போதை
அவர்கள் இருவரும் தங்கள் காரில் புறப்பட்ட பின்னர் டேவிட் அலுவலகத்திற்குப் புறப்பட எத்தனிக்க, "ஒரு நிமிஷம் டேவிட்" என்றழைத்தார் தாமஸ். அவர் நாற்காலியின் அருகாமையில் வந்து நின்று, "சொல்லுங்க" என்றான்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டேவிட்... ஜெனித்தாவை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது" என்றார்.
'ஜெனித்தாவைப் பத்தின உண்மை தெரிஞ்ச பிறகும் நீங்க இதே போல சந்தோஷப் படுவீங்களா டேட்?' என்று மனதில் எண்ணிக் கொண்டவன் அதனை வார்த்தைகளாக சொல்லாமல்,
"எனக்கும் சந்தோஷமா இருக்கு டேட்... முதல் முறையா ஒரு அப்பாவா எனக்கு என்ன தேவைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்களே" என்று குத்தலாய் பேசிவிட்டு அவன் சென்றுவிட அந்த வார்த்தையின் தாக்கம் அவரை வெகுவாய் பாதித்தது.
அவன் மகனாய் இருக்கும் போது அவர் அவனுக்குச் செய்த நிராகரிப்புதான் அவருக்கே திரும்பி வந்தது. நாம் செய்யும் எந்தத் தீவினையும் பாவமும் மீண்டும் நமக்கே திரும்பி வரும் என்ற நியதியை தாமஸ் வெகுதாமதாய் உணர்ந்து கொண்டார்.
ஆனால் இதோடு அவர் பாவக் கணக்கு முடிந்து விடப்போவதில்லை. இன்னும் சில அதிர்ச்சிகளை அவர் வாழ்நாளில் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
ஜென்னி விக்டரோடு காரில் புறப்பட்ட பின்னர், "ஜெனிஃபர் ம்மா வரலையா?" என்று கேட்க,"ஒரு முக்கியமான சர்ஜரி... அதான் ஜென்னி வர முடியல.. இல்லாட்டி அவளுக்கே உன்னை பார்க்கணும்தான்... ஆனா நீதான் ஏதோ முக்கியமான கமிட்மென்ட் இருக்குன்னு சொல்லி இங்கயே சென்னையில இருக்க" என்றார்.
"ஹ்ம்ம்ம்... முக்கியமான கமிட்மென்ட்தான் ப்பா"
"ஆமா... சாஜிம்மா அஃப்சானா எல்லாம் நல்லா இருக்காங்களா?!"
"ரொம்ப நல்லா இருக்காங்க... அவங்க சன் சையத் ரொம்ப நல்லா அவங்களைப் பார்த்துக்கிறாரு.... ஆமாம்... நீங்க வரும்போது ஆஷிக்கை அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல"
"ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்ல அவனை இன்வால்வ் பண்ணியிருக்கேன்... முடிஞ்சதும் நானே அனுப்பி விடுறேன்!
கார் அப்போது விமான நிலையத்தில் நிற்க ஜென்னி சோர்வோடு, "நீங்க இப்பவே கிளம்பணுமா?!" என்று ஏக்கமாய் கேட்டாள்.
"இல்ல ஜென்னி... கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு... தாமஸ் அவசரமா பார்க்கணும்னு கூப்பிடதாலதான் உடனே எல்லாத்தையும் போஸ்ட் போன் பண்ணிட்டு வந்துட்டேன்" என்றவர் காரிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் போகத் தயாரானார்.
"சரி ஜென்னி... நான் கிளம்பறேன்... நீ உன் கமிட்மென்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரமா வந்திரு... உன்னை நானும் ஜெனிஃபரும் ரொம்ப மிஸ் பன்றோம்" என்றபடி அவளைத் தன் தோளோடு அணைத்து உச்சிமுகர்ந்தார்.
"ஒகே ப்பா... என் வேலை முடியலன்னாலும் நான் ப்ஃரீயாகிட்டா கிளம்பி வர்றேன்" என்றாள். அதன் பின்னர் அவர் தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்துவிட்டு ஜென்னியை தயக்கமான பார்வையோடு அழைக்க, "எதாச்சும் சொலன்னுமா ப்பா” என்று கேட்டாள்.
"ஹ்ம்ம் சொல்லணும்” என்றவர் நிறுத்தி, “மேரேஜ்ங்கிறது உன் தனிப்பட்ட விஷயம்தான்... இருந்தாலும் ஒரு சின்ன சஜஷனா சொல்றேன்... நீ டேவிடை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
அவள் கொஞ்சமும் யோசிக்காமல், "நீங்க சொல்றது சரிதான்... டேவிடை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லைஃப் நல்லா இருக்கும்... ஆனா அவரோட லைஃப்?!" என்று கேள்வி எழுப்ப, அவர் முகம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. அவர் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையெல்லாம் ஒரே நொடியில் தகர்ந்து போனது.
அந்த மனவருத்தத்தோடே தன் மும்பை பயணத்தை அவர் மேற்கொள்ள, ஜென்னி காரில் அவள் வீட்டிற்குத் திரும்பினாள். அங்கே அவளுக்காக அவளின் மனதிற்கு நெருக்கமான ஒன்று காத்திருந்தது.
****
ராகவின் செகரட்ரி மனோ திகிலோடு நின்றிருந்தான். சற்று முன்பு சையத் வந்துவிட்டு சென்ற தாக்கம், அந்த அறை முழுக்கவும் பொருட்கள் சிதறியிருந்தது.
அவன் மனதிற்கு ஆறுதல் தரும் விஸ்கி பாட்டிலைக் கூட நொறுக்கிவிட்டான். அந்த போதையெல்லாம் அவன் மனநிலைக்கு அப்போது பத்தாது.
சையத் ஜென்னிக்கு ஆதரவாய் பேசி ராகவின் கழுத்தையே பிடித்துவிட்டான். அந்த அவமானத்தை எப்படி ராகவால் தாங்கிக் கொள்ள இயலும். ராகவின் நட்பை சையத் அவளுக்காகத் தூக்கியெறிந்துவிட்டுப் போக, அவன் வெறி கொண்டான்.
அவனின் கோபமெல்லாம் ஜென்னியின் புறம்தான் திரும்பியது. அப்போதே அதை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற பித்து பிடித்தது அவனுக்கு.
ஜென்னியின் வீட்டிற்கு அந்த இரவில் புறப்பட, மனோவிற்கு அவனைத் தடுக்க முடியுமென்று தோன்றவில்லை.
ஆதலால் அவனின் விருப்பத்திற்கு இடையூறு வராமல் இருக்க, சில ஆட்களைத் தயார் செய்து ஜென்னியின் வீட்டைச் சுற்றி கண்காணிக்கச் சொன்னான். அவளைக் காப்பாற்ற யாரும் முன் வந்துவிடக் கூடாது.
ராகவ் அன்று குடித்திருந்தாலாவது அந்தப் போதை அவன் வேதனையை மறக்கடித்திருக்கும். ஆனால் அவன் இப்போதைக்கு ஆசை தீர பருக நினைக்கும் போதை அவள்தான். அந்தப் போதையை அவளால் மட்டுமே தெளிய வைக்க முடியும்
Comments