்மிணி பாட்டியையும் அடக்கி வெச்சாங்க. மதிக்கிட்ட கூட முன்ன போல இல்லாததும், பொல்லாததும் சொல்றதை நிறுத்திட்டாங்க.”


“கண்ணுக்கு நிறைவா ரெண்டு குழந்தைங்க, அன்பான, அணுசரணையான புகுந்த வீட்டு சொந்தங்கள், அருமையான புருஷன்னு, எனக்கு என் கண்ணே பட்டுடுச்சு போல! அப்படி ஒரு நிறைவான வாழ்க்கை. இதெல்லாம், மதி ஸ்கூல் முடிக்கற வரை மட்டும் தான் எனக்கு நிலைச்சுது.”


“என்ன ஆச்சு பாட்டி?”


“பரீட்சை ரிசல்டுக்கு குழந்தை காத்துட்டு இருந்தா, உன் தாத்தாவுக்கு அவளை இன்ஜினீயருக்கு படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, ரெங்கா அம்மா வந்து, மதியை உன் அப்பாவுக்கு பொண்ணு கேட்டாங்க.”


“உன் அப்பாவுக்கும், அவளுக்கும் ஏழெட்டு வயசுக்கும் மேல வித்தியாசம். ‘எங்க நாராயணனுக்கு கல்யாண யோகம் வந்துடுச்சு சம்மந்தி. மதியை அவனுக்கு கட்டிக் கொடுக்கறதா வாசுகி வாக்கு கொடுத்தா. அதனால வர முஹுர்த்தத்துல கல்யாணத்தை வெச்சுடலாம்!’ ரெங்கநாயகி அம்மாள் கேட்டது, இன்றும் சுபாவின் மனதில் பசுமையாய் இருந்தது.


“காலேஜ் படிப்பு முடிக்காம உன் அம்மாவை கட்டிக் கொடுக்கறதுல எங்களுக்கு சுத்தமா இஷ்டம் இல்ல. இதை சொன்னப்ப, ‘உன் அப்பா சாதாரண டிகிரி படிப்பு தான் முடிச்சிருக்கார். மதி இஞ்சினீயருக்கு படிச்சா, சரி வராது’ன்னு வழக்காடினாங்க.”


“சரி, ‘அவ ஒரு டிகிரியாவது முடிக்கட்டும்னு’ இவர் சொன்னதுக்கும் ரெங்காம்மா ஒத்துக்கலை. ‘என் பேரனுக்கு, சந்திராவை கட்டிக் கொடுக்க நீங்க பிரியப்படலைல. அதை வெளிப்படையா சொல்லுங்க. உங்க வீட்ல என் பொண்ணை கட்டிக் கொடுத்த நாளா, நீங்க எங்களை ரொம்பவே அசிங்கப்படுத்திட்டீங்க. என் மக கொடுத்த வாக்கு அவளை போல காத்தோட கலந்து போயிடுச்சு’ன்னு ரெங்கநாயகி கத்தினார்.”


“லக்ஷ்மி அத்தை, ‘இது பேத்தியோட திருமணம் விஷயம். மறைந்து விட்ட தன் மருமகள் ஏற்கனவே வாக்கு கொடுத்து இருக்கிறாள். வேறு வழியில்லை’ன்னு சென்டிமென்டலா நினைச்சவங்க உந்துதலில், நாராயணனோடான, மகளின் திருமணத்துக்கு விருப்பமில்லாமல் ஒப்புக் கொண்டார் உன் பிரபா தாத்தா.”


“தங்க பெரிய புது பங்களா வீடு, உன் அம்மா சௌகரியமா வந்து போக கார், அவ பேர்ல பேங்க்ல பணம், எல்லாரும் வாய் மேல கை வைக்கற அளவுக்கு சீர் செனத்தியும், பாத்திர பண்டமும் மட்டுமில்ல, உன் அப்பாவுக்கு புதுசா ஒரு ஜவுளி தொழிலும் ஏற்பாடு பண்ணி, இப்படி எல்லா வசதியும் பார்த்து பார்த்து செஞ்சார் உன் தாத்தா. எங்க மக ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா குடும்பம் நடத்தணும். அவ்வளவு தானே எங்களுக்கு வேண்டியது. அதுக்காக எல்லாமும் குறைவில்லாம செஞ்சார்.”


“லக்ஷ்மி அத்தைக்கும், உன் தாத்தாவுக்கும் பயந்து ஆரம்பத்துல ருக்மிணி அம்மாவும், உன் அப்பாவும் ஒழுங்கா இருந்தாங்களா இல்ல ரெங்கா அம்மாவுக்கு அடங்கி நடந்தாங்களோ? எனக்கு தெரியாது! எந்த பிரச்சனையும் இல்லாம தான், உன் அம்மாவுக்கு புகுந்த வீட்டு வாழ்க்கை இருந்துச்சு.”


“என்ன, உன் அப்பா இங்க வர மாட்டார். ஆனா, உன் அம்மாவை வாரம் தவறாம அனுப்பி விடுவார். திவா அப்பா உதவியோட, உன் அப்பா புதுசா ஆரம்பிச்ச கார்மென்ட் ஃபாக்டரி நல்லபடியா நடக்க ஆரம்பிச்சு, கொள்ளை லாபமும் பார்த்தார்.”


“நீயும் பொறந்த… நாங்க எல்லாரும் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை” அந்த நாளின் நினைவில் சுபா மூழ்க,...


“ம்ம்ம்… அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க பாட்டி.”


“உனக்கு அஞ்சு மாசம் ஆகுற வரை நீ இங்க, எங்கக்கிட்ட தான் வளர்ந்த கண்ணு. லக்ஷ்மி அத்தை தான், உனக்கு வித்யலட்சுமின்னு பேர் வெச்சாங்க. ஆனாலும், உன்னை ஆளுக்கு ஒரு செல்ல பேர் வெச்சு தான் ஆசையா கூப்பிடுவோம். அவர் உன்னை பாப்பான்னு சொல்லுவார். திவாவுக்கு நீ சின்னு, நான் உன்னை குட்டிமான்னு கூப்பிடுவேன். நீ எங்க எல்லாரோட உயிராவும் இருந்த குட்டி.” என்றவர் கண்களில் கண்ணீர் திரண்டது.


அவர் முதுகை விது மெதுவே தடவிக் கொடுக்க, “உனக்கு ஒன்பதாம் மாசம் மொட்டை அடிச்சு, காது குத்தறதா ப்ளான் செஞ்சுருந்தோம். ஆனா, திடீர்னு திவாவுக்கு அம்மை போட்டுடுச்சு. நீங்க இங்க வரும்போதெல்லாம் மதி கூடவே அவன் ஒட்டிட்டு இருப்பானா, இதுல எப்படியோ மதிக்கும் அம்மை போட்டுடுச்சு. சின்ன பிள்ளையில அவளுக்கு போடாத அம்மை, இப்போ கொஞ்சம் தீவிரமா போடவும், நாங்க ரொம்ப பயந்துட்டோம். அவளுக்கு நல்லபடியா குணமாகணுமேன்னு நாங்க வேண்டாத கடவுள் இல்ல. இதுல உன் மொட்டை விஷயம் பின்னுக்கு போயிடுச்சு.”


“லக்ஷ்மி அத்தை தான் மூணாம் பிறந்த நாளுக்குள்ள மொட்டை போட்டுடலாம்னு யோசனை சொன்னாங்க.”


“நீங்க சொல்றதை பார்த்தா எல்லாம் சுமூகமா தானே இருந்தீங்க! அப்புறம் எப்படி பிரச்சனை ஆச்சு?” என்ற விதுவின் கேள்விக்கு,...


“மதியை பார்க்க உங்க வீட்டுக்கு நான் என்னைக்கும் தனியா வந்ததே இல்லை குட்டிமா. எப்போவும் லக்ஷ்மி அத்தை, இல்ல இவர் கூட துணைக்கு இருப்பாங்க. அதே போல, உங்க ரெங்கா பாட்டி மனசு மாறி, நல்ல விதமா நடக்க ஆரம்பிச்ச நாளாக, பெரும்பாலும் பிரச்சனைங்க வந்தது இல்ல. ஆனா, உன் ருக்மிணி பாட்டிக்கும், உன் அப்பாவுக்கும் இன்னும் என்னையும், திவாவையும் கண்டா ஆகலைன்னு எங்களுக்கு தான் புரியாம போச்சு.”


“அது தெரிய வந்தப்ப, நிறைய வேதனையில கொண்டு வந்து விட்டுடுச்சு.”


முடிச்சு அவிழும்…..


© KPN NOVELS COPY PROTECT
bottom of page