மஞ்சக்காட்டு மயிலே 2
மஞ்சக்காட்டு மயிலே
தோகை 2
திருவண்ணாமலை
கால்நடை மற்றும் பால்வள துறையின் கீழ் வரும் அரசு மானியம் பெற்ற ஆராய்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்பு முதல், விவசாயிகள் மற்றும் இத்துறை சார்ந்தவர்களுக்கு இலவச மற்றும் சலுகை விலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அரசு கால்நடை மருத்துவமனையின் ஒரு தனி பிரிவாக செயல்படும் இங்கே தான் ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டண்டாக இந்த ஆறு மாத காலமாக பணியாற்றுகிறாள் மயூரி. அடிப்படையில் கால்நடை மருத்துவம் பயின்று, மேற்கொண்டு பால்வள துறை சார்ந்த பட்ட மேற்படிப்பை முடித்திருக்கிறாள்.
நேரம் காலம் கவனியாமல் பணியில் ஆழ்ந்திருந்தவளை கைப்பேசி அழைத்து தொல்லை படுத்தியது.
“என்னம்மா, வேலை நேரத்துல எதுக்கு தொந்தரவு பண்றீங்க?”
“மணி என்னன்னு மொதல்ல பாரு மையூ! உன் வேலை நேரம் முடிஞ்சு ஒரு மணி நேரம் ஆச்சு. எப்போ வீட்டுக்கு கிளம்ப போற?”
சுவர் கடிகாரத்தை திரும்பி பார்த்தவள், “இன்னும் பத்து நிமிஷத்துல நான் இங்க முடிச்சுடுவேன். நீங்க கோவிலுக்கு போறதுன்னா கிளம்புங்கம்மா. நான் வர்ற வழியில பிக் செய்யறேன்.”
“பார்த்து ஒட்டு மையூ…” பேசியை வைத்த பூரணி கோவிலுக்கு செல்ல எடுத்து வைத்த கூடையை தூக்கி கொண்டு வீட்டை பூட்டினார்.
அது ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பு… மயூரி இங்கே குடி வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஐ.டி துறையில் நல்ல வேலையில் இருக்கும் மகன் மணிமாறன், தற்போது பணி நிமித்தம் ஜெர்மனிக்கு ஆன்சைட் சென்றிருக்க, மகளுக்கு துணையாக இங்கே உடன் இருக்கும் பூரணி, காதல் கணவனின் அகால மறைவிற்கு பின், தங்களின் இரு பிள்ளைகளே உலகம் என வாழ்கிறார். அவர்களின் எதிர்காலத்திற்காக வேண்டிக் கொண்டு கோவில் கோவிலாக செல்கிறார்.
மகள் மயூரி படிப்பை முடித்த நாளாக ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து அவளுக்கு திருமணம் முடிக்க துடிக்கிறார். அவரின் ஒரே வேண்டுதல், இரு பிள்ளைகளுக்கும் மனப்பொருத்ததோடு சிறப்பான வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்பதே ஆகும்.
************ **************
கோவிலின் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்திய மயூரி, கைப்பேசியில் அழைத்து தான் வந்து விட்டதை அன்னையிடம் தெரியப்படுத்தினாள்.
“ஓரெட்டு உள்ள வந்து சாமி கும்பிட்டா என்ன மையூ?”
“ம்மா… ஒரே கசகசன்னு இருக்கு. எனக்கு உடனே குளிச்சு, ஹப்பாடான்னு சோஃபால சாயணும். வீக்கென்ட் சாவகாசமா வரலாம் நாம, நீ வந்து ஏறு.”
அசதி என்று மகள் சொன்னதும் உருகியவர், மறுபேச்சு பேசவில்லை. வீட்டுக்கு வந்ததும், அலுப்பு போக மகள் குளித்து வரும் முன்பாக சூடாக தோசை வார்த்து, அவளுக்கு பிடித்த கார சட்னி, பாதாம் பால் எல்லாம் தயார் செய்தவர், தானே மகளுக்கு ஊட்டி விட தவறவில்லை.
உணவு உள்ளே இறங்கவும், தெம்பு வர, டீ.வி சேனல்களை மாற்றி மாற்றி போட்டவள், ஒரு சேனலில் விண்ணைத்தாண்டி வருவாயா பட பாடலான ஹோசானா ஒலிக்கவும் சட்டென பார்வையை தொலைக்காட்சி பெட்டியில் நிறுத்தினாள்.
மகளின் கவனம் இசையில் திசை மாறவும், தான் சாப்பிட அமர்ந்தார் பூரணி.
ஏன்..
இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
‘ஏன் என் இதயத்தை உடைத்தாய் அழகா?’ கேள்வி மேலோங்கவும், கண்கள் உடைப்பெடுப்பதற்கு மாறாக, அப்படம் வெளியான போது யாரும் அறியாமல் திருட்டுத்தனமாக முகத்தில் துப்பட்டா போட்டு மறைத்து, அவன் தோள் சாய்ந்து நெல்லையில் ஓர் திரையரங்கில் மத்தியான ஷோ படம் பார்த்த இனிய நினைவுகள் நெஞ்சில் ததும்பி எழுந்தது.
அழகனை உடனே காண வேண்டும் என்று எழுந்த ஆவலில், அன்றைய நாளிதழில் அவனின் புகைப்படம் இருக்கும் பக்கத்தை புரட்டி, விழி வழி அவனின் கம்பீர பிம்பத்தை இதயத்தினுள் நிறைத்தாள் நங்கையவள்.
பால்வள துறை குறித்த பேட்டி ஒன்றை தந்திருந்தான் அமைச்சர் செந்தூர் அழகன்…. மயூவின் மனம் கொய்த அழகன்! ஊடகவியல் துறையின் இன்றைய அசுர வளர்ச்சியால், அங்கே அழகன் தும்மினாலும், அமைச்சருக்கு உடல்நல குறைவு என எல்லா சமூக வலைத்தளங்களிலும் நொடியில் காட்டு தீயாக உண்மையா பொய்யா என்றெல்லாம் கண்டறியாது செய்தி பரவும் அளவுக்கு, அவனின் தினசரி வாழ்க்கை எந்நேரமும் பொதுவெளியில் (லைம் லைட்டில்) காட்சிக்கு கிடைப்பதால், நம் மையூவுக்கு விளைந்த ஒரே நற்பயன், தினமும் ஏதோ ஒரு காரணத்துக்காக செய்திகள் மூலம் அழகனின் முக தரிசனம் தவறாது கிட்டி விடும்.
“ஹும்… ரெஸ்ட் எடுக்க போறேன்னு சொல்லிட்டு, உன் வேலை சம்பந்தமா நியூஸ் படிக்கறியா மையூ? அப்படியே அப்பாவோட குணம் உனக்கு. எப்போவும் தன்னோட துறை தொடர்பாவே நியூஸ் தேடி படிப்பாங்க.” மகள் செய்தியை வாசிக்கவில்லை. அந்த செய்திக்கு காரணமானவனை கண்களால் கைது செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அறியாது மறைந்த கணவனை நினைவு கூர்ந்தார் அந்த அன்பு தாய்.
ஆம் என்பதாக தலையை அசைத்தவள், “என் அப்பாவோட செல்ல பொண்ணு, அவரை போல இல்லைன்னா தான் நீங்க ஆச்சரியப்படணும்.”
“இன்னைக்கு இவ்வளோ நல்ல போஸ்டிங்கில நீ இருக்கறதை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்.”
அருகே அமர்ந்த அம்மாவின் மடியில் தலை சாய்ந்தவள், அவளின் மனநிலையால் “அப்பாவை நீங்க மொத முறை பார்த்த அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் மொமெண்டை சொல்லுங்க, பாக்கலாம்.” காதல் தொடர்பாகவே பேச்சை வளர்த்த விரும்பினாள் மனதுள் புகுந்திட்ட காதல் செய்த தொல்லையால் அவதிப்பட்ட மாது.
“உனக்கே லவ் செஞ்சு கல்யாணம் கட்டிக்கற வயசு வந்தாச்சு, இன்னும் எங்க லவ் ஸ்டோரி கேட்டுட்டு இருக்க நீ!” குறைப்பட்டார்.
“இதானே வேணாங்கறது! இப்போ உங்க காதல் காவியத்தை சொல்வீங்களாம்.”
சிணுங்கிய மகளிடம், “நிஜமா உன் கூட வேலை பண்ற யாரும் தேற மாட்டாங்களா மையூ?”
“அம்மா… பெத்த அம்மா போலவா பேசுறீங்க?”
“லவ் பண்ணா என்ன தப்பு? முன்ன அப்பப்ப, அப்பாவும், நானும், பேசிப்போம். எங்களை போலவே, பிள்ளைங்க நீங்க… லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு, நல்ல புரிதலோடு, சந்தோஷமா வாழணும்னு நிறைய கனவு கண்டோம்.”
“ஆஹா… உங்க ஆசையை சொல்லியிருப்பீங்க. என்னோட அப்பிராணி அப்பாவும், ஆமா… ஆமா பூன்னு தலையாட்டி இருப்பார்.” பெற்றோரின் காதல் வாழ்வை நேரே கண்டவளாக மையூ கேலியாக சொல்ல,...
“நான் எப்போவும் சரியா தான் பேசுவேன்னு அப்பாவுக்கு தெரியும்.” பூரணியின் கூற்றில் மையூ கலகலக்க,
“பேச்சை மாத்தாதே! அப்பாவை போலன்னு சொல்றவ, எங்க ஆசையை நிறைவேத்தினா தான் என்ன? இந்த மாறன் என்னடான்னா, எங்கேயோ போய் உக்காந்துட்டான். அட்லீஸ்ட் வெள்ளைக்கார மருமக வரும்னு நான் எதிர் பார்த்தா… வேலை, வேலைன்னு கிடந்து இந்த பய தேற மாட்டேங்கறான். பேரு வெச்சேன் பாரு தேடி தேடி மாறன்னு… அம்பு விட மாட்டேங்கறானே நான் பெத்த புள்ள!!”
“அம்ம்மா!” அலறினாள் மையூ.
“என்னடி அம்மா? ஒரு லவ் லெட்டர், ஒரு ப்ரோபோசல்… ஜஸ்ட் ஒரு சைட்… ஒண்ணுமே காணாத வறண்ட வாழ்க்கை வாழுறீங்கன்னு நான் எவ்வளோ ஃபீல் பண்றேன் தெரியுமா? ‘உங்க பையன் என் பொண்ணுகிட்ட என்ன சொன்னான்னு விசாரிங்க’ன்னு ஒத்த கம்ப்ளெயிண்ட் இன்னைக்கு வரைக்கும் மாறனை பத்தி வரலை. அவன் தான் அரை சன்யாசியா இருக்கான்னு பார்த்தா… ‘ம்மா, அந்த பையன் எனக்கு ரோஸ் கொடுத்தான். டேட் பண்ணலாமான்னு கேட்டான்’னு ஒரு வாட்டியாவது, என் தோள் சாஞ்சு டென்ஷனாகி இருப்பியா நீ?” அங்கலாய்த்தவரை கண்டு செம காண்டானாள் அழகு மயில்!
“அண்ணா டேய், ஜம்முன்னு ஜெர்மனிக்கு எஸ்கேப் ஆகிட்டியே! உன்னோட இந்த ஓயாத லவ் டார்ச்சரை என்னை தனியா அனுபவிக்க விட்டுட்டானே என் உடன் பொறப்பு!” புலம்பிய மகளிடம்,
“என்ன டார்ச்சரா? அப்பாவும், நானும் யாருக்கும் தெரியாம கோவில்ல திருட்டுத்தனமா பார்த்துக்கறதும், விபூதி மடிக்க பேப்பர் கொடுக்கறது போல மெசேஜ் பாஸ் பண்றதும், ஊர் கோடி கல் மண்டபத்துல யார் கண்லயும் மாட்டாம சந்திக்கறதும்னு அந்த காலத்துலயே எவ்வளோ செஞ்சுருக்கோம்! அதெல்லாம் ஒரு த்ரில் மையூ. அனுபவிச்சா தான் அந்த அலாதி சுகம் புரியும். நான் பெற்ற அந்த சந்தோஷத்தை என் பிள்ளைகளும் அனுபவிக்கணும்னு நினைக்கறது தப்பா?”
தன்னை மானசீகமாக ‘வீணா இவங்ககிட்ட வாய் கொடுப்பியா நீ’ என குட்டி கொண்டு, “ஆரம்பிச்சுட்டிங்களா? போங்க… போய் சமையல்கட்டை ஒழிக்கற வேலையை பாருங்க.” அன்னையை அவ்விடம் விட்டு கிளப்ப பார்த்தாள்.
“அதெல்லாம் செஞ்சுட்டேன். நீ…”
விட்டால் விடியவிடிய லவ் செய் என்று மனம் மாற்றும் முயற்சியில் இறங்குவார் காதலே ஜெயம் என பாடும் அம்மா பூரணி என்பதால், “இன்னைக்கு ரிப்போர்ட் சரி பார்த்துட்டு நேரத்தோட படுத்தா தான் நாளைக்கு நான் சீக்கிரம் போக எழுந்துக்க முடியும். என் ட்ரெஸ் வேற இப்போவே எடுத்து வைக்கணும். குட் நைட் ம்மா!” நாசுக்காக அன்னையிடம் இருந்து தப்பித்து, அறைக்குள் புகுந்தவளின் மனதிலோ, முழுதாக இரண்டு ஆண்டுகள்… அந்த சின்ன ஊரில், யார் கண்ணிலும் மாட்டாமல், அழகனோடான ரகசிய சந்திப்புகளின் காட்சிகள் திரளாக மனதில் அணிவகுத்தன.
இப்போது நினைத்தாலும் இனித்த அதே சமயம், நெஞ்சின் ஓரம் வலித்தது. பூரணி கூறிய காதல் வயப்பட்டவர்களுக்கே உரிய மயக்கம், பரவசம், உற்சாகம், பயம் சேர்ந்த விறுவிறுப்பும் சிலிர்ப்புமாக கலவையான உணர்வுகளை அவளும் திகட்ட திகட்ட அனுபவித்தவள் தான்.
என்ன ஒன்று இன்று வரை அவள் மனதின் ரகசியமல்லவா இது! ‘மொட்டிலே மரித்த என் காதல் பற்றி நீ அறிய மாட்டாயே அம்மா? உன்னிடம் நான் மறைத்த ஒரே விஷயம் இதுவன்றோ! அழகனை சந்திக்க போகும் ஆவலில் உன்னிடம் எத்தனை குட்டி பொய்கள் சொல்லி இருக்கிறேன். அதை எல்லாம் கண்டுபிடிக்காத அப்பாவி நீ.’ அன்னையிடம் வெளியிடாத தன் உள்ளத்தின் அந்த அந்தரங்க பக்கங்களை இப்போது நினைத்து பார்த்தாள்.
பக்குவமில்லாத அந்த இளம் வயதில், காதலனோடு கழித்த தனிமையான கணங்களை மனதில் அசை போட்ட மயூரியின் எண்ணங்களின் நாயகனோ, மீண்டும் தன்னிடம் அவளை ஈர்க்கும் முயற்சியை கையில் எடுத்திருந்தான்.
முழுதாக ஏழு ஆண்டுகள் எட்ட நின்று மையூவின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் மறைந்திருந்து கண்டு ரசித்தவன், இனி அவளை தன் இதய சிறையில் மட்டுமே பூட்டி வைக்காது, அண்ட சராசரத்துக்கும் இவளே என் இல்லத்தின் அரசி என்று பெருமையாக பறைசாற்றி கொலுவேற்றுவதற்கான ஆயத்தங்களை துவக்கினான்.
நான்கு நாட்கள் ஆத்தூரில் தங்கி பிசினெஸ், மற்றும் உள்ளூர் தொகுதி வேலைகளை கவனித்த செந்தூர் அழகன், மீண்டும் சட்டசபை கூடவும் உத்வேகத்தோடு சென்னைக்கு பயணமானான்.
இன்னும் மூன்று வாரங்களில் திருவண்ணாமலையில் அவன் கலந்து கொள்ளவிருக்கும் அரசு கால்நடை பராமரிப்பு மையத்தின் புது வளாக திறப்பு விழாவை நினைத்தவுடன், மையூவின் சிரித்த வதனம் நெஞ்சிலாடிய அதே கணம், தன் முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் சேர்ந்தே எழுந்தது.
வழமை போலவே திங்களன்று வேலைக்கு வந்த மயூரிக்கு முதல் அதிர்ச்சி சிவப்பு பட்டு கம்பளம் விரித்து காத்திருந்தது.
“அமைச்சர் செந்தூர் அழகன் நம்ம புது வளாகத்தை திறந்து வைக்க வராராம்…” இச்செய்தி தான் அன்றைய முக்கிய தகவலாக அலுவலகம் எங்கும் பரபரப்பாக அலசப்பட்டது.
அழகனின் பெருமை... அவனின் கம்பீரம் முதல், அவன் நடந்தால் நடை அழகு… உதட்டை அசைத்தால் அது கவிதை எனும் அளவில் மையூவின் உடன் பணிப் புரிவோர் அவனை சராமரியாக புகழ்ந்து தள்ள, பெண்ணவள் தான் சங்கடத்தில் நிலை தடுமாறினாள்.
மதிய உணவு இடைவெளியில் ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் உயர் அதிகாரியை சந்தித்தாள்.
மையூ நீட்டிய காகிதத்தை பிரித்து படித்தவர், நொடியும் தாமதிக்காமல் பதிலை தந்து விட்டார்.
“சாரி மிஸ்.மயூரி, லீவ் சாங்க்ஷன் பண்ண முடியாது. மினிஸ்டர் விசிட்டை ஒட்டி, எல்லார் லீவும் கேன்சல் பண்ண சொல்லி ஏற்கனவே கலெக்டர் ஆஃபீஸ்லருந்து உத்தரவு வந்திருக்கு. அமைச்சர் வரப்ப நாம முழு ஸ்ட்ரென்த் அட்டெண்டன்ஸ் காட்டணும். அதுமட்டுமில்ல வளாக திறப்பும் நெருக்கத்துல இருக்கறதால, வேலை பளுவும் கூட தான் ஆக போகுது. இப்போ உங்க சேவை இங்கே அவசியம் தேவை.”
திரும்பிய பக்கமெல்லாம் ஏற்கனவே அழகன் செக் வைத்திருப்பது தெரியாதவளாக “சார்… ப்ளீஸ், தவிர்க்க முடியாத உறவு வீட்டு விஷேஷம்… நான் கட்டாயம் போகணும்.” மையூவும் விடுவதாய் இல்லை.
“சாரிம்மா… வேணா உன் சொந்தக்காரங்கட்ட நம்ம மினிஸ்டர் அழகன் சார் விசிட்னு சொல்லி பாரு. இப்போ அவருக்கு இருக்கற பேருக்கும், புகழுக்கும் உன் ரிலேட்டிவ்ஸ் நிச்சயம் புரிஞ்சுக்கிட்டு, ‘அவரை நேர்ல சந்திக்கற வாய்ப்பை நழுவ விடாதே, முடிஞ்சா ஒரு செல்ஃபி எடுத்து ஃபாமிலி க்ரூப்ல போடு’ன்னு கேப்பாங்க பாரு!” என்றார் தற்போதைய உலக நடப்பை அறிந்தவராக.
வாடிவாசல் திறந்து விடப்பட்ட காளை… ரத்தம் பாராது போகாது என்பது போல, மையூவே இலக்கு என்று காய்களை நகர்த்துபவனின் குறி அவள் என்பது அறியாது, ஏய்க்க பார்க்கிறாள் நம் அப்பாவி நாயகி.
என்ன செய்ய என்று புரியாமல் தவித்த மயூரிக்கு முதலில் தன் மனதை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது. அழகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அவளுக்கு தெரியும். ‘முன்பு பேசிய பெண் என்ன ஆனாளோ?’ மனம் நிலை கொள்ளாது அலைபாய… ‘உனக்கு இப்போ அந்த மேட்டர் அவசியம் பாரு?’ தன்னை மானசீகமாக குட்டிக் கொண்டவள், சற்று நேரத்தில் எல்லாம் ‘என்னை ஞாபகம் வெச்சுருப்பானா? நான் இங்க வேலை செய்யறது தெரியுமா? ச்ச்சே… இது எத்தனை பெரிய டிபார்ட்மென்ட்! அதெல்லாம், இந்த கூட்டத்துல என்னை கண்டுபிடிக்கிறது கஷ்டம்.’ கேள்வியும், பதிலுமாக ஒரு மன போராட்டத்தில் ஆழ்ந்தாள்.
கூட்டத்தில் இவள் குண்டூசி என்றால், அவன் காந்தமல்லவா? ஈர்த்திடுவான்… அறிவியலை விருப்பப் பாடமாக கொண்டவளுக்கு இந்த விதி புரியாது போனது.
அழகனின் தந்தை மாரடைப்பால் அகால மரணமடைந்த பின், அவரின் தொகுதி இடைத்தேர்தலில் செந்தூர் அழகன் தந்தையின் இடத்தில் வேட்பாளராக நின்று வென்று, சில ஆண்டுகள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக சிறப்பாக செயல்பட்டதும், முந்தைய மாநில தேர்தலில் இரண்டாம் முறை எம்.எல்.வானதும், அந்த கட்சியின் ஆட்சி கலைய, குறுகிய காலத்தில் இன்னுமொரு தேர்தல் வந்து, ஆறு மாதங்களுக்கு முன் மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதே தொகுதியில் மூன்றாம் முறை வென்று, இம்முறை அமைச்சரானதும்… அதிலும் அவன் கால்நடை துறைக்கு பொறுப்பெடுக்க, தன்னை குறி வைக்கிறானோ என்று தான் மையூ முதலில் பயந்தாள்.
ஆனால் இத்தனை மாதங்களில் எந்த விதத்திலும் அழகன் தொடர்பு கொள்ள முயலாததில், தன்னை முற்றிலும் மறந்து விட்டான் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தாள். இப்போதைய அவனின் வருகை, எதேச்சையா அல்லது அழகனின் திட்டமா? முளைத்த வேகத்தில் சந்தேகம் மறைந்தது.
அவள் இங்கே டியூட்டியில் சேர்ந்த புதிதிலேயே, வளாக பணி நிறைவு பெற்ற கையோடு அமைச்சர் கையால் தான் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பேச்சு பரவலாக அடிப்பட்டதும், அப்போது இத்துறை வேறு ஒருவரின் பொறுப்பில் இருந்ததும் நினைவுக்கு வரவும், எல்லாம் தற்செயல் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் மயூரி.
எல்லாம் அழகனின் திருவிளையாடல் என்பது மயூரிக்கு தெரிய வருமா?
உன் உள்ளங்கை ரேகையில் ஒளிந்து ஆட்டம் காட்டுவேன் என்ற அவளின் சவாலுக்கு, டோரா போரா மலையில் ஒளிந்தாலும், உன்னை துரத்தி வருவேன் என்றவன், வருகிறான்… அணை போட்டாலும் நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமென வர போகிறவனை மயூவால் எதிர்கொள்ள முடியுமா?
அழகன் வருவான்…………