பூவே உன் புன்னகையில்! KPN's நன்றியுரை.
நன்றியுரை
வாசக தோழமைகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
பள்ளி நாட்களிலிருந்தே கவிதை என்கிற பெயரில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பதில் ஒரு நாட்டம் இருந்தது எனக்கு. தொடர்ந்த காலத்தில் சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த பழக்கம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது எனலாம்.
ஒரு விதத்தில் தமிழை சரளமாக எழுதும் ஆற்றல் எனக்கு அமைந்ததென்றால் அதற்குக் காரணம் பெருமதிப்பிற்குரிய என் மாமனார் 'தமிழ் கொண்டல், காலம் சென்ற திரு.S.கிருஷ்ணமாச்சாரி அவர்களும் அவர் விட்டுவிட்டுப் போயிருக்கும் ஏராளமான புத்தகங்களும்தான்.
வெண்பாக்கள் புனைவதில் வல்லவரான அவருடைய தமிழ் இலக்கிய வட்டம் மிகவும் பெரியது. நண்பர்களுடனான அவரது உரையாடல்களைக் கேட்கும்போதெல்லாம் செவிகளுக்குள் இன்ப தேன் வந்து பாய்வது போலிருக்கும்.
ஆனாலும் திருமணம், மக்கட்பேறு, பிள்ளை வளர்ப்பு என வாழ்க்கையின் ஒரு மிக நீண்ட பயணத்தில் எழுதுவது என்பது எனக்கு இரண்டாம்பட்சமாகித்தான் போனது.
பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்து தனியாக செயல்படத்தொடங்கியதும் கொஞ்சம் நேரம் கிடைத்து முகநூலை பயன்படுத்த தொடங்கியதும் நம்மைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களால் மனதில் கொந்தளிக்கும் உணர்வுகளை அதில் பகிரத் தொடங்கினேன். ஆனால் அதுவும் திருப்தி அளிக்காமல் போக 'ஆமாம் நாம இப்ப என்னதான் செஞ்சிட்டு இருக்கோம்?' என்ற கேள்வி மூளையை குடையத்தொடங்கியதும்தான் 'ஏன் எனது வட்டத்தை நான் மேலும் விரிவுபடுத்தக்கூடாது?' என்கிற எண்ணமே எனக்குத் தோன்றியது.
சரியாக அப்பொழுது பிரதிலிபி நடத்திய 'நினைவுப்பாதை' என்கிற போட்டி கண்ணில் பட, 'திரும்பிவந்திட மாட்டாரோ?' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். என் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அதற்குப் பரிசு கிடைத்துவிட, மேலும் எழுதும் துணிவு உண்டானது.
அதனைத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் என உண்டான வளர்ச்சி அடுத்தகட்டமாக 'tamilthendral.org' இணையதளம், 'KPN Audio Novels' YouTube Channel எனத் தொடர்ந்து இப்பொழுது 'KPN Publications' என அடுத்த நிலையை எட்டியுள்ளது.
இதற்கெல்லாம் முழுமையான காரணம் எனது வாசகர்களாகிய நீங்களும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எனக்கே எனக்கு என அமைந்திருக்கும் இன்றியமையா சில நட்புறவுகளும், புரிதலுடன் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கும் என் குடும்பமும் எனது முந்தைய புத்தகங்களை பதிப்பித்துக்கொடுத்த 'MS Publications' மற்றும் 'சகாப்தம் பதிப்பகம்' நிறுவனத்தாரும்தான்.
இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் மக்களே.
நன்றி! நன்றி! நன்றி!
இந்த நாவலுக்கு முன்னுரை எழுதி என்னை பெருமைப்படுத்தியிருக்கும் என இனிய நட்பான மோனிஷா அவர்களுக்கு எனது பேரன்பு.
'உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்' இந்த மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் பொன்மொழிதான் 'பூவே உன் புன்னகையில்' என்ற இந்த புதினத்தை முடித்து இன்று புத்தகமாக உங்களிடம் சேர்க்க எனக்கு உத்வேகமாக இருந்தது என்பதுதான் உண்மை.
பற்பல காரணங்களால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஒரே இடத்தில் தேங்கிப்போனதுபோல ஒரு நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து ஊர்ந்துதான் இந்த நாவலை எழுதி முடித்திருக்கிறேன். இந்த கதையில் ஏதோ ஒரு மூலையில் எங்கோ ஒரு வரியில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்துவந்த ஒரு நாளை உங்களுக்கு நினைவு படுத்தி நெகிழச்செய்ததென்றால் அதுவே என் வெற்றி எனக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை 'kpriya.msk@gmail.com' என்கிற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்,
கிருஷ்ணப்ரியா நாராயண்
சென்னை - 63
20/12/2021