top of page

மஞ்சக்காட்டு மயிலே 20

மஞ்சக்காட்டு மயிலே 
தோகை 20 


சூரியன் விடியும் முன்னே கண் விழித்து விட்ட பூரணியின் முகத்தில் அத்தனை சஞ்சலம் குடியேறி இருந்தது. செல்ல மகளின் காதல் விஷயம் அறிந்த பின்னே, இத்தனை மாதங்களாக பலதை தனியே நெஞ்சுரத்தோடு சமாளித்திருந்தவரின் மனோதிடமும், தைரியமும் இந்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் முற்றிலும் குலைந்து விட்டதற்கு முழு காரணமும் உறவுகள் தாம். பேசியே அந்த மனுஷியை அத்தனை குழப்பி விட்டிருந்தனர்.


இத்தனை மாதமாக தினமும் அழகனோடு உரையாடுவதால் தெளிவாகவே இருந்த பூரணியின் பலம் முழுமையும் அழகனாகி போனதில், மகளின் காதல் கை கூட வேண்டும் என்ற ஒரே முனைப்பில் செயல்பட்டிருந்தவருக்கு நிதர்சனம் பெரிதாக உரைக்கவில்லை என்பதே நிஜம்.


திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டில் மகளின் வாழ்க்கை எங்கனம் இருக்கும் என்ற உள்ளக் கலக்கத்தை, அழகனின் குணமறிந்தவராக எப்படியும் மயூவுக்கு உறுதுணையாக மாப்பிள்ளை இருப்பார் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்தார். இப்போதோ, அதில் சஞ்சலம் பிறந்து விட்டதில் தவிக்கிறார்.


ஒவ்வொரு தடையாக அணுகி அதனை தைரியமாக எதிர்கொள்பவருக்கு இனி மகளின் சம்சாரம் குறித்த பயம் நெஞ்சை கவ்வி பிடிக்க, உறவுகள் அந்த அச்சத்துக்கு எண்ணெய் வார்த்தனர். 


ஆளாளுக்கு ‘இந்த விஷயத்தை முன்னவே எங்க காதுல போட்டிருந்தா, எங்காணும் நம்ம பசங்க வாழுற வெளிநாட்டுக்காணும் பிள்ளையை அனுப்பி வைச்சு காபந்து செஞ்சுருக்கலாம்.’ ‘இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு யோசிக்காம, வேறே சாதியில கட்டி கொடுத்தீங்களே, அவுக நம்ம பிள்ளையை நல்லா வெச்சு பார்த்துப்பாங்களா?’ ‘எந்த நம்பிக்கையில நீங்களா முடிவெடுத்தீங்க?’ ‘இனி அவங்களோட ஒண்ணும் மண்ணும்மா உங்களால தோள் அணைக்க முடியுமா? இல்ல உங்களால சகஜமா அங்கன போய் கை நனைக்க தான் முடியுமா?’ ‘அட நெனைச்சா உடனே நம்ம பிள்ளையை ஆசை தீர பார்த்துட்டு தான் வர முடியுமா?’ தினுசு தினுசாக வினாக்களை தொடுத்து பூரியை ஒரு வழியாக்கி விட்டனர்.


இப்போது வீட்டில் பூரி, மயூ, அழகன், மாறன் தவிர்த்து வேறு ஒருவரும் இல்லை. யோசனைகளால் எழுந்த பயப்பந்துகள் மனதை அழுத்தினாலும், கரங்கள் அதன் போக்கில் வேலையை செய்ய, “என்னத்தை, உங்க முகம் ஏன் சோர்ந்து கிடக்கு?” சரியாக நாடி பிடித்தான் சமையலறை வாயிலில் நின்றிருந்த அழகன்.


“மாப்பிள்ளை… எழுந்துட்டீங்களா? இதோ காப்பி கலக்கிட்டேன்.”


“அத்தை…” இந்த அழுத்த அழைப்பில் அழகனை பார்த்தவரின் கண்களில் லேசான நீர் படலம்.


“என்னாச்சு உங்களுக்கு? எப்போவும் சிரிச்ச முகமா எனர்ஜெட்டிக்கா இருக்கற என்னோட அத்தையை எங்க காணோம்?”


வாயை திறந்தால் நிச்சயமாக அழுவோம் என்றதால் மெளனமாக காப்பியை நீட்டினார் பூரணி. 


“நீங்க குடிக்கலையா?”


“நீங்க முதல்ல சாப்பிடுங்க மாப்பிள்ளை.”


“தினமும் காலையில திருவிழா ரேஞ்சுக்கு பாட்டு கச்சேரி நடத்துவங்க எங்கம்மான்னு மயில் சொல்லுவா. நீங்க என்னடான்னா, இப்படி டல்லா இருக்கீங்க? இப்போ எதுக்கு சோக கீதம் வாசிக்கறீங்க? ஒரு வேளை, ஐயோ என் மாப்பிள்ளை பாவம்னு எனக்காக விடுற கண்ணீரா இது அத்தை?”


கிலுக்கென பூரி சிரித்து விடவும், “ம்ம்ம்ம்ம் மாஆஆஆ…” மயூவின் அலறலில் தான், அவளும் அங்கே வந்து நிற்பதை இருவரும் கவனித்தனர். 


“போ நெத்தியில பொட்டு வை… தலையை சீவிட்டு, பூ வை… போ மயூ…”


“அநியாயம்மா, அவருக்கு மட்டும் காப்பி, எனக்கு வரிசையா உத்தரவா?” என்ற மகளை சங்கடமாக பார்த்தவரின் முகபாவம் கோபப் பார்வையாக இல்லாமல் கலக்கம் சுமந்த விழிகளாக இருக்கவும், மறுவார்த்தை பேசாமல், பொட்டிட்டு, பூவை சூடி கொள்ள அறைக்குள் புகுந்தாள் மயூரி.


“என்னத்தை? சொன்னா தானே எனக்கும் என்ன செய்யன்னு யோசிக்க முடியும்.” 


இத்தனை அனுசரணையான மாப்பிள்ளையை முழுதாக தானும் உறவாய் ஏற்க நினைத்தாலும், குறுக்கே வரும் சாதி என்ற வார்த்தையை எண்ணி பெருமூச்சை விட்ட பூரணி, “நானே டவுன்ல வாக்கப்பட்டவ. மாமியார், நாத்தனார்னு நெருங்கின புகுந்த வீட்டு சொந்தங்கள் இல்லாததால, எனக்கு உறவுகளை சமாளிக்கற அவசியமும் அனுபவமும் அவ்வளவா இல்ல. மயூவை செல்லமா வளர்த்துட்டேன். அப்படி வளர்ந்தவ, அங்க உங்க வீட்ல, அதுவும் கிராமத்து பழக்கவழக்கம் அதிகம் அறியாதவ. எப்படி இருப்பாளோன்னு உள்ளுக்குள்ள உதறலா இருக்கு மாப்பிள்ளை.” 


“நான் இருக்கேன்… பார்த்துக்கறேன் அத்தை.” ஆறுதலளித்தான் அழகன்.


“நீங்க பார்த்துப்பீங்க தான் மாப்பிள்ளை. ஆனா, 24 மணி நேரமும் உங்களால வீட்லயே இருக்க முடியுமா? கல்யாணம்னு முடிவான நாளா ‘மயூ, அங்க அப்படி இரு, இப்படி இரு, அட்ஜஸ்ட் பண்ணி போ’ன்னு நானும் என்னென்னவோ புத்தி சொல்லிட்டேன். ஒரு பக்கம் இதையெல்லாம் செஞ்சாலும், உங்க வீட்டு நடைமுறைங்க வேற. கல்யாணத்துக்கு பிறகு பொண்ணுங்க குடும்ப பொறுப்பை ஏத்துக்கறது சாதாரண விஷயமா தோணினாலும், ரெண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள நிறைய மாறுபாடுகளால என் செல்ல மகளோட துடுக்குத்தனமும், இயல்பான குணமும் மாறி போயிடுமோன்னு கவலையா இருக்கு.” 


“நீங்க அனாவசியமா பயப்படறீங்கன்னு சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனா, என்னால ஒரேடியா அப்படி சொல்ல முடியாது அத்தை. மயில், செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். இங்க, உங்களோட எப்படி இருப்பாளோ அப்படி அங்கேயும் அம்மாகிட்ட இருக்கணும். வேற எதுவும் அவ மாற வேணாம். அவங்கவங்க குண இயல்பை ரெண்டு பேரும் உள்ளபடி புரிஞ்சுக்கிட்டா போதும். என்ன, ஆரம்பத்துல கொஞ்சம் முன்ன பின்ன புரிதல் இல்லாததால கசப்பு வரலாம். தன்னால ரெண்டு பேரும் ஒரு நடு நிலைக்கு வந்துடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அத்தை.”


“அவ விரும்பின வாழ்க்கை அமையணும்னு அவசரப்பட்ட நான், பொறுப்பான அம்மாவா இருந்திருந்தா… நடைமுறை சிக்கலை யோசிச்சு, வேணாம் மயூ உனக்கு இந்த காதல்னு புத்தி சொல்லி இருக்கணும்ல?” என்றவரின் தோளை தாங்கி…


“பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியலைன்னாலும், அவளுக்கு பிடிக்கற வரனை மட்டுமே கட்டி தரணும்னு, அவ விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்த உங்களை உண்மையிலேயே பாராட்ட வார்த்தையே இல்ல அத்தை. வேத்து சாதியில கல்யாணம்னு ஏத்துக்க முடியாம நம்மை சேர்ந்தவங்க கண்டதையும் பேசி, கலங்கடிக்கலாம்.”


“இருபத்தியோராம் நூற்றாண்டுல சந்திரனுக்கு ராக்கெட் விடறது முதல் டிரைவர் இல்லாத காருன்னு என்னென்னமோ முன்னேற்றம் வந்தாச்சு. அதையெல்லாம் மறுக்கமா ஏத்துக்கிட்டவங்க, மனுஷனுக்கு மனுஷன் இடையே ஆதி காலம் தொட்டு விதைச்ச துவேஷத்தை மட்டும் விட்டொழிக்கற மனோபாவத்தை வளர்த்துக்காம, நம்மை மாடர்ன்னு சொல்லிட்டு திரியறோம்.” 


“ஏதோ நானும் அரசியல்ல இருக்கேன்னு சொல்லிக்கறதை விட, நான் முன்னேற்ற நினைக்கற இந்த சமுதாயத்துக்கு முன் மாதிரியா, இதுல வர வேண்டிய மாற்றங்களை நானுமே மனசார ஏற்று நடந்தேன்னு இருக்கறதுல தான் எனக்கு சந்தோஷம். நடைமுறை சிக்கல்களையும் மீறி பயப்படாம நீங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சதால தான் என்னளவில் இதெல்லாம் சாத்தியமாச்சு.” 


“உங்களை போல பெற்றோர் தான் நம்ம ஊருக்கு தேவை. ‘பெத்தவ எனக்கு தெரியாதா? உனக்கு நல்லது மட்டுமே செய்வேன்’னு பொண்ணு மனசை கொன்னு, ஒரு திருமண வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுறவங்க தான் இங்க அதிகமா இருக்காங்க. அதுக்கும் மேல கண்ணே மணியேன்னு வளர்த்த பிள்ளையை ஆணவ கொலை பண்ற கல்நெஞ்சு கொண்டவங்க மத்தியில, விதிவிலக்கா இருக்க உங்களை போலவங்க ஜாஸ்தியானா தான் ஜாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் படிப்படியா கொறைஞ்சு… அடியோடு ஒழியும்.” 


கைதட்டல் சத்தம் கேட்டதில் இருவரும் நடப்புக்கு வர, அண்ணனும், தங்கையும் தான் கரவொலிக்கு காரணம். விசிலும் சேர்த்து அடித்தான் மாறன்.  


“அப்பப்ப வீட்ல இருக்கீங்கன்னு இனி உங்களுக்கு ஞாபகப்படுத்தணும் போல நான். இல்லைன்னா… கட்சி மீட்டிங் நினைப்புல பேசிட்டே போவீங்க போல!” மயூ வாரி விட…


“சும்மா இரு மயூ. பாஸ் வாங்கி, ஒரு நாள் சட்டசபையில அத்தான் பேசறதை நேர்ல கேக்கணும்னு அம்மா சொல்லிட்டிருந்தாங்க. அதுக்கு அவசியமே இல்லாம இங்கேயே பின்னிட்டார்.” மாறன் பாராட்ட,


“நான் பொறுப்பான அம்மாவா சீரியஸா பேச பாக்குறேன். நீங்க குறுக்க வந்து கேலி பேசினா, நான் எப்போடா நல்ல அம்மாவா ஆகுறது?” என்ற மாமியாரின் கேள்வியில், 


கலகலவென வெடித்து சிரித்த அழகன், “மை ஸ்வீட் அத்தை…” என சொல்லி சிலாகித்தான்.   


“பாருங்க மாப்பிள்ளை… நானே விளையாட்டுத்தனமா நடக்கறேன். இதுல உங்க அம்மா… அவங்களை சம்மந்தின்னு சொல்ல கூட பயமா இருக்கு. அவங்க எல்லாம் ஊர் பழக்கவழக்கத்துல ஊறினவங்க. அதை நினைச்சா மனசை அழுத்துது. நீங்க என்ன தான் சமாதானம் சொன்னாலும், எல்லாரும் சொல்றதை போல, பொண்ணை கட்டி கொடுத்த வீட்டுக்கு போக கூட முடியாம நிக்கறோமேன்னு நினைக்கும் போது, அவசரப்பட்டுட்டேனோன்னு பதட்டமா இருக்கு.”  மீண்டும் புலம்பினார்.


“நீங்க வீணா டென்ஷனாகி, மயூவை பயமுறுத்தறீங்க ம்மா. அவ புத்திசாலி, எல்லாத்தையும் சுலபமா டீல் செஞ்சுப்பா. எல்லோரும் மனுஷன் தானே?” 


அவ்வப்போது அவர்களின் பட்டணத்து வளர்ப்பை பறை சாற்றிடுவர் மயூவும், மாறனும். இப்போதும் அப்படியொரு மனநிலையில் பேசும் மகனை முறைத்த பூரி, “ரெண்டு நாளா எல்லாரும் விவாதம் பண்றதை கேட்டப்புறமும் எப்படி மாறா பயப்படாம இருக்க?”


“ம்மா, அத்தான் பார்த்துப்பார். ஆரம்பத்துல எனக்கும் செம டென்ஷன். அதான் இவர் எல்லாத்தையும் பக்காவா பிளான் செஞ்சு பண்றாரே. அப்புறமும் சும்மா, ஏதானும் சொல்லி, அவளை வீணா ஏன் குழப்பணும்? போங்கம்மா, சூடா காப்பி குடுங்க…” 


“மயூ, அனாவசிய கவலையை தூக்கி போடு. இந்த பீரியட் ரொம்ப ப்ரிஷியஸ், மாப்பிள்ளையோட சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல மத்ததை மனசுல போட்டு உழட்டாதே” என்ற அண்ணனின் தோளில் சாய்ந்த மையூவின் முகத்தில் பூரிப்புக்கு குறைவில்லை.


“அத்தான், நாங்க இன்னைக்கு நைட் ட்ரெயினுக்கு சென்னை கிளம்பறோம்.” 


“என்ன அவசரம்டா அண்ணா?”


“வேலைக்கு போகணும்… எத்தனை நாளுக்கு வர்க் ஃப்ரம் ஹோம்னு இருக்க?”


“நீ கிளம்பு, அம்மாவை ஏன் கூப்பிட்டுக்கிட்டு போற?”


“ஹலோ, இத்தனை மாசம் நான் ரூட் க்ளியராக காத்திருந்தேன். இவங்க அங்க வந்து எனக்கு பொண்ணு பார்க்க வேணாம்?”


“டேய், நீயா ஒரு பொண்ணை பார்த்துக்காம, அம்மா பார்க்கணும்னு சொல்றியே, வெக்கமா இல்ல… இந்த வீட்டு பையனாடா நீ?” அவ்வளவு நேர கலக்கம் மறைந்து, பழைய பல்லவியை பாடிய பூரியை முறைத்து,


“பூரி ரிட்டர்ன்ஸ்!! இத்தனை நேரம் மிரண்டு புலம்பிட்டு, இப்போ பேச்சை பாரு! ஆண்டவா, அங்கங்க அரேஞ்ட் மேரேஜ் தான் பண்ணனும்னு சொல்ற அம்மா இருக்க, எனக்கு ஏன் இந்த சோதனை?” இவர்களின் சம்பாஷணையை கேட்டு அடக்க முடியாமல் செந்தூர்அழகன் சிரித்து விட, 


“அத்தான், உங்களுக்கும் என்னை பார்த்தா கேலியா போச்சுல்ல?”


“அத்தை சொல்றது சரி தானே மாறா! ஆமா, நீ காலேஜ்ல ஒரு பொண்ணையுமா பார்க்கலை?”


“அப்படி கேளுங்க மாப்பிள்ளை!”


“ஆளை விடுங்க சாமி… நான் சாமியாரா போறேன்.”


“நீ அதுக்கும் சரி வர மாட்டே மகனே” என்ற அம்மாவை, அழுது விடுபவன் போல பார்த்தான் மாறன்.


இப்படியே கலகலப்பாக காலை டிஃபன் முடிய, “குல தெய்வ கோவிலுக்கு போகணும். சம்பந்தி வீட்ல எல்லோரும் வரணும். இப்ப அதுக்கு சந்தர்ப்பம் இல்ல. ஒரு மாசம் இவனோட சென்னை போயிட்டு, அப்புறம் திரும்ப இங்க வந்து பூஜை வெச்சுப்போம்.”


“சரிங்கத்தை…” அழகன் ஆமோதிக்க… அப்போது உறவு தலைகள் அங்கே வந்து சேர்ந்தனர். 


“நாங்க இப்போவே பிள்ளைங்க வீடுங்களுக்கு கிளம்பறோம். ஐயா உத்தரவு தரணும்.” கார்கோடன் அனைவர் சார்பில் பேச… 


சௌந்தருக்கு அழைத்த அழகன், விஷயத்தை கூறி… எல்லோரும் ஊர் எல்லையை கடக்கும் வரை எந்த பிரச்சனையும் நிகழாமல் பார்த்து கொள்ள பணித்தான். 


அவர்கள் வந்ததில், உறவு பெண்கள் மீண்டும் பூரியின் செவியை ஓட்டையாக்கியதில் தெளிந்தவர், விசனமாக மயூவுக்கு மேலும் சில பல அறிவுரை கொடுத்து பின் மகளை கணவனோடு அவளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 


****************************************


இங்கே பெரிய வீட்டினுள் நுழைந்தவர்களை எதிர் கொண்ட அரசி, “நாளன்னைக்கு அங்க நம்ம வீட்டு விருந்துக்கு வந்துடுங்க. நைட் நீங்க அங்க தான் தங்கணும். முடிஞ்சா அம்மாவை அழைச்சுட்டு வா அழகா.”


“சொன்னேனே அரசி, இராத் தங்கறது கஷ்டம். இன்னொரு முறை வரப்ப ரெண்டு நாள் இருந்துட்டு வரோம். அம்மாவை கிளப்ப முயற்சி பண்றேன்.”


“சரி அழகா… அப்ப, சீக்கிரம் கிளம்பி வாங்க, வரேன் மயூ…” 


“இன்னைக்கே கிளம்பறீங்களா அக்கா?”


“மைனி,” “மதனி” அக்காவும் தம்பியும் திருத்த, “அண்ணி… அண்ணின்னே கூப்பிடறேன்…” சற்று திணறியவளை “உன் விருப்பம் மையூ. பசங்க ரெண்டும் ஸ்கூலுக்கு லீவ் போட்டுருக்காங்க. நாளைக்காவது போகணும்ல, வரோம் கண்ணு…”


“சரிங்கண்ணி…” 


அதன் பின் அரசி குடும்பத்தினரை வழி அனுப்பி வைத்தனர். மகள் கிளம்பியதும் உள்ளே சென்று முடங்கி கொண்டார் பரமு. 


“இன்னைக்கு மதியம் அம்மு அக்கா வீட்டு விருந்துக்கு நாம போகணும். நான் கொஞ்ச நேரம் மத்த வேலை பார்க்கட்டா?”          


இந்த சில நாட்களாக அழகனை அழுத்தும் பணி சுமையை அறிந்தவளாக, “நீங்க பாருங்க,” என்றவளின் கன்னத்தை தட்டி கொடுத்து, “தேங்க்ஸ் என் செல்ல மயில்,” என வீட்டிலிருந்த அலுவலக அறைக்குள் நுழைந்தான் அழகன்.


மெல்ல வீட்டின் ஒவ்வொரு அறையாக சுற்றி வந்த மையூவுக்கு, அங்கங்கே வேலை செய்வோர் வணக்கம் வைத்தது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. இதற்கு பழகி கொள்ள வேண்டும் போலவே என்ற யோசனையோடு பின் கட்டில் நின்று இருந்த போது, கன்று குட்டியின் “ம்மா..” என்ற மென் குரல் செவியில் விழவும், பின் வாசலை தாண்டி சத்தம் வந்த பக்கம் போனவளுக்கு அங்கே ஒரு தொழுவம் தெரிய, அதில் இருந்த பசுக்களை பார்வையிட ஆர்வமாக நெருங்கினாள்.


அவளுக்கு விருப்பமான, பழக்கமான விஷயம். ஆக, அங்கே பசுக்களை பார்த்து கொள்ளும் அய்யாகண்ணுவிடம், என்ன ஏதென்று விவரங்களை கேட்டு கொண்டாள்.


“சின்னம்மா, ஆட்டு மந்தையை மேற்கால மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு போயிருக்கா எம்பொஞ்சாதி.” 


அதன் விவரங்களையும் கேட்டறிந்தாள். “என்னண்ணி இங்க இருக்கீங்க?” சௌந்தரின் கேள்வியில், திரும்பியவள்… 


“சும்மா ஜெனரல் நாலெட்ஜுக்கு கொளுந்தனாரே…” சிரித்தவள், கிளம்பிய உறவினர்கள் பற்றி விசாரித்து, சௌந்தரின் பதிலில் திருப்தியானாள்.  


“அண்ணா கூப்பிட்டார் அண்ணி. உங்க போன் எடுக்கலைன்னு என்னை அனுப்பினார்.”


“ஹால்ல விட்டுட்டேன் போல, வரேன்…” என அய்யாக்கண்ணுவிடம் சொல்லி கொண்டு உள்ளே விரைந்தாள்.


அலுவலக அறைக்குள் நுழைந்தவளிடம், “மயில்… சென்டருக்கு டாக்டர். தேவசகாயத்தை டைரக்டரா போட்டிருக்கோம். அவர் இங்க நெல்லை பக்கத்து ஆளு. ரிட்டையராக ஒரு வருஷம் தான் இருக்கு. இந்த போஸ்டிங் போட முடியுமான்னு கேட்டார்.”


“எங்க எஸ்.ஆர். சாரோட க்ளோஸ் ஃபிரெண்ட் தான் சகாயம் சார். திருவண்ணாமலைக்கு வந்து எங்க சாரோட வேலையெல்லாம் நேர்ல பார்த்து, அவங்க டிஸ்கஸ் செய்வாங்க. நல்ல டைப்…”


“தெரியும், எஸ். ஆர் சார் தான் இவரை கை காட்டினார். நீ என்னைக்கு டியூட்டியில சேர போற?” அதன் பின் புதிதாக மணமான தம்பதியர் அந்த புது ஆய்வகம், மயூவின் வேலை குறித்தே பேச, கேட்டிருந்த சௌந்தருக்கு… ‘என்னடா நடக்குது இங்க, இவங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?’ என்று தோன்றியது.


பத்து நிமிடத்துக்கும் மேலாக அழகனும், மையூவும் பணி பற்றிய விவாதத்தில் இருக்க, தொண்டையை செருமினான் சௌந்தர்.


“என்னடா?”


“உம்… ஏற்கனவே அண்ணி அங்க வீட்டு பின்ன கட்டி வெச்சுருக்கற பசுக்களை தான் பார்வையிட்டுட்டு இருந்தாங்க. நீங்க என்னடான்னா லீவ் நாளுல வேலை பத்தி பேசுறீங்க. கொஞ்சம் கூட நல்லா இல்ல. ஒழுங்கா ரெண்டு பேரும் எங்கேயாவது ஹனிமூன் கிளம்புற வழியை பாருங்க ண்ணா.”


“வேணாம் கொளுந்தனாரே…” அழகனுக்கு பதில் மயூ அவசரமாக பதில் தர,


“வந்திருக்கீங்க பாருங்க… எங்கண்ணனுக்கு ஏத்த ஜோடியா!” 


“டேய்… ஊர்ல நெலமை என்னன்னே தெரியலை. எல்லாரும் அமைதியா போறது போல இருக்கு. மதியம் விருந்துங்கற பேர்ல… நேத்து விட்ட இடத்துல இருந்து பஞ்சாயத்து தொடர போகுது. இப்போ எங்கேயும் நான் வெளியூர் போற எண்ணம் இல்ல.” 


“ஆமா… என்னாகுமோன்னு திக் திக்குன்னு தான் இருக்கு.”


“மயில்… அண்ணி…” இரு ஆண்களும் குரல் தர… கலங்கிய விழிகளை மறைக்க பாடுபட்ட மயூரியிடம், “அண்ணி, எல்லா பாதுகாப்பு ஏற்பாடும் பக்கவா இருக்கு. நான் பார்த்துக்க மாட்டேன்னா அண்ணா?” அழகனிடம் முடித்தான் சௌந்தர்.


“இல்லடா… இப்பத்திக்கு பஞ்சாயத்து ஓயாது. அரசி அக்கா வீட்டு விருந்துக்கு, குலசாமி கோயில் படையல்னு இங்கேயும் காரியம் கிடக்கே. இப்போவே போகணும்னு அவசியம் என்ன?” 


அதன் பின், “நேரமாச்சு கிளம்பு மயில்… அம்மு அக்கா சீக்கிரமே வர சொன்னாங்க. அம்மு கூடவே இரு, முக்கியமா வெட்டு குத்துன்னு பேச்சு காதுல விழுந்தாலும் நீ கண்டுக்காத… நாங்க பார்த்துக்கறோம். போ…” 


வெறுமே தலையை அசைத்த மயூரிக்கு, சிவபாதமே கண் முன் ப்ரசன்னமானார். இதையெல்லாம் யோசித்தல்லவா பல வருடங்கள் முன்பே அப்பா அத்தனை அஞ்சி நடுங்கினார். விவரமும், பக்குவமும் இல்லாத அன்று, அவரின் அச்சம் அனாவசியம் என்று எத்தனை வாக்குவாதம் செய்தாள். 


ஆனால், வருடங்கள் கடந்தும், படிப்பறிவு எவ்வளவோ முன்னேறியும், மக்கள் மனங்கள் இன்னமும் விசாலம் அடையாததை எண்ணி பெருமூச்சை மட்டுமே மயூவால் விட முடிந்தது. 


அமுதா, கதிர் மற்றும் அவரின் அப்பா வேலப்பன் மற்றும் அம்மா காவேரி, இவர்களின் மூத்த மகன் அன்பழகன், அவரின் மனைவி கல்யாணி, ஒரே மகள் ஓவியா, என சக குடும்பமும் வாசலில் எதிர்கொண்டு இன்முகமாக மணமக்களை வரவேற்றனர். 


அதிலும், அம்முவின் மாமியார், கரம் பிடித்து, “வா கண்ணு,” என வாஞ்சையாக உள்ளே அழைத்து போனது, மையூவால் நம்ப முடியவில்லை. இது போல ஒரு உள்ளன்பான வரவேற்பை பரமு தரவில்லை என்பதும் மனதை தைத்தது. 


இங்கேயும் வீடு நிறைய உறவு கூட்டம் கூடி இருந்ததை கண்டு, “அரசி அண்ணி, இருந்துட்டு போயிருக்கலாம்…” மயூ ஆதங்கமாய் தெரிவிக்கவும்,


காவேரி அம்மா, “சங்கர் தம்பி, இத்தனை நேரம் அமைதியா போனதே பெருசு… தங்கிட்டாலும்…” என நொடித்து கொண்டார்.


அதன் பின் ஆளாளுக்கு தான் இன்னார், இப்படி உறவு… ஏதோ சிறு பிராயத்து கதைகள், ஊர் வம்பு என கொஞ்ச நேரம் மயூவுக்கு பொழுது போனது. அவர்களின் சகஜ பாவத்தில், ‘நிஜமா இவங்களை பார்த்தா அம்மா பயப்படறாங்க? இவர் என்னடானா இத்தனை பாதுகாப்பு ஏற்பாடு செய்தார்!’ என்ற குழப்பமும் எழுந்தது. அழகான பூவில் நாகம் ஒளிந்திருப்பது போல வெளிப்பார்வைக்கு நல்லவர்களின் மனம் அழுக்கானது என்பது புரிய மையூவுக்கு போதிய அனுபவம் இல்லை என்பதே சரி. 


“வா மயூ…” என அழகனோடு ஒன்றாக உட்கார வைத்து வாழையிலை அசைவ விருந்து படைத்தனர். 


“போதும் அண்ணா…” இன்னொரு மீன் வறுவலை வைக்க முயன்ற கதிரின் அண்ணன் அன்புவிடம் மறுத்து, “ப்ளீஸ்…” என கெஞ்சிய பின்பே மயூவை விட்டனர்.


“இந்த ரேஞ்சுல போனா, ஒரே வாரத்துல காத்து ஊதின பலூனா போயிடுவேன்,” கணவனின் காதில் கிசுகிசுத்தாள். 


“எல்லாத்துக்கும் சேர்த்து நைட் கச்சேரி வெச்சுக்கலாம், வெயிட்டே போட மாட்ட…” முகம் மாறாமல் ரகசிய குரலில் ஒலித்த கணவனின் சரச பேச்சில், சட்டென செவ்வானமாக பெண்ணவள் முகம் சிவந்திட, இவர்களை கவனிப்பதே வேலையாக சுற்றிய இளமை பட்டாளம், இவர்களை காட்டி தமக்குள் பேசி சிரிக்க, மீசைக்கிடையில் வெட்க சிரிப்பை மறைக்க சிரமப்பட்ட தம்பியின் பூரித்த முகம் கண்ட அமுதாவுக்கு மனம் நிறைந்தது. 


கை கழுவ போன இடத்தில்,“பப்லிக்ல என்ன பேசன்னு இல்லையா உங்களுக்கு?” எல்லோர் முன்னும் முகம் சிவந்ததில் மயூ யாரையும் பார்க்கவே சங்கோஜப்பட்டு கணவனை கடிய, 


“ஒரு ஃப்ளோல வந்துடுச்சு மயில்… அது வேற, இந்த பட்டு புடவை, மல்லி வாசம், உன் வளையல் சத்தமெல்லாம் மாமனை டெம்ப்ட் பண்ணிடுச்சு. நைட் விட்டதுல இருந்து கண்டினியூ செய்யற மூட்ல இருக்கேன் இப்போ.” 


எங்கே நின்று கொண்டு என்ன பேசுகிறான் என்று “போங்க…” என்றவளின் கன்னங்கள் செவ்வானமாக காட்சி தர, அங்கிருந்து சிட்டாக நகர்ந்தாள்.


இனியாவும், நிலாவும் அத்தையை தங்கள் அறைக்கு அழைத்து சென்று, அங்கே தம் புத்தகங்கள், உடைகள், கை வேலைப்பாடுகளை காட்டி, மாமன் குறித்த சுவாரசிய கதைகள் பேசி, இப்படி அடுத்த சில மணி நேரம் இனிதே போனது. 


கல்லூரி மாணவியான ஓவியாவோடும் கொஞ்ச நேரம் அரட்டை முடிய, புதுமண தம்பதியரை ஒன்றாக அமர வைத்து அவர்கள் பரிசாக மோதிரம், செயின் என கொடுத்து அப்போதே அழகனை மயூவுக்கும், மயூவை அழகனுக்கும் பூட்ட செய்து, அதுவும் கேலியும் சிரிப்புமாக நடந்தேறியது. 


அனைவரிடமும் இன்முகமாக விடைபெற்று வீடு திரும்பி, மாடி படியேற போன மகனை நிறுத்தினார் பரமு. அவர் அமுதா வீட்டு விருந்துக்கு வர மறுத்து விட்டதில், அப்போதே இங்கே விருந்து சாப்பாட்டை அனுப்பி வைத்திருந்த மூத்த மகள், தம்பியின் நிறைவான புன்னகை நிறைந்த முகத்தை பற்றியும், மயூ அவர்களோடு அவ்வளவு இயல்பாக ஒன்றியதை சொல்லி சிலாகித்திருந்தாள்.


“என்னம்மா?” 


“இந்தா தைலா… சுறுசுறுப்பே இல்லடி உனக்கு…” உள் நோக்கி குரல் தந்தவர், “கிழக்க பார்த்து சோடியா நில்லுங்க ராசா” என்ற அம்மாவின் பேச்சில், மாடி செல்ல முதல் படியில் நின்றிருந்த மயூவை, வாவென கண்ணால் செய்கை செய்து அழைத்தான் அழகன்.


இருவரும் நிற்கவும், “ஊர்க்காரன் கண்ணு மொத்தமும் என் பிள்ள மேல தான்…” உப்பு மிளகாய் வைத்து திருஷ்டி கழித்தவர், “இப்போ போ அழகா…” என அனுப்பினார். 


என்ன தான் இந்த இரு நாட்களாக இல்லையில்லை கல்யாண பெண் இவள் என்று தெரிந்தது முதல் இந்த நிமிடம் வரை இருவரிடையேயும் பேச்சு வார்த்தை அறவே இல்லை என்றாலும், முகம் கொடுத்து நடக்கவில்லை என்றாலும், பரமுவின் இது போன்ற அக்கறை செயல்பாடுகளை மயூவும் கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். 


இப்போதைய பரமுவின் செயலை யோசித்து கொண்டே மேலே ஏறிய மயூவுக்கு கடைசி படியில் கால் வைத்தது மட்டும் தான் தெரியும். அப்படியே திடீரென அவள் அந்தரத்தில் இருக்க, அழகன் தன்னை தூக்கி இருப்பது புரிய, “ஹே…” என்றவள் கரம் அவன் கழுத்தை சுற்ற, “மல்லி மல்லி செண்டு மல்லி ஆளை அசத்துதடி” என பாடி கொண்டே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.


“அழுக்கு பையா… வேணாம்… நாம அம்மா வீட்டுக்கு போகணும்.”


“போலாம்… நேரம் இருக்கு.” என்றவன் அவளை விட்ட போதோ, பூரியே அழைப்பை விடுத்து விட்டார். 


“உங்களை…” தலைகாணியை அவன் மீது வீசியவள், அவசரமாக குளித்து கிளம்பி போனார்கள்.


“நான் இருக்கேன் அத்தை…” மீண்டும் உறுதியளித்தவன், தக்க பாதுகாப்போடு அவன் காரிலேயே இருவரையும் நெல்லை ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தான்.


கார் மறைந்த பின்னும் கையசைத்து கொண்டிருக்கும் மயூவை, ஆறுதலாக தோள் அணைத்தவன், அவள் கரத்தை இறக்கி விட்டு, “சாரி மயூ, நாம ரயில்வே ஸ்டேஷன் போனா, வீணா கூட்டம் கூடிடும். அதான் இங்கிருந்தே வழியனுப்பறோம்.” என்றவனின் தோள் சாய்ந்து, கண்ணீர் விட்டவளை, பார்த்து… 


“ஹே அழுமூஞ்சி… நாம இங்க ஃபிளைட் ஏறினா சென்னையில நிமிஷமா இறங்கிடலாம். அதனால எப்போ வேணும்னாலும் நீ அத்தையையும், மாறனையும் பார்க்கலாம். அதுவும் இல்லாம மாறன் கல்யாணம் வரை தான் அத்தை அங்க இருப்பாங்க. அப்புறம் இங்க நம்ம ஊர்ல தானே, இருக்க போறதா சொல்லிட்டு இருக்காங்க. இதுக்கு போய் யாரும் இப்படி அழுவங்களா?”


“ஏன் சொல்ல மாட்டீங்க? என்னென்னமோ மாற்றம் வருது, இந்த ஆம்பளைங்களை மாமியார் வீட்டுக்கு அனுப்பறது போல ஒரு புரட்சி வரலையே.” குறையாய் அங்கலாய்த்தவளை கண்டு முறுவலித்தவன்,


“அம்மிணி, எல்லா மாப்பிள்ளையும் ஜம்முனு வந்து உக்காந்து ராஜாவா மாமியார் வீட்டு உபசாரணையை அனுபவிப்பானுங்க. அதனால தான் நம்மாளுங்க உஷாரா இப்படி சிஸ்டம் வெச்சுட்டாங்க.”


“மாறன் கல்யாணம் கூடிய சீக்கிரம் கை கூடிடும். என்னோட அப்பப்ப நீயும் சென்னைக்கு வா. சிம்பிள் விஷயத்துக்கு அப்செட் ஆகிடுற,” அவள் கண்களை துடைத்தவன், அப்படியே தோப்பு வீட்டு பக்கம் நடமாட, 


“இங்க எங்க போறீங்க அதுவும் இருட்டுல? காரையும் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டீங்களே, தோப்புல உங்க பைக் நிக்குதோ?”


“இன்னைக்கு நைட் இங்க தோப்பு வீட்ல தான் தங்கறோம்.” 


“இப்ப சொல்றீங்க… எனக்கு ட்ரெஸ் எடுக்கணும்… இருங்க…” 


“சுஷ்… அதெல்லாம் அப்பவே எடுத்தாச்சு.” 


“எப்போ…” 


“காலையிலேயே ஒரு சூட்கேஸ்ஸை அத்தை பேக் செஞ்சுட்டாங்க. காலையில வந்த கார் டிக்கியில இருக்கு. அந்த கார் தோப்புக்குள்ள தான் நிக்குது.” 


“கேடி… இன்னும் என்னென்னலாம் அம்மா கூட கூட்டு சேர்ந்து செஞ்சுருக்கீங்க?” 


“அதெல்லாம் கம்பெனி ரகசியம், ஒண்ணொண்ணா தெரிஞ்சுக்கோ.” என்றவன், வீட்டை அடையவும், 


“தாத்தா…” வாசலின் இரு பக்கமும் பார்த்தவாறு குரல் தர, பக்கவாட்டில் இருந்து ஊமை தாத்தா வந்து நின்றார். 


“பசங்களை அவுத்து விட்டுடுங்க… இனி நாங்க பார்த்துக்கறோம்…” என்றிட… சரி என்பதாக தலையசைத்தவர் நகர்ந்தார். 


“யாரு பசங்க?” 


“ம்ம்… வேட்டையன், காளி, வில்லா, பீமா, சுப்புணி, காலான்னு நாம இங்க வளர்க்கிற ராஜபாளையம், சிப்பிபாறை வகை நாய்ங்க…” 


அதிசயித்து கண்ணை விரித்தவள், “சத்தமே கேட்டதில்லையே…” 


“அங்க தோப்பு உள்ள இவங்களுக்கு பெரிய ஷெட் இருக்கு. பொழுது சாய்ஞ்சதும் ஊமையன் தாத்தா போய், திறந்து விடுவார். நைட் முழுசும் கால் போன போக்குல சுத்திட்டே காவல் இருப்பானுங்க. இங்க மட்டுமில்ல மில், ஃபேக்டரி எல்லா இடங்களையும் இப்படி நைட் காவலுக்குன்னே நாம நிறைய நாய்ங்க வளர்க்கிறோம்.”


“வீட்ல அத்தனை பசுங்க, ஆட்டு மந்தை… கோழிங்க வேற, இப்போ இவங்களையும் சேர்த்து பார்த்துக்கவே உங்களுக்கு ஒரு டாக்டர் தேவைப் படுமே!”


“உன் ஸ்பெஷாலிட்டின்ன உடனே அதுல இறங்கிட்ட பாரு…” என்றவன்,  வீட்டின் வாசலின் உள்ளே நுழையும் முன் மீண்டும் மனையாளை ஏந்திக் கொண்டான்.


“சும்மா பொசுக்கு பொசுக்குன்னு இதென்ன தூக்கறீங்க?” கொஞ்சலாய் கேட்ட மனையாட்டியின் அக்குரலில் கிளர்ந்தவன் இப்போது கன்னத்தில் முத்தமிட்டவாறே, வீட்டின் உள்ளே நுழைந்து, வரவேற்பறையில் ஒரு சுற்று சுற்றிய பின்பே அவளை இறக்கி விட்டான். 


அன்று அவன் அறையிலும் இதே போல செய்தது நெஞ்சிலாட, முகம் நிமிர்த்தி கண்ணாளனை நோக்கியவள், அவனுமே விழி அசைக்காது தன்னை பார்ப்பதை கண்டு, “என்னவாம் உங்களுக்கு?” ஹஸ்கி குரலில் கேட்க,


“எத்தனை வருஷ கனவு, இப்படி என் கைல உன்னை தூக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள நுழையணும்னு” என்றவன், அவளை இறுக அணைத்து அந்த நொடிகளை அனுபவித்தான். 


“அழகு… விடுங்க…” அவனின் இறுக்கத்தில் இவள் தான் விட சொல்லி கேட்க வேண்டி இருந்தது. 


கண், கன்னம், இதழ் என விடாது முத்தமிட்டவனின் தாக்குதலில், அணைப்பில்… அவனின் உணர்வுகள் மங்கைக்கும் புரிந்ததில், இசைந்து கொடுத்தாள்.


“இன்னைக்கு தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இந்த தோப்பு… இந்த வீடு… இங்க நாம இப்படி ஒண்ணா இருக்கற இந்த நிமிஷத்துக்காக ஏங்கி இருக்கிறேன். இனி இதான் நம்மோட ராஜாங்கம். இங்க நீயும் நானும் மட்டும் தான். வேறே யாரும் நமக்கிடையே இல்ல. எத்தனையோ நைட், மேலே பால்கனியில் ஒத்தையில நின்னு, நீ என்ன செஞ்சுட்டு இருப்ப? என்னைக்காவது உன்னை ஊர்ல, பக்கத்துல பார்க்க முடியுமான்னு எப்படி தவிச்சுருக்கேன் தெரியுமா?” 


“எனக்கு வேற எதுவும் வேணாம்… என் செல்ல மயில் போதும், என் அழகு மயில் கூட வாழ விடுங்கன்னு கத்த தோணி இருக்கு,” என்றவன் குரல் கமரலாக ஒலிக்க, இப்போது கணவனின் முகம் பற்றி, அந்த இதழ்களை சிறை செய்தால் அழகனின் மனம் கொய்த பெண் மயில்.


காதல் வைபோகமே

காணும் நன் நாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடி கிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண்பாடுமே…. 


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page