top of page
madhivadhani Stories

மஞ்சக்காட்டு மயிலே 12

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 12


இரு கால்களை சேர்த்து மடித்து, முட்டியில் முகம் புதைத்து இலக்கில்லாமல் வேடிக்கை பார்த்து ஆற்றோர பாறை திட்டில் அமர்ந்து இருந்த மயூவின் கவனம், காதுகளில் இனிமையாக விழுந்த பறவைகளின் கீச்சு குரலிலும், சலசலக்கும் ஆற்றின் நீரோசையிலும் இல்லாமல் அழகனோடு கோபித்து கொண்ட அந்த கடினமான நாட்களில் மையம் கொண்டு விட, நடந்தேறிய நிகழ்வுகளின் கணம் அவளை ஆட்கொண்டது.


அன்று ….


பேசியில் அழகனோடு சண்டை போட்டு ஒரு மாதம் முடிந்து இருக்க, அவனே அழைத்து சமாதானம் செய்வான் என்ற மங்கையின் நினைப்பு பொய்யானதில், கடும் கோபத்தில் இருந்தவளுக்கோ, ‘போடா… நீயா பேசற வரை நான் வாய் திறக்க போறதில்லை. உன் அப்பாட்ட தைரியமா நம்ம் காதலை பத்தி சொல்லிட்ட அப்புறம் என்னோட பேசு’ என்றதெல்லாம் மயூவுக்கு நினைவில் இல்லவேயில்லை.


அவள் போக்கில் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருந்த மகளை நோட்டம் விட்டு கொண்டிருந்த சிவபாதத்துக்கு மயூவை எடை போட முடியவில்லை. மனிதருக்கு மனதில் நிரந்தரமாக ஒரு அச்சம் குடியேறி இருக்க, இரவுகளில் தூக்கம் எட்ட போய் விட, காதல் மனைவியிடம் ஏதும் பகிர முடியாத தவிப்பும் கூடிக் கொண்டு இருந்தது.


மலையனார் காலில் விழுந்த அன்று முதல், அவரின் ரத்த அழுத்தம் ஏற்றமும், இறக்கமுமாக சீசா ஆட, அதை உணர்ந்தாலும், அவ்வப்போது ஒரு மாத்திரையை போட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவர், தன் உடல்நலனை அலட்சியப்படுத்தி விட்டார்.


இரவு உறக்கத்தை தொலைத்தவர், மனைவியின் தூக்கம் கலையா வண்ணம் கட்டிலில் அசைவற்று இருக்க, நெஞ்சில் லேசாக சுருக்கென்றது. சரியாக அப்போது கைப்பேசியும் ஒலிக்க, அதில் கவனம் சிதைந்தவர், யாரென பேசியை எடுக்க, அந்த சத்தத்தில் பூரியும் முழித்து கொண்டார்.


பூரியின் நெருங்கிய உறவு பெண்ணின் அழைப்பு என்றதால், “ஹலோ…” என்க…


மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ, “ஐயோ… எப்போ… சரி நாங்க வந்துட்டோம்…” சுருக்க பேசிய சிவத்தை கண்டு,


“என்னங்க” பதட்டமாக பார்த்த மனைவியிடம்,


“செண்பகம் அத்தை தவறிட்டாங்க பூ.” சோக செய்தியை பகிர்ந்தார்.


“ஐயோ…” நெஞ்சை பிடித்து கொண்டார் பூரி. செண்பகம் அவரின் அம்மா சரஸ்வதியின் வழி உறவில் எஞ்சி இருந்த மூத்த தலைமுறை ஆவார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி இருந்த உறவுகளில் பூரணிக்கு சற்றே நெருக்கமானவர். அவரின் அம்மாவின் இறப்பு வரை செண்பகம் சித்தியோடு அத்தனை நெருக்கம்.


“எப்போ, எப்படி?” மனைவியின் கேள்விகளுக்கு தான் அறிந்து கொண்ட பதிலை சொன்னவர், அவரின் நெஞ்சில் கொஞ்சம் கூடி விட்ட வலியை பொருட்படுத்த தவறி, ஊருக்கு கிளம்பினார்.


கணவன் மனைவி மளமளவென கிளம்பிய போதும், மகளுக்கு காலை பலகாரமாக இட்லியை ஊற்றி, கூடவே பணம் அருகே வைத்து, அவளுக்கு ஒரு குறிப்பும் எழுதி வைத்து விட்டு காஞ்சி அருகே இருக்கும் பூரணியின் ஊருக்கு கிளம்பினர்.


ஆறு மணிக்கு எப்போதும் போல முழிப்பு வர எழுந்த மயூவுக்கு வீட்டின் அசாத்திய அமைதி கண்டு குழப்பம். பூரணி தான் இந்நேரம் ஒரு பாட்டு போட்டு கூடவே பாடி கச்சேரி செய்து கொண்டிருப்பாரே. அதை வேறு அப்பா ரசித்து கொண்டு, பேப்பரை கூட படிக்காமல் மனைவியை ரகசிய பார்வையிட்டு கொண்டிருப்பார்.


“என்ன, சத்தம் இல்லாம வீடு அமைதியா இருக்கு? பூரி… ம்மா…” அழைப்பு விடுத்தவாறு அறையை விட்டு வெளியே வந்தவள், நேரே சமையல் கட்டுக்கு போக, பெற்றோர் விட்டு சென்றிருந்த குறிப்பு கண்ணில் விழ அதை படித்தவள், அருகே அம்மா அவளுக்காக விட்டு சென்ற அவரின் கைப்பேசியை எடுத்து அப்பாவுக்கு அழைத்தாள்.


“ஏன் எழுப்பி விடல ப்பா?”


“நீயே படிச்சுட்டு லேட்டா படுத்த… இருடா, அம்மாகிட்ட தரேன்.” பேசியை வாங்கிய பூரி, “இட்லி இருக்கு மயூம்மா. பொடி டப்பா, எண்ணை இருக்கற இடம் உனக்கு தெரியும் தானே? மதியம் கேண்டீன்ல சாப்பிடுடா, ஏழு மணி போல வந்துடுவோம் மயூமா.”


“சரிம்மா…”


“நேரமா கிளம்பு… ஜாக்கிரதை மயூ…” இப்படியாக பேசி முடித்து, அன்றைய நாளும் அதன் போக்கில் செல்ல, மாலை வீட்டுக்கு வந்த மயூ, ஒரு டீ போட்டு குடித்து, கொறிக்க அம்மா எப்போதும் வீட்டில் செய்த பலகாரங்களை வைக்கும் டப்பாவை எடுத்து கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.


அப்போது வீட்டு கதவை திறக்க முயலுவது தெரிந்து, “யாரு?” மயூவின் கேள்விக்கு “மயூமா” சிவபாதத்தின் குரல் கேட்டு “அப்பா…” அவசரமாக கதவை திறந்து விட்டாள்.


அவர் மட்டும் உள்ளே நுழைந்தது கண்டு, “அம்மா எங்கப்பா?”


“இன்னும் செண்பகம் அத்தையை எடுக்கலை. சந்தானம் மாமா ஏதோ வேலையா ஜப்பான் போயிருக்காராம். நாளைக்கு காலையில தான் திரும்பறார். அம்மா அங்கேயே தங்கிட்டா… நாளைக்கு நீயும் காலேஜுக்கு லீவ் போடு. மாறனுக்கு கூட சொல்லி இருக்கோம். நைட் கிளம்பிடுவான்… காலம்பற மாறனை பஸ் ஸ்டாப்ல பிக் பண்ணிட்டு ஒரு நடை ஊருக்கு போயிட்டு வந்துடலாம்.”


“சரிப்பா, டீ போடறேன்…”


“வேணாம் மயூ, அசதியா இருக்கு… குளிச்சுட்டு வரேன். ஒரு லெமன் ஜூஸ் போடு குட்டி.”


“சரிப்பா…”


படித்து கொண்டிருந்த மகள் போட்டு வைத்திருந்த பானத்தை பருகியவர் கண்களை மூடி சோஃபாவில் அமர்ந்து இருக்க, இரவு உணவுக்கு இட்லி ஊற்ற வேண்டும் என மயூ எழ,


“வேணாம் மயூ… மதியம் நீ சரியா சாப்பிட்டியோ இல்லையோ, வா ஹோட்டல் போலாம்.”


“ப்பா, எனக்கு ஒரு நோட் வாங்கணும். பிரிண்டர் பேப்பர் காலியாகிடுச்சு. சாப்பிட்டுட்டு அப்படியே கடைக்கு போலாம்.”


“சரிடா வா…”


பேசி கொண்டு பைக்கில் கிளம்பியவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய அந்நேரம் சற்று கும்பல் இருக்க காத்திருக்க வேண்டி அங்கே நிற்க, திடீரென தரையில் சரிந்தார் சிவபாதம்.


“அப்பா…” அலறிய மயூ, அவருக்கருகே அவசரமாக மண்டியிட, வியர்வை பூத்த முகமாக, நெஞ்சில் கை வைத்து அழுத்தி, வலியில் கசங்கி இருந்தவரை கண்டாள்.


சுற்றி இருந்த கூட்டத்தினர் உடனே உதவ, ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றவளுக்கு மூளை ஸ்தம்பித்து விட்டிருந்தது.


“அப்பா… ப்பா…” அரற்றியவளுக்கு அங்கே மருத்துவமனையில் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவளுக்கு தெரிந்த பதிலை சொல்லி, அவசர சிகிச்சைக்கு சேர்த்து விட்டாள்.


ஒரு பத்து நிமிடம் சென்றே சற்று ஸ்மரணை வர, அதன் பின் அவள் வந்திருந்த மருத்துவமனையின் பேர் கண்களில் பட்டு, மூளை விழித்து கொண்டது. அவளின் அப்பாவின் நண்பர் சாம்மின் உறவினருக்கு சொந்தமான ஹாஸ்பிடல் அது என்பது முன்பொரு முறை அந்த பக்கமாக போகும் போது சிவம் தெரிவித்தது நினைவுக்கு வரவும், அப்பாவின் உடல்நிலை குறித்து இன்னமும் அம்மாவிடமும், மாறனிடமும் சொல்லாதது ஞாபகத்துக்கு வர, முதல் வேலையாக சாம் அங்கிளுக்கு அழைத்தாள்.


பேசி எடுக்கப்படவில்லை எனவும், அவசரமாக அவரின் மனைவி சாராவுக்கு அழைத்தாள்.


“ஹலோ பூரி,” அவரின் அழைப்பில் தான், அம்மாவின் போன் அது என உறைக்க, கூடவே அழுகையும் துவங்க… “ஆன்ட்டி… நான் மயூ…” கேவிக் கொண்டே துவங்கினாள்.


“ஹே மயூ… என்னம்மா? ஏன்டா அழற? மயூ… என்னடா?”


அழுகையினூடே அப்பாவின் நிலையை பற்றி சொன்னவள், “எனக்கு பயமா இருக்கு ஆன்ட்டி. அப்பா இன்னும் கண் முழிக்கலை. அம்மா அங்க ஊர்லயும், மாறன் பெங்களூர்ல… இருக்காங்க.” திக்கி திணறி கூறி முடித்தாள்.


“மயூ… அழாதே… நான் கிளம்பிட்டேன். அங்க தான் வரேன், அங்க சீஃப் டாக்டர் என் ரிலேடிவ் தான். நான் பேசறேன் அவங்ககிட்ட… நீ பயப்படாதே!”


“அங்கிள் ஊர்ல இல்லையா ஆன்ட்டி?”


“ஜஸ்டின் அண்ணா ஊர்ல இருந்து வந்திருந்தானே, அவனை ஃபிளைட் ஏத்த அங்கிள் ஏர்போர்ட் போயிருக்கார். நான் போனா அழுவேன்னு என்னை வீட்ல விட்டுட்டு இப்போ தான் அவங்க கிளம்பினாங்க. நீ ஸ்ட்ரெஸ் ஆகாதே… நான் வந்துட்டேன் கொஞ்சத்துல.”


சாரா ஆன்ட்டியிடம் பேசியது கொஞ்சம் திடமளிக்க, அடுத்த ஐந்தே நிமிடத்தில் வேறு ஒரு டாக்டர் வந்து, “மயூரி…” என அழைத்தவுடன்,


“டாக்டர்... அப்பா…”


“சாம் அங்கிள் ஃபிரெண்டாமே சார்! ஹார்ட் அட்டாக் ம்மா, அத்தை பேசினாங்க. வீ வில் டூ அவர் பெஸ்ட்… டெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க.”


“ஹார்ட் அட்டாக்கா?”


“இதுக்கு முன்ன அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கா?”


“இல்லையே டாக்டர். இவ்வளவு ஏன் அவருக்கு தலைவலி கூட வந்ததில்லை. எப்போவும் ஹெல்தியா இருப்பார்.” எப்போதுமே ஒளிவு மறைவே இல்லாமல் எல்லா விஷயங்களையும் பெற்றவர் பகிர்வதால், எதையும் மறைத்ததில்லை என்று எண்ணி, மகள் அப்படி கூறினாள், உண்மை நிலை உணராது.


“சிவியர் அட்டாக் மயூரி. சரி, நாங்க பார்க்கறோம்.”


“டாக்டர்… நான் அப்பாவை பார்க்கணும்.” அழுகை கன்னங்களில் வழிய மயூ கெஞ்சுதலாக பார்க்க…


“இப்போ தான் ஸ்டெபிலைஸ் ஆகி இருக்கார். கொஞ்சம் போகட்டும், ம்மா” என்ற டாக்டர் ஐ.சி.யூவிற்குள் போக, அறையின் கதவில் இருந்த கண்ணாடி திரை வழி பார்த்தவளுக்கு, இப்போது கட்டில் சுற்றி மூடபட்டிருந்த திரை லேசாக விலகியதில் காண கிடைத்த இடைவெளியில், உபகரணங்களோடு பிணைக்கபட்டிருந்த தந்தையை பார்த்ததும், கண்ணில் இருந்து நில்லாமல் கண்ணீர் ஊற்றியது.


அம்மாவுக்கு அழைக்க தோன்றவில்லை. பீதியும் பயமுமாக தந்தையை விட்டு கண்களை அசைக்காமல் நின்றிருந்த மயூ, தோளில் கை விழவும் தான் உயிர் பெற்று அவள் அருகே நின்றிருந்த சாராவை கண்டவுடன் “ஆன்ட்டி அப்பா…” கேவ துவங்க…


“அழாதே கண்ணம்மா, மேத்யுக்கிட்ட பேசினேன். பயப்பட ஒண்ணுமில்லைன்னு சொன்னான்.”


இப்போது சாராவின் மேல் சாய்ந்து, “அப்பாவை பார்க்கணும்…” மீண்டும் அழுகை துவங்க…


“அங்கிள் வந்துடுவார், அப்போ போகலாம்டா. மெடிசின்ஸ் கொடுத்து இருக்காங்க. ஆமா, அம்மா எப்போ வருவா, கிளம்பிட்டாங்க தானே?”


“அம்மா… அம்மா ஊர்ல… நான் இன்னும் சொல்லவேயில்லை ஆன்ட்டி” மயூ சொன்னதை கேட்டவருக்கு இன்னமும் உள்ளுக்குள் நடுக்கம் இருந்தது.


அவரின் ஒன்று விட்ட அண்ணன் மகன் மருத்துவர் மேத்யு, “நிலைமை கவலைக்கிடம் அத்தை. மேசிவ் அட்டாக். உடனே சிகிச்சை தந்து ஸ்டெபிலைஸ் செஞ்சிருந்தாலும், இன்னமும் ஆபத்து கட்டத்துல தான் இருக்கார். கொஞ்சம் தேறிய பின்ன தான், ஸ்டெண்டா இல்லை பைபாசான்னு முடிவெடுக்கணும்,” என்று விளக்கவும், அது கேட்ட சாராவுக்கு கலக்கம் கூடி விட்டது.


ஏர்போர்டில் இருந்து கிளம்பி விட்டதாக தகவல் சொன்ன கணவனுக்கு இன்னமும் நண்பன் குறித்து தெரிவித்து இருக்கவில்லை அவர். கணவர் தான் பூரணிக்கு பக்குவமாக விஷயத்தை பகிர வேண்டும் என்று முடிவு செய்தவர், மயூ சாப்பிடவில்லை என்றது நினைவுக்கு வர,


“வா மயூ… இங்க கேண்டீன் நல்லா இருக்காது. பக்கத்துல ஒரு டிஃபன் செண்டர் இருக்கு. ரெண்டு இட்லி சாப்பிடுவே…” அன்பாய் அழைத்தார்.


“இல்ல ஆன்ட்டி எனக்கு பசியில்ல… அப்பா முழிக்கட்டும்…”


அவர் எத்தனையோ வற்புறுத்தியும் மயூ மறுக்க… “சரி… அழாம இரு… உனக்கு இட்லி வாங்கிட்டு வரேன்” அவர் நகரவும், மீண்டும் கண்ணாடி தடுப்பு முன் நின்றவள், சிவபாதம் லேசாக கண் திறந்ததையும், அவர் நகர பார்த்ததையும் கவனித்து, அறையின் உள்ளே வேகமாக நுழைய, அங்கிருந்த நர்ஸ்…


“இங்கெல்லாம் வர கூடாது, போ ம்மா… வெளிய போ…” விரட்ட முயல…


“மயூ… இங்க வா…” மிக தீனமாக சிவபாதம் அழைக்கவும், அந்த நர்சும் விரட்டுவதை நிறுத்தி “டூ மினிட்ஸ்…” என வெளியேறினார்.


“மயூ… அப்பா…” இருவரும் அழைப்பில் உருக…


“உன்னை நெனைச்சு எனக்கு ரொம்பவும் கவலை! நீ… சின்னைய்யா… வேணாம் மயூ ம்ம்மா… நான் சரியா தூங்கி சில மாசம் ஆகிடுச்சு…”


“அப்… அப்பா…” அதிர்வாக பெற்றவரை கண்டவள், அவரின் அக்கூற்றில் திகைத்து விட்டாள்.


“பயத்துல தூக்கம் வராம, விடிய விடிய முழிச்சு கிடந்து, உனக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுன்னு கவலைப்பட்டுட்டு இருப்பேன். இன்னைக்கு கூட அப்படி இருந்தப்ப, லேசா நெஞ்சுல சுருக்குன்னு வலி தெரிஞ்சுது. உனக்கு பாதுக்காப்பா நான் எப்போவும் துணை இருக்கணும்னு என் மனசு இப்போ கூட துடிக்குது.. என் இதயம் தான் நின்னுடும் போல!”


“அப்...அப்பா… அப்படி எல்லாம் பேசாதீங்க…”


“இல்ல மயூ… உங்க விஷயம் அரைகுறையா தெரிஞ்சப்பவே மலையனார் ஐயா முகத்துல தாண்டவமாடின கோபம் இருக்கே… ஐயோ சாமி, அப்போத்துல இருந்து என் மனசு தவியா தவிக்குது. இதுல உன்னை பார்க்க சின்னைய்யா வந்ததும் எனக்கு ஈரக்குலையே நடுங்கிடுச்சு. என் நியாயமான பயம் உனக்கும் புரியலை… தீயோட விளையாடறன்னு நான் சொல்றதும் உன் குழந்தை மூளைக்கு உறைக்கல! உன் கவலையே எனக்கு பெரிசா இருக்கு. உனக்காகவாவது உசுரு பொழைச்சு வந்துடணும்னு நான்.”


பொருந்தா தன் காதல் குறித்த அப்பாவின் அச்சம் நிறைந்த தவிப்பும், இதன் விளைவாக அவரின் உறக்கத்துக்கு தான் உலை வைத்தது அப்போது தான் புரிய, அவரின் நெஞ்சு வலியை பொருட்படுத்தாமல், தன்னை குறித்த அவரின் கவலையான அக்கறை மிகுந்த பேச்சு மயூவை பெரிதும் அசைக்க, “ப்பா… இனி நான் யாரையும் பார்க்க மாட்டேன். பேசலை, பழகலை! நீங்க ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க.” இதை… இந்த உத்தரவாதத்தை மகளின் திருவாயில் இருந்து கேட்க தான், சிவபாதம் காத்திருந்தார் போல! அவரின் இதயம் சட்டென்று தன் இயக்கத்தை நிறுத்த, பீம்பீம் பீம் பீம்… அவரோடு பிணைக்கப்பட்ட இயந்திரம் அலற துவங்கியது.


நர்ஸ் புயலாக அறைக்குள் பிரவேசிக்க, அடுத்து மருத்துவர் கூட்டமே உள்ளே அரக்கபரக்க நுழைய, மயூவை யாரோ வெளியே அனுப்பினர் வலுக்கட்டாயமாக.


“ஐயோ… ப்பா… அப்… அப்பா…” மூடியிருந்த கதவின் கண்ணாடி வழியே ஏதும் பார்க்க முடியுமா என்ற பரிதவிப்போடு, அரற்றி கொண்டிருந்தாள்.


இட்லி பொட்டலத்தோடு வந்த சாரா, தீவிர சிகிச்சை பிரிவின் முன் மருத்துவ குழாமின் பரபரப்பு கண்டு ஓடி வர… “ஆன்ட்டி… அப்பா… அப்பா…” அறையை சுட்டிய மயூவின் வாயிலிருந்து இது தவிர ஏதும் வரவில்லை.


பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வந்த டாக்டர் மேத்தியூ, “அத்தை… வாங்க. அவருக்கு திரும்ப ஒரு அட்டாக் வந்துடுச்சு. நின்னுட்ட இதயத்தை ஷாக் கொடுத்து உயிர்பிச்சு இருக்கோம். ரொம்ப கிரிட்டிகல், இன்னைக்கு இரவு தாண்டிட்டா தேவலை. விடியட்டும்… அப்போ தான் எதுவும் சொல்ல முடியும்.” சடுதியில் தந்தையின் உடல்நலன் மேலும் சீர்குலைந்த விவரத்தை மருத்துவரின் வாயிலாக கேட்ட மயூ தாளமட்டாமல் அழ, சமாதானம் செய்ய முயன்ற சாரா தோற்றார்.


வெளியே போயிருந்தவர், அப்போதே கணவனுக்கு பேசியில் தகவல் சொல்லி இருக்க, பதட்டமாக அங்கே வந்து சேர்ந்தார் சாம். அவர் தான் பூரியின் கைபேசியை ம்யுவிடம் இருந்து வாங்கி, அவருக்கு பரிச்சயமான அவர்களின் உறவினருக்கு அழைத்து மெல்ல விஷயத்தை சொல்லி, அடுத்து மாறனுக்கு அழைத்து பேசி, மற்ற விஷயங்களை கவனித்துக் கொண்டார்.


அந்த இரவு மெல்ல நீள… சாவு வீட்டுக்கு வந்திருந்த உறவுகளின் துணையோடு, அடித்து பிடித்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார் பூரணி.


இப்போது பூரணியும் இடிந்து அழ, தாயையும் மகளையும் உறவும் நட்பும் தாங்கினர். மருத்துவர்கள் மீண்டும் கேட்ட போதும் அவர்கள் அறிந்த அளவில் நல்ல உடல் நிலையில் இருந்தார் என்று சொன்னவர்கள், சிவபாதத்தின் உண்மை உடல் நிலையை அறிந்து இருக்கவில்லையே!


மாறனும் வந்து சேர, மேலும் இருபத்திநான்கு மணி நேரம், மருத்துவ உபகரணங்களின் உதவியோடு ஜீவித்திருந்த சிவபாதம் கண் விழிக்காமலேயே மீளா உறக்கத்தில் ஆழ, அனைவரும் கதறி துடித்தனர்.


மயூ உள்ளுக்குள் நொறுங்கி விட்டாள். அப்பாவுக்கு தன்னால் தான் இந்த இதய நோயும், அல்ப ஆயுசும் என குற்றவுணர்வு அவளை குத்த துவங்க, அவளின் இயல்பு குணம் மறைந்து அமைதியானாள்.


பூரணியும் பொலிவிழந்து கிடக்க, மாறன் இருவரையும் கவனிக்க, அடுத்த ஒரு மாதமும் நரகமாக கழிய, அழகனோடு தொடர்பற்று இருந்தவள், இத்தனை நடந்தும் அழகனுக்கு அழைத்து எதையும் தெரிவிக்கவில்லை.


ஒரு காலத்தில் நெல்லையில் இவர்களின் உறவுக்கு பாலமாக இருந்த சௌந்தரோ பிளேஸ்மென்டில் கல்கத்தாவில் போஸ்டிங் ஆகி, அங்கேயே வேலையும் கிடைத்ததில் ஊர் பக்கம் வந்திருக்கவில்லை. ஆக, அவனுக்கும் விஷயம் தெரியவில்லை. தந்தையின் திடீர் மறைவை குறித்து பள்ளி நண்பர்களுக்கு மாறனும் தெரிவித்து இருக்கவில்லை. அந்த இக்கட்டான நாட்களில், அதற்கெல்லாம் அவனுக்கு நேரமும் இல்லை.


இப்படி அழகனும் மயூவும் விலகி இருக்க, அப்போது தான் அழகனின் வாழ்வில் பெரும் புயல் அடித்தது. ஆம்… மலையனார் எதிர்பாராமல் உயிர் இழந்தார். இரவு படுத்தவர், உறக்கத்திலேயே கண் துஞ்சி இருக்க, செய்தி அறிந்து புனேயில் இருந்த அழகன் பதறிக் கொண்டு பறந்து வந்தான். அரசியலில் பேர் பெற்றவர், சட்டமன்ற உறுப்பினர் வேறு! ஆக, மலையனாரின் சாவு தமிழகத்துக்கே தெரிய வர, ஊடகங்களில் வந்த செய்தி பார்த்தும் மயூ அசையவில்லை.


அப்பாவுக்கு தந்த வாக்கு, அந்த சில நொடிகள் தான், அவளை தின்று கொண்டிருக்கிறதே. ஆக… அழகனை தொடர்பு கொள்ளவில்லை. துக்கம் விசாரிக்கவில்லை. எப்போதும் போல இயந்திரகதியில் காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தாள்.


ஆயிற்று மலையனாரின் இறுதி காரியங்கள் எல்லாம் முடிய, இப்போது அவரின் சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தல் பேச்சு துவங்க, தந்தையின் இடத்தை தக்க வைத்து அவரின் வாரிசாக அழகன் வர வேண்டும் என்பது அவன் ஜாதி பெருந்தலைகளின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது. அழகனின் மறுப்பு ஏற்கபடவில்லை. அவனின் விருப்பத்துக்கு மாறாக எல்லாம் நடக்க துவங்கி, அவனின் வாழ்க்கை பாதை அவன் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி, புது திசையில் பயணிக்க துவங்கியது.


இத்தனைக்கும் நடுவே சிவபாதத்தின் பேசிக்கு அழகன் அழைத்தான். இப்போது, மயூவின் கையில் தான் அப்பாவின் பேசி இருந்தது. முதல் முறை அழைப்பு வரவும், சற்றும் தயங்காமல் அழகனை ப்ளாக் செய்து விட்டாள்.


அணை இட முடியாதவன் ஆயிற்றே அழகன். மலையனார் மறைவுக்கு பின், ஒரு மாதம் கழித்து சென்னைக்கு வந்தவன், நேரே இவளின் கல்லூரிக்கு தான் வந்தான். வகுப்பில் இருந்த மயூவுக்கு விசிட்டர் என பியூன் வந்து அறிவிக்க, யாரென யோசித்து கொண்டு வந்தவள், அங்கே… அப்போது, அழகனை எதிர்பார்த்திருக்கவில்லை.


“வேணாம்… இனி என்னை தேடி வராதே. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,” மயூரி உதிர்த்த வார்த்தைகளை கேட்டவனின் முகம் கோபத்தில் சிவந்தது.


“அப்பா தவறின விஷயம் பேப்பர்ல படிச்சியா இல்லையா?”


வெறுமே தலையசைத்தவளை தன் முகம் பார்க்குமாறு வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன், “என்னை பத்தி நினைக்கலியா நீ? ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல தோணலையா உனக்கு? சொல்லுடி…” உருமியவனை நிமிர்ந்து பார்த்தவள்,


“உன்னால… இல்ல… என்னால… என்னால மட்டும் தான்! என்னை பத்தி கவலைப்பட்டே, என் அப்பா போய் சேர்ந்துட்டார்.”


“என்ன?” அதிர்ச்சியில் அழுத்தி பிடித்திருந்த அவள் கன்னத்தை விட்டவன், “ஹே… மயில் என்ன சொல்ற? எப்போ? என்னாச்சு? எனக்கு ஏன் சொல்லலை? நான் போன் போட்டும் யாரும் எடுக்கலையே…”


“எனக்கு நீ வேணாம்… ஐ ஹேட் யூ. ப்ளீஸ்… நமக்குள்ள இனி எதுவும் இல்ல. என்னை நீ லவ் செஞ்சது உண்மைன்னா, இனி என்னை தொந்தரவு செய்ய மாட்ட. உனக்கு நிஜமா என் மேல காதல்னா இனியும் என்னை கஷ்டப்படுத்த மாட்ட. குட் பை” திரும்பி பாராமல் போனவளை நிறுத்தும் வழி புரியாது சிலையாக பார்த்திருந்தான் செந்தூர் அழகன்.


வேகமாக, அவள் முன் போய் நின்றான்… “இது தான் உன் முடிவா?”


ஆம் என்று வெறுமே தலை அசைத்தவள், விறுவிறுவென நடந்து போக, ஸ்தம்பித்து நின்று விட்டான்.


********************************


இன்று


சென்னையில் இருந்து நெல்லைக்கு திரும்ப, விமான நிலையத்தில் காத்திருந்த அழகனும் இந்த கணங்களை தான் அசை போட்டிருந்தான்.


அன்று மயூ அழுகையினூடே பகிர்ந்த தகவலும், அவனின் இதயத்தை கிழித்த அவளின் பேச்சும், கூடவே குடும்பம், சுற்றம், சமூகம் அவனுக்கு கொடுத்த நெருக்கடியும் எல்லாம் சேர்ந்து, அரசியலில் அவனின் எதிர்பாராத பிரவேசத்தை அடுத்து, பொது வாழ்வில் தீவிரமாக மூழ்கி, பேரளவில் இல்லாமல் எடுத்த பொறுப்புக்கும், ஏற்ற பதவிக்கும் உரியவாறு தன்னை மாற்றி, பொது ஜன நலனில் தன்னை மூழ்கடித்து கொண்டான். ஒரு விதத்தில் மயூவை விட்டு விலகி இருக்க முடிந்ததே, இந்த ஓய்வில்லா வேலைகளினால் தானே.


அவனை பற்றி… காதலை பற்றி சிந்தனைகள் எழுவதற்க்கு இடம் கொடாமல் மூளைக்கு எப்போதும் ஏதோ வேலை கொடுத்து, சென்னை, நெல்லை என பறந்து பறந்து சொந்த தொழில், சட்டமன்ற உறுப்பினராக, இப்போது அமைச்சராக தன்னை எப்போதும் பிசியாக வைத்து அவனை ஏமாற்றி கொண்டிருந்தான்.


ஆம்… அவனின் நாடி நரம்பில் இரண்டற கலந்தவளாயிற்றே மயூ! அவள் விட்டு சென்ற காதல் சுவடுகள், ஒவ்வொரு நாளும் தன் இருப்பை ஏதோ ஒரு நினைவின் மூலம் தொடர்ந்து காட்டி, மேலும் மேலும் விருப்பம் பெருகியிருக்க… அவனால் முடிந்தது மயூவை தொந்தரவு செய்யாமல் இருப்பது மட்டுமே. மற்றபடி அவன் எந்த தனிப்பட்ட முயற்சி செய்யா விட்டாலும் அவர்களின் காதல் காட்டு செடியாக அடங்காமல் வளர்ந்து, அவன் உள்ளத்தை முற்றிலுமாக தன் வசப்படுத்தி இருந்ததுவே!


ஹும்… பெருமூச்சொன்றை விட்டவன், இன்னமும் வீட்டினரிடம் விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறான். இதோ, ஒரு திட்டம் மனதில் உதித்ததில் அதை செயல் படுத்த துவங்கி விட்டான். மயூரியுடன் அழகனின் திருமணம் கை கூடுமா? தன்னால் வீட்டினரை சமாளிக்க முடியுமா என்ற குழப்பத்தோடு நெல்லைக்கு விமானம் ஏறுகிறான் அமைச்சர் செந்தூர் அழகன்.


பொன் மயில் அழகு மயிலாக அவன் கை பிடிப்பாளா?



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page