top of page
madhivadhani Stories

மஞ்சக்காட்டு மயிலே 19

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 19


அன்றைய களைப்பு மொத்தத்தையும் நீராடி களைந்த அழகன், மயூவின் வருகைக்காக அவனின் அறையில் ஆவலே உருவாக கால்கள் தரையில் பாவாமல் காத்திருந்த வேளையிலும் வேலை விடாமல் அவனை துரத்தியது.


காவல் துறையிடம் இருந்து ஊர் நிலவரம் குறித்த அழைப்பு முதலில் வந்தது. அதை தொடர்ந்து சௌந்தரை அழைத்து அவனிடமும் விசாரித்து, சில விஷயங்களை பகிர்ந்த பின்பே பேசியை வைத்தான்.


அடுத்து மாமியாருக்கு அழைக்க, அவர் பேசி என்கேஜ்ட்டாக இருக்க மாறனை கூப்பிட்டான்.


“இங்க எல்லாம் ஓகே… பேசினதையே பேசி கடுப்படிக்கறாங்க.”


“பொறுமையா இருக்கணும் மாறா…”


“ம்ம்… நீங்க என்னோட போன்ல பேசிட்டு இருக்கீங்க, அங்க மயூ என்னடான்னா அம்மாவோட பேசிட்டு…”


“அத்தையோடவா?”


“அம்மாவை அங்க வர சொல்றா!”


“அத்தை வர பிரியப்பட்டா, கிளம்பி வாங்க…”


“இல்ல… இந்நேரத்துக்கு வேணாம்…”


“சரி கவனமா இருங்க…” என பேசியை வைத்த அழகனுக்கு திருமணம் முடிந்த உற்சாகம் இருந்தாலும், சற்றே அலைப்புறுதலும் மனதை அழுத்தியது.


********************************


“அப்போ நீங்க வர முடியாதாம்மா?” அதே கேள்வியை மீண்டும் எழுப்பி, பூரியை கலங்கடித்து கொண்டிருந்த மயூரிக்கு, அவள் வீட்டினர் யாரும் உடன் வரவில்லை என்று மனத்தாங்கல். அவர்கள் வருவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்பதா இல்லை சாதி வேறுபாட்டின் காரணமாக வருவதற்கு அஞ்சி ஒதுங்கினரா என்றெல்லாம் பிரித்தாராயும் நிலையில் பெண்ணவள் நிச்சயம் இல்லை.


அதிலும், சற்று முன்பு வரை நிகழ்ந்த வீட்டின் முன் கூட பஞ்சாயத்து அவளை கலவரத்தில் ஆழ்த்தி, மணமாகிவிட்ட அந்த சந்தோஷத்தை கூட முழுதாய் அனுபவிக்க முடியா அவஸ்தை நிலையில் இருந்தாள்.


உறவுகளை சமாளிக்கும் முக்கிய வேலை இருந்தபடியால், மகளை தனியாகவே அம்முவுடன் தோப்பு வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்த பூரிக்கு, அங்கே ஓரளவுக்கு நிலைமையை சமாளித்த பின், அழகனின் வீட்டுக்கு அவராகவே வருவதற்கு தயக்கம் பிறந்து, தடுத்து நிறுத்தி விட்டது. வீட்டில் மாறனிடம் புலம்பி கொண்டு இருந்த நேரத்தில் தான், அவரின் செல்ல மகள் அழைத்து, வாவென கெஞ்சி கொண்டிருக்கிறாள்.


“இப்போ நேரமாகிடுச்சு மயூ, காலையில வரோம்.”


“ம்மா…”


“மயூ செல்லம், அழகன் தம்பியை உனக்கு நல்ல பழக்கம் தானே? இங்க இன்னமும் சித்தப்பா வீட்டு ஆளுங்க பிரச்சனை பண்றாங்க. மாறனும் பேசியே அலுத்து போயிட்டான். செல்லம் இல்ல… அப்புறம் அங்க உன் அத்தை பழைய காலத்து ஆளு, நீ தான் அட்ஜஸ்ட் செஞ்சு போகணும்.” இப்படியாக மகளை தாஜா செய்து கொண்டிருந்தார் பூரணி.


அவள் குடும்பத்தினர் உடன் வராதது உறுத்தினாலும், அவர்களுக்காக தானே இத்தனை பேரும் போராடுகிறார்கள் என மனதை தேற்றி கொண்ட மயூவிடம் வந்த அரசி சும்மா இல்லாமல், “எங்கம்மா கோபக்காரங்க இல்ல. ஆனா, பேச்சு கொஞ்சம் சத்தமா, வெடுக்குன்னு பேசுறது போல இருக்கும் மயூரி. அந்த காலத்து மனுஷி… நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும். விட்டு குடுத்து நடந்துக்கோ,” என்று விட்டாள்.


நல்லது சொல்கிறேன் என்ற பேரில், இந்த ரீதியில் அரசி பேசி தள்ளியதில், ஏற்கனவே அன்றைய நாளின் டென்ஷன்கள் போதாதற்கு, இப்போது பூரணி அருகே இல்லாத வருத்தத்தை சமாளிக்க முயன்று கொண்டிருந்த மயூ, மீண்டும் உளைச்சல் நிலைக்கு போனாள்.


***********************************


அழகனின் அறையில் பெரிதாக அலங்காரம் ஏதும் செய்யவில்லை. பூங்குவளைகளில் அடுக்கப்பட்டிருந்த அழகிய மலர் செண்டுகளில் இருந்து எழுந்த லேசான வாசம் பரவியதில் இதம் பிறக்க, ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த சிறு வாசனை மெழுகுவர்த்திகளின் (SCENTED CANDLES ) நறுமணமும், அவை கொடுத்த மங்கலான ஒளியும் சேர்ந்து அறைக்குள் நிலவிய ஏகாந்தத்தை கூட்டும் வகையாக இளையராஜாவின் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் பின்னணியில் ஒலித்ததில், மயூவின் வருகைக்கு வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த அவளின் மனம் கவர்ந்த கணவனின் மனம் அந்த சூழலில் மெல்ல ஷாந்தமடைய துவங்கியது.


கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,

கன்னி இதயம் என்றும் உதயம்,

இன்று தெரியும் இன்பம் புரியும்!

கன்னி இதயம் என்றும் உதயம்,

இன்று தெரியும் இன்பம் புரியும்!

காற்று சுதி மீட்டக் காலம் நதி கூட்ட,

கனவுகள் எதிர்வரும் அணுகுவோம்! – பூமாலையே!

பூமாலையே தோள் சேரவா?


ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் கண்ணோ!

ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ!


அடுத்தடுத்து பாடல்கள் மென்மையாய் இசைக்க, அழகனுக்கு அன்று முழுதும் இருந்த அழுத்தங்கள் பறந்து விட, இலவம் பஞ்சாய் லேசாகி விட்ட மனநிலையில் மயூவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.


மயூவை மேலே அழைத்து வந்த அம்மு, “என் தம்பி இனி எப்போவும் சந்தோஷமா இருக்கணும் மயூரி. அது உன் கையில தான் இருக்கு. ரெண்டு பேரும் மனமொத்த தம்பதிகளா வாழ என்னோட ஆசிகளும், வாழ்த்துக்களும்.” முகம் கொள்ளா சிரிப்போடு, தம்பியின் கல்யாணம் அவன் விருப்பம் போலவே நடந்து முடிந்த திருப்தியில் பேசிய மூத்தவள், அறை கதவை லேசாக தட்டி விட்டு, திறந்து, புது மணமகளை லேசாய் முன்னே உந்தி, நகர்ந்து விட்டாள்.


மெல்ல அறையினுள் அடி எடுத்து வைத்த மயூவின் மென் கொலுசொலி கொண்டே அவள் வருகையை உணர்ந்த அழகன், கேட்டு கொண்டிருந்த பாடலை உற்சாகமாக விசிலடித்தவாறு, அவளருகே வந்தவன், மயூ எதிர்பாரா நொடியில் கைகளில் ஏந்தி, மகிழ்ச்சி மிகுதியில் தட்டா மாலை சுற்றினான்.


“ஹே அழுக்கு பையா, விடு…” அவளின் கொஞ்சலான சிணுங்கல் அந்த அறையை நிறைக்க, அவனின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல அந்த அறைக்கு ஒரு புது அர்த்தம் பிறந்த குஷியில் அவளை சுற்றுவதை நிறுத்தாமல் தொடர்ந்தவன், மெல்ல அவளை தரை இறக்கினான்.


மண்டை கிறுகிறுத்ததில் ஒருவர் மற்றவரை பிடித்து நிற்க, அறை கதவு மூடப்படாததை கவனித்து, மயூவை தாங்கி கட்டிலின் அருகே விட்டவன், கதவை சாற்றி விட்டு வந்து, மனையாளின் அருகே அமர்ந்தவன், “எப்படா உன்னை தனியா பார்ப்போம்னு காலையில இருந்து தவிச்சுட்டு இருக்கேன்.” என்றான் கொஞ்சலாக.


அழகனின் தோளில் சலுகையாக, உரிமையாக சாய்ந்தவள், “பிரச்சனை சரி ஆகிடும் தானே?” கவலை குரலில் கேட்டாள்.


“இது வரை சமாளிச்சாச்சு…” அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பிடித்து சொடக்கெடுத்தவன், “மாறனும் அத்தையும் ஓகே. செக்யூரிட்டி பலப்படுத்தி இருக்கேன். சி.எம் பார்த்துக்கறதா தைரியம் சொல்லியிருக்கார்.”


“ப்ச்...அம்மாவை காலையில பார்த்தது. ஐ மிஸ் ஹர்…” சோகமாய் சொன்னவளை,


“மாறன்ட்ட பேசினேன். அவங்க இங்க வர முடியலைன்னு அவனும் வருத்தப்பட்டான். டோன்ட் வொரி நாளைக்கு மீட் பண்ணலாம்.”


இருவரும் பேசாமல் அடுத்தவரின் அருகாமையை விரும்பி உணர்ந்து அந்த மகிழ்ச்சியை கண் மூடி ரசித்திருந்தனர். அவளை லேசாய் அணைத்த வாக்கில் நெருக்கமாய் அமர்ந்திருந்தவன், மயூவின் அசைவில் தான் கண்களை திறந்தான்.


கட்டிலில் இருந்த வாக்கில் அறையை பார்வை இட்டு கொண்டிருந்த மயூரியின் விழி திரையை நிறைத்தது இவர்களுக்கு எதிரே இருந்த சுவர் முழுதும் மாட்டப்பட்டிருந்த படங்கள்!


அவை வெவ்வேறு காலகட்டங்களில் அவள் அறியாமல் எடுக்கப்பட்டவை என்பதை நொடியில் கண்டு கொண்டாள். தோல் பையை மாட்டி கொண்டிருந்தவள் முகத்தில் சிரிப்பு, சல்வாரில் கோபமாக ஏதோ சைகை செய்தவாறு… ஸ்கர்ட் அண்ட் டாப்பில் ஸ்கூட்டியில் அமர்ந்த வாக்கில்… புடவையில் வெள்ளை கோட் அணிந்து சோர்ந்த முகமாக, நிச்சயம் அது கல்லூரி இறுதியாண்டு கலந்தாய்வு அன்று எடுத்தது என்பது மயூவுக்கு புரிந்தது. எல்லாமே கேண்டிட் புகைப்படங்களாதலால் வெவ்வேறு மனநிலைகளை அப்படியே பிரதிபலித்தது. கட்டிலை விட்டு இறங்கியவள், அப்படங்களை அருகே சென்று பார்வையிட்டாள்.


“ஹே மையூ… என்னை கவனிக்காம நீ இந்த போட்டோக்களை பார்க்கறதுக்கா, இவ்வளவு சிரமப்பட்டு கல்யாணம் செஞ்சேன்?” அழகன் முனகவும்,


அப்போதும் பார்வையை அவன் பக்கம் திருப்பாதவள், ”இதெல்லாம்… என் படம் எப்படி உங்ககிட்ட?” இப்போது இவள் பின்னே நின்றவனை கேள்வியாய் பார்த்தாள்.


“டிட்டெக்டிவ்ஸ்! அப்பா தவறின கொஞ்ச மாசம் கழிச்சு, அவங்களை அமர்த்தினேன். உன்னை பார்க்கணும்னா, போட்டோ கேப்பேன். உடனே எடுத்து அனுப்புவாங்க. நிறைய நாள்… போன் பேட்டரி தீரும் வரை, இந்த நிழல் படங்களை தடவி… என் நெஞ்சுல அழுத்தி பிடிச்சு… அப்படியே தூங்கி இருக்கேன். இத்தனை வருஷமா என்னோட போன் போட்டோ ஆல்பம்ல எனக்கு துணையா, ஆறுதலா இருந்ததை, இப்போ தான் பெருசுப்படுத்தி மாட்டினேன். இனி, யாருக்கும்… பயப்படாம பார்க்கலாம்ல?” என்று மையலாக கண் சிமிட்டினான்.


மயூவின் கண்கள் கலங்கி விட்டது. “ஹே செல்ல மயில்… என்னடி…” என்று அவளை அணைத்தான்.


சில நொடிகள் அந்த அணைப்பில் கட்டுண்டிருந்தவள், மெல்ல விலகி… அறையின் ஓரத்தில் இருந்த இவளின் சின்ன சூட்கேஸை திறந்து, உள்ளே இருந்து ஒரு ஃபோல்டரை எடுத்து வந்தாள்.


“உன்னை மறக்கணும்னு ரொம்ப வைராக்கியமா சில வருஷம், படிப்புல மூழ்கி எப்படியோ ஓட்டிட்டேன். ஆனா, தேர்தல் பிரச்சாரம், அதை தொடர்ந்து மந்திரி பதவின்னு இப்போ ரெண்டு வருஷமா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்ய ஆரம்பிச்ச. தினமும் பேப்பர்ல ஒரு போட்டோவாவது உன்னோடது வந்துடும். உன்னை தவிர்க்க முயற்சி செஞ்சுட்டு இருந்ததால, மொதல்ல திட்டிட்டே அந்த பக்கத்தை திருப்புவேன். ஆனா, ரொம்ப நாள் என்னால தாக்கு பிடிக்க முடியலை.”


“வீட்ல வாங்குற பேப்பர்ல இருந்து கட்டிங் எடுக்க முடியாது. எங்க சென்டர் பியூன்கிட்ட சொல்லி, அதே பேப்பரை வேலை இடத்துல திரும்ப வாங்குவேன். அப்படி வாங்குறதை யாராவது கடனும் கேப்பாங்க. அப்படி எல்லாரும் படிச்சு முடிச்ச பிறகு, யாருக்கும் தெரியாம உன் படத்தை அதுல இருந்து கட் செஞ்சு இதுல ஒட்ட ஆரம்பிச்சேன்.”


“இன்டர்நெட்ல உன்னோடது நிறைய இருக்கு தான். ஆனா, நானே சேகரிச்சது போல வருமா? இதை தடவுவேன், கிள்ளுவேன், திட்டுவேன், சண்டை போடுவேன், நெஞ்சோட கட்டிக்கிட்டு அழுவேன். எல்லாம் என் ரூமுக்குள்ள மட்டும் தான். இந்த நிமிஷம் வரை இது அம்மாவுக்கு கூட தெரியாது” என்றவளின் கண்கள் உடைப்பெடுக்க,


இப்போது அவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி அதில் நன்றாக அழுந்தி கொண்டவள், “உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? எதுக்கு இவ்வளோ சிரமப்படணும்?” தளுதளுப்பாக கேட்டாள்.


“அது சரி, நல்லா ஒய்யாரமா சாஞ்சுட்டு கேட்கறா பாரு கேள்வியை! மண்ணுல வேர்வை சிந்தினா தான் பயிர் செழிச்சு வளரும். அது போல தான் இஷ்டப்பட்ட பொண்ணை கட்டிக்க கஷ்டபட்டா தப்பில்ல… காலம் பூராவும் ஒரே லவ் லவ் லவ் ஒன்லி…” என்றவனின் கண்களும் கலங்கி தான் போய் இருந்தது.


அணைத்திருந்த வலிமையான கரங்கள் இப்போது அவளின் இடையில் சுதந்திரமாக வலம் வர துவங்க, அதில் நெளிந்தவள், “சொல்றான் பாரு எடுத்துக்காட்டை! நீ விவசாயத்துறை அமைச்சர்னு ஒத்துக்கறேன் என் மங்குனி அழகா!”


“இந்த மங்குனி அழகன்ட்ட மாட்டின மான் விழியை, என் அழகு மயில் அழகியை இப்போ என்ன பண்ணலாம்?” இப்போது அழகனின் இதழ்கள் பெண்ணவளின் கண்களில் பதிய, பல ஆண்டு காதலும் காத்திருப்பும் கை கூடிய நிறைவில் காதல் பைங்கிளிகள் தம் வாழ்வின் அடுத்த கட்டத்தை களிப்போடு எதிர்கொண்டனர்.


****************************


விண்மீன்கள் மறைந்து ஆதவன் உதித்தெழுந்த இனிய காலையில் அழகனின் மயிலரசி சித்திர சிற்பமாய் கிளம்பி கணவன் தயாராக காத்திருந்தாள்.


முகம் கொள்ளா சிரிப்போடு மனைவியை பார்த்து கொண்டே கிளம்பியவன், “காலையில அங்க டிஃபனுக்கு வரோம்னு அத்தைட்ட சொல்லி இருக்கேன். முதல்ல அங்க போலாம்… நான் கொஞ்ச நேரம் தான் இருக்க முடியும். ஆளுங்ககிட்ட ஊர் நிலவரம், அப்புறம் இன்னமும் சிலதை நான் தான் கண்காணிச்சு அடுத்தது என்னன்னு முடிவெடுக்கணும். நீ அத்தையோட இரு… மதியம் நான் சாப்பிட வர முன்ன பின்ன ஆகும். சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு அப்புறம் இங்க வரலாம் சரியா?”


“ம்ம்ம்ம்… அங்க தங்கலியா நாம?” என்றவளிடம், “நிலவரம் பார்த்து முடிவு செஞ்சுக்கலாம், ஓகே வா? “


“ம்ம்ம்… சரி,” அதே மலர்ந்த வதனத்தவளாக தலையை ஒப்புதலாக அசைத்து அவனோடு கை கோர்த்து படி இறங்கி வந்தாள். எதிர்பட்ட அம்மு மற்றும் கதிரை காண சங்கோஜப்பட்ட அழகனின் பாவனையில் கணவனும் மனைவியும் கேலியாய் சிரித்தனர்.


“ஏன் அம்மு, மீசையை முறுக்கிட்டு காளையா திரிஞ்ச உன் தம்பி எங்க? இப்படி வெக்கபடறான்?” என கிண்டல் செய்ய,


அப்போது தான் கணவனை கண்ட மயூ, ஐயோ மானத்தை வாங்கறான் என அவனை பாசமாய் பார்க்க… “ஏன் அத்தான்…” என்றவன் விறு விறுவென படி இறங்கினான்.


அக்காவும் அத்தானும், “ஆஹா மெல்ல நட மெல்ல நட “என கோரஸ் பாட… இதை எல்லாம் புன்னகையோடு பார்த்திருந்தாள் மயூ.


அவள் கரம் கோர்த்து கொண்ட அம்மு, “இவனை இப்படி பார்க்க தான் காத்திருந்தேன். என்னைக்கும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்” என மனமார வாழ்த்தி, பூஜை அறை அழைத்து சென்றாள்.


அதற்குள் தொலைக்காட்சி செய்திகளில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர், மயூவின் இடம் மாற்றல் குறித்து கிளப்பி இருந்த சர்ச்சை ஒரு விவாதமாக அந்த காலை நேரமே சூடாக நடப்பதை கவனித்து, திரையை கவனித்தனர்.


“ஆரம்பிச்சுட்டாங்களா?” என கதிர் சலித்தான்.


“என்னங்க… இது பிரச்சனையாகுமா?” அம்மு வெசனத்தோடு கேட்க…


“எல்லாம் பிளான் பண்ணி செய்யணும்…” அத்தானும் மச்சானும் ஒரே குரலில் சொல்லி சிரிக்க, பெண்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து, இவர்களை நோக்க…


“என்ன பாக்கறீங்க? மொதல் ஆர்டர் டாக்டர். சீதாராமனுக்கு தான் போட்டேன். அவர் தான் ஓய்வு பெரும் சமயம்னு சொல்லி, மயூவோட பேரை சிபாரிசு செஞ்சு பதில் போட்டார். அப்பவும், அவரின் சேவை ரொம்ப அவசியம்னு வலியுறுத்தி நான் இன்னொரு கடிதம் போட்டேன்.”


“டாக்டர் எஸ்.ஆர்., தான் ‘என்னோட சிஷ்ய பிள்ளை, நல்லவள், வல்லவள், திறமையானவள்’னு நற்சான்று கொடுத்தார். அது மட்டுமில்லாம, பணி முன்னுரிமை (சீனியாரிட்டி) பிரகாரம் மயூ அந்த போஸ்டுக்கு வர முடியாதுன்னு அரசு விதிகளை கோடிட்டு காட்டி நான் எடுத்து சொன்ன பதிலும் இருக்கு.”


“டாக்டர் எஸ்.ஆர்., மற்றும் அந்த சிறப்பு ஆய்வு தொடர்பா, அவங்களே ஒரு முடிவெடுத்து மயூவோட பேரை ஒருமித்தமா முன் மொழிஞ்ச பிறகு தான், அவங்க பரிந்துரையின் பேரில் நான் பழைய ஆர்டரை ரத்து செஞ்சு புது அரசாணை போட்டேன். ஆக, இவங்க என்ன வம்பு கிளப்பினாலும், என்னால அதை எதிர்கொள்ள முடியும். எல்லாத்துக்கும் பக்கவா அத்தாச்சி இருக்கு.”


பெண்கள் மூவருமே அழகன் இத்தனை செய்திருக்கிறானா என்று அவனை அதிசயத்தோடு பார்க்க, சங்கரோ… ‘எமகாதகன் இத்தனை செஞ்சுட்டு, எந்த பிரச்சனையிலயும் மாட்டாம தப்பிக்கறானே’ என கடுப்பாய் முறைத்தான்.


அதற்குள் அழகனுக்கு முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வர, அவரும் இவனுக்கு சாதகமாக பேசி விட்டே வைத்தார்.


அந்த சம்பாஷணையை கேட்டு கொண்டே கதிர் தன் கைப்பேசி கேமராவில் தன் உருவத்தை அலச, “ஹுக்கும்… என்னத்துக்கு இப்போ இந்த லுக் விடுறீங்க நீங்க?” என கேட்ட மனைவியிடம்,


“ஹம்… உன் தம்பி கல்யாணத்தை நல்லபடியா முடிக்ககுள்ள, அந்த ஸ்ட்ரெஸ்ல, என் மண்டையில நாலு வெள்ளை முடி கூடிடுச்சு. நேத்து ஃபங்க்ஷனுக்கே டை அடிச்சுருக்கணும், எங்க நேரமே இல்ல! போட்டோவுல வெள்ள முடி விழுந்திருக்கும்ல!” என்றிட…


“சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ ஸ்டைல் அத்தான்” என அழகன் வந்தமர,


“அப்படிங்கற அழகா? அப்ப ட்ரெண்டியா தான் இருக்கேன்.”


“எங்க அம்மு கையில தலையை கொடுங்க அத்தான். சால்ட்டை தனியா பெப்பரை தனியா பிரிச்சு உங்க உள்ளங்கையில் வெச்சுடுவா,” அரசி கேலி செய்ய…


“ஏய் அருந்தவாலு, என் முத்தம்மா தங்கம்… இல்லாததும் பொல்லாததும் அவ மண்டையில ஏத்தாதே…”


“என்னை அருந்தவாலுன்னு சொல்லாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது!” அரசி சண்டைக்கு கிளம்ப… இவர்களின் இந்த இலகுவான உரையாடலை கேட்டு மயூரிக்கு ஆச்சரியம் கூடியது.


அவ்வப்போது இப்படி நடப்பது சகஜம் என்பதால், மற்ற யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதன் பின் முன் தின நிகழ்வுகள் மெல்ல அலசி கொண்டே காப்பி பருகினர். அன்றைய தன் நிகழ்ச்சி அட்டவணையை அக்காக்களிடம் தெரிவித்தான் அழகன்.


“அம்மாட்ட சொல்லிட்டு கிளம்பு அழகா” என்ற அம்முவிடம்,


“இங்க விருந்து ஏற்பாட்டை நீ ஒத்தையில சமாளிச்சுப்பியாக்கா?”


“டேய் ஹீரோ கணக்கா அத்தான் இருக்காங்க!” என கதிரை மீண்டும் வம்பிழுத்த அரசி, “நான் துணை இருக்கேன். அதெல்லாம் நாங்க ஜமாய்ச்சுட மாட்டோம்.” தம்பியிடம் திடமாய் சொன்னவள், “வேலை கிடக்கு” என நகர்ந்தாள்.


அத்தான் கதிரிடம் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தவன், அன்னையின் அறைக்குள் நுழைந்தான். பரமுவின் விசால அறை காலியாக இருக்க, அறையின் மற்றொரு வாயில் கதவு லேசாய் திறந்திருக்க, அதன் வழியே பின் வெராண்டாவுக்கு போனவன், சமையல் கட்டு வாசலில் வேலைக்கார பெண்ணிடம் உத்தரவிட்டு கொண்டிருந்த அம்மாவை கண்டான்.


மகனை கண்டவர், “ஓடு… தம்பிக்கு சூடா காப்பி கொண்டா” என்க…


“தைலா க்கா வேணாம்… நீங்க வேலையை பாருங்க” என்றவன், “ம்மா இப்போ தான் அக்கா தந்தா. நான் அத்தை வீடு வரை போயிட்டு மத்த வேலையும் பார்த்துட்டு, அப்படியே இன்னைக்கு நைட் அங்க என் மாமியார் வீட்ல ராத்தங்கிட்டு நாளை தான் வருவேன்.”


“அவுக வந்து முறையா உன்னை மறுவீட்டு விருந்துக்கு கூப்பிடவே இல்ல! சீர் அடுக்க வரலை.” குறைப்பட்ட அம்மாவை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன், சுற்றிலும் பார்வையை சுழல விட்டான்.


ஆட்கள் நடமாட்டம் இருக்க, அன்னையின் கையை பிடித்தவன், “அப்பா படம் முன்ன ஆசீர்வாதம் வாங்க போறேன். நீங்களும் வாங்க” என்று அவரை கையோடு அழைத்து கொண்டு வந்தவன், இந்த பகுதிக்குள் வேலை ஆட்கள் முன் அனுமதி பெறாமல் வர மாட்டார்கள் என்பதால், “தாராளமா இப்போ ஒரு போன் போட்டாலும் அத்தை வந்து முறையா அழைச்சுட்டு, சீர் அடுக்கிட்டு போக தயார். வர்றவங்களை பொண்ணெடுத்த சம்பந்தியம்மாவா மரியாதை தந்து வீட்டுக்குள்ள அழைச்சு விருந்தோம்ப நீங்க தயாராம்மா?”


பரமுவின் முகம் கோப சாயலையும் பிடித்தமின்மையும் தெளிவாய் பிரதிபலிக்க, “இதுக்கு தான் அவங்களை வர வேணாம்னு சொல்லிட்டேன்.”


“நம்ம ஆளுங்கல்ல ஒரு மகராஜியை கட்டி இருந்தா…” பரமு மேலும் பேசும் முன்...


“ம்மா, உன் புள்ளைக்கு உலகமே பார்க்க நேத்து கல்யாணம் முடிஞ்சுது. மயூ என் பொண்டாட்டி! அவளை இங்க” நெஞ்சை தொட்டவன், “சிம்மாசனம் போட்டு உக்கார வெச்சுருக்கேன். என் மஹாராணி என்னைக்கும் என் மயூ மட்டும் தான்! உங்களுக்கு ஏத்துக்க நாள் ஆகும்னு புரியுது. அது வரை நாங்க காத்திருக்கோம். எப்படி யார் உங்களை தப்பா எது சொல்ல வாய் திறந்தாலும் அப்புறம் அவங்க வாய் என் கையாள கிழியுமோ, அது போல தான் என் மயிலை இந்த வீட்ல யாரும் மரியாதை குறைய நடத்தினதா தெரிய வந்துச்சோ அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். “


அழகனின் பேச்சு அந்த அறையையும் தாண்டி அடுத்த பகுதிக்குள்ளும் எதிரொலித்தது.


காலையில் வீட்டினரிடையே நடந்த சாதாரண உரையாடலில் லயித்து, ‘இவங்களும் நம்மை போல தானே கலாட்டாவா அரட்டை அடிக்கறாங்க!’ என அப்போது தான் நினைத்து கொண்டிருந்த மயூவின் செவியில், பரமு, மற்றும் அழகனின் பேச்சும் தெளிவாய் விழ, சட்டென இதம் தொலைத்தவள், சங்கடமாய் நெளிந்து நிமிர்ந்து பார்க்க, போனில் யாருடனோ பேசி கொண்டிருந்த கதிர் எவ்வித உணர்வையும் முகத்தில் பிரதிபலிக்காமல் தன் சம்பாஷணையை தொடர்வதை கண்டாள்.


அறையில் இருந்து வந்தவனின் முகத்தில் காலையில் கண்ட குதூகலம் மறைந்து கடினத்தன்மை பூசி இருக்க, இறுக்கமான இந்த அழகனை நெருக்கத்தில் அறிந்ததில்லை மயூரி.


அத்தானை கண்டவன் தயங்கி நிற்க, “ஆரம்பத்துலேயே அத்தைக்கு புரிய வைக்கறது நல்லது தான் அழகா. ஒரே நாளுல மாறாதுன்னு தெரிஞ்சது தானே! மெல்ல ஏத்துப்பாங்க… நீங்க கிளம்புங்க” எனவும்,


“லவ் யூ அத்தான்” என்றான் அவர் கொடுத்த அந்த ஆதரவில்.


“டேய்… ஆள் மாத்தி சொல்றடா,” கதிர் வேண்டுமென்றே கேலி செய்ய, சிரித்த அழகன், “வரேன் அத்தான்” என்று விட்டு மயூவை வருமாறு கண்ணசைத்தான்.


மகிழுந்தை இயக்க ஓட்டுநர் வர, அவரை மறுத்து, சாவி தரும்படி கையை நீட்டினான். அழகனின் தலைமை பாதுகாவலன் “சார்… வேணாம்,” மறுப்பை முன் வைத்தான்.


“உள்ளூர்ல தானே… நான் பார்த்துக்கறேன். இவர் உங்க வண்டியில வரட்டும்.” என அவர்கள் இருவரும் மட்டுமே காரில் பயணித்தனர்.


“எதுக்கு காலையில உங்கம்மாட்ட சண்டை போட்டீங்க?”


“அத்தை…”


“ஹான்…”


“இனி அத்தைன்னு மட்டும் தான் அவங்களை கூப்பிடணும் மயில். அப்புறம் அது சண்டை இல்ல சொல்லி புரிய வெச்சேன்.”


“சரி தான்… இப்படி தான் நெஞ்சு பதறுறது போல ஆவேசமா பேசுவீங்களா?”


“மயில்… அம்மாட்ட சொன்னதை இங்க மாத்தி பாடிக்கறேன். எப்படி அவங்க உன்னை எதுவும் சொன்னா எனக்கு பிடிக்காது, கோபம் வருமோ அது போல தான், நீ எதுவும் அவங்கட்ட தப்பா பேசினாலும் நான் பொறுக்க மாட்டேன்.”


“என்ட்ட பேசாதவங்ககிட்ட நான் ஏன் பேச போறேன்?”


“மயூ… இதென்ன சின்னப்பிள்ளைதனம்? நான் பேசலை பூரி அத்தைட்ட…”


“அது சரி, எங்கம்மா, வாயெல்லாம் பல்லா மாப்பிள்ளைன்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி உங்களை ஆசையா கூப்பிடறாங்க. நேத்துல இருந்து உங்கம்மா ஒரு வார்த்தை பேசலை என்கிட்டே.”


“மயூம்மா…” என்றவன் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டான். “வயசுல பெரியவங்க, கொஞ்சம் பழங்காலத்து ஆளு… சிலது அவங்க ரத்தத்துல ஊறின விஷயம், மாற்றம் வர நாள் எடுக்கும். அதுக்காக நாமும் அவங்களை போல நடந்தா எப்படி? நீ பேசி பழகினா தானே உன்னை பத்தி அவங்களுக்கு புரியும்?”


“என்னை நீ புரிஞ்சுகிட்டா அது போதும்…”


“நீயும் நானும் மட்டும் குடும்பம் இல்ல மயூ. எப்படி மாறனும், அத்தையும் இனி என் சொந்தமோ, இனி அக்காங்க, அம்மா எல்லாரும் உனக்கும் முக்கியமானவங்க.”


மயூ உர்ரென்று அமர்ந்திருக்க, இதென்ன கல்யாணம் முடிந்து முழுதாக ஒரு நாள் முடியும் முன் இப்படி வாக்குவாதம் என நினைத்தாலும், கதிரின் அறிவுரை காதில் ஒலிக்க, “நீங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் மயில். நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க அவகாசம் எடுத்தாலும் பரவாயில்ல. ஆனா, எங்கேயும் வார்த்தை தடிக்க கூடாது. மரியாதை குறைய கூடாது. இதுல எந்த மாற்று கருத்தும் இல்ல,” என்றவன் திடீரென வாகனத்தை நிறுத்தியதால், பாதுகாவல் வண்டிகளும் சற்று தொலைவாக முன்னும் பின்னும் நின்று விட்டிருக்க, அழகன் காருக்குள்ளேயே இருக்கவும், அவனுக்கு உதவி வேண்டுமோ என அவன் பார்வையில் படும் இடத்தில் நின்றவர்களிடம், ஜன்னலை இறக்கி, “போய் ஏறுங்க, கிளம்பறோம்.” என்று விட்டே, மீண்டும் காரை செலுத்த துவங்கினான்.


பூரணியும் சில நாட்களாக இது போலவே தானே மகளுக்கு வேப்பிலை அடித்திருந்தார். மயூவுக்கு எல்லாம் புரிந்தாலும், முன் தினம் முதல் பரமு தவிர்ப்பதும், முகம் திருப்புவதுமாக இருப்பது வருத்தமளிக்க, அவளின் கண்ணாளனின் மனம் கசங்குவது போல நடக்க கூடாது. பூரி அம்மா முறுக்கி கொண்டால் கெஞ்சி, கொஞ்சி சமாதானத்தில் இறங்குவோமே, அது போல பரமுவை டீல் செய்வோம் என சட்டென்று முடிவெடுத்த மையூவின் அகமும் முகமும் தெளிந்தது.


அம்மா வீட்டின் முன் அழகன் வண்டி நிறுத்த, அவளின் மொத்த உறவும் அங்கே குழுமி இருக்க கண்டாள் மயூரி. காரை அனைவரும் சூழ… மணமக்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.


ஜோடியாய் நிற்கும் மகளையும் மாப்பிள்ளையையும் கண் நிறைய பார்த்த பூரியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் திரண்டு நிற்க, “பூரணி” என்று அதட்டல் போட்ட கார்கோடன்… “பிள்ளைங்களை நிற்க வெச்சு பார்த்துட்டு இருக்க, அடுத்து நடக்க வேண்டியதை கவனி!”


சிவபாதத்தின் படம் முன் விளக்கேற்றி, அவர் பாதம் பணிந்து, எழுந்த பின் காலை சிற்றுண்டி களை கட்டியது. மயூவுக்கு சித்தி, அத்தை முறையாக வேண்டியவர்கள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அழகனை மாப்பிள்ளை என வாய் கொள்ளா நிறைவோடு அழைத்து அவன் இலையை நிறைத்தனர்.


பலதரபட்டவர்களோடு பழகிய அனுபவம் கொண்ட அழகன், இங்கே உள்ளன்போடு அவனை உபசரிப்பவர்களின் முகம் வாடா வகையில் தானுமே அனைவரோடும் இதமாய் பேசினான்.


மாறனை விட வயதில் மூத்த சில இள வயது ஆண்கள் அங்கே இருந்தனர். அவர்களோடு சகஜமாக நாட்டு நடப்பை அலசினான். சிறுது நேரம் எல்லோரிடமும் இன்முகமாக உரையாடியவன், காலில் சக்கரம் கட்டியது போல தேனீயாக ஓடி அனைத்து விருந்தினரையும் கவனித்து கொண்டிருந்த அத்தை பூரியிடம் போய், “மதியம் வரேன் அத்தை, இப்போ கொஞ்ச வேலை இருக்கு…”



ஏற்கனவே அன்று காலை அழகன் தெரிவித்து இருந்த படியால், “சரிங்க மாப்பிள்ளை சார்!”


“அத்…த்தை…” அவனின் மாறுபட்ட குரலில்…


“அச்சோ… தம்பி” என்றவர் சிரிக்க…


“அது…” என்றவன் அங்கே குழுமியிருந்த எல்லோரிடமும் பொதுவாய் சொல்லி கொண்டு விடை பெற்றான்.


அழகன் கிளம்பியவுடன், விட்ட இடத்தில் இருந்து வாக்குவாதம் துவங்கவும் தான் மயூவுக்கு முன் இரவு அம்மா சொன்னதின் முழு வீரியம் விளங்கியது.


“இந்தா மாப்பிள்ளை வந்து போனார். அது சாதாரணமாவா நடந்துச்சு? காலையில இருந்து போலீஸ்காரவங்க, வீட்டு உள்ள, வெளிய தெருவை அலசி பார்த்துடலை. அட, அது கூட அவரு மினிஸ்டரு… அதனால செஞ்சாங்கன்னே எடுத்துப்போம். நம்ம குடும்பத்துல இருந்து முறையா நேரா சம்பந்தம் செஞ்ச வீட்டுக்கு போய், அவங்களை நம்மால இங்க அழைச்சுட்டு வர முடிஞ்சுதா?” ஒருத்தர் துவங்க…


“சிவம், பொண்ணுக்குன்னு அப்போவே ஆசையாசையா நகை நட்டு சேர்த்தான். எல்லாம் இருந்தும், நம்ம பிள்ளைக்கு தர்ற சீரை நம்மால அங்க கொண்டு இறக்க முடிஞ்சுதா?”


“மாப்பிள்ளை வேணாம்னு மறுத்துட்டார்…”


“அவரு மறுத்தா நாம கொடுக்காம இருக்க முடியுமா?” எதிர் கேள்வி வேகமாய் வந்து விழ…


“இல்ல… பொருளா வேணாம்னா செக் கொடுக்க தான் பார்த்தோம்.”


“மத்தவங்களுக்கு முன் மாதிரியா நடக்க வேண்டிய நான், என் பொண்டாட்டிகிட்ட சல்லி காசு வரதட்சணையா வாங்க மாட்டேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டார்.” மாறன் அவசரமாக வீட்டு மாப்பிள்ளைக்கு கொடி பிடிக்க…


பெண்கள் எல்லோரும், “இப்படி தங்கமா மாப்பிள்ளை அமைஞ்சது சந்தோஷம்” என தமக்குள் வளவளக்க…


“அதெல்லாம் ஒரு குறை சொல்ல முடியாது தான். ஆனா, கஷ்டப்பட்டு ஆளாக்கின பிள்ளை குட்டிங்க எங்கேயோ வேற டவுனுல, இல்ல நாட்டுல நிம்மதியா பொழப்பை பார்த்து செட்டில் ஆகிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டு, சரி… இங்க நம்ம ஊரு பக்கம் முன்ன போல கலவரம் அத்தனையா இல்லாம அமைதியா இருக்கே, கடைசி காலத்தை பொறந்து வளர்ந்த மண்ணுல நிம்மதியா ஓட்டிடலாம்னு நெனைச்ச எங்க ஆசை எல்லாம் இப்போ இந்த கல்யாணத்தால பாழா போச்சுதே!” சிவபாதத்தின் ஒன்று விட்ட மாமன் மகன் அங்கலாய்க்கவும்,


“ப்ச் தருமா, சொன்னதையே நேத்துல இருந்து விடாம சொல்லுற! அதான், கார்கோடன் சித்தப்பாவே நேர்ல பேசி பார்த்தும் மினிஸ்டர் ஐயா மசியலைன்னு சொல்றாருல! இந்த சுத்துவட்டாரத்துல அவுக வெச்சது தான் சட்டம்னு தெரிஞ்சும், அவுங்க விருப்பத்துக்கு மீறி நடந்து, நாம இங்க நிம்மதியா பொழைப்பு நடத்த முடியுமா? அதையும் பாக்கணும்ல?” இன்னொரு உறவு பதில் தர, முகம் சுருங்கிய பூரி, அவசரமாக சமாளி என்ற சமிக்ஞையோடு மாறனை பார்த்தார்.


அன்று அழகன் கோடிட்ட, ‘நிறைய பொய் சொல்ல வேண்டி வரும் மாறா’ என்பதன் முழு புரிதல் இப்போது இந்த இருபத்திநாலு மணி நேரத்தில் தன்னால் வந்திருக்க, “என்ன செய்திருக்கணும் நாங்க? நானோ வெளிநாட்டுல இருந்தேன். எனக்கு சொல்லி, நான் பயந்துக்க கூடாதுன்னு அம்மா ஒரு ஆளு, நான் இங்க திரும்பி வர வரை தனியா விஷயத்தை சமாளிச்சாங்க. அவங்க ராஜ்ஜியம்னு உங்களுக்கும் புரிஞ்சு இருக்கே. நாங்க எங்க ஓடி ஒளிய முடியும் சொல்லுங்க? வர வரனும் தட்டி போயிடுச்சு… வேற என்ன செஞ்சு இருக்க முடியும் எங்களால?”


“ஆமா… நம்ம பிள்ளைக்கு என்ன குறை, ஏன் வரன் தட்டி போச்சு? ஒரு வேளை மினிஸ்டர் தான் காரணமோ?” புது அலசலை ஒரு உறவு பெண் ஆரம்பிக்க…


“இந்தா கோசலை, கண்ட யூகத்தை கிளப்பதே.” கார்கோடனின் தம்பியான கரிகாலன் தன் மனைவியை அதட்டினார்.


“பாரு தருமா, மினிஸ்டர் ஐயா பதவியில இருக்காரு. அவுங்க ஜனத்தை அவர் சமாளிப்பாரு. நாம கொஞ்ச நாளு பிள்ளை குட்டிங்களோட அதுங்க வீட்ல போய் ஒண்டிக்க வேண்டியது தான்.” தீர்வாக கார்கோடன் முன் வைக்க,


“அதெப்படி முடியும்?” சில பல ஆட்சேப குரல்கள் ஒன்றாய் எழவும்,


“வேற வழி இல்ல… ஒரு மூணு நாலு மாசம் நாம ஊரை விட்டு போயிட வேண்டியது தான். இங்க எல்லாம் அடங்கிடும். அப்புறம் வந்துக்கலாம்.”


அவள் அப்பா முன்பு பேசியது தான் மயூவுக்கு மனதில் ஆடியது. ரத்தத்தில் ஊறிய பயம்… அதை மாற்றவல்ல சக்தி இல்லை. அறியாத வயதில் சாதிய கலவரத்தில் பெற்றோரை பறி கொடுத்தவருக்கு அந்த அச்சம் அவர் உயிர் உள்ள வரை அகலவில்லை. ‘இதெல்லாம் ஏன் எனக்கு முன்பே தெளிவாக புரியவில்லை. என் ஒருத்தியின் காதலால் இத்தனை பேரின் வாழ்க்கை பாதிக்க போகிறதே…’ என்ற சிந்தனை அழுத்தவும், முகம் களையிழந்து போனாள்.


“அட நடந்ததை மாத்த முடியாது, இந்த பேச்சை விடுங்க… பாருங்க பிள்ளை முகம் வாடி கெடக்கு. வாழ வேண்டிய மகராசி, அந்த புது சூழலுல எப்படி பொருந்தி போக போறாளோ, அங்கன மினிஸ்டர் ஐயா வீட்டாளுக எப்படி நடப்பாங்களோ? அந்த கவலை பொம்பளைங்க எங்களுக்கு, கண்டதையும் பேசி, நம்ம புள்ளையை பயம் காட்டாதீங்க.” மூத்த பெண் குரல் தர,


அதன் பின், ஆளாளுக்கு “தாயீ, கண்ணு, நீ பயப்படாதே… நாங்க இருக்கோம். உனக்கு சின்ன குறை வந்தாலும் நாங்க பொறுக்க மாட்டோம்” என்றதை கேட்டதும், அம்மாவின் ஊர் உறவு பற்றிய பேச்சு நியாபகம் வர, ‘கடவுளே என் மீது இத்தனை பாசமும் பிரியமும் வைத்துள்ள என் சொந்தங்களுக்கு எந்த கெடுதலும் வர கூடாது’ என்று அவசர வேண்டுதல் வைத்தாள் மயூ.


தெருவை அடைத்து பந்தலிட்டு அறுசுவை பெரு விருந்தை ஏற்பாடு செய்திருக்க, உணவு நேரம் களை கட்டியது.


பின் மதியம் தான் அழகன் விருந்துக்கு வந்தான். அது வரை உண்ணாமல் காத்திருந்த மயூவை பார்த்து, “எனக்கு வேலை முன்ன பின்ன ஆகும், நீ பட்டினி கிடக்கிறது இன்னைக்கு தான் கடைசி, நீங்களாவது அவளுக்கு சொல்லி புரிய வெச்சு இருக்கலாம்ல அத்தை?”


“விடுங்க… புது பொண்ணு, இனி உங்க விருப்பம் போல நடப்பா…” தங்கம்மை மயூவை தாங்கினார்.


இப்படியாக விருந்து முடிய, கார்கோடனே முன் வந்து, “ஐயா” என்ற போது நெற்றி சுருங்க அவரை ஏறிட்ட அழகன் அப்போது தான் வயதில் மூத்த வீட்டு ஆண்கள் யாரும் நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து இருப்பதை கண்டான். இளவட்டம் முன் வாசல், பின் வாசல் என அங்கங்கே நின்றிருந்தனர்.


“சொல்லுங்க…”


“நீங்க எத்தனை நாளு ஊருக்குள்ள போலீஸ் காவல் போடுவீங்க?”


சில நொடி அமைதிக்கு பின், “நீங்க சொல்ல நினைக்கறதை தயங்காம சொல்லுங்க…”


“வாரமோ, பத்து நாளோ ஊருல கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும், பொறவு… அதனால கொஞ்ச மாசம்… நாங்க எங்க புள்ள குட்டிங்க வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கோம்.”


இங்கே இருந்து கிளம்பி போன நிமிடமாக அவன் ஜாதியை சேர்ந்த பெரும் தலைகள், உறவுகள் எல்லோரும் முன் மாலை போலவே இத்தனை நேரம் ஓயாது வாதிட்டத்தை கேட்டு சோர்ந்து அங்கே வந்திருந்த அழகனுக்கு அவனிடம் சொல்லப்பட்ட விஷயத்தை உள்வாங்கி, தக்க பதில் தர கூட முடியவில்லை. எந்த நம்பிக்கையோடு ‘இங்க பிரச்சனை வெடிக்காது’ என்று அவன் உறுதி கொடுக்க முடியும்.


“இப்போதைக்கு போலீஸ் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊருக்குள்ள நடமாடுவாங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு நான் ஏற்பாடு செஞ்சுருக்க பிரைவேட் பாதுகாப்பு காவலர்கள் ஊருல இருபத்திநாலு நேரமும் பாதுகாப்பு தருவாங்க. அதுக்கு மேல பொறுத்திருந்து தான் முடிவு செய்யணும்.”


“அப்படிங்களா ஐயா…” அவர்கள் தமக்குள் ஏதோ சலசலக்க… அழகனை ஓய்வெடுக்க அறைக்கு அழைத்து செல்லுமாறு மயூவுக்கு ஜாடை செய்தார் பூரணி.


“எல்லாரும் இருக்கப்ப, இங்கேயே இருக்கேன் மயில்…”


“டயர்டா தெரிய…றீங்க மாமா! வா…ங்க ரெஸ்ட் எடுப்பீங்க.”


மனைவியின் புது அழைப்பில் கண்களில் ஆச்சரியம் தெறிக்க, “என்ன சொன்ன இப்போ?”


“ரூமுக்கு வாங்க, திரும்ப கூப்பிடுறேன்,” மென்குரலில் கிசுகிசுத்தாள்.


சுற்றிலும் அழகன் பார்வையை சுழற்ற, இப்போது அங்கே ஆள் அரவம் குறைந்திருக்க, “எங்க எல்லாரும்?”


“உங்ககிட்ட பேச தான் காத்துட்டு இருந்தாங்க. தங்கம் அம்மா வீட்டு பக்கம் இப்போ சபை கூடி இருக்கும்.”


“ஓ…”


“மயூ, மாப்பிள்ளை தம்பியை ஓய்வெடுக்க சொல்லு…” பூரணி உள்ளே இருந்து குரல் தர, அமைதியாக மயூவை பின் தொடர்ந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் சட்டென பின்னிருந்து அணைத்தான்.


“ஹே… விடு அழுக்கு பையா,”


“மாமனுக்கு என்ன வந்துச்சு?”


இப்போது அவன் புறம் திரும்பியவள், “பெட்ரூமுக்குள்ள நீ வெறும் அழுக்கு பையன் தான்…”


“ஹான்… இதென்ன கதை? இப்போ தானே உள்ள வா கூப்பிடுறேன்னு சொன்ன?”


“இங்க பாரு காது சிவந்து கிடக்கா?”


“இல்லையே” என்றவன் இதழ்கள் அங்கே முகாமிட, சில நிமிட கொஞ்சலுக்கு பின், “காலையில இருந்து இனி உன்னை… இல்ல உங்களை அவன், இவன், அப்புறம் அழகான்னு பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு சான்ஸ் கிடைக்கறப்ப எல்லாம் பூரி என்னை படுத்தி எடுத்துட்டாங்க.”


“நீ எப்படி கூப்பிட்டாலும் ஓகே மயிலம்மா…”


அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், இல்லை என்பதாக தலையை அசைத்து, “என் அம்மாவே சொல்றாங்கன்னா, அதுல விஷயம் இருக்கு. எல்லாமே வேற மாதிரி இருக்கற ஃபீல் ஆகுது அழகா… எனக்கு பயமா இருக்கு.”


“நீ இப்படி கண்ணை கசக்கவா உன்னை கல்யாணம் செஞ்சேன்? இங்க பாரு மயில், நேத்து கொஞ்சமும் எதிர்பார்க்கமா திடீர்னு நடந்த அதிர்ச்சியால, இங்க யாருக்கும் விஷயத்தை ஜீரணிக்க முடியலை. இதெல்லாம் எதிர்பார்த்த எனக்கே எல்லாரோட இந்த எதிர் ரியாக்ஷன் சமாளிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கப்ப, பாவம் இவங்களுக்கு கலக்கமா இருக்கறது இயல்பு தான். நீ எப்போவும் போல இருக்கணும் மயில்… அப்ப தான் எனக்கு தைரியம் தரும்.” என்று இறுக்கமாக அணைத்தவனின் நெருக்கத்தில், ஆசுவாசம் பிறக்க, காலை முதல் இரு பக்கங்களிலும் நடந்த பேச்சுக்களை பரிமாறி கொண்டனர்.


“சாரி அழகா, உன்னை ரெஸ்ட் எடுக்க விடாம, இந்த விஷயமாவே தொணதொணக்கறேன்.” கணவனின் களைத்த தோற்றத்தில் மனம் கசிய, மன்னிப்பு வேண்டினாள்.


“ஹே பட்டு மயில்… காலமெல்லாம் இப்படி உன் கை அணைப்புல இருக்கறதுக்காக, எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம்.”


மீண்டும் அணைப்புகள், கொஞ்சல்கள் தொடர, “அத்தையோ, மாறனோ இப்போ வீட்டுக்கு வந்தா அம்மா முகம் திருப்புவாங்க. அம்மு அக்காவும், அரசி அக்காவும் சகஜமா பேசுவாங்க தான்….”


“இல்ல…வேணாம் அம்மாவை யாரும் மரியாதை குறைவா நடத்தினா எனக்கு தாங்காது.”


“அப்ப, ரெண்டொரு மாசம் போன பிறகு வீட்டுக்கு கூப்பிடலாமா?”


“ம்ம்…”


அதன் பின் வெளியே வந்தவர்கள், பூரணி மட்டுமே இருப்பதை கண்டு நிம்மதி அடைந்து, அவர்கள் முடிவை தெரிவிக்க, அதுவே சரி என்று பூரியும் ஆமோதித்தார்.


மீண்டும் உறவு தலைகள் வீட்டினுள் எட்டி பார்க்க, மாலை தங்கம் வீட்டில் விருந்தென அங்கே கொஞ்ச நேரம் சென்று அமர்ந்து, பொதுவாய் பேசி, இரவு விருந்தை முடித்து கொண்டனர்.


பால் நிலா… வானில் பிரவேசிக்க, உறவு பெண்களின் கேலி பேச்சில் வெட்கம் வர, அதே மனநிலையில் படுக்கையறைக்குள் வந்த மயூ, கணவனை காற்று புகா வகையில் இறுக்கி, “லவ் யூ மை அழகு ராஜா…” என்று சிணுங்கினாள்.


சிவந்த கன்னமும், பளபளத்த இதழும், கிறக்கம் வழிந்த கண்களுமாக அணைத்திருந்த இல்லாளை அள்ளி கொண்டான் மயூரழகன்.


தொட்ட போதும்

விட்ட போதும் எட்டி நின்னு

பார்த்ததும் ஊறும் ஓ கள்ளூறும்

நாணம் ஓ பெண் நாணம்


காதில் நூறு

காதல் மெட்டு சொல்லும்

ஜாதி முல்லையோ

மொட்டு ஓ பொன் சிட்டு

பட்டு ஓ வென் பட்டு


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page