top of page

மஞ்சக்காட்டு மயிலே 17

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 17


மேலும் ஒரு நாள் சென்ற பின்னே சென்னையில் இருந்து வந்திறங்கிய மாறன் தன் அம்மா பகிர்ந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.


மகளின் காலை நேர ஆற்றோர உலாவலுக்கு பூரணி தடை விதித்ததில், நேரம் சென்றே கண் விழித்த மயூ எழுந்து வந்த போது பேயடித்த முகமாக அமர்ந்திருந்த அண்ணனை கண்டு, “டேய் அண்ணா ஷாக்க குறைடா,” இளையவளின் கேலியில் நடப்புக்கு வந்தவன், தங்கையை முறைத்தான்.


அதற்குள் மருமகனிடம் விஷயத்தை கடத்தி இருந்தார் பூரணி. மாறனின் கைபேசி ஒலி எழுப்ப, அறியாத எண்ணை கண்டு அவன் விழிக்க, “நேரா உனக்கே போன் செஞ்சுட்டார் மாப்பிள்ளை… எடு மாறா” என்ற பூரி அம்மா, அந்த கால்லை எடுத்து, மகனிடம் பேசியை நீட்டினார்.


“ஹாய் மாறா,”


“ஹா… ஹலோ சா.. சார்” மாறனின் குரல் தந்தி அடித்தது.


“அழகான்னு கூப்பிடுங்க இல்ல மாப்பிள்ளைன்னும் கூப்பிடலாம்.”


அந்த சகஜ பாவனையில் “அது…” தயங்கியவன், “இதெல்லாம் சரி வராது சார். அம்மா…” ஏதோ துவங்கியவன் பெற்றவளை குறையாக பேச மனமில்லாமல், “அது அம்மா சொன்னாங்க. ஆனா, இங்க ஊர் முறை இருக்கு இல்ல? இதெல்லாம் வெளிய தெரிய வந்தா, உங்காளுங்க எங்களை உயிரோட பொதைப்பாங்களோ இல்ல எரிப்பாங்களோ? நினைக்கவே முடியலை.”


“மயூ சின்ன பிள்ள… ப்ளீஸ் விட்டுடுங்க,” பூரி அம்மா வெறுமே இன்னார் மாப்பிள்ளை, அவரே விரும்பி திருமண ஏற்பாடுகள் துவங்கி விட்டன என்று மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருந்தார் மகனிடம்.


தங்கையிடம் விவரமாக மாறன் பேசும் முன் அழகன் முந்திக் கொண்டு விட்டதில் நேரடியாகவே தன் மறுப்பை தெரிவித்தான்.


“மாறா, சொல்றதை கேளுங்க… வீட்ல சமாளிச்சு சம்மதம் வாங்கிட்டேன். எல்லா ஏற்பாடும் ஜோரா நடந்துட்டு இருக்கு. நீங்க டென்ஷன் ஆகாதீங்க… நான் நேர்ல பேசி இருக்கணும். ஆனா இப்போ உங்களை சந்திக்க முடியாது. மயூட்ட போன் கொடுங்க.”


அதன் பின் அவர்கள் சில நொடிகள் பேசி விட்டு வைக்க, மாறன் இருந்த நிலையில் அதிர்வில் இருந்து மீளாமல் அமர்ந்திருந்தான்.


“உன் செல்ல பிள்ளைக்கு காப்பி ஆச்சுல்லம்மா, எனக்கு எங்க? போங்க அப்புறம் உங்க பையனை கொஞ்சுவீங்க, எனக்கு ஒரு காப்பி கொண்டு வாங்க” அன்னையை விரட்டியவள்,


“அண்ணா டேய்,” என துவங்கி மளமளவென அவளின் காதல் காவியத்தை ஒலிபரப்பிய மயூ விவரித்த போது தான் பூரிக்கும் சில விவரங்கள் தெரிய வர, சொல்ல வேண்டியதை ஒரே மூச்சில் கொட்டி முடித்தாள்.


“அவங்க வீட்ல பெரிய அக்காவும், அவங்க ஹஸ்பண்டும் முழு மனசா ஒத்துக்கிட்டாங்க. இவர் அம்மாவுக்கு இஷ்டம் இல்ல… சின்னக்காவுக்கு ஓகேன்னு சொன்னார். அப்பா பேச்சை மீறுறேன்னு அப்பப்ப தோணுறது உண்டு மாறா. அழகன் இல்லைன்னா நான் வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்.”


உறுதியாக ஒலித்த தங்கையின் குரலில் நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு பிரமிப்பு ஒரு பக்கமெனில், இவ்வளவு நடந்திருக்கிறதே என்ற அதிர்ச்சியும் கூடவே.


ஏதும் அறியாது இருந்திருக்கிறோமே என்ற வருத்தமும் அழுத்த, “ம்மா உங்களுக்கு எப்போ தெரியும்? நீயும் என்கிட்டே எதுவும் சொல்லாம மறைச்சுட்ட இல்ல! எனக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்லாம, உங்களை கவனிக்காம… ஒரு நல்ல மகனா, அண்ணாவா நான் நடக்கலை!” தவறிழைத்தவனாக குற்றவுணர்வோடு முடிக்கவும்,


“ஹே அண்ணா டேய்…” “மாறா, அப்படியில்ல…” இரு பெண்டிரும் ஒரே நேரத்தில் துவங்கி… பின் மயூவே, அவள் அன்னையிடம் முன்பு கூறிய அதே காரணங்களை மீண்டும் அடுக்கினாள்.


“நடக்காத ஒண்ணை பத்தி பேசி உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்த கூடாதுன்னு தெளிவா இருந்தேன். ஆனா, அழகன்… அவரும், இத்தனை வருஷத்துல… எத்தனையோ பதவி, பொறுப்புன்னு பலப்பல ஸ்வரூபங்கள் எடுத்தாலும், நான் மட்டும் தான் அவரோட மனசுல நீக்கமற நிறைஞ்சிருக்கேங்கறதே, எனக்கும் இப்போ சமீபத்துல தான் தெரியும். அந்த விதத்துல நான் லக்கி.”


மகளின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்தவராக, அவசரமாக மகளை நெட்டி முறித்த பூரி… “மாப்பிள்ளை சொக்க தங்கம்,” என பாராட்டோடு துவங்கி, அழகனோடான தன் சந்திப்பை ஆதி முதல் மக்களிடம் சொல்லி முடித்தார்.


“அமைச்சருங்கற பந்தாவோ, ஊர் பெரிய தலைங்கற ஹோதா எதுவும் இல்ல தம்பிகிட்ட. இவ இல்லைன்னா, வாழ்க்கை இல்லைன்னு அவரும் திடமா சொல்லிட்டார் மாறா. இத்தனை வருஷம் ஒதுங்கி இருக்க, இவ படிப்பு முதல், அவருக்கும் நிறைய காரணங்கள் இருந்திருக்கு.”


“இவங்களோடது புரியாத வயசுல மொட்டு விட்ட காதலா இருக்கலாம் மாறா. ஆனா, இப்போ இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கம் பார்த்து, அனுபவமும் பட்டுட்டதனால மனசளவில் முதிர்வும் பக்குவமும் இருக்கவங்க. சரின்னு சொல்லு மாறா… அவருக்கு நீ ஒத்துக்கணுமேன்னு கவலை.”


“எனக்கும் கூட தான் மாறன் சம்மதிக்கணுமேன்னு டென்ஷன். சும்மா உன் மாப்பிள்ளையை மட்டும் உசத்தி பேசுற பூரி நீ.” சண்டைக்கு தயாரான மகளை முறைத்தவர்,


“நாம சம்மதிக்காம மேடம் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்களாம். அந்த மனுஷனை மிரட்டி வெச்சு இருக்கா…” பெருமையாய் சொன்ன அம்மாவை பார்த்தவன்,


“ம்மா, உங்களுக்கு எல்லாமே விளையாட்டா? வெட்டு குத்துன்னு ஆகுமோ, இல்ல கொளுத்தி போட்டு பொசுக்கிடுவாங்களோன்னு மனசு அடிச்சுக்குது. நீங்க சிரிச்சுட்டு இருக்கீங்க?”


“மாறா, ரிலாக்ஸ்… மாப்பிள்ளையை நம்பு. அவர் மண்டையை ஒடச்சி, யோசிச்சு ஒரு ப்ளான் போட்டுருக்கார். எல்லாம் நல்லபடியா நடக்கும். இவ கல்யாணம் நல்ல முறையில முடிஞ்சா பொங்கல் வெச்சு கெடா வெட்டறேன்னு வேண்டுதல் வெச்சுருக்கேன். நல்லதை நினைப்போம்… நம்ம மனசு போல எல்லாம் நடக்கும்.” நம்பிக்கையாக ஒலித்தது பூரணி அம்மாவின் குரல்.


“அப்ப அந்த சௌந்தருக்கு முன்னவே விஷயம் தெரியுமா?”


“ம்ம்ம்…”


“அடப்பாவி சௌந்தர்! உன் ட்ரான்ஸ்ஃபர் பத்தி பேசலாம்னு மினிஸ்டர் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டப்ப, எவ்வளவு என்னை அலைகழிச்சான் தெரியுமா?”


“சௌந்தர் அண்ணா, என்னைக்கும் உனக்கு உதவ மாட்டார்னு எனக்கு முன்னாடியே தெரியும் மாறா…”


இதை கேட்ட மாறன் முறைக்க, “அண்ணா டேய்," என அவன் கரத்தை மயூ பற்ற, மகளின் வாடி போன முகம் காண பொறுக்காது, பூரி அம்மாவும் வேப்பிலை அடித்ததில் கொஞ்சம் இறங்கி வந்தான்.


வீட்டில் பூரி அம்மா எப்போதும் போல கலகலவென நடமாடுவது கண்டு, இளையவனுக்கோ உள்ளுக்குள் அப்படி ஒரு கிலி. விட்டால் ஜுரம் வரும் போல ஒரு உதறல் உணர்வு ஆட்கொண்டது.


‘ஐயோ, லவ் லவ்னு சொல்லி, பயங்கர வில்லங்கத்தை இழுத்து வெச்சுட்டு, இவங்க இப்படி ஜாலியா எப்படி இருக்காங்களோ? கடவுளே!’ என அவனுக்கு மனவழுத்தம் கூடி விட, மாலை சூரியன் இறங்கும் வேளை காற்றாட நடந்து விட்டு வரலாம் என கிளம்பியவன், யோசனையில் அமிழ்ந்து அவனையும் அறியாமல் அழகனின் கட்சி அலுவலகம் பக்கமாக வந்திருந்தான்.


‘அழகனிடம் பேசலாமா? பார்க்க முடியுமா? மயூவை கேட்போமா?’ என்ற எண்ணங்கள் மனதை நிறைக்க, ‘அதுக்கு அப்பாயிண்ட்மென்ட் வேண்டுமே? திடீரென என்ன காரணம் சொல்லி பார்க்க?’ இந்த ரீதியில் பலவாறு யோசித்தவன் அப்படியே நின்றிருக்க, அவன் அருகே கார் ஒன்று வந்து நிற்கவும் துள்ளி கொண்டு சற்றே ஒதுங்கி நின்றவன், காரில் இருந்து சௌந்தர் இறங்கவும், ‘அட சௌந்தர், இவனை கேப்போமா? இல்ல பிகு பண்ணுவானா?’ மாறன் பூவா தலையா போட்டு யோசித்து கொண்டிருக்க,


“உங்க அப்பா பென்ஷன் விஷயமா அமைச்சரை பார்க்கணும்னு கேட்டிருந்தீங்க தானே மாறன்? மினிஸ்டர் சார், மில்லுக்கு போற வரை என்ன ஏதுன்னு உங்க வாயால நீங்களே சொல்லுவீங்களாம், கார்ல ஏறுங்க” என்றான்.


திருதிருவென முழித்து நின்றவன் சௌந்தரின் முன் பாதி வாக்கியத்தில் குழம்பி, பின் தெளிவதற்குள்ளாக, இறுதி வாக்கியத்தை உள்வாங்காது போனான்.


“ஏறுடா” மாறனுக்கு மட்டும் கேட்கும் விதம் சௌந்தர் பல்லை கடிக்க,


“ஹான்… ஆமா…” என அவசரமாக முன்னிருக்கையில் மாறன் ஏறி அமர்ந்ததும் வண்டி சீறி பறந்தது.


பயத்தில் பெருகிய வியர்வையை மாறன் துடைக்க, “சௌந்தர் ஏசியை கூட்டி வைடா” என்ற அழகனின் குரலில் பின்னிருக்கையில் இருப்பவனை அப்போது தான் பார்த்தவன், “ஐயோ… சார்!” என்று சற்றே அலறினான்.


சௌந்தரின் சிரிப்பிலும், அழகனின் புன்னகையிலும், கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து, மெல்ல தெளிந்து, வருங்கால மாப்பிள்ளையை பார்த்த வாக்கில் மாறன் அமர, வண்டி மில்லுக்கு போகாமல், தோப்புக்கு சென்று நிற்க, இந்த இடைவெளியில் அழகன் சொல்ல நினைத்ததை மளமளவென தெரிவித்து விட்டான்.


“சௌந்தர் உன்கிட்ட டச்ல இருப்பான். அப்படி ஏதானும் யாராவது கேட்டா, கூட படிச்ச க்ளாஸ்மேட், பேட்ச் ரீயூனியன் பத்தி பேச கூப்பிட்டதா சொல்லி சமாளி மாறா.”


அழகன் கூறியதற்கு சரி என்று வெறுமே தலையாட்டினான்.


“நெருங்கின சொந்தம் எல்லாம் ஊருக்குள்ள தானே இருக்காங்க?”


“வர வாரம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு திருவிளக்கு பூஜைங்கறதால, அப்பாவோட சொந்தக்காரங்க அதுக்கு வந்துடுவாங்கன்னு அம்மா சொல்லிட்டிருந்தாங்க. அம்மா பக்கத்து ரிலேடிவ்ஸ் சிலர் வெளியூர்ல இருக்காங்க, அவங்களை தான் கூப்பிட முடியாது.”


”ம்ம்… அத்தை சொன்னாங்க, திருவிளக்கு பூஜையை கணக்குல வெச்சு தான் நானும் ஏற்பாட்டை செஞ்சேன். சென்னையில வரவேற்பு வைக்க போறோம். அதுக்கு அத்தையோட சொந்தங்களை கூப்பிட்டுக்கலாம்… உனக்கு ஓகே தானே மாறா?”


“ஹான்… சரி…” தடுமாறி பதில் தந்த மாறன், அதிகப்படி விஷயங்களை திணறலோடு உள்வாங்கி கொண்டிருந்தான்.


இதுவரை செய்த ஏற்பாடுகளை வரிசைப்படுத்திய அழகன், மேலும் சிலவற்றை மாறனுக்கு எடுத்து கூறி, “அடுத்த சில நாள் சரளமா பொய் சொல்ல வேண்டி இருக்கும் மாறா!”


“பொய்யா?” அதிர்ந்தவனிடம்,


“ம்ம்ம்… மயூ வேலை செஞ்சுட்டு இருந்த சென்டர்ல நடந்த திறப்பு விழாவுக்கு போன இடத்துல அவளை பார்த்து, எனக்கு ரொம்ப பிடிச்சதால, அதுவும் அவ நம்மூர் டாக்டர் சிவபாதம் பொண்ணுன்னு தெரிய வரவும், இங்கேயே வேலை மாத்தல் செஞ்சு, பக்கத்துல இருக்க வெச்சு… இந்த ஆராய்ச்சி மையம் சம்பந்தமா பேசுற சாக்குல அவகிட்ட பழகினதா எங்க சொந்தத்துல நாங்க எப்படி சந்திச்சோம்ங்கற கதையை சொல்ல போறோம்.”


“இஷ்டப்பட்டதுல நான் வற்புறுத்தி கிட்டத்தட்ட மிரட்டி, உங்களை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிருக்கேன்னு நம்ப வைக்க முயற்சி பண்ண போறேன். இதெல்லாம் கல்யாணம் முடிஞ்ச பின்ன, படை எடுத்து கேள்வி கேப்பாங்கல்ல, அப்ப தான் காத்துல சேதியா பரவ போகுது. எங்க கல்யாணம் நடக்க போறது, என் கூட பொறந்தவங்க, அப்புறம் உனக்கு, சௌந்தர் தவிர வெளிய யாருக்கும் இப்போதைக்கு தெரியாது.”


“இப்போதைக்கு சொந்தங்ககிட்ட, முதல் அமைச்சர் இந்த ஆட்சியில முதல் முறை நம்ம ஊருக்கு வரார். அதால பெரிய விருந்து ஸ்கந்தவேல் குழுமம் சார்புல, வர போற மொத்த ஜனங்களுக்கு கொடுக்கறதா சொல்லி விட்டு இருக்கேன். நம்ம ஊருக்கு வர முதல்வருக்கு, எங்க குடும்பம் சார்பா மரியாதை செய்ய போறதா நினைச்சு தான், எங்க பக்க ஆளுங்க வர போறாங்க. புரிஞ்சுதா?”


“விருந்தெல்லாம் தடபுடலா ஏற்படாடு செஞ்சாச்சு. போலீஸ் பாதுகாப்பு முழு வீச்சுல இருக்கு. அதுக்கு பிறகும் ஒரு வாரம் வரை இங்க சிறப்பு டியூட்டி போட்டு இருக்கேன். ப்ரைவேட்டா ஒரு டீம் செக்யூரிட்டிக்கு இறக்கி இருக்கேன். பக்காவா எல்லாமே ஏற்பாடாகி இருக்கு.”


அழகன் சொன்னதற்கெல்லாம் வெறுமே சரியென தலையை அசைத்தான் மாறன். ஏற்கனவே பூரி அம்மா, மயூ அனைவரும் இதை அறிவர். இவர்கள் உறவுகளுக்கு என்னென்ன எப்படி கல்யாணத்தின் பின் கூற வேண்டுமென பாடம் எடுத்தான் அழகன்.


“உங்க ஆளுங்க எல்லாரும் ஊருக்குள்ள, எங்க சொந்தமும் விளக்கு பூஜைக்குன்னு மொத்த ஜனமும் ஒண்ணா கூடி இருக்க போறாங்க. திடீர் கல்யாணத்தை பார்த்து, அதிர்ச்சியாகி… எங்காளுங்களுக்கு பிரச்சனை ஆகிடாதே?” கலக்கமாய் கேட்ட மாறனிடம்,


“எந்த விபரீதமும் நடக்காம பார்த்துக்க, என்னால முடிஞ்ச அளவு யோசிச்சு நடந்து இருக்கேன். பார்த்துக்கலாம்…”


மச்சானின் தோளை தட்டி, திடம் ஏற்றி, “எதுவா இருந்தாலும் ஒண்ணு மயூ, அத்தை இல்ல அவங்ககிட்ட பேச கூடியது இல்லைன்னா சௌந்தர்கிட்ட தயங்காம சொல்லு மாறா. இனி நீ ஜாக்கிரதையா இருந்துக்கணும். அக்கம் பக்கம் பார்த்து நட, பேசு. அதே சமயம் எப்போவும் போல சாதாரணமா சகஜமா இரு. அத்தையும், மயூவும் நல்லா டியூன் ஆகிட்டாங்க. நீ ரிலாக்ஸ்டாக இரு… நான் பார்த்துக்கறேன்.”


“சரி… அப்புறம்…”


“என்ன தயக்கம் மாறா?”


“மயூவுக்கு நகை ஓரளவுக்கு செஞ்சு வைச்சு இருக்கோம். மத்த சீர் விவரம் சொன்னா, நான்…”


“மாறா, இது லவ் மேரேஜ்! மயூ கொண்டு வர போற சீரை நான் எதிர்பார்க்கலை.”


“இருந்தாலும்…”


“நான் அத்தைகிட்ட பேசிக்கறேன். வீணா இதை எல்லாம் நினைச்சு நீ ஸ்ட்ரெஸ் ஆகாதே.”


அதே நேரம் கார் ஜன்னல் தட்டபடவும், அங்கே நின்றிருந்த மயூவை கண்டனர்.


அனைவரையும் புன்னகை முகமாக மையூ எதிர்கொள்ள, “எங்க கல்யாணத்துக்கு உனக்கு பரிபூரண சம்மதம் தானே மாறா?” அழகனின் கேள்வியில்


மாறனின் தலை தன்னால் ஆமென அசைய, “பார்த்துக்கோ உன் அண்ணா யெஸ் சொல்லியாச்சு,” பெருமிதமாய் தெரிவித்த அழகனிடம்,


“அவனை நல்லா பாருங்க… பேயை கண்டது போல முழிக்கறான்! எங்கண்ணனை மிரட்டி வெச்சுட்டு, பயபுள்ள பயந்த மேனிக்கு சரின்னு தலையாட்டறான்.” கேலி பேசிய தங்கையை,


“சும்மா இரு மயூ…” மாறன் அடக்க பார்க்க…


“மச்சான் உன் தங்கை என் கண்ல விரல் விட்டு ஆட்டுறா. மீ பாவம், கொஞ்சம் என் சார்பா அதட்டி வைங்க,” கொளுத்தி போட்டான் அழகன்.


“மயூ…” மாறன் மேலும் பேசும் முன், “பத்த வெச்சாச்சு இல்ல, கிளம்புங்க. சௌந்தர் அண்ணா, நீங்க கூட அவர் கட்சி தான்ல? மயூ அப்படி இல்லன்னு ஒரு வார்த்தை எனக்கு சப்போர்ட்டா சொல்லலைல்ல நீங்க? இருங்க… உங்களை கவனிச்சுக்கறேன்.”


“ஐயோ அண்ணி… எனக்கு எதுவும் தெரியாது.” அவன் அலற…


“வம்பு பண்ணாம வா மயூ…” என மாறன் இழுக்க…


காதில் போன் போல அழகனுக்கு சைகை செய்தவள் சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தாள்.


கார் புறப்பட, மயூ ஒரு பாதை வழியாக நகர, “இந்த பக்கம் எங்க போற நீ? ஓ உனக்கு தான் நல்லா வழி தெரியும்” என தங்கையை பின் தொடர்ந்தான் மாறன்.


அதன் பின் இருவருமே கார் சந்திப்பு குறித்து வாய் திறக்கவில்லை. யார் கண்ணிலும் சிக்காமல் வீடு போன பின்னே தான் மயூவின் வாய் பூட்டு அவிழ்ந்தது.


எல்லாம் சுமூகமா நடக்க வேண்டும் என கடவுள் முன் வேண்டி நின்றான் மாறன்.


‘இன்னொரு விக்கட் டவுன்… இனி வெயிடிங் ஃபார் பிக் டே’ என நினைத்து கொண்டாள் மயூ.


அதன் பின்னான நாளில் அங்கே அம்மு, கதிர் ஒரு பக்கமும், இங்கே மாறனின் துணையும், உதவியோடு பூரி அம்மாவும் வீட்டளவில் பார்க்க வேண்டிய காரியங்களை கன ஜோராக கவனிக்க, பரமு அம்மாவின் புறுபுறுத்தல்கள் எடுபடவில்லை.


சௌந்தர் தான் தோள் நின்றான் அழகனுக்கு. அமைச்சர், எம் எல் ஏ, கட்சி சார்பாக, கல்யாண மாப்பிள்ளை என பல அவதாரங்களை சமாளிக்க நாக்கு தள்ளி தான் போனது செந்தூர் அழகனுக்கு.


இரவில் நிலவின் தண்ணொளியில் மயூவோடான அந்த சில நிமிட கைப்பேசி உரையாடல் பொழுதுகளே அவனை உற்சாகமூட்டும் கணங்களாகி போக… காதல் கை கூட போகும் மகிழ்வும் தொய்வில்லாமல் காரியங்கள் ஆற்ற அவனுக்கு உந்து சக்தி கொடுத்தது.


முதலமைச்சர் ஞாயிறன்று வரவிருப்பதால் ஊருக்குள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததில், ஆத்தூருக்குள் கால் வைத்தவர்கள் எல்லோருமே இன்னார்… வந்ததற்கான காரண காரியங்கள் விசாரித்த பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


திருவிளக்கு பூஜைக்கு சொந்த ஊருக்கு வந்த, மாறனின் பக்க உறவுகள் எந்த சலம்பலும் இன்றி ஊருக்குள் நுழைய சௌந்தர் எல்லா ஏற்பாடுகளையும் பிசிறின்றி செய்திருந்தான்.


இது ஒருபுறம் இருக்க, அங்கே மயூவுக்கு வேலையும் பின்னி எடுத்தது. கால்நடை மைய திறப்பு விழா பணிகள் அவளை பணியிடத்தில் அதிக நேரம் இழுத்து வைக்க, ஒரு விதத்தில் அவளுக்கு அது அனுகூலமாகவே அமைந்தது.


பின்னே ஊருக்குள் உறவு நடமாட்டம் அதிகரித்திருக்க, இப்போது பொழுதன்னைக்கும் வீட்டுக்கு ஆள் வரத்தும் ஆகி, வருவோர் போவோரின் மயூ மற்றும் மாறன் திருமணம் குறித்த விசாரிப்புகள், “இந்த ஜோசியரை பாருங்க…” “ஒரு நடை அந்த கோயிலுக்கு போயிட்டு வா பூ…” “இந்த வேண்டுதல் வையேன்” போன்ற இலவச ஆலோசனைகள் அதிகரித்தது.


பாவம் மாறன் தான், கொஞ்சம் தவித்து போனான். பேச்சுவாக்கில் எதையும் உளறிட கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வில், வாய்ப்பூட்டு போட்டு நடமாடியவனிடம் வேறு, “ஏன் என்னவோ போல இருக்க?” என்று குடைச்சல் கேள்விகள் தொடர்ந்தது.


“தம்பி ஏன் இவ்வளோ அமைதியா இருக்கான்?” என்று பூரியிடமும் விசாரிப்புகள் நடக்க,


“ஆஃபீஸ் டென்ஷன், சென்னைக்கு போகணுமாம். இங்க வேண்டுதல் இருக்கே… அதான் பாவம் அப்படி இருக்கான்.” அவரும் சமாளித்து வைத்தார்.


அனைவரும் கிளம்பி போன பின், மூவரும் சற்றே ஆசுவாசமாகி, அதற்குள் மறுநாள் விடிய, இதே போல நடப்புகள் தொடர அந்த சில நாட்கள் இப்படியே கழிந்தது.


வெள்ளியன்று அமாவாசை… அன்று தான் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை. தாம்பாளத்தில் விளக்கை ஏந்தி பக்தி பாடல்கள் பாடி கொண்டே சிறு ஊர்வலமாக ஒவ்வொரு தெருவினரும் புறப்பட்டு, ஒன்றாக கோவில் பிரகாரத்தில் கூடினர். அதன் பின் அம்மனின் முன் உள்ள இடத்தில் துவங்கி ஒவ்வொரு சாதியினரும் வரிசையாக அமர்ந்து வாழையிலை விரித்து, பூஜை பொருட்களை அடுக்கி… விளக்கு பூஜை இனிதே துவங்கியது.


விளக்கு பாடல்கள், அம்மன் துதி பாடல்கள் வாய் விட்டு பாடினர். மயூ மனதார வேண்டி ஐந்து முக நெய் விளக்கை ஏற்றினாள். குடும்பத்தினரின் நலனுக்காக, அழகனுக்காக, அவர்களுக்காக, எந்த சச்சரவும், உயிர் சேதமும் இல்லாமல் திருமணம் நடக்க அம்மனை இரு கரம் கூப்பி துதித்தாள்.


உறவுகளுக்கு திருமண விருந்து வைக்க முடியாது என்பதால், வேண்டுதல் என்று சொல்லி, பூரணி அன்னதானமும் ஏற்பாடு செய்திருந்தார். அது அவருக்கு ஒரு நிறைவை கொடுத்தது.


கோவில் பூஜைக்கு வந்தவர்களை, முதல்வர் கிளம்பிய பின்பே நீங்கள் ஊரை விட்டு நகர முடியும் என்றும் கட்டளை பிறப்பித்திருக்க, சிவபாதத்தின் உறவுகள் சிலர் அது குறித்து அதிருப்தியாக முணுமுணுத்தாலும், வேறு வழியில்லை என அமைதி காத்தனர்.


இப்படியாக மயூ குடும்பத்துக்கு திக்திக் கணங்கள் நிறைந்திருக்க, மணமகனுக்கான எந்த அறிகுறியும் இல்லாது, கட்சி பெரும் தலைகள், தொண்டர்கள், போலீஸ் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளோடு பல்வேறு சந்திப்புகள் நடத்தி கொண்டிருந்தவனுக்கு ஓய்வு என்பதே இல்லை.


திருமணம் குறித்து இன்னமும் பரமு அம்மாளுக்கு பிடித்தம் இல்லை தான். அதே நேரம், கல்யாண ஏற்பாடுகள் என்னவோ நடந்து கொண்டிருக்க, யாருக்கோ விஷேஷம் போல அழகன் வேலையிலேயே அமிழ்ந்து கிடப்பதை பார்த்து அதற்கும் அதிருப்தி கொண்டு அம்முவிடம் புலம்பி தள்ளி விட்டார்.


இதுதானா இதுதானா

எதிா்பாா்த்த அந்நாளும்

இதுதானா இவன்தானா

இவன்தானா மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா…


அந்நாளும் இனிதே விடிந்தது… இனிமையாக நிறைவுறுமா?Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page