நான் அவளில்லை - 63 & 64 (Final Episodes)
63
தூய்மையான காதல்
வள்ளி பரபரப்பாய் மகிழ் வேலைக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டிருந்தார். அந்தச் சமயம் மகிழோ படாதபாடுபட்டு அழுது கொண்டிருக்கும் தன் ஒன்றரை வயது மகள் சாக்ஷியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
மகிழ் அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த உடனேயே முடிவெடுத்துவிட்டான். அவளுக்குச் சாக்ஷி என்று பெயரிட வேண்டுமென்று. மாயாவும் அதே எண்ணத்தைதான் கொண்டிருந்தாள். ஆனால் ஜென்னி அதற்குப் பிடிவாதமாய் மறப்பு தெரிவித்தாள்.
தான் சாக்ஷியாய் பட்ட துன்பங்களை வேறெந்த பெண்ணும் இம்மியளவும் பெறக் கூடாதே என்ற எண்ணம்தான். ஆனால் மாயா மகிழ் இருவரும் தங்கள் மகளுக்குப் பிடிவாதமாய் சாக்ஷி என்ற பெயரையே சூட்டிவிட்டனர். மகிழ் தன் மகளைக் கரத்தில் ஏந்திக் கொண்டு,
"ஏன் அழறீங்க... இதோ பாட்டி... பால் கலக்கி எடுத்துட்டு வந்திருவாங்க... அழக்கூடாது" என்றவன் அவளை அமைதியடையச் செய்ய முயன்று முடியாமல் அவதியுற்றிருந்தான். யார் எத்தனை பொறுப்பாக பார்த்துக் கொண்டாலும் குழந்தைகளுக்கு அம்மாதானே முதல் முக்கியத் தேவை. ஆனால் என்ன செய்வது? மாயா ஓரிசாவில் உள்ள சில பார்வையற்ற குழந்தைகளுக்கு தன் நிறுவனம் மூலமாக பார்வை கிடைப்பதற்கு வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்ய சென்றிருக்கிறாள்.
அவள் ஏற்படுத்திய சாக்ஷி சைட் சேவர் ஆர்கனைசேஷன் இந்தியா முழுக்க தம் புகழைப் பரப்பியதில்லாமல் பலரின் பாராட்டுதல்களையும் உதவித் தொகைகளையும் அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. அவள் ஆசைப்பட்டதும் அதானே.
அவளின் உதவி பலருக்கும் தேவைப்படும் போது குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மகிழ் ஏற்றுக் கொண்டான். இன்று தாயின் அருகாமையை அவன் மகள் தொலைத்திருந்தாலும் ஒரு நாள் தன் தாயைக் கண்டு பெருமிதம் கொள்வாள் அல்லவா. தன் தாயைப் போல அவளும் பலருக்கும் உதவிகள் புரிவாள். அதற்காக இந்த சிற்சில பிரிவுகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல.
மகிழ் அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகி நின்றவன் தன் மகளிடம்,
"சாக்ஷி செல்லம்... அப்பா ஆபிஸ் போயிட்டு வர வரைக்கும் நீங்க பாட்டியை தொந்தரவு செய்யாம பார்த்துக்கணும்" என்றான்.
அதன் பிறகு மகளை தன் தாயிடம் விட்டுப் புறப்பட்டவன், "அவார்ட் பங்ஷன் வொர்க்லாம் போயிட்டிருக்கு... ஸோ நைட் வர மாட்டேன் மா... கொஞ்சம் நீங்களும் அப்பாவும் சமாளிச்சுக்கங்க" என்றதும்
அவரும், "சரி ப்பா... நீ பார்த்து போ" என்று வழியனுப்பினர்.
அவன் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கைப்பேசியில் தன் மனைவியின் அழைப்பைப் பார்த்து ஆனந்தம் பொங்க அழைப்பை ஏற்றவன்,
"எப்படி இருக்கீங்க மகிழ்? பாப்பா எப்படி இருக்கா?" என்றவள் வினவ,
"நீ இல்லாம நாங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறோம் டி.. எப்போதான் வருவ?!" என்றவன் தவிப்போடு கேட்க,
"வேலை முடிஞ்சாலும் முடியல்லன்னாலும் நான் நாளைக்கு ஈவனிங் சென்னையில இருப்பேன்... சாக்ஷி மேடையில ஏறி அவார்ட் வாங்கறதைப் பார்க்கணும்" என்க, அவன் கோபமாக,
"அப்ப கூட உன் ஃப்ரெண்ட் அவார்ட் வாங்கறது பார்க்கத்தான் வருவ... எங்களைப் பார்க்க இல்ல" என்று ஏக்கமாய் கேட்டான்.
"உங்களைப் பார்க்காம எப்படி? அதையும் பார்க்கதானே வர்றேன்... அந்த கோ காம்பயர் பிரியா கிட்ட நீங்க எப்படி பேசப் போறீங்கன்னு" எனறாள்.