top of page

நான் அவளில்லை - 33 (வெறுப்பதோ மறுப்பதோ)

வெறுப்பதோ மறுப்பதோ


ஜென்னியின் கார் டேவிடின் வீட்டின் பிரமாண்டமான வாயிலிற்குள் நுழைந்தது. மாளிகை என்ற வார்த்தைக்குச் சற்றும் குறைவில்லாத அந்த வீட்டினைத் தன் பார்வையால் அளவெடுத்தபடியே வந்திறங்கினாள்.


டேவிடை சந்திக்காமலும் பேசாமலும் தவிர்த்திருந்த நிலையில், இப்போது கட்டாயத்தால் அவனைச் சந்திக்க வேண்டிய நிலை.


ஜென்னியின் தந்தை விக்டர் மும்பையிலிருந்து நேராக டேவிடின் வீட்டில் வந்து இறங்கிவிட்டு அவளுக்குத் தகவல் அனுப்பி இங்கு வரச் சொல்லியிருந்தார். அவர் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் இங்கே புறப்பட்டு வர வேண்டும்?


இந்தக் கேள்விக்கான பதிலை ஆழமாய் ஆராய்ந்தபடி நடந்தவள்,  உள்ளே தனக்கு வேறெதுவும் பிரச்சனை காத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகித்தபடியே வீட்டின் வாயிலை நெருங்கினாள்.


தலையைச் சுற்ற வைக்கும் அந்த பிரமிப்பான முகப்பு அறையில் இருந்த வட்ட வடிவமான இருக்கை அமைப்பில் டேவிடின் தந்தை தாமஸும் விக்டரும் ஆர்வமாய் பேசியபடி அமர்ந்திருக்க, டேவிட் அவர்களின் சம்பாஷணைகளை கவனிப்பதும் தன் கைகடிகாரத்தில் அவ்வப்போது நேரத்தைப் பார்ப்பதுமாய் இருந்தான்.


அதோடு அவன் கைப்பேசியே வேறு அவனை விடாமல் தொந்தரவு செய்ய அதற்கு மேல் பொறுக்க முடியாமல் விக்டர் அருகாமையில் வந்து, "அங்கிள்... இஃப் யூ டோன்ட் மைன்ட்... எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு" என்று தயங்க,


அவன் நிலையை உணர்ந்து, "இட்ஸ் ஓகே டேவிட்... யூ கேரி ஆன்" என்று அனுமதி தந்தார். தாமஸ் அவனைப் போகவிடாமல் தடுப்பதற்குள் அவன் அகன்றுவிட்டான்.


வாசல்புறம் அவன் வந்து நிற்கும் போதே ஜெனித்தா தயக்கத்தோடு உள்ளே நுழைந்தக் கொண்டிருந்தாள். அவளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் வருகையைப் பார்த்தவன் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கயே நின்றுவிட்டான்.


அத்தனை நேரம் அவன் மனதில் வரிசைப்படுத்தி நின்றிருந்த வேலையெல்லாம் இரண்டாம்பட்சமாய் மாறிப் போனது. ஏன்? அவன் நினைவிலிருந்து நீங்கிப் போனது. அவளைக் கடைசியாய் பார்த்து நான்கைந்து நாட்கள் கடந்திருக்கும்.


அவனின் காதலை அன்று வெளிப்படுத்தியதிலிருந்து அவள் கைப்பேசியில் கூட அவனிடம் பேசுவதைத் தவிர்த்திருந்தாள். அதோடு 'காதல் அது இதுன்னு பேசுவதா இருந்தா என்னை நீங்க பார்க்க வர வேண்டாம்... ஃபோன்ல கூட பேச வேண்டாம் டேவிட்... ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ' என அவள் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க அவள் வார்த்தைக்கு மதிப்பளித்து, இதுநாள் வரைஅவளைப் பார்க்காமலும் பேசாமலும் இருந்தான்.


எனினும் அந்த சில நாள் பிரிவே அவனுக்கு சில யுகங்களாக தோன்றியது. அந்த பிரிவின் தாக்கமும் ஏக்கமும் அவன் விழியில் அப்பட்டமாய் வெளிப்பட ஆவல் ததும்பிய விழிகளோடு அவளைப் பார்த்திருந்தவனை, பார்க்காதது போல அவள் கடந்து சென்றாள்.


அவளின் அந்த செய்கை அவனைக் காயப்படுத்த, "ஜென்னி" என்றழைத்தான்.


அவள் மேலே செல்லாமல் தடைப்பட்டு நிற்க அவள் புறம் வந்தவன்,


"இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு நீ என்னை இப்படி அவாயிட் பண்ணிட்டு போற?" அவளின் நிராகரிப்பினால் ஏற்பட்ட வலியோடு அவன் கேட்க,


"யார் அவாய்ட் பண்ணது? நானா இல்லை நீங்களா?" என்று கேட்டவளைப் புரியாத பார்வையோடு எதிர்கொண்டான்.


"நீதானே என்னை பார்க்க வர வேண்டாம்.. ஃபோன் பண்ண வேண்டாம்னு மெஸெஜ் பண்ண" அவன் ஆழமாய் பார்த்துக் கொண்டு கேட்டான்.


"நான் பார்க்க வர வேண்டாம்னு ஒண்ணும் அனுப்பல... காதல் அது இதுன்னு பேசுவதா இருந்தா... பார்க்க வர வேண்டாம்னுதான் அனுப்பினேன்... நீங்க அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்... ஏன் நட்போட நீங்க என்னைப் பார்க்க வர கூடாதா? அப்படி என்ன பிடிவாதம்?" என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டவளின் முகத்தில் அவன் பார்க்க வரவில்லை என்ற கோபம் தெளிவாய் தெரிந்தது.


மாயா அன்று பேசிவிட்டு சென்றதும் அவள் மனம் ஆறுதலுக்காகச் சாய்ந்து கொள்ளத் தேடிய தோள் அவனுடையதுதான். அன்று அவனைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கோபம்.


அவள் உணர்வுகளைப் புரிந்தவனாய், "ஸாரி... நீ அனுப்பிச்ச மெசேஜை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்" என்க,