top of page

மூன்று முடிச்சு 10


மூன்று முடிச்சு


முடிச்சு - பத்து


பிரபாகரின் “பாண்டியன்!” என்ற அழுத்தமான உரத்த அழைப்பில் கவனம் கலைந்ததால், சற்று நிதானத்துக்கு வந்த மோகனின் அப்பாவை முந்திக் கொண்டு, “உன் பையன் பண்ணி வைச்சிருக்கிற வேலைக்கு, இன்னைக்கு நாங்க போலீசுக்கு பதில் சொல்ற அளவுக்கு வந்து இருக்கு!” குற்றம் சாட்ட வீடு தேடி வந்த மனிதருக்கு பதிலாக, இவர் ஆவேசமாக பிராது தரவும் ஒரு நொடி திகைத்து போனார் அம்மனிதர்.


ஒருவாறு சுதாரித்து, “என்ன பிரபாகர் பேசறீங்க? போலீஸ்காரன் சொல்லி தான், எனக்கே மோகன் பண்ண வேலையை பத்தி தெரிய வந்துச்சு. அவனோட போன் சுவிட்ச் ஆஃப்னு வருது. அவன் போன திசை தெரியலை. முதல்ல என் பையன் எங்கன்னு திவாவை சொல்ல சொல்லுங்க. அவனுக்கு தெரியாம இருக்காது.” கர்ஜித்தவரை கண்டு சற்றும் அசராது,


“இப்படி ஒரு காரியம் பண்ணனும்னா, வேற எங்கயாவது போய் செஞ்சுருக்க வேண்டியது தானே உங்க மோகன்! எதுக்கு எங்க பங்களாவை உபயோகிக்கணும்?” பாண்டியனின் பேச்சை கண்டுக் கொள்ளாமல் பிரபா அடுத்த கேள்வியை எழுப்பினார்.


“அவன் செஞ்சுருக்க வேலைக்கு… நானே, கொதிச்சு போய் ஓடி வந்து இருக்கேன். என் நிலைமை புரியாம நீங்க திரும்பத்திரும்ப இப்படி பேசறீங்களே பிரபாகர், இது நல்லாயில்ல! திவாவுக்கு விவரம் தெரியும்னு போலீஸ் எஸ்.ஐ. சொன்னார். எங்க மோகனும் அந்த பொண்ணும் எங்க போனாங்கன்னு மறைக்காம உங்க மகன் சொல்லிட்டா, நான் வந்த வழியே போயிட போறேன்.”


“பாருங்க பாண்டியன், எங்க திவாவுக்கு எதுவும் தெரியாது. அவன் நேத்து இங்க கோவையில தான் சாயங்காலம் வரை பிசினெஸ் பிரச்சனையை தீர்த்துட்டு இருந்தான். இவனுக்கு விஷயம் தெரியாம, நைட் கிளம்பி போய் நடுவுல அனாவசியமா மாட்டிக்கிட்டான். உங்க மோகன் தான் தனியா திட்டம் போட்டு ஏதோ செஞ்சு, அங்க குழப்பம் நடந்து இருக்கு.”


வாசலில் ஆட்கள் இறங்கியவுடன், அங்கே நடந்த வாக்குவாதங்களை வெளி கதவுக்கருகில் நின்று வீட்டில் இருந்த மற்றவர் கேட்டுக் கொண்டு இருந்தனர்.


“முதல்ல குட்டிமாவை அழைச்சுட்டு மேலே போ சுபா.” என்ற தாத்தாவிடம்,


“மோகன் அப்பா!” என்று சுபா தயங்க, “நாங்க இத்தனை பேர் இருக்கோம். நீயும், பாப்பாவும் உள்ள போங்க.” தாத்தா உறுதியாக சொல்ல,...


“வா கண்ணம்மா…” என்று அவளை அங்கிருந்து அழைத்து சென்றார் சுபா.


மோகனின் தந்தை வருவார் என்று எதிர்பார்த்து இருந்ததால் தான், நண்பர்களுக்கு ஏற்கனவே சில அறிவுரைகளை சொல்லி வைத்து இருந்த திவா, அன்று பொள்ளாச்சியில் விதுவின் வீட்டில் நடந்த குழப்பங்களை அடுத்து, அவனே எதிர்பாராமல் திடீரென இப்போது அவனுக்கு ஆதரவாக பிரபாகர் குறுக்கே இடையிட்டு வாதிடவும், அயர்ந்து போனான்.


அவர்கள் வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ, ‘ஐயோ, நாம ஒண்ணு ப்ளான் பண்ணியிருக்கப்ப, இந்த அப்பா வேற எதையாவது உளறி வைக்க போறார்.’ என்று பதறிக் கொண்டிருந்தான்.


“மொக்கைக்கு நாம உதவினது மட்டும் அங்கிளுக்கு தெரிஞ்சுதோ, இன்னைக்கு நமக்கு சங்கு தான்டா மச்சி” சந்து மெல்ல முணுமுணுக்க,...


“வாயை தொறக்காதடா மச்சி, அவரை பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது. அங்க பார்த்தல்ல, அவனுங்க கையில இருக்க அரிவாள! எவ்வளோ பெரிய கத்தி!” அந்த பயத்தில் கூட இயல்பான விளையாட்டுத்தனம் லேசாய் தலை தூக்க தேவயானி மாடுலேஷனில் புலம்பியவனை, சந்து முறைத்தான் எனில், சூடான விவாதங்களை கேட்டுக் கொண்டிருந்த தாத்தாவுக்கும் கூட, ‘கடவுளே, இந்த பிள்ளைகளுக்கு இந்த வீண் வம்பு தேவையா?’ என்று தான் கவலையாக இருந்தது.


“பாருங்க அங்கிள், ‘குன்னூர் பங்களாவுக்கு போகலாம் வரியா?’ன்னு மோகன் கேட்டப்ப, எனக்கு ஒரு அவசர மீட்டிங் இருந்ததால, நீ வேணா போடான்னு அவனை அனுப்பிட்டேன்.” என்று ஆரம்பித்த திவா, பல விஷயங்களை கத்தரித்து, கோர்வையாக பாண்டியனிடம் நடந்ததை தெரிவித்தான்.


“உங்க பையனால இன்னைக்கு எங்களுக்கு எத்தனை அவமானம் ஆகிடுச்சு தெரியுமா?” இடையே பிரபாகர் மீண்டும் எகிறவும், ‘இவர் வேற ஏண்டா, நடுவுல புகுந்து பேசறார்?’ என்று தான் நண்பர்கள் மூவரும் தங்கள் மனதில் நினைத்தனர்.


கோபமாக இருந்த பிரபாவோ நிறுத்தாமல் பாப்கார்னாக பொரிவதை தொடர்ந்தார். “அந்த நாராயணன்கிட்ட, நானா போய் பேசி கிட்டத்தட்ட பத்தொன்பது வருஷம் ஆச்சு! உங்க பையனால, இன்னைக்கு அவன் வீட்டு வாசலை நான் மிதிக்க வேண்டிய நிலைமை ஆகிடுச்சு. ரொம்ப அசிங்கப்பட்டுட்டோம் பாண்டியன். நடந்ததுக்கு, நியாயமா நான் தான் உங்க சட்டையை பிடிச்சு சண்டை போடணும். உங்க பையன் மட்டும் என் கையில் சிக்கட்டும், அப்ப தெரியும் சேதி!” என்று ஏகத்துக்கும் சவுண்ட் விடவும்,


“ஏய்… யாருகிட்ட…” என்று பாண்டியனின் ஆட்களில் ஒருவன் பதிலுக்கு அரிவாளோடு முன் வர,...


“டேய்… எவன்டா அது? எங்க வந்து, யாரை மரியாதை இல்லாம பேசற? வகுந்துடுவேன் மவனே...” திவா பதிலுக்கு கத்தவும், நிலைமை மோசமாகத் துவங்கியது.


***************************************************


கீழே ஆண்கள் வாய் சண்டையிட்டுக் கொண்டிருந்த அதே வேளை, விதுவுக்கு துணையாக இருந்த சுபா, மெல்ல பேச்சுக் கொடுத்தார்.


மொபைலில் மீண்டும் அம்மாவுக்கு அழைக்க முயன்று, ‘சுவிட்ச் ஆஃப்’ என்ற பதில் வரவும் கண் கலங்க ஆரம்பித்தவளிடம், “குட்டிமா, அழாதடா செல்லம். உங்கப்பா போனை ஆஃப் செஞ்சு வெச்சுருப்பார். உன் அம்மாவும் உன் நினைப்புல தான் தவிச்சுட்டு இருப்பா. பிள்ளையை பிரிஞ்ச அம்மாவோட மனசு என்ன பாடுபடும்னு என்னை தவிர வேற யாருக்கு இங்க புரியும்!”


அவரின் வருத்தமான பேச்சில் அவள் நிலைமை தற்காலிகமாக சற்றே பின்னுக்கு செல்ல, “உங்க பொண்ணு உங்க கூட இல்லையா? அவங்க எங்க ஆன்ட்டி?” என்றவளை விசித்தரமாக பார்த்த சுபாவுக்கு, வந்து இறங்கிய நொடியே, விதுவின் முகத்தில் எழுந்த குழப்ப பாவம் நினைவுக்கு வர, அதற்கான விடையாக, தங்களை யாரென்று அடையாளம் மட்டுமல்ல, தங்கள் உறவுமுறையும் கூட இளையவளுக்கு நினைவு இல்லை என்பதே அப்போது தான் உணர்ந்தவராக,


“கண்ணம்மா, நான் உனக்கு ஆன்ட்டி இல்ல, பாட்டிடா!” என்றவரின் பேச்சு புரியாத விதுவோ அவளின் தற்போதைய ஒரே உருப்படியான வேலையான மலங்க முழித்தளை செவ்வனே செய்தாள்.


“என்ன பாட்டியா?” அதிர்வோடு கேள்வியாக சுபாவை ஆராய்ச்சியாக எடை போடும் விதத்தில் பார்த்திட,


“சத்யா மாமா, உனக்கு கொள்ளு தாத்தாடா. அதாவது, உன் அம்மாவுக்கு அவர் அப்பா வழி தாத்தா. அவங்க… அதான் திவாவோட அப்பா தான், உன்னோட அம்மா வழி தாத்தா! உன் அம்மாவை பெத்த அப்பா அவர் தான். நான்… நான்... உன் அம்மாவுக்கு அம்மா முறை கண்ணு! அதாவது சித்தி! உன் பிரபா தாத்தாவோட ரெண்டாவது சம்சாரம்.” உறவுமுறைகளை தெளிவாக விளக்கிய சுபா சொன்னதை மெதுவே திருப்பி சொல்லி, மனதில் வாங்கியவள், “நீங்க எனக்கு அத்தைன்னு இல்ல, நான் இத்தனை நேரம் நெனைச்சேன்!” தான் நினைத்ததை மறைக்காமல் சொன்ன விது,...


“பாட்டியா? நீங்க… எனக்கு பாட்டி!” வார்த்தைகள் தடுமாற்றதோடு வெளிவர சில நொடிகள் விஷயங்களை மனதில் மீண்டும் ஓட்டி பார்த்து, “அப்போ, டி.எஸ்.பி சார்?” என்று அவர் முகத்தை பார்த்தாள்.


“திவா, உனக்கு தாய் மாமாடா செல்லம்!”


“ஓ…” ஆச்சரியமாக விழி விரித்தவளிடம், “உனக்கு மூணு, மூன்றரை வயசு இருக்கும் போது உன்னை கடைசியா பார்த்தது. உன் முகமும் உங்கப்பா வீட்டு சாடையில இருக்கறதால, எனக்கு கூட உன்னை கண்டுபிடிக்க முடியலை. அதனால, எங்களுக்கு தான் உன்னை அடையாளம் தெரியலை. திவாவும் வளர்ந்துட்டதால, உன்னாலயும் அவனை மாமான்னு கண்டுபிடிச்சு இருக்க முடியாது. ஆனா, இந்த வெள்ளை முடியும், தோல் சுருக்கம் தவிர, நானும், அவரும் இப்போவும், அன்னைக்கு போலவே தான் இருக்கோம். எங்களை போட்டோவுல பார்த்த உனக்கு கூட எங்களை இன்னார்னு கண்டுக்க முடியலையா குட்டி?”


“போட்டோவா? என்ன போட்டோ? ஆமா, உங்களை பத்தியெல்லாம், ஏன் என்கிட்ட இத்தனை வருஷம் இந்த அம்மா எதுவுமே சொல்லவேயில்லை!”


“என்ன… எங்களை பத்தி சொன்னதில்லையா? அப்போ… அப்போ, உன் அம்மாவோட பிறந்த வீட்டை பத்தி இத்தனை நாள் உனக்கு தெரியாதா?” என்று அதிர்ந்த சுபத்ரா, தங்களை பற்றி பிள்ளைகளிடம் வாய் வார்த்தையாக கூட சந்திரமதி பேசுவது இல்லை என்றதை அறிந்த மூத்தவளுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம் மனதை அழுத்தியது.


இன்னுமே சொல்லப்பட்டவற்றை நம்ப முடியாமல், அப்படியே கட்டிலில் தொய்ந்தமர்ந்த விது, “பிறந்த வீட்டு சொந்தங்களைப் பத்தி எத்தனை முறை அவங்களை கேட்டு இருக்கேன் தெரியுமா? ஆனா, அம்மா பதிலே சொன்னதில்லை.” என்றதை கேட்டு கரகரவென கண்ணீர் கன்னங்களில் வழிய, தானும் கட்டிலில் அமர்ந்தார் சுபா.


************************************************************


திவாகரின் குடும்ப தகராறை பற்றி ஏற்கனவே அறிந்து இருந்த பாண்டியனுக்கு, ‘நாம விசாரிக்க வந்த விஷயம் என்ன? இது என்ன புது குழப்பம்? நடுவுல நாராயணன் எங்க வந்தான்!’ என்று மனம் குழம்பி காய்ந்தது.


“எலக்க்ஷன் நேரத்துல, சீட் வேலையை பார்ப்பேனா இல்ல மோகன் செஞ்சு வெச்சுருக்க காரியத்தை கவனிப்பேனா? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வெச்சுட்டான் அந்த பய. எங்க சாதி, சனத்துல என் முகத்துல காரி துப்புவாங்க. வேற சாதி பொண்ணை அவன் இழுத்துட்டு போனதால, எங்க ஆளுங்க ஒரு பய இனி எனக்கு ஓட்டு போட மாட்டான்.” குமுறினார் பாண்டியன்.


“அது உங்க பிரச்சனை! இதுல எங்களை ஏன் சம்பந்தப்படுத்தினான் மோகன்?” விடாக்கண்டனாக எகிறினார் பிரபா.


“அவன் இருக்கற இடம் தெரிஞ்சா தானே இதுக்கு நான் பதில் சொல்ல முடியும் பிரபாகர்! எம்.எல்.ஏ சீட் விஷயமா கட்சி தலைமைக்கிட்ட பேச சென்னைக்கு போனவன், என் அரசியல் எதிர்காலத்தை பின்னுக்கு தள்ளிட்டு, போட்டது போட்டபடி கடாசிட்டு, பதறிக்கிட்டு இங்க வந்து இருக்கேன். கொஞ்சம் மோகனை பத்தி கேட்டு சொல்லுங்க.” சிங்கமாக சிலுப்பி கொண்டு வந்தவர், தன் நிலையில் இருந்து இறங்கி, கெஞ்சுதலாக பார்த்தார்.


அப்போது வாசலில் நின்றிருந்த சந்துவை அந்த ஆட்களில் ஒருவன் கவனித்து விட்டு “அண்ணே, நம்ம தம்பியோட தோஸ்து பய அங்கிட்டு நிக்கான்.” என்று சந்துவின் புறம் கை காட்டினான்.


“செத்தோம்…” என்று தாத்தாவின் பின் சந்து மறைய பார்க்க,...

“டேய் சந்தோஷ், நீயும் இங்க தான் இருக்கியா? வாடா வெளியே...” என்று பாண்டியன் கர்ஜித்ததில், விஜய்யும் தானே வெளியே வந்தான்.


திவா, சந்து, விஜய், மூவரையும் ஒரு பார்வை பார்த்தவர், “உங்களுக்கு விஷயம் தெரியாம இருக்காது. மரியாதையா சொல்லுங்கடா, எங்க எம்மவன்?” பாண்டியன் மிரட்டலாக கேட்க, மௌனமே பதிலாக கிடைத்தது.


சட்டென்று விஜய்யின் சட்டையை கெத்தாக பிடித்தவர், “சொல்லுடா?” என்று அவனை உலுக்கினார்.


“அவனை விடுங்க அங்கிள் எங்களுக்கு எதுவுமே தெரியாது.” திவா குறுக்கே வர,...


“டேய், நீங்க மூணு பேரும் கூட இல்லாம, அவன் ஒரு ***** புடுங்க மாட்டான்னு, எனக்கு நல்லாத் தெரியும். சொல்லுடா…” அதட்டலாக உறும,...


“நிஜமா அங்கிள், என்னை நம்புங்க. நாங்க மூணு பேரும் இன்னைக்கு காலையில தூங்கி எழுந்து வந்தப்ப மோகன், கூட ஒரு பொண்ணு நல்லா கல்யாண கோலத்தில் நின்னுட்டு இருந்துச்சா…” என்று விஜய் ஆரம்பிக்க,...


“சீக்கிரம் சொல்லி தொலைடா” பொறுமை இழந்த பாண்டியன் கத்தினார்.


“விஷயம் இதுன்னு சொன்னானா, நாங்க மூணு பேரும் வேணாம்னு சொல்லியும் அவன் எங்க பேச்சை கேட்கலை. ‘நீங்க ஹெல்ப் பண்ணலைன்னா போங்கடா’ன்னு அவன் அந்த பொண்ணு கூட தனியே கிளம்பி போய்ட்டான் அங்கிள்.” விஜய் விவரிக்க ஆரம்பித்ததை சந்து முடித்தான்.


அவர்கள் இருவரையும் ஊடுருவும் பார்வை பார்த்தார். அக்கூர் பார்வை வீச்சில் நடுக்கம் பிறக்க, “சத்தியமா அங்கிள், நாங்க உதவ மறுத்ததால, கோவிச்சுக்கிட்டு போயிட்டான்.” நடுக்கத்தோடு விஜய் பாவமான குரலில் விவரிக்க,


“இல்லையே… இன்னொரு பொண்ணு பத்தி அந்த எஸ்.ஐ சொன்னானே!” என்ற பாண்டியன் மூவரையும் மீண்டும் அளவிட…


“அவ தான் நாராயணனோட பொண்ணு” என்று பிரபா மீண்டும் குறுக்கே வர,


“அப்போ உங்க வீட்டு பொண்ணுன்னு சொல்லுங்க பிரபாகர். உங்க பையன், அந்த பொண்ணு முன்னிலையில், உங்க பங்களாவில் வெச்சு தான், என் பையனோட கல்யாணம் முடிவாகி இருக்கு. துணைக்கு இவனுங்களும் கூட இருந்து இருக்கானுங்க. இத்தனை பேருக்கு சம்பந்தம் இருக்கு. ஆனா, என் பையன் போன திசை இவங்க யாருக்கும் தெரியாது. இதை நான் நம்பணுமா?” பாண்டியன் கோபமாக கேட்க,...


“நானும் அதைத் தான் சொல்றேன் பாண்டியன். யார் மூஞ்சியில நான் இத்தனை வருஷம் முழிக்கலையோ, அவங்க வீட்டு வாசலை இன்னைக்கு உங்க பையனால மிதிச்சு, அவமானப்பட்டு, அசிங்கப்படும் படி ஆகிடுச்சு!” என்றவர் ஒரு நொடி நிறுத்தி விட்டு,...


“நல்லா கேட்டுக்கோங்க, உங்க பையன் முதல்ல உங்க கையில கிடைச்சா அவனுக்கு நல்ல நேரம், தப்பிட்டான்னு நினைச்சுக்கோங்க. மகனே, என் கண்ல மட்டும் உங்க மோகன் மாட்டினானோ, அவனை என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது!” பிரபா ஆவேசமாகவும்,


தந்தையின் கோபத்தில் அதிர்ந்த திவா, “அப்பா…” என்று அவர் கையை பிடிக்க,..


“உன் ஃபிரெண்டால இன்னைக்கு எனக்கு ஏற்பட்ட அனாவசிய தலைகுனிவை என்னால மறக்கவே முடியாது திவா. இனி ஒரு வார்த்தை இது பத்தி என்கிட்ட பேசாதே” என்றவர், கோபமாக அங்கிருந்து நகர்ந்தார்.


“அப்பா… எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாதுப்பா” என்ற திவாவின் கெஞ்சலை கேட்க அங்கே பிரபாகர் இல்லை.


அத்தனை பேரின் விளக்கங்களை துளியும் நம்ப தயாராக இல்லை பாண்டியன். ‘என்னங்கடா நடக்குது இங்க?’ என்ற உச்சபட்ச கடுப்புக்கு போனவராக, செல்பவரின் முதுகை வெறித்தவர், மெல்ல தன் முன் நின்றிருக்கும் மூவரையும் பார்க்க,...


“போதும் அங்கிள், உங்க மோகனால ஏற்கனவே இன்னைக்கு எங்க வீட்ல நிறைய பிரச்சனை ஆகிடுச்சு. நீங்க, தயவு செஞ்சு முதல்ல கிளம்புங்க.” என்று திவா வாசலை காட்டினான்.


“மோகனுக்கு நீயோ, இவனுங்களோ ஏதாவது உதவினதா எனக்கு தெரிய வந்ததோ…” என்று ஒற்றை விரலை நீட்டி அவர்களை மிரட்டலாக பார்த்தவர், வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.


“ஹப்பா…” என்று மூச்சை இழுத்து வெளியே விட்ட சந்துவுக்கும், விஜய்க்கும், இப்போது தான் தாங்கள் செய்த காரியத்தின் வீரியம் முழுதாக புரிந்தது.


பாண்டியனின் செல்வாக்கை பற்றி ஓரளவுக்கு மோகன் மூலம் அவர்கள் அறிந்து இருந்தனர் தான். ஆனால், அரசியல்வாதியின் ஹோதா இல்லாமல் தங்களிடம் சாதாரணமாக நட்பாக பேசும் அவரை, நண்பனின் அப்பா என்ற அளவில் நல்ல விதமாகவே பார்த்திருந்தவர்களுக்கு, இப்போது அவரின் நிஜ கோப முகமும், ஆள் பலமும் கண்டு விதிர் விதிர்த்தது.


“நேரமாச்சு விஜய், சந்து, இனி நீங்க டிரைவ் செஞ்சு போக வேணாம். வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிட்டு, நைட் இங்கேயே தங்குங்க” என்ற தாத்தாவுக்கு, சரியென்று தலையசைத்தனர்.


தங்களை முறைத்த திவாவைக் கண்டு இருவரும் பேய் முழி முழிக்க, அவர்களை வீட்டின் உள்ளே வருமாறு சைகை செய்தவன், “இதுக்கு தான் நான் அன்னைக்கே சொன்னேன். ‘இது காதல்… சொல்லாம வரும்…’ அது இதுன்னு டையலாக் பேசினியே எருமை, இப்போ பாரு! அருவாளோட சுத்திட்டு இருக்கார். அவர் இருக்கற வெறியில, ரத்தம் பார்க்காம விட மாட்டார் போல! மோகனுக்கு தான் காதல் கண்ணை மறைச்சுடுச்சு. உங்களுக்கு அறிவு எங்கடா போச்சு?” நண்பர்களை திட்டியவன்,...


“இல்ல மச்சி…” என்று ஆரம்பித்த விஜய்யிடம்,...


“பேசாதடா… போய் படுங்க…” என்று விருந்தினர் அறையை அவர்களுக்கு திறந்து விட்டான்.


தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவனுக்கு, பிரபாகரின் கோபமே கண்ணில் நிழலாடியது. அறியாமல் செய்த தவறுக்கு தன் மேல் பாராமுகம் காட்டும் அப்பாவின் ஒதுக்கத்துக்கு முன் மற்றவை திவாவுக்கு பெரிதாகப்படவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தித்த விது, அவனுடைய ‘சின்னு’ என்ற கருத்து மனதை கவரவில்லை அந்த அப்பா பைத்தியத்துக்கு.


********************************************

விதுவின் அறையில்..


நிலவிய நீண்ட மௌனத்தை கலைத்து, “ஆமா, அந்த கூனி ஏன் அப்படி கத்துச்சு? அவங்க தான் உங்களுக்கும் வில்லியா?” திடீரென விது கேட்ட விதத்தில் யாரைப் பற்றி என்று புரிந்தவுடன்,...


“பெரியவங்களை இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா குட்டிமா?” கண்டிப்பான தொனியில் சுபா கேட்டதும்,


ஈ… என இளித்தவள், “அது சரி, எல்லோரையும் வாய்க்கு வந்தது போல அவங்க வசை பாடலாம்! நான் மட்டும் அவங்களை எதுவும் சொல்லக் கூடாதா?”


“தப்புடா, அவங்க தான் புரிஞ்சுக்காம ஏதோ பேசினா… நாமளும், அதே தப்பை பண்ணலாமா, சொல்லு? வயசுல பெரியவங்களுக்கு, மரியாதை கொடுக்கணும் செல்லம். நீ நல்ல பிள்ளை தானே?” என்ற சுபாவை ஆச்சரியமாக விழி விரித்து பார்த்தவள்,…


“ஐயோடா… சினிமாவுல வருமே குடும்ப பாட்டு மாதிரி, இது என்ன உங்க ஃபேமிலி டையலாக்கா? அம்மா கூட இதே தான், என்கிட்டே அடிக்கடி சொல்வாங்க.” குரல் கமர சொன்ன இளையவளை, வாஞ்சையாக பார்த்த சுபா,


“நீ படு கண்ணம்மா, எனக்கு வேலை இருக்கு. நான் கொஞ்சத்துல வரேன்” என்று விதுவின் அறையில் இருந்து வெளியே வந்த சுபா, அப்போது தான் படியேறி வந்துக் கொண்டிருந்த சத்யா தாத்தாவிடம், “பிரச்சனை ஆகலியே மாமா? அவர் எங்கே?” என்று கேட்டார்.


“அதெல்லாம் இல்லை சுபா. உங்க ரூமுக்கு தான் பிரபா போனான். நீங்க எல்லாம் இன்னும் சாப்பிடலை. அவனுக்கு சாப்பிட எதாவது கொண்டு போய் குடும்மா. விஜி, சந்துவை இங்கேயே தங்க சொல்லிட்டேன். நான் பாப்பா கூட பேசிட்டு இருக்கேன்.” விது இருந்த அறைக்கு தாத்தா சென்றார்.


கணவனுக்கும், மகன் மற்றும் அவன் நண்பர்களுக்கும் இரவு உணவை ட்ரேயில் வைத்து வேலையாட்களின் உதவியோடு மேலே எடுத்துக் கொண்டு சென்றார்.


“விஜய், சந்து வந்து சாப்பிடுங்க கண்ணா…” என்று அவர்கள் அறைக் கதவை தட்டியவர், கதவை திறந்த விஜய்யிடம், “திவாவையும் சாப்பிட வைங்க…” என்று உணவை அவனிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.


பிரபாகர் மிகவும் பிடிவாதக்காரர். அதுவும் கோபம் வந்து விட்டால், நாட்கணக்கில் வீட்டில் யாரோடும் முகம் கொடுத்து பேச மாட்டார். அப்படிப்பட்ட கணவரின் இன்றைய மனவுளைச்சலும், அதற்கு மகனே காரணம் என்பதும், இனி வரும் நாட்கள் கூட்டுக்குள் அடைந்து கொள்ள போகிறவரின் குணத்தை நினைத்து கலங்கியவாறு தங்கள் அறைக்குள் நுழைந்த சுபா,


“எழுந்து வாங்க, சாப்பிட்டுட்டு படுங்க...” என்று அழைப்பு விடுக்க, அதற்கு பிரபாகரிடம் அசைவு இல்லை என்றவுடன்,...


“உங்களைத் தானே கூப்பிடறேன்,” மீண்டும் கூப்பிட்டும், பதில் வராமல் போக,...


“காலையில இருந்து எனக்கு ஒரே டென்ஷன், தலைவலி வேற மண்டையை பிளக்குது. லைட்டா சாப்பிட்டுட்டு, மாத்திரை போடலாம்னு பார்த்தேன்.” சலிப்பாக கணவரை பார்த்தார்.


மனைவி உடல் நலம் சரியில்லை என்றதும், மெதுவே எழுந்து வந்த பிரபாகர், பேசாமல் சாப்பிட ஆரம்பித்தார். அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல், சுபாவும் வேகமாக உண்டார்.


இரவு கணவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்தார். “நான் பாப்பா கூட படுத்துக்கறேன்” என்ற சுபா, கணவரின் பதிலை எதிர்பாராமல் அறையை விட்டு வெளியே வந்தார்.


மகன் அறையில் இன்னும் விளக்கு எரிவதை பார்த்தவர், ‘விஜய்யும், சந்துவும் அவனை பார்த்துக் கொள்வர்’ என்ற நம்பிக்கையில் விதுவின் ரூமுக்குள் போனார்.


“என்ன மாமா? உங்க பேத்தி என்ன சொல்றா?”


“அவ எங்க சரியா பேசறா சுபா? எல்லாம் ஒத்தை வார்த்தையில பதில் தரா. சரி சரி… நேரமாச்சு… படுங்க” என்று இரவு வணக்கம் சொன்ன தாத்தா வெளியேறினார்.


சோர்வையும் மீறி, ஆசையாக விதுவின் கன்னம் வழித்த சுபா, “உன்னை பார்க்கணும்னு எத்தனை வருஷ ஆசை தெரியுமா செல்லக் குட்டி? இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு.”


“நிஜமாவா?”


“ஆமா குட்டி... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீ பொறந்தப்ப, என் கைல தான், உன்னை முதல்ல நர்ஸ் கொடுத்தாங்க. ரோஜா பூ கன்னம், சின்ன சின்ன பிஞ்சு விரல், ஹும்ம்... இன்னைக்கு போல இருக்கு…” என்று தன் நினைவில் சுபா மூழ்க,...


“அப்போ எல்லாரும் ஒண்ணா இருந்தீங்களா பாட்டி?” என்று விழி விரித்தவளிடம்,...


“ம்ம்… ஆமா குட்டி…” என்ற சுபா, “ஒரு முறை கூடவா மதி எங்களை பத்தி சொல்லலை?” மனம் ஆறாமல் விடை தெரிந்த கேள்வியை மீண்டும் ஒரு முறை கேட்டார்.


இல்லை என்று விது தலையசைக்க, “மதியோட கல்யாண போட்டோவுல நாங்க எல்லாரும் இருப்போமே?”


“ஓ… இது தான் நீங்க அப்ப போட்டோ பத்தி கேட்டதுக்கு காரணம்?”


“ஆமா தங்கம்… உங்க… அது அந்த பழைய வீட்டு ஹால்ல, பெருசா ஒண்ணு தொங்குமே!”


“அப்படி ஒண்ணை பார்த்த ஞாபகம் எனக்கில்லை! ஒரே ஒரு போட்டோ, அவங்க ரெண்டு பேரும் இருக்கற மாதிரி அவங்க ரூம்ல பார்த்திருக்கேன்.”


“பெத்தவங்க, கல்யாண ஆல்பம் பார்க்கணும்னு நீ ஆசைப்பட்டது இல்லையா குட்டி?”


“அதுவா, எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா, அம்மாவை எப்போவும் ருக்குவும், நானாவும், ஒரே திட்டிங் திட்டிங் தான். இவங்க ரெண்டு பேர்கிட்ட மாட்டிகிட்டு, அம்மா முழிக்கறதை தினமும் தான் நேர்ல பார்க்கறோம். அந்த துர்பாக்கிய சம்பவம் நிகழ்ந்த, அதை ஞாபகப்படுத்தற கல்யாண போட்டோவை வேற எதுக்கு தனியா பார்க்கன்னு, நான் இதுவரை கேட்டதேயில்லை.” இப்போது மெல்லிய கீற்றாக புன்னகை சிந்தினாள் விது.


புகுந்த வீட்டில் மகள் சந்தோஷமாக இருக்க வாய்ப்பு குறைவு என்று ஏற்கனவே தெரிந்தவருக்கு, பேத்தியின் பேச்சில், அதுவே உண்மை என்று உறுதியாக, கண்கள் கலங்கியது.


மெதுவே விதுவை வருடிக் கொடுத்தார். தன்னை சமன்படுத்திக் கொண்டவர், இப்போது அவளை தலை முதல் பாதம் வரை ஆராயும் நோக்கில் பார்த்தார்.


“என்ன ஆச்சு கண்ணம்மா? நீ எவ்ளோ நிறமா இருப்ப! இப்போ ஏன் முகம் லேசா கறுத்து, வாடி இருக்க? பிள்ளையை கவனிக்காம மதி என்ன பண்றா?”


“அம்மா என்ன பண்ண முடியும்? இந்த நிறம் தான் நம்ம திராவிட நிறம்.’’ கெத்தாக விது சொல்ல,...


“இல்ல கண்ணு… ரோஜா பூ போல இருப்படா. அதான், உடம்புக்கு எதுவும் வந்துச்சா குட்டி?”


“ஐயோ பாட்டி… உங்க கற்பனையை அடக்குங்க. அது… என்னோட படிப்பால கறுத்துட்டேன் பாட்டி!”


“அப்படி என்ன படிப்பு கண்ணு?” என்றவரிடம், தான் ஹார்டிகல்ச்சர் பயில்வதாக தெரிவித்தாள்.


மேலும் அவளை பற்றி அவர் கேட்கும் முன்பாக, “நீங்க இவ்ளோ ஸ்வீட் பாட்டியா இருக்கீங்க? அப்புறம் என்ன ஆச்சு? ரெண்டு வீட்டுக்கும் ஏன் பேச்சு இல்லை?” என்ற முக்கிய கேள்வியை எழுப்பினாள்.


“உனக்கு ரெண்டரை வயசு ஆகுற வரை எல்லாம் ஓரளவுக்கு சுமூகமா தான் இருந்துச்சு குட்டி. அப்புறம் தான்…” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கியது.


தன்னை சமாளித்தவர், “வாரத்துல ஒரு நாள் நீ இங்க எங்க கூடவே இருப்ப, நீ வந்துட்டா போதும், திவா இங்க அங்க அசைய மாட்டான். ‘சின்னு, சின்னு’ன்னு உன்கிட்டயே தான் இருப்பான்.”


“அப்புறம் ஏன் சண்டை ஆச்சு? ப்ச்! ‘நமக்கும் பாட்டி வீடுன்னு ஒண்ணு இருந்து இருந்தா, நல்ல இருந்து இருக்கும்’னு நான் எத்தனை நாள் ஃபீல் பண்ணியிருக்கேன் தெரியுமா? நீங்க இத்தனை பேர், அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும், உங்களை எல்லாம் தெரியாமலே வளர்ந்து இருக்கோம்!” வருத்தப்பட்ட வித்யாவிடம்,


“ஹூம்… என்ன பண்ண குட்டிமா? பெரியவங்க சண்டையில் சின்னதுங்க நீங்க பாதிக்கப்பட்டாச்சு.”


“இப்படி உங்களை எல்லாம் பிரிஞ்சு இருக்கற அளவுக்கு என்ன சண்டை பாட்டி? உங்க மேல உள்ள கோபத்துல தான் அம்மா உங்ககிட்ட பேசுறது இல்லையா?” என்று கேட்கும் பேத்தியை பார்த்தவர்,...


“ஹ்ம்ம்… இல்ல கண்ணு. உங்க அம்மாவுக்கும் எங்களுக்கும் பிரச்சனையில்ல. அது என்னால தான்!” என்று தயங்கியவர்,...


“நான் உங்கம்மாவை பெத்தவ இல்ல ராஜாத்தி. வளர்த்தவ தான்! சித்தி... அதனால, என்னால தான் இந்த பிரிவு. நான் தான் எல்லா பிரச்சனைக்கும் மூல காரணம்.” என்றவரின் கண்களில் நீர் வழிந்தது.


மதியத்தில் இருந்து தன்னிடம் மிகவும் அன்பாக நடப்பவர், தான் உறவென்று தெரியாமலேயே அக்கறை காட்டியவர். எல்லாவற்றுக்கும் மேல் தன் அம்மா கடைசியாக சொன்னது, எல்லாம் நினைத்து பார்த்தவள், ‘இவர் நல்லவர். இவர் மீது தவறு இருக்க வாய்ப்பு குறைவு.’ என்ற சரியான முடிவுக்கு வந்தாள்.


“எங்க பாட்டி தானே பிரச்சனையை ஆரம்பிச்சது? என்னவாம் அவங்களுக்கு? வரதட்சிணை விஷயமா? இல்ல… நான் பொண்ணா பொறந்துட்டதால எதுவும் வம்பு வளர்த்தாங்களா? சொல்லுங்க!”


பிரச்சனையின் நாடியை சட்டென்று சரியாக புரிந்துக் கொண்ட பேத்தியை பார்த்து மென்னகையை சிந்திய சுபா, “இல்ல கண்ணு, ஊரே மெச்சுறாப்புல தான், உங்க அம்மாவை கட்டிக் கொடுத்தோம். அது வந்து...” என்றவர், மெதுவே அன்றைய விஷயங்களை பகிர ஆரம்பித்தார்.


முடிச்சு அவிழ்கிறது…


© KPN NOVELS COPY PROTECT
bottom of page