top of page

மஞ்சக்காட்டு மயிலே 10

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 10


ஆடை அங்கங்கே ஈரமாக இருக்க, நடையை முடித்து கொண்டு வந்த மகளின் முகமே மலர்ந்து பூரித்திருக்க, அழகனை சந்தித்து விட்டாள் என்பதை புரிந்து கொண்ட பூரி, அப்போது கூட தன்னிடம் விஷயத்தை மறைக்கும் மகளை வருத்தத்தோடு பார்த்திருக்க, அதிகாலையில் மணாளன் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இன்னமும் முத்து குளித்து கொண்டிருந்தவளோ, அன்னையின் முகத்தை கவனிக்கவில்லை.


அன்றைய தினம் முழுதுமே உற்சாகமாக கழிய, இரவெல்லாம் உறக்கம் தொலைத்திருந்தாள் மயூ. அது புதிதில்லை என்றாலும், இத்தனை நாள் கல்யாணத்தை தடுக்க, வீட்டினரின் ஏற்பாடுகளை முறியடிக்க, அழகனை மறக்க என பிற காரணங்கள் வரிசை கட்டியது எனில், இப்போது அவனே சரணம் என அவன் காலடியில் வீழ துடிக்கும் காதல் மனதை அடக்க வழி தெரியாமல் அல்லவா அல்லல்படுகிறாள்.


காலையில் ஆற்றோரம் அழகனோடு பேசியது மனக்கண்ணில் விரிய அவனின் அணைப்பில் புதைந்து தொலைந்து விட தவித்தது காதலில் துடிக்கும் இதயம்.


தொலைந்ததை அங்கேயே தேட வேண்டும்! அவனுள் தொலைந்த உள்ளத்தை அதன் தேடல்களை உற்ற குடும்பத்தாரிடம் இருந்து மறைத்து தன்னையே ஏமாற்றி கொண்டு இருப்பவளுக்கு பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது.


சென்னையில் கல்லூரியில் அடி எடுத்து வைக்க இருந்த மயூ, படிப்பை பற்றிய கனவுகளை மட்டுமல்ல, அழகனோடான எதிர்காலத்தை குறித்த அழகான ஆசைகளோடு கவலை என்பதே அறியாத சிட்டாக மகிழ்வோடு வலம் வந்தாள்.


சென்னை வாசம், கல்லூரி வாழ்க்கை குறித்தெல்லாம் பலதையும் நினைத்து பரபரத்த உள்ளத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, இந்த மாற்றங்களை ஆவலாக எதிர்பார்த்திருந்தவளுக்கு அப்பாவின் நடவடிக்கையில் சில மாறுதல்கள் தெரிந்தாலும், ஊரை பிரிந்து வந்த வருத்தம் அவருக்கு என்றே வீட்டினர் அனைவரையும் போல மயூவும் எண்ணி இருந்தாள்.


“மயூவுக்கு போன் வாங்கணும், கிளம்புங்க…” பூரி அம்மாவின் சொல்லுக்கு எப்போதும் மறுவார்த்தை பேசாதவர் அதிசயமாக,


“இப்போ எதுக்கு போன்? அதெல்லாம் வேணாம்!” அதிரடியாக அப்பா மறுத்ததை கேட்ட நொடி மயூ பெரிதுமே அதிர்ந்தாள்.


கைபேசியில் உரையாடி அழகனோடான காதலை வளர்க்க, தழைக்க செய்ய கற்பனை கோட்டைகள் பல கட்டி இருந்தவளின் திட்டத்தை ஒரே நொடியில் அல்லவா தகர்த்து விட்டார் சிவபாதம்.


“என்ன பேசுறீங்க நீங்க? காலேஜுக்கு போற பிள்ளைக்கு போன் அவசியம்.”


“நாமெல்லாம் காலேஜுக்கு போன் கொண்டு போனோமா என்ன? வேணாம்னு நான் முடிவு செஞ்சப்புறம், என் பேச்சை மீற மாட்டேன்னு நினைக்கறேன்” விருட்டென எழுந்து சென்ற கணவரின் இந்த வீண் பிடிவாதம் புரியாமல் திகைத்த பூரி குழம்பி நின்றார்.


ரோஷம் பொத்து கொண்ட மயூ, “எனக்கு போன் வேண்டாம்மா” கோபித்து கொண்டவளும் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.


அவள் கண் பார்த்ததை இது நாள் வரை வாங்கி குவித்து அவளை குளிர்வித்த தந்தையின் திடீர் மறுப்பு பெருவலியை தர, எப்படியும் அம்மா சமாதானம் செய்து அப்பாவை தன் வழிக்கு கொண்டு வருவார். அப்போது நாமும் முறுக்கி கொண்டு, உள்ளதிலே நல்ல போனை வாங்க வேண்டும் என இளையவளின் மூளை குறுக்கில் வேலை செய்ய, அதற்கு வழியே இன்றி போனது தான் அடுத்த பலத்த பேரதிர்ச்சி.


மீண்டும் மீண்டும் பூரி சில முறை கேட்டு பார்த்தும், கைப்பேசியால் நேர கூடிய ஆபத்துக்களை அடுக்கிய சிவபாதம் திடமாக மறுத்து விட, அவரின் காரணங்கள் ஏற்று கொள்ள கூடியதாக இருந்தாலும், மாறும் காலத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி கொள்ளும் பழக்கம் கொண்ட பிள்ளைகளிடம் நண்பியாக பழகும் வழக்கம் கொண்ட பூரி செய்வதறியாது சமைந்து நின்று விட்டார்.


மாறன் தான் ஒரு நவீன கைப்பேசியை வாங்கி தங்கைக்கு பரிசளித்தான். “என்னோட சம்பளத்துல உனக்கு வாங்கின ப்ரெசன்ட் மயூ” அண்ணன் நீட்டிய மொபைலை, அப்பாவை காட்டிலும் அதிவீம்புகாரியான மயூ தொட கூட இல்லை.


இந்த ஒரு கரும்புள்ளி சம்பவம் தவிர்த்து, மற்றபடி வீட்டில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் வழமையான கிண்டல் கேலியென நாட்கள் ஜோராக நகர, பெண்கள் இருவரும் போன் குறித்த அவரின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தை தனிமையில் யோசித்தாலும், தந்தை மேல் வேறு எந்த சந்தேகமும் மயூவுக்கு எழவில்லை என்பதே நிஜம்.


இப்படியே இரண்டு மாதங்கள் மாற்றமின்றி செல்லவும், தந்தையின் வித்தியாச நடவடிக்கைக்கான விடை ஒரு நாள் மயூவுக்கு தெளிவாகியது.


காலேஜ் முடிந்து பெரும்பாலும் மயூவை வீட்டுக்கு அழைத்து வருவது, சிவபாதம் தான். அப்படி அவர் வருவதற்கு தாமதமானால், கல்லூரி வளாகத்தில் காத்திருப்பாள். இப்படியான ஒரு நாள் தான், அவளை சந்திக்க ஆசையும், ஆவலுமாய் அழகன் திடுமென வந்தான்.


பிரிந்தவர் சேர்ந்தால் எப்படி உணர்வு பிரவாகமாக இருப்பார்கள்! மயூவும், அழகனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிலும், இரு மாதங்களுக்கும் மேலாக அவன் காதல் தேவதையோடு முற்றிலும் தொடர்பற்று விட்டதில் அழகன் பெரிதும் கலங்கி இருந்தான்.


விவரம் அறிந்து வந்து சொல்ல, சௌந்தர் கூட அப்போது உள்ளூரில் இல்லாததாலும், மயூ டே ஸ்காலர் என்றதாலும் அவளை பற்றி அறிய வழியற்று இருந்தவன், கல்லூரியில் கிடைத்த முதல் விடுமுறையில், வீட்டுக்கு கூட செல்லாமல் நேரே சென்னைக்கு வந்து இறங்கி விட்டான்.


அன்றைய தேதியில் அழகனை பொறுத்தவரை அது பெரிய ரிஸ்க். அதற்கும் துணிந்தே மயூவை நேரே காண வந்தான்.


நலன் விசாரணைக்கு பின் “ஏன் போன் பண்ணலை பட்டர்ஃபிளை, என் நம்பர் தெரியுமே உனக்கு?”


“வரவர இந்த அப்பா ரொம்ப சில்லியா நடந்துக்கறாங்க செண்ட்டு டப்பா. மொபைல் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டார். எனக்கும் கோபம் வந்துடுச்சா… உங்க மொபைலும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு இருக்கேன்.”


“அதுக்காக எனக்கு போன் பண்ணாம இருப்பியா நீ? அட்லீஸ்ட், ஒரு பப்லிக் பூத்ல இருந்து கூப்பிட்டு தகவல் சொல்லி இருக்கலாம்ல. ப்ச்… என் ஹாஸ்டல் அட்ரெஸ் கூட தந்தேனே! ஒரு லெட்டராவது போட்டிருக்கலாம்ல மை டப்பா? என்னால தான் உங்க வீட்டுக்கு எழுத முடியாது, நீ எழுதி இருக்கணும்ல! ரொம்ப தவிச்சு போயிட்டேன்.” என்னவோ ஏதோவென பரிதவித்திருந்தவன் தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்தான்.


விமானம் ஏறி வந்து பார்ப்பது அழகனுக்கு பெரிய விஷயமே இல்லை தான்! ஆனால், அவன் அப்பாவின் காதுக்கு விஷயம் சென்று விட்டால் என்ற பயத்தில் அடக்கி வாசித்து, கிடைத்த முதல் சந்தர்பத்தில் அவளை காண பறந்தோடி வந்திருந்தான்.


“ப்ச்… மொபைல் விஷயத்துல இன்னும் அப்செட்டா இருக்கேன் அழுக்கு மூட்டை. எழுதணும்னு தோணவேயில்ல.”


மயூவின் பதிலில் கடுப்பானவன், “அப்பப்ப பச்சப்பிள்ளைன்னு காட்டிடுவியே!” இன்னமும் ஆற்றாமை தீரவில்லை அழகனுக்கு.


“சும்மா என்னை பேசாதே! காலேஜ், கிளாஸ், ராகிங், அதுல மாட்டாம தப்பிக்கன்னு இதுக்கே எனக்கு டைம் சரியா இருக்கு. ஊர் திருவிழா வரதா அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்க… நீயும் அதுக்கு நிச்சயம் வருவே, அப்போ நேர்ல பாக்கலாம்னு விட்டுட்டேன்.” இவளை திருவிழாவுக்கு அழைத்து செல்வதா? ஆத்தூருக்கு போகும் எண்ணமில்லாமல் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறார் சிவபாதம் என்பதை மயூ அறிந்திருக்கவில்லை.


அதன் பின் சில நிமிடங்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசி தங்கள் உலகில் ஆழ்ந்தவர்கள் மயூவை அழைக்க வந்த சிவபாத்தை கவனிக்கவில்லை.


“மயூ…” அழுத்த அழைப்பில் அப்பாவின் குரல் நோக்கி திரும்பியவள், எப்போதும் கனிவாகவே கண்டிருந்த முகத்தில் அன்று முதல் முறை கோபத்தை கண்ட போதும் அதை பொருட்படுத்தாமல்,


“ஹாய்ப்பா… இவங்க…”


“தெரியும்,” ஒற்றை வார்த்தை கத்தரித்ததாக வெளிப்பட்டது சிவபாதத்தின் பதில். முகத்திலோ மெல்லியதாக வியர்வை அரும்பி நின்றது.


மயூ கூலாக இருக்கவும், அதிர்வில் இருந்து மீண்ட அழகன், “ஹலோ அங்கிள்…” புன்னகையோடு முகமன் கூறினான்.


“சின்னய்யா!” அந்த ஒற்றை வார்த்தை அழகனை எட்ட நிறுத்தவே உச்சரிக்க பட்டதென, சட்டென புரிந்து கொண்டான் அழகன்.


“அங்கிள் பிடிக்கலைன்னா மாமான்னு கூப்பிடறேன்.” விடாக்கண்டனாக இருந்தான் அழகன்.


விடாது பெருகிய வியர்வையை பொருட்படுத்தாமல் கை குவித்து கும்பிட்டவர், “சின்னைய்யா… இதெல்லாம் ஒத்து வராதுங்க. எம்மக விவரமில்லாத சின்ன பிள்ள. ஊர் முறை புரியாதவ, உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லய்யா. எம்மகளை நீங்க பார்க்கறது இது முதலும் கடைசியுமா இருக்கட்டுங்கைய்யா. வாழ வேண்டிய குருத்து அவ. உங்களை கும்பிட்டு கேட்டுக்கறேன், இப்படி ஒரு விஷயம் வெளிய வந்தா…”


“நீங்க அனாவசியமா பயப்படுறீங்க…”


“வேணாம் சாமி… நீங்க ஊருக்கே படியளக்கும் குடும்பத்து ஆளு. நாங்க கை கட்டி உங்க ஆணைக்கு அடி படிஞ்சு சேவை பண்ணுற ஆளுங்க. விட்டுடுங்கய்யா!”


தன் தந்தை வாக்கியத்துக்கு ஒரு ஐயா போட்டதும், கை எடுத்து நிற்பது கண்டு முதலில் லேசாக அதிர்வுற்ற மயூ சுதாரித்து, எரிச்சலுற்றவளாக, “ப்பா… இது என்ன அந்த காலமா? நீங்க எத்தனை பெரிய அரசாங்க வேலையில இருக்கீங்க, இதென்ன பயந்த பேச்சு?”


“நீ சும்மா இரு… அளவுக்கு அதிகமா உனக்கு செல்லம் தந்துட்டேன். யார் கூட பழகன்னு கூட புரியாதவளா இருக்க. அவரு நிழல் கூட நம்ம மேல பட முடியாது.” மகளிடம் சிடுசிடுத்தார்.


தந்தையின் இந்த குரல் மாற்றமே அதிர்ச்சியளிக்க, அது தாளாமல் “அப்பா” என மயூரி விளிக்க, தன்னவளை அவளின் தந்தையே ஆனாலும் பொதுவிடத்தில் வைத்து அப்படி பேசியது பிடிக்காதவனாக “மாமா” என அழகன் சற்று அழுத்தமாக அழைக்க,


“சின்னையா, இந்த அடிமையோட வேண்டுதலை மறுக்காதீங்க, எம்பிள்ள உசுரு முக்கியம் எனக்கு. தயவு செஞ்சு அவளை விட்டுடுங்கய்யா.” மீண்டும் கும்பிட்டவர், “உத்தரவு வாங்கிக்கறேன்.”


தன் நிலைப்பாட்டில் மாறாதவராக, “வா மயூ…” அழுத்தமாக நின்றிருந்தவளை இழுக்க முயன்று தோற்றார். மகளின் பிடிவாத குணம் சிவபாதமும் அறிவார்.


“ஒரு ரெண்டு நிமிஷம் உங்க பொண்ணுட்ட நான் பேசலாமா?” உங்க பொண்ணு என்பதை அழுத்தி கேட்டான் அழகன்.


இருப்பதோ சென்னை… ஆனாலும் ரத்தத்தில் ஊறிய பயமல்லவா? பார்வை அங்கும் இங்கும் அலைப்புறுதலோடு யாரும் தங்களை பார்க்கின்றனரோ என முள் மேல் நிற்பதை ஒத்த அவஸ்தையில் நின்றிருந்த சிவபாதம், தயக்கமாக “ம்ம்ம்…” என்றவர், சற்றே எட்ட போய் நின்று கொண்டார்.


தன் வீட்டினரை, சமூகத்தினரை நன்கு அறிவான் அழகன். அதே நேரம் அவன் விருப்பத்துக்கு எப்போதும் எதிர்ப்பு சொன்னதில்லை மலையனார் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.


பிள்ளைகளின் காதலுக்கு முட்டுக்கட்டை போடும் பெற்றோரை பற்றி, எத்தனை படம் பார்த்திருக்கிறான், சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறான்! சாதி ஏற்ற தாழ்வுகள் இருவர் இடையே பெரும் பிரச்சனையாக கிளம்பும் என அவனுக்கும் நிச்சயமாக தெரிந்து இருந்தாலும், அது குறித்து பெரிதாக பயம் எல்லாம் அது நாள் வரை எழவில்லை அழகனுக்கு.


மயூவும் அப்போது தான் பள்ளி மாணவி… அவனுமே கல்லூரியில் படிப்பவன். ஆக, அவர்கள் படிப்பு முடியும் வரை, சற்று ஜாக்கிரதையாக யாரும் அறியா வண்ணம் மயூவோடு பழக எண்ணி அதன் படி நடந்தவனுக்கு அது நாள் வரை, துளியளவு கலக்கம் இல்லவே இல்லை என்பதே நிஜம்.


சிவபாதத்தின் பயம் கலந்த பவ்ய பேச்சு, முதல் முறையாக அழகனின் அசட்டு தைரியத்தை உடைத்தெறிய, நடப்பும் முகத்தில் அடிக்க சற்றே காதல் மயக்கத்தில் இருந்து தெளிந்தான்.


“மயில், மாமாவை கோபிக்காதே…”


மயூவுக்கு அவள் அப்பா தானே பெரிய ஹீரோ. அப்படிப்பட்ட அப்பாவின் இன்றைய இந்த அச்சம் கலந்த பார்வையும், முதுகு வளைந்த பாவனையும் எரிச்சலை கிளப்பி விட்டது இளையவளுக்கு.


“சுத்த பைத்தியக்காரத்தனமா இல்ல பேசுறார்” நடப்பை ஏற்க முடியா அதிர்ச்சியில் முணுமுணுத்தவளிடம்,


“இங்க பாரு மயில், இது அவர் ரத்தத்துல ஊறினது.”


“அப்போ…” மேலும் மயூரி விவாதிக்கும் முன்,


“இப்போதைக்கு உன் படிப்புல கவனத்தை வை… நானும் படிச்சு முடிக்கறேன். சில விஷயங்களை ஆற போட்டு தான், நம்ம வழிக்கு கொண்டு வரணும். நான் பார்த்துக்கறேன். என் நம்பர் தெரியும் தானே? அவசியம்னா ஒரு கால் போடு… ஓடி வந்துடுவேன். புரிஞ்சுதா?”


“என்ன அழகு, நீயும் அவர் சொல்படி ஆடுற?”


“எதையும் யோசிக்காம சும்மா ஒண்ணும் அவர் பேச்சை நான் கேட்கலை மயில்,” என்றவன் கண்டதும் காதலில் விழுந்த போதே இதையெல்லாம் சிந்தித்து நிதானித்து இருக்க வேண்டும். அப்போது வயதும், மனமுதிர்வும் சற்று குறைவு… தவிர காதல் கண்ணை மட்டுமா கருத்தையும் அல்லவா மறைத்து விட்டது.


இவ்விரு ஆண்டுகள் சிறு நெருஞ்சியாக உறுத்திய அவர்களிடையே நிலவிய வேறுபாடு இன்றோ சிவபாதத்தின் பேச்சில் முகத்தில் அறைந்து விஸ்வரூபமெடுத்து வெளி வர, அந்த பேச்சில் இருந்த உண்மையும் நியாயமும் சுட, முதல் முறை அவர்கள் உறவை பற்றிய பய பந்து அவன் நெஞ்சில் எழுந்தது. உள்ளுக்கு இந்த எண்ணம் ஓட,


“எல்லாம் நான் பார்த்துக்கறேன் என் செல்ல மைனா. நீ பகல் வேளையில ஒழுங்கா படி, நைட்ல கனவுல என்னோட டூயட் பாடுவியாம், யாரு வேணாம்னா?” என்ன தான் வாய் வார்த்தையாக எட்டி, விலகி இருப்போம் என்று சொன்னாலும் வயதும், இளமையும், காதல் மயக்கமும் அவர்கள் இயல்பில் இருந்து மாறிட விடாமல் சதி செய்தது.


சிவபாதத்தின் பேச்சுக்காகவும், அவரின் பயத்துக்காகவும் எல்லாம் காதலை துறக்கும் எண்ணம் இல்லை அழகனுக்கு. அவன் மீது இருந்த நம்பிக்கையில்… நடைமுறை சிக்கல்களை சரியாக புரியாதவளிடம் காதலை மேலும் வளர்க்கும் உபாயத்தையும் சுட்டியவன், அவளிடம் விடை பெற்றான்.


அமைதியாக அப்பாவோடு வீட்டுக்கு கிளம்பியவள், அவர் நேராக இல்லத்துக்கு போகாமல் அருகே ஒரு கோயிலினுள் நுழையவும் அவர் பின்னோடே தொடர்ந்தாள்.


மகள் வளர்ந்த விதத்துக்கு ஊர் கட்டுப்பாடு, நடப்புகள் புரியவில்லை என்பது பெற்றவருக்கு புரிந்தாலும், எடுத்து சொல்லியும் அவள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறாளே என்ற பெரும் ஆதங்கம் சிவபாதத்துக்கு. மயூவின் வயது, காதல் மயக்கம் எல்லாம் அவளுக்கு எதிராக இருந்தது எனலாம். அன்று கோவில் என்றும் பாராமல் இருவரும் தமக்குள் வாக்குவாதம் செய்தது தான் மிச்சம்.


“சுத்த பைத்தியக்காரத்தனமான பேச்சு உங்களுது ப்பா”. ஊருக்குள் சுற்றும் போது மேல் சாதியினர் குறித்த பயத்தை அவளும் அனுபவித்து இருக்கிறாள். ஆனால் விடுமுறை முடிந்து நெல்லையில் பள்ளிக்கு சென்ற உடன் அந்த உணர்வு காணாமல் போய் விடும். அது போலவே, இப்போது சென்னை வந்த பின் அதுவும் பலதரப்பட்ட உடன் பயிலும் மாணவர்களோடு ஏற்பட்ட நட்பிலும், பழக்கத்திலும், அப்பாவின் பேச்சை பழமைவாதம் என அவளின் இள மனது வாதிட்டது.


“சொன்னா கேளு மயூ, நம்ம பார்வை அவங்க பக்கம் பட்டாலே கண்ணை நோண்டிடுவாங்க.”


“அப்பா, நீங்க என்ன சின்ன பிள்ளையா? பூச்சாண்டி கண்ணை குத்தும்னு கதை கட்டுறீங்க! அதான் பார்த்துக்கறேன்னு அழகன் சொல்றானில்ல!”


“மயூ…” இப்போது அழுத்தமாகவும் கோபமாகவும் அழைத்தவர், “மரியாதை முக்கியம். இது போல பேச எங்க கத்துகிட்ட? யார் காதுலயும் விழுந்தா, நம்மை கொன்னு புதைச்சுடுவாங்க.”


“ம்ம்… அவங்க அப்படி பண்ணுற வரை நாம பூ பறிச்சுட்டு இருப்போம். போங்கப்பா… நீங்களும் உங்க அடிமைத்தனமும்.”


தான் இத்தனை சொல்லியும் மகளுக்கு புரியவில்லை. போதாதற்கு அவளின் பிடிவாதம் வலுக்கிறது என புரிந்தவர், இது மெதுவே பேசி, மனதை கரைக்க வேண்டிய விஷயம் என்பதை உணர, சடுதியில் மற்றொரு முடிவெடுத்தார்.


காதல் கணவராயிற்றே! மனைவி மேல் உள்ள அக்கறையில், “அம்மாகிட்ட எதையும் உளறி வைக்காதே. அவளுக்கு ஊர் விஷயம்னாலே கொஞ்சம் பதட்டம் வந்துடும். அப்புறம் தூக்கம் போய்டும். உனக்கு கல்யாணத்துக்கு இன்னும் வருஷம் சில இருக்கு. இப்போ தான் காலேஜ்ல சேர்ந்து இருக்க, முதல்ல படிப்பை கவனி.”


“அதெல்லாம் நல்லா படிச்சு, உங்க பொண்ணா சாதிப்பேன். அழகனையும் கை பிடிப்பேன்.” அசட்டையாக திடமாக பேசிய மகளை கவலையாக பார்த்தவருக்கு அன்றோடு நிம்மதியான இரவு உறக்கம் முற்றிலும் தொலைந்து போனது என்பதை மயூ அறிந்திருக்கவில்லை. அறிந்த போதோ நிலைமை கை மீறி இருந்தது.


அதன் பின் மகளை கண் கொத்தி பாம்பாக காவல் காத்தார். மயூவிடம் தனியாக தொலைபேசி இல்லை. வீட்டு நம்பருக்கு யாரும் அழைப்பதில்லை. ஆக, அவரின் பார்வையில் இருந்து ஏதும் தப்பவில்லை என சிவபாதம் கொண்ட நிம்மதிக்கு ஆயுள் குறைவாகவே இருந்தது. வேண்டாம் என்றால் வேண்டும் என நினைக்கும் மனமல்லவா? அதுவும் எதற்கும் பயமறியா இளம் மனது… அதற்கு வேலி இட முடியாது என்பதை மறந்தவராக, அவர் அளவில் தடுத்து விட்டதாக திருப்தி பட்டு கொண்டார்.


மயூவும், அழகனும் அறியாதது ஒன்றிருந்தது. ஆம், மகன் ஒரு இளம் பெண்ணோடு பேசியிருக்கிறான் என்ற அளவில் மலையனார் மோப்பம் பிடித்து விட்டதை இளம் ஜோடி உணரவில்லை.


எதேச்சையாக ஓர் அதிகாலை நேரம் தோப்பு பக்கம் வந்தவரின் கண்களில், ஆத்தோர சாலை மேட்டில் நின்றிருந்த மகன் மட்டுமல்ல, சாலையின் சரிவில் இருந்து வெளிப்பட்ட பெண்ணும் பட்டு விட்டாள். இளையவன் ஏதோ கூறியதற்கு அவளும் சிரிப்போடு சில நொடிகள் பேசி விட்டு, எதிர் திசையில் போவதை கண்டு விட்டார்.


கெட்டதிலும் நல்ல வேளையாக இதற்கு முன்பு ஒன்றிரு முறை, இளமை வேகத்தில், இருக்கும் இடம் மறந்து, கை கோர்த்து கொண்டபடியும், நெருக்கமாக தோள் சாய்ந்தும் சில கணங்கள் அதே சாலையில் நின்றிருக்கின்றனர் இளையவர்கள். இருக்கும் இடம் உரைக்க, அவசரமாக தள்ளியும் போயிருந்தவர்களின் அது போன்ற நிலை அல்லாது வெறுமே அழகனுக்கு பக்கத்தில் பெண் பிள்ளை என்ற சாதாரண காட்சியை தான் கவனித்திருந்தார் மலையனார். இப்படி பார்த்ததற்கே, அதிலும் மையூவை இன்னாரென அடையாளம் தெரியவும், மலையனாருக்கு ரத்தம் கொதித்தது.


அவருக்கு மூண்ட கோபத்துக்கு அப்போதே விபரீதம் ஆகியிருக்கும். ஆனால், இது அவரின் ஒரே செல்ல, செல்வ மகனின் வாழ்வு என்பதால் அனுபவசாலியான அவர் உடனே செயல்படாமல், சற்று நிதானித்தார்.


அடுத்த சில நாட்கள் தோப்பு பக்கம் சென்று மகன் அறியாமல் வேவு பார்த்தார். அதுவும் யாரிடமும் அந்த வேலையை ஒப்படைக்காமல் தானே செய்தார். அவரின் குல, குடும்ப பேர், பெருமைக்கு பங்கம் வரும் எதையும் அவர் அனுமதிக்க மாட்டார். மகன் பற்றி எந்த அவதூறும் எங்கும் வெளி வர கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக நடந்தவர், மனைவியிடம் கூட மூச்சு விடவில்லை.


மயூ, அழகனின் நல்ல நேரம் அந்த சந்திப்பின் பின் இருவரும் சில நாட்கள் ஆற்றோரம் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எல்லாம் மயூவுக்கு கால்நடை கல்லூரி நுழைவு தேர்வு இருந்த படியால், காதல் கிளிகள் கட்டுப்பாடாக இருந்ததன் விளைவாக மலையனாரின் எக்ஸ்ரே பார்வையில் இருவரும் அதன் பின் மாட்டவில்லை.


தோப்பில் காவலுக்கு மேல் வேலைக்கு என இருக்கும் ஊமையனுக்கு வாய் பேச வராது. அவன் மனைவிக்கோ காது கேளாது. அவர்களை துருவி கேட்க தயங்கிய மலையனார், அவர் கவனித்த அளவில் மகனின் நடவடிக்கையில் மாற்றம் காணாததால், ஊரில் அப்போதைக்கு வயது பெண்கள் வேறு யாரும் அதுவும் பார்க்க லக்க்ஷனமாக இல்லை. ஒரு வேளை வயது கோளாறினால் இவளை கண்டதில் சிறு ஈர்ப்பு துளிர்த்து இப்படி அவள் பின்னே மகன் சுற்ற துவங்கி விட்டானா? ஒழுக்கத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தருபவருக்கு மகனை தவறாக நினைக்கவும் முடியாமல், குழம்பி இருக்க, அவருக்கு வேண்டிய தெளிவான விடையை அழகனே கொடுத்தான்.


பின்னே, பொறியியல் கல்லூரி சேர்ந்த புதிதில் மேலாண்மை மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வேன் என சொல்லி திரிந்த மகன் அதற்கான எந்த ஏற்பாட்டிலும் இறங்காதது அப்போது தான் தகப்பனாருக்கு உறுத்தியது.


“என்ன தம்பி மேல என்ன படிக்க போற?”


பதினாறு வயது முதல் ‘மில்லுக்கு வா… தோப்பு வேலையை கவனி’ என அவர்களின் தொழிலை விடுப்பு நாளில் தனக்கு திணிக்கும் அப்பா, சில மாதம் முன் கூட, ‘படிப்பு முடியவும் உன்கிட்ட சர்க்கரை ஆலை பொறுப்பு கொடுத்துடுவேன்’ என சொன்னதென்ன. இப்போது இப்படி கேட்கிறாரே? என அழகனுக்கு பகீறென்றது.


“அப்பா… இல்ல…” மகனின் தடுமாற்றம் யாரால் என்பதாக சிந்தித்தவர் அறியவில்லை, மயூ எங்கே கால்நடை மருத்துவம் பயில தேர்வாகிறாளோ அந்த ஊரில் ஒரு கல்லூரியில் மேலே படிக்கலாம் என ரகசிய திட்டம் வைத்திருந்தான் மகன் என.


“புனேல கோர்ஸ் நல்லா இருக்காம். அங்க சேர்ந்துக்கோ… என் ஃபிரெண்ட் எல்லா ஏற்பாடும் பண்றதா சொல்றான். ஒரு எம்.பி.ஏ இருக்கறதும் நல்லதுக்கு தான்.”


“சரிங்க ப்பா” பட்டென மகன் ஒத்து கொள்ளவும், மலையனாருக்கு குழப்பம் கூடியது.


மகனும், அந்த பெண்ணும் அவர் அறிந்த அளவில் பழகுவது போல தெரியவில்லை. ஒரு சந்திப்பை கொண்டு வீணே கண்டதையும் யோசிக்கிறோமா என அவரை குறித்தே மலையனாருக்கு சந்தேகம் எழ, அதிகம் எதிர்க்காமல் அவர் சுட்டிய கல்லூரியில் மகன் சேரவும், எந்த முடிவுக்கும் பெரியவரால் வர முடியவில்லை.


அப்பாவின் சொல்லை தட்ட முடியாமல் தான் புனேயில் சேர ஒத்து கொண்டாலும், அழகன் தனி கணக்கு போட்டிருந்தான் என்பதே உண்மை.


மயூவின் படிப்பு இன்னும் சில வருடங்கள் நீளவிருப்பதால், இடைப்பட்ட காலத்தில் ஒரு மேலாண்மை டிகிரி வாங்கி விடலாம். அப்பாவின் கண் மறைவில், சற்றே தூர ஊரில் இருந்து கொண்டால் மயூவோடு காதல் வளர்க்கவும் வசதி என்பது அழகனின் புது கணக்கீடு.


பெற்றவனின் மூளையை குறைவாக மதிப்பிட்டு விட்ட இளையவனுக்கு, தான் ஏற்கனவே அவரின் கண்காப்பு வளையத்தில் இருப்பது புரியவில்லை.


அப்பா மலையனாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டதாக நினைத்து கொண்டிருந்த அழகன், ஊருக்கு போன போது, அவனுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சாதி வெறி கொண்ட மலையானார் ஒரு பக்கமும், பயத்தில் இருந்த சிவபாதமும் இவர்களை பிரித்து விடுவதில் தீவிரம் காட்ட, காதல் மயில்களின் சோதனை காலம் துவங்கியது.Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page