top of page

மஞ்சக்காட்டு மயிலே 13

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 13


சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம், மயூவின் ஆற்றோர நடைப்பயிற்சி மட்டும் அழகன் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விடாது தொடர்ந்தது. அதுவும், முன் தினம் பின் மாலையில் அழகன் ஊர் வந்து சேர்ந்த செய்தியை எதேச்சையாக ஊர் வம்பு பேசும் பக்கத்து வீட்டு சரளா ஆன்ட்டியின் வாயிலாக அறிந்தவள், மறுநாள் அந்த பகலவன் விடியும் முன்பே கண் விழித்ததும் இல்லாமல், நேரம் நகராதா என கடிகாரத்தை முறைத்து பார்த்தது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.


நடைபயிற்சி என்பதற்கு பதில் ஓட்டபயிற்சி என்றால் தான் சரியாக இருக்கும். ஆற்று பாதைக்கு வந்து சேர்ந்தவளின் இதயம், ஓட்டத்தால் வேகமாக துடித்ததா, அல்லது அழகனை காண போகும் பரபரப்பால் துடித்ததா என்று விவாதம் செய்யும் அளவுக்கு பெண்ணவளின் நிலை இருந்தது.


விழிகளோ அவளின் உள்ளம் கவர்ந்த அழகனை ஆவலாக தேட, அவளுக்காக காத்திருப்பான் என அவர்கள் வழக்கமாக சந்திக்கும் வழுக்கு பாறையின் மீது ஆர்வமும் பரபரபரப்புமாக மங்கையவளின் பார்வை பதிய, அங்கே அவன் இல்லாதிருக்கவும், சட்டென ஏமாற்றம் சூழ்ந்ததில் முகம் வாடி, உள்ளத்தில் சோர்வும் வந்து குடி கொண்டது.


மெல்ல ஓட்டத்தின் வேகத்தை குறைத்து, நடைக்கு மாறியவள், அவன் வருவான் என்ற நம்பிக்கையில் அவளின் நடைபயிற்சியை தொடரும் முகமாக அந்த இடத்தை சுற்றி வரத் துவங்கினாள். வழக்கமான ஐந்து சுற்றும் முடிந்து விட்டிருக்க, அழகன் மட்டும் வந்தானில்லை.


“முதல்ல அந்த சி.சி.டீ.வி., கேமராவை உடைக்கறேன்டா அழுக்கு பையா! அதுல என்னை பார்த்துட்டு, இவளை சுத்தல்ல விடலாம்னு வராம இருக்கியா நீ?” துளித்துளியாக தேனின் சுவை நாவில் கூடுவது போல, இங்கே பைங்கிளிக்கு காதலன் மேல் கோபம் சொட்டு சொட்டாக ஏற்றமடைய, பொறுக்க முடியாது அலைப்பேசியில் உள்ளம் நிறைந்த அழகனை அழைத்தாள்.


முன் தினம் ஊருக்கு வந்த அழகன் மில்லில் ஒரு சிறு தகராறு என நேரே அங்கே சென்று அதை தீர்த்து விட்டு, வீடு வந்த போதே நேரம் இரவு ஒன்பதை கடந்து விட்டிருந்தது. வீட்டிலோ அக்காக்கள் இருவரும் தத்தம் கணவர், பிள்ளைகள் சகிதம் இவன் வருகைக்காக ஆவலாக காத்திருந்தனர்.


அதன் பின் பேச்சு… உணவு, பிள்ளைகளோடு சற்று கொஞ்சல் இப்படி இரவு உறங்கவே ஒரு மணிக்கு மேலாகி இருக்க, அலுப்பில் கண்ணசந்து ஆழ்ந்து உறங்கி விட்டவன், அவனின் ஓய்வுக்கு வேட்டு வைத்த கைப்பேசியின் ஒலியில், விழித்து விட்டாலும், கண்களை திறவாமல், உறக்கம் முழுதும் களையா குரலில், “ஹலோ…” என்று விட்டு, கூடவே அலுப்பாய் கொட்டாவியும் விட்டான்.


சாவதானமான அந்த ஹலோவில் ஏமாற்றம் சூழ, பேசியை அணைத்து விட்ட மயூ பேசவில்லை என்றாலும், ஆற்றோர நீரின் தாளமும், பறவைகளின் கீச்சும் காதில் தப்பாமல் விழ, இப்போது கண் விழித்து விட்ட அழகன், அவசரமாக அவளை அழைத்தான்.


அழைப்பை ஏற்றவள், அமைதியாக நடையை தொடர, “என் செல்ல மயிலம்மா, வாக்கிங் வந்துருக்கியா?” கொஞ்சலாக தான் ஆரம்பித்தான். ஆனால், முடிக்கும் போது கொட்டாவியோடு முடித்து விட, பதில் வரவில்லை கடுப்பின் உச்சத்தில் இருந்த பெண்ணவளிடம் இருந்து.


மீண்டும் இன்னொரு கொட்டாவியை விட்டவன், “மயில் செல்லம், உன் மாமா ரொம்ப அலுத்து களைச்சுட்டேன். நைட் படுக்க நேரமாகிடுச்சு, நாளைக்கு கண்டிப்பா வரேன்.”


அவ்வளவு தான்… அழகு மயில், ஆவேச புலியாக மாறி, “நீ பத்து நாளா ஊர்ல இல்ல! இத்தனை நாள் என்னை பார்க்கலை, பேசலை… இப்படி பிரிஞ்சிருக்கற உனக்கு, எப்படி ஜம்முன்னு தூக்கம் வரும்? நிஜமா… என்னை லவ் பண்றியாடா நீ?” பொங்கியவளின் குரலில் அவனுக்கான தேடலே அதிகம் இருக்க, இது தான் அழகன் வேண்டி காத்திருந்த எதிர்வினை!


“என் நெமிலி செல்லம், மாமாவை ரொம்ப மிஸ் பண்றாங்களா?”


“செல்லம், பள்ளம்னு சொன்ன, கெட்ட கோவம் வரும் எனக்கு. வைடா போனை…” கொந்தளித்தாள் காந்தள் மலரிதழ் காரிகை.


“ஹே மயிலு… நாம இப்போவே ஓடி போலாமா? அப்படியே உன்னை இறுக்கி கட்டிக்கிட்டு… உன் மடியில தலை வெச்சு…”


“நல்லா தூங்கணும்னு தோணுமே!” அவனின் வாக்கியத்தை மங்கை நிறைவு செய்ய, அவள் குரலின் பாவத்தை கவனிக்காதவன்,


“எஸ் செல்லம்… சுகமா தூங்குவேன்.” ஆர்வம் பொங்க உரைத்தவன் மட்டும் அவளின் அருகே இருந்திருந்தால், காதல் பிசாசாக மாறி அவனை குதறி இருப்பாள் மயூரி.


நித்தமும் அழகனின் நினைவில் உழன்று, அவளின் ஓய்வு நேரம் முழுவதும் அவன் குறித்த எண்ணங்களில் மூழ்கி, அவன் மீதான காதல் பித்தில் இருந்து வெளி வரும் வழி அறியாமல், ஆனந்தத்தை விட அவஸ்தை கூடிய நிலையில் உள்ளம் சிக்குண்ட மாயம் புரியாமல் தத்தளித்து கொண்டிருப்பவளுக்கு உண்மையாகவே அப்படி கோபம் பொங்கியது. கூடவே, அவள் மனக் கட்டுப்பாடு மாயமாக மறைந்து போய் விட்டது குறித்த எரிச்சல் அதிகரிக்க, பேசியை அணைத்து விட்டாள்.


இறக்கும் தருவாயில் அப்பாவிடம் கொடுத்த வாக்குக்காக, அழகனை எட்ட நிறுத்தி, முயன்று மனதை ஒருமுகப்படுத்தி, வெற்றிகரமாக படிப்பை முடித்து… வேலையில் சிறந்து, இந்த காதல் மாயையில் இருந்து மீண்டு விட்டதாக தன்னையே ஏமாற்றி கொண்டிருந்திருக்கிறாள் இத்தனை காலமும் என்ற உண்மை உறைக்க, அந்த நொடி அழகனுக்காக ஏங்கி கொண்டிருக்கும் தன் நிலையை மயூவால் ஏற்கவும் முடியவில்லை. அந்த ஏக்கத்தை கை விடவும் முடியா காதல் புதைகுழியில் நன்றாக சிக்கி கொண்டிருக்கிறாள் என்ற புரிதலோடு, மீளவும், மூழ்கவும் முடியா திரிசங்கு நிலையை அறவே வெறுத்த வஞ்சி இளமயில், அழகனை விடவும் இனி அவளுக்கு ஏதும் முக்கியமில்லையா? என்ற கேள்வியில் வந்து நின்றாள்.


இந்த காதல் தானே, அப்பாவின் உயிரை குறைத்து, அம்மாவை துணை இழக்க செய்தது! எப்படி அந்த வேதனையை ஒதுக்கி, அழகனை நாடி வந்து அவனுக்காக, அவனின் ஓர் பார்வைக்காக ஏங்கி காத்திருக்கிறேன்? குழப்பம் மட்டுமே மிஞ்ச, கண்கள் கலங்க, செயலற்ற தடுமாற்றம் ஆட்கொள்ள, அங்கேயே பாறையில் சிலையாக அமர்ந்து விட்டாள்.


சில முறை மயூவை அழைத்த அழகன், அவளின் மோன உறை நிலையை அறியவில்லை. அதன் பின் தாமதிக்காமல் கிளம்பியவன், கீழே இறங்கி வர, அம்மாவிடம் மாட்டினான்.


“என்ன ராசா, எங்க கிளம்பிட்ட?”


“இல்லம்மா… தூக்கம் கலைஞ்சுடுச்சு. ஒரு ரவுண்ட் நடந்துட்டு வந்தா நல்லா இருக்கும். கொஞ்சத்துல வந்துடறேன்.” ஓட்டமாக வெளியே வந்தவன், தோப்பிற்கு வருவதற்காக காரை எடுத்தான்.


தான் மேலும் எதுவும் வினா எழுப்பும் முன், புயலின் வேகத்தில் கிளம்பி விட்ட மகன் சென்ற திசையில் பார்வையை வைத்த பரமு, “ஹும்…காலாகாலத்துல ஒரு கால் கட்டை போட்டிருந்தா, இந்நேரம் பொண்டாட்டியோட மடியில கிடந்திருப்பான். இப்படி தூக்கம் வராம இருக்குமா?” அங்கலாய்த்தவர், நடை பயில போனவன், அதற்கு எதற்கு காரை எடுத்தான் என்பதை யோசியாமல், வேலையாட்களை ஏவ துவங்கினார்.


தூரத்தில் இருக்கும் போதே மயூவை கண்டவனின் மனம் துணுக்குற்றது. இன்னமும் அவளின் அம்மாவிடம் மனம் திறந்து மயூவாக அவர்கள் உறவை பற்றி சொல்லி இருக்கவில்லை. பூரி அத்தை தான், தினம் ஒரு முறை அவனிடம் மகளின் அழுத்தம் குறித்து முறையிடுகிறாரே.


தனக்கு நெருக்கத்தில் வைத்து மயூவின் மனதில் புதைந்து கிடக்கும் காதலை வெளி கொணர எண்ணிய அவனின் திட்டம் வெற்றி என்பது, இன்று காலையில் வெடித்த அவளின் பேச்சும், இப்போதைய அவளின் தொலைந்த குழந்தை கோலமும் சொல்லாமல் சொல்ல, இப்போது அவனின் முன் தலை விரித்திருக்கும் பொறுப்பை குறித்து நினைக்கவே அழகனுக்கு அச்சமாக இருந்தது.


அழகனின் வருகையை உணர்ந்தவள், இப்போது முகத்தை மறுபுறம் திருப்ப, அருகே அமர்ந்தவனின் தோள் உரச, மயூ விலக எத்தனிக்கும் முன் அவளை தன் பக்கம் இழுத்தவன், அதே வேகத்தில் அவளின் மடியிலும் தலை வைத்திருந்தான்.


எல்லாம் நொடியில் நடந்தேற, அவன் தலையை நகர்த்த பார்த்தவளால் அது முடியவில்லை. மணாளனோ அவளின் தீண்டலின் சுகத்தில் கண்களை ரசனையாக மூடி, “என்ன மந்திரம் வெச்சுருக்க உன் கைல? அப்படியே எனக்கு ஜிவ்வுன்னு இருக்கு மயிலு.”


“போடா… எனக்கு உன்னை பிடிக்கவேயில்ல,” குரல் உடைந்தாலும் மயூ அழுத்தமாக உரைக்க,


“எனக்கு பிடிச்சுருக்கே, அது போதும். அட்ஜஸ்ட் செஞ்சுக்கறேன்.” அவன் கன்னமே சொன்னது சிரிப்பை அடக்குகிறான் என்று.


இப்போது அந்த கன்னத்தை கிள்ளினாள் பெண் மான். அவனோ, “கிஸ் குடுப்பியா அதை விட்டுட்டு விரல் மசாஜ் பண்ற!”


அவனின் கிண்டலில் மேலும் சூடானவளின், கண்கள் கோபத்தை மறைக்காமல் காட்ட, இன்னமும் கண் மூடி கிடந்தவன் பாராமலேயே, அக்கோபாக்கினியை சரியாக உணர்ந்து கொண்டான்.


“உன்னை…”


“பச்சக்…” பெண்ணவளின் பேச்சு நிறைவு பெறாமல், முத்தத்தில் முடிந்தது.


எப்போது கண் திறந்தான், அவளின் தலையை தன் பால் கொண்டு வந்தான், எப்படி இதழ்கள் இரண்டும் உரசின? ஏதும் புரியாமல் மயூ விழிக்க, மயக்கும் சிரிப்போடு… “லிப் மசாஜ் எப்படி செல்லம்?” மோகன சிரிப்போடு அழகன் மேலும் கடுப்பேற்றினான்.


இப்போது பூவையின் இடையும் அவன் கரத்தில் சிறைபட்டிருக்க, “கல்யாணம் செஞ்சுக்கலாம் மயூ. முடியலை மயில்… இதே ஊர்ல நீயும், நானும் இப்படி தனித்தனியா, பிரிஞ்சிருக்க முடியலடி.”


தாபத்தில் தத்தளித்தவனின் பிடியை தளர்த்த முயன்றவள், “கல்யாணம் பண்ற முகத்தை பாரு… நான் போன் பண்ண பிறகு தான், என் நினைப்பே ஐயாவுக்கு வருது.”


“அது சரி, உன் நினைப்பு இல்லாம தான், மெனக்கெட்டு, இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில நான் பண்ணாத காரியத்தை செஞ்சேனா?”


“அப்படி என்னத்தை கிழிச்ச நீ?”


“இப்படி காலாங்கார்த்தால, இந்த ஆத்தோர பாறையில, என்னோட பட்டு மயிலோட மடியில படுக்கணும்னு, சொந்த வாழ்க்கைக்காக ஒரு போஸ்ட்டை உருவாக்கி, இந்த பால்வள சென்டர் சீரும் சிறப்புமா திறக்க, சுத்து வட்டாரத்துல பெரியதா மாத்த என் கைக் காசு போட்டு, தீயா வேலை பார்த்துட்டு வரேன். நேர்மையான அழகன், அவனோட அழகு மயிலுக்காக அனாவசியமா ஒரு போஸ்டிங் போட்டு, தில்லாலங்கடி பண்ணது எல்லாம் எதுக்காம்?”


‘நிஜமா’ என மங்கையின் கண்கள் விரிந்து கேள்வியாய் பார்க்க, இமை சிமிட்டி ஆம் என்றவனின் கரங்கள் அவளை தன்னை நோக்கி நகர்த்தி நெற்றியில் முட்டினான்.


“இதோ… உன்னை இப்படி என் பக்கத்துல கொண்டு வர்றதுக்காக தான், நமக்குள்ள எதுவும் முடியலைன்னு உனக்கு புரிய வைச்சு, என்னைக்கும் முடியாத பந்தமா மாத்திக்க தான் ரிஸ்க் எடுத்து இறங்கி இருக்கேன். இந்த மனசுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணு… ஐ லவ் மை அழகு மயில்! எப்போவும்…” பேசுபவனின் பேச்சில் கவனம் இருக்க, அழகன் சொல்ல நினைத்ததை கொட்டி முடித்தவன், மீண்டும் அவளின் இதழை தனதாக்கி கொண்டான்.


நொடிகள் நகர, அவர்களின் முத்தம் முடிவுறுவதாக இல்லை. குயில் ஒன்று அருகே கூவ, மயூவை விட மனமில்லாமல் விட்டவன், “இனி முத்தம் மட்டும் போதாது. கல்யாணம் பண்ணா தான் சரி வரும்.” கண் சிமிட்டினான் காதல் கள்ளன்.


சட்டென்று மயூவின் கண்களில் கண்ணீர் உருள, “வேணாம் அழகு, அப்பா… நான் உன்கிட்ட… இல்ல இந்த காதல் வேணாம்.” அவளின் துண்டு துண்டான மறுப்பில், துணுகுற்றவன், எழுந்து அமர்ந்தான்.


“நான் எல்லாம் ப்ளான் செஞ்சுட்டேன்… இன்னைக்கு வீட்ல பேச போறேன்.”


“வேணாம்… கல்யாணம் வேணாம்…” மயூ மீண்டும் மறுக்க…


“லூசுத்தனமா பேசாதே, உனக்கு தீவிரமா மாப்பிள்ளை பார்க்கறாங்க. நானும் உப்புசப்பில்லாத காரணத்தை காட்டி, எப்படியோ இதுவரைக்கும் வந்த வரனெல்லாம் தட்டி விட்டுட்டேன். எப்போ ஊருக்குள்ள வந்தாலும், அம்மா என்ன குண்டை வைப்பாங்களோன்னு உள்ளுக்குள்ள பயந்து வருது.”


“அப்பாவுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்.” மெலிந்து வந்தது பாவையின் குரல்.


“என்ன? என்னன்னு சத்தியம் பண்ண?” படப்படத்தான் நாடாளுபவன்.


“உன்னை… உனக்கும்… எனக்கும்… நமக்குள்ள எந்த தொடர்பும் இனி இருக்காது. நாம லவ் பண்ண மாட்டோம்னு.” தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்து விழ, அதன் பின் மயூவின் வாயிலாக சிவபாதத்தின் இறுதி நொடிகள், மலையனார் மிரட்டியது எல்லாம் அறிந்து கொண்டான்.


“என் அப்பாவுக்கு தெரியுமா?” அதிர்ந்து கேள்வி எழுப்பியவன், தலை முடியை கோதி கொண்டான்.


“ம்ம்…”


நெற்றியை தேய்த்தவன், இப்போது முடியை சிலுப்பினான். ஆக, அந்த சரண்யாவோடான கல்யாண ஏற்பாடு ஏன் என்ற முழு புரிதல் வர, ‘ஆனா, என் பேச்சை கேட்ட அப்பா மேற்கொண்டு கல்யாணத்தை நிறுத்திட்டாரே. அது தற்காலிகமோ?’ சில நொடிகள் அன்றைய எண்ணங்களில் உழன்றான்.


எது எப்படியோ… இப்போது மலையனார் உயிரோடு இல்லை. காதல் என்பதே அவருக்கு எட்டிக்காய். அதிலும் இந்த சாதி விட்டு சாதி எல்லாம் மலையனாரை பொறுத்த மட்டில் வெட்டி பொலி போட வேண்டிய சமாசாரம். அப்பா தங்களை எதிர்த்தார் என்பதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அழகனுக்கு இல்லை என்றாலும், தன் மீது அத்தனை பாசம் வைத்த தந்தையால், இத்து போன கொள்கைகளை மகனுக்காக கூட விட முடியா அவரின் சாதி வெறி குறித்த அந்த நினைவே கசந்தது.


“நம்ம காதல் பிடிக்காத ரெண்டு பேருமே இப்போ நம்மோட இல்லை மயில்.”


“அதுக்கு? அப்பா…”


“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ மயில், உன் அப்பா காதலுக்கு எதிரி கிடையாது. என்னோட ஏற்பட்ட காதல் தான் அவருக்கு பிடித்தம் இல்ல. ரெண்டும் வேற வேற.”


அக்கூற்றை மறுத்து மயூ தலையை அசைக்க, “இதை ஏன்டீ இத்தனை வருஷம் என்கிட்டே இருந்து மறைச்ச? என் மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்ல… அப்படி தானே?”


மயூ மௌனம் சாதிக்க… “எத்தனை வலிச்சுது தெரியுமா? அப்பாவின் மரணத்தப்ப, உன்னை ரொம்ப தேடுனேன். ஆளாளுக்கு என் விருப்பமில்லாம என்னை கட்டாயப்படுத்தி அரசியல்ல இறக்கினப்ப, உன்னோட, ‘நீ இறங்கு அழுக்கு பையா… உன்னால முடியும்’ங்கற அந்த ஒற்றை நம்பிக்கை வாக்கியத்துக்கு ஏங்கி கிடந்தேன் மயிலம்மா.”


“நான் எம்.எல்.ஏவா வந்து போன அதே சென்னையில தான் நீயும் வாழ்ந்துட்டிருந்த! எங்கேயாவது உன்னை பார்ப்போமா? ஒரு முறை என்கிட்டே நீ பேச மாட்டியான்னு எத்தனை பரிதவிச்சு கிடந்தேன். அம்மாவுக்கு மகனா, என் அக்காங்களுக்கு பொறுப்பான தம்பியா, இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏவா, என்னை நம்பி இருந்த கட்சி தொண்டனுக்கு விசுவாசியா, கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவிக்கு பொருத்தமான உழைப்பாளியா, இப்படி என்னை நானே பல ரூபமா மாத்தினாலும்… என் மயிலோட அழகனா, என் மனசை பறி கொடுத்தவளோட மனசுல, மடியில, நெஞ்சுல கிடக்க மாட்டோமான்னு நான் பட்ட வேதனை… உனக்கு புரியுமா?”


“பேரு தான் இந்த தமிழகம் போற்றும் அமைச்சர். என் மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் செய்ய கூட, வழி இல்லாம வருஷங்களை ஓட்டிட்டு இருக்கேன். என்ன பதவி, அந்தஸ்து இருந்தென்ன? இதெல்லாம் என்னத்துக்கு?”


அவள் அளவில் தந்தைக்காக, மனதை கல்லாக்கி எட்டி நின்றவள், அவள் பட்ட அதே பிரிவின் வலியை, வேதனையை அவனும் அனுபவித்து வந்திருக்கிறான் என்ற புரிதலில், இப்போது எஞ்சி இருந்த மனத்தடை சுக்கு நூறாக உடைய, கண்ணாளனை ஆறத் தழுவினாள்.


பல ஆண்டுகள் கழித்து, அவர்கள் மட்டுமேயான அந்த நொடிகள், அணைப்பில் சகலமும் மறந்து கட்டுண்டிருந்தனர். இருவரின் இதய துடிப்பும் ஒரே தாளகதியில் இசைத்தது. இருவருக்கும் அந்த அணைப்பு அமைதியை தர, மெல்ல விலகிய அழகன், “எப்படி பிரச்சனை வெடிக்காம நாம ஒண்ணு சேரன்னு மண்டை காஞ்சு கிடந்தேன் மயில். இப்போ தான் ஒரு வழி கிடைச்சுது. இன்னைக்கு வீட்ல உள்ளவங்ககிட்ட பேச நினைச்சு இருந்தேன்.”


“அப்பா… எனக்காக பயந்தார் என்பதை விடவும், இதே ஊர்ல வாழுற அவரோட சாதி ஜனத்துக்கு, உறவுக்கு, அவங்க பாதுகாப்புக்கு இப்படி பலதையும் யோசிச்சு யோசிச்சு தான் நெஞ்சு வலி வர வைச்சுக்கிட்டார்.” கண்ணீர் திரையிட சொன்னவளின் கரங்களில் மென் நடுக்கம் ஓடியது.


“எப்படி அழகா… எனக்கு நீ வேணும்… ஆனா… அப்பாவோட அந்த பயம் நியாயமானதுன்னு, இப்போ புரியுது. பதினாறு வயசுல எனக்கு… இந்த ஊரும், அதோட இந்த கட்டுப்பெட்டித்தனமும் புரியலை… இப்போ…”


“சத்தியமா, உன்னை பார்த்த அந்த நொடி, இந்த மனசுக்குள்ள நீ குடி வந்த அந்த க்ஷணம், இங்கேயே பொறந்து வளர்ந்த எனக்கே இதெல்லாம் தோணாதப்ப, உனக்கு எப்படி இதெல்லாம் புரியும் மயிலம்மா? காதலுக்கு கண்ணில்லைங்கறது எவ்வளவு உண்மையில்ல? உன்னை பிரிஞ்சிருந்த இத்தனை வருஷமும், எனக்கு தெரிஞ்சதெல்லாம், என்னை விட, உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு என்கிறது மட்டும் தான்.” அவன் குரலின் கனிவே அவனின் காதலின் ஆழத்தை உணர்த்த, இப்போது பெண்ணவளின் இதழ், மன்னவனின் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தது.


சில கணங்கள் அமைதியாக அதை அனுபவித்தவன், “என்னோட மனசுல குடியிருக்கறவளை, என்னோட வீட்டு ராணியா குடி வைக்க, நான் எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியிலும், இப்போ நீ சொன்னியே… சாதி சனம், உறவு… எஸ்…இவங்கள்ல யாருக்கும் எந்த பாதிப்பும் வராம, ஒரு கலவரம் வெடிக்காம, என்னை நம்பி இருக்கற ஜனங்களோட உயிருக்கு, உடமைக்கு எந்த சேதாரமும் ஆகாம, அதே நேரம் உன்னை கல்யாணமும் செய்துக்கன்னு பலதையும் யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சது தான் மிச்சம். இப்போ தான், யாருக்கும் கஷ்டம் வராத மார்க்கம் ஒண்ணு புலப்பட்டு இருக்கு.”


பயம் அப்பட்டமாக வெளிப்படுத்திய மயூவின் விழிகளை பார்த்து, “என்னை நம்பு… அப்போ எப்படியோ? இன்னைய தேதிக்கு, உன் அப்பா இருந்திருந்தா, நான் சொல்றதை புரிஞ்சுக்கிட்டு, மனசார உன்னை எனக்கு கட்டி வெச்சுருப்பார் மயூ செல்லம்.”


அவர்கள் காதல் கை கூட அவன் இத்தனை சிந்தித்து செயல் படுகிறான் என்பதை உணர்ந்த மாதுவுக்கு சற்று முன் இருந்த குழப்பம் லேசாக மறைய, கேலி குரலில், “சொன்னாங்க சொன்னாங்க… இந்த அழகுதொரை பொண்ணு கேப்பாரான்னு தான், என் அப்பா ஏங்கி காத்திருந்துருப்பார்னு! ஆனாலும், அமைச்சருக்கு இத்தனை கான்ஃபிடன்ஸ்!”


“உன் அழகு துரை தான்டீ மயிலு… பெஸ்ட் ஆஃப் லக் சொல்லு எனக்கு. அப்படியே எங்க வீட்ல பேச போற எனக்கு டானிக் கொடுக்கறது போல இன்னொரு மசாஜ், இந்த வாட்டி என் லிப்ல அழுத்தமா பண்ணுவியாம். நானும் பூஸ்ட் ஆகி… வீட்ல எல்லாரையும் சம்மதிக்க வைச்சுடுவேனாம்.”


“தள்ளி போடா… எந்நேரமும் இதே நெனப்பு…”


“இந்த வயசுல இப்படி நெனைக்கலன்னா தான் கோளாறு செல்லம்.” விளையாட்டாக பேசியவனின் தோள் சாய்ந்து, கரம் பற்றி…


“பயமா இருக்கு அழகு…” குரலின் ஸ்ருதி வெகுவாக குறைந்து விட்டது மயூரிக்கு.


“யாமிருக்க பயமேன்! இந்த செந்தூர் அழகன் இருக்கேன்.” இப்போது தன் கரத்தை அவளை சுற்றி போட்டு, லேசாக அணைத்த வாக்கில், அவளின் தலையில் இதழை ஒற்றியவன், “எங்க ஹனிமூன் போலாங்கற முக்கிய மேட்டரை நீ யோசிப்பியாம், நான் மத்ததை பார்த்துப்பேனாம்.”


“எனக்கு ஹனிமூன் எல்லாம் வேணாம் அழுக்கு பையா. உன்னோட, இங்க… இப்படியே ஜஸ்ட்… பக்கத்துல இருந்தா போதும். வேற எதுவும் வேணாம் எனக்கு.” பொத்தி வைத்தாலும் மல்லியின் வாசத்தை மறைக்க முடியாததை போல, பெண்ணவளின் உள்ளத்தில் பொங்கும் அவன் மீதான அளவில்லா காதலும், அவளை மீறி வார்த்தையாக வெளி வந்து விட்டது.


“லவ் யூ மை மயிலம்மா…” இந்த முறை இறுக்கி அணைத்தவன், தன்னை விடுவித்து கொண்டே “நேரம் ஆகுதுடா, அக்கா, மாமா எல்லாம் வீட்ல இருக்காங்க. இப்போ போனா தான் அவங்ககிட்ட பேச முடியும்.”


“இன்னைக்கேவா?”


“ம்ம்… நீ இது பத்தி கவலைப்படாதே. எல்லாரையும் நான் டீல் பண்றேன். என்னை பத்தி மட்டும் நினைப்பியாம்… சரியா?”


மேலும் சில நிமிடங்கள் மயூவுக்கு தைரியம் சொன்னவன், சூறாவளி அடிக்க போகிறதென்ற நிச்சயத்தோடு வீட்டுக்கு கிளம்பினான்.


கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page