top of page
madhivadhani Stories

மஞ்சக்காட்டு மயிலே 7



மஞ்சக்காட்டு மயிலே


தோகை 7


ஆத்தங்கர மரமே

அரசமர இலையே

ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி

யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி


மயூரிக்கும் தனக்குமான உறவு பூத்த நாட்களை நினைவு கூர்ந்த அழகனின் முகம் கனிந்து, கண்களில் ஒரு மயக்கம் பிறந்தது. திடீரென காரில் அமைதி நிலவியதில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்த பூரி, அமைச்சரின் மென்மையான முக பாவனையில் ஒரு கணம் அசந்து போனார்.


மெல்ல அழகனே “மயூ டென்த் லீவுக்கு ஊருக்கு வந்தப்ப தான் எங்களுக்குள்ள பழக்கம் ஆரம்பிச்சுது. காதலுக்கு மரியாதை பண்ற உங்களுக்கு, கண்டதும் காதல்னு நான் சொல்றது நல்லா புரியும்னு நம்பறேன் அத்தை. அப்போ ரெண்டு பேருக்கும் லவ் பண்ற வயசில்லை தான். ஆனா, அது இந்த மனசுக்கு புரியலையே, மயூவை பார்த்ததும் இதயம் தடம் மாறி தான் போச்சுது.”


பதின்ம வயதிலா என ஏற்கனவே கணக்கிட்டு அதிர்வில் இருந்த பூரணி, இப்போது அழகன் வார்த்தையாக விவரிக்கவும், மெளனமாக தலை குனிந்து கேட்டிருந்தார்.


“மயூவை தொரத்தி தொரத்தி காதலிச்சது, அவளை காதலிக்க வெச்சது எல்லாம் நான் தான். அந்த நாளுல நீங்களும், மாமாவும் ஞாயிற்றுக்கிழமையில அவளை பார்க்க ஹாஸ்டலுக்கு வருவீங்க.”


ஆமென்று தலை அசைத்த பூரியிடம், “அப்ப, சில முறை உங்க மூணு பேரையும் அங்க இருக்க கோனார் மெஸ்ல பார்த்திருக்கேன்.”


“சௌந்தரோட சித்தப்பா பொண்ணு மங்கை, நம்ம மயூவோட கூட படிச்ச பிள்ளை தான். அவளும் ஹாஸ்டல்ல தான் தங்கியிருந்தா… அந்த கனெக்ஷன் மூலம் ஹாஸ்டல் நம்பர் கிடைக்கவும், சில முறை போன்ல பேசினேன். ஆரம்பத்துல 'எப்படி நம்பர் கிடைச்சுது, எனக்கு எதுக்கு போன் போட்டீங்க'ன்னு கேட்டவ, அந்த வயசுக்கே உள்ள விளையாட்டுத்தனத்துல என்னோட உணர்வுகளை சரியா புரிஞ்சுக்காம ஊர்ல பார்த்தவங்கற பழக்கத்துல தயக்கமில்லாம பேசவும் செஞ்சா.”


அந்த நாளில் சில நேரங்களில் பதினைந்து நாள் பள்ளி விஷயங்களை கூட ஒன்று விடாமல் தன்னிடம் அவர்கள் சந்திக்கும் ஒரு வாரயிறுதியில் காது தேய விவரித்த மகள் ஒரு முறையும் அழகனை பற்றி மூச்சே விடவில்லை என்பது புரிய, அப்போதே பெண்ணின் மனதில் காதல் புகுந்திட்டதை உணர்ந்து கொண்டார் அந்த காதலுக்கு மரியாதை செய்யும் அன்னை.


“சனிக்கிழமை அன்னைக்கு தான் சாயங்காலம் போல கோயில், கடை கண்ணின்னு மையூ ஹாஸ்டலை விட்டு ஃபிரெண்ட்சோட கும்பலா வெளிய வருவா. அப்ப தான் யாருக்கும் தெரியாம எட்ட நின்னு பார்ப்பேன். ஒரு கட்டத்துல, அவ ஃபிரெண்ட்ஸ் யாரும் கவனிக்காதப்ப, இவளும் கூட்டத்தை விட்டு விலகி ஏதோ ஒரு சாக்கில் தனியா வருவா, அப்படி தான் மெல்ல பேச ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள் இப்படி யார் கவனமும் கவறாம, நீ சுகமா, நான் நலம்னு இருந்தவங்க, ஒரு கட்டத்துல வெளிய போய் வரன்னு ஆச்சு. அதுக்கு பின்ன, ஃபிரெண்ட்ஸ் கூட போகாம, யாருக்கும் தெரியாம என்னோட வெளிய வர ஆரம்பிச்சா.”


“என்ன? உங்க கூட தனியா வெளியே வந்தாளா?” நெஞ்சில் கையை வைத்து, கண்கள் அதிர்வில் அகல கேட்ட பூரணியை கண்டு, மென்னகை புரிந்தவன்,


“மாட்டினதேயில்லை நாங்க!” கண்டேன் சீதையை என்பது போல முக்கிய விஷயத்தை சொல்லி விட்டு பின், “ம்ம்… ஆரம்பத்துல அங்க பக்கத்துல உள்ள இடங்களா தான் போயிட்டு இருந்தோம். கொஞ்சம் தைரியம் கூடி போகவும், அக்கம் பக்கம் இருக்கற ஊருக்கெல்லாம் கூட பைக்ல சுத்தி இருக்கோம்.”


பூரணிக்கு திக்கென்றது. அவரின் பயந்த நிலை புரிந்தாலும், தான் மயூவை நேசிப்பதை புரிய வைத்து விட துடித்து கொண்டிருந்த அழகனோ எதையும் சட்டை செய்யாமல் தொடர்ந்தான்.


“லீவுக்கு ஊருக்கு வரும் போதும், எங்க மாந்தோப்பு இருக்கில்ல… அந்த பக்கமா ஆத்தை ஒட்டி போற பாதையில வெச்சு யாருக்கும் தெரியாம தினமும் பார்த்துப்போம்.”


“ஊருக்குள்ளேயுமா?” இந்த தகவலை கேட்டதும் இப்போது உயர் மின்சார அழுத்தத்தை எதிர்பாராமல் அனுபவித்த உணர்வில் இருந்த பூரணி உண்மையில் வெலவெலத்து போனார். மலையனாரின் உயரம், குணம் அறிந்திருந்தபடியால், மகளின் இந்த செயல் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்க கூடும் என்ற எண்ணமே அவரை நா வரள செய்தது என்றால் மிகையல்ல.


“ஆமா அத்தை. ஆனா, யாருமே எங்களை பார்த்ததில்லை. உங்களுக்கே தெரியும், ஆத்துக்கு குறுக்க இருக்கற பாலத்துல இருந்து விழுந்து தற்கொலை செஞ்சுகிட்டவங்களோட காத்து கருப்பு அந்த பக்கமா சுத்துதுங்கற நம்பிக்கையில, பொழுது விடியற நேரமும், அந்தி சாஞ்சப்புரமும் அந்த பக்கமா ஒரு பயலும் நடமாட மாட்டனில்ல. அது எங்களுக்கு வசதியா போச்சுது.”


‘தான் அறியாமல் இத்தனை நடந்திருக்கிறது! என்ன கவனித்தேன் என் மகளை? பொறுப்பான அம்மாவாக இல்லாமல் போனேனே!’ மனதில் மறுகியவர், அழகனின் பேச்சில் கவனம் வைத்தார்.


“ரெண்டு வருஷம் எல்லாம் நல்லா தான் போச்சு. அப்புறம் தான் ஸ்கூல் முடிச்சு, அவளுக்கு சென்னை வெட்டினரி காலேஜ் அட்மிஷன் வரவும், மாமாவும் வேலை மாற்றல் வாங்கிட்டு, நீங்க எல்லாரும் ஊரை விட்டு கிளம்பினது.”


“எப்படியும் காலேஜ் சேர்ந்த மயூவுக்கு போன் வாங்கி தருவீங்க நீங்க. போன் மூலமா டச்ல இருக்கலாம்னு நாங்க ப்ளான் செஞ்சுருந்தோம். ஆனா, என் நம்பர் நல்லா தெரிஞ்சவ, என்னை கூப்பிடவே இல்ல. நானும் எம்.பி.ஏ., சேர்ந்துட்டதால, உடனே வர முடியலை. ரெண்டு மாசம் கழிச்சு சென்னை வந்தப்ப, காலேஜ்கிட்ட மயூவை பார்த்தேன். நாங்க பேசுறதுக்குள்ள, எங்களை பார்த்துட்ட மாமாவுக்கு விஷயம் புரிய, செம டென்ஷனாகி, ‘வேணாம் சார்’னு… கெஞ்சிட்டு, மயூவை கையோட அழைச்சுட்டு போயிட்டார்.”


“என்ன? அவருக்கு விஷயம் தெரியுமா?” இதுவரை கேட்ட எல்லாவற்றிலும், இது தான் அதிகபட்ச அதிர்வை கொடுத்தது பூரணிக்கு.


“ஆமா அத்தை, மாமாவுக்கு புரிய வைக்க பார்த்தேன். அவர் ஒரே பிடியா, ‘வேணாம்… சரி வராது. விட்டுடுங்க’ன்னு என் பேச்சை கேட்டுக்கறதாவே இல்ல. ஒரு கட்டத்துக்கு மேல மயூவும், ‘கொஞ்ச நாள் போகட்டும், நான் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கறேன்’னு என்னை சமாதானம் செய்தாளா, சரின்னு நான் கிளம்பிட்டேன்.”


“இல்ல… நான் நம்ப மாட்டேன். அவர் இதுவரை என்கிட்டே என்னைக்கும், எதையுமே மறைச்சதில்ல. இத்தனை முக்கியமான விஷயத்தை நிச்சயமா என்கிட்டே சொல்லாம இருக்க மாட்டார்.” கணவரை விட்டு கொடுக்காமல் வாதிட்டார் பூரணி.


“உங்ககிட்ட மாமா ஏன் சொல்லலைங்கறதுக்கான பதில் என்கிட்டே இல்லை அத்தை. ஆனா, மாமாவுக்கு எங்க லவ் மேட்டர் அப்போவே தெரியும். அப்பாவுக்கும், பொண்ணுக்கும் வாக்குவாதம் கூட ஆச்சு.”


“இது... இது எப்போ?” பூரியின் குரலில் ஸ்ருதி குறைந்து போயிருந்தது.


“ரெண்டாவது வாட்டி நான் சென்னை வந்து மயூவை பார்த்தப்ப.” பூரியின் முகம் வெளிறியதில் அவருக்கு இதெல்லாம் ஜீரணிக்க சிரமம் என்பது புரிந்தாலும், இன்றே தெளிவாக பேசி விட வேண்டும் என்ற வேகத்தில் இருந்தவன், விடாது தொடர்ந்தான்.


“இப்போ நான் சொல்றதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும் அத்தை.” இதுக்கும் மேல என்ன என்பதாக விழி உயர்த்திய பூரியிடம்,


“அந்த முறை மயூவுக்கும் எனக்கும் கொஞ்சம் மனவருத்தம் ஆகிருச்சு. அரசியல் காரணங்களுக்காக, எங்க சாதி வோட்டு முழுசும் அவருக்கே விழணும்னு, அந்த சமயத்துல எனக்கொரு கல்யாண ஏற்பாடை பண்ண பார்த்தார் எங்கப்பா.”


“ஆ…ஆமா… தெரியுமே…”


“அதான்… அங்க தான் எனக்கும் மயூவுக்கும் கொஞ்சம் சண்டையாகிடுச்சு. மாமா மூலமா இந்த விஷயம் தெரியவும் டென்ஷனான மயூ, அப்போவே எங்க வீட்ல எங்களோட லவ் விஷயத்தை உடைச்சு வெளிப்படையா சொல்லிடணும்னு பிடிவாதம் பிடிச்சா.”


“அவளே அப்போ தான் காலேஜ் முதல் வருஷத்துல இருக்கா… நானும் எம்.பி.ஏ., கோர்ஸ் ஆரம்பிச்சு இருக்க, ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கான வயசில்ல. ‘எனக்கு பேசியிருக்க கல்யாணம் நடக்காது மயூ, நம்ம விஷயத்தை உடனே வீட்ல சொல்ல முடியாது, பிரச்சனையாகும். நீ முதல்ல படிப்பை முடி… நானும் கொஞ்சம் பிசினெஸ்ல செட்டிலானதுக்கு அப்புறம், வீட்ல சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம்’னு எவ்வளவோ எடுத்து சொன்னேன்.”


“மாமாவோ, ‘இதெல்லாம் என்னைக்கும் நடக்காத விஷயம் மயூம்மா’ன்னு ஒரு பக்கம் ப்ரெயின்வாஷ் செய்ய முயற்சிக்க, அவர் பேச்சை கேட்டுக்கிட்டு, ‘இப்போவே நீ உங்க வீட்ல பேசினா தான் ஆச்சு’ன்னு மயூ ஒத்தக் கால்ல நிக்க, நான் ‘முடியாது’ன்னு மறுக்க…”


“அவ பேச்சை தட்டிட்டேங்கற கோபத்துல, ‘இனி என்னை பார்க்க வராதே. என்னோட பேசாதே, உங்க வீட்ல பார்த்த பொண்ணையே கட்டிக்கோ’ன்னு முறுக்கிக்கிட்டா.”


“மேல பேசி சமாதானம் பண்ணலாம்னு பார்த்த என்னை, வாய் திறக்கவே விடாம, ‘சார்… மலையனார் ஐயா பேச்சை தட்டி, வீணா ஊருக்குள்ள எங்க ஜாதி ஜனத்துக்கு பிரச்சனை உண்டு பண்ணிடாதீங்க’ன்னு கையெடுத்து கும்பிட்டு, மயூவை அங்கேருந்து இழுத்துட்டு போயிட்டார் மாமா.”


“சரி, நம்ம வீட்ல முடிவு செஞ்சுருக்க கல்யாணத்தை தடுத்து நிறுத்தினா, தன்னால மயூ புரிஞ்சுப்பான்னு, நானும் அப்படியே செய்ய… அப்போவும் அவளோட கோபம் குறையலை.”


“நானும் ரொம்பவே புரிய வைக்க முயற்சி பண்ணா, எங்க நான் பேசுறதை கேட்கவே இல்ல உங்க மக. ஒரு கட்டத்துக்கு மேல எனக்கும் எரிச்சலாகி, நான் இதுக்கு மேல இறங்கி போக மாட்டேன்னு பாழா போன ஈகோ தடுக்க, சரி… கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு, நானும் முறுக்கிக்கிட்டு காலேஜுக்கு கிளம்பிட்டேன்.”


“மயூகிட்ட போன் இல்லாததால அவளும் என்னை கூப்பிடல, எனக்கும் அவளோட தொடர்புல இருக்க வேற வழியும் இல்ல. ஆக, எங்க பிரிவு நானே எதிர்பாராத அளவுக்கு பெரிசாகிடுச்சு.”


“இதுக்கு நடுவுல மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவரும் தவறிட்டார். சத்தியமா எனக்கு விஷயம் தெரியாது அத்தை. தெரிஞ்சிருந்தா, அந்த நேரத்துல மயூவை தனியா கஷ்டப்பட விட்டுருக்க மாட்டேன்.”


“மூணு மாசம் போல கழிச்சு, நான் சென்னை வந்தப்ப தான் விவரம் தெரிஞ்சுது. பெரும்பாடுபட்டு மயூவை தனியா பார்த்தேன். ‘நமக்குள்ள ஒண்ணுமில்ல… என்னை விட்டுடு’ன்னு ஒரேடியா உறவை முறிச்சுக்கிட்டா. அப்பாவை போலவே பொண்ணும், என்னை பேச விடலை. என் சமாதானங்களை கேட்கவும் மயூ தயாராயில்ல.”


“போதாததுக்கு என்னோட அப்பாவுக்கு மாரடைப்பு வந்துடுச்சு. அதுக்கப்புறம் நடந்தது இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும். அப்பா காலமாக, அவர் வாரிசா என்னை அரசியலுக்குள்ள இழுத்து விட்டுட்டாங்க. பை எலக்க்ஷன்… எம். எல். ஏ பதவி வந்துச்சு. இடையில ஆட்சி கலைய, அடுத்து இன்னொரு தேர்தல் வந்ததும், திரும்ப எனக்கு எம்.எல்.ஏ., பதவி. அஞ்சு வருஷம் தொகுதிக்காக எதிர்கட்சி சட்டசபை உறுப்பினரா வேலை வேலைன்னு அலைஞ்சு… இதோ இப்போ எங்க கட்சி ஆட்சியை பிடிக்க, எதிர்பாராம அமைச்சர் பதவி தேடி வர, அதனோட கூடிய பொறுப்புங்கன்னு, பொது வாழ்க்கைக்கே என் நேரம் சரியா இருக்கு.”


“இப்போ எங்க வீட்ல தீவிரமா கல்யாணத்துக்கு வரன் பார்க்கறாங்க. இனியும் ஒத்தி போட முடியாது அத்தை… மயூவை எனக்கு கட்டி வைக்க உங்க சம்மதம் வேணும்.”


பூரிக்கு வார்த்தைகளே வெளி வரவில்லை. தான் உயிரினும் மேலாக எண்ணும் கணவன், மகள் இருவரும் இத்தனை முக்கிய விஷயத்தை மறைத்த அதிர்வில் இருந்தவரை, “அத்தை…” அழகனின் அழைப்பு நடப்புக்கு இட்டு வர,


“ஹாங்… வீட்ல பேசிட்டீங்களா?” முக்கிய கேள்வியை எழுப்பினார்.


“அது… இன்னும் இல்ல அத்தை. இவ காரணமில்லாத கோபத்தை இழுத்து பிடிச்சு வெச்சுட்டு… நான் போன் போட்டா கூட எடுக்கறதில்லை. என்கிட்டே மனசு விட்டு பேசினா தானே, என்ன வருத்தமோ அதை நான் களைய முடியும்? முறுக்கிட்டு இருக்கறவளை காட்டி, ‘எனக்கு கட்டி வைங்க’ன்னு எப்படி சொல்ல? அவளுக்கு இருக்க பிடிவாதத்துக்கு ‘எனக்கு இவரை தெரியவே தெரியாது’ன்னு சாதிச்சுடுவா, அத்தனை அழுத்தக்காரி….”


சட்டென்று பூரணியின் கைகளை பற்றியவன், “இப்போதைக்கு உங்க கையை காலா நினைச்சு சரணடையறேன். எங்களுக்கு கல்யாணத்தை பண்ற வழியை பாருங்க. நீங்க எத்தனை ராஜகுமாரனை கொண்டு வந்து நிறுத்தினாலும் மயூ மறுப்பா. ஒத்துக்கவே மாட்டான்னு நிச்சயமா சொல்றேன். ஆனா, அவளா வாய் திறந்து இன்னாரை காதலிக்கறேன்னு என்னை கை காட்டவும் மாட்டா.”


“தம்பி… சார்…” பூரணி தடுமாற…


“என்னை தம்பின்னே கூப்பிடுங்க அத்தை. இல்ல மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க…”


“ஐயோ… இல்ல! நீங்க சொன்னதை நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை… எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குதே…”


“அத்தை, ப்ளீஸ் டென்ஷனாகாதீங்க. நீங்க தான் ஒரே கதின்னு உங்ககிட்ட பேசுறேன்.”


சில நொடிகள் அமைதியில் செல்ல, “எனக்கு… அவகாசம் கொடுங்க. அப்போ, இந்த ட்ரான்ஸ்ஃபர்?”


“எனக்கு வேற வழி தெரியாம தான், கட்டாய இடம் மாற்றல் போட்டிருக்கேன். நான் மனசு வெச்சாலொழிய மயூவுக்கு வேற ஊருக்கு மாற்றல் வராது. பிரிவு அன்பை அதிகரிக்கும் சொல்லுவாங்க. ஆனா, எங்களோட இந்த ஏழு வருஷ பிரிவு, விரிசலை கூட்டிட்டதா தோணுது அத்தை. அதான்… வேற வழி புரியாம, ஆத்தூருக்கு வந்தாலாவது மயூவோட மனசு மாறும்னு ஒரு நப்பாசையில இப்படி தடால்னு இறங்கி இருக்கேன்.”


“இந்த சில வருஷமா, வீட்ல பார்த்த வரனை எல்லாம் எப்படியோ தட்டி கழிச்சு விட்டுட்டேன். இப்போ பொண்ணு எதுவும் சரியா அமையாதது பார்த்து எனக்கு வயசு கூடிட்டதா புலம்பிட்டு இருக்க அம்மா, எதையும் செஞ்சு வைக்கறதுக்கு முன்ன, மயூ மனசு இறங்கி வந்தா தான் உண்டு. என் நிலைமையும் மோசமா தான் இருக்கு அத்தை.”


வெறுமே தலையை அசைத்த பூரி, “நேரமாச்சு… மயூ தேடுவா…” எனவும், காருக்கு அருகே வெளியே நின்றிருந்த சௌந்தரை தொலைபேசியில் அழைத்தான் அழகன்.


சௌந்தர் வாங்கி வைத்திருந்த இரு இளநீர்களை நீட்ட, நன்றி சொல்லி வாங்கிய அழகன், வருங்கால மாமியாரிடம் கொடுத்தான். நடுங்கும் கரங்களால் வாங்கியவருக்கு அந்த பானம் தேவைப்பட்டது.


அதன் பின் அழகன் மெதுவே காரை ஸ்டார்ட் செய்ய, “அவரு சின்ன பிள்ளையா இருக்கறப்ப, ஊருக்குள்ள வேத்து ஜாதி காதல் கல்யாணம் ஒண்ணு நடக்க, அதனால ஜாதி சண்டை வெடிச்சு, ஊரே பத்தி எரிஞ்ச கதை தமிழ்நாடு முழுசும் பெரிய தலைப்பு செய்தி! அப்ப, நடந்த கலவரத்துல இறந்த அப்பாவி ஜனங்க இருவது பேர்ல சேர்த்தி தான் என்னோட மாமனாரும், மாமியாரும். நடந்த பிரச்சனைக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னாலும், ஜாதி வெறியில அலைஞ்சவங்க கண்ல அகப்பட்டதால, பரிதாபமா உசுரை விட்டாங்க இவரை பெத்தவங்க.”


“அதுக்கப்புறம் தான் அவரோட தாய் மாமன் ‘இந்த ஊரும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்’னு ஆத்தூருக்கு பெரிய முழுக்கா போட்டுட்டு இவரையும் அழைச்சுக்கிட்டு, சென்னையில வந்து செட்டிலாகிட்டாரு.”


“சிட்டியில வளர்ந்தாலும் ஆத்தூரோட சின்ன வயசு ஞாபகங்கள் என் வீட்டுக்காரர் மனசை விட்டு போகலை. எத்தனை தான் படிச்சிருந்தாலும், வீடு, வாசல்னு வசதி கூடி போயிருந்தாலும், ஊரை பொறுத்தவரை நாங்க என்னைக்கும் உசந்துட முடியாதுன்னு தெளிவா புரிஞ்சவரு.”


“பல வருஷம் செண்டு, உங்கப்பாரு மலையனார் ஐயா, ஒரு முறை இவரை நெல்லையில பார்த்தப்ப, இன்னாருன்னு கூட இருந்தவங்க அடையாளம் சொல்லிட்டாங்க. ‘சொந்த ஊருக்கு உழைக்க உமக்கு கசக்குதா?’ன்னு வைதவரு, இப்போ மயூவுக்கு நீங்க செய்தது போல தான் இவருக்கு ஆத்தூருகே போஸ்டிங் வர வைச்சார். இஷ்டமில்லாம தான் நாங்க அங்க வந்தோம்.”


“ஊரு காத்து, பிள்ளைங்க மேல பட கூடாதுன்னு தான் டவுன்ல ஹாஸ்டல்ல போட்டு மாறனையும், மயூவையும் படிக்க வைச்சது. பிள்ளைங்க ரெண்டு பேரையுமே, ஆறேழு வருஷம் எதுக்காகவும் ஊருக்குள்ள அடி எடுத்து வைக்க விட்டதில்ல நாங்க. லீவுக்கு கூட, எங்கம்மா ஊருக்கு இழுத்துட்டு போயிடுவேன்.”


“எங்கம்மா போய் சேரவும் தான்… பெரிய லீவுக்கு மயூ ஊருக்கு வர ஆரம்பிச்சா. அப்ப மாறன் காலேஜ்ல சேர்ந்திருக்க… லீவ்ல கூட கோர்ஸ் அது இதுன்னு சேர்ந்ததால, அவன் அதிகம் ஊர்ல தங்கினது இல்ல.”


“மயூ காலேஜ்ல சேருறப்ப, நான் தான், பெண் பிள்ளையை பட்டணத்துல தனியா விட முடியாதுன்னு ட்ரான்ஸ்ஃபர் வாங்க சொல்லி என் வீட்டுக்காரரை வற்புறுத்தினேன். மலையனார் ஐயாவுக்கு அதுல விருப்பமே இல்ல. ‘பிள்ளை படிப்பு முடிஞ்சப்புறம் அவளை கட்டி கொடுத்துடுவேன். என் கடமை முடிஞ்சப்புறம் நம்ம ஊருக்கே வந்து, நம்ம ஜனத்துக்கு உதவறேன் ஐயா’ன்னு இவர் வாக்கு கொடுக்கவும் தான், ட்ரான்ஸ்ஃபருக்கு ஐயா ஒத்துக்கிட்டதா என்கிட்டே சொன்னார்.”


“சென்னைக்கு வந்த சில மாசத்துலயே நாங்க நினைக்காததெல்லாம் நடந்து முடிஞ்சுட்டுது. ஆத்தூரோ, அங்கத்தைய பழக்க வழக்கமோ தெரியாம தான் பிள்ளைங்க வளர்ந்தாங்க. டவுன்ல வளர்ந்த பிள்ளைங்களுக்கு, கிராமத்து சாதி ஏத்த எறக்கம் தெரியாம வளர்த்தது நாங்க செஞ்ச தப்பு. மாறனுக்கும், மயூவுக்கும் இந்த ஜாதி பிரிவினை, அதனால வர கூடிய சிக்கல் எல்லாம் புரிய கூட செய்யாது. எல்லாருக்கும் ரத்தம் செவப்பு தான்னு சொல்ற ஜெனரேஷன் அவங்க. அதனால தான் நீங்க யாரு, உங்க உசரம் என்னன்னு புரியாம பழகிட்டா போல.”


“எந்த ஊரால பிரச்னையாகும்னு நாங்க பயந்தோமோ, இப்போ அந்த நினைப்பு பலிச்சுட்டுது. நடக்கறதை யாரால தடுக்க முடியும்?” கார் மயூவின் வீட்டை நோக்கி சீறி பாய, அழகன் போட்டுடைத்த செய்தியின் தாக்கத்தில் கலங்கி பரிதவித்த பூரி, தன் மனதில் இருந்ததை அந்த இடைவெளியில் கொட்டி தீர்த்தார்.


“வண்டியை இப்படி ஓரம் கட்டி நிறுத்துங்க. இங்கருந்து நானே நடந்து போயிக்கறேன். வீணா யாரு என்னன்னு கேள்வி வரும். மயூவோட காதுக்கு போனா, என்னால அவளை சமாளிக்க முடியாது. நீங்க சொன்னதை யோசிக்கறேன். என்னால முடிஞ்சதை நிச்சயம் செய்யறேன்.”


பூரணி இறங்கி கொள்ள, நடந்து செல்லும் அவரையே பார்த்திருந்தான் செந்தூர் அழகன்.


ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆயிற்று. இன்னும் தன் வீட்டு ஆட்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். அது குறித்து நினைக்கவே பயம் வர… டில்லிக்கு ராஜாவென்றாலும் அன்னைக்கு பிள்ளை ஆயிற்றே! அவரை சம்மதிக்க வைக்க முடியுமா? அம்மு அக்காவிடம் பேசலாமா? இப்படி பலதையும் யோசித்து கொண்டே சென்னை நோக்கி பயணபட்டான் அழகன்.

*****************************


வீட்டிற்கு வந்த பூரணி, மகள் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து, நேராக தன் அறையில் இருக்கும் கட்டிலில் விழுந்தார். கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வேகமாக துடித்து கொண்டிருக்கும் இதயத்தை மெல்ல அழுத்தி கொடுத்தவரின் கை விரல்களில் நடுக்கம் இன்னமும் மிச்சமிருக்க, ‘எத்தனை பெரிய விஷயமிது. இத்தனை ஆண்டுகளாக மகள் தன்னிடம் மறைத்தாளா? கணவனும் கூட்டா?’ பூரணியால் நம்பவே முடியவில்லை.


மயூ காலேஜ் சேர்ந்த புதிதில் போன் வாங்கி தர கணவர் மறுத்ததும், அப்பா மகளிடையே சண்டை நடந்ததும் நினைவிலாட, தான் கூட மகளுக்கு பரிந்து பேசியதும் மாறன் ஒரு கைபேசியை வாங்கி தங்கைக்கு பரிசளித்தது, அதை கூட மயூவின் உபயோகத்துக்கு கொடுக்க சிவபாதம் மறுத்ததும், ‘என்ன பிடிவாதம் இது? ஒரு அவசரத்துக்கு கைபேசி அவசியம்’ என தான் கணவனிடம் வாதிட்டது எல்லாம் இப்போது பூரணிக்கு பளிச்சென அசந்தர்ப்பமாக ஞாபகத்துக்கு வந்தது.


மாறன் வாங்கி தந்த உயர் ரக பேசியை விடுத்து, ஒரு பேசிக் மாடல் பே ஆஸ் யூ கோ பேசியை கணவன் வாங்கி தந்ததும், அதையும் கூட மயூ கோபத்தில் வீட்டில் விட்டுவிட்டு சென்ற கதையும் நினைவுக்கு வர, அழகனிடம் பேச தடை விதித்திருப்பார் கணவர் என்று இப்போது ஓரளவுக்கு புரிய, முக்கிய விஷயம், மகளின் எதிர்காலம் தொடர்பான ஒன்றை பற்றி தன்னிடம் மறைக்க என்ன அவசியம்? கேள்வி எழ… சைட் டேபிளில் இருந்த கணவனின் புகைப்படத்தை எடுத்தவர்,


“ஏங்க, என்கிட்டே மறைச்சீங்க? லவ் மேரேஜ் நமக்கு ஓகே தான். ஆத்தூர்காரங்க ஜாதி வெறி பிடிச்சவங்கன்னு பயந்துட்டீங்களா? அதையும் என்கிட்டே சொல்லி இருக்கலாமே. எல்லாத்தையும் உள்ள போட்டு வருத்திக்கிட்டு, உசுரை குறைச்சுக்கிட்டீங்களா?” மெல்லிய குரலில் புலம்பினார்.


கைபேசி அழைக்கவும், மயூவின் பேரை கண்டவர், மெதுவே எடுத்தார்.


“ம்மா… எங்க போயிட்டீங்க? அப்போவே செஞ்சேன்… ஏன் எடுக்கலை?”


“ரூம்ல போன் வெச்சுட்டேன்… டீ.வி., சத்தத்துல கேக்கலை மயூ.”


“சரி… இங்க கீரை விக்கறாங்க, நல்லா இருக்கு. மேத்தி வாங்கட்டா இல்ல பொன்னாங்கண்ணியா?”


அதன் பின் சுருக்கமாக மகளிடம் பேசியவர், மதிய உணவு உண்ணாமல் இருந்தால், என்ன ஏதென மயூ நோண்டுவால் என்பதால் அவசரமாக உண்டதாக பெயர் பண்ணினார். வீட்டின் தனிமை வேறு அவரை அச்சுறுத்த, தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்தவரின் கவனம் அங்கே இல்லவே இல்லை. பூரியின் மௌனத்தை கண்டு, அவற்றுக்கு வாயிருந்தால் வீட்டின் சுவர்கள் எல்லாம் அதிசயித்து வம்பளந்திருக்கும்!


வீட்டிற்கு திரும்பிய மயூவுக்கு உணவை பரிமாற தவறவில்லை. இயந்திர கதியில் வீட்டு காரியங்களை செய்து கொண்டிருந்த பூரியை ஆராய்ச்சியாக பார்த்து, “என்ன உங்க முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? ஒ… இன்னைக்கு டீ.வியில புன்னகை மன்னன் படம்ல! அதான் ஒரே ஃபீலிங்க்ஸா சுத்தறீங்களா?”

கேள்வியும் நானே பதிலும் நானேவாக மயூ மதிய உணவை சாப்பிட,


“உனக்கெங்கே இதெல்லாம் புரிய போகுது?”


“எனக்கு இந்த காதலும் மண்ணாங்கட்டியும் புரிய வேணாம்,” என்றவள், தட்டை கழுவி வைத்து விட்டு, ஒரு புத்தகத்தை திறந்து வைத்து கொண்டாள்.


மிச்ச படம் திரையில் ஓட, பூரணிக்கோ மனம் ஓரிடத்தில் இல்லை. மயூ பாட்டில்… “நான் தூங்க போறேன்” என அறைக்குள் முடங்க, ‘மாறனிடம் பேசுவோமா? இல்லை நாமே மயூவை கேட்போமா?’ இப்படியாக குழம்பி கொண்டிருந்தார் பூரணி.


“பூரி… என் செல்லம், என்னாச்சு மதியத்துல இருந்து என்னவோ போல இருக்கீங்க?” முகவாயை பிடித்து முகத்தை உற்று நோக்கி கேட்கும் மகளை கண்டவரின் நெஞ்சம் அடைக்கவே செய்தது.


‘இவளா? இத்தனை முக்கிய விஷயத்தை, தோழி போல பழகும் தன்னிடமிருந்து ஒளித்து மறைத்தாள்?’ மனம் எழுப்பிய கேள்விக்கு விடை தான் இல்லை பூரணியிடம்.


“டேய்… மாறா, நீ எப்போ வர? அம்மா உன்னை ரொம்ப மிஸ்ஸிங், ஆள் டல்லடிக்கறாங்க…” அதற்குள் அண்ணனை அழைத்திருந்தாள் மயூ.


“என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா? நீ போனை அம்மாட்ட குடு…” மறுபுறம் பரபரத்தான் பாசக்கார மாறன்.


“இந்தாங்க உங்க சீமந்த புத்திரன்கிட்ட பேசுங்க. நான் தோசை வார்க்கறேன்…” அம்மாவை ஹாலுக்கு துரத்தியவளின், காதோ அவர்கள் பேச்சில் நிலைத்திருந்தது.


பதட்டமாக விசாரித்த மகனை சமாளித்தவர், குறித்தது போல அவன் இன்னும் ஒரு வாரத்தில் தாயகம் திரும்ப இருப்பதை உறுதி செய்து கொண்டு, “மாறா, இந்த திருச்சி வரனை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. நீயாவது ஒரு வார்த்தை அவளுக்கு புரிய வையேன்.”


“ம்மா… அவன் வந்தப்புறம் பேசிக்கலாம். நீ இந்த பேச்சை விடு…” குறுக்கிட்ட மகளிடம்,


“இப்போதைக்கு விடட்டுமா இல்ல…” மகளின் முகத்தை கேள்வியாக பார்த்தார்.


“ப்ச்… நீ சோர்ந்து இருக்கேன்னு பாவம் பார்த்து அண்ணாவுக்கு போன் செஞ்சா, கடைசில எனக்கே ஆப்பு வைக்கறியே பூரி மாத்தா?”


“பேச்சை மாத்தாதே… இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்லு, நான் ஜம்முனு ஆகிடுவேன்.”


அம்மாவை விடுத்து, “டேய்… தடியா… உனக்கு ஒரு பொண்ணுமா கண்ல மாட்ல! நீ ஆள் செட் பண்ணி இருந்தா என் தலை இங்க உருளுமா?”


“அதான் எனக்கு அமையலைன்னு தெரியுது இல்ல. வகையா ஒரு எலி சிக்கி இருக்காரு… பேசாம அவரை கல்யாணம் செஞ்சுக்க மயூ…”


“மாறா…” பெண்ணவள் பல்லை கடிக்க…


“மாமனார் மாமியார் சிக்கல் இல்ல. அவங்க செஞ்ச புண்ணியம் உன்கிட்ட மாட்டிக்காம போய் சேர்ந்துட்டாங்க. ஒரே ஒரு நாத்தனார்… அதுவும் உன்னை விட சின்ன பிள்ள. கல்யாணமாகி செட்டிலாகிடுச்சு. அப்புறம் என்ன? புருஷனும், பொண்டாட்டியுமா ஊருல இருக்க ஓடுறது, அது போடுறது, கத்துறது, முட்டுறதுக்கு எல்லாம் வைத்தியம் பார்த்து நல்லதொரு குடும்பம் எங்கள் வெட்டினரி ஆஸ்பத்திரின்னு வாழலாமில்ல.”


“பெரியவங்க இல்லாத வீட்டுக்கு மருமகளா போக மாட்டேன் மாறா…”


“ஆஆஆ… இதென்ன புதுசா ரீல் விடற மயூ?”


“ரீல் இல்ல எரும, அந்த மாப்பிள்ளையோட அம்மா சின்னதுலயே தவறிட்டாங்களாம்ல. அப்பா, இப்போ ரெண்டு வருஷம் முன்னயாம். வழி நடத்த அம்மா இல்லாம வளர்ந்தவரோட குணம் எப்படியோ! இப்போ தான் என்னென்னவோ கேள்விப்படறோமே! எனக்கு ரொம்ப பெரிய குடும்பம் வேணாம். அட்லீஸ்ட், ஒண்ணு ரெண்டு பெரியவங்களாவது வீட்ல இருக்கணும்னு ஆசை.”


ஓட்டை சட்டியில் தண்ணீர் பிடித்த கதையாக, மூளையை கசக்கி ஒரு காரணத்தை ஜோடித்து மறுக்கும் மகளையே பார்த்திருந்தவருக்கு அழகனின் பேச்சு உண்மை என்று நம்பிக்கை வர, ஓரோர் முறையும் ஏதோ சொத்தை காரணம் ஒன்றை வைத்து மகள் திருமணத்தை தட்டி கழிப்பது இப்போது தெளிவாக புரிய, அந்த நொடியே ஒரு முடிவுக்கு வந்தார் பூரணி.


“போனை அம்மாட்ட கொடு மயூ…”


பேசி கை மாறவும், “ம்மா, நான் வந்தப்புறம் வேற வரன் பார்க்கலாம். அவளை வற்புறுத்தாதீங்க.”


“பேசாம… மயூவை ஆத்தூருகே அழைச்சுட்டு போகலாம்னு நினைக்கறேன் மாறா.”


“ம்மா…” இங்கே மயூவும், அங்கே மாறனும் ஒரு சேர அழைத்தனர்.


“கத்தாம நான் சொல்றதை கேளுங்க. கார்கோடன் மாமா கூப்பிட்டிருந்தாக. அவருமே மினிஸ்டரை பார்த்து பேசினாராம். ட்ரான்ஸ்ஃபர் வரும் போல தெரியலைன்னார். என்னை தான் வைதாக. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி சுதந்திரமும், செல்லமும் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கேன்னு ஏசினாக. கொஞ்ச நாள் ஊர் பக்கம் போய் தங்கினா தான், உனக்கும் சரி மயூவுக்கும் சரி புத்தி வரும்.”


“ம்மா…” ஆட்சேப குரலை ஒருங்கே கொடுத்த மக்களை மேற்கொண்டு பேச விடாமல் “இவ இப்ப சொன்ன அதே காரணம் தான் மாறா. நம்ம வீட்லயும் என்னை தவிர்த்து மூத்த ஆளுக இல்ல. உங்க தாத்தா, பாட்டி இருந்திருந்தா, காலாகாலத்துல கால் கட்டு போட்டு, இந்நேரம் இவளுக்கு ரெண்டு பிள்ளை கூட பிறந்திருக்கும்.” மகள் போட்ட பந்தை அவள் பக்கமே திருப்பி விட்டவர், அதே மூச்சில்…


“பொறந்த மண்ணை ரொம்ப நேசிச்சார் உங்கப்பா. அங்க போய், குல தெய்வ கோயிலுல ஒரு பூசையை வெச்சுட்டு... நம்ம சனங்களோட ஒண்ணும் மண்ணுமா கொஞ்ச நாள் வாழ்ந்தா, உங்க ரெண்டு பேர் கல்யாணத்துல இருக்கற தடை நீங்கி நல்லதாவே நடக்கும்னு மனசுக்குள்ள தோணுது.”


“ம்மா… என்ன நீங்க? பொசுக்குன்னு அவசரப்பட்டு பெரிய முடிவா எடுக்கறீங்க?” மாறன் எகிற…


“இல்ல மாறா, அப்பா போனதுக்கு அப்புறம் ஊருக்குள்ள கால் வைக்கல நாம. எனக்கு என்னவோ நம்ம குலசாமி தான் கோபிச்சுட்டு இருக்காரோன்னு இருக்கு.”


“ம்மா… எந்த காலத்துல இருக்கீங்க?” மயூ கத்த துவங்க, ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருந்ததால்,


“காம் டவுன் மயூ! நான் பேசிக்கறேன் அம்மாட்ட…” மாறன் அதட்டல் போட்டான்.


“நான் வந்ததுக்கு அப்புறம் மூணு பேரும் ஊருக்கு போய், நீங்க சொன்னது போல பூசை வைப்போம். பிறகு கல்யாண வேலையை திரும்ப ஆரம்பிக்கலாம். எனக்குமே பொண்ணை பாருங்க. யாருக்கு அமையுதோ… அந்த கல்யாணத்தை முடிச்சுடலாம்.” மாறன் தன்மையாக எடுத்து சொல்ல…


“இல்ல மாறா… இந்த வேலை மாத்தல், நமக்கு சாமிட்ட இருந்து வந்திருக்க அழைப்பு. என்னை மறந்துட்டீங்கன்னு சாமி சொல்லி காட்டுறார். கொஞ்ச நாள் கிராமத்துல இருந்தா, நம்மாளுங்க மூலமா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல இடம் கூடி வரும்னு மனசுக்கு படுது. நான் என்னவோ உங்க சம்பளத்துக்கு ஆசைப்பட்டு கட்டி வைக்காம வீட்டோட வெச்சு இருக்கேன்னு ஒரு பேச்சு சொந்தக்காரங்க நடுவுல உலவுது. பெத்தவ ஏன் கல்யாணத்துக்கு அவசர படுறான்னு, நேர்ல ஜனங்களோட வம்பு பேச்சை அனுபவிச்சா தான் இவளுக்கு மட்டுமில்ல உனக்கும் புரிய வரும். அதனால, ஊருக்கு போறதா நான் முடிவே பண்ணிட்டேன்.”


மேலும் அரை மணி நேரம் மும்முனை வாதம் நடந்தும், பூரணி கிளி பிள்ளையாக சொன்னதை சொல்ல, மயூவுக்கு சுறுசுறுவென அழகனின் மேல கோபம் ராக்கெட் வேகத்துக்கு எகிறியது.


பூரணி அம்மாவின் முடிவு சரியா? அழகனின் முயற்சிக்கு அது கை தருமா?









2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 17, 2023
Rated 5 out of 5 stars.

சூப்பர் அடுத்த எபி எப்போ போடுவிங்க

Like

Guest
Jun 16, 2023
Rated 5 out of 5 stars.

goodgoing

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page