top of page

மஞ்சக்காட்டு மயிலே 8

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 8


என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே


தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே


என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

தானே தந்தன்னா தானே தந்தன்னா


முன்னிரவு நடந்த வாய் சர்ச்சைக்கு பின், கடந்த சில வாரங்கள் போலவே உறக்கம் வராமல் அவதிப்பட்டு, ஒரு வழியாக விடியல் எட்டி பார்க்கும் நேரம், தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்த மயூவை திரைப்பாடல் உலுக்கி எழுப்ப, எரிச்சலாய் கண் விழித்தவள், ஒலித்த பாடலை கேட்ட நொடியே முகம் மலர்ந்தாள்.


“பூரி ரிட்டர்ன்ஸ்…” புன்னகையோடு முணுமுணுத்து, தானுமே பாடலை ஹம் செய்தவாறே குளித்து கிளம்பி வந்த மயூவின் தற்போதைய திடீர் தெளிவுக்கு காரணம் இருந்ததே.


எல்லாம் முன் தினம் பூரணி அம்மாவின் நடிப்பு அப்படி. மாறனிடம் பேசிய பின், ஒரு சண்டைக்கு தயாரான மயூவுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. சென்டியில் தாக்கி, மகளை வீழ்த்தி விட்டார் பூரி.


“கொஞ்ச வருஷம்னாலும், உங்க அப்பாவோட ஊர்ல வாழ்ந்த அந்த நாட்கள் ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு. லவ் செஞ்சப்பவும் சரி… கல்யாணமாகி, நீங்க ரெண்டு பேருமே பொறந்த பின்னையும் சரி, மின்னல் போல தான் ஆத்தூருக்கு போய் வருவோம். அதுவும், ஊர் நிலவரத்துக்கு பயந்தே உங்க ரெண்டு பேருக்கும் மொட்டை கூட அங்க போடலை.”


அவள் இதயத்துக்கு நெருக்கமான ஆத்தூரை பற்றி, இதுவரை வெளியிடாத அவர் வாழ்வின் பக்கங்களை அம்மா மனம் திறக்கவும், மகளுக்கும் ஆர்வம் மேலோங்கியது.


“எப்போ ஊருக்கு போறதானாலும், பெரும்பாலும் அப்பா மட்டும் தனியா கிளம்புவாங்க. கூட என்னை அழைச்சிட்டு போக மறுத்துடுவார். உங்க தாத்தாவும், பாட்டியும் ஒரே சமயத்துல கலவரக்காரங்ககிட்ட சிக்கி உசுரு விட்ட பயத்துல, ஊருக்கு மட்டும் ஒண்ணா போக கூடாதுன்னு அப்பாவுக்கு ரொம்பவும் பிடிவாதம். அவருக்கு எதுனாலும், உங்களுக்காக நானாவது இருக்கணும்னு சொல்லி என் வாயை அடைச்சிடுவார்!” தொண்டை அடைக்க பூரி விவரிக்கவும், அவரை அணைத்து ஆறுதல்படுத்தினாள் மகள்.


தன்னை சமன் செய்து கொண்டவருக்கு பருக நீரை தந்து, அவர் ஆசுவாசம் அடையவும், “போதும் பூம்மா… மேல பேச வேணாம்!”


“என் மனசுல உள்ளதை கேட்க கூட உனக்கு நேரமில்லைல!” அடுத்த அழுகையை அவர் துவங்க,


“ஐயோ பூ குட்டி… நீங்க பேசுங்க, நான் கேக்குறேன்.” சரணாகதி அடைந்து, வசதியாக அவர் முகம் பார்த்தவாக்கில் அன்னையின் காலடியில் அமர்ந்து, கேட்க தயாரானாள் மகள்.


“இப்படியே ஆரம்ப வருஷம் ஓடிடுச்சா… நீங்க ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, மெல்ல சண்டை போட்டு, அப்பாவோட டயலாக்கை அவருக்கே திருப்பி போட்டு, அதுல அவரும் பதறி, கொஞ்சம் இலகுறப்ப, அப்படியே நானும் கூட கிளம்புவேன்.”


“நினைச்சதை நடத்திக்கறதுல உங்களை அடிச்சுக்க ஆளில்லை பூம்மா!”


“ஆமா… நீ தான் மெச்சிக்கணும். சரசு பாட்டியால (பூரியின் அம்மா), ரெண்டு பிள்ளைங்களை தனியா சமாளிக்க முடியாதுன்னு, வாயு வேகம்னு சொல்வாங்களே அது போல போறதும் தெரியாது, திரும்ப வரதும் தெரியாத அளவுக்கு இருக்கும் எங்க ஆத்தூர் விஜயம்.”


“நீ ஹை ஸ்கூல்ல இருந்தப்ப அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்தப்ப, இஷ்டமே இல்லாம தான் ஊருக்கு போனோம். அங்க போனதுக்கு அப்புறம் தான், எனக்கு ச்சே இத்தனை வருஷம் இங்க வராம போயிட்டோம்னு தோண ஆரம்பிச்சுது. நடுவுல வருஷம் பல போனாலும், உங்கப்பா மேல அவரோட சொந்த பந்தம் வெச்சுருந்த பிரியம் மாறாம இருந்துச்சு. எனக்கு பேச்சுக்கு எத்தனை ஆளுங்க சிக்கினாங்க தெரியுமா?”


“அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இப்போ புரியுது, ஏன் நீங்க திரும்ப அங்க போகணும்னு அடம் பிடிக்கறீங்கன்னு.”


மகளின் கேலியில், “அது சரி, ‘அவங்க யார்? இவங்ககிட்ட என்ன பேசுனீங்க? உங்களுக்கு எதுக்கு அவங்க வீட்டு கதை’ன்னு எந்நேரம் என்னை கேட்டு படுத்துற உனக்கெங்கே தெரிய போகுது, மனசு விட்டு கல்மிஷமில்லாம பேசி, சிரிச்சாளே, எந்த நோயும் அண்டாதுங்கற வெவரம்!”


“டாக்டர் பூரணி… ஊர் கதையை கன்டினியூ பண்ணுங்க போதும். மனசை சட்டென லேசாக்கும் பூரியின் ஸ்பெசல் மேஜிக் டிப்ஸை இன்னொரு நாள் சொல்லுவீங்களாம்!”


கிண்டலாக கதை கேட்கும் மகளின் அதீத ஆர்வத்தை அலச நினைத்த மூளையை அடக்கி தொடர்ந்தார். “அப்போல்லாம், காலையில சமையல முடிச்சோம்னா, பொழக்கடையில துணி அலசி போடுற சாக்குல, வேலிக்கு அந்தாண்ட இருக்க வீட்டாளுங்ககிட்ட, என்ன சமையல் ஏதுன்னு ஒரு ரவுண்ட் பேச்சு ஓடும். ஹ்ம்ம்… அதுலயும் எனக்கு குடுப்பினை கம்மி!”


“என்ன, உஷாராகி… பக்கத்து வீட்டு சரளா ஆன்ட்டி வெளிய வர மாட்டாங்களா?” என்ற மகளிடம்..


“மை… யூ… போ நான் சொல்ல மாட்டேன்!” அன்னை முறுக்க மகள் கெஞ்சிட, பின் தொடர்ந்தார். “நாம தானே சந்துல கடேசி வீடு, ஒரு பக்கம் தான் வீடு… இன்னொரு பக்கம் முள்ளு காடும், ஆத்துக்கு போற குறுக்கு வழி பாதையுமில்ல. அதனால இந்த சரளா வீட்டு விவகாரம் மட்டும் தான் எனக்கு கிடைக்கும்.”


“பூரி…” மகள் கடுப்பாய் அழைக்க,


“சரி… ஓகே… அப்புறம் எல்லா வேலையும் முடிஞ்ச பொறவு, யாராவது ஒருத்தர் வீட்டு பின் கட்டுலயோ… இல்ல திண்ணையிலயோ உக்காந்து முன் நாள் நைட்ல இருந்து மறுநாள் அந்நேரத்துக்குள்ள நடந்த சமாச்சாரம் எதுனா இருந்தா அலசுவோம்.”


“இப்படி வாய்க்கு ஓயாம வேலை கொடுத்தீங்களே, பின்ன திரும்ப சென்னைக்கு மாறினப்ப எப்படி சமாளிச்சீங்க?”


“இப்போ புரியுதா என் சிரமம்” என்றவரை இளையவள் முறைக்க, “ஒண்ணா சுத்துப்பட்டு ஊருல இருக்க கோயில் குளம்னு கும்பலா போறதும், சுத்திலும் உறவுகாரங்கங்கறதால ஒரு விசேஷ நாளு, கிழமைன்னா மொத்த தெருவே செமையா கலகலக்கும். ஆடி பெருக்கு அன்னைக்கு ஒரு நாள் மட்டும் பேய், பூத பயத்தை ஒதுக்கிட்டு, மொத்த மக்களும் ஆத்தங்கரையில ஒண்ணா கதை பேசி நிலா சோறு சாப்பிட்டதெல்லாம் மறக்கவே முடியாது!”


“நெல்லைக்கு ஒண்ணா பஸ் ஏறி போய், தீவாளிக்கு வர்ற புது படத்தை கும்பலா பார்த்துட்டு, அப்படியே இருட்டு கடையில சூடா ஒரு வாய் அல்வா வாங்கி போட்டுக்கிட்டு, படத்தை பத்தி அவங்கவங்க கருத்தை விவாதிச்சுக்கிட்டே பஸ் ஏறி… அல்வா உண்ட மயக்கத்துல பஸ் காத்துல ஒரு தூக்கம் போட்டதெல்லாம் என்ன ஒரு சந்தோஷமான ஞாபகங்கள் தெரியுமா!”


“அப்போ, எங்களை மட்டும் ஏன் ஹாஸ்டல்ல போட்டீங்க?”


“தாத்தா, பாட்டிக்கு நடந்த அசம்பாவிதம் பார்த்து அப்பாவுக்கு கொஞ்சம் பயம் இருக்க தான் செஞ்சுது. அந்த நாள் போல வகுப்பு கலவரம், சாதி சண்டையால உயிர் சேதம் அத்தனையா இல்லைன்னாலும், வண்டிங்களை, கடையை அடிச்சு நொறுக்கறது, வயலை கொளுத்துறதுன்னு அங்கங்க நடக்க தான் செஞ்சுது. அதனால, உங்களை ஊரை விட்டு விலக்கி வைச்சே வளர்க்க முடிவெடுத்தோம்.”


“ஓ…”


“என்ன ஒண்ணு… பொங்கல், தீவாளி ரெண்டுத்துக்கும், உங்க கூட ஸ்கூல் லீவை கழிச்சதுல அந்த ரெண்டு பண்டிகை ஊரு பக்கம் கொண்டாடுறதை நேரா பார்த்ததில்லை நான்.”


“அவ்வ்… மாறனையும், என்னையும் ஹாஸ்டல்ல வந்து பாக்குறப்ப, ‘உங்க நெனைப்புல அம்மாவுக்கு சோறே உள்ள எறங்கல கண்ணு, ராசா’ன்னு ரீல் விட்டியளா பூ மாதா?”


“ஹி… ஹி… உனக்கே தெரியும் என்னுது ஓட்ட வாய், ஒரு ரகசியம் தங்காது! ஊருல பஸ்ஸு ஏறுறப்பவே அப்பா சொல்லிடுவாரு, ‘இங்க போனேன், இந்த விஷேஷத்துல கலந்துக்கிட்டேன்னு நீ ஜாலி பண்ண கதையை எடுத்து விட்டா அப்புறம், பிள்ளைங்க இங்க வரோணும்னு ஆசைப்படுங்க, மூச்சு விடக் கூடாது’ன்னு அரட்டி இல்ல அப்பா அழைச்சுட்டு வருவாரு. இந்த ஒரு விஷயம் அவங்க பேச்சை தட்டினதில்ல நானு.” பெருமைப்பட்டவரை கண்டு…


“முழு பூசணியை மறைச்சிருக்க பூரி நீ…” குறைபட்ட மகளிடம்,


“எங்க பயம் எங்களுக்கு மயூ. ஏனோ அதை மட்டும் விட முடியலை.”


“ஆனா, நான் வந்தப்ப, அப்படி ஜன நடமாட்டமே இல்லையே ம்மா!”


“நீயும் லீவுக்கு வந்த… நம்ம ஜாதி ஜனமும் ஸ்கூல் லீவுக்கு வெளிய அங்க இங்க போயிருக்க சமயம்… அதான், சந்து கொஞ்சம் வெறிச்சுன்னு கெடக்கும். உங்க ரெண்டு பேரோட இருக்க அமையற சந்தர்பங்கறதால, நானும் பெருசா யார் வீட்டுக்கும் போக மாட்டேன்.”


“ஓ…”


“ஹும்… ரிட்டையரானதுக்கு பின்ன, அங்கேயே விஸ்ராந்தியா வாழணும்னு எத்தனையோ கனவு கண்டு, அத்தனை ஆசைபட்டார் அப்பா. அவர் போன பின்ன இத்தனை வருஷம் அங்க போகணும்னு எனக்கும் தோணலை. இப்போ சொந்த பந்தங்களுக்கு நடுவுல கொஞ்ச காலம் இருக்கணும்னு மனசு ஏங்குது.”


“சரளா ஆன்ட்டி ஊர்ல இல்லைன்னு சொன்னீங்களே!”


“ஹும் சரளா, பொன்னி, பாகிரதி, அங்கையற்கண்ணி எல்லாம் என்னை போலவா? எல்லாரும் பாட்டி ஆகிட்டாங்க… காடாறு நாள்… வீடாறு நாளுன்னு, ஊருக்கும் பசங்க வீட்டுக்குமா போக வர இருக்காங்க. நான் வரேன்னு சொன்னா… கிளம்பி வந்துடுவாங்க.”


“நிஜமாவா ம்மா?”


ஆம் என்று ஆமோதித்தார் பூரணி. இது நாள் வரை இதெல்லாம் அறியாதவளுக்கு, இத்தனை இனிய நினைவுகளை தந்த ஊருக்கு போக, மனவழுத்தத்தில் உள்ள அம்மா ஆசைப்படுவதில் தப்பே இல்லை என்று நினைத்து கொண்டாள்.


“நாளைக்கே உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சப்புறம், எனக்கும் என் சோட்டுக்காரிங்க போல உங்க பிள்ளைங்களை பார்த்துக்க உதவியாவும் ஒத்தாசையாவும் இருக்க தான் நேரமிருக்கும். அப்போ, இது போல நெனைச்சா கிராமத்துல ஹாயா போய் உக்காந்துக்க முடியுமா மயூ? உன் ட்ரான்ஸ்ஃபர் மூலமா கருப்பண்ணசாமி தான் நமக்கு ஒரு வாய்ப்பு தராருன்னு என் மனசு சொல்லுது.”


பூரணியின் பேச்சில் எந்த மாற்றத்தையும் உணராத மயூ, நடுத்தர வயதில் இருக்கும் அம்மா, அதுவும் தந்தையின் நினைவில் உழலுபவரின் ஆசை என்ற அளவில் பூரியின் பேச்சை அலசியவளாக…


“சரி பூரி… உன் விருப்பப்படியே ஆத்தூருக்கு போகலாம். என்னோட ரிசர்ச்சும் நடந்தது போல ஆச்சு, உனக்கும் மக்க மனுஷாளோட இருந்தது போல ஆச்சு” என ஒப்புதலாக பேச, உடனே மாறனுக்கு விஷயம் பகிரப்பட, அவனின் மறுப்பு, அவன் வருகைக்கு பின் முடிவெடுக்கலாம் என்ற அவனின் ஆலோசனை எல்லாம் இரு பெண்களாலும் நிராகரிக்கப்பட்டது.


“பாவம் அம்மா, நமக்காக எப்போவும் பாசிடிவ் எனேர்ஜியோட வலம் வராங்க. அவங்க மனசுல அப்பாவை பத்தி ரொம்ப ஃபீலிங்க்ஸ் இருக்கு. ஊரை மிஸ் பண்றாங்கடா… கொஞ்ச நாள் போயிட்டு வரேன். நீ எப்படியும் சென்னையில தானே இருக்கணும். லீவுக்கு நீயும் ஊருக்கு வந்துட்டு போவே,” மயூ அண்ணனை ஒப்பு கொள்ள வைக்க… பூரி அம்மா மூலம் அழகன் விரித்த வலையில் அழகு மயில் விழ துவங்கினாள்.


“ம்மா… அம்மா…” பூரியின் தோளை தொட்டு மயூ உலுக்க, ஏதோ நினைவில் உறைந்திருந்தவர், “என்ன மயூ” என்று பதற…


“என்னாச்சு, அதான் நேத்தே உன் விருப்பத்துக்கு ஓகே சொல்லியாச்சே! அப்புறம், ஏன் இப்படி இருக்க?”


மகள் துருவி கேட்கவும், சமாளிக்க… “இல்ல மயூ… பழைய மைதிலி என்னை காதலி படத்தை ஒரு வாட்டி பாக்கணும். யூடியூப்ல இருக்குமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆட் ஓட்டிட்டு பாக்குறது தான் கடியா இருக்கும்… என்ன பண்ண?” அப்பாவியாக கேட்டவரின் பாவனையில்…


“உனக்கு பாவம் பார்த்த என்னை,” பல்லை கடித்தவள், ஃபிளாஸ்கில் இருந்து காப்பியை ஊற்றி கொண்டு, “நான் ரிசர்ச் சென்டர் வரை போயிட்டு வரேன். டியுட்டியில சேருறதை சொல்லிட்டு, மத்த ப்ரோசிஜரை பார்க்கறேன். சீதாராமன் சார்கிட்ட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணற வேலை இருக்கு.”


“ஐயோ நான் சாப்பாடு ரெடி பண்ணலை மயூ…”


“இருக்கட்டும்மா, பூரி போடுங்க… அதுவே சாயங்காலம் வரை தாங்கும்,” என்றவள், ஒரு நொடி அன்னையை ஆராய்ந்து விட்டே, தானும் அம்மாவுக்கு உதவ துவங்கினாள்.


காரணம்… சின்ன வயது முதல் “பூரி போடுங்க” என்றால் உடனே, “பூரியே பூரி போடுகிறதே!” என தன்னையே கலாய்ப்பார். இது அவர்களின் குடும்பத்தின் ஸ்டாண்டர்ட் டயலாக். வழக்கம் போல அனிச்சை எதிர்வினையாக (reflex response) அம்மாவின் வாயிலிருந்து அந்த கூற்று வரவில்லை எனவும், சிறு யோசனை எழுந்தாலும், அடுத்து பார்க்க வேண்டிய காரியங்கள் குறித்த எண்ணங்கள் எழுந்ததில், பெரிதாக எடுக்காமல் விட்டாள் மகள்.


மயூவுக்கு பை சொல்லி வழியனுப்பிய பூரி, கைபேசியை எடுக்க, புது எண்ணிள் இருந்து வந்திருந்த மிஸ்ட் கால் பார்த்தார்.


“அந்த சௌந்தர் தம்பி… ச்சே இல்ல சார் நம்பர் வாங்காம போயிட்டோம். இவ முடிவை சொல்லிடணும் அழகன் ஐயாட்ட…” அழகன் சொல்லியும் இன்னும் மனதில் அவர்களை உறவாக பார்க்கும் துணிவு வரவில்லை.


வாட்சப்பில் அதே எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்து திறந்த பூரி, ‘என்னோட பெர்சனல் நம்பர் அத்தை. நேத்து கொடுக்க மறந்துட்டேன். அழகன்’ என்று டைப் செய்யப்பட்டிருந்ததை படித்தவர், நொடியும் தாமதிக்காமல் அவனை அழைத்து விட்டார். ஒரே ரிங்கில் கைப்பேசி எடுக்கப்பட்டது,


“குட்மார்னிங் அத்தை…”


“ஆ… குட்மார்னிங் சார்.”


“இந்த சாரை விட மாட்டீங்களா நீங்க?”


“அது… ப்ச்… இப்போ அது முக்கியமில்லை. நேத்து நீங்க பேசினது…”


“எல்லாம் உண்மை அத்தை… என்னாச்சு?”


“உங்களை நம்பலாமா?”


“அத்தை, உங்க மகளை நான் நேசிக்கறது நிஜம். இதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் இனி வர கூடாது.”


“அது சார்… இல்ல தம்பி, ஆஹான்… தம்பி சார்…” தட்டு தடுமாறியவரின் பேச்சு பாவனையில் மறுபக்கம் இருந்த அழகனுக்கு தன்னால் சிரிப்பு பூத்தது.


ஒரு கணத்துக்கு பின் நிதானத்துக்கு வந்த பூரணி, “ஆத்தூருக்கு வர மயூ ஒத்துகிட்டா.” அழகனின் வயிற்றில் பாலை வார்த்தார்.


“வாட்… நிஜமாவா! வாவ்… அத்தை, நீங்க செம! சூப்பர்ப் அத்தை, என்னால நம்பவே முடியலை… கடவுளே… இவ்வளோ சீக்கிரம் மயூ சம்மதிப்பான்னு நான் நினைக்கவே இல்ல. தேங்க்ஸ் அத்தை.” நொடியில் உற்சாக பெரு உவகை ஊற்றாக மனதில் ப்ரவாகமெடுக்க, இப்போது ஆனந்த பெருவெள்ளத்தில் அழகன் தடுமாறி போனான்.


“தம்பி சார்!”


“இந்த நாளுக்கு தான், தவமிருந்து காத்திருந்தேன் அத்தை.” என்றவனின் குரலே எத்தனை உணர்ச்சிவயப்பட்டிருக்கிறான் என்பதை காட்டினாலும், அந்தோ அதை உணரும் நிலையில் இல்லாத பூரி அம்மாவோ, அவரின் கலக்கத்தில் “தம்பி சார்…” என்றதோடு தயங்கி அமைதியானார்.


அவரின் தொடர் அழைப்பில் தொக்கி இருந்த தடுமாற்றம் மெல்ல புரிய, “எதுவா இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாம என்கிட்டே பேசுங்க அத்தை.” அவனால் ஆன மட்டும் அத்தை என்றழைத்து உறவை அவர் மனதில் ஏற்றிட எண்ணி இருந்தான் இளையவன்.


“எனக்கு பயமா இருக்கு. இந்த விஷயம் வெளிய தெரிய வரப்ப, அங்க ஊருல கலவரம் நிச்சயம் வெடிக்கும். நாங்க அங்க வந்தா… மயூவோட பாதுகாப்பு!! எக்காரணமாவும் ஊர்ல நடக்கற எந்த வம்பு சம்பவத்தினாலயும் பிள்ளைங்க பாதிக்கப்பட கூடாதுன்னு, நானும் அவருமா அத்தனை வருஷம் அவங்களை பிரிஞ்சு பாடுபட்டு வளர்த்தோம்.”


“இப்போ, உங்க பேச்சை நம்பி, தங்கமா கண்ணுக்குள்ள பொத்தி வளர்த்த என் பிள்ளையை யுத்த பூமிக்குள்ள இறக்குறேன். மயூவோட வாழ்க்கை, அவ உசுரு, எதிர்காலம் எல்லாத்தையும் உங்ககிட்ட நம்பி ஒப்படைக்கறேன். நான் செய்யறது சரியான்னு கூட யாருகிட்டயும் கேட்கற நிலையில நான் இல்லைன்னு உங்களுக்கு தெரியும். என் முடிவு சுபமா முடியணும்னு நெஞ்சு தவிக்குது தம்பி!”


ஒரு அம்மாவாக அவரின் பயம் நியாயமானது. அந்த கலக்கம் புரிந்தவனாக, அவருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் தர வேண்டி “அத்தை, பிள்ளை உண்டான நிமிஷத்துல இருந்து மயூ மேல வெச்ச பாசம் தானே உங்களுது. அதுக்கு எந்த விதத்துலயும் என்னோட காதலும், அதன் மேல நான் வெச்சுருக்கற மரியாதையும் குறைவே இல்ல. இனி என்னோட வாழ்க்கை மயூவோட தான்னு எந்த நிமிஷம் நான் முடிவு செஞ்சேனோ, அப்போத்துல இருந்து அவ மேல உயிரா… அவ தான் என் உயிர்னு, அவ நெனைப்பாவே வாழ்ந்துட்டு இருக்கேன்.”


“காதலிக்கற அனுபவம் இல்லாத மடையன் எவனோ தான் காத்திருப்பு சுகம்னு உளறி இருக்கணும் அத்தை. ஏழு வருஷமா, எனக்கு மயூ, மயூவுக்கு நானுன்னு மனசுல உரு போட்டு, எங்க ரெண்டு பேருல யார் ஒருத்தருக்கும் வெளிய வரன் ஏதும் அமைய கூடாதுன்னு பயந்து கிடந்ததை நான் மட்டுமே அறிவேன்.” என்றவனின் குரலில் அந்த உணர்வு பிரதிபலிக்க, ‘எத்தனை பெரிய செல்வாக்கும், பதவியும் இருப்பவர். இவர் நினைத்திருந்தால், என் மகளை தூக்கி போட்டு விட்டு வேறு வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கலாம். இல்லை… இவர் அப்படி போகவில்லை’ என்று பூரிக்கு நச்சென உரைத்தது.


“என்னை தாண்டி தான் எதுவும் மயூவை தொடும். ஊருக்குள்ள எந்த பிரச்சனையும் ஆகாம, அதே நேரம் எங்க கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தி முடிக்க வேண்டியது என் பொறுப்பு. எங்க பக்கம் எதிர்ப்பு பலமா இருக்கும். கத்தி மேல நடக்க ஆரம்பிக்க போறேன் அத்தை. இந்த சமயத்துல, ‘காதல் தப்பில்லை… காதலிச்சு கல்யாணம் செய்யறது அவங்கவங்க விருப்பம்’னு, இந்த விஷயத்துல நல்ல புரிதல் இருக்கற பெரியவங்களான நீங்க தான், எனக்கு கூட உறுதுணையா நிக்கணும்.” மூத்தவளின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டி நின்றான், அரசாளும் அந்த காதல் இளவரசன்.


“உங்க சாதி சனம் ஒத்துக்கறது இருக்கட்டும் தம்பி… மொதல்ல உங்கம்மா, அப்புறம் ரெண்டு அக்காங்க, முக்கியமா அவங்களை கட்டி கொடுத்த வீடு… இப்படி பலதையும் யோசிக்கணும்ல.” எடுத்து பேசும் போதே பூரணிக்கு பயத்தில் தொண்டை வரண்டது.


ஒரு பிடிவாதத்தில் ஆத்தூர் போவோம் என்று நேற்று முடிவெடுத்தாகி விட்டது. இரவெல்லாம் நடைமுறை சிக்கல்கள் மண்டைக்குள் வண்டாக குடைய… தன் முடிவின் மீது இருந்த நம்பிக்கை குன்ற துவங்கி விட்டது அந்த அன்பான அம்மாவுக்கு.


“வீட்டு மனுஷங்ககிட்ட பேசி, எடுத்து சொல்லி ஒத்துக்க வைக்க முயற்சி பண்ண போறேன். அவங்க சரி வரலைன்னாலும்… நிச்சயம் கல்யாணம் நடக்கும். அதுக்கு ஒரு மாஸ்டர் ப்ளான் வெச்சுருக்கேன் அத்தை. பிரச்சனை வராம இருக்காது. வர்றதை எதிர்கொள்ள தயாராகிட்டேன். மிஞ்சி போனா... என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கிடுவாங்க. சென்னை இருக்கே, அங்க செட்டிலாகிடுறேன். அதெல்லாம் என் தலைவலி… நீங்க பயபடாதீங்க. மயூவோட மொதல்ல ஊருக்கு வாங்க. அதுவரை நீங்க எதுவும் அவட்ட மறந்தும் பேசிடாதீங்க அத்தை.”


“சரி தம்பி… அநேகமா ஒரு வாரத்துக்குள்ள வந்துடுவோம்.”


“ஓகே அத்தை, சௌந்தர் மூலமா உதவிக்கு ஆளும், மூவர்ஸ், பேக்கர்ஸ் எல்லாம் கூட அனுப்பிடுறேன்..”


“இல்ல… அதெல்லாம் வேணாம்… மயூவும் நானும் பார்த்துக்கறோம்.”


“அத்தை… மாறன் வேற ஊர்ல இல்லை. நாங்க தான் செய்யறோம்னு யாருக்கும் தெரியாது. நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க.”


அதன்பின் இரண்டொரு வார்த்தை பேசி வைத்தார் பூரணி.


அழகன் சொல்படியே சௌந்தர் உதவிக்கு ஆட்கள் அனுப்ப, தெரிந்தவர் சொல்லி, என கோவில்… மார்க்கெட் நட்புகளை பூரணி கை காட்ட, மயூவும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவள் மனம் இங்கிருந்தால் தானே!!


ஒரு பயம், படபடப்பு, நிரந்தரமாக குடி கொள்ள, அழகன் நினைவு இல்லாத நொடிகளே இல்லை மயூவுக்கு எனலாம். அவளின் வேலை தொடர்பான காரியங்களை செய்தாலும், எதிலும் ஒரு பிடிப்பு இல்லை. வீட்டு விஷயங்களை அம்மா கவனித்து கொள்ளும் தெம்பில் தன் எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவள், எதையும் ஆராய்ந்து பார்க்கவில்லை.


மகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பது முழுதாக புரியாவிட்டாலும், அவளின் குழப்ப மனநிலையை ஓரளவுக்கு யூகித்தவருக்கு, பெரும் நிம்மதி. காரணம்… மயூ அவரை அதிகம் தூண்டி துருவி கேள்வி எழுப்பவில்லை. எப்போதடா ஏதானும் உளறி வைப்போம் என்ற திகிலில் நாட்களை எண்ணி கொண்டிருந்த பூரியின் நிலைக்கு முடிவு வந்தது.


கார்கோடனும் அவரின் மருமகனும் உடன் வர, திருவண்ணாமலை வீட்டை காலி செய்து கொண்டு ஆத்தூருக்கு பயணப்பட்டனர் மயுரியும், பூரணியும்.


********************************************


ஆத்தூர்….


முன்பு சிவபாதத்தோடு வசித்த இவர்களின் பூர்வீக வீடு காலியாக பூட்டி கிடக்க, பூரணி வருவது அறிந்து, உறவினர்கள் வீட்டை தூசு தட்டி, வெள்ளை பூசி, தயார் செய்து வைத்திருந்தனர்.


பூரியின் அம்மா சரசு பாட்டியின் திடீர் மறைவால்… பத்தாம், பதினோராம் வகுப்பு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே ஊர்ப் பக்கம் வர வேண்டிய சூழல் பிள்ளைகளுக்கு வர, வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்குள்ளேயே குடும்பத்தை ஒரு வாரம் உல்லாச சுற்றுலாவுக்கு தவறாமல் அழைத்து செல்லும் சிவபாதத்தின் வழக்க படி, முதல் சில நாட்களை வெளியே கழித்து விட்ட பின்பு, எஞ்சிய வாரங்களை அந்த இரு ஆண்டும் மயூ ஊரில் கழித்திருந்தாள்.


பன்னிரெண்டாம் வகுப்பு விடுப்பில், நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் வகுப்புக்கு போனதில், அந்த வருடம் மிக குறைந்த நாட்களே ஊரில் தங்க வாய்த்தது.


என்ன தான் சில வாரங்கள் வாசம் என்றாலும் விடுமுறை சமயம் என்றதால், அந்த இரு தெருக்களில் இருந்த உற்றார் உறவுகளும் சுற்றுலா, அவர்களின் உறவு வீட்டு விஜயம் என வெளியே திரிந்ததில், அவள் வயதினர் நட்பு அமையவில்லை. உறவில் கூட ஒரு சிலரை மட்டுமே மயூவுக்கு நேரடி அறிமுகம் உண்டு. மற்றவரெல்லாம் அம்மா, மற்றும் அப்பாவின் பேச்சுவாக்கில் அறிந்தவர்களே.


அப்படியான மயூவுக்கு உறவுகளில் சிலரை யாரென அடையாளம் தெரியாதது ஆச்சரியம் இல்லையே. இவர்கள் வரவால் அந்த சின்ன வீடே சொந்தங்களால் நிரம்பி வழிந்தது. அக்கா, அண்ணி, தங்கச்சி, மருமகளே என பூரணியை ஆளுகொரு உறவு சொல்லி உரிமையாக அழைக்க, அவருமே எல்லோரிடமும் மகிழ்ச்சியாக உரையாற்றுவது கண்டு தங்கள் முடிவு சரி என்று நினைத்தாள் மயூரி.


“எப்போவும் படிப்பு, படிப்புன்னு சொல்லியே பிள்ளையை எங்க கண்ல சரியா காட்டல நீங்க.” “அடுத்து நம்ம மயூரி கல்யாணம் தான். நாங்க இருக்கோம்… ஜமாய்ச்சுடலாம்.” “எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு சொல்லு பூரணி, வரிசையில நிப்பாட்டிடலாம்.” “அடியே அங்கை, உன் சம்பந்தி வீட்டாருல்ல சின்னவங்களுக்கு ஒரு பையன் இருக்காரு தானே?”


“மாறன், நலன் உசரமாமே… போன வாரம் நம்ம தங்கம்மை சித்தி பக்கம் போன விஷேஷத்துல ஒரு பொண்ணு கண்ணுல பட்டா…” சிவபாதத்துக்கு அக்கா, தங்கை முறை பெண்கள் இப்படி அடுத்தடுத்து இடைவெளி விடாது அடுக்கவும், நான் சொல்வது புரியுதா என்பதாக பூரி மகளை டக்கென பார்க்க… ‘ஐயோ, கொஞ்ச நேரமே முடியலை… இப்போவே கண்ணை கட்டுதே’ என மனதில் தவித்த மயூவுக்கு ஆபத்பாந்தவனாக அபயம் அளித்தார் கார்கோடன்.


“அட பொன்னி, அவங்களே இப்ப தான் வந்திருக்காங்க. இப்ப இந்த பேச்சு எதுக்கு சரளா? கருப்பண்ணசாமிக்கு கெடா வெட்டி, பொங்கல் வெச்ச பொறவு, ரெண்டு பிள்ளைங்க கல்யாணமும் தன்னால கூடி வர போகுது. இப்போவே ஏன் அங்கை அவசரப்படுதீங்க? ” கார்கோடன் அப்பேச்சுக்கு முற்று வைத்தார்.


***************************************************


மயூவும், பூரணியும் ஊருக்கு வந்து பத்து நாட்கள் ஓடியே விட்டது. மயூ பாட்டில் வேலைக்கும், வீட்டுக்குமாக இருக்க… பூரணி வீட்டை ஒழுங்கு செய்து, கோவில் குளம் என நண்பிகளோடு போய் வர, ஆறு மாத ஜெர்மனி ஆன்சைட் முடிந்த மாறனும் வந்து சேர்ந்திருந்தான்.


இரண்டு நாளாக பிரயாண களைப்பினாலும், நேர மாற்றத்தாலும் அசந்திருந்தவன், இன்று சற்றே தெளிவாக இருந்ததால், “ம்மா… இப்படி கொஞ்சம் உட்காருங்க…” என்றான்.


“இரு மாறா, சூடா பணியாரம் கொண்டு வரேன். மதியம் கூட சாப்பிடாம தூங்கிட்ட. உனக்கு பிடிக்கும்னு இனிப்பு செஞ்சேன்.”


“எனக்கு பசியில்ல…”


“சூடா ரெண்டு சாப்பிடுடா…” பூரி, ஆதுரமாக மகனை பார்த்து கொண்டிருக்க,


“ம்ம்… நடக்கட்டும்… நடக்கட்டும்! புள்ளை வரவும், என்னை கண்டுக்கறதே இல்ல. நேத்து செஞ்ச சமையலை என் தலையில கட்டிட்டு, ஃபிரெண்ட்ஸோட இத்தனை நாள் ஜல்ஸா செஞ்சதென்ன! புளிச்ச மாவுல எனக்கு பணியாரம்! ஆனா, உத்தம புத்திரனுக்கு இதுக்குன்னே மாவு ஆட்டி, சுட சுட டிஃபனா?” வேலையில் இருந்து சீக்கிரமே வந்த மயூ குறைபட…


அவள் கேள்வியை கண்டுக் கொள்ளாமல், “நீ என்ன பாதி நாளுல வீட்டுக்கு வந்துருக்க? ஆமா, என்ன ஒரு நாத்தம் அடிக்குது?” அம்மாவும் மகனும் இரு வேறு வினா எழுப்பினர்.


இருவரையும் முறைத்தவள்… “சிக்கலான பிரசவம் பார்த்துட்டு வந்திருக்கேன். மேலயெல்லாம் பனிக்குடம் உடைஞ்சு தெரிச்சுருச்சு… நான் குளிச்சுட்டு, திரும்ப வேலைக்கு போகணும்,” பதிலளித்தவாறே அவளறைக்குள் நுழைந்தாள்.


“நல்லா தேங்கா நார் வெச்சு தேய்ச்சு குளி மயூ! கப்படிக்கற, ம்மா… அந்த டெட்டால் ரெண்டு சொட்டு விடுங்க, என்னால நாத்தத்தை தாங்க முடியலை,” மூக்கை பிடித்தவாக்கில் மாறன் கிண்டலடிக்க…


“சும்மா இரு மாறா…” மகனை அடக்கிய பூரியின் குரலோ சற்றே ஸ்ருதி குறைந்து தான் வந்தது. காரணம்… இத்தனை நாட்களாக மகள் அறியாமல் அவளை கவனித்து கொண்டு தான் இருக்கிறார் பூரி. அவள் பேச்சில் எந்த மாறுதலும் இல்லை. சில சமயம், அழகன் ஏதோ பொய் சொல்லி இருக்கிறானோ என்று பூரி நினைக்கும் அளவுக்கு ஆத்தூரோ இந்த இடமாற்றமோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதாகவே மயூரி எப்போதும் போல நடந்து கொண்டாள்.


“ம்மா… அம்மா…” பூரியின் முகத்தின் முன் கையை அசைத்து மாறன் அவரின் கவனத்தை கலைக்க, சில நொடிகள் திருதிருத்தார் பூரணி.


“என்ன, இவளுக்கே பிரசவம் பார்க்கற வயசாகியும், கல்யாணம் பண்ணிக்காம இருக்கா. இப்போ இவ மாட்டுக்கு பிரசவம் பார்த்துட்டு வரலைன்னு யார் அழுதான்னு தானே உங்க மைன்ட் வாய்ஸ் ஓடிட்டு இருக்கு.” மாறனின் கிண்டல் பேச்சில்…


“நீ இப்போ கல்யாண விஷயமா வாய் திறக்காத. உங்க ரெண்டு பேர்கிட்ட சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே… முடியலை! மொத ஒரு டீயை போடுறேன். இல்லைன்னா… ‘உன் மகன் வந்தப்புறம் எனக்கு டீ கூட போட மாட்டேங்கற'ன்னு அதுக்கும் பேசுவா,” சலித்தவராக அடுக்களைக்குள் நுழைந்தார்.


தன் அறைக்குள் இருந்து மயூ வெளியே வரும் நேரமாக மொபைலை பார்த்து மாறன் சற்று உரக்க, “இந்த சௌந்தர் பய தப்பிச்சுட்டான்…” என்றிட,


டீ டம்ப்ளரை நீட்டியவாறே, மகளை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டு கொண்டே, “மாறா… நாம கிராமத்துல இருக்கோம்னு நினைவில வை. அது என்ன மரியாதை இல்லாத பேச்சு? ஸ்கூல்ல தோள்ல கை போட்டதெல்லாம் அங்கேயோட முடிஞ்சுது. இங்க எல்லாம் வேற முறை… எப்போவும் மறக்காதே மாறா,” பூரி கண்டிக்க…


“அதுவும் சரி தான். நான் சென்னை கிளம்பறதுக்குள்ள ஒரு வாட்டி பார்த்துடலாம்னு மெசேஜ் செஞ்சேன். அடுத்த வாரம் தான் மினிஸ்டர் ஊர் பக்கம் வராராம். அப்போ தான் சௌந்தர் சாரும் வருவாராம்.”


“அதான் ட்ரான்ஸ்ஃபர் மாத்தி போடலையே. இன்னும் எதுக்கு அவங்களை பார்க்க நினைக்கற மாறா? வேணாம் விடு.” பூரணியின் கேள்விக்கு…


“இல்லம்மா, ஒரு ஆறு மாசமோ ஒரு வருஷமோ இங்க இருக்கலாம். மயூவோட ஆராய்ச்சியும் முடிஞ்சுடும் அதுக்குள்ள. அதுக்கப்புறம் இங்க என்ன வேலை நமக்கு? அடுத்த ட்ரான்ஸ்ஃபர் நமக்கு தோதா போட சொல்லி, இப்போவே ஒரு விண்ணப்பம் போட்டுடலாம்னு இருக்கேன்.”


“நீ இப்போ எதுவும் பேச வேணாம் மாறா. வர ஞாயிறு கெடா வெட்டுக்கு பிறகு, கல்யாண வேலை பார்ப்போம். எங்க மாப்பிள்ளை வீடு அமையுதோ அந்த ஊர் பக்கமா மாத்தல் கேட்டுக்கலாம். இப்போ ஒரு முறை, அப்புறம்னு குழப்பம் வேணாம்.”


“சரிம்மா… திருச்சி சம்பந்தத்துக்கு சொல்லியாச்சா?”


“ம்ம்… கார்கோடன் மாமாவே பேசிட்டாரு. ஹும்… நல்ல பையன்! சொந்தமா பண்ணை கூட இருக்காம். மாமா வேணாம்னு சொன்னப்ப, இந்த விவரம் சொன்னாங்களாம். ‘ராணி மாதிரி வெச்சுக்குவேன்’னு அந்த மாப்பிள்ளை தம்பியே சொன்னாராம்.”


“என்ன மயூ… நான் வேணா அந்த மாப்பிள்ளைகிட்ட பேசி பார்க்கறேன். இங்க ரெண்டு நாள் சும்மா இருக்கறதுக்கு பதிலா, ஒரு வாட்டி நேர்ல பார்த்துட்டு வரேன்.”


ஆலோசனை கேட்ட அண்ணனிடம், “அவ்வளோ பிடிச்சிருந்தா நீயே கட்டிக்கோ…” இன்னும் காதில் விழா வண்ணம் ஏதோ படபடவென முணுமுணுத்தவாறே டீயை கூட குடித்து முடிக்காமல், மையூ விறுவிறுவென அங்கிருந்து கிளம்பி விட…


“ஏய் மயூ… மயூமா… சாரி இனி இது பத்தி பேசலை…” தங்கையை சமாதானம் செய்ய மாறன் பின்னோடு ஓட, மகளை கவனித்து கொண்டிருந்த பூரிக்கு முதல் முறை நிம்மதி பிறந்தது.


மயூவை செல்லமாக வளர்த்தவர். மகளுக்கு கொஞ்சம் பிடிவாதம் குணம் உள்ளதை அறிவார். ஆனால், எப்போதுமே காரண, காரியங்களை எடுத்து விளக்கினாள், செவி மடுப்பதோடு, தன் முடிவை மாற்றி கொள்ளவும் மயூ தயங்கியதில்லை.


முதல் முறையாக கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு உப்பு சப்பில்லாத சாட்டுகளை அடுக்கி திருமணத்தை மகள் ஒத்தி போடுவது நினைவிலாட, அழகன் தவிர்த்து வேறொருவனுக்கு மயூரி கழுத்தை நீட்ட மாட்டாள் என்பது பூரணிக்கு திண்ணமானது.


மண மாலை வரும்.. சுப வேளை வரும்..

மண நாள்.. திருநாள்.. புது நாள்…


மகளின் வாழ்வு மலருமா? விடை தெரியாத கேள்வியில் ஆழ்ந்தார் அன்பு அன்னை.Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page