top of page

பாடிக்காரம்மா (Vithaipanthu Katturai - 12)

Updated: Jan 22

12 - பாடிக்காரம்மா!

(KPN)


எண்பதுகளின் தொடக்கத்தில் பழைய மாம்பலத்தில் வாழ்ந்த நடுத்தட்டு பெண்கள் மத்தியில் பாடிக்காரம்மா மிகப் பிரபலம்.


உள்பாவாடை, பாடி போன்ற உள்ளாடைகளை விற்பனை செய்துகொண்டிருந்ததால் இவருக்கு இப்படி ஒரு பெயர் .


பெண்களின் தேவைக்கேற்ப வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பணத்தையும் இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்வார். ஒரு கடைக்குப் போய் அளவெல்லாம் சொல்லி, பெண்கள் வாங்கத் தயங்கிய காலகட்டத்தில், இவர் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம். அவரிடம் வாடிக்கையாக உள்ளாடைகளை வாங்கும் எல்லோருக்குமே அவரிடம் ஒரு நட்பும் மரியாதையும் இருந்தது.


திருமதி நயன்தாரா, அவர்கள் வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றுக்கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் எனக்கு திடீரென்று அவரது நினைவு வந்தது. இன்றளவும் கூட அவருடைய தோற்றம் ஒரு நிழல் போல என் நினைவில் இருக்கிறது,


ராஜேஷ் & லட்சுமி நடித்த 'தாலி தானம்' படத்தை ஸ்ரீநிவாஸா தியேட்டரில் போய் பார்த்துவிட்டு வந்து, என் அம்மா, பெரியம்மா, இன்னும் சில மாமிகளும் பாட்டிகளும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. தன்னால் பிள்ளை பெற்றுக்கொள்ள இயலாது எனக் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்த ஒரு பெண்ணைப் பற்றிய படம் அது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு பிழியப் பிழிய அழாத பெண்களே இல்லை எனலாம்.


அப்பொழுது அவர்கள் பேச்சின் நடுவே கொஞ்சம் எட்டிப் பார்த்தார் 'பாடிக்காரம்மா', காரணம் அவரும் அதே போல, பிள்ளைக்காக, தானே ஒரு பெண்ணைப் பார்த்து தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைத்தவராம். அவருடைய மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதான விவாதங்கள் அவர்கள் பேச்சினூடே எழுந்தது. அன்றைய நிலையில், பிள்ளைக்காக தன் கணவனுக்குத் திருமணம் செய்து வைப்பவளும், ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் மூத்த தாரம் இருக்கக் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு பிண்டமாக மட்டுமே அதற்கு ஒப்புக்கொண்டு ஒருத்திக்குச் சக்களத்தியாக வருபவளும், ஆக இரண்டு பெண்களுமே இந்த சமூகத்திற்குப் பலியானவர்கள் என்கிற அளவுக்கு புரியவில்லை என்றாலும், அது ஒரு துயரம் என்பதை நன்றாகவே உணர முடிந்தது.


என் பெரியம்மா(அப்பாவின் தமையன் மனைவி) ஒரு ஆகச்சிறந்த பரோபகாரி. நான்கு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக வாழ்க்கைப் பட்டு, எல்லோரையும் நன்கு அரவணைத்துச் சென்றவர். அவருக்கும் பிள்ளைகள் இல்லை. அது கொண்டு முக்கிய சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்துக்குள்ளேயே என் பெரியப்பாவும் அவரும் ஒதுக்கப் பட்டத்தை நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன். ஆதங்கத்தில், பெரியப்பாவுக்கு இரண்டாம் திருமணம் செய்வது பற்றி என் பாட்டி பேசக் கேட்டும் இருக்கிறேன். என் சொந்த பாட்டியாகவே இருந்தாலும் அவர் மீது சினம் பொங்கும். பெரியப்பா அதற்கு உடன்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் இப்படி ஒரு விஷயத்தை அவருடைய முகத்துக்கு நேராகப் பேசும் தைரியம் பாட்டிக்கும் இல்லை என்பது வேறு கதை.


நம சமுகத்தில் குழந்தையின்மைக்கு முழு பொறுப்பாளி பெண்கள் மட்டுமே என்றுதானே கொள்ளப்படுகிறது. அதனால்தான் 'மலடி' என்கிற அமில வார்த்தை பெண்களுக்கான வார்த்தையாகவே இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.


அதுவும் சென்ற தலைமுறை வரையிலும் குழந்தையின்மைக்கான மருத்துவத்திற்கென்று செல்லும்போது, ஆண்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்வது மிக மிக அரிதான நடைமுறையாகவே இருந்துவந்தது.


எது எப்படி இருந்தாலும் குழந்தையின்மை என்று வரும்போது, வாழ்வியல் ரீதியாகவும் சரி உடல் ரீதியாக, உளவியல் ரீதியாகவும் சரி ஒரு மிகப்பெரிய சுமை பெண்களின் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது.


ஒரு குழந்தைக்காகப் பெண்கள் யாரேனும் மறுமணம் செய்த கதையை என்றாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?


பிள்ளை இல்லை என்றால், அதற்கும் பெண்தான் பொறுப்பாளி, பெற்றுக் கொண்டாலும் அவள் தான் பொறுப்பாளி, வேண்டாம், போதும் என்று முடிவெடுத்தாலும் அவள் மட்டுமே பொறுப்பாளி. ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது இயன்றளவிலும் கூட அரிதினும் அரிதாகத் தானே புழக்கத்தில் உள்ளது.


குழந்தையின்மை சிகிச்சைக்கான வசதி வாய்ப்புகள் பெருகி இருக்கும் இந்த காலகட்டத்தில் பெண்களின் இத்தகைய மன உளைச்சல்கள் சற்று மட்டுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மட்டுப்பட்டிருக்கிறதே தவிர மொத்தமாகத் தீர்ந்தபாடில்லை. காரணம் 'Fertility treatements' என்பது அவ்வளவு சுலபமானதொன்றும் இல்லை.