நாயின் பின்னால் ஒரு நாள்.
அதிகாலை எழுந்து பால் காய்ச்ச அடுக்களைக்குள் நுழைந்த ஸ்வேதா அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன் ஜன்னலைத் திறக்க, காற்றில் கலந்து அந்தத் துர்நாற்றம் அவளது முகத்தில் மோதி வயிற்றைப் புரட்டியது.
‘ஐயோ எலியோ எதோ கார் ஷெட்டில் செத்துப் போயிருக்கும் போல இருக்கே’ என்று எண்ணியவள் கார் ஷெட்டின் விளக்கைப் போட்டுவிட்டு அங்கே சென்று பார்க்க, அங்கே இருந்த தார் பாயில் அலங்கோலமாகப் படுத்திருந்தது ஒரு தெரு நாய். அதன் மேல்தான் அப்படி ஒரு நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
முந்தைய தினம் மலையில் அந்த நாயை தெருவில் பார்த்தது அவளது நினைவில் வந்தது.
அதன் கழுத்து பகுதியில் எதோ காயம் பட்டு அதன் எலும்பு வெளியில் தெரியும் அளவிற்குப் புரையோடிப்போய் அதிலிருந்து ரத்தமும் சீழுமாக கசிந்துகொண்டிருந்து.
தெருவில் இருக்கும் மற்ற நாய்களெல்லாம் அதை விரட்ட அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைய முற்பட்ட அந்த நாயை அவர்களுடைய வீட்டின் காவலாளி விரட்டிக்கொண்டிருந்தார்.
"மாணிக்கம் அது பாட்டுக்கு ஒரு மூலைல படுத்துக்கட்டும் விட்டுடுங்க" என்று ஸ்வேதா சொல்ல,
"இல்லமா சார் திட்டுவாரு!" என்று மாணிக்கம் தயங்கவும்,
"பரவாயில்ல நான்தான் சொன்னேன்னு உங்க சார்கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கியவள் அதைப்பற்றி மறந்தே போனாள்.
அதை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தவள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாமனாரிடம் அதைப் பற்றி சொல்லிவிட்டு, "பாவமா இருக்குப்பா எதாவது பண்ணனும்" என்று சொல்ல, அவர் அந்த நாயைப் பார்க்கவென அங்கிருந்து சென்றார்.
அதன் பின் வீட்டு வேலைகளில் மூழ்கியவள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதும் தனது கைப்பேசியில் விலங்குகளைப் பராமரிக்கும் ஒரு தோண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்ல, அவர்கள் இருப்பது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் அவர்களுடைய மீட்பு வாகனம் அங்கே வரத் தாமதம் ஆகும் எனவும் அதுவரை அந்த நாய் எங்கேயும் போகாமல் பார்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் சோதனை ஆரம்பித்தது.
அவள் கிண்ணத்தில் வைத்த பாலைக்கூட அந்த நாயினால் சாப்பிட இயலவில்லை.
வலியில் துடித்துக் கொண்டிருந்த போதும் அந்த நாய் ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்துகொண்டே இருந்தது. அந்தத் தொண்டு நிறுவன வாகனமும் வந்த பாடில்லை.
கையில் குச்சியுடன்(மற்ற தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க) அன்று முழுதும் அதைக் கண்காணிப்பதே வேலையாகிப்போனது ஸ்வேதாவிற்கு.
அவளுக்கு வேலை இருப்பின் அவளது மாமனார் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
காத்திருந்து காத்திருந்து இரவு ஒன்பது மணி ஆனது.
பிள்ளைகளெல்லாம் உறங்கிவிட அவளைக் கிண்டல் செய்து ஓட்டி எடுத்தார் அவளுடைய கணவர்.
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று அதை எடுத்துக்கொண்டாள் ஸ்வேதா.
ஒன்பது மணிக்குப் பிறகு அந்தத் தொண்டு நிறுவன (ஆம்புலன்ஸ்) வாகன ஓட்டுநர் கைப்பேசியில் அழைத்து அங்கே வருவதாகவும் அவர்கள் ஏரியாவிற்கு வர வழியையும் கேட்டுக்கொண்டார்.
மாமனாரும் மருமகளுமாக வீதியிலே நின்றுகொண்டிருந்தனர். பின்பு அவர்களுடன் ஸ்வேதாவின் அப்பாவும் வந்து சேர்ந்துகொண்டார்.
அந்த வாகனம் அங்கே வந்து சேரும்போது மணி பத்தரைஆகியிருந்தது
அப்பொழுதுதான் ஆரம்பித்தது உண்மையான சோதனையே சரியாக அந்த வாகனம் அங்கே வரும் நேரம் எங்கேயோ எஸ் ஆகியிருந்தார் அந்த நாயார்.
இருட்டில் டார்ச் லைட் உதவியுடன் அந்த நாயைத் தேடும் பணி தொடங்கியது.
ஒருவாறாக அரைமணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அடுத்த தெருவில் அவர்களுக்குத் தெரிந்தவர் வீட்டில் அந்த நாய் படுத்திருந்தது.
பின்பு அந்த நாயைக் கைப்பற்றி அவர்கள் எடுத்துச் சென்றார்கள்.
பல நன்றிகளைச் சொல்லி ஒரு சிறு தொகையை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தார் ஸ்வேதாவின் மாமனார்.
"அப்பாடி இன்னைக்கு கார்த்தால அந்த நாயோட முகத்துலதான் முழிச்சேன். இன்னைக்கு முழுக்க அது பின்னாடியே அலைய வெச்சுடுத்து இல்ல பா?" என்று ஸ்வேதா மாமனாரைக் கேட்க,
"ஆனா அந்த நாயோட நல்ல நேரம் அதுவும் உன் முகத்துலதான் முழிச்சுது ஸ்வேதம்மா. அதுக்கு ஒரு போக்கிடம் கிடைச்சுடுத்து" என்று மெச்சுதலாகச் சொன்னார் பெரியவர்.
அனைத்தும் முடிந்து ஒரு வழியாக வீட்டிற்குப் போய் உண்டு உறங்கினர்.
இரு தினங்கள் கடந்த நிலையில் ஸ்வேதாவை அந்தத் தொண்டு நிறுவனத்திலிருந்து கைப்பேசியில் அழைத்து அந்த நாய் இறந்து போன தகவலைத் தெரிவித்தனர்.
இவ்வளவு பொறுப்புணர்வுடன் செயல்படும் அவர்கள் நிறுவனத்தின் மேல் ஒரு மரியாதையை ஏற்பட்டது அவளுக்கு.
அந்த நாயைக் காப்பாற்ற இயலாது என்பது அவள் முன்பே அறிந்ததுதான்.
ஆனாலும் உயிர் போகும் தருவாயில் வலியுடன் அந்த நாய் பட்ட துன்பம் அவள் மனதை வருத்தியது.
அங்கே இருந்த அந்த இரண்டு நாட்களும் கண்டிப்பாக அதற்கு வலி நிவாரணி கொடுக்கப்பட்டிருக்கும். ஒரே இடத்தில் அமைதியுடன் அதன் உயிர் பிரிந்திருக்கும்.
அதற்காகத்தான் அவள் அந்த ஒரு நாள் முழுதும் மெனக்கெடலுடன் செயல்பட்டது.
ஒரு உயிர் அமைதியுடன் பிரிய தான்னாலானதை செய்தோம் என்ற எண்ணத்தில் அவள் மனம் நிறைந்தது.
zமுற்றும்z
留言