மஞ்சக்காட்டு மயிலே
தோகை 9
தன்னை தவிர்த்து சுற்றியவாறு, துரத்தி கொண்டு ஓடும் மகனையும், மகளையும் கண்டு சிரிப்பதா, அழுவதா என்பது புரியாமல் நின்றிருந்த பூரணியை வாசலில் கேட்ட ஓசை கலைத்தது.
அவசரமாக வாசலுக்கு போனவர், கார்கோடனும், அவர் மனைவியும் படியேறுவது கண்டு “வாங்க… வாங்க…” இன்முகமாக வரவேற்றார்.
உள்ளே நுழைபவர்களின் மேல் மோதுவது போல மாறன் வரவும், “மாறா…” மகனை அதட்டியவர், தன் பிள்ளைகள் மட்டுமல்லாது, விருந்தினரும் அதிர்ந்ததில் சங்கடமாக பார்த்தார்.
“உட்காருங்க மாமா, வாங்கத்தை. மயூ, தாத்தா, பாட்டிக்கு குடிக்க தண்ணி கொண்டு வா…” மகளை உள்ளே அனுப்பினார்.
“என்ன மாறா, சென்னைக்கு பயணம் எப்போ?”
“நாளைக்கு நைட் ட்ரெயினுக்கு புக் செஞ்சுருக்கேன் தாத்தா.”
மயூ நீட்டிய நீரை வாங்கி பருகியவர்கள், “குலசாமிக்கு கெடா வெட்டி பொங்க வைக்கவும் நல்ல சேதி வந்துடுச்சு.” பூடகமாக பேச்சை துவக்கினார் கார்கோடனின் மனைவி தங்கம்மை.
“என்னத்தை சொல்றீங்க?”
“ஆமா பூரணி, நம்ம மயூவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு…”
‘திரும்பவுமா?’ என்பதாக சட்டென முகம் சிறுத்து விட்டது மயூவுக்கு. சில நொடிகளே என்றாலும் மகளின் மாற்றத்தை கவனித்து விட்டார் இதே வேலையாக மகள் மீது எப்போதும் கண் பதித்திருக்கும் பூரி.
“ஹப்பா… மொதல்ல இந்த கொரங்கை பத்தி விடுங்க பாட்டி…” மாறன் கேலி போல் சொன்னதை கேட்டு, “மாறா…” கோபமாக அதட்டினார் பூரி.
“இரும்மா… தம்பி கிண்டல் பண்றார். உனக்கும் சீக்கிரம் அமைய தான் நாங்களும் அந்த கருப்பண்ணசாமிகிட்ட வேண்டிக்கறோம். என்ன செய்ய மாறா, தள்ளி போகுது.”
“ஏனுங்க, வந்த விஷயத்தை மொத சுருக்க சொல்லுங்க! பூரி தவிப்பா நிக்கறா பாருங்க” தங்கம்மை சுட்டவும்,
“நம்ம தங்கம்மையோட பெரிய அண்ணன் மகன் வயத்து பேரனுக்கு நம்ம மயூரியை கேக்கறாங்க.”
“உங்களுக்கு ஒரு அக்கா மட்டும் தானே பாட்டி?” மாறனின் கேள்விக்கு,
“ஆமா மாறா, இவரு ஒண்ணு விட்ட பெரியப்பா. அவங்க பையனோட மகனுக்கு கேட்கறாங்க. ஹோசுர்ல இருக்காங்களே அவங்க பூரி.” விளக்கினார் தங்கம்.
“ஓ அவங்களா அத்தை! அந்த தம்பி டாக்டர் தானே?”
“ஆமா பூரி, கண் டாக்டருக்கு படிச்சு முடிச்சுருக்கார். முன்னவே, குணாவை நம்ம மயூவுக்கு கட்டினா நல்லா இருக்கும்னு நான் கூட நினைச்சுருக்கேன். ஒரு முறை அண்ணிகிட்ட கூட சும்மா பேச்சு கொடுத்து பார்த்தேன். ‘மேல் படிப்பு சீட் கிடைக்க தாமதமாகி, இப்போ தான் பேரன் சேர்ந்திருக்கான். உடனே கல்யாணத்துக்கு பார்க்கற எண்ணமில்லை’ன்னு அண்ணி மறுக்கவும், நானும் அமைதியாகிட்டேன்.”
“போன மாசம் தான், கடைசி பரிட்சையை முடிச்சானாம் குணா. ரெண்டு நாள் முன்ன அண்ணி பேசினாங்க பூரி. நாம, அன்னைக்கு தான் பூஜை செஞ்சோம்ல! என்ன எதுக்குன்னு கேட்டாங்களா, நம்ம மயூவை பத்தி சொல்லவும், அவங்க பேரனுக்கு இப்போ தான் வரன் பார்க்க ஆரம்பிக்க போறதா சொல்லி, மயூவோட விவரம் எல்லாம் கேட்டுக்கிட்டாங்க.”
“பேரை போலவே குணமும் நல்ல விதம். குணா தான் இளையவன்… பெரியவன் மனோ பெங்களூர்ல வேலை பண்றான். பெண் பிள்ளை இல்ல. பெரியவன் சம்சாரத்தை எங்கண்ணியோட மருமக என்னம்மா தாங்குறாங்கங்கங்கற? நம்ம மயூவையும் அதே போல தங்கமா பார்த்துப்பாங்க. நீ கூட அவங்களை நம்ம சுலோ கல்யாணத்துல பார்த்து, பேசியிருக்க, ஞாபகமிருக்கா? நல்ல குடும்பம். நெருங்கின சொந்தம் வேற, ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிடும். என்ன சொல்ற பூரி?” தங்கமே விடாது பேசினார்.
“நீங்க இத்தனை விவரமா சொன்னப்புறம், நான் என்ன மறுக்கவா போறேன் அத்தை? எனக்கு வேண்டியதெல்லாம், மயூவுக்கு பிடிக்கணும், அவ்வளவு தான்.” எல்லோர் பார்வையும் மயூரியின் மேல் நிலைக்க, தலை குனிந்து அமைதியாக நின்றிருந்தாள்.
“இதுல பையன் போட்டோவும் மத்த விவரமெல்லாம் இருக்கு. சாவகாசமா பார்த்து, நீங்க கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுங்க…” கார்கோடன் எழவும்,...
“என்ன தாத்தா, அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? இருந்து சாப்பிட்டுட்டு போகலாம். ம்மா, இலை இருக்கா, இல்ல தோட்டத்துல இருந்து எடுத்துட்டு வரட்டா? ” மாறன் உபசரிக்க துவங்க,
“நல்ல முடிவா சொன்னா, பாயசத்தோட விருந்தே சாப்பிட்டா போச்சு. நீயும் ஊருக்கு போக எடுத்து வெக்கற வேலை இருக்கும். நாளைக்கு வரேன் மாறா…”
“வரோம் மாறா… வரேன் பூரி. மயூ கண்ணு, நீ எடுக்க போற சந்தோஷ முடிவுக்கு காத்திருக்கோம்,” என்று இருவரும் விடைப்பெற்று சென்று விட, வீட்டில் அசாத்திய அமைதி சூழ்ந்தது.
அம்மாவின் கையில் இருந்த உறையை பறித்த மாறன், அவசரமாக மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்தவன், உடன் இருந்த பையோடேட்டாவையும் சத்தமாக படித்தான்.
“ரெண்டு வயசு தான் வித்தியாசம், நிறம் மாநிறத்துக்கும் மேலயா தெரியறார். ட்வெல்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாம். மூளைக்காரர் போல மயூ.” மாறன் தன் போக்கில் ஒவ்வொன்றாக அடுக்க, மயூவோ, அவன் யாரிடமோ பேசுவது போல, தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
“எல்லாம் நல்லவிதமா தான் இருக்கும்மா…” என்று நிமிர்ந்தவன், தான் மட்டும் தனியே அமர்ந்திருப்பதை அப்போது தான் கவனித்தான்.
“ம்மா… அம்மா… எங்க போனீங்க?” சமையலறைக்குள் வந்தவன், அவர் ஏதோ செய்வதை கண்டு, “என்ன விளையாடுறீங்களா? முக்கியமா மாப்பிள்ளை விஷயத்தை படிச்சுட்டு இருக்கேன். அவ என்னடான்னா ரூமுக்குள்ள போயிட்டா, நீங்களும் இங்க வந்துட்டீங்க?”
“மாறா, உங்க ரெண்டு பேர் விருப்பப்படியே நடந்து பழகிட்டேன். உனக்கு பிடிக்கறது எனக்கு முக்கியமில்ல. மயூவுக்கு விருப்பம் இருக்கணும். அது தான் எனக்கு தெரியணும். யோசிக்கறாளோ என்னவோ!! இப்போ தானே அத்தையும், மாமாவும் விவரம் தந்துட்டு போயிருக்காங்க. இந்த பையனோட அம்மாவை ரெண்டொரு முறை பார்த்து, பேசி இருக்கேன். மத்தபடி அவங்க சொல்றது வெச்சு தான் முடிவு பண்ணனும். நீயும் விசாரி… நானும் அப்படியே இங்க நம்மாளுங்ககிட்ட பேசி பார்க்கறேன். நமக்கும் திருப்தி ஆகட்டும். என்ன சொல்ற?”
இவர்களின் திருமணத்துக்கு பொறுமையற்று பறந்தவர், இப்போது நிதானமாக, யோசித்து செய்வோம் என்றதின் உள்குத்து புரியாதவனாக… “சரிம்மா… நானும் பையனை பத்தி விசாரிக்கறேன்.”
“ஒரு நடை கோயிலுக்கு போயிட்டு வரலாம், வா மாறா…” என்றவர் மகளுக்கு குரல் தர, மயூ வரவில்லை எனவும், அவர்கள் இருவர் மட்டும் கிளம்பி சென்றனர்.
அன்றிரவே அழகனுக்கு குறுந்தகவலை தட்டி விட்டார் பூரி.
இத்தனை நாள் இல்லா பழக்கமாக, விடிந்து விடியாத பொழுதில், மெல்ல நடையிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள் மயூரி. இரவெல்லாம் உறக்கம் பிடிக்கவில்லை. ‘அழகன் வேண்டாம். ஊரில் இருந்தாலும், அவனை பார்க்க கூடாது. அவன் திசைக்கே கும்பிடு’ என மனக்கட்டுப்பாடோடு அது வரை சமாளித்து இருந்தவளால், இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை.
யாரிடமும் பகிர முடியாத டென்ஷன், ஒரு அழுத்தத்தை தர, ஏழு ஆண்டுகள் கழித்து முதல் முறை, வீட்டின் பக்கவாட்டில் இருந்த முள் செடிகளை தாண்டி ஓடும் மண் சாலையில் இறங்கினாள். இந்த சாலை முடிவுறும் இடத்தில் அழகனின் மாந்தோப்பின் ஒரு கேட் இருக்க, தெரிந்த பாதையில் கால்கள் வேகம் பிடித்தன.
மகள் எழுந்து, வெளியே போனதை கவனித்து கொண்டிருந்த பூரிக்கும் மனதில் ஒரு வலி. மகள் இத்தனை பெரிய ரகசியத்தை இத்தனை ஆண்டுகள் மூடி மறைத்தாள் என்பதை அவரால் இன்னமும் தாள முடியவில்லை. அவளின் இந்த அதிகாலை ரகசிய நடை, அவர் அளவில் யார் அவரின் மருமகன் என்பதை தெளிவாக்கி விட்டது.
மண் பாதையின் முடிவில் இருந்த பெரிய இரும்பு கேட் பூட்டபட்டிருப்பதை கண்டதும், அது தான் வழக்கம் என்றாலும், ஒரு வித ஏமாற்றம் மனதை சூழ, மீண்டும் நடக்க துவங்கிய மயூ, நடுவே பிரியும் இன்னொரு ஒற்றையடி பாதையில் புகுந்து, முள் செடிகளை லாவகமாக தவிர்த்து, ஒரு வழியாக ஆத்தோரம் ஒட்டி செல்லும் பிரதான சாலையை அடைந்தாள்.
எதிர்பார்த்தது போலவே அந்த மண்சாலையில் ஆள் இல்லை. ரோட்டை கடந்து மறுபக்கம் போன மயூரியின் செவியை ஆற்றின் சலசலப்பும், செடிகளை வட்டமிட்ட வண்டுகளின் ரீங்காரமும், தூரத்தில் எங்கோ பறவை கூட்டத்தின் கீச்சு குரலும் நிறைத்ததை தவிர்த்து, ஆள் இல்லாத அந்த இடம் இத்தனை ஆண்டுகளில் இம்மியளவும் எந்த மாற்றத்தை கண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.
சில்லென்ற அதிகாலை காற்று வீசியதில் லேசாக குளிரெடுக்க, துப்பட்டாவை கழுத்தை சுற்றி போர்த்தியவாக்கில் போட்டு கொண்டு, எதிர் சாரியை பார்த்தாள். ஒரு பக்கம் தோப்பின் உயர்ந்த சுவரும், ஆங்காங்கே விளக்குகளும் வரிசையாக இருக்க, இங்கிருந்த தோப்பு வாசலிலும் பெரிய பூட்டே அவளை வரவேற்றது. எத்தனை முறை இதே ஆற்றோரம் அழகனோடு வாய் சண்டையும், சிரிப்புமாக களித்து இருக்கிறாள் என நினைத்த போதே மனம் அமைதியை கண்டது.
மெல்ல சரிவில் இறங்கியவள், அந்த நாளில் அவர்கள் எப்போதும் சந்திக்கும் பகுதியை நோக்கி அடி வைத்தாள். மேலே சாலையில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஓரிடத்தில் பெரிய வழுவழு பாறை போல ஆற்றின் கரையோரம் சின்னதும், பெரியதுமாக, உசரமும், குட்டையுமாக வரிசையாக இருக்கும். கண்களுக்கு எட்டிய தொலைவில் ஆற்றையும், மரங்களையும் தவிர வேறொன்றும் அங்கே இருக்காது.
சமன்பட்ட பாறையில் கால் வைக்கவும் லேசாக வழுக்கியது. இத்தனை நாள் இந்த பக்கம் ஆள் நடமாட்டமில்லை என்பதை அதுவே சொல்லாமல் சொல்ல, மெதுவே அடி வைத்து நடந்து அவள் வழக்கமாக அமரும் கல்லில் அமர்ந்தவளுக்கு, கடந்து போன இனிய நினைவலைகள் நெஞ்சில் எழும்பின.
“ஹே பட்டரஃபிளை”
“ப்ச்… அப்படி கூப்பிடாதே, அழுக்கு பையா”
“ஏய் யாரை அழுக்குன்ன?”
“உன்னைத் தான்…”
“வேணாம்…”
“அப்போ என் பேரை நீயும் சரியா கூப்பிடு.”
“இங்க பார்றா! அழகா பட்டாம்பூச்சின்னு கூப்பிடறேன். என்னை அழுக்காக்கிட்டு…”
“உன் பேர்லையே செண்ட்டு இருக்கு… அடிச்சுக்கோ அழுக்கு பையா…” கேலி செய்து கொண்டிருந்தவள், அதற்குள் ஆற்றில் மீன் துள்ளுவதை கண்டு, “ஹே… அங்க பாரு மீனு…” நின்று ஆர்ப்பரிக்க, தொபுக்கென நீரில் குதித்தான் அழகன்.
“பார்த்து பார்த்து…”
“நீயும் வா…”
“இல்ல… இன்னைக்கு மாத்திக்க வேற ட்ரெஸ் கொண்டு வரலை நான்!”
அழகன் நீரில் சந்தோஷமாக நீந்த, கரையில் இருந்த கன்னி, லாவகமான அவனின் அசைவுகளை கண்ணெடுக்காமல் ரசித்தாள். மயூவுக்கு மீன் பிடிப்பது பிடிக்கும் என்பதாலேயே மீன் பிடிக்கும் கொக்கி, புழுவெல்லாம் எப்போதும் கையோடு வைத்திருக்க ஆரம்பித்திருந்தான்.
அந்த பையில் இருந்தவற்றை எடுத்து, தன் பாட்டில் மயூ மீனுக்கு கொக்கி போட, ஒவ்வொரு முறையும் அவள் முயற்சி வீணாக, அவளை கேலி செய்தே வெறுப்பேற்றினான்.
கனவு போன்ற அந்த இனிய நினைவுகள் தான் இப்போதெல்லாம் அவளோடு பயணிப்பவை. இப்படி எத்தனை நாட்கள், கை கோர்த்தும், தோள் சாய்ந்தும், ஸ்வீட் நத்திங்ஸ் பேசி, அந்த இடத்தில் நடந்திருக்கிறார்கள், என்பதை கண்களில் நீர் திரள அசை போட்டவாறு இலக்கில்லாமல் ஆற்றை வெறித்தவளின் கவனத்தை தூரத்தே கிறீச்சிட்ட பறவையின் ஒலி நடப்புக்கு இழுத்து வர, நேரம் கடந்து விட்டதை கவனித்து அவசரமாக வீட்டுக்கு திரும்பினாள்.
மாறன் இன்னமும் உறங்கி கொண்டிருக்க, வாசலை பார்த்து காத்திருந்த பூரி, “என்ன மயூ, எங்க போனே?”
“இல்ல… முழிப்பு வந்துடுச்சு ம்மா. சரி, இனி நேரம் கிடைக்கும் போது வாக் போலாம்னு இன்னைல இருந்து ஆரம்பிச்சுருக்கேன்.” அம்மாவின் முகம் பாராமல் பதிலை கொட்டியவள், “பிரஷ் பண்ணிட்டு வரேன் ம்மா…” அவசரமாக அறைக்குள் புகுந்தாள்.
பெருமூச்சை விட்டவர், மகனை எழுப்ப வேண்டுமே என அவன் அறையை அடைந்தார். அன்றிரவு மாறன் சென்னைக்கு கிளம்ப, வீட்டில் ஓர் அசாத்திய அமைதி குடி கொண்டது.
கார்கோடன் தம்பதி கொண்டு வந்த புது வரனை தட்டி கழிக்கும் வழியை தேடும் யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த மயூ, எப்போதும் ஏதோ பாடலை ஒலிக்க விட்டு அலப்பறை செய்யும் அம்மாவின் திடீர் அமைதியை உணரும் நிலையில் இல்லை.
அடுத்து வந்த ஒரு வாரம் முழுதுமே, சேவல் கூவும் முன்பாகவே கண் விழிப்பதும், ஆற்றோரம் உலவுவதும், மூடி இருக்கும் ஸ்கந்தவேல் குழுமத்தின் தோப்பு வாயில்களை ஏக்கத்தோடு பார்ப்பதுவும், அதன் பின் வீட்டுக்கு வந்து வேலையில் புதைந்து கொள்வதும் என ஒரு புது பழக்கத்துக்கு வந்தாள் மயூரி.
“நீ இனி காலையில வாக் போகாதே மயூ!”
“ஏன்… ஏன்… ஏன் ம்மா?”
மகளின் பதட்டத்துக்கான காரணம் அறிந்திருந்தாலும், அதை பொருட்படுத்தாதவரை போல பாவ்லா செய்து, “ம்ம்… நேத்து தங்கம் அத்தை தான், ரெண்டு மாசம் முன்ன ஆத்துல விழுந்த பவுனுத்தாயி அந்த பக்கமா ஆவியா சுத்துறதா சொன்னாங்க. நம்ம பெரியசாமி அண்ணே மவன், அந்தி சாஞ்சபுரம் அந்த பக்கம் போக, பேயை பார்த்து அலறி ஓடி வந்தானாம். நாலு நாள் ஜுரத்துல விழுந்து, பூசாரிக்கிட்ட விபூதி அடிச்சு, மந்தரிச்ச தாயத்து கட்டின்னு, இப்போ தான் தேறி வந்திருக்கானாம்.”
“அதெல்லாம் சும்மா கதை…”
“வேணாம் மயூ… வறட்டு பிடிவாதம் பிடிக்காதே.” அழுத்தமாக சொன்னவர், மகளை பார்க்காதது போல கவனிக்க, மயூவின் முகம் மாறியது.
கேலி போல, “ஒரு சாத்தானை மேய்க்க குள்ள என் ஆவி ஆவியா போகுது. இதுல இவ துணைக்கு, இன்னொன்னை இழுத்துட்டு வரதுக்கா!” என்றிட…
“பூ…” அழுத்தி கூப்பிட்டவள், உர்ரென அறைக்குள் புகுந்தாள்.
தான் கட்டிய கதையை அவள் நம்பவில்லை என்பதும், காலை உலாவை நிச்சயம் தொடருவாள் என்பதையும் முகமே சொல்ல, ‘இத்தனை ஆசையை மனசுல புதைச்சுட்டு, யார்கிட்டயும் எதுவும் வெளிப்படுத்தாம இவ என்னத்துக்கு இப்படி இருக்கா?’ கேள்வி எழ… விடை தான் புரியவில்லை. அவளாக மனதை திறந்து பகிர்வாள் என்ற அவரின் எதிர்பார்ப்புக்கு, ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்தது.
ஒரே ஆறுதல், தங்கம்மை மூலம் வந்த வரன், தட்டி போய் விட்டது. அந்த குணா யாரையோ காதலிக்கிறானாம். மயூவை மருமகளாக்கி கொள்ள அவர்கள் தீவிரம் காட்ட, குணாவே, தன் காதல் விஷயத்தை குடும்பத்தாரிடம் உடைத்து, பேச்சுக்கு முற்று போட்டு விட்டான்.
தங்கம்மை தெரிவித்து வருந்திய இந்த விஷயத்தை பிள்ளைகளிடம் மூச்சே விடவில்லை பூரணி. மகள் சதா ஒரு யோசனையில் இருப்பதை பார்த்து, குணாவை மறுக்கவேனும் தன்னிடம் விஷயத்தை உளறுவாள் என்ற அற்ப ஆசையில் காத்திருக்கிறார்.
**************************************************
கடிகாரத்தில் அலாரம் வைக்காமலேயே இப்போதெல்லாம் விழித்து விடும் மயூ, பேயாவது மண்ணாவது என கிளம்பி ஆற்றோரம் வந்தடைந்தாள்.
கரையோர பாறையில் அமர்ந்தவள், கற்களை நீரில் வீசுவதும், நீரில் ஏற்படும் சிற்றலைகளை பார்ப்பதுமாக இருக்க, சில நிமிடங்களில் தான் மட்டும் அங்கே தனியே இல்லை என்பதை உணர்ந்தாள்.
நாசியை தாக்கிய அந்த மணம் பரிச்சயமானதாக இருக்க, சடாரென திரும்ப அவனை கண்டாள். அதுவும் அவளுக்கு மிக நெருக்கத்தில்… சில ஆண்டுகளாக, அரசியல்வாதியாக வெள்ளையும் சொள்ளையுமாக வெண்ணிற சட்டை, மற்றும் கால்சராயில் மட்டுமே பார்த்து பழகி இருந்த கண்களுக்கு, ஆச்சரிய அதிர்வை தந்தான் கன்னியின் கன்னத்தை சிவக்க வைத்த செந்தூரன்.
கல்லூரி கால அழகனாக, ஒரு நீல நிற ஜீன்ஸ்சும், ‘am yours now and always’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெளிர் பிங்க் நிற காலர் இல்லாத டீ ஷர்ட்டுமாக மயிலரசிக்கு காட்சி தந்தான் காதல் வேந்தன்.
அழகனை அங்கே எதிர்பார்க்காதவள், அதிர்வில் இருந்து மீளாமல், பதித்து வைத்த கெண்டை கண்ணை எடுக்காமல். பார்த்த படி இருக்க, அவளின் அருகே அமர்ந்தவன், தானுமே மனதுக்கினியாளை பார்த்த விழி பார்த்த படி ரசித்திருந்தான்.
நொடிகள் நீள… நீரில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டவுடன் தான் சுயத்தை உணர்ந்த மயூ, சட்டென்று எழ எண்ணியவளின் கையை கெட்டியாக பற்றி தடுத்தான் அழகன்.
வழுக்கு பாறையில் தடுமாறி, மீண்டும் அவன் அருகேயே அமர்ந்து, “ப்ச்…” சலித்தவள், மறுபக்கமாக முகத்தை திருப்ப…
“தேடும் கண் பார்வை… தவிக்க துடிக்கன்னு தினமும் இந்த இடத்தை சுத்தி சுத்தி வந்துட்டு, இப்போ உன் தவிப்பை குறைக்க நான் நேர்ல வந்த பிறகு எதுக்கு முகத்தை திருப்புற?”
“ஹே… யாரு யாரை தேடுனா? ஹ… தவிப்பாம்… துடிப்பாம்! தனியா இருக்கற பொண்ணுகிட்ட வம்பு பண்ணுறியா? ஆளும் டீஷர்ட்டையும் பாரு!!” எரிச்சல், கடுப்பு, கோபம் எல்லாம் கலந்த குரலில் கத்தினாள் மயூ.
“மயிலம்மா, சொல்ற பொய்யை பொருந்த சொல்லணும். கேட்டை பார்க்கறதும், எங்கேயாவது நான் இருப்பேனான்னு கண்ணை சுழட்டுறதுமா இந்த பக்கமா தினமும் போகலை நீ?”
“ஜனநாயக நாட்டுல காலையில எக்சர்சைஸ்சுக்காக நடக்கறது ஒரு குத்தமா?”
“அப்படியா, சரி! எதுக்கு என் கட்சி ஆஃபீஸ் இருக்கற பக்கமா சுத்திக்கிட்டு ரெண்டு நாளுக்கு ஒரு தடவை, வேலைக்கு போனியாம்? இதுக்கு என்ன பதில் சொல்லுவே?” கெத்தாக பார்த்தான்.
“உம்… பிள்ளையார் கோவில் அந்த இடத்துல நூறு வருஷமா இருக்கு. நேத்து பேய்ஞ்ச அரசியல் மழையில, திடீர்னு மொளைச்ச காளான் உன்னோட அந்த ஆஃபீஸ் தான், என் ரூட்ல குறுக்க வந்துச்சு.” விட்டேனா பாரென மங்கையும் பதிலளிக்க,
“அட பார்ரா, என்னமா வார்த்தை ஜாலம் காட்டுறா… இந்த அமைச்சருக்கேத்த ஜோடி மயில்!”
“ஏய்… யாருக்கு யார் ஜோடி? இன்னொரு முறை என்னை மயில்னு கூப்பிட்ட பாரு!” ஆள்காட்டி விரலை நீட்டி, எச்சரிப்பது போல பெண்ணவள் சைகை செய்ய,
“என்னடீ… என்ன பண்ணுவ?”
“ச்சே… எழ முயன்றவளை, மீண்டும் கரம் பிடித்து அழகன் தடுக்க, இந்த முறை தடுமாறி, அவன் மீதே விழுந்தாள்.
கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ…
மென்குரலில் மயூவின் காதில் ஸ்ருங்காரமாக பாடியவன், அவளை தன்னோடு அணைக்க, அந்த ஷணம் மற்ற கோபங்கள் மறைய, அவனை தானும் ஆற தழுவினாள் மயூரி.
நெற்றி, கண்கள், கன்னம் என முத்தங்களை மன்னவன் வள்ளலாக வாரி இறைக்க, விட்டால் மறைந்திடுவானோ என்ற அச்சத்தில் அவனோடு ஒன்றி இறுக அணைத்து கொண்டவளின் கண்கள் வென்னீரை சுரக்க, ஆற்றில் ஓடும் நீரின் தாளகதியும், மென்காற்றில் அசையும் செடி கொடிகளின் சத்தமும், பறவைகளின் இன்னிசையும் தவிர அவர்களை அறிந்தவர் யாருமில்லை அங்கே.
யுகம் போல தோன்றிய பொழுதும், சில கணங்களே கடந்திருக்க, காதல் கொண்ட மனதின் ஏக்கங்களும், தாபங்களும் ஆழி பேரலை போல மயூவை புரட்டி போட, அதில் சிக்கியவளின் கண்ணை மறைத்த ஆசை மேகம், அறிவு கண் திறந்ததில், அதே வேகத்தில் மோகம் விலகவும், உணர்வு குவியலாய் அவனுள் அடங்கி இருந்தவளின் முழு மூளை விழிப்படையவும், நடப்புக்கு வந்தவள், சட்டென்று அழகனை விலக்கி விட்டாள்.
“ஹே…” அவளை அருகே இழுக்க எண்ணியவன், அவள் முகம் காட்டிய கலவை பாவத்தை கண்டு, “வேதாளம் திரும்ப மரம் ஏறியாச்சா? ஏண்டி இப்படி என்னை படுத்தி எடுக்கற? இன்னைக்கு எனக்கு ஒரு பதில் தெரிஞ்சாகணும்.”
“தனியா உக்காந்து… இந்த செடி கொடி, தண்ணிகிட்ட உன் கேள்வியை கேளு, உனக்கு பதில் கிடைக்கும். எனக்கு வேலை இருக்கு,” மூன்றாம் முறை எழ எத்தனித்தவளின் முயற்சி இம்முறையும் வீணானது.
அவள் மடியில் தலை சாய்த்தவனை முறைத்தவள், அவனை தள்ள முயல… மீண்டும் தோல்வி தான்.
“வயசு முப்பது ஆக போகுது எனக்கு. ஹும்… காலாகாலத்துல கல்யாணம் முடிச்சிருந்தா…”
“விடு… நான் போகணும். உன் புலம்பலை வேற எங்கேயாவது சொல்லு.”
“விளையாடாதே நெமிலி! தினமும், என்னை தேடினேன்னு எனக்கு தெரியும். நீ ஊருக்கு வரதுக்கு முன்னாடியே தோப்பு பக்க சி.சி.டீ.வியை கொஞ்சம் திசை மாத்தி வெச்சேன். என் மொபைல்ல தான் இமேஜ் வரும்… நான் தான் நீ நடக்க வரப்ப, உன் முகத்தை நல்லா ஜூம் செஞ்சு பார்ப்பேனே. நீ பிள்ளையார் கோவிலுக்கு போன அன்னைக்கு சௌந்தர் அங்க தான் இருந்தான்.”
வகையாய் மாட்டி கொண்டோம் எனவும், முகத்தை மேலும் சுருக்கியவளின் கூர் நாசியை நெமிண்டி, “கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, சந்தடி சாக்குல அங்க நின்ன ஆளுகிட்ட ‘மினிஸ்டர் வந்துருக்காரா’ன்னு நீ கேட்டது கூட எனக்கு தெரியும்.”
மௌனமாக இருந்தாலும், அவளின் முகம் பல்வேறு பாவங்களை வாரி இறைக்க, எல்லாவற்றையும் அவதானித்தவனாக, “ஏண்டி மனசு முழுக்க கொட்டி கிடக்கற லவ்வை மறைக்க பார்க்கற? உனக்காக, நேர்ல வந்தவனை, பார்க்க மாட்ட, நக்கலடிப்ப… ஆளை சுத்தல்ல விடுவ! அப்படி தானே?”
அத்தனை நாளின் மனவழுத்தம் வெடிக்க, “லவ்வும் இல்ல… மண்ணாங்கட்டியும் இல்ல! வீணா நீயா எதையாவது உளறாதே.” கிறீச்சிட்டாள்.
“அப்ப அந்த திருச்சி மாப்பிள்ளையோட, ஜோடி போட்டு கூட்டு பண்ணையம் செஞ்சுருக்க வேண்டியது தானே! ஏன் வேணாம்னு மறுத்த? இதோ, இப்போ உன்னை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்க தயாரா இருக்க, கண் டாக்டருக்கு கழுத்தை நீட்ட வேண்டியது தானே? ஏன், அவனுங்களையும் வேணாம்னு சொல்லி, நோகடிச்சுட்டு முரட்டு சிங்கிள்ஸ் பாவத்தை வீணா கட்டிக்குற?”
அழகனின் பேச்சில் வர பார்த்த சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கி, தன்னை சமாளித்து, “என்னோட பெர்சனல் விஷயத்துல கண்டவங்களும் தலையிட முடியாது.” கத்தரித்து பேச முயன்றாள்.
“கட்டிக்க போற நான் கேட்காம வேற யாரு திருச்சிக்காரனா வந்து கேட்க போறான்?”
“ஏய்… என்ன விட்டா ரொம்ப பேசுற?”
“இப்போவும் பேசலைன்னா? பாரு பட்டு மயில், வர்ற முஹுர்த்தத்துல நம்ம கல்யாணம் நடக்க ஏற்பாடு பண்ண போறேன். எல்லாம் தயார் செஞ்சப்புறம் முடியாதுன்னு கலாட்டா பண்ணா, அப்புறம்… இதுவரை இந்த அழகனோட கோபத்தை பார்த்ததில்ல நீ! அதை பார்க்க வேண்டி வராத அளவுக்கு நீ நடந்துபேன்னு நினைக்கறேன்.”
“நீ யாரை கல்யாணம் செஞ்சாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இதை ஏழு வருஷம் முன்னவே உனக்கு சொல்லிட்டேன்.”
“இன்னுமா அதை பிடிச்சு தொங்கிட்டு இருக்க? அதான், அப்போவே அந்த கல்யாணத்தை நிறுத்துனேன் இல்ல?”
“உன் கல்யாணம் நின்னா எனக்கென்ன, நடந்தா எனக்கென்ன?”
“உஃப்ப்…” மூச்சை ஆழ இழுத்து விட்டவன், சடாரென நீருக்குள் குதிக்க, அதிர்ந்த மயூவின் மேல் நீர் அடிக்க, அழகனோ வேகமாக நீந்த துவங்கினான்.
அழகனை வேண்டாமென எண்ணி மறுத்தது. இத்தனை ஆண்டுகள் அவனை தவிர்த்தது. ஏன் சற்று முன் போகிறேன் என கிளம்பியதை எல்லாம் கூட அக்கணம் மறந்தவளாக, தேர்ந்த நீச்சல் வீரனாக அனாயாசமாக நீந்துபவனை கண்டு ரசித்தவாறு அமர்ந்திருந்தாள்.
கரையின் விளிம்புக்கு வந்தவன், வேண்டுமென்றே அவள் மீது நீரை இறைத்ததில் நடப்புக்கு வந்தவளின் அருகே ஈரம் சொட்ட வந்தமர்ந்தவன், “நீ இன்னும் கிளம்பி போகலை?” தலையை அசைத்து மீண்டும் நீரை அவள் மீது தெளித்தான்.
அவனை முறைத்தவள், “நான் தான், இங்க மொதல்ல வந்தேன்!”
“அது சரி…” அவள் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் டீ ஷர்ட்டை களைந்து, நீரை பிழிய துவங்கினான் அழகன்.
“ஏய்… என்ன பண்ற?” மறுபுறம் முகத்தை திருப்பியவள், “அரசியலுக்கு போனவுடனே ரவுடித்தனமும் சேர்ந்தாச்சு.” முன்பெல்லாம் இது போல செய்ததே இல்லை அவன். இன்று கொஞ்சம் அதிகமாகவே நெருக்கம் காண்பிக்கிறான் என்பது புரிந்தது.
“நீயாவது நடுவுல மொதல்ல வந்தே, நான் மொதல்ல இருந்தே இங்க தான் இருக்கேன். என் இஷ்டம், என் சட்டை, நான் கழட்டுவேன்! அவ்வளவு ஏன்…” அவன் கரம் சட்டென ஜீனின் ஜிப்பில் பதியவும்,
“ஏய்…” அலறியவள், வேகமாக எழ, வேண்டுமென செய்கையாக சீண்டியவன், “கையில் மிதக்கும் கனவா நீன்னு, ஏதோ ஒரு ஃப்லோவுல பாடினேன். அதை உண்மைன்னு நம்பி விழுந்து வைக்காதே… என்னால தூக்க முடியாது. எந்த கடையில அரிசி வாங்கறாங்க உங்க வீட்ல?”
வேண்டுமென்றே அழகன் வம்பிழுக்க, இடையே பிரிவென்பதே இல்லாதது போல மிக சாதாரணமாக சீண்டி விளையாடுபவனின் இந்த பாவனையில் இப்போது கோபம் லேசாய் துளிர்க்க, அதனையும் அவன் மேல் காட்டும் விதமாக அவனை அடிக்க துரத்தியவள், மூச்சு வாங்க ஓரிடத்தில் நிற்க, மெதுவே அவளை அணைத்தவன், அணைப்பின் அழுத்தத்தை கூட்டி, கழுத்தில் தாடையை பதித்து, “மிஸ்ட் யூ சோ மச் டீ என் நெமிலி… இனியும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. கூடிய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாம் பட்டர்ஃபிளை.”
அவனை நெட்டி தள்ளியவள், வேகமாக அங்கிருந்து ஓட, செல்பவளை கண்ணெடுக்காமல் பார்த்தவன், “பார்த்து செக் செஞ்சுட்டு போ செல்லம்!” அக்கறையாக சொன்னவனுக்கு பல ஆண்டுகள் கழித்து மனம் பூரித்து நிறைந்து, தளும்பியது. அதே நேரம் வீட்டினர், ஊரார், உறவினர், அவனின் காதலுக்கு அவர்களின் ரியாக்ஷன் பற்றி எல்லாம் நினைத்த மாத்திரம் நடுக்கம் பிறந்தது.
பல ஆண்டுகள் சென்றிருந்தாலும், எப்போதும் இருக்கும் ஜாக்கிரதை உணர்வு தடுக்க, சாலையில் யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியவன், மெல்ல தோப்பினுள் நுழைந்தான்.
மயூவோடு பேசிவிட்டதில் மனம் கும்மாளமிட, அதே மகிழ்வோடு அன்றைய அலுவல்களை வரிசைப்படுத்த துவங்கினான், காதல் கோப்பையை வெற்றிகரமாக தட்டி பறிக்க முழு முயற்சியில் இறங்கியிருக்கும் அமைச்சர் செந்தூர் அழகன்.
தோகை இள மயில்
ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி
நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம்
செய்கின்றதோ
Comentários