top of page

நான் அவளில்லை - 32 (வடிகால்)

வடிகால்


மகிழ் மருத்துவமனையில் ஜென்னியைப் பார்த்ததிலிருந்து ரொம்பவும் இறுக்கமான மனநிலையோடு இருந்தான். ஓரிரு வார்த்தைகள் பேசுவது கூட ஆச்சர்யம்தான். வீட்டிலும் சூழ்நிலை இயல்புத்தன்மைக்கு மாறவில்லை.


வேந்தனோ எங்கே சென்றான் என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது வேந்தனைக் குறித்து யாரும் கவலைப்படத் தயாராக இல்லை. ஞானசேகரன் உடல்நிலை தேற வேண்டுமென்பதே எல்லோரின் கவலையாய் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் மாயாவும் மகிழும் அங்கயே தங்க வேண்டியதாய் போயிற்று.


எழிலால் எத்தனை நாள் கணவனை விட்டுப் பிரிந்து தாய்வீட்டில் இருக்கமுடியும். அவள் தமையனின் திருமணம் என்று சொல்லி வீட்டிலிருந்து வந்தே பத்து நாட்கள் கடந்து இருக்கும். ஆதலால் அவள் புறப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்க, மாயா வள்ளியம்மைக்கு துணையாய் மகிழின் தந்தையை கவனித்துக்  கொண்டாள்.


அதே நேரம் மகிழ் தன் வீட்டிலேயே இருந்தாலும் அவன் வேற்றொருவன் போலவே நடந்து கொண்டான். அவன் தன் அழுகையோ கோபமோ சோகமோ எதையும் வெளிப்படையாக யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்த உணர்வுகள் எல்லாம் அவனை மூழ்கடித்துக் கொண்டிருப்பதை மாயா நன்கு அறிவாள்.


அவன் நிலையைப் புரிந்தாலும் அவளால் என்னதான் செய்ய முடியும். அவனிடம் கணவனென்ற முழு உரிமை இருந்தாலாவது எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் அத்தகைய உரிமையை எடுத்துக் கொள்ள அவளுக்கும் இன்னும் தயக்கமாகவே இருந்தது.


இந்தக் கோபத்தில்தான் மாயா ஜென்னியைப் பார்க்க புறப்பட்டுவந்தது. உள்ளுக்குள் இருந்த வெறுப்பை எல்லாம் மொத்தமாகவே அவள் காண்பித்த அதே நேரம் ஜென்னியின் வார்த்தைகள் அவளை ரொம்பவும் காயப்படுத்தியிருந்தது.


தன் தோழி மரணித்துவிட்டாள் என்ற வலியை விட அவள் தன்னை உதாசீனப்படுத்திவிட்டாள் என்ற வலி ரொம்பவும் பெரியது. அதே நேரம் மகிழுக்கு நடந்தவை தெரிந்தால் அவனால் தாங்க முடியாதே என்று தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டாள்.


அந்தச் சமயம் மாயாவின் பெற்றோர் மகிழின் தந்தையின் உடல்நிலையறிந்து பார்க்க வந்திருந்தனர். மகிழும் அவர்களோடுதான் இருந்தான்.


எல்லோரும் இயல்பாக பேசிக் கொண்டிருக்க, மாயாவின் முகம் மட்டும் வாட்டமுற்று, அவ்வப்போது அவள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதை, மகிழின் பார்வை கவனித்துக் கொண்டிருந்தது.


மாதவனும் யாழ்முகையும் அவர்களிடம் விடைபெற்று கொண்டு புறப்பட்ட பின்னர் அறைக்குள் வந்த மாயாவின் பின்னோடு நுழைந்தான் மகிழ்.


"மாயா" என்று அவள்அழைக்க,


"ஹ்ம்ம்" என்றாள் திரும்பாமலே  படுக்கையைச் சரி செய்து கொண்டபடி!


"ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?... அம்மா அப்பாகிட்ட கூட சரியா பேசக் காணோமே... ஏதோ யோசனையில இருந்த மாதிரி இருந்த என்னாச்சு?"


இதைக் கேட்டதும் அவன் புறம் கோபமாய் திரும்பியவள், "நீங்களும் கூடதான் டல்லாவே இருக்கீங்க... நான் ஏதாவது உங்களைக் கேட்கிறேனா?  நீங்க மட்டும் ஏன் என்னைக் கேட்குறீங்க?" வார்த்தைகளை அவன் மீது வாளாய் வீசினாள். அவளிடமிருந்து வந்தது அவன் கேட்ட கேள்விக்கான பதில் அல்ல. அவள் மனதில் ஆழப் புதைத்து வைத்திருந்த ஆதங்கம்.


அவன் யோசனைக்குறியோடு, "நீ எங்கயோ வெளியப் போயிட்டு வந்ததிலிருந்துதான் இப்படி அப்சட்டா இருக்க மாயா... எங்க போன?!" என்று அவள் நிலையைப் புரிந்து கொள்ள கேட்டவனை கோபமாய் முறைத்தவள்,


"எங்கயோ போனேன்... அது எதுக்கு உங்களுக்கு?" என்றாள்.


அவன் தன் பொறுமையை இழக்கக