top of page

நிலமங்கை - 3

விதை பந்து – 3


வால் போய் கத்தி வந்த கதை!


ஒரு ஊருல ஒரு குரங்கு இருந்துதாம்!


ம்...


இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் தாவித் தாவி குதிச்சுதாம் அந்த குரங்கு.


ம்...


அப்ப அதோட வாலுல முள்ளு குத்திடுத்தாம்...


"ஐயோ! அதுக்கு ரொம்ப வலிச்சுதா?"


ஆமாம் ரொம்ப வலிச்சுதாம்!


அந்த காலத்துல எல்லாம் நாவிதர்னு சொல்லுவா! முடி திருத்தரவா! ஆவாதான் எல்லாருக்கும் வைத்தியமெல்லாம் பண்ணுவா! முள்ளை எடுக்க அந்த நாவிதர் கிட்ட போச்சாம் குரங்கு!


அவர் என்ன பண்ணார்?


கத்தியால முள்ள எடுக்கறேன் பேர்வழியேன்னு அதோட வாலுல குத்த; வால் பட்டுன்னு அறுந்துபோச்சு!


ஐயோ!


ஆமாம் இதே மாதிரித்தான், "ஐயோ! என்னோட அழகான இந்த வாலை இப்படி அறுத்துட்டியே!" அப்படின்னு தய்யா தக்கான்னு குதிச்ச அந்த குரங்கு, "அய்! எனக்கு என்னோட வாலை திருப்பி குடுக்கறியா இல்ல உன்னோட கத்தியை குடுக்கறியா" அப்படின்னு கேட்டுதாம்.


அந்த வாலை மறுபடி ஒட்டவைக்க முடியமா?


ம்ஹும்!


முடியாதில்ல அதனால அந்த ஆள் குரங்கு கிட்ட அந்த கத்தியை கொடுத்துட்டார்!


இப்படியாகத்தான் என் பாட்டி மூலம் எனக்குக் கதைகள் அறிமுகமாகின!


பாட்டி சொன்னவை எதுவுமே ஏட்டில் எழுதிவைக்கப்பட்ட கதைகள் இல்லை!


எல்லாமே பாட்டிகள் மூலமாகப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்ட மரபு வழி கிராமிய கதைகள்.


பாட்டியுடன் இருக்கும் நாட்களின் இரவுகளெல்லாம் கதைகள் கட்டாயம் இருக்கும்.


அது பொழுதுபோக்காகவும் இருக்கும். நல்ல கருத்துக்களைச் சொல்வதாகவும் இருக்கும்.


எல்லா கதைகளையுமே நகைச்சுவை கலந்து அழகிய பாவத்துடன் சொல்வது அவருக்குக் கைவந்த கலை.


'தேவர் குறை தீர்த்தவனே ராமா!


மூவரோடு அவதரித்தாய் ராமா!


தசரதர்க்குப் பாலகனாய் ராமா!


வில் முறிக்க மிதிலை சென்றாய் ராமா!


எனத் தொடங்கி ராமாயணம் மொத்தமும் சில நிமிடங்களில் அழகாய் சொல்லி முடித்துவிடுவார் பாட்டி!


அந்த ராமாயணம் முடியும் முன்பே உறங்கிப்போன நாட்களும் உண்டு.


மறுபடி சொல்லச்சொல்லி அவரை நச்சரித்து அதைச் சொல்ல வைத்த நாட்களும் உண்டு!


மாம்பலத்தில் ஹரிதாஸ் மடம் என ஒரு மடம் உண்டு!


வருடந்தோறும் அங்கே ராமநவமியை ஒட்டி கச்சேரிகளும் கதாகாலக்ஷேபங்களும் நடக்கும்.


அதே போல தியாகராய நகர் சிவா விஷ்ணு கோவிலிலும் உபன்யாசங்கள் நடக்கும்.


அதற்கெல்லாம் என்னைக் கூடவே அழைத்துச் செல்வர் பாட்டி!


அது முடியும்வரை எவ்வளவு தொந்தரவு செய்தலும் அங்கிருந்து நகர மாட்டார் அவர்.


இப்படியாக ராமாயண மகாபாரத கதைகள் மூலமாக நல்ல விஷயங்களைக் கேட்கவைத்தார் பாட்டி.


சுப்பு ஆறுமுகம் அவர்களுடைய வில்லுப்பாட்டுக் கதைகள், புலவர் கீரன் அவர்கள், பாலகிஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் போன்ற பெரியோர்களின் அருளுரைகளைக் கேட்கும் பேறு கிடைக்க என்னுடைய பாட்டிகள்தான் காரணம்.


பாட்டியின் கதகதப்புடன் கதைகளைச் சுமந்துகொண்டு உறங்கிய நாட்கள் ஒரு வரம்.


அப்படி ஒரு பாட்டி அமையப்பெற்ற பிள்ளைகள் வரம் வாங்கி வந்தவர்கள்!


இதை ஏன் இப்பொழுது குறிப்பிடுகிறேன் என்றால், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வதே குறைந்துபோய் விட்டது.


அவர்களை அதி நவீன தொலைபேசிகளிலிருத்தும் 'ஸ்மார்ட்'டான தொலைக்காட்சிகளிலிருந்தும் தூர இழுத்துவரும் சக்தி அதைவிட வெகு 'ஸ்மார்ட்'டாக கதைசொல்லும் பாட்டிகளுக்கு உண்டு என்பது எனது கருத்து.


குழந்தைகளுக்காகச் சொன்னேன்!


இப்பொழுது பெரியவர்களுக்காக சில வரிகள்.


வாசித்தலும் அதன் பொன்னான பயன்களும்!


புத்தங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே வாசிக்கிறேன் என்று சொல்பவர்களுக்குக் கூட அந்த வாசிப்பு நன்மையை மட்டுமே பயக்கிறது.


எங்கேயோ எப்பொழுதோ போகிற போக்கில் வாசித்து அதை நாம் அப்படியே மறந்துபோனாலும் கூட நாம் படித்த அந்த விஷயங்களை நமது மூளை பதிவுசெய்து விடுமாம்.


அதற்குத் தொடர்பான ஒரு சம்பவம் நம் வாழ்வில் நிகழும் பொழுது அது நினைவில் கட்டாயம் வரும் என்கிறது ஒரு ஆய்வு.


அது நமக்கு அந்த சூழலை கையாள கட்டாயம் உதவத்தான் செய்யும்.


'அல்சீமர்' நோயின் தீவிரத்தைக் கூட புத்தக வாசிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்துகிறது என்கிறது மற்றொரு ஆய்வு.


வாசிப்பு பழக்கம் உடையவர்களை அது வாழ்நாள் முழுதும் உற்சாகமாக வைத்திருக்கும்.


அதனால் எந்த ஒரு பிரச்சினையிலிருந்தும் அவர்களால் சுலபமாக வெளிவர முடியும்.


நீண்டகால வாசிப்பு அனுபவம் நம் எதிரில் உள்ளவரின் மனதிற்குள் புகுந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவர்களுடைய எண்ணங்களை எடைபோட நமக்குக் கற்றுக்கொடுக்கும்.


நம் குடும்பத்தையும் சமூகத்தையும் சுலபமாக எதிர்கொள்ள இது மிக உதவியாக இருக்கும்.


புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது நமக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுக்கும்பொழுது நல்ல சிந்தனையை வளர்த்து நம் அறிவுக்குத் தீனிபோடும் புத்தகங்களாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டியது நமது தலையாய கடமை.


எழுதத் தெரியும் என்ற காரணத்தால் தரம் குறைந்த எழுத்தைச் சந்தையில் கொண்டுவந்து கொட்டும் நிலை இன்று உருவாகி இருக்கிறது.


பாற்கடலை கடையும் பொழுது அமிர்தம் தோன்றுவதற்கு முன் ஆலகால விஷம் தோன்றியதுபோல தோன்றிக்கொண்டிருக்கும் மலிவான எழுத்துக்கு அடிமையாகாமல், தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டுமே அருந்தும் அன்னப்பட்சிபோல நல்ல எழுத்துக்களைத் தேடி படித்தால் மட்டுமே இத்தகைய நன்மைகளை நாம் அடையமுடியும்.


அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்


புறத்த புகழும் இல


மு.வ விளக்கம்:


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


எனவே எழுதும்பொழுதும் சரி வாசிக்கும் பொழுதும் சரி அறம் காப்போம்.


© KPN NOVELS COPY PROTECT
bottom of page