top of page

மஞ்சக்காட்டு மயிலே 15

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 15


அந்தி சாயும் நேரம், அன்றைய நாள் முழுதும் ஒரு வித அழுத்தத்தோடு தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்த மயூவுக்கு மாலையில் மனம் ஒரு நிலையில் இல்லை.


அழகனை முதன் முதல் பார்த்த போதோ, அவனோடு பழகிய அந்த ஆரம்ப காலங்களிலோ இல்லாத ஒன்று இப்போது பெண்மயிலை பீடித்து கொண்டது. அது பய உணர்வு!


ஊரில் நிலவும் சாதிய வேற்றுமைகளும், அதனால் வெடிக்கும் சண்டைகளையும் பற்றி அப்பா சிவபாதம் எடுத்து சொல்லிய போதும், பள்ளியில் கற்ற,


சாதிகள் இல்லையடி பாப்பா; –

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி –

அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும்;

தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடைய நெஞ்சு வேணும்; –

இது வாழும் முறைமையடி பாப்பா.


பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி, “காலம் மாறிடுச்சு ப்பா. உங்க அனாவசிய பயத்தை விட்டொழியுங்க” என அனுபவமில்லா சிறு பிள்ளையாய் சுலபமாக அப்பாவிடம் பேசியது இப்போது பயமறியா இளங்கன்றின் பிதற்றலாக பட்டது.


இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்டு விட்ட மனமுதிர்வும், இங்கே வந்த பின் கண் கூடாக பார்க்கும், கேட்கும் சுற்றியுள்ள ஊர் பக்கங்களில் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் குறையாமல் நடக்கும் சாதி தொடர்பான கலவரங்கள் மற்றும் கொலைகள் எல்லாம் மயூவின் திடத்தை குலைத்ததன் விளைவு, வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க போகிறேன் என அழகன் தெரிவித்த நொடி முதல் உள்ளம் அச்சத்தில் தடதடக்கிறது.


கல்யாண கனவுகளினால் வரும் இன்ப படபடப்பு அல்ல இது… உற்றார் உறவுக்கு அவளின் காதலினால் கேடு விளையுமோ என்ற கவலையில் மருண்ட நெஞ்சத்தின் கிலி பிடித்த துடிப்பு இது.


“உனக்காக தான் காத்திருக்கேன் மயூ. சீக்கிரம் கிளம்பி வா, கோவிலுக்கு போகணும்” வெளியே செல்ல கிளம்பி தயாராக இருந்த பூரணி, மகள் வீட்டினுள் நுழையவும் அவளை துரிதபடுத்தினார்.


“நீங்க போங்க…” சுரத்தில்லாமல் மறுத்த மகளின் மனமும் அதில் இப்போது குடியிருக்கும் கலக்கமும் பூரணியும் அறிவார்.


மதியமே பூரணிக்கு அழைத்த அழகன், அவருக்கு திடம் ஊட்டி, அடுத்து செய்ய போவதை கலந்து ஆலோசித்திருந்தான். இன்றைய தேதியில் அழகனுக்கு இருக்கும் பெரியவர் துணை பூரணி மட்டுமே.


பூரணிக்கோ இத்தனைக்கு பின்னும் மகள் வாய் பூட்டு போட்டு கொண்டு நடமாடுவதை ஜீரணிக்க கடினமாக இருந்தாலும், அவரின் செல்ல மகளல்லவா… அம்மாவாக இதையும் பொறுத்து கொண்டு மகளின் நலனுக்காக அவரால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்.


“வா மயூ… இன்னைக்கு நம்ம பேச்சி பாட்டி வீட்ல ஏதோ விசேஷ பூஜை பண்றாங்களாம். ஏற்கனவே நம்ம சொந்தக்காரங்க எல்லாம் கோவில்ல இருக்காங்க. நீ வரணும்னு தான் காத்திருந்தேன்.” அதன் பின் மறுக்க வழியற்று அவசரமாக குளித்து கிளம்பி அம்மாவோடு ஆலயத்துக்கு போன மயூவுக்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது.

*******************************


புலம்பி அரற்றிய பரமு அம்மாவை தேற்ற அமுதா மற்றும் தமிழரசியால் முடியவில்லை.


அழகனின் பேச்சில் முழுதும் கரைந்து விட்டாள் அமுதா. வீட்டுக்கு மூத்த வாரிசு… அன்பான புகுந்த வீடு, காதலித்து கை பிடித்த மனைவியை தாங்கும் கதிரேசன் என நிறைவாய் வாழ்பவளுக்கு, அப்போதைக்கு மற்ற எல்லாம் விட உடன் பிறந்தவனின் சந்தோஷம் ஒன்றே முக்கியமாக பட்டது.


காலதிற்கேட்ப அம்முவின் மனதிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதை வெளிப்படையாக காட்டி கொள்ளும் தைரியம் இல்லை. பிறந்தது முதல் பழகிய அவர்களின் குடும்ப கோட்பாடுகளுக்கு உட்பட்டு சரணடைந்து விடுகிறாள்.


தமிழரசியை பொறுத்த மட்டில் பெரிதான கருத்து இவ்விஷயத்தில் இல்லை. பிறந்த வீட்டின் எல்லா நிகழ்வுக்கும், அவள் கணவன் சங்கர் ஏதோ குற்றம் குறை சொல்வதே வழக்கமாகி விட்டது. சும்மாவே ஆடுபவனுக்கு, இப்போது அழகனின் காதல் உடுக்கை அடித்து விட்டது.


தனிப்பட்ட கருத்துக்கள் இல்லாமல் தம்பி, அக்கா இவர்கள் முடிவே தனது என இருக்கும் அரசி இயல்பில் மிகவும் நல்லவள். திருமணத்துக்கு பின்னே சில மாறுதல்கள் அதுவும் சங்கரினால் வந்திருக்கிறது. பிறந்தகம் அனாவசிய வசை வாங்குவதை தடுக்கும் பொருட்டு கணவனுக்கேற்றது போல வளைந்து பழகி விட்டாள்.


அக்கா, தங்கை இருவருக்குமே உடன் பிறந்தவனின் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே குறி. அதிலும், என்னை கொண்டு அக்காவை பிரிக்க பார்க்காதீர்கள் என்ற அவனின் பேச்சில் இருவருமே உருகி போயிருந்தார்கள். இத்தனை அன்பான தம்பிக்கு அவன் மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களுக்கு.


அம்மாவை பார்த்து கொள்ள தங்கையிடம் சொல்லி விட்டு கோவிலுக்கு கிளம்பினாள் அமுதா. “நாங்களும் வருகிறோம்” என யாழ், நிலா, இனி, எழில் உடன் சேர, பிள்ளைகள் நால்வரோடு போனவளுக்கு அவர்களின் பேச்சும் சிரிப்புமே ஆறுதலாக இருந்தது.


கோவிலில் ஏதோ விசேஷ பூஜை நடந்து கொண்டிருக்க, எப்போதும் செய்யும் அர்ச்சனை செய்யாமல் சிறப்பு நுழைவாயில் மூலம் வெறுமே அம்மனை தரிசித்து விட்டு பிரகாரத்தை சுற்ற துவங்கிய அம்மு, அப்போது தான் எதிரே மயூவும், பூரணியும் வருவதை கண்டாள்.


கோவிலின் உள்ளே நுழைந்த கணமே அம்முவை பார்த்து விட்டாள் மயூ. அன்றிருந்த மனநிலையில் முகத்தில் சிறு அதிர்வு தோன்றி மறைய, நொடி பொழுதென்றாலும், மயூவை பார்த்து விட்ட அம்முவும் அந்த மாற்றத்தை கவனித்து விட்டாள்.


அதற்குள் யாரும் எதிர்பாரா விதமாக “ஹை, டாக்டர். மேடம்” என துள்ளலாக மயூவை நோக்கி நகர்ந்தாள் இனியா.


“இனி, எங்க போற?” எழிலின் கேள்விக்கு “இரு வரேன்” என சொல்லி கொண்டே மயூவை அடைந்து விட்டாள் இனியா.


ஊர்க்காரர் ஒருவர் எதிர்பட, அவரோடு பேச நின்று விட்ட பூரணி, அந்த நபர், மற்றும் மயூ என எல்லோருக்கும் இனியா இவர்கள் அருகே வரவும், சற்றே அதிர்ந்து பின்னடைந்தனர்.


“டாக்டர் மேடம் எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். நீங்க நம்ப ஊருன்னு தெரியும்… ஆனா இதுவரை மீட் பண்ற சந்தர்ப்பம் அமையலை.” இனியா தன் போக்கில் வளவளத்தாள்.


மற்ற நேரம் எனில் மகளை கண்டிப்பு குரலில் அழைத்து இருப்பாள் அம்மு. வருங்கால மாமி என்று அறியாமல் சகஜமாக பேசும் மகளை இப்போது கடிய மனமில்லாமல் அதே நேரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள எண்ணி மயூ அருகே போனாள்.


பாடி ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் என்ற நிலை மயூரிக்கு. அன்றைய டென்ஷனில் இருந்தவள் இப்போது அழகனின் மூத்த அக்காள் திடுமென அருகே வந்ததும் அவளையும் அறியாமல் நெற்றியில் வியர்வை லேசாக பூத்தது. அளவிடும் பார்வையாக இருந்தது அம்முவினது.


இனியாவின் பேர் தெரிந்தாலும் காட்டி கொள்ளாமல் பாவனையை மாற்றி “ஹாய்” என தயக்கமாக மயூ முகமன் செய்தாள்.


“ஓ… என்னை யார்னு தெரியலைல உங்களுக்கு?” இனியாவின் கேள்வியில் அம்முவையும் அறியாமல் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது. உன்னை அறிவாள் அவள் என்பதை சொல்லாமல் சொன்னது அது.


மயூவின் பார்வை அம்முவின் மீது இருக்க, பூரணிக்கு உள்ளுக்குள் படபடப்பு.


“வணக்கம் அமுதாம்மா,” பூரணி மற்றும் அந்த நபர் ஒரு சேர வணங்கியதற்கு புன்னகை சிந்தி, தலையை மட்டும் அசைத்தவளின் கரம் பற்றிய இனியா,


“ம்மா, இவங்க தான் நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க வெர்ட்டினரி டாக்டர். எங்க ஸ்கூலுக்கு பத்து நாள் முன்ன வந்தப்ப, அவங்களோட ஸ்பெஷாலிட்டி பத்தி விளக்கமா, ஸ்டூடண்ட்ஸ்க்கு கரியர் கைய்டன்ஸ் கொடுத்தாங்க.”


“அப்படியா இனி?” என்ற அமுதா, “ஹலோ, உங்களை இங்க சந்திச்சதுல சந்தோஷம்” என சொல்லி நிறுத்த, "உங்களை கோயில்ல சந்திச்சதை என் ஃபிரெண்ட்ஸ்க்கிட்ட சொல்ல போறேன். நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா டாக்டர்?” என இனியா உற்சாக ஊற்றாக ஒரு பக்கம் ஆர்பரித்தாளெனில்…


“நீங்க சிங்கம், புலிக்கெல்லாம் ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கீங்களா?” முக்கிய கேள்வியை கேட்டு கலங்கடித்தாள் நிலா.


“எனக்கு நாயை பார்த்தாலே பயம். நீங்க அனிமல்ஸ் பக்கத்துல எப்படி தைரியமா போறீங்க?” எழில் தன் பங்குக்கு கேள்வி தொடுத்தாள்.


“ஐயோ, நம்ம வீட்டு தொழுவம் ஒரே கப்பு, எப்படி அனிமல்ஸ் கூட வேலை பண்றீங்க? நாத்தம் அடிக்கும்ல?” யாழும் விட்டேனா பார் என ஆரம்பிக்க…


“பிள்ளைங்களா, அவங்க சாமி கும்மிட வந்துருக்காங்க,” அம்மு நினைவுறுத்த…


“எனக்கு பையாலஜி பிடிக்காது. அன்னைக்கு நீங்க கொடுத்த டாக் கேட்டப்புறம், இப்போ ஏதோ கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. எனக்கு டவுட் இருந்தா உங்ககிட்ட வந்து கேட்கட்டா டாக்டர்?” இனி அடுத்த படிக்கு வேகமாக முன்னேறி போக…


“இனி…” மகளை கண்டிப்பாய் அழைத்த அம்மு, “ஒரு நாள் சாவகாசமா புலிக்கு பல் விளக்கின கதை, சிங்கத்துக்கு ஷேவ் செஞ்சது, முதலைக்கு முடி வெட்டினது எல்லாம், நம்ம எல்லாருக்கும் விலாவரியா டாக்டரம்மாவை சொல்ல சொல்லலாம். இப்போ அவங்களும் சாமி கும்பிட போகணும், நாமளும் வீட்டுக்கு போகணும்” ஒரே போடாக போட்டவள், “பார்க்கலாம் மயூரி…” என்று விட்டு பூரணி பக்கம் தலையை லேசாக அசைத்து விட்டு, “நடங்க…” மகள்களை இழுத்து சென்றார்.


மூச்சை மெல்ல வெளியேற்றிய மயூ, குறுகுறுவென பார்த்த பூரணியை விடுத்து, “ம்மா நான் கோவிலுக்குள்ள போறேன்” என நகரவும், ஊர்க்காரரிடம் சொல்லி கொண்டு வேகமாக வந்து மகளோடு இணைந்து கொண்டார் பூரணி.


பூஜையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, சொந்தங்களிடம் சிற்சில வார்த்தைகள் அளவளாவி விட்டு, வேலையில் இருந்து நேரே வந்திருக்கும் மயூவுக்கு களைப்பாக இருப்பதால் உடனே கிளம்புவதாக சொல்லி கொண்டு, கோவிலை வலம் வர துவங்கினர் மயூவும், பூரணியும்.


ஏதோ யோசித்து விட்டு க்ளுக்கென சிரித்த பூரணியை என்னவென்பதாக பார்த்தாள் மயூ.


“ஹ ஹா ஹ ஹா… இல்ல… புலிக்கு பல்லு விளக்கினியா நீ? இதுல சிங்கத்துக்கு ஷேவாம்ல!” விடாமல் சிரித்து தள்ளினார் பூரணி.


அதுவரை இருந்த டென்ஷனில் அம்முவின் பேச்சு பெண் மயிலின் கருத்தில் பதியவில்லை. இப்போது அம்முவின் நக்கல் உரைக்க, கூடவே சேர்ந்து விட்ட அம்மாவின் கேலியில் சற்று வெகுண்டவள், “பார்த்து உங்க பல்லு சுளுக்கிக்க போகுது! அப்புறம் இந்த புலி டாக்டர் தான் வைத்தியம் பார்க்கணும்.”


இப்போது இருவருமே மனம் விட்டு சிரித்தனர். இருவருக்கும் மனதில் சிறு அமைதி குடி கொள்ள, வீட்டை அடைந்து இரவு உணவை உண்டு முடித்தனர்.


**************************


இரவு மணி பத்தரையை தாண்ட காத்திருந்த மயூ, அழகனை அழைக்க, இரு ரிங்கில் கைபேசியை எடுத்து விட்ட அழகன், “அட, என் மயில் செல்லத்துக்கு அதிசயமா இந்த மாமன் மேல மையல்?” கேலி செய்தான்.


“ப்ச்... காலையில இருந்து, வீட்ல என்னாச்சுன்னு போன் செஞ்சு சொல்லாம இருந்துட்டு, இப்போ நானாவே பண்ணா கிண்டலா உங்களுக்கு! குடும்பத்துக்கே வாய் கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு!”


“இங்க உள்ள நிலைமை புரியாம காயாத. எல்லாரையும் சமாளிக்க முயற்சி பண்ணி ஓய்ஞ்சு போயிட்டேன்.” விளக்கம் தந்தவன், “ஹே… அதென்ன குடும்பத்துகேன்னு சொல்லுற?”


மாலை கோவிலில் நடந்ததை மயூ மளமளவென மூச்சு விடாமல் தெரிவிக்க, இப்போது அழகன் சிரித்தான்… சிரித்தான்… விடாது சிரித்தான்.


“வேணாம் அழுக்கு பையா… என்ன தெரியும்னு உங்கக்கா என்னை கிண்டல் பண்றாங்க?”


“எங்கக்கா உனக்கு மதனி, மைனி… இனி அப்படி தான் கூப்பிடணும்.”


“உக்கும்… இன்னும் தாலியே கட்டலை, அதுக்குள்ள உறவு முறை சொல்லி தரான்.”


“நேரமடி மயிலு… நீ என்னை நக்கல் பண்ற அளவுல என் கிரகம் இருக்கு. அப்புறம் அப்புறம்” என மயூ சொன்னதையே மீண்டும் சில முறை ஒப்பிக்க வைத்தான்.


“ஒரு விக்கட் டவுன்…” களிப்பாக ஒலித்த அழகனின் குரலில் குழப்பம் கூட…


“என்ன ஆகிடுச்சுன்னு இப்படி சந்தோஷப்படுறே நீ?” மயூவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.


“அம்மு அக்கா அத்தனை சீக்கிரம் வெளி ஆளுங்கட்ட வாய் தொறக்க மாட்டா. கதிர் அத்தான் கூட, ‘இந்த வீட்டு வாசலோட உங்கக்கா வாய் ஆட்டோ லாக் போட்டுக்கும்’னு கேலி பண்ணுவார். கிண்டலான்னாலும் உன்கிட்ட முகம் திருப்பாம அக்கா பேசினது உண்மையாவே பெரிய விஷயம்! அப்ப, அவளுக்கு உன்னை பிடிச்சு போயிடுச்சுன்னு அர்த்தம்.”


“ஓ…”


“ஓ… இல்ல செல்ல மயிலே, ஓஹோன்னு குத்தாட்டம் போடறேன். சரி, நான் வைக்கறேன். இப்போவே அக்காகிட்ட பேசணும் நான்.”


அழகனின் மகிழ்வில் பெண்ணவளால் இணைய முடியவில்லை. “பிரச்சனை ஆகுமா அழகு?” குரலில் அத்தனை அச்சம்… மிகுந்திருந்தது.


“நான் பார்த்துக்கறேன்டா. கவலை படுறதை என்கிட்டே விட்டுடு தங்கமயிலம்மா. இப்போதைக்கு கனவுல என் கூட டூயட் பாடுவியாம். இன்னும் பத்தே நாள்ல நிஜத்துல என் பக்கத்துல பாடலாம்.” சில சமாதானங்கள், செல்ல முத்தங்களும், கொஞ்சல்களுக்கும் பிறகு பேசி அணைக்கப்பட, துள்ளி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் அழகன்.


அப்போதே மணி இரவு பதினொன்றை தாண்டி விட்டது. எத்தனை சொல்லியும் கேளாமல் பின் மாலையில் அரசி, மற்றும் பிள்ளைகளோடு கிளம்பி விட்டான் சங்கர். அவர்கள் கிளம்பி விட்ட சோகத்தில் வீடு சீக்கிரமே அடங்கி இருந்தது.


அழகனுக்கோ நேரம் எல்லாம் மனதில் பதியவில்லை. மூத்த அக்காவின் அறை கதவை விடாமல் தட்டினான்.


சில நிமிடங்கள் சென்று கதிர் கதவை திறக்க, அப்போது தான் அழகனுக்கு உறைத்தது.


“சாரி அத்தான்…” என்றவன், “அக்கா…” என்றிட,


“அம்மு படுத்துட்டா, என்ன அழகா?”


“அக்காவை எழுப்புங்க அத்தான்.”


“என்னடா,” கணவனின் பின் வந்த அமுதா கேட்க,


அத்தானை தள்ளிக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தவன், “சாயங்காலம் மயூவை கோவில்ல பார்த்தியாக்கா? முன்னவே ஏன் சொல்லலை என்கிட்டே? பேசினியாமே? உனக்கு பிடிச்சுருக்கா? சொல்லுக்கா… செம ஸ்வீட்ல என் மயூ! என்ன பேசின? உன்னை பத்தி தான் சொன்னா, உனக்கு பிடிச்சு இருக்கு தானே? செம அழகுல! இந்த அழகனுக்கு பொருத்தமான அழகி தானே?” பதில் தரும் சந்தர்ப்பம் அம்முவுக்கு தராமல் கேள்வி கேட்டு தள்ளியவனின் குரலில் துள்ளிய உற்சாகமும், ஆர்வமும் கேட்டும், பார்த்தும் கதிரின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.


அழகனை சிறு பிள்ளை முதல் அறிவான். மாமனாரின் மறைவுக்கு பின் இத்தனை ஆண்டுகளில் இருவரின் உறவில் அத்தனை நெருக்கம் கூடியிருந்தது. அப்படியிருக்க எப்போதும் கண்டிராத ஆர்பரிப்பும், தவிப்புமாக தன் முன் இருப்பவனை பார்த்து அதிசயித்தான் என்றால் மிகையில்லை.


முழு வீச்சில் அரசியலில் இறங்கிய பின், உணர்வுகளை அத்தனை சீக்கிரம் வெளியிடுவதை, அதுவும் கதிர் கற்று தந்தே, மனதில் இருப்பதை காட்டாத தன்மையை அழகன் முயன்று வளர்த்து கொண்டான். அப்படிப்பட்டவனின் இந்த தன்னிலை மறந்த உணர்வு வெளிப்பாட்டை கண்டதும், காலை முதல் கதிரின் உள்ளே கொழுந்து விட்டு எரியும் கோப தீ அழகனின் பாவனையில் இப்போது சிறிது தன்னால் தணிந்தது.


கைகளை கட்டி கொண்டு அழகனை கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான் கதிர். கணவனை கவனித்ததில் அம்முவின் கவனம் அங்கே திரும்ப, தம்பிக்கு பதிலளிக்காமல் நின்றிருந்தாள். சட்டென சூழ்ந்த அமைதியில் தன்னிலை மீண்ட அழகன், ஒரு நொடி நிதானித்தான்.


“எப்படிடா? இவ்வளவு லவ்வையும் இத்தனை வருஷம் எப்படி ஒளிச்சு வைச்ச? விட்டா இப்போவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு உங்கக்காவை இழுத்துட்டு போவ போல!” அப்படி கூட செய்யலாமோ என ஒரே ஒரு மில்லி செக்கன்ட் அழகனின் முகம் யோசனைக்கு போக, அதையும் இருவரும் கவனித்து குறித்து கொண்டனர்.


கணவனின் தோளை தட்டி, “சும்மா இருக்கவனை கிளப்பி விடாதீங்க… என்னை கையோட இழுத்துட்டு போய், அந்த பிள்ளையை என் முன்னவே கட்டி பிடிச்சாலும் பிடிப்பான் இவன்!”


அம்மு முடிக்கவும், “இது இன்னும் சூப்பர் ஐடியா அம்மு!” பட்டென தன்னை மறந்து கூறிய அழகன், புருஷனும், பொண்டாட்டியும் அவனை கேலி செய்வதை உணர்ந்திட, தன் அவசர பதிலில் வெட்கம் வேறு வர, அழகனின் முகம் சற்றே செம்மையுற்றது. தலை முடியை கோதுவது போல கையை குறுக்கே கொண்டு வந்து முகத்தை பாதி மறைத்து கொண்டவனை கண்டு, மோவாயில் கை வைத்தாள் அமுதா.


“அட அட… என்னே காட்சி? போனை எடு அம்மு… இதை கேப்சர் பண்ணி, வைரலாக்கி தெறிக்க விடலாம்,” கதிர் விடுவதாய் இல்லை.


அம்முவின் கண்களில் லேசான கண்ணீர் படலம், “ஏன்டா முன்னாடியே சொல்லலை? இத்தனை வருஷம் வீணா வெளிய பொண்ணு தேடி அலைஞ்சோம். இத்தனை ஆசைக்கு அணை போட்டு, எங்களையும் அலைய விட்டு…”


“சாரிக்கா… அதெல்லாம் பெரிய கதை, மயூ படிப்பை முடிக்காம என்னால எதுவும் செய்திருக்க முடியாது. அதுக்கப்புறமும் அவ முன்ன போய் நிக்க முடியாத நிலைமை.”


“அம்மு, நீ இதை நம்பறியா? அந்த பிள்ளையை இவன் பார்க்கலைன்னு நம்மகிட்ட கதை விடறான்! எனக்கெல்லாம் ஏழு மாசத்துல காது குத்திட்டாங்க மாப்பு.” கதிர் கிண்டலடித்தான்.


“என்னை என்ன உங்களை போலன்னு நெனைச்சீங்களா அத்தான்? ‘உங்கக்கா ஏண்டா ஒரு வாரமா கோவிலுக்கு வரலை? நேத்து மிட்டாதார் வீட்டு விசேஷத்துக்கும் உங்கக்கா தவிர உங்க வீட்ல மித்த எல்லாரும் வந்தீக! உங்கக்கா ஊர்ல இல்லையா? சொல்லு அழகா… உனக்கு ரோபோ கார் சொல்லி வெச்சுருக்கேன்’னு விஷயத்தை கறக்கறதுக்காக எனக்கு அப்போவே யாரோ லஞ்சம் கொடுத்து கரெக்ட் பண்ண பார்த்தாங்களே… யாரு அம்மு அது?” கதிரின் குட்டை வெளியே போட்டு உடைத்தான் அழகன்.


“டேய்… மாப்பிள்ளை… வேணாம்… சும்மாவே உங்கக்காவை பிடிக்க முடியலை. கம்பெனி ரகசியத்தை வெளிய விடாதே…” கதிர் அலற,


“ஹ ஹா… அங்க மட்டும் என்னவாம்? நீங்க பொண்ணு பார்த்துட்டு போன பிறகு வந்த கோவில் திருவிழாவுல, குனிஞ்ச தலை நிமிராம, நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டு என்னை படுத்தி எடுத்து, உங்களை தூரமா இருந்தே பார்த்து சைட் அடிக்க, வெறும் வாயாலேயே உங்க லொகேஷனுக்கு லாடிடூட், லாங்கிடூட் போட்டவங்க தான் அம்மு அக்கா.”


“தப்பு தப்பா திசையை சொல்லி, நானும் கவனிக்காம பெரியத்தானை பார்த்து சிரிச்சு வைச்சு… பல்ப் வாங்கினேனே உன்னால. அதை விட்டுட்டியே அழகா…” சில நொடிகள் கதிரேசன், அமுதாவின் கல்யாண நாட்களுக்கு பயணித்தவர்கள், மனம் லேசாக சிரித்து உரையாட…


வாஞ்சை ததும்ப தம்பியின் கையை பற்றி, “பிள்ளை பார்க்க அந்த அம்மனாட்டம் இருக்கா, படிச்ச களை நல்லா முக தேஜஸ்ல தெரியுது. உனக்கு ஏத்த ஜோடி தான். ஹும் பாழா போன சாதி குறுக்க நிக்குதே. எல்லாம் நல்ல படியா நடந்தா சரி அழகா. அத்தானுக்கு எப்படியோ, எனக்கு ஓகே. அம்மாவை ஒப்புக்க வைக்க முடியும்னு தோணலை.”


“இன்னும் கோபமா அத்தான்?” நைசாக கொக்கி போட்டான் அழகன்.


“ஊருக்குள்ள மக்க மனுஷ முறையில எத்தனையோ பிள்ளை இருக்கப்ப, அவங்களை விட்டுட்டு ஏண்டா வில்லங்கமா காதல் பண்ணி வெச்சுருக்க. எனக்கு கோபம் இருக்கு இல்லைங்கறது முக்கியமில்ல… அத்தைக்கு சம்மதம் இல்லாம கல்யாணத்தை முடிச்சுட்டு அந்த பிள்ளையை இங்கன கூட்டிட்டு வந்தா, தினப்படி அவ முகத்தை பார்க்கணும், பேசணும்ல!”


“பொண்டாட்டின்னு ஒருத்தி வந்த பின்ன சும்மாவே இந்த அம்மாக்கள் எம்மவன்னு உரிமை போராட்டம் ஆரம்பிச்சு சண்டையும், சச்சரவும் வரும். இதுல பிடிக்காத மருமக கேட்கவும் வேணுமா? நடுவுல உனக்கு சப்போர்ட் பண்றேன்னு, என் தலையையும் உருட்ட போறாக அத்தை.”


“அட… மாமியாருக்கு பயந்தவர் தான் நீங்க!” அம்மு கேலி பேச…


“சும்மா இரு அம்மு… ஏற்கனவே ‘உமக்கு இந்த விஷயம் தெரியாம இருக்காது. இத்தனை வருஷம் சொல்லனும்னு தோணலையா’ன்னு என்னை உலுக்கிட்டாக அத்தை.”


“சாரி அத்தான். மறைக்கணும் இல்ல… அது,” அழகன் மேற்கொண்டு சொல்லாமல் தயங்கி நிறுத்த…


“விடுடா… எனக்கு புரியத்தான் செய்யுது. ஆனா, என் ஒருத்தன் சம்மதம் மட்டும் போதாதே. அத்தை, சங்கர் தம்பி குடும்பம், ஊரு நிரம்ப உறமுறை அடுத்து கேள்வி கேட்டு கிளம்பி நிப்பாங்க. சாதி ஆளுங்களை கேக்கவே வேணாம். முன்னேற்பாடா நீ பாதுகாப்பு போட்டு கவனிச்சாலும், இந்த விஷயத்துல இவங்க கொம்பு சீவின காளைங்க, கொடல் உறுவாம ஓய மாட்டாங்க. இதை நினைச்சாலே மதியத்துல இருந்து எனக்கு உள்ளுக்குள்ள பகீர்னு தடதடக்குது.” அவன் உணர்வுகளை கதிர் போட்டுடைக்க, அதுவரை சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகை முகமாக இருந்த தம்பியின் முகம் சட்டென வாடி கூம்பியதை காண பொறுக்காத அன்பு அக்காவாக,


“போதுங்க மாமா, அவனே கலங்கி, நீங்க தாங்குவீங்கன்னு தானே வந்து ஆதரவுக்கு நிக்கான்.” கணவனை இடையிட்டு நிறுத்தியவள், “அது இல்ல தம்பி, இப்படி பொசுக்குனு சொன்னா எப்படி? கல்யாணத்துக்கு எத்தனை ஏற்பாடு பண்ணனும்! துணி எடுக்கணும், தாலிக்கு பொன் உருக்கணும், சுத்துபட்டுல எம்புட்டு சொந்தம்… யாருக்கு சொல்ல யாரை விட? போதாததுக்கு கட்சி ஆளுக வேற அலையென திரண்டு வர போறாக!” கல்யாணம் என்றாலே கண் முன் வரிசை கட்டும் காரியங்கள் குறித்து சுட்டி, அம்மு அடுத்த கட்டத்துக்கு தாவினாள்.


“க்கா… அக்கா… உன்னை கேட்காம நாளைக்கு முஹுர்த்த பட்டை வீட்டுக்கு கொண்டு வர சொல்லி இருக்கேன்.”


“உன் தம்பி தீயா வேலை செய்யறான். என்னா வேகம்…” கதிர் கலாய்க்க,


“அத்தான்…” சிணுங்கியவன், அவன் இதுவரை செய்திருக்கும் ஏற்பாடுகளை ஒப்பித்தான்.


ஊரார், உற்றார், உறவினர் என பெரும் படை இருக்க… தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட முதலமைச்சர் இங்கே வராததால், அதற்கு ஈடு கட்டும் விதமாக முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செய்ய ஸ்கந்தவேல் குடும்பம் வைக்கும் மாபெரும் குடும்ப விருந்தில் பங்கு பெற, குடும்ப உறவுகள் மற்றும் நட்புகளுக்கு பொதுவாக அழைப்பு விடுக்க முடிவெடுத்தனர். இப்போதைக்கு கல்யாணத்தை ரகசியமாக வைக்க அழகன் வற்புறுத்தவும், இந்த பேச்சில் அம்மு புலம்ப துவங்கினாள்.


“உன் கல்யாணத்துக்கு என்னெல்லாம் செய்யணும்னு அம்மா, அரசி, நானும் கனவு கண்டோம் தெரியுமா? இப்படி, இதே ஊருக்குள்ள இருக்கற சொந்தத்துக்கிட்ட மூச்சு விட முடியாத நிலைக்கு கொண்டு வந்துட்டியே! பத்திரிக்கை அடிக்கல… கிடா வெட்டி பொங்க வெச்சு, குலசாமி முன்ன கும்பிட்டு, மஞ்சள் இடிச்சு… அதை கோயில்ல கும்பிட்டு, தாலி சரடுல பூச அந்த பூஜை செஞ்ச மஞ்சளை இல்ல உபயோகிப்போம்.”


அவர்கள் குடும்ப வழிமுறைகளை வரிசைப்படுத்திய அம்முவை மீண்டும் சரி கட்டி… நள்ளிரவு தாண்டி தீவிர ஆலோசனைக்கு பின் அடுத்து வரும் நாட்களை மூவருமாக திட்டமிட்டனர். இதில் திருமணத்தை மறைப்பது முதல்… அந்த விஷயம் தெரிய வரும் போது என்ன சொல்ல, எப்படி சமாளிக்க வரை எல்லாம் அலசி, சில முடிவுகளை எடுத்தனர்.


சகலை சங்கரை தான் சமாளித்து கொள்வதாக கதிர் வாக்கு தர, “தேங்க்ஸ் அத்தான்” மனமார மொழிந்தவனுக்கு அவ்வளவு நேரம் ஒவ்வொரு விவரத்தையும் நுணுக்கமாக பேசியதில் ஹிமாலைய மலைப்பு வர, “முடியுமா? கலவரம் வெடிக்காம என்னால தடுக்க முடியுமா?” லேசாக பயம் எட்டி பார்த்ததில் வாய் விட்டே புலம்பி விட்டான்.


“அழகா… யோசிக்காம எறங்க கூடாது. அப்படி இறங்கின பிறகு குழப்பிக்க கூடாது. நீயே பக்காவா தான் திட்டம் போட்டுருக்க, சௌந்தர் இருக்கான். நாம எல்லாரும் சேர்ந்து வெற்றிகரமா நடத்திடலாம். போ… நிம்மதியா தூங்கு…” கதிர் தேற்ற, மீண்டும் அத்தானுக்கு நன்றி சொல்லி அவர்கள் அறையை விட்டு வெளியே வந்த செந்தூர் அழகனுக்கு எப்படியோ இவர்களானும் தன்னை புரிந்து கொண்டு துணை நிற்கிறார்களே என்ற சிறு நிம்மதி பிறந்தது.


பரமு அம்மாவை எப்படியும் ஒப்பு கொள்ள வைக்க முடியாது. அதற்கு பொறுமையாக பேச, இப்போது அவனுக்கு நேரமும் இல்லை. ஆக, சின்னத்தான் எந்த பிரச்சனை செய்யாமல் தடுப்பதை மட்டும் பார்க்க வேண்டும் என்ற முடிவோடு படுத்தவனுக்கு, கதிர் கொடுத்த ஆதரவே தாமதமாக என்றாலும் நிம்மதியான உறக்கத்தை கொணர்ந்தது.


அழகனின் திட்டம் வெற்றி பெறுமா?


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page