பூவே உன் புன்னகையில்! (1)
பூவே உன் புன்னகையில்…
கட்டுமான தொழிலில் இந்திய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சில வணிக பெருநிறுவனங்கள் அதாவது கார்ப்பரேட் கம்பெனிகள் கையிலெடுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களின் கட்டுமானத்திற்கான துணை ஒப்பந்தங்களை (சப்-காண்ட்ராக்ட்) ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் பெற்று, அவர்கள் தேவைக்கேற்ப கட்டி முடித்துக் கொடுக்கும் பணியை செவ்வனே செய்து வரும் 'கருணா பௌண்டேஷன்' நிறுவனத்தின் அதிபர் கருணாகரன்.
அவருடைய மனைவி தாமரை.
தனக்கென்று தனிப்பட்ட ஒரு வருமானம் இருக்கவேண்டுமென்று பொக்கே ஷாப் ஒன்றை நடத்திவருகிறார் தாமரை. கூடவே, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நர்சரி ஒன்றையும் பராமரித்து பூச்செடிகளையும் மரக்கன்றுகளையும் விற்பனை செய்கிறார்.
வீடு வாசல் சொத்து சுகம் என எதற்கும் குறைவில்லாத வாழ்க்கை அவர்களுடையது.
ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு மக்கள் அவர்களுக்கு.
மூத்தவள் ஹாசினி, பீஈ சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள்.
இளையவன் சந்தோஷ், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறான்.
சத்தியநாராயணன், தாமரையின் தம்பி. கருணாகரனின் நிறுவனத்திலேயே வேலை செய்துகொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறான்.
இவர்களுடைய ஓர் இனிமையான நாளின் விடியலுடன் தொடங்குகிறது இந்தக் கதை.
1
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்…
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்…
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்…
என்னிலே உன்னையே ஸ்வாசிக்கின்றோம்…
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்…
சில எண்ணங்களை சொல்லும், துள்ளும் கண்ணம்மா!
ஜனனம் தந்தாய், சலனம் தந்தாய், காதல் மொழியில்…
மரணம் கொஞ்சம், மயக்கம் கொஞ்சம், உந்தன் தரவில்…
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்...
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்...
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்...