top of page

மஞ்சக்காட்டு மயிலே 18

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 18


கால சக்கரம் வேகமெடுத்து சுழல, இதோ இன்று ஆத்தூரில் ஊரின் கோடியில் இருக்கும் திடலில் ஜனத்திரள் கூடியிருந்தனர். பெரும்பான்மையானோர் அழகன் சார்ந்த கட்சிக்காரர்கள் என்றாலும் முன் வரிசையில் ஒரு பக்கம் ஊரார் முக்கியமாக அழகன் வீட்டு மனிதர்கள், நெருங்கிய உறவுகள் முதலமைச்சரை நேரில் காண போகும் ஆர்வத்தோடு சளசளத்தவாறு அமர்ந்திருந்தனர். இன்னமும் யாருக்கும் அழகனின் திருமண விவரம் தெரியாது.


அடுத்த பக்கம் சற்றே தள்ளி மயூவின் உறவுகள்! அவர்களும் ஊராரே… மற்ற கூட்டத்தோடு இவர்கள் அனைவரும் கலந்து அமர்ந்து இருந்தனர். ஏற்பாடுகளை அங்கங்கே கண்காணித்து கொண்டு, சௌந்தர் ஓய்வில்லாமல் ஓடி கொண்டிருந்தான்.


மேடையில் முதலமைச்சர், கூடவே கட்சியின் சில மூத்த தலைகள், அழகன் நெருக்கமாக பழகும் மேலும் சில அரசியல்வாதிகள் வீற்றிருந்தனர். இடமே ஜே ஜே வென விழா கோலம் கொண்டிருக்க, மேடையின் பின்னே திரையிட்ட ஒரு பகுதி இருக்க அதன் பின், ஒரு நவீன கேரவனும் நிற்க, அங்கே தான் மயூ, தன் அம்மா மற்றும் மாறனோடு காத்திருந்தாள்.


கேரவனின் ஏ.சி குளிரை தாண்டி மூவருக்கும் பயத்தில் வியர்த்தது. இதே போல மற்றொரு பக்க அமைப்பும் இருக்க அங்கே அழகனின் அக்காக்கள், அம்மா என்று கூடி இருந்தனர். அழகன் உட்பட கதிரோடு அவனின் வீட்டு இரு ஆண்கள் கூட மேடையை சுற்றி பரபரத்து கொண்டிருந்தனர்.


வரவேற்புரை ஆற்றிய அழகன், மைக்கை விழா சிறப்பு விருந்தினரான முதலமைச்சரிடம் நீட்டியதும், அவர் கண்ணசைவில் அங்கிருந்து மறைந்தான். நிகழ்ச்சி சுவாரசியத்தில் சிலர் இதை கவனிக்கவில்லை எனில், மற்றவர்கள் அழகன் மேற்பார்வை இடவோ வேறு வேலை காரணமாகவோ மேடையை விட்டு இறங்கியதாக எண்ணி கொண்டு பேசும் முதல்வரின் மேல் கவனம் வைத்தனர்.


தென் தமிழகத்தின் அதி நவீன கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஆராய்ச்சி மற்றும் இலவச விவசாய ஆலோசனை மையத்தை துவக்கி வைத்தவர், வரும் காலத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை பேணுவோருக்கு அம்மையம் நல்க இருக்கும் அளப்பரிய சேவைகளை பெருமையாக பட்டியலிட்டார்.


ஆம்! சாதாரண அரசு கால்நடை வைத்திய கூடமாக இருந்ததை பெரிய அளவில் விஸ்தரிப்பு செய்ததோடு, மேலும் காலத்திற்கேற்ப சில சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி, சுற்று வட்டார பகுதிகள் அனைத்திற்கும் கால்நடை துறை தொடர்பான முக்கிய மையமாக இது இப்போது உருவாகி நின்றது முழுக்க அழகனின் சொந்த முயற்சி ஆகும்.


தொகுதி எம்.எல்.ஏ., கூடவே அவனின் தலைமையின் கீழ் இருக்கும் துறை தொடர்பான திட்டமாதலால், அவன் காலத்தின் பின்னும் மக்களுக்கு பயன் பட கூடிய வகையில் அவனின் முழு முயற்சி கொண்டு உழைத்து இருக்கிறான். தொகுதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி மட்டுமல்லாது மேலும் சில கூடுதல் மானியங்கள், ஸ்கந்தவேல் அறக்கட்டளையின் நன்கொடைகள் எல்லாம் விழுங்கி விஸ்வரூபமெடுத்து வளர்ந்து நிற்கிறது அந்த மையம்.


அரசு நிலத்தோடு ஸ்கந்தவேல் குழுமத்துக்கு உரிமையான இருபது ஏக்கரை இதற்காக தன் தனிப்பட்ட கொடையாக தானம் செய்திருந்தான் அழகன். ஊருக்காக மட்டுமல்லாது, ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பயன்பட கூடியதாய் முக்கியமாய் அந்த பகுதியின் உயிர் மூச்சான விவசாயம் என்றென்றும் செழித்தோங்க ஒரு சிறு துவக்கமாய், தற்கால அறிவியல் வளர்ச்சியினையும் துணை கொண்டு புதுமைகள் புகுத்தி அழகன் எடுத்து வைத்திருக்கும் முயற்சி, அவனின் தொலை நோக்கு சிந்தனை, ஆக்கபூர்வமான செயல் திறன் குறித்தும் பற்பல பாராட்டு வார்த்தைகளால் புகழாரம் சூட்டி பெருமிதமாய் அங்கிருந்தோர் அனைவருக்கும் பறைசாற்றினார் முதல்வர்.


மேலும் ஐந்து நிமிட பேச்சுக்கு பின், “மரியாதைக்குரிய தெய்வத்திரு செங்கல்வராயர் ஐயாவின் பேரனும், என் ரத்தத்தின் ரத்தமான, நட்புமான திரு. மருதமலையானின் வாரிசும், என் கண்ணின் மணியான செந்தூர் அழகனின் வாழ்வின் மிக முக்கிய நாளாக இந்த தினம் இப்போது மாற போகிறது” என்று விட்டு சிறு இடைவெளி விட்டார் முதலமைச்சர்.


“எனக்கு மிக பெரிய கவுரவத்தை ஸ்கந்தவேல் குடும்பத்தினர் தந்துள்ளனர். என் தலைமையில், இங்கே குழுமி இருக்கும் ஆயிரக்கணக்கான கட்சி உடன் பிறப்புகளின் முன்னிலையில், நம்ம கட்சியின் கட்டிளம் சிங்கம் செந்தூர் அழகன் அவர் மனதை கொள்ளை கொண்ட இள மயிலான செல்வி மயூரி சிவபாதத்தை நம் அனைவர் முன்னும், இப்போது தன் இல்லாள் ஆக்கி கொள்ள போகிறார்.”


கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. அதற்குள் மேடையின் ஒரு பக்கம் இருந்து குடும்பத்தார் சகிதம் அழகன் பட்டு வேட்டியில் அங்கே பிரசன்னமான அதே நேரம் மறுபக்கமிருந்து அன்னை மற்றும் அண்ணனோடு தோன்றிய மயூ, திடலில் கூடியிருந்த ஜனத்திரள், அவ்விடத்து ப்ரமாண்டம் மற்றும் மேடையில் வீற்றிருந்து மூத்த அரசியல்வாதிகளை எல்லாம் கண்டு மிரண்டு விட்டாள்.


உடலில் லேசான நடுக்கம் துவங்கியது. இதில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என அங்கே மீடியா ஆட்களும் பெருமளவில் குழுமியிருக்க, அவர்களின் கட்சி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரலையாக அது வரை நடந்து கொண்டிருக்க, முதல்வரின் அறிவிப்பில் இப்போது மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் அவர்களை பொறுத்தவரை அங்கே நடக்கவிருக்கும் புரட்சிகரமான ஜாதிகளை உடைத்தெறிந்த அந்த சீர்திருத்த கல்யாணத்தை ஒளிபரப்ப தயாராகினர்.


கோபமாக கூட்டத்தில் இருந்து எழுந்து, தங்கள் மறுப்பை தெரிவிக்க துவங்கிய அழகனின் வகையறா ஆட்களை, போலீஸ் மட்டுமல்ல அழகன் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாப்பு ஆட்கள் மற்றும் சௌந்தர் மூலம் குழுமி இருந்த அவனின் நட்பு வட்டம் எல்லோரும் கட்டுக்குள் வைத்தனர்.


அதிக பூச்சுக்கள் இல்லாமல், மக்கள் சாட்சியாக, குடும்பத்தாரின் ஆசிர்வாதத்தோடு, திருக்குறளை ஒருவர் வாசிக்க, மங்கள இசையும் உரத்து ஒலிக்க, மிக எளிமையாக மயூரியை தன் சரி பாதியாக்கி கொண்டான் செந்தூர் அழகன்.


அழகன் மாலையிடும் போது தோளில் கொடுத்த சிறு அழுத்தம், அவனின் நான் இருக்கிறேன் என்ற கண்ணசைவு, மங்கள நாண் பூட்டிய பின், மயூவின் கரத்தை அழுத்தமும் ஆதரவுமாய் பிடித்த நிலை விடாமல் இருந்ததில் சற்றே பயம் நீங்க மங்கையவள் முக தெளிவானது.


அழகன் தரப்பு உறவுகளின் கோப மறுப்புகள், சில ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக ஆர்ப்பரிப்பில் அமிழ்ந்து தேய்ந்து போனது. மயூவின் பக்க சொந்தங்களின் முகத்தில் அதிர்ச்சி, பயம் எல்லாம் குடியேற, நடப்பவற்றை இருபக்க உறவுகளும் தடுக்க வழியற்று, கோபம், அச்சம் என கலவையான உணர்வுகளில் சிக்கி கொண்டிருந்தனர். இதற்குள் புதுமண தம்பதியரை அங்கிருந்த ஏனையோர் மனமார வாழ்த்தினர்.


கதிர் மைக்கை பிடித்து வந்திருந்தோர் அனைவருக்கும் அறுசுவை விருந்து ஏற்பாடாகி உள்ளதை தெரிவித்தான். “உங்க வீட்டு விஷேஷமா கருதி, அவசியம் விருந்தில் கலந்து, எங்களோட சந்தோஷத்தில் பங்கு கொள்ளணும்னு குடும்பத்தாரின் சார்பில் அழைப்பு விடுக்கறேன்.” என்று கை கூப்பினான்.


அதன் பின் முதல்வர் விடை பெற, அவரை அவர்களின் மில்லுக்கு சொந்தமான கெஸ்ட்ஹவுஸுக்கு அழகனே உடன் சென்று அங்கே தடபுடல் விருந்துபசாரம் செய்தான்.


இங்கே கதிர், சௌந்தர், அவர்களின் நட்பு வட்டம், மாறன், கார்கோடன் என குழுவாய் பிரிந்து தத்தம் மக்களை கவனிக்க துவங்கினர். இளைஞர்களை செம்மையாய் வழி நடத்தும், அவர்களுக்கு பிரியமான, ஆதர்ஷ தலைவனான அழகனின் வாழ்வின் முக்கிய தினமாகையால் யாரும் சொல்லாமலேயே அங்கே குழுமி இருந்த கட்சியின் இளைஞர் குழாம் திரண்டிருந்த கட்சிகார்களை அவர்களாகவே அணி திரண்டு ஒரு சீரில் உபசரிக்க துவங்க, இது அழகனே எதிர்பாராது நடந்த அதிசயம்.


கதிர் விடுத்த ‘உங்கள் வீட்டு விஷேஷமாக கருதுங்கள்’ என்ற அழைப்பை மனதில் ஏற்றி, அது படி செம்மையாக நடக்க துவங்கினர் அழகனின் கட்சி தொண்டர் படையினர்.


பாதுகாப்பை முக்கியமாய் கருதி அழகன் யோசித்து செய்திருந்த மற்ற அனைத்து ஏற்பாடுகளும் உடன் கை கொடுத்ததில், திருமண விழாவை போலவே விருந்தும் களை கட்டியது.


ஒரு பக்கம் மயூவை அம்முவும், அரசியும் தோப்பு வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தனர். முதல்வர் விமானம் ஏறும் வரை தான் பிசி என அழகன் ஏற்கனவே கூறி இருந்த படியால் அவன் அந்த கடமையை முடித்து கொண்டு வரும் வரை புது மணமகளை பெரிய வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாதாதலால், தம்பதி சமேதராக மனை புக வேண்டி இந்த ஏற்பாடு செய்திருந்தனர். மயூவுக்கு அவசியமானவற்றை அவளே நேராக கவனித்த அம்மு, தங்கை அரசியை துணைக்கு வைத்து விட்டு, அம்மா வீட்டுக்கு விரைந்தாள்.


ஏற்கனவே பெரிய வீட்டை அடைந்திருந்த பரமு, அங்கே சடுதியில் குழுமி விட்ட நெருங்கிய உறவுகளை அவர்களின் வினா அம்புகளை, ஏன் இப்படி என்ற கொதிப்பை தனியாளாக கையாண்டு கொண்டிருந்தார். சும்மாவா மலையானார் மனைவியாயிற்றே அவர். நன்றாகவே சமாளித்தார்.


அவருக்கு இஷ்டமில்லை தான், ஆனால்... அவர் வீட்டு படியேறி சண்டை போடும் உறவுகளுக்கு பதில் தர வேண்டுமே. ஆகவே, மகனின் விருப்பம் இது என ஒற்றை பதிலை அனைத்து ரக கேள்விகளுக்கும் தந்தார். அதை தவிர்த்து பரமுவின் வாய் வேறு ஏதும் மொழியவில்லை.


நல்ல வேளையாக அங்கே அம்மு வந்து சேர, பேச்சு நீண்டது. சிலர் துள்ளினர், இன்னும் சிலர் பழம் பெருமையை எடுத்து விட்டனர். “இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும். இன்னைக்கே கூட்டறோம் நம்ம சாதி மீட்டிங்கை” என ஒருவர் கொதித்து கொண்டிருக்க, அந்த இடம் கல்யாண வீட்டின் களை இல்லாமல் சந்தை கடை போல இருந்தது.


இங்கோ மாறன், கார்கோடன் மற்றும் பூரியை அவர்கள் வகை ஆட்கள் வறுத்தெடுத்தனர்.


பக்கத்து வீட்டு சரளாவோ, “காலையில கூப்பிட்டப்ப கூட, ‘கூட்டமா இருக்கு, நாங்க வரலை’ன்னு, முழு பூசணியை மறைச்சுட்டியே பூரணி!” ஆற்றாமையாக அங்கலாய்க்க… பூரி அம்மாவுக்கு ஏக சங்கடம்.


“இப்போ தான் அஞ்சாறு வருஷமா வெட்டு குத்துன்னு இல்லாம, ஊருக்குள்ள எல்லாம் சுமூகமா போயிட்டு இருக்கு. இந்த நேரத்துல இப்படி ஒரு கல்யாணம் அவசியம் நடக்கணுமா? இதுல பாதிக்க பட போறது நம்ம தான்னு உங்களுக்கு யோசனை வரலையா?”


“அழகன் ஐயா ஆசைப்பட்டார்…” கார்கோடனின் பதிலில்,


“அவருக்கென்ன ஆசைபடுவார்! நம்ம நிலை, நாம எந்த குலம்னு எல்லாம் நமக்கு தெரியும் தானே? இத்தனை சொந்தம் இங்க அக்கம் பக்கம் இருக்கோம். ஒரு வார்த்தை கலந்து பேசணும்னு தோணலையா? கலவரம் வந்தா பத்தி எரிய போறது நம்ம வீடுங்க தான்.”


“அதெல்லாம் ஆகாது… தம்பி பார்த்துக்கிடுவார்.”


“அது சரி எத்தனை நாள் போலீஸ் போட்டு நம்மை ஜபர்தஸ்த் பண்ணுவார்?”


“இந்த ஆத்திரம் அடங்காது அவங்களுக்கு… எப்ப சாக்கு மாட்டும்னு காத்திருந்து அருவாய வீச போறானுங்க. எத்தனை குடும்பம் எழவு வீடா மாற போகுதோ?”


அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தங்களின் பய குமுறலை கொட்டி தீர்த்த உறவுகளை கார்கோடன் தான் எதிர் கொண்டார்.


ஆம்… முன்னொரு நாள் மயூவின் இட மாற்றலை ரத்து செய்ய அழகன் முன் நின்ற அவரே தான். முன் தினம் மாலை தான், ஊர் விஷயம் என்ற போர்வையில் மில்லுக்கு வரும் படி அழகன் கூப்பிட்டனுப்பியதாக ஆள் வர, கோடனும் கிளம்பி சென்றார்.


அங்கே உண்மை காரணம் விளக்க பட, நெஞ்சு படபடப்பாகி வியர்வை ஆறாக ஓட, அதிர்ந்தவரை அழகன் சரி கட்ட பெரும் பாடு பட்டான்.


“உங்க வீட்டு பொண்ணை பார்த்த பின்ன என் மனசு என்கிட்டே இல்ல பெரியவரே. இங்க நம்ம ஊருக்கு அவளை வர வெச்சு என் விருப்பத்தை சொல்லி, கல்யாணம் செய்ய தான் இங்க ட்ரான்ஸ்ஃபர் போட்டேன். நீங்க என்னடானா, ‘வெளிய கட்டி கொடுக்க போறோம், ஊர் சரி வராது’ன்னு என்கிட்டையே ரத்து கேட்டிங்க.”


“முதல்ல மயூவுக்கு என் காதலை புரிய வைக்கணும் பிறகு கல்யாணம் நடக்கணும். நிறைய டென்ஷன் இருந்த நேரத்துல, நீங்க எதிர்பதமா பேசவும் அப்படி ஒரு கோபம் எனக்கு. ஏதோ இத்தனை மாசத்துல ஒரு வழியா என் ஆசை நிறைவேற எல்லாம் கை கூடி வருது” என்றவன், முழுக்க தன் காதல், தன் விருப்பம் என்றே சொன்னதோடு கொஞ்சம் பூரியை வற்புறுத்தி மிரட்டியதாக கோடிட்டான்.


அவனின் லேசான மிரட்டல் என்றதை தன்னாலான அளவில் கார்கோடான் மனக்கண்ணில் வேறு வகையில் மிகையாகவே கற்பனை செய்து கொண்டார்.


“ஐயா… தம்பி அது வாழ வேண்டிய குருத்து. இப்போ ஏதோ இஷ்டம்னு சொல்லி கட்டிக்கிட்டு, நாளை பின்ன…” சங்கடமாய் பார்த்தார்.


“நான் மலையனார் பிள்ளை. ஒரு சொல்லு ஒரு இல். இது இன்னைக்கு நேத்தி இல்ல, காலம்காலமா என் குடும்பத்தோட பாரம்பரியம். கட்டின பொண்டாட்டியை கஷ்டபடுத்த நினைக்கறவன் நான் கிடையாது. நாளைக்கு பிடிக்கற கை, என்னைக்கும் சேர்ந்தே இருக்கும்.” அழுத்தமாக உரைத்த அழகனின் முகத்தில் இருந்த கோபம் அவரின் கூற்று அவனை எரிச்சல் படுத்தியதை ஐயமின்றி தெளிவாய் காட்டவும், அதுவும் கார்க்கோடனை அச்சம் கொள்ள செய்தது.


“மன்னிச்சுடுங்க தம்பி… உங்களை தப்பா நினைக்கலை. சாதி வேற… அதுலயே ஆயிரம் வில்லங்கம் கிளம்பும்! எங்க சிவத்துக்கு பொண்ணுன்னா அம்புட்டு உசுரு. மயூ பிள்ள சின்னவளா இருக்கப்பவே ‘வீட்டோட மாப்பிள்ளை கிடைச்சா நல்லா இருக்கும்’னு சொல்லுவான். நாங்க கூட அவனை கேலி பண்ணுவோம். அவன் மக இப்படி உசந்த எடத்துல வாக்கபடுறது எனக்கு சந்தோஷம் தான். ஆனா, அது நிரந்தரம்னு எனக்கு நம்பிக்கை வரணும்.”


“எத்தனையோ நடைமுறை சிக்கல் முளைக்குமே! கல்யாணத்தோட முடியற விஷயம் இல்லையே, இனி தானே உங்க வாழ்க்கை மலரணும். நீங்க படிச்சவரு, உலக நடப்பு புரிஞ்சவரு, நாலையும் நல்லா யோசிச்சு முடிவு எடுத்து இருப்பீங்க தான். இன்னைக்கு இருக்க இந்த உறுதி, பிரச்சனை முளைச்சாலும் குலையாம இப்படியே இருக்கணும். என் பயம் எனக்கு… புள்ள மேல மொத்த பாசமும் கொட்டி வளர்த்து இருக்கு பூரணி. இன்னைக்கு உங்க மிரட்டலுக்கு பயந்து கட்டி கொடுத்துட்டு, நாளைக்கு எங்க வீட்டு தேவதை கண்ணை கசக்கினா எங்களுக்கு தாங்காதுங்க ஐயா.”


உள்ளுக்குள் அத்தனை நடுக்கம் கார்கோடனுக்கு. அவரை விட வயதில் மிகவும் சிறியவன் தான் அழகன். ஆனால், காலம் காலமாக வயது வித்தியாசம் பாராமல் அந்த குடும்பத்தாருக்கு பணிவாய் தரும் மரியாதை, அவர் ரத்தத்தில் ஊறி கிடந்த பயத்தை எல்லாம் மீறி தன் எண்ணத்தை வெளியிட்டிருந்தார் அந்த அப்பாவி கிராமத்தான்.


கார்கோடனை பொறுத்தவரை சில மாதங்களுக்கு முன் கண்டதும் காதல் முளைத்து அவன் மனம் போல அதை அடுத்த கட்டத்துக்கு அழகன் இட்டு வந்ததாக தானே புரிதல் ஏற்பட்டிருந்தது! மெல்ல அவரின் கண்ணோட்டம் புரியவும், அவர் பேச்சில் இருந்த நியாயமும் விளங்க, அவர் கையை அழகன் பற்றவும் பதறி விலக பார்த்தவரின் கரத்தை அழுத்தமாய் கெட்டியாக பிடித்தவன் விட மாட்டேன் என்ற பிடிவாத பாவனையோடு நேர் கொண்டு அவரை எதிர்கொண்டான்.


“பிரச்சனை வரும்… நான் இல்லைன்னு சொல்லலை பெரியவரே. இது என்னோட வாழ்க்கையும் தானே? யார் எவருன்னு தெரியாத கட்சிகாரன், ஊர்க்காரன் நலனுக்காக, அத்தனை மூளையை கசக்கி செயல்படற நான், என் வாழ்க்கையை பத்தி கொஞ்சமேனும் சிந்திச்சுருப்பேன் தானே! மயூ என்னோட மனைவி, என் சரி பாதி… நீங்க மட்டுமில்ல இந்த ஊரே மெச்சும் அளவுக்கு வாழ்ந்து காட்டறோம்.”


“சரிங்க தம்பி” என்றவருக்கு இப்போது அவர் சாதி மக்களின் பாதுகாப்பு குறித்த பயம் பீடிக்க, அவருக்கு போதிய விவரங்கள் சொல்லி, அவரை தைரியமூட்டி அனுப்பி இருந்த அழகன் அடித்த வேப்பிலை சரியாக வேலை செய்ய, பயந்திருந்த பூரியின் முடிவுக்கு தான் துணை நின்றாக வேண்டும் என நிலைப்பாடு எடுத்து, அழகனுக்கு தீவிரமாய் கொடி பிடித்தார் கார்கோடன்.

*********************************************


இன்னொரு பக்கமோ மில் வளாகம், மீட்டிங் திடல் அருகே, ஃபேக்டரியில் என சைவ, அசைவ விருந்து கன ஜரூராக நடந்து கொண்டிருந்தது. வந்திருந்த பலர் பரவச நிலையில் இருந்தனர் என்றால் மிகையில்லை.


அரசியலை பொறுத்தவரை, செல்வாக்கு, இளமை, ஆளுமை, கம்பீரம், அறிவு எல்லாம் கலந்த அரிய கலவை அழகன். அவனை முன் மாதிரியாய் கொண்டு, அவனின் வழி தடத்தை தம் பாதையாக எண்ணி அவனை முன்னுதாரணமாக்கி ஒரு பெரும் கூட்டமே கட்சி பாகுபாடு இல்லாமல் அவன் பின்னே தமிழகம் எங்கும் இருந்தது.


திரை நட்சத்திர அந்தஸ்துக்கு ஒத்த ரசிகர் பட்டாளத்தை ஏற்கனவே சம்பாதித்து இருந்தவன் அழகன். பெருமதிப்பு கொடுத்து, அவனை ஏற்கனவே உச்சத்தில் வைத்திருந்தவர்கள் இன்றைய அவனின் திருமணத்தை பெரிதுமே விரும்பி ரசித்து, மனமார வாழ்த்தினர்.


ஆக, எல்லா சமூக வலை தளத்திலும் அழகன், மயூரி திருமணம் ஹாட் டாபிக்காக, வைரலாகி விட்டனர். விழாவில் அவரவர் எடுத்த புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டு, அவர்கள் அலப்பறை ஒரு பக்கம் நடக்க… கட்சி பாகுப்பாடு இன்றி பல ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்தினை புதுமண தம்பதிகளுக்கு ட்விட்டரில் தெரிவித்து இருந்தனர்.


ரைசிங் ஸ்டார், லட்சிய சிங்கம் என அழகனுக்கு ஏற்கனவே இருந்த பட்ட பெயர்களின் மேல் புது ஹேஷ் டேகுகள் துவக்கினர். லட்சிய சிங்கத்தை வீழ்த்திய மான், ரைசிங் ஸ்டார் மீட்ஸ் ஹிஸ் மூன் இப்படியாக அழகனே எதிர்பாராதவையும் நடந்து கொண்டிருக்க, மொத்த மீடியாவின் பார்வையும் ஆத்தூர் மேல் இருந்ததில், கலகம் செய்ய நினைத்தவர்களால் எதையும் நடத்த முடியவில்லை.


ஒரு பக்கம் வாழ்த்துக்கள் மலையென குவிய, இன்னொரு கூட்டம் கிளம்பியது. இன்றைய நவீன வளர்ச்சியில் கையில் ஒரு கைப்பேசி வைத்திருக்கும் எல்லோருமே தங்களை ஊடகவியலாளராக பிரகடனப்படுத்தி செய்தியை அலசி, ஆராய்கின்றனரே. அப்படி ஒரு கோஷ்டி… “இது அரசாங்க விழா… அங்கே எப்படி ஒரு திருமணத்தை நடத்தலாம். விதி மீறல் நடந்ததா? அரசாங்க செலவில் அமைச்சர் இலவசமாக தன் திருமணத்தை நடத்தி கொண்டு விட்டாரா? யார் இதற்கு அனுமதி கொடுத்தது. அதிகாரம் அவர்கள் கையில் என்பதால் அதிகார துஷ்ப்ரயோகம் நடந்திருக்கிறதா?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, ஒரு விவாதம் துவங்கியது.


இன்னொரு சாரரோ மயூரி, அழகன் உறவை குறித்த ஆராய்ச்சியில் இறங்கி, சிவபாதத்தின் சொந்த ஊர் ஆத்தூர் என துவங்கி, ஒரே ஊர் என்றாலும், சாதி கட்டுப்பாடுகள் இருக்க, இள வயதில் இவர்கள் வளர்ந்த விதமும், பல ஆண்டுகள் கழித்து திருவண்ணாமலையில் மயூரியை சந்தித்த நொடியே காதல் வயப்பட்டான் அழகன் என்பதான புனையப்பட்டு கசிய விடப்பட்டிருந்த அந்த கதையை தோண்டி எடுத்து, மேலே மயூரிக்கு வந்த இட மாற்றலில் அமைச்சர் அழகனின் பங்கு என்ன? இதிலும் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தானா செந்தூர் அழகன் என்ற இன்னொரு ஆய்வை செய்து, இந்த பின்னணி குறித்த வாத பிரதிவாதங்கள் கூட அடுத்த சில மணிகளில் ஊடகங்களில் உலவ துவங்கி விட்டது.


இதை அழகனும், கதிரும் ஏற்கனவே எதிர்பார்த்திருக்க… தக்க முன்னேற்பாடுகள் செய்திருந்தனர். இவர்கள் சார்பாக கருத்துக்களை முன் வைத்தனர் கட்சியில் இவர்களை ஆதரிக்கும் சில பெரும் தலைகள். விழா செலவு கணக்கை கூட ஒளிவு மறைவின்றி வெளியிட்டு, அரசு விழாவை தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஸ்கந்தவேல் குழுமத்தின் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் பெற பட்டது முதல், அதில் இன்ன காரணம் என குறிப்பிடவில்லை… என்றெல்லாம் அழகன் தரப்பு விதிக்கு உட்பட்டே செயல்பட்டிருக்கின்றனர் என்பதற்கான சான்றுகளை வெளியிட்டனர்.


கூடவே இந்த மையத்துக்கு ஸ்கந்தவேல் ட்ரஸ்ட் கொடுத்த எக்கச்சக்க கூடுதல் உதவி நிதி, அன்றைய விழாவின் பெருவாரி, முக்கியமாக அவர்கள் குழும நிகழ்வுக்கு என அவர்கள் தான் எல்லா வரவு செலவுகளை பார்த்ததை, அதுவரையிலான கணக்குகள், கணினியில் பதிந்திருந்த எல்லாம் பொதுவெளியில் உடனுக்குடன் வெளியிட்டனர். இந்த புகைச்சல் எழுந்த வேகத்தில் அடங்கி… அமைச்சருக்கு திருமண வாழ்த்து மேடையாக விவாத களம் மாறி போனது தான் நடந்தது.


ஆக நேர்மறை, மற்றும் எதிர்மறை குழுக்கள் தத்தம் கருத்துகளை முன் வைக்க, இதை எல்லாம் எதிர்பார்த்திருந்தான் அழகன் என்பதால், எங்கேயும் அவன் குறித்த தவறான எந்த விவரமும் வராத அளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், எல்லா மீடியா அலசல்களும் ஒரு அனுமானத்தில் தான் நடந்தேறின.


இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், ட்விட்டர் வாழ்த்து பதிவுகள், ட்ரெண்டிங் ஹேஷ்டேக்குகள், ஊடகத்தில் வந்த செலிபிரிட்டி செய்திகள், விவாதங்கள் எல்லாம் அழகன் தொடர்புடையதாக இருக்க, இப்படி ஒரு அரசியல்வாதியை அறியாத பிற மாநிலத்தவர் கூட ‘அட, யார் இந்த செந்தூர் அழகன்!’ என வியந்து கேட்கும் அளவுக்கு ஆனது நிலை.


*****************************


சமூக வலைத்தள கூத்துக்கள் ஒரு பக்கமெனில் இங்கே ஆத்தூர் விழா மைதானத்தில்… நில்லாமல் கூட்டம் திரண்டு வர விருந்துபச்சாரம் தொய்வின்றி தொடர்ந்து நிகழ்ந்தது.


அங்கே பெரிய வீட்டில் குழுமி இருந்தவர்களை அம்மு சமாளித்து, ஒரு வழியாக பந்தி துவங்கியது. அன்றைய தினம் ஓய்வு என்பதை மறந்தவர்களாக அவர்களுக்கு பிரியமான அழகனுக்காக ஓடி ஓடி வேலை செய்தனர் அனைவரும்.


ஸ்கந்தவேல் குழுமத்தின் விருந்தினர் மாளிகையில் முதல்வர் மற்றும் பிற மூத்த கட்சியினரை நேரடியாக அழகனே முன் நின்று உபசரிக்க, அவர்களின் விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்ற பின் தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது.


மாலை மெல்ல கவிழ, நல்ல நேரம் பார்த்து அழகனையும், மயூரியையும் பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தனர். களைப்பையும் மீறி மகனின் முகத்தில் வீசிய புது தேஜஸில், மனம் திறந்த அழகனின் பளீர் புன்னகையில் பரமுவே அசந்து விட்டிருந்தார்.


கணவன் இறந்த பின், அவன் தோளில் அவன் விருப்பமில்லாமல் ஏற்ற பட்ட பாரங்களின் கணத்தில் அவரின் விளையாட்டு மகன் கண்ணிமைக்கும் நேரத்தில் முதிர்வு பெற்று விட்டதை அறிந்தவராக, இன்று கல்லூரி மாணவனை போல சந்தோஷமும், உற்சாகமும் போட்டி போட பிடித்த மையூவின் கையை விடாமல் நிற்கும் மகனை கண்ட பரமுவின் மனம் உண்மையில் நிம்மதியை தழுவியது.


இவளை தவிர வேறு யாரும் அழகனின் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை கொண்டு வந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்தவராக, தானும் கசப்புகளை கடந்து அவளை ஏற்க தான் வேண்டும் என முடிவெடுத்தார். எடுத்த முடிவை பரமு செயல் படுத்துவாரா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.


புதுமண தம்பதியர் வீடு வந்தது அறிந்து, அக்கம் பக்கம் உறவு வீடுகளில் தங்கி வழக்கடித்து கொண்டிருந்த அதிருப்தி கூட்டம் மீண்டும் இங்கே திரண்டு வந்தனர்.


ஒரு பக்கம் கதிர் அவர்களை எதிர்கொள்ள, உள்ளே வீட்டிலோ விளக்கேற்றி, பால் பழம் கொடுத்து புது மருமகளை கணவனின் படம் முன் விழுந்து எழ செய்தார் பரமு.


அதன் பின் இனியா, நிலா, யாழ், எழில் உடன் இருக்க மேலே ஒரு அறையில் இருந்தாள் மயூ. இளையவர்கள் போனில் எடுத்த புகைப்படங்கள் காட்டி, தத்தம் நட்புகள் வாட்சப்பில் போட்ட வாழ்த்து என மாமன் மனைவி மனம் வாடாமல் பேச்சு கொடுத்து திசை திருப்பி கொண்டிருந்தனர்.


அங்கேயே முன் கட்டில் பஞ்சாயத்து துவங்க, அழகன் அவர்களோடு வந்து அமர்ந்தான். அரசி இன்முகமாக விருந்தாட்களை கவனிக்க, அவள் கணவன் சங்கர் மனைவியை முறைப்பதை நிறுத்தினான் இல்லை.


அந்த குடும்பத்து இளைய மாப்பிள்ளை என்றாலும் எல்லா மரியாதையும் கதிருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இப்போது கூட தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என குமைந்து கொண்டிருந்தவனை அவன் குடும்பத்தினரும் இந்த முறை கடுப்பேற்றி விட்டதாக தான் மனதுக்குள் பொருமி கொண்டிருந்தான்.


ஆம்… கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்த போது, “அதெல்லாம் எங்க குடும்பத்துல இருந்து யாரும் வர மாட்டோம்” என சங்கர் குதிக்க…


அவனின் வீட்டு மூத்தவரான பெரியப்பாவோ, “சங்கரு, நாங்க பெரியவங்க பேசிக்கறோம்” என இவனை அடக்கி விட்டார்.


அழகன் அண்ட் கோ கிளம்பிய பின், “உனக்கு மச்சானா மட்டுமில்ல, இப்போ அமைச்சர் பதவியும் சேர்ந்து போச்சு. அவர் தயவு நமக்கு அவசியம் தேவை! முதல்வர் வாராராமில்ல, அவர் கையால தாலி எடுத்து தர போறாராம். இந்த சமயத்துல நீ அங்க இல்லைன்னா, அழகனுக்கு எந்த நஷ்டமுமில்லை. உனக்கு தான் கௌரவக் குறைச்சல் ஆகிடும். சீப்பை ஒளிச்சு கல்யாணத்தை நிறுத்த பாத்த கதையா இருக்கு, நீ பேசுறது. அதுக்கு பதில் வீட்டு மாப்பிள்ளைங்கற ஹோதாவுல அங்க முறுக்கிக்கிட்டு முன்ன நில்லுய்யா சங்கரு.” என்ற பெரியப்பனின் பேச்சை தட்ட முடியாமல் இதோ இங்கே அமர்ந்திருக்கிறான்.


அவர்கள் சாதி சங்கத்தின் தலைவராக ஒரு காலத்தில் பொறுப்பில் இருந்தவர் மலையனார். அவருடைய அப்பாவை போல் அல்லாமல் உள்ளூர் அரசியலில் கவனம் திரும்பி அது தொடர்பான வேலை கூடியதில், சாதி சங்க தலைவர் பதவியை விட்டு விட்டார். ஆனாலும் அவர் சொல்லுக்கு அங்கே மதிப்பு எப்போதுமே உண்டு. சாதிக்காக எதையும் செய்ய துணிய கூடிய அவரின் குணமறிந்த பழைய பெரியதலைகள் பொறுமல்களை நிறுத்தவில்லை.


அழகன், ஜாதி சங்கத்தின் படி கூட ஏறியது இல்லை. அவர்கள் கௌரவ பதவி கொடுத்த போதும் அதை நாசுக்காய் மறுத்து விட்டவன். இப்போதைய அவனின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, அவர்களுக்கு தலை குனிவு ஏற்படுத்தியதாக அழகன் மேல் குற்றம் சாட்டி வார்த்தையாடினர். கதிரின் அப்பா அந்த கூட்டத்தை சமாளிக்க திணறினார். அழகன் சார்பில் அவர் பேசுவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.


முதல்வர் முன்னிலையில் கிட்டத்தட்ட தமிழகம் மட்டுமல்ல உலகின் எந்த கோடியில் இருக்க கூடிய தமிழனும் காணும் வகையில் அழகன் மயூரி திருமணம் விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கைகோள்களின் உபயத்தில் தேசம் கடந்து வாயு வேகத்தில் ஒளிபரப்பாகி இருக்க, எல்லோரின் கவனமும் பார்வையும் தென்தமிழகத்தின் அந்த சிறு கிராமத்தின் மீதே அப்போது பதிந்திருக்க, இந்த நேரத்தில் இப்போதைக்கு அவர்களால் எந்த பிரச்சனையும் கிளப்ப முடியாது என்பது தெளிவாய் புரிய அந்த ஆத்திரத்தை வார்த்தைகளில் ஏற்றி அனலான சொற்போர் நடந்து கொண்டிருந்தது.


அவர்களை அமைதி படுத்த போராடி கொண்டிருந்த கதிரின் அப்பாவை பெருமையாய் பார்த்திருந்தான் அழகன். சரியாய் ஐந்து தினங்களுக்கு முன்னர், “ரெண்டு சம்பந்திங்ககிட்ட உன் தம்பி நேரே பேசணும். அவங்களுக்கு விவரமா இவனே சொல்லணும். உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் சிக்கலாக கூடாது.” பொத்தம் பொதுவாய் உணவு மேஜையில் இருந்த மகனுக்கு மகள் வாயிலாக சேதி கடத்தினார் பரமு.


“நான் வீட்ல பேசிக்கறேன்” என்ற கதிரிடம், “இல்ல மாப்பிள்ளை, அது முறை இல்ல… அழகன் வந்து பேசட்டும்” என்று கறாராக சொல்லி விட்டார் பரமு.


“நான் முன்ன போய் ஆரம்பிச்சு வெக்கறேன் அழகா, நீ கொஞ்சம் பொறுத்து வா” என கதிர் சென்று தன் பெற்றோர் மற்றும் அண்ணனிடம் சொல்லி கொண்டிருக்க, ஆற போட வேண்டாம் என பின்னோடு கிளம்பி இருந்தான் அழகன்.


கதிரின் அப்பா வேலப்பன் ஐந்து ஆண்டுகள் பட்டாளத்தில் இருந்தவர். அந்த அனுபவம் சாதி குறித்த அவரின் கண்ணோட்டத்தை மாற்றியதில் பெரும் பங்காற்றியது. அங்கே சிறு விபத்தில் அடிபட்டு, இனி முழு வீச்சில் முன்னணி வீரனாக இருக்க சாத்தியம் இல்லை, அலுவலகம் சார்ந்த ராணுவ பணிகளே செய்ய முடியும் என்ற நிலை ஏற்படவும், சர்வீசை முடித்து கொண்டு ஊரோடு தங்கி, இங்கே விவசாயம் மற்றும் குடும்ப தொழில்களை கவனித்து கொண்டார்.


ஊரில் அவரும் பெரிய மனிதர் என்றாலும் நடுநிலையாளர். அவரின் முற்போக்கு கருத்துகளுக்கு அங்கே மதிப்பு இருந்ததில்லை. ஆக, இது வரை அனாவசியமாக எதிலும் தலையிட மாட்டார்.


இப்போது கதிர் சொன்னதை கேட்டவர், “அழகனோட தனிப்பட்ட விஷயம்… கல்யாணத்துக்கு உறவா எல்லாரும் போய் வாழ்த்தணும்” என மூத்த மகனுக்கு சேர்த்து அனைவருக்கும் கட்டளை இட்டார்.


“நாளை பின்ன நம்ம ஆளுங்க மதிக்க மாட்டாங்களேப்பா. வீட்ல ஒண்ணுக்கு மூணு வயசு பொண்ணுங்க கல்யாணத்துக்கு இருக்கு. அதுங்க எதிர்காலம் யோசிக்கணும் நாம… எதிர்காலத்துல யார் அவங்களுக்கு பையன் தருவான்?” இப்படி கதிரின் அண்ணன் அன்பழகன் வாதிட…


“எம் பேத்திகளுக்கு என்ன கொறைச்சல்? உப்பு சப்பில்லாத சாட்டு சொல்லி தட்டி கழிக்கறவங்க என் வீட்டு இளவரசிங்களுக்கு பொருத்தமில்லா பயலுக. ஒரு நாளும் அப்படிப்பட்ட வீட்ல பொண்ணை தர மாட்டேன்” என்ற வேலப்பன் அந்த நாளிலேயே காதல் திருமணம் செய்தவர். என்ன அவரின் சாதி பெண்ணை விரும்பி விட்டார்.


அவர் மட்டுமா? இரு மகன்களும் அப்பா குணம் அறிந்து அவர் இருக்கும் தைரியத்தில் தான் காதல் திருமணம் செய்திருந்தனர். என்ன அழகன் மயூ போல ஆத்தங்கரையில் சந்தித்து காதல் பயிர் வளர்க்கவில்லை இந்த மூவரும்.


வேலப்பன், அன்பழகன், கதிரேசன் மூவரும் அவர்கள் மனம் கவர்ந்தவளை தூர இருந்து ரசித்து, வீட்டு பெரியவர்களிடம் சொல்லி, குடும்ப பெரியவர்கள் ஒப்புதலோடு மணம் செய்தவர்கள். அவர்களின் காதல் அவர்களுடைய இல்லறத்தை சிறக்க செய்திருக்கிறது.


அவர்களின் ஆணாதிக்க சாதி வெறி கொண்ட சமூகத்தில் ஏன் சங்கர் கூட அப்படிப்பட்டவன் தானே. ஆனால், இவர்கள் மூவரும் சற்றே மாறு பட்டவர்கள். மனையாளின் கண்ணசைவில் அவர்கள் எண்ணம் புரிந்து செயல்படும் ஆதர்ஷ கணவன்மார்கள். இதெல்லாம் அழகனும் அறிவான். அவனுக்காக பரிந்து பேசிய வேலப்பனின் கரத்தை நெகிழ்ச்சியாக பிடித்து கொண்டான்.


“நீ கவலையை விடு அழகா… நான் இருக்கேன்,” வேலப்பன் கொடுத்த தைரியத்தில் மனதில் புது ரத்தம் பாய அதன் பின் வேலப்பனின் ஆதரவோடு, சங்கரின் பெரியப்பனை எப்படியோ சரி கட்டி, அவர்களும் அமைதியாக அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டனர்.


பேசியதையே பேசி, வாதிட்டு கொண்டிருந்தவர்களின் வாக்குவாதம் எரிச்சலை கிளப்ப, அவனின் காதல் மயிலை எப்போதடா பார்ப்போம் என்ற ஆவலை அடக்கி கொண்டு இங்கே பஞ்சாயத்தில் பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருந்த அழகனின் கைப்பேசி அன்று ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருந்தது.


வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. முக்கியமானவற்றுக்கு அவனே அவ்வப்போது நன்றியும் அனுப்பி கொண்டிருந்தான். இன்னொரு பக்கமோ சமூக வலைத்தளங்களில் அவனின் பேரை டேக் செய்து எண்ணிலடங்கா நோட்டிஃபிகேஷன்ஸ் குவிந்து கிடந்தன. இவன் பேரில் ஃபேன் பேஜ் வைத்திருந்த தீவிர ஆதரவாளர்கள், ரசிகர்கள் வேறு அண்ணனுக்கு அண்ணிக்கு வாழ்த்துக்கள் என அந்த போஸ்டுகள் வேறு நில்லாமல் கொட்டி கொண்டிருக்க… மற்ற நாட்களில் இதையெல்லாம் கவனிப்பது அமுதா அக்கா என்பதால் உடனே கண்களை சுழற்றி பார்த்தான்.


அம்முவும், அரசியும் ஓய்ந்து தெரிந்தனர். பாவம் இரு அக்காக்கள், உறவுகளை மட்டுமா, அவர்கள் அம்மாவையும் அல்லவா அன்றெல்லாம் சமாளித்து கொண்டிருக்கின்றனர்.


“என்ன மாப்பு, ஆள் இங்க இருக்க… மனசெல்லாம் வேற எங்கேயோ டூயட் பாடிட்டு இருக்கு போல?” இதழ் அதிகம் பிரிக்காமல் காதில் முணுமுணுத்தான் கதிர்.


“ப்ச்… அது ஒண்ணு தான் குறை! போங்க அத்தான், காலையில இருந்து யாருக்கோ நடக்குற விஷேஷம் ஃபீல் கொடுத்துட்டாங்க. எப்படா…” என துவங்கியவன் நிறுத்தி விட…


“ஏன் நிறுத்திட்ட மாப்பு… சொல்ல வந்ததை முடி.”


“என்ன இருந்தாலும் என் அக்கா புருஷனா போயிட்டிங்க, உங்களை மாமா வேலை பண்ண சொல்ல மனசு வர மாட்டேங்குது.”


“சொல்லுவடே… உனக்கு தோள் கொடுத்தா, என்னையவே கேலி பண்ணுதியா?”


“பின்ன என் நிலைமை தெரிஞ்சுட்டே கேக்கறீங்களே அத்தான். நேரமாகுது, இவனுங்க கொட்டத்தை முடிச்சு விடாம, அமைதியா இருக்கீங்க. மனுஷன் இந்த மூட்ல இருந்து மாறி, அப்புறம் எப்போ…” மென்குரலில் புருவங்களை அபிநயித்து மீசைக்கு இடையே வார்த்தைகளை மறைத்து அழகன் கிசுகிசுக்க…


“டேய்… உன்னை பார்த்தா எனக்கே என்னவோ பண்ணுது!” கதிர் கேலி செய்ய…


“உதவுங்க அத்தான்… மயில் பாவமில்லை!”


“உன்னை விட என் மேல காண்டுல இருக்கானுங்க. உனக்கு இத்தனை வருஷம் வழி காட்டினதுக்கு இன்னைக்கு என்னை மானாவாரியா நல்ல நல்ல வார்த்தையா போட்டு பிரிச்சு மேஞ்சுட்டாங்க....”


அதுவரை அத்தானோடு இலகுவாக வார்த்தையாடியவனின் முகம் க்ஷணத்தில் மாறி விட, “யார் அத்தான்? எவன் என்ன சொன்னான்?” அழகன் கோபாவேசமாக எழும் முன், அவன் கரம் பிடித்து…


“நீ இரு… இதெல்லாம் விஷயமில்லை. நமக்கு காலம் வரும் அழகா, அன்னைக்கு நீ பண்ணுவியோ இல்லையோ… நான் ஆஞ்சு புடுவேன்,” விளையாட்டாக சொல்வது போல ஒலித்தாலும் அந்த குரலின் காரத்தை அழகனும் உணர்ந்தான்.


“என்னால தானே அத்தான்… சாரி…”


“டேய் மாப்பு… விடுறா, சிரிச்சாப்புல இரு. வேற எந்த வெசனமும் இன்னைக்கு உன் மனசுல இருக்க கூடாது. உங்க ரெண்டு பேர் பத்தி மட்டும் தான் நீ நினைக்கணும். எனக்கு என் அழகனோட சந்தோஷம் முக்கியம். புரிஞ்சுதா?” அழகன் முகம் வாடுவது பொறுக்காமல், சமாதானம் செய்தான் கதிர்.


அத்தானின் கரத்தை பிடித்தான் அழகன். “நான் இருக்கேன் மாப்பு…” மூத்தவனும் கரத்தில் அழுத்தம் தர சரியாக அந்த நேரம், மகனும், அழகனும் தமக்குள் பேசுவதை கண்டு விட்ட வேலப்பன், அவர்களின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து, எழுந்து நின்றார்.


“இந்தா ராசு… ஏலேய் பாண்டி, இப்பைக்கு தீராது உங்க வழக்கு. மாப்பிள்ளை இஷ்டப்பட்டான் கட்டிக்கிட்டான் உங்களுக்கு எங்க எரியுது? சங்கத்துல பிராது வைங்க… அங்க வந்து மேல பேசிக்கறோம். கதிர், எல்லாரையும் சாப்பிட அழைச்சுட்டு போ…”


“இவ்வளவு நடந்த பின்ன இங்க கை நனைக்கறதா,” ஒருவன் குரல் தர,


“ம்ம்… மதியம் நல்லா நல்லி எலும்பா வைன்னு கேக்கறப்ப இந்த வீராப்பு எங்க போச்சு சுரேஷ்” என இன்னொருவன் பதிலடி கொடுத்ததில் அங்கே மேலும் சலசலவென பேச்சு வளர… இப்படியாக வேலப்பனின் உபயத்தில் அவர்கள் கலைந்து போயினர்.


ஒருவாறு புது மணமக்களுக்கு வீட்டிலே இரவு உணவு பரிமாறினர். சங்கர் உர்ரென உண்ண, அழகனை உற்சாகப்படுத்தும் பொருட்டு, தொண்டர்கள் போட்டிருந்த போஸ்ட்களை காண்பித்து, அதை ரசித்து படித்து நிலைமையை கலகலப்பாக வைத்திருந்தான் கதிர்.


சாப்பிட்ட பின், “அம்மு நேரமாகுது பாரு…” கணவன் குரல் தரவும், “அரசி, கல்யாண பொண்ணை நீ பாரு, தம்பியை நான் கவனிக்கறேன்.” என்று அவர்கள் தம்பதியாக, “உன் ரூமுக்கு போ அழகா… எப்போவும் புரிதலோட, மனசொத்த தம்பதியா இருக்கணும்.” அம்மு தம்பிக்கு அறிவுரை தர…


“சிம்பிளா எங்களை மாதிரி இருன்னு சொல்லியிருக்கலாம் நீ அக்கா,” என்ற அழகனை


“அஸ்கு… எங்களை போல இன்னொரு ஜோடி சான்சில்ல. என்ன முத்தம்மா” கதிர் மனைவியை காதலாய் பார்க்க…


“என்னங்க இது… தம்பி முன்ன,” அம்முவும் சிணுங்க…


“நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் அத்தான்…” என்றவன் அதே புன்னகையோடு அவனின் படுக்கையறைக்குள் லேசான மனநிலையில் நுழைந்தான்.


அவனின் பத்து ஆண்டுகள் காதல் தவம் இன்று கை கூடி, இதோ அவனின் அழகு மயிலை ஊரறிய மனையாளாக ஏற்ற பின், முதன்முறை தனிமையில் சந்திக்க இருக்கும் அந்த பொன் நொடிகளை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தான் மயூரியின் அழகன்.



நீ அணைக்க நான் இருக்க

நாள் முழுக்க தேனளக்க


பனிவாய் மலரே பல நாள் நினைவே

வரவா தரவா பெறவா நான் தொடவா


மயிலே மயிலே உன் தோகை இங்கே


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page