top of page

மஞ்சக்காட்டு மயிலே 14

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 14


ஒரு சுற்று நடந்து விட்டு வருகிறேன் என்று போன மகன் நேரமாகியும் திரும்பாததை கண்டு பொரும துவங்கிய அம்மாவிடம், “அவனுக்கு ஓய்வே இல்ல. மினிஸ்டரா தலைக்கு மேல ஆயிரம் வேலை அழுத்துது. இங்க வந்தாலும் மில்லு, ஃபேக்டரி நிர்வாகம்னு சக்கரத்தை கட்டிட்டு சுத்தறவன், கொஞ்ச நேரம் ஓய்வா காத்தாட நடந்துட்டு வரட்டும்மா,” எப்போதும் போலவே அம்மு, ஆருயிர் தம்பிக்கு வக்காலத்து வாங்கினாள்.


அப்போது ஒன்றாக வீட்டுக்குள்ளே நுழைந்த கதிர் மற்றும் அழகன் இருவர் காதிலும் இப்பேச்சு விழ, “நீ பண்ணா அது வேலை, அதுவே நான் நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா ‘எங்க சுத்திட்டு வரீங்க’ன்னு சண்டை பிடிப்பா உன் அக்கா. என்ன அநியாயம்டா இது?” அங்கலாய்த்த கதிரிடம்,


“ஹ ஹா அத்தான், சத்தமா பேசாதீங்க. அதுக்கும் வாங்கி கட்ட போறீங்க!” என்றிட, முறைத்த அத்தானை கண்டு அழகன் சிரிக்க அந்த சத்தத்தில் பெண்கள் திரும்பி இவர்களை பார்த்தனர்.


“குளிச்சுட்டு வந்துடறேன், டிஃபன் எடுத்து வெச்சுடுக்கா,” அம்மாவின் கேள்விகளில் இருந்து தப்புவதற்காக ஒரே ஓட்டமாக நழுவியவன், பலகார வேளை முடியும் மட்டும், சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் வாய் திறக்கவில்லை.


அதற்குள் ஒன்றிரண்டு தொலைபேசி அழைப்புகள் தொல்லை செய்ய, அதனை ஏற்று பேசிய அழகன், குடும்பத்தவர் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டதை கவனித்து, தான் பேச வேண்டிய நேரம் வந்ததை உணர்ந்தவனாக, முதலில் சௌந்தரை அழைத்து, “கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்கடா. மயூவை பத்தி வீட்ல பேச போறேன்,” என்றான்.


“ஆல் தி பெஸ்ட் ண்ணா…” சௌந்தர் வாழ்த்தி விட்டு வைத்தான்.


“மதியம் நீங்க வர நேரமாகுமாங்க? அரசியும், மாப்பிள்ளையும் கிளம்பறதா பேசிட்டு இருக்காங்க,” கணவன் கதிரேசனின் காதை கடித்து கொண்டிருந்த அமுதா, அழகன் தொண்டையை செருமவும், அந்த சத்தம் கேட்டு, திரும்பிட,


அதற்குள்ளாக “என்ன மாமா தொண்டையில கிச்கிச்சா?” தமிழரசியின் மகள் யாழினி கிண்டலாய் கேட்கவும்,


குழந்தைகள் வீட்டில் இருப்பது அப்போது தான் கருத்தில் பதிய, ‘இவர்கள் முன் இந்த விஷயத்தை பேசுவது சரியல்ல,’ என்று தோன்ற… “தோப்பு வீட்ல போய் நாலு பேரும் ஹோம் தியேட்டர்ல படம் பாருங்களேன். இனி குட்டி, நீ தான் பெரியவ, பார்த்து போயிட்டு வாங்க.” அவர்களை கிளப்ப பார்த்த அழகனை, வீட்டு பெரியவர்களும் ஆச்சரியம் மேலோங்க பார்த்திட,


“என்ன நடக்குது மாமா,? புதையலை காக்கற பூதம் போல, ஹோம் தியேட்டர் பக்கமே, எங்களை நெருங்க விட மாட்டியே! இன்னைக்கு நீயா அதுவும் என்னை நம்பி அனுப்பற?”

புத்திசாலி இனியாவின் கேள்வியில், எழுந்த திகைப்பை மறைத்து, “உனக்காக இல்ல… அதுல ரிப்பேர் முடிஞ்சு, லேட்டஸ்ட் சவுண்ட் சிஸ்டம் போட்டதுல இருந்து யாழியும், எழிலும் இதுவரை எந்த படமும் பார்க்கலை இல்ல! அதான், அவங்க எஞ்சாய் பண்ணறதுக்காக போக சொல்றேன்.” ஏதோ சொல்லி சமாளிக்க முயன்றவனின் முயற்சி இளையவளிடம் எடுபடவில்லை.


“ம்மா…. பாரும்மா… இந்த மாமாவை. என் செல்லம் இனி குட்டின்னு என்னைத் தானே கொஞ்சுவார்? இப்போ இந்த யாழியையும், எழிலையும் அவங்க கேட்காமேலே ஹோம் தியேட்டர்ல படம் பார்க்க விடுறார். போன முறை, நான் போகணும்னு சொன்னப்ப, ‘நான் இல்லாம… இதெல்லாம் நீ தொட கூடாது’ன்னு என்னை கடிஞ்சார் இல்ல…” புது பஞ்சாயத்தை கூட்டினாள்.


அழகன் இப்படி ஒரு போதும் சொல்ல மாட்டான். அம்மு தான் இவ்வாறு அதட்டியது. பிள்ளைகள் அருகே இல்லா சமயம், “ஏன் க்கா, சின்னதுங்களை அரட்டுற?” என்ற அவர்களின் பாசமான மாமனின் கேள்வியில்…


“நான் அவங்களை கண்டிக்கறப்ப நீ குறுக்க வர கூடாதுன்னு சொன்னேனா இல்லையா அழகா!”


“அவங்க இல்லாதப்ப தானே கேக்குறேன் க்கா…”


“நீ ரொம்ப செல்லம் குடுக்கற… பெரியவ இந்த வருஷம் ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கணும்.” என்ற அம்மு, அம்மாவாக மிகவும் கண்டிப்பானவள்.


ஆக, அழகனும் அதன் பின் வாய் மூடி இருக்க, இப்போது இனியா, வேண்டுமென்றே கதையை மாற்றி போட்டு பேசவும், இது அவ்வப்போது அவள் செய்யும் சில்மிஷம் தான். மனநிலையை பொறுத்து தம்பிக்கு சாதகமாகவோ இல்லை அவனிடம் வம்பு வளர்க்கவும் செய்வாள் அம்மு. அதில் இளையவளுக்கு ஒரு அல்ப குதூகலம். தம்பி லேசாய் குரல் செறுமியதில், அவனுக்கு சூடான நீரை குவளையில் நிறைத்து எடுத்து வந்துக் கொண்டிருந்த அமுதா, மகளை தான் நன்கறிவாளே.


அக்கறையாக தம்பியிடம் நீரை கொடுத்தவாறே… மகளிடம், “ஆரம்பிச்சுட்டியா உன் சேட்டையை? உன்னையே எப்போவும் தலையில வெச்சு கொண்டாடணுமா அவன்? போறதான்னா போய் படம் பாரு. இல்ல… தமிழ்ல சந்தேகம் இருக்குன்னியே, இதோ தமிழ் லிட்டரேச்சர் படிச்ச உன் சித்தி இங்க இருக்கா, உன் பாட சந்தேகத்தை அவ கிளம்பறதுக்குள்ள கேட்டு தெளிஞ்சுக்க!” ஒரே போடாக போட்டாள்.


மகளை சாமர்த்தியமாக அமுதா சமாளிக்க… டென்ஷனாக இருந்த அழகன் கூட சிரித்து விட, “அடி ஆத்தி… அம்மு அம்மான்னா சும்மாவா! ஏய் நிலா, யாழ், எழில் வாங்க, வாங்க… தோப்பு வீட்டுக்கு போகலாம்.” அம்மா மனம் மாறும் முன் அங்கிருந்து விரைவதற்காக காட்டு கத்தல் கத்தி, அதற்கும் அமுதாவிடம் திட்டு வாங்கி, ஒரு வழியாக நான்கு பிள்ளைகளும் ஓட்டுனரோடு வெளியே கிளம்பி போகவும், நிம்மதி மூச்சு விட்டான் அழகன்.


“அத்தான்… சின்னத்தானோட இப்படி உக்காருங்க. ம்மா நீயும், இங்க வா… அம்முக்கா, அரசிக்கா வந்து உட்காருங்க.”


“என்ன அழகா? அரசி மதியம் கிளம்பறா, பலகாரம் செஞ்சு அனுப்பணும். எனக்கு வேலை கெடக்கு…” என்ற பரமு அம்மாள் கேள்வியாய் மகளை பார்க்க, அம்மு… தெரியலை என்பதாக தலையை அசைத்தாள்.


அம்மு, அரசி இருவரும் தத்தம் கணவரை என்னவென்பதாக பார்த்து விட்டு, இரு ஆண்களின் முகமும் விஷயம் தெரியாது என்பதை காட்டவும், மேலே மறுத்து பேசாமல் அந்த உணவு மேஜையை சுற்றி அமர்ந்தனர்.


“பத்து நாள் கழிச்சு இங்க நம்மூர்ல நடக்க போற மாநாட்டுக்கு, அப்புறம் புது ஆராய்ச்சி கூட திறப்பு விழாவுக்கு முதலமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர்னு வர போறாங்கல்ல...”


“அதான் தெரியுமே அழகா, இப்போவே ஊருக்குள்ள போலீஸ், சிறப்பு பாதுகாப்பு படை ஆளுங்கன்னு அவங்க நடமாட்டமா இல்ல இருக்கு. செக்போஸ்ட் கூட போட்டுட்டாங்க.” தனக்கு தெரிந்ததை சங்கர் தெரிவிக்க,


“ஆமா அத்தான். அதை பத்தி தான் உங்ககிட்ட எல்லாம் பேசலாம்னு…”


“உள்ள வேலை கெடக்கு… கட்சி கூட்டத்தை பத்தி எனக்கு எதுக்கு?” எழ பார்த்தார் பரமு.


“ம்மா… இது வெறும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இல்ல… நமக்கு தான் இதுல முக்கிய பங்கு.”


“என்ன சொல்ற அழகா?” தமிழரசி ஆர்வமானாள். இதெல்லாம் கதிர் மட்டுமல்ல அமுதாவும் அறிந்தவை தான். இளைய உடன்பிறப்புக்கும், அவள் கணவன் சங்கருக்கும் தெரியப்படுத்துகிறான் என அவர்கள் சற்றே அசட்டையாக காது கொடுத்திருந்தனர் எனலாம்.


“அது… வந்து… நான்… எனக்கு…” எதிர்கட்சியினர் வீசும் எப்படிப்பட்ட கேள்விக்கும் தடுமாறாமல் பதிலடி கொடுத்து அசரடிக்கும் அழகனின் அந்த தனித் திறமையை இந்த தமிழகமே அறியுமே! அப்படியிருக்க, பேச்சால் வீழ்த்துபவனின் இந்த திடீர் குழலரான வார்த்தையாடலில் ஆச்சரியப்பட்ட அனைவரும், இப்போது நிமிர்ந்து அமர்ந்து, அவனை ஆராய்ச்சியாய் பார்த்தனர்.


அவனுக்கு நெருக்கமான, முக்கியமான அனைவரின் பார்வையும் குறிப்பாக கதிரின் கூர் விழி வீச்சு, அவனை மேலும் திணறடிக்க, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது அழகனுக்கு என்றால் மிகையில்லை.


எதற்கோ தம்பி தயங்குவதை அவனின் உடல்மொழி கொண்டு கண்டு கொண்டவளாக, “என்ன தம்பி?” அம்மு தன்மையாய் கேட்டாள்.


“அது… க்கா, ம்மா… நான் கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுத்துட்டேன்.”


திணறலாக ஒலித்த மகனின் கூற்று, காதில் தேன் வார்க்க, “ஐயா முருகைய்யா என் வயத்துல பால் வார்த்துட்ட சாமி…” பரமு சந்தோஷிக்க…


“ஹப்பா… உன் கவலை தீர்ந்துச்சும்மா,” அம்முவும் குதுகலிக்க…


“அமுதா…” அழுத்தமாக அழைத்தது கதிரேசன்.


“என்னங்க, கேட்டீங்களா தம்பி சொன்னதை,” உற்சாகம் மேலிட புன்னகை முகமாக ஆர்பரித்த மனைவியின் அந்த மகிழ்வு கிஞ்சித்தும் கதிரிடம் இல்லை.


அத்தானின் கூர் பார்வையை தவிர்த்த அழகனுக்கு உள்ளுக்குள் வியர்த்தது. “ஓ… இப்போ தான் மாப்பிள்ளை கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுத்து இருக்காராமா? அப்போ... இத்தனை வருஷமா, நம்ம சாதி சனத்துல இவருக்கு பொருத்தமான பொண்ணை நாம சல்லடை போட்டு, தேடினப்ப எல்லாம், இந்த முக்கியமான முடிவை அமைச்சர் சார் எடுக்காததால தான், நம்மை சுத்தல்ல விட்டானா உன் தம்பி?” காரமாய் வார்த்தைகளை உதிர்த்து, சரியாக நூல் பிடித்து விட்டார் கதிரேசன்.


அத்தானின் புத்திசாலித்தனத்தை அறிந்தவனாக, அந்த நிலையிலும் அவரை மெச்சுதலாக மனதில் பாராட்டி கொண்ட அழகன், அமைதியாக இருக்க… கதிரின் இந்த கேள்வியில் உள்ள நியாயம் உரைக்க, பொங்கிய சந்தோஷ குமிழ் நொறுங்க, அதிர்வாக மகனையும், மூத்த மாப்பிள்ளையையும் கலக்கம் சூழ பார்த்த பரமேஸ்வரி அம்மாள், “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?” குழம்பியவராக கதிரை ஏறிட்டவர், “என்ன அழகா? மாப்பிள்ளையோட பேச்சுக்கு அர்த்தம் என்ன?” மகனை பதிலுக்காக பார்த்தார் அன்னை.


இவர்களின் சம்பாஷணையை எவ்வித உணர்வும் இல்லாமல் கவனித்திருந்தான் இளைய மாப்பிள்ளை சங்கர்.


“அது ம்மா,” என்ற அழகனின் பார்வை க்ஷணத்துக்கும் குறைவாக கதிரை ஏறிட்டு, அங்கே தெறித்த வெம்மையில், கொஞ்சம் கலங்கி… முயன்று குரலில் திடம் கூட்டி, “நான்… எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சுருக்கு.” தன் விரல்களை மட்டுமே பார்த்து கொண்டு ஒரு வழியாக சொல்லி முடித்தான்.


“என்ன?” அனைவரின் என்னவும் ஒன்றாக அந்த பெரிய கூடத்தில் எதிரொலித்தது. பரமு மகனை குழப்பமாக பார்த்தாரெனில், இரு அக்காக்களும், தத்தம் துணையை தான் அவசரமாக நோக்கினர்.


“இன்னைக்கு நேத்து இல்ல… பத்து வருஷமா அவ தான் என் மனசுக்குள்ள குடியிருக்கா. கட்டினா அவளை தான் கட்டணும்னு வைராக்கியம். மன்னிச்சுடுங்கம்மா! அக்கா, அத்தான், உங்க எல்லாரையும் இத்தனை வருஷம் எனக்கு பொருத்தமான பொண்ணு தேடுற பேருல அனாவசியமா அலைய விட்டேன், தப்பு தான்.”


“மனசுல ஏற்கனவே ஒருத்தி சிம்மாசனம் போட்டு உக்காந்து இருக்கறப்ப, நீங்க காண்பிக்கற வேற யாரும் என் கண்ல படலை. உங்க யார்கிட்டயும் சொல்றதுக்கு அப்ப எனக்கு சுத்தமா தைரியம் இல்ல. இன்னமும் சில காரணங்கள் என்னை தடுத்துடுச்சு. இப்போ தான், எனக்கும் கல்யாண யோகம் கூடி வந்திருக்குன்னு நினைக்குறேன். அதான்… இனியும் தள்ளி போட முடியாம, இன்னைக்கு வெளிப்படையா உங்ககிட்ட பேசுறேன். என் மனசுக்கு பிடிச்சவளையே தயவு செய்து எனக்கு கட்டி வைச்சுடுங்க.” அச்சத்தில் படபடத்த இதயத்தின் அதே வேகத்தில், கூற நினைத்ததை பட்டென ஒரே மூச்சில் கொட்டி முடித்திருந்தான்.


அந்த விசால அறையில் அப்படி ஒரு அமைதி நிலவியது. ‘மகன் காதலித்தானா’ என பரமுவும், ‘எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத தன் தம்பியா ஒரு பெண்ணை விரும்புகிறான்’ என அம்முவும், அரசியும் அதிர்ச்சி கலந்த ஆச்சரிய பாவத்தை சுமந்து உறைந்திருக்க… எல்லாம் கேட்டும் அதிசயமாக அமைதியின் சிகரமாக அமர்ந்திருந்த சங்கரோ, ‘இப்படி எதுவோ இருக்க போய் தான், என் தங்கச்சியை வேணாம்னு சொன்னானா இவன்?’ ஆராய்ச்சியாய் அழகனை உற்று நோக்கினான்.


இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் மற்றும் அரசியல் தொடர்பாக, அத்தான் என்ற உறவை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு சகோதர அளவில் எத்தனை எத்தனை ஆலோசனைகள் கேட்டு தன்னிடம் வந்து நின்றவன், இப்படி ஒரு விஷயத்தை தெரிவிக்காமல் மறைத்தானா என்ற திகைப்பில் இருந்த கதிரேசன் தான், முதலில் சுதாரித்து மீண்டதும்.


மலையனார் மறைவுக்கு பின் இந்த குடும்பத்துக்கு மருமகனுக்கு மருமகனாக, ஒரு மூத்த மகனின் ஸ்தானத்தில் எல்லா விஷயங்களிலும் முன் நிற்கும் கதிரின் அனுபவ மூளை ‘ஆக, ஒரு விஷயத்தை அழகன் மறைத்திருக்கிறான் எனில், இதில் வேறு எதுவோ மர்மம் ஒளிந்திருக்கிறது!’ என்று கண பொழுதில் உஷாராகி எச்சரித்ததில், “ஆமா பொண்ணு யாரு? நம்மூரா இல்ல சென்னப்பட்டணத்துகாரியா? பொண்ணு பேரு, மத்த குடும்ப வெவரம் மொத சொல்லு அழகா,” அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தார்.


கதிர் அளவுக்கு மற்றவர்களுக்கு தெளிவு இல்லாததால், அதிர்ச்சி சற்றே விலக துவங்க, இப்போது ஏனையோருக்கும் இந்த கேள்விகள் மனதில் உதிக்க, அவன் தர போகும் பதிலுக்காக அழகனை ஆர்வமாக பார்த்தனர்.


ஊரில் இருக்கும் தெய்வங்களை எல்லாம் துணை நிற்குமாறு மனதில் பெரிய வேண்டுதலை வைத்து விட்டு, தன் முன் இருந்த கோப்பையில் இருந்து ஒரு மடக்கு வெதுவெதுப்பான நீரை பருகி முடித்தவன், தொண்டையை செருமி… “நம்மூரு பொண்ணு தான்! ஆனா… சென்னையில படிச்சவ!” என்றான் மெலிந்த குரலில்.


வாக்கியத்தின் முதல் பாகம் செவியில் விழவும், ஒரு நிம்மதி எழுந்ததில், அழகனின் குரலின் மாறுபட்ட பாவனையை கவனியாது, “ஹப்பா! நம்மூர் தானா? அப்ப சரி! ஆனா... நம்மாளுங்கள்ள பிள்ளையை படிக்க பட்டணத்துக்கு அனுப்புனவங்க யாரு?” சத்தமாக யோசித்த பரமு, “ஏட்டி அம்மு, உனக்கு யாருன்னு தெரியுதா?” மகளை பதிலுக்காக பார்த்தார்.


அம்முவுக்கு பெருத்த குழப்பம். தம்பிக்காக பெண் தேடுகிறேன் என எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாள்! அவள் அறியாத படித்த பெண் அவர்கள் ஊரிலா? அப்படி யாருமில்லை என்று மூத்தவளுக்கு சர்வ நிச்சயம். எனவே தெரியவில்லை என்பதாக அமுதா தலையை அசைத்தாள்.


“நம்மூரு பொண்ணு சரி! நம்ம ஆளுங்க தானே?” மீண்டும் கதிர் தான்!


மென்று விழுங்கிய அழகன், வாய் திறவாமல்… இல்லை என்பதாக தலையை அசைக்க, மீண்டும் ஒரு “என்ன!” அங்கே ஒன்றாக எழுந்தது. இம்முறை அனைவரும் தத்தம் நாற்காலியில் இருந்தும் எழுந்து விட்டிருந்தனர்.


மேற்கொண்டு விவரம் ஏதும் அறியாமலேயே, “ஐயோ... நான் எங்க போய் இதை சொல்லுவேன்? ஏங்க... கேட்டியளா, உம்ம பையன் சொன்னதை? என்ன காரியம் செஞ்சு வைச்சு இருக்கான்? நான் தவமா தவமிருந்து பெத்த பிள்ளை, இப்படியா என் தலையில இடியை எறக்குவான்? இதை எல்லாம், பார்க்க கூடாதுன்னு தான் என்னை ஒத்தையாக்கிட்டு போயிட்டியளா?” கணவன் மலையனார் படத்துக்கு முன் சென்று கிட்டதட்ட பரமு ஒப்பாரி வைக்க துவங்கி விட்டார்.


“அம்மு…” கதிரின் அழைப்பிலும், கண்ணசைவிலும் தன்னிலை மீண்ட அமுதா, அன்னையின் அருகே சென்று, அவள் தோள் தாங்கி, “ம்மா… இரும்மா, அவன் முழுசா சொல்லி முடிக்கட்டும்.”


“இன்னும் என்னத்தடி என் தலையில பாறாங்கல்லு போட காத்திருக்கான் உன் தம்பி? ஒத்த பிள்ளைக்கு நான் ஆசைப்பட்டபடி ஒரு கண்ணாலத்தை பண்ணி பார்க்குற குடுப்பினையை அந்த முருகன் எனக்கு விதிக்கலியே… எம் வம்சம் என்னாக போகுதோ?” புலம்ப துவங்கி விட்டார் பரமு.


“அத்தை…” கதிரின் அழுத்த அழைப்பில் கப்பென வாய் மூடியவர், விசும்பலை நிறுத்தவில்லை.


“யாரு என்னன்னு சொல்லி தொலையேண்டா…” பொறுமை இழந்த தமிழரசி கத்தினாள்.


“அது…” ஒரு முறை எல்லோரையும் பார்த்தவன், “நம்மூருக்கு மாட்டு வைத்தியம் பார்க்க வந்துருக்க மயூரி சிவபாதம் தான், நான் மனசார விரும்பற பொண்ணு. அவளை தான்… அவளை மட்டும் தான் கல்யாணம் செஞ்சுப்பேன்.”


“யாரு?” மயூரியின் பேரெல்லாம் கதிருக்கே தெரியாத போது அம்மு, பரமுவுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஊருக்குள் புது மாட்டு வைத்தியச்சி பட்டணத்தில் இருந்து வந்திருப்பதாக பண்ணை ஆட்கள் பேசியது காதில் விழுந்ததோடு சரி. இதை பொருட்டாக மதித்ததில்லை மூவரும்.


“யாரு? நம்ம ஐயா கூப்பிட்ட குரலுக்கு, ஓடி வந்து கை கட்டி நிப்பானே அந்த பழைய மாட்டு வைத்தியன் பொண்ணா?” தமிழரசி உரத்து கேட்க, மெல்ல விவரம் புரியவும், சுற்றி இருந்த எல்லோரும் அதிர்ந்தனர். திருமணத்துக்கு முன் இங்கே இருந்தவரை, பால் வரவு செலவு கணக்குகள், பசுக்களின் பராமரிப்பு பற்றிய விஷயங்கள் அரசியின் பொறுப்பாக இருந்தது. அதனால், அவளுக்கு தான் சிவபாதத்திடம் மேலோட்டமான பரிச்சயம் உண்டு.


இளைய மகளின் மூலம் இப்போது ஆள் இன்னாரென அடையாளம் தெரியவும், “அவ குலமென்ன, நாம பொறந்த பெருமையென்ன? நம்மகிட்ட கை கட்டி நிக்கறவன் வீட்டு பொண்ணு மேலயா ஆசைப்படுவான்?” இப்போது மூத்த மகளிடம் இருந்து நகர்ந்த பரமு,


“இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் போயிட்டீங்களா? காதலாம்ல… இந்த வீட்ல அப்படி ஒரு வார்த்தை சொல்லுற தைரியம் ஆகி போச்சு உம்ம மவனுக்கு! நம்ம சாதி சனத்துல, நமக்கேத்த மகராசிங்க எத்தனை காட்டினேன்! நான் நின்னு ஒத்த வார்த்தை பேச கூட யோக்கியதை இல்லாத வீட்டு பொண்ணை எனக்கு மருமகளாக்க பாக்குறானே. என்னன்னு கேட்க நீங்க இல்லாம போயிட்டீங்களே!”


“மாட்டேன்… இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். கண்டவளும் என் வீட்டு வாசலை மிதிக்க ஒரு நாளும், இந்த பரமேஸ்வரி விட மாட்டேன்,” ஆவேசமானார் பெரியவர்.


அதுவரை ஒரு பார்வையாளனாக இருந்த சங்கரோ, “இந்த கன்றாவிக்கு தான் என் தங்கச்சியை மறுத்தியா?” என வெகுண்டவர், “கெளம்புடீ, இனி ஆத்தாவை பார்க்கணும்னு கேளு. இதான் நாம இங்க கடைசியா வாரது! எங்க யாழும், எழிலும்? ம்ம்… நட,” மனைவியின் கையை கோபமாக பிடித்து கிட்டத்தட்ட இழுக்க முயன்றார்.


இதில் “என்னங்க,” “மாப்பிள்ளை,” “தம்பி,” “அத்தான்…” என ஆளாளுக்கு அதிர்ந்து அழைக்க,


“நிறுத்துடா… யாரு யாருக்கு அத்தான்? எவளோ ஒருத்திக்காக, என் வீட்டு பொண்ணை வேணாம்ன இல்ல! இனி, நமக்குள்ள ஓட்டும் இல்ல உறவும் இல்ல.”


சங்கரின் தடாலடியில் “ஐயோ மாப்பிள்ளை… அப்படி சொல்லாதீங்க,” பரமு அலறினார்.


“அத்தான்… இன்னொருத்தியை மனசுல ஆராதிச்சுக்கிட்டு, உங்க தங்கைக்கு தாலி கட்டுற கீழ்த்தரமானவன் நானில்ல. அப்படி, அவளை விரும்பாத ஒருத்தனோட வாழுற அளவுக்கு உங்க வீட்டு பொண்ணுக்கு என்ன குறை? யோசிக்காம வார்த்தையை விடாதீங்க. இது அரசிக்கு பொறந்த வீடு. என்னோட பிரச்சனைக்கும்… இங்க அவ வந்து போகறதுக்கும் அனாவசியமா முடிச்சு போடறது எல்லாம் என்கிட்டே வைக்காதீங்க.” அமைச்சராக அல்லாமல் மலையனாரின் மகனின் கம்பீரத்தோடு அழுத்தமாக உரைத்தவனின் பேச்சில் ஒரு கணம் அதிர்வுற்றாலும்,


“பார்த்தீங்களா அத்தை, உங்க பிள்ளை பேசுற விதத்தை? வீட்டு மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்ல.”


“அந்த மரியாதை நிறையவே இருக்க போய் தான், உங்க வீட்டு பொண்ணை மறுத்தேன்னு உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது அத்தான்? என் கூட பொறந்தவ வாழ்க்கையில என்னால தேவையில்லாத எந்த குழப்பமும் வந்துட கூடாதுங்கற அக்கறையும் சேர்ந்ததால தான், நீங்க அத்தனை வற்புறுத்தியும் உங்க வீட்டு பொண்ணை வேணாம்னேன். ப்ச்… இன்னொரு வீட்ல சந்தோஷமா வாழுற பிள்ளையை பத்தி நாம இன்னமும் இப்படி பேசுறதே பெரிய தப்பு. முடிஞ்சதை கிளராம, இப்போ என் கல்யாண பேச்சோட நாம நிறுத்திக்கலாம்.”


அழகன் தரப்பு நியாயம் எதையும் காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் இல்லாத சங்கர், “கிளம்புன்னேன்,” அரசியை அதட்டினான்.


“கிளம்பறதா இருந்தா நீங்க மட்டும் கிளம்புங்க அத்தான். அவ வீடு இது. அவ இங்க வருவா போவா… தாலி கட்டிட்டதால உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என் அக்கா நடந்துக்க முடியாது.” அழகனும் விடுவதாய் இல்லை.


“வாயை மூடு அழகா…” பரமு ஆவேசமாக கத்த…


“புரியாம பேசாதீங்கம்மா. என்னோட காதல், கல்யாணம் பிடிக்கலைன்னா, என்கிட்டே முகம் திருப்பட்டும். அதென்ன அரசி இங்க வர கூடாதுன்னு இவர் ஆர்டர் போடுறது? அப்படி முறிய கூடியதா தாய், மக உறவு?”


“சங்கர்… கொஞ்சம் அமைதியா இருங்க,” இப்போது கதிர் எடுத்து சொல்ல வர, பெண்கள் மூவரும் கண்ணீர் மல்க நிற்க…


“க்கா, முகத்தை தொடைச்சுக்கோ.” அரசியை அதட்டியவன், “என் மேல கோபமா… என்னை ஒதுக்குங்க. அதை விட்டுட்டு, இங்க போக வர மாட்டேன்னு சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னைக்கும் இது என்னோட அக்காங்களோட பொறந்த வீடு! புருஷனாவே இருந்தாலும் இந்த உறவுல நுழைய கூடாது!” உரிமையை விட்டு தர முடியாத உடன் பிறந்தவனாக, முழங்கியவன்,


“நல்லா கேட்டுக்கோங்க… மயூவுக்கும் எனக்கும் வர்ற இருபத்தியாறாம் தேதி கட்சி தலைவரும், முதலமைச்சுருமான தலைவர் முன்ன சமுதாய சீர்திருத்த கல்யாணம் நடக்க போகுது. அதுக்கான எல்லா ஏற்பாடும் நான் செஞ்சுட்டேன்.”


“என்ன?” அடுத்த அதிர்வை தந்தவனை ஐவரும் ஒரே நேரத்தில் பார்த்திட,


“ஒரு வார்த்தை எங்ககிட்ட கலந்து பேசாம, கல்யாணத்துக்கே ஏற்பாடு செஞ்சுட்டியா?” நெஞ்சை பிடித்து கொண்டு கேட்டார் பரமு.


“ஆமா ம்மா. சாதி பிரச்சனை வெடிக்கும், கலவரம் வரும். அனாவசியமா உயிரும், உடைமையும் சேதமடையும்னு எனக்கு பயம். சில மாசமாவே எப்படி ரகளை நடக்காம கல்யாணத்தை முடிக்கன்னு மண்டை வெடிச்சது தான் மிச்சம். அதான் எந்த முறைப்படியும் இல்லாம, சுயமரியாதை கல்யாணம் வெச்சுட்டேன்.”


“படிச்சவன் இல்ல… மொத்தமா ஸ்கெட்ச் போட்டு, உங்க தலையில முக்காடை போட்டுட்டான் உங்க மகன்.” எக்களித்தான் சங்கர்.


அமைதியாக செவிமடுத்தாலும், அடக்கப்பட்ட கோபமெல்லாம் முக பாவத்தில் வெளிப்பட நின்றிருந்த கதிர், அவனின் உறவு மட்டுமல்லவே. அழகனுக்கு உற்ற நண்பன், அரசியல் மெய்யறிவு புகட்டியவன், சிறந்த வழிகாட்டி ஆயிற்றே… அப்படியான உன்னத பிணைப்பு கொண்ட அந்த பந்தத்தில் வந்த முதல் மற்றும் மிக பெரிய வேறுபாடல்லவா… கதிருக்கு தான் உண்டாகியிருக்கும் மனவலியை அறிந்தவனாக, அதே நேரம் தன் நிலையை உணர்த்திடும் தீவிரமும் உந்திட, அத்தானின் கையை பற்றிய அழகன், “கோயில்ல எதேச்சையா எங்க அம்மு அக்காவை பார்த்து, பிடிச்சு போனதால, உங்க அப்பாகிட்ட இன்னார் பொண்ணுன்னு தைரியமா கை காட்டி, அவர் ஒத்துக்கவும், பெரியவங்களா முடிவெடுத்தது போல அவரே உங்களை ஜோடி சேர்த்தாரே அத்தான்… அப்படி சுலபமா கல்யாணத்துல முடிஞ்ச உங்க காதல் போல இல்ல என்னது.”


“காதல்னா என்னன்னு நான் சொல்லி உங்களுக்கு புரிய வைக்க வேணாம். மயூவை பார்த்த நிமிஷத்துல என் மனசை பறி கொடுத்துட்டேன். அப்ப அவ சாதியும் மத்த விஷயமும் என் மூளைக்கு எட்டல. பத்து வருஷம் அத்தான்! பலதையும் யோசிச்சு, குடும்ப கெளரவம், குல பேருக்காகன்னு பெரியவங்க ஒண்ணு சேர்ந்து என் தலையில ஏத்தின அரசியல், வியாபார பொறுப்புகளை சுமந்து… நான் மனசு முழுக்க, நிறைச்சு, நினைச்சு ஏங்கி மறுகற என் காதல் கை கூடணுங்கற அந்த பயத்தை யாருகிட்டேயும் வெளிப்படையா பேச முடியாம, பொண்ணு பார்க்கறேன்னு நீங்க செய்யற ஓரோர் ஏற்பாடையும் மண்டையை கசக்கி கஷ்டப்பட்டு முறியடிச்சு, இத்தனை வருஷமும் நரக வேதனையை அனுபவிச்சுட்டேன் அத்தான்.”


அழகனின் உருக்கமான பேச்சில் அம்முவை காதலித்து கரம் பிடித்த கதிரும், அந்த காதலில் இத்தனை ஆண்டுகள் முக்குளித்த அம்முவும் மனதளவில் சற்றே அசைந்தனர். மற்ற மூவரும் நிலை மாறாமல் இருந்தனர்.


“எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடக்கறதா இருந்தா, அது மையூவோட மட்டும் தான்!” அழுத்தம் திருத்தமாக தெரிவித்தவனை கண்டு,


“நான் ஒத்துக்க மாட்டேன்.” மீண்டும் பரமு மறுப்பை தெரிவிக்க,


“சரி ஒத்துக்காதீங்க ம்மா! அப்படியே, இனி எப்பவும் ‘கல்யாணம் செஞ்சுக்கோ அழகா’ன்னு என்னை நச்சரிக்காதீங்க.” அம்மாவிடம் எதை சொன்னால் அவரின் பிடிவாதம் ஆட்டம் காணும் எனும் வித்தையை நன்கறிந்தவன் அந்த அஸ்திரத்தை இறுதியாக எய்தினான்.


“இதுக்காடா, கோயில் கோயிலா ஏறி அந்த முருகனை கும்பிட்டு தவம் செஞ்சு உன்னை பெத்தேன்?”


நிமிடங்கள் கூடகூட அங்கே நடக்கும் உரையாடலில் சங்கரின் கோபமும் ஏறியதில், கைபேசியை எடுத்து அழுத்த போக, அவசரமாக பாய்ந்து அதனை பறித்து கொண்டான் அழகன்.


“அத்தான்… ப்ளீஸ் இது என் தனிப்பட்ட வாழ்க்கை. நீங்க, இப்போ இதை சாதி சனத்துக்கு சொல்றதால, இது ஊர் பிரச்சனையா மாறி, வீணா கலவரம் வெடிக்கும். இதை தடுக்க, தவிர்க்கற வழி புரியாம தான், முதலமைச்சர் இங்க விஜயம் வர்ற நேரம் கூடுதலா இருக்கற போலீஸ் பந்தோபஸ்த்தை எனக்கு சாதகமாக்கி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுருக்கேன். என் ஒருத்தனால அப்பாவி ஜனங்க பாதிக்கப்படுறதை அனுமதிக்க முடியாது.” கெஞ்சல் குரலில் மன்றாடினான்.


“இதை லவ் பண்ண முன்ன யோசிச்சு இருக்கணும்…” சங்கர் நக்கலாய் மொழிய…


“லவ்னு வந்துட்டாலே பலதும் பின்னுக்கு போயிடும் அத்தான். அதான், லவ்வோட அடிப்படை இலக்கணம்.”


“என் போனை குடு அழகா. என் ஆளுங்களுக்கு சொல்ல போறேன். இன்னைக்கு ராத்திரி அவனுங்க வீடெல்லாம் பத்தி எரியும். ஒரு பய உசுரு தப்ப மாட்டான்.” ஆங்காரமாய் கத்திய சங்கரின் பாவனையில் எல்லோரும் அதிர்ந்தனர்.


“சங்கர்… என்ன பேச்சு இது?” கதிர் குறுக்கிட…


“இது தான் உங்க முடிவுன்னா, இந்த நிமிஷமே, என் பதவியை ராஜினாமா செய்யறது தவிர வேற வழி இல்ல. இந்த ஊர் வேணாம்… ஏன் கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன். இங்க, இனி அடி வெக்க மாட்டேன். என் மிச்ச காலத்தை தனியா, என்னாலான உதவியை மத்தவங்களுக்கு செஞ்சு ஓட்டிடறேன். எங்கேயோ கண் காணா எடத்துக்கு போயிடறேன்.”


“டேய் அழகா, தம்பி, ராசா” என கதிர், அம்மு, பரமு கலங்க…


“என் ஒருத்தனால, நீங்க யாரு உறவையும் முறிச்சுக்க வேணாம். எந்த கஷ்டமும் பட வேணாம். உங்க மகனா மட்டும் தான் இருக்கற கொடுப்பினைன்னு இப்படியே இருந்திடறேன்.” உயிர்ப்பில்லாத குரலில் தொடர்ந்தவனை பார்த்து கண் கலங்கி விட்டனர் பெண்கள் மூவரும்.


“அமைச்சருக்கு பேசவா சொல்லி தரணும்? இந்த பசப்பு பேச்சுக்கு, வோட்டு போட்ட மக்களும், இந்தா நிக்கறாங்களே இவங்க ஏமாறுவாங்க…” சங்கர் பதிலடி தர,


“தலைவர், முதல்வர்கிட்ட, எங்க காதல் விவகாரத்தை மொத்தமா சொல்லி, ‘மயூவை நான் கை பிடிச்சா, நிச்சயம் பிரச்சனை முளைக்கும், அதனால அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செஞ்சுடறேன். என்னால அனாவசியமா கட்சிக்கு கெட்ட பேர் வேணாம்’னு தான் பேசினேன். அவர் தான் என்னை தடுத்துட்டார்.”


“என் பேச்சு உங்களுக்கு கேலிக்கூத்தா தோணலாம். என் இடத்துல நின்னா தான் என் நிலை புரியும். என் தலைமையில ஒண்ணுக்கு ரெண்டு துறையை திறமையா நிர்வகிக்கறேன்னு இந்த மாநிலமே என்னை புகழுது. இந்த மாநிலத்தோட விவசாயத்துறை சார்ந்த எல்லாத்துக்கும் பொறுப்பா இருக்கற எனக்கு, என் சொந்த வாழ்க்கையை என் விருப்பம் போல அமைச்சுக்க முடியலை. அப்புறம் என்னத்துக்கு எனக்கு கட்சியில பெரிய பேரு, செல்வாக்கு, அமைச்சருன்னு ஒரு பதவி? எல்லாம் இருந்தும், நான் ஆசைப்படுற ஒரு விஷயம் கை கூடாதுன்னா, என்னை போல பிச்சைக்காரன் வேற யாரு? எனக்கெல்லாம் இந்த பதவி எதுக்கு?”


விரக்தி மிகுதியில் மொழிந்த அழகன், இப்போது தன் கைபேசியை எடுக்க, அதை கதிர் பறித்தான். “விடுங்க அத்தான், என் மேல உங்களுக்கு அளவிட முடியாத கோபம்னு புரியாத அளவுக்கு முட்டாள் இல்லை நான். காதலிச்சு கல்யாணம் செஞ்ச உங்களுக்கே புரியலை என்னோட மனநிலை. அப்படி ஒரு வார்த்தையே எங்க அகராதியில இல்லைன்னு சொல்ற சின்னத்தானால எப்படி என் வலியும் வேதனையும் உணர முடியும்?” நெஞ்சு வெடிக்க குமுறினான் அந்த ஆண் மகன்.


இரு கைபேசிகளையும் கைப்பற்றி தன்னிடம் வைத்து கொண்ட கதிர், ”சங்கர் தம்பி, முடிஞ்சதை பேசி என்ன ஆக போகுது? நம்ம பொண்ணை கண்ணா தாங்குற குடும்பத்துல கட்டி கொடுத்து இருக்கோம். மாப்பிள்ளை சொல்றது போல தங்கச்சிக்கு என்ன தலையெழுத்து இன்னொருத்தியை லவ் பண்றவனை கட்டிக்க? இத்தோட அந்த பேச்சை விடுங்க.”


“இதை சாதி பிரச்சனையாக்க ஒரு நிமிஷம் ஆகாது தான். ஆனா, இது அரசியல் குடும்பம். இதோ… மூணாம் தலைமுறை நம்ம அழகன்! நம்மை அண்ணாந்து பார்கறவன், நம்மை தப்பா பேச பயப்படறவன், இன்னமும் இங்க இருக்கான். நாம ஒரு முறை சறுக்கிட்டா, நம்ம மேல தலைமுறை தலைமுறையா இவங்களுக்கு உள்ள பயமும், மரியாதையும் சுத்தமா போயிடும்.”


“யோசிக்காம நீங்க செய்யற காரியத்தால, அவனுங்க வாய்க்கு நாம அவலாக போறோமா சங்கர்!! சேதாரத்தை கம்மியாக்கி, இந்த பக்கம் உள்ள நம்ம செல்வாக்கை கூட்டறது போல மாப்பிள்ளை போட்டுருக்க திட்ட படி நடக்க போறோமா? முடிவு உங்க கைல…” சகலையை அடக்க, உரிய கல்லை எறிந்தான் கதிர்.


ஆரம்பம் முதலே கதிருக்கு அரசியலில் அதீத ஆர்வமும் நாட்டமும் உண்டு. அமுதாவை கட்டிய நாளாக, மாமனாரிடம் அரசியல் விவாதங்கள் செய்து கொண்டு கூடவே சுற்றியவன். அப்போது அழகன் மிகவும் இளையவன். ஆக, மூத்த மாப்பிள்ளையிடம் ஒளிவு மறைவின்றி கட்சி பற்றியும், தேர்தல் தொடர்பாகவும் எல்லா விஷயங்களை மனம் விட்டு ஆலோசிப்பார் மலையனார்.


அவரின் அகால மரணத்தின் போது, அழகனே ‘எனக்கு எதுவும் தெரியாது அத்தான். என்னை விட்டுடுங்க’ என்று கெஞ்சிய போதும், தானே களத்தில் இறங்க மறுத்த கதிர் இந்த விஷயங்களில் அதிபுத்திசாலி. அதிகாரமும் அது தரும் ஆளுமையும் தங்களிடம் இருப்பதற்கு, தான் நேரடியாக பதவியில் இருக்க வேண்டியது இல்லை.


மலையனாரின் ரத்தம், நேரடி வாரிசு என்ற ஒற்றை தகுதியும், அதன் மூலம் மக்களிடையே அழகனுக்கு நிலவிய அதிக செல்வாக்கும் அவர்களுக்கு பலம் சேர்க்க, வெறுமனே மச்சானுக்கு துணை நின்று, தான் தோள் கொடுத்தாலே போதும்.


கேளாமலேயே சகல மரியாதையும் தன்னால் தனக்கு கிடைக்கும் என புரிந்தவன் கதிரேசன். ஆக, அரசனாவதை விட கிங்மேக்கராக, அழகனின் அரசியல் வியூகங்களுக்கு சூத்ரதாரியாக இருக்க எண்ணி பின்னணியில் இருந்து கொண்ட அரசியல் சாணக்கியன் தான் கதிர். இதுவரை இதனால் கதிருக்கு லாபம் மட்டுமே கிட்டியிருக்கிறது.


கட்சி அரசியலை பொறுத்த வரை, கிண்டர் கார்டன் லெவலில் இருந்த அழகனின் கரம் பிடித்து, ஒவ்வோர் அடியாக முன்னேற்ற பாதையில் அவனை சரியாக வழி நடத்தி, இன்றைய அவனின் அசகாய வளர்ச்சிக்கு பக்க பலமாக தோள் நின்று செயல் படும் ராஜ தந்திரி கதிரேசன் தான்.


அழகனின் முடிவான, முதலமைச்சரின் முன்னணியில் கல்யாணம் என்ற ஏற்பாட்டின் நாடியை, அரசியல் ரீதியில் இது அவர்களுக்கு கொடுக்க இருக்கும் ஹிமாலய உச்சத்தை கதிரின் மூளை சட்டென கிரகித்து கொள்ள, திருமணம் தடைபட்டால், அழகன் பிடிவாதமாக அரசியலுக்கு மூடு விழா நடத்தி விட்டானேயானால் வரும் சாதக பாதகங்களை மளமளவென ஆராயந்தவனாக, அரசியல் பலம் முக்கியம். அது இருக்குமேயானால் உறவுகள், சாதி சனத்தினரின் வாயை அடைப்பது சுலபம்.


அதுவே அழகன் பதவி விலகி, இதோ கோபத்தில் துடித்து கொண்டிருக்கும் சங்கரே விஷயத்தை வெளியே கொண்டு வந்தால், பதவியும் இல்லாது அவர்களின் மக்க மனுஷரிடம் அவமானம் மட்டுமே மிஞ்சும். அழகன் எந்த விதத்தில் யோசித்தானோ, எந்த திடமான முடிவுக்கு தைரியமாக வர அழகனுக்கு சில காலம் பிடித்ததோ, அதனை சில நிமிடங்களில் புரிந்து கொண்டான் புத்திசாலி கதிரேசன்.


கதிரை பொறுத்தவரை பணத்தை விட பெரிய மனுஷ ஹோதாவுக்கு அதிகம் முக்கியத்துவம் தருபவன். பதவியால் வரும் சுலபத்தில் யாரும் நெருங்க முடியாத அந்த மேன்மை நிலை… யாரும் கிட்ட நெருங்க அஞ்சும் அந்த உசரம், கால் தரையில் பாவாத பெருமிதம், இதெல்லாம் கதிருக்கு மிகவும் முக்கியம். இது மலையனாரின் குணாதிசயம். பரம்பரை பணக்காரர்களான அவர்களுக்கு என்றுமே செல்வத்துக்கு குறைவில்லை. அதனால் செல்வாக்கு தான் மலையனாரின் ஒரே குறி. அவரிடம் அரசியல் பால பாடம் கற்றதாலோ என்னவோ, கதிருக்கும் பதவியை கொண்டு பணம் சம்பாரிப்பதை காட்டிலும், எங்களை அசைக்க முடியாது என்ற மமதை, அந்த பதவிக்கு உண்டான மரியாதைகள் இதிலெல்லாம் தான் கூடுதல் பற்று.


ஆக, அதை இழக்க அழகன் தயங்கவில்லை என்றாலும் கதிர் தயாரில்லை. மந்திரியின் அத்தான் என்பதை பெருமையாக நினைப்பவன். இந்த காரணத்தினால் தான், அழகனின் வளர்ச்சியில் உண்மை அக்கறை உள்ளவன். சடுதியில் இப்படி ஒரு முடிவை அழகன் எடுக்கவில்லை என்பது அவனின் உள்ளார்ந்த பேச்சில் புரிய, தான் பக்கபலமாக செயல்பட வேண்டிய தருணம் இது என உணர்ந்தவன், “அத்தை, வறட்டு பிடிவாதம் நமக்கு உதவாது. அழகன் இஷ்டப்படி கல்யாணம் முடியட்டும்.” மதியூகி அல்லவா அதனால் பொறுப்பை தானாய் எடுத்து கொண்டு அழகனுக்கு ஆதரவாக செயல்பட துவங்கினான்.


“என்ன பேசுறீங்க மாப்பிள்ளை? இது எப்பேர்ப்பட்ட குடும்பம்? செங்கல்வராயரோட பரம்பரை. மத்த சாதிக்காரன் நிழல் கூட மேல பட விடாதவர் என் மாமனார் செங்கல்வராயர் ஐயா. அவர் வழி வந்தவர் தான் என் புருஷனும். அவங்க கொள்கை என்ன? இவங்க முன்ன நிக்க அஞ்சுவாங்க ஊர் பயலுக! அவர் பெத்த பிள்ளைக்கு புத்தி இப்படி கோணலா போகலாமா? நல்லது சொல்லி அவன் மனசை கரைக்காம, போகாத ஊருக்கு வழி காமிக்க அவனோட கிளம்பிட்டியளோ?” மகனை விடுத்து மாப்பிள்ளையிடம் வழக்கடித்தார் பரமு.


அதன் பின் அங்கே பற்பல வாதங்கள் நடந்தேறின. அழகன் மௌனியாய் பார்வையாளன் மட்டுமே.


கதிர் மீது அவனுக்கு நம்பிக்கை. என்ன முன்பே தனிமையில் அத்தானோடு பேசி இருந்தால், இருவரும் சண்டை இட்டு, இதோ இப்போது போல ஒன்றாக ஓர் பக்கமாய் இருந்து இருக்கலாம் தான். ஆனால் ஊரில் கலவரம் நடந்திடுமோ என்ற அச்சத்தில் அத்தானிடம் கூட வாய் திறக்க தயங்கி அமைதி காத்தவன், முதல் முறை தானே சுயமாக முடிவுகளை எடுத்திருந்தான்.


பேச்சு முடிவதாய் தெரியவில்லை. “அம்மு, பிள்ளைங்க அங்கன தனியா இருக்காங்க… ஒரெட்டு நீ அதுங்களை பார்த்துட்டு அப்படியே நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போ.” கணவன் கதிரேசனின் பேச்சை ஏற்று அம்மு நகர,


“இருங்க அண்ணி… நாங்க கிளம்பறோம்…” சங்கர் எழ,


எங்கே மகளை இனி கண்ணில் காட்ட மாட்டாரோ சும்மாவே வீம்பு பிடித்த இளைய மாப்பிள்ளை என்ற பயம் கூடி, “இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டு போங்க மாப்பிள்ளை.” நேரடியாக அவரிடமே விண்ணப்பம் வைத்தார் பரமு.


“உங்க பிள்ளையும், பெரிய மாப்பிள்ளையும் ஒரு கூட்டு… அப்படி இருக்க, நான் இங்க எதுக்கு தேவையில்லாம தங்கணும் அத்தை?” சொல்லால் அடித்தான் சங்கர்.


“எனக்கும் கூட இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. நம்மகிட்ட மரியாதைக்கு வெவரத்தை சொல்லி இருக்கார் மாப்பிள்ளை. இது அவர் முடிவு. இனி நானோ, நீங்களோ மறுத்து ஆக போறது ஒண்ணுமில்ல சங்கர் தம்பி. நாம ஒரு குடும்பமா ஒத்துமையா இருக்கற வரைக்கும் தான், ஊருக்குள்ள நமக்கு மரியாதை நிலைக்கும். இல்ல, கண்டவனும் நம்மை விமர்சிக்க ஆரம்பிச்சுடுவான். எது ஒண்ணுன்னாலும் மத்தவன், நம்ம முன்ன கை கட்டி நிக்கணுமே ஒழிய, நம்மை கை நீட்டி பேசுற அளவுக்கு போக விட கூடாது. இனி உங்க விருப்பம்.”


“நான் தோப்பு வீட்டுக்கு போய் பிள்ளைங்களை பார்க்கறேன்…” கதிர் கிளம்பி விட, சங்கர் செய்வதறியாத குழப்பத்தில் அங்கேயே அமர்ந்து விட்டான்.


பெண்கள் உள்ளறைக்குள் சென்று முடங்கி கொள்ள, வீட்டில் இருந்த அலுவலக அறைக்குள் வேலை பார்க்க துவங்கி விட்டான் அழகன்.


சங்கரின் நிலை கொஞ்சம் மோசம் தான். எப்போதும் அழகனும், கதிரும் கூட்டு என அறிவான். போதாதற்கு அவனுக்கு பொறுமை குறைவு… இதில் அழகனின் அரசியல் கட்டம் மேலேற, அவ்வப்போது மச்சானின் செல்வாக்கு இவனுக்கு துணை தர வேண்டிய நிலையில் தான் இருக்கிறான். இதில் தங்கையை அழகன் மறுத்ததில் இன்னமும் கோபம் குறைந்த பாடில்லை. இப்போது கைபேசி அவன் முன் ஊமையாக கிடந்தது. கதிரின் பேச்சில் அவனுக்கு சாதகமானதை மனம் யோசிக்க நிதானத்துக்கு வந்தவன், அமைதியானான்.


சௌந்தரை அழைத்து வீட்டில் நடந்ததை தெரிவித்த அழகன், காவல்துறைக்கும் கூப்பிட்டு ஊர் பாதுகாப்பை பலப்படுத்த கட்டளை இட்டான். முதல்வர் வருகை பிடிக்காமல், சாதி கலவரம் வெடிக்கலாம் என முன்பே ஒரு வதந்தி கிளப்பி இருந்தான். அது நன்றாகவே வேலை செய்ய, நிலைமை அழகனின் கட்டுக்குள் முழுமையாக வந்தது.


அங்கே மயூவுக்கு ஒரே டென்ஷன்… அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் பிடித்து கொண்டது. வேலையில் கவனம் சிதறாமல் இருக்க பெரும் பாடு பட்டாள்.


காதல் மயில்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறதா?Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page