top of page

மஞ்சக்காட்டு மயிலே 1

madhivadhani Stories

மஞ்சக்காட்டு மயிலே


தோகை 1


ஆத்தூர்…


திருநெல்வேலி ஜில்லாவில் சுழித்தோடும் தாமிரபரணி ஆற்றின் கிளை நதியின் உபாயத்தால் செழித்திருக்கும் ஆத்தூர், வர பட்டிக்காட்டு குக்கிராமமும் இல்லாது நாகரீக பெருநகரமும் அல்லாத, அளவில் இடைப்பட்ட வகை சில நவீனங்கள் உள்புகுந்திருக்கும் தற்கால வசதிகள் நிரம்ப அமைந்த கிராமம்.


கண்களுக்கு விருந்தாய் தோப்பும், வயலுமாய் பசுமை போர்வை போர்த்திய ஊரின் மறு கோடி எல்லையில், காண்பவரை ‘அட இதென்ன இங்க இத்தனை பெரிய ஃபேக்டரிங்க?’ என்று ஆச்சரியத்தில் வாய் பிளக்க செய்யும் வகையில் திருஷ்டி பொட்டாக சில கான்க்ரீட் ஆலைகள் வரிசை கட்டி நிற்கின்றன.


தங்க எழுத்துகளால் ஸ்கந்தவேல் குழுமம் என்ற பெயர் பொறித்த அந்த பெரும் பேர் பதாகைகள் ஆதவனின் கிரணங்கள் மேலே பட்டதில், ஸ்வர்ணமாக தகதகத்து மின்னின.


ஸ்கந்தவேல் சர்க்கரை ஆலை வளாகத்தில் காலை பதினோரு மணி தேநீர் இடைவேளை நேரம். காலை ஏழரைக்கு துவங்கிய ஷிஃப்டில் ஓய்வில்லாது உழைத்தவர்கள், அந்த பதினைந்து நிமிட ஓய்வு வேளையில் ஆங்காங்கே அரட்டை அடித்து கொண்டு நின்றிருக்க, வரிசையாக நான்கு கார்கள் சொய்ங் சொய்ங் என்று வேகமாக வளாகத்தினுள் நுழையவும், பாதி குடித்த தேநீரை அவசரவசரமாக வாயில் சரித்து கொண்டு, பற்ற வைத்த பீடி, சிகரெட்டுகளை ஒரு இழு இழுத்து விட்டு, தரையில் இட்டு அணைத்து விட்டு ஊழியர்கள் அவரவர் பகுதிக்கு விரைந்தனர்.


இரண்டாவதாக வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய வெள்ளை சட்டை, வெள்ளை கால்சராய் அணிந்த நெடியவனை கண்டு, ஓடி வந்த ஆலையின் மேனேஜர் பூதபாண்டி, “குட் மார்னிங் சார்” அதி பவ்யமாக கும்பிட்டார்.


வெறுமே தலையசைத்து ஆமோதித்தவன், சரசரவென ஆலையின் உற்பத்தி மற்றும் சர்க்கரை மூட்டைகளின் விநியோகம் குறித்த கேள்விகணைகளை தொடுத்துக் கொண்டே காற்றின் வேகத்துக்கு போட்டியாக ஆலையினுள் நுழைய, மேனேஜரோ திணறலாக பதில் தந்தார்.


பூதபாண்டிக்கு வரிசையாக கட்டளைகளை பிறப்பித்தவன், ஆலையை பார்வையிட்டு வரும் முன் சில வேலைகளை உடனே முடிக்க பணித்து விட்டு, வேக எட்டுகளை எடுத்து வைத்து நகரவும், நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்த மேனேஜர், “நேத்து நான் கேட்டப்ப, தம்பி சென்னையில தானே இருக்கறதா சொன்னே வரதா?”


“திடீர்னு சட்டசபையை நாலு நாளுக்கு ஒத்தி வைக்கவும், இவர் கடைசி ஃபிளைட்டுக்கு ஊரு பக்கம் கிளம்பிட்டாரு. காலையிலயே ரைஸ் மில்லை பிரிச்சு மேஞ்சுட்டாரு.”


“அப்ப இனி நாலு நாலு இங்க எல்லார் முதுகும் ஒடிய போகுது,” மேனேஜர் அலுத்துக் கொண்டே, இடப்பட்ட வேலையில் ஆழ, அங்கே ஆலை பணியாளர்களிடம் பேசி கொண்டே பார்வையை சுழற்றியவனிடம், அவனின் தனிப்பட்ட காரியதரிசி(personal secretary) பவ்யமாக கைபேசியை நீட்டினார்.


புருவத்தை உயர்த்தியவனிடம், “சீஃப் செக்ரட்டரி,” மெல்ல தெரிவித்தான் காரியதரிசி சௌந்தர்.


“சொல்லுங்க சார்” என்ற செந்தூர் அழகனுக்கு வயது இருபத்தி ஒன்பது. தமிழகத்தின் லேட்டஸ்ட் கனவு நாயகனான அவன் நடிகனல்ல, அரசியல்வாதி! ஆம்… கடந்த ஓராண்டாக, விவசாய மற்றும் கால்நடை துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்க்கும் இளைஞன். இவனால் தான் இந்த ஊருக்கு இப்போது பேரும் புகழும்.


அமைச்சரவை முடிவு செய்த நேரத்தில், இவனின் விருப்பத்தை முதல்வர் கேட்ட போது, இக்கால இளைஞனான அழகன், விவசாயத்துறையை நிர்வகிக்க விரும்புவதாக தெரிவித்த போது, கட்சியினர் அனைவருக்கும் பெருத்த ஆச்சரியம் பிறந்தது.


எவ்வித கட்சி பாகுபாடில்லாமல், அவன் துறை சார்ந்த எல்லா நல்ல விஷயத்துக்கும் செவி மடுக்கும் அழகனின் நடுநிலை குணமும், வெறுமே வெள்ளை வேட்டியாக இல்லாமல், உண்மையில் வயலில் இறங்கி உழைப்பவர்களோடு நேரடியாக பழகி, விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை சரியாக புரிந்து கொண்டு, அவர்களிடம் கலந்தாலோசித்து, அவர்கள் துயர் களைய பாடுபடுபவனை கண்டு, வாயில் விரல் வைக்காதவரே இல்லை எனலாம்.


சினிமா நடிகனுக்கு எந்த அளவில் ரசிகர்கள் கூடுகிறார்களோ அதே அளவுக்கு அழகனுக்கும் மாநிலம் முழுதும் கட்சி பாகுபாடில்லாமல் விசிறிகள் உண்டு. கணீரென சட்டசபையில் தன் துறை குறித்த விவாதங்களில் துடிப்பாக பங்கு கொள்வதாகட்டும், எல்லா விவரங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்த பாங்கு, இவன் பொறுப்பெடுத்த பின் நிலுவையில் இருந்த சில பல திட்டங்களை அது நீர்பாசனமோ அல்லது பால் வள பெருக்கமோ, எல்லாவற்றையும் முடுக்கி விட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வந்த அழகனை கண்டு எதிர்கட்சியனர் கூட மரியாதையோடு சற்று மிரண்டே பார்த்தனர்.


தமிழகமெங்கும் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடமெல்லாம் அழகனுக்கு ரசிகர்கள் இருந்த அளவு, மக்கள் மத்தியில் அவனுக்கு இருந்த நன்மதிப்பை, செல்வாக்கை கண்டு பொறாமை வயப்பட்டு அவனுக்கு எதிராக, ஆளும் அவன் கட்சியிலேயே, மறைமுகமாக வளர்ந்து நிற்கும் எதிரிகளும் ஏராளம்.


காலில் சக்கரத்தை கட்டியது போல மட்டுமல்ல, உடம்பில் ரெக்கை முளைத்தது போல, பரம்பரையாக அவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலை, சர்க்கரை ஆலை, உணவு பொருட்கள் பதனிட்டு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை, மினரல் வாட்டர் ஃபேக்டரி, காற்றாலைகள், காகித உற்பத்தி ஆலை என பத்துக்கும் மேற்பட்ட எல்லா தொழில்களையும் சார்ந்த கணக்கு வழக்குகளை ஒரே நாளில் சலிக்காமல் சரி பார்த்த அழகன், வீட்டிற்கு திரும்பிய போது இரவு மணி ஒன்பதரை ஆகியது.


அழகன் வாசலில் நுழைந்த நொடியே “மாம்ஸ், ஹாய் மாமா” கூவிக் கொண்டே அவனை சூழ்ந்த, அவனின் மூத்த அக்கா அமுதாவின் செல்வ புதல்விகள், இனியாவும், நிலாவும், அவர்கள் பஞ்சாயத்தை அவனிடம் வைத்தனர்.


“மாமா… நான் தானே உன் செல்லம்? அப்புறம் நீ எப்படி வயலெட் சுடியை அவளுக்கு எடுக்கலாம்?” இளையவள் நிலா குறைபட,


“ஏட்டீ… என் புள்ளையே ஓடி தேஞ்சு வரான். மொத ஒரு வா, சோறுண்ண விடுங்க என் ராசனை,” பேத்திகளை அதட்டியவர் அமுதா, தமிழரசி மற்றும் அழகனை பெற்றவளான பரமேஸ்வரி.


“பிள்ளைங்களை அதட்டாதீங்கம்மா,” அன்னையை அடக்கியவன், தங்களுக்காக பேசுகிறான் என்றாலும், அவன் மீது கடுப்பில் இருந்த படியால், மாமனை முறைத்த பெரியவள் இனியா, “உன்னைய என்ன கலர் சுரிதார் எடுக்க சொன்னேன்? நீ என்ன எடுத்துட்டு வந்திருக்க?” கேட்டவளை இடைமறித்து,


“தம்பிக்கு சுரிதார் பத்தி என்ன தெரியும்னு அவனை இந்த பாடா படுத்தற கழுத? உனக்கு வேற வேலை இல்ல” மகளை அதட்டிய அமுதா, “நீ கை கழுவிட்டு வா தம்பி… பலகாரம் சூடா இருக்கு,” கனிவாய் அழகனை அழைத்தார்.


“மேலுக்கு விட்டுட்டு வரேன் க்கா,” என்றவன் இரண்டிரண்டாக தாவி படிகளில் ஏறினான்.


“ஏட்டி, என் புள்ளையை துணி கடைக்கா அனுப்பினே?” முகவாய் கட்டையில் ஆச்சரியமாய் கை வைத்த அம்மாச்சியை பார்த்து…


“நாளைக்கு வர போற பொண்டாட்டியை அசத்த, இப்போவே இலவச ட்ரெயினிங் தரேன் அம்மாச்சி,” இனியா முடிக்கும் முன் அவள் தலையில் நொங்கென குட்டிய அமுதா,


“கழுத வரவர வாய் நீளுது. அவனே நிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கான். இருக்கற வேலை போதாதுன்னு, உனக்கு துணி எடுக்க என் தம்பி அலையனுமா? ஏன்… இங்க நெல்லையில வலை வீசி வாங்குறியே, அதுக்கென்ன குறை?” அம்மாவும், மகளுமாக இளையவளை ஒரு வழியாக்க, பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த இனியா, வார்த்தையை விட்டு விட்டாள்.


“எனக்காக உங்க தங்க கம்பி ஒண்ணும் கடை கடையா ஏறி இறங்கல!”


“அப்ப அந்த சுடிதாரெல்லாம் எப்படி வந்துச்சாம்?”


“மாமாவோட செக்ரட்டரி ஆஷா வாங்கினது!”


“இரு... என்ன பேரு சொன்ன? ஆஷாவா? இந்த சௌந்தர் பய என்னானான்? எதுக்கு பொட்ட பிள்ளையை செக்ரட்டரியா வெச்சுருக்கான்?”


“ஐயோ அம்மாச்சி, சௌந்தர் அண்ணா பெர்சனல் செக்ரட்டரி! இந்த ஆஷா, துறை செக்ரட்டரி!”


“ராமலிங்கம்ல துறை செக்ரட்டரி?”


“நீ பலே கில்லாடி அம்மாச்சி, வீட்டுக்குள்ள இருந்துகிட்டே எல்லா விஷயமும் நல்லா தெரிஞ்சு வெச்சுக்கிட்டே தெரியாதது போல போட்டு வாங்குவீங்களே!”


கேட்டதற்கு பதில் தராமல் தன் அம்மாவை கிண்டலடிக்கும் மகளை, “போதும் இனி… ஆஷா யாருன்னு தெரிஞ்சா சொல்லு.”


“ம்மா, இப்போ நம்ம மாமா கூடுதலா கால்நடை துறையும் பார்த்துக்கராருல்ல? அதான் ஜாஸ்தியாகிட்ட அவர் வேலையை சுலபமாக்க, ஆஷான்னு இன்னொரு துணை செகரட்டரியை நியமிச்சுருக்காங்க.”


“சரி… அந்த ஆஷாகிட்ட ஏன் உடுப்புங்களை வாங்கி தர சொன்ன?”


“அதுவா அம்மாச்சி, போன வாரம் மாமாட்ட பேசுனப்ப, ஆஷா தான் அங்க கூட இருந்தாங்க. மாமா ஸ்பீக்கர்ல போட்டுட்டாங்க போல, நான் சுரிதார் வாங்க சொல்லவும், முடியாதுன்னு மாமா மறுத்தப்ப, அந்த ஆஷா மேடம் தான், ‘நான் வாங்கி அனுப்பறேன்’னு சொல்லி, என்ட்ட என்ன கலர்னு விவரம் கேட்டாங்க. தெளிவா சொல்லியும், அதை தான் அந்தம்மா சொதப்பி வெச்சுருக்காங்க.”


ஒரே மூச்சாக இனியா முடிக்க, இதென்ன கதை என்பதாக அம்மா, மகள் இருவர் முகத்திலும் யோசனை ரேகை படிந்தது. கையில்லா பனியன் அணிந்து, வெள்ளை வேட்டியில் படி இறங்கி வந்த மகனை ஆராய்ச்சியாக பார்த்தார் பரமேஸ்வரி.


“பிள்ளைங்க சாப்பிட்டாங்களாக்கா?”


“ம்ம்… எல்லாம் ஆச்சு…”


“அரசி ஏன் வரலையாம்? கூப்பிட்டு கேட்டீங்களாம்மா? யாழையும், எழிலையும் பார்த்து ரெண்டு வாரத்துக்கும் மேல ஆச்சு.”


“ம்ம்… பத்து நாள்ல அவ நாத்தனார் வளைக்காப்பு வெச்சுருக்குள்ள, அதே வேலையா கிடக்கா…”


“ஆமால்ல… என்ன முறை செய்யணுமோ, குறை வராம ஏற்பாடு செஞ்சுடுங்கம்மா” அன்னையிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தவன், “கதிர் அத்தான் எங்கக்கா?” அமுதாவை ஏறிட்டான்.


“புதுசா தென்னை போடுறாங்கல்ல, அப்பாவுக்கு ரொம்ப வேலை. அதான் வரலை.” பதிலளித்து கொண்டே ஆவென வாயை திறந்த இளையவள் நிலாவை அதட்டிய பரமு அம்மாவின் பேச்சை காதில் வாங்காமல் இட்லியை கரி குழம்பில் முக்கி ஒரு வாய் அக்கா மகளுக்கு ஊட்டி விட்டான் அழகன்.


“மா… மா… போ உனக்கு வரவர எம்மேல பாசமே இல்ல. என் சுரிதாரை தப்பா வாங்கிட்டு வந்திருக்க, இப்போ மூத்த என்னை விட்டுட்டு, இவளுக்கு ஊட்டி விடுற…” இனியா முகத்தை சுருக்க…


“என் இனி குட்டிக்கு இல்லாததா?” என்றவன், தான் உண்ணாமல் அக்காவின் மகள்களுக்கு ஊட்டவும், இளையவர்களை அமுதாவும், பரமுவும் திட்டி தீர்த்தனர்.


“இதுக்கு தான் ஒரு சிறுக்கியை கட்டி வெச்சுட்டா, அவ பாடு உன் தம்பி பாடு. எங்க என் பேச்சை கேட்டா தானே?” பரமு தன் பழைய புராணத்தை துவக்க…


“பெரியசாமி மாமா மூலம் ஒரு வரன் வந்திருக்கு தம்பி. பொண்ணு பி.ஏ. படிச்சுட்டு இருக்கா…” அமுதா முழு விவரமும் தரும் முன்பாகவே,


“அக்கா, உனக்கு எத்தனை வாட்டி சொல்ல? நாலஞ்சு வயசு வித்தியாசம் பரவாயில்ல. இப்படி ஒரேடியா எட்டு, ஒன்பது வயசு வித்தியாசத்துல பொண்ணை பார்ப்பியா?”


“ஹுக்கும்… நம்மதுல இருவத்தஞ்சு போக வரை, யாரு பொண்ணை கட்டி கொடுக்காம வீட்ல குத்த வெச்சுருக்காங்க?”


“பட்டணத்துக்கு போய் ஊராளுற என் தங்க மகன், கல்யாணம் கட்ட சொன்னப்ப எல்லாம் வேணாம்னுட்டு, இப்போ பொண்ணு இளசா இருக்கான்னு பேசுறானே! ஐயா முருகைய்யா… என் குல சாமி… எம்பையன் மனசுல எந்த சிறுக்கி உக்கார்ந்துட்டு, அவன் கல்யாணத்தை கெடுக்கால்லோ,” பரமு புலம்பலை துவங்க…


“நீ இரும்மா…” அம்மாவை அதட்டிய அமுதா, வீட்டின் மூத்தவளாக… “யாரு அது ஆஷா? உனக்கும் அந்த பிள்ளைக்கும் எத்தனை நாளா பழக்கம்? எந்தூரு? பேரை கேட்டா நம்ம சாதி சனம் போல இல்லையே?” நேரடி தாக்குதலில் இறங்கி விட, சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை அழகனுக்கு.


“ஆஷாவா?” திருமதி. விஸ்வநாதன் என்றே அந்த செக்ரட்டரியை விளித்து பழகியிருந்த அழகன் குழப்பமாக விழித்தான்.


“இனியா எல்லாத்தையும் சொல்லி போட்டா. யாரு அந்த குட்டி? அவ எதுக்கு எம்பொண்ணுக்கு சுரிதார் எடுக்கணும்?”


இனியா என்றவுடனே புரிபட, “ஐயோ என் பாசமலரே… நீ பேசுனதை அந்த ஆஷாவோட புருஷன் விஸ்வநாதன் கேட்கணும்!”


“ஹாங், அப்போ கல்யாணம் ஆனவளா?” கேட்டது பரமு.


“அம்ம்ம்மா… இனி, இப்படி கூட வேலை பண்ற பொண்ணுங்களை தப்பா பேசாதீங்க. முன்னவே சொல்லி இருக்கேன்ல க்கா? இவங்களோட சேர்ந்து நீயும் இப்படி பண்ணுறியே! இன்னொரு முறை…” முறைப்பாக அழகன் நிறுத்த…


“பழனி மலை முருகா, என் வயத்துல பால வார்த்த உனக்கு பாலாபிஷேகம் பண்ணனும்.” என்ற பரமு, மகனின் முறைப்பை கண்டுகொள்ளாமல், “உங்கப்பாருக்கும் எனக்கும் பதினோரு வயசு வித்தியாசம். ஏன், நான் நல்லபடியா குடும்பம் நடத்தலை?” அடுத்த தாக்குதலை துவக்கினார்.


“அந்த காலம் மலையேறிட்டும்மா. வெறும் பி.ஏ., படிச்ச புள்ள எனக்கு சரி படாது. கொஞ்சம் நம்ம ஃபேக்டரி வேலையில, வியாபாரத்தை கவனிக்கறதுல ஒத்தாசை பண்ணுறவ தான் எனக்கு சரி வரும்.”


மகன் ஏதோ சொல்ல கூடாததை பேசி விட்டதாக அவனை அதிர்வாக ஏறிட்டவர், “உன் தம்பி பேசுறதை, கேட்டியா அம்மு? வார மருமவ வேலைக்கு ஒத்தாசையா இருக்கணுமாமில்ல! எஞ்சாமி முருகைய்யா, இந்த கூத்தை நான் என்னன்னு சொல்ல?”


“ஏன் நான் என்ன உதவினேன்? இல்ல நீ தான், உங்க மில்லுக்கு மாப்பிள்ளை கூட போறியா? ஒத்த மனுஷனா உங்கப்பாரு எல்லாத்தையும் ராசாவா கட்டி ஆளாள? அந்த நாள் போலவா இப்ப? குந்த வெச்ச இடத்துல இருந்து, எல்லாத்தையும் சுலவமா ஃபோனுலயும், லொட்டு லொட்டுன்னு தட்டுற பொட்டிய வெச்சே இல்ல ராஜ்ஜியம் பண்ணலாம். அப்படியிருக்க, எதுக்கு படிச்ச புள்ளையை கட்டணுங்கறேன்?”


அம்மாச்சி கணினியை விவரித்த விதத்தில் இனியாவும், நிலாவும் கொல்லென சிரிக்க, “ரெண்டு பேரும் போங்க அந்தண்டை…” மகள்களை அதட்டி அப்புறப்படுத்தினாள் அமுதா.


“படிச்ச பொண்ணு கேட்டான். சரி… எம்புள்ள படிப்புக்கு தக்கன அப்படி பார்ப்போம்னு பார்த்தா, தொரைக்கு மெத்த படிச்ச மகராசி தான் வேணுமாம்ல, எந்த சீமையிலே இருந்து அவளை எவ்வூட்டு மறுமவளாக்க?” பரமு ஆடி தீர்த்தார்.


“இங்க பாருங்க, ஒரு இருவது வயசு பச்சை புள்ளையை என் தலையில கட்டுற வேலை இங்க நடக்காது. ஒரு எம்.பி.ஏ.,வானும் முடிச்சுருக்கணும். இதுக்கு குறைச்சு பொண்ணு பார்த்தா, நடக்கறதே வேற,” என்றவாறே மீசையை முறுக்கி கொண்டு, மாடியேறும் மகனை கண்ணெடுக்காமல் பார்த்தார் பரமேஸ்வரி.


மகன் தலை மறையவும், பொலபொலவென கண்களில் நீர் உகுக்க, கணவனின் ஆளுயர படத்தின் முன் போனவர், “இந்த பய மனசுல என்னத்தை வெச்சுருக்கான்னு தெரியலையே. தவமா தவமிருந்து பெத்த மகராசன் மனசை புரிஞ்சுக்க முடியாம தவிக்கறேன். என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே…” அரற்ற துவங்க,


அம்மாவை தோள் தாங்கிய அமுதாவுக்கு, அவள் அன்னையின் அளவு இவ்விஷயத்தில் சூட்சும அறிவு இல்லாமல் போக, “ஐய்யோ அம்மா, இப்போ பட்டணத்து பிள்ளைங்களோட நெருக்கத்துல பழகறான். எல்லாம் படிச்சுட்டு, பெரிய வேலையில இருக்கறதை பார்த்து, அவன் பொஞ்சாதியும் மெத்த படிச்சு இருக்கணும்னு தம்பி ஆசைப்படறான். தப்பில்லையே, என்ன படிச்சு என்ன? நம்ம குடும்பத்துல வாக்கபட்டுட்டா, அப்புறம் இந்த வீட்டை மட்டும் தான் ஆள முடியும்னு வர்ற மருமக தானா புரிஞ்சுக்கிடுவா. இதுக்கு ஏன், நிம்மதியா போய் சேர்ந்துட்ட எங்கப்பாரு காதை நீ கடிக்கற?”


“எந்த புள்ளைடீ எம்புள்ளைய வசியப்படுத்தினவ?” அடுத்த புலம்பலை துவக்கிய அம்மாவை கொலைவெறியாக பார்த்தவள், சிரிப்பை அடக்க பாடுபடும், தன் தவபுதல்விகளை, பார்வையால் எரித்து, “போக சொன்னேனில்ல?” மீண்டும் அதட்டி…


“ஆத்தா… பரமேஸ்வரி… உன் புள்ளைக்கு பொண்ணுங்க பின்ன போற அளவுக்கு சாமர்த்தியம் இல்ல. அந்த விவரம் இருந்திருந்தா, இந்நேரம் கல்யாணத்தை முடிச்சிருக்க மாட்டான்? நம்மை தானே பார்க்க சொல்லி இருக்கான். நாம தான், அவன் மனசறிஞ்சு, ஒரு பொருத்தமான மகாலட்சுமிய பார்த்து கட்டி வைக்கணும்.”


“ஏன் என் பிள்ளைக்கு என்னடி குறை? பட்டணத்துல அவனுக்கு ஃபேன் க்ளப் வைச்சிருக்காங்கன்னு அந்த சௌந்தர் பய சொன்னான். ஜாதி ஜனத்துக்கும், பெத்தவளுக்கும் கட்டுப்பட்டு மனசை மேய விடாம இருக்காண்டி என் தங்கம்.” சற்று முன் அழகனை அத்தனை பேசியவர், இப்போது மகனுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டு, அம்மா அத்தனை அதட்டியும் அவ்விடம் விட்டு நகராமல் சுவாரசியமாக அவர் வாயை பார்த்து அமர்ந்திருந்த பேத்திகளிடம்,


“நாளைக்கு அரை நாள் பள்ளிகொடம் போகணுமில்ல… நேரத்துக்கு படுங்க. அம்மு, நானும் கட்டையை சாய்க்கறேனடியாத்தா,” என நகர்ந்தார்.


மூத்தவள் அமுதாவை அங்கே பக்கத்தில் தோப்பூரில் கட்டி கொடுத்திருக்க, வாரயிறுதியில் இங்கே அம்மா வீட்டில் தன் மக்களோடு இரவு தங்குவது அவள் வழக்கம். அழகன் சேர்ந்தாற் போல சென்னையில் தங்க நேரும் போது, இடையேயும் இங்கே அம்மாவின் துணைக்கு உடன் தங்கி கொள்வாள்.


நடு மகள் தமிழரசியை தூத்துக்குடியில் மணமுடித்ததால், அவள் மாதத்துக்கு ஒரு முறை வாரயிறுதியில் தான் இங்கே தலை காண்பிப்பாள்.


தன் அறையில், கட்டிலில் வாகாய் சாய்ந்தமர்ந்து, கொண்டு வந்திருந்த அரசு கோப்பை பார்த்து கொண்டிருந்த அழகனுக்கு கவனம் அங்கே இல்லை.


இரவுகளில் அவன் உறக்கத்தை களவாடி, அவனை அலைகழிக்கும் அந்த கெண்டை விழிகளின் கோபமும், அழுகையில் கசங்கிய அந்த மதி முகமும், திறந்திருந்த கோப்பில் பிம்பமாக தோன்றிய ப்ரமையில் ஆழ்ந்திருந்தவன், எப்படியோ நம்பும் படி ஒரு காரணத்தை வைத்து இந்த இரண்டரை ஆண்டுகளாக பெற்றவளையும், உடன் பிறப்புகளையும் ஏமாற்றி திருமணத்தை ஒற்றி போட்டு விட்டான்.


இனியும் அவர்களை சமாளிப்பது கடினம் என புரிய, தான் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மனதில் சில திட்டங்களை வகுத்தான்.


ஒரு முடிவுக்கு வந்த பின் மெல்ல மூச்சு சீராக, தன் திட்டத்துக்கு செயல் வடிவம் தரும் முதல் அடியை அன்றே எடுத்து வைத்தவன், அதன் பின் அயர்ச்சியில், எதிர்காலம் குறித்த இனிய கனவுகள் சூழ ஆழ்ந்து உறங்கி விட்டான்.


கூரிய வேல் போன்ற புத்தி கூர்மையுடைய அழகன் வகுத்த வியூகம், தன்னை நோக்கி பாயவிருப்பதை அறியாதவளாக, நிம்மதியான உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள் மயூரி.


செந்தூர் அழகனின் உள்ளத்தை கவர்ந்த அழகு மயில் மயூரி! இந்த சுந்தரி மயிலுக்கு தான் அழகு வேடன் வலை விரிக்க போகிறான்.


அழகன் போட்டு வைத்த காதல் திட்டம் அவனின் கண்மணியிடம் ஓகேவாகுமா?


மயில் வருவாள்………



1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 10, 2023
Rated 5 out of 5 stars.

Nice start

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page