top of page

நான் அவளில்லை - 31 (இரும்புத்திரை)

இரும்புத்திரை


ஜென்னி அத்தனை ஆவலோடு தன் வீட்டையடைந்தாள். எத்தனை நாளைக்குப் பிறகு தன் தோழியைப் பார்க்க போகிறோம். மருத்துவமனையில் பார்த்த போது அவள் மகிழோடு நின்றதால் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுப் போனது. ஆனால் அவள் தனியாக தன்னை பார்க்க வந்திருக்கிறாள் என ரூபா உரைக்க அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.


இரண்டு நாட்கள் முன்பு அவர்களைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவள் பட்ட தவிப்பும் துயரும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.


மாயாவையும் மகிழையும் அவள் தவிர்த்ததெல்லாம் வெறும் பார்வைக்குத்தான். ஆனால் உள்ளூர அவர்களின் வேதனையையும் வலியையும் உணர்ந்து வெதும்பியதை யார் கண்டிருக்க முடியும்.


தண்ணீரில் நீந்தும் மீனின் கண்ணீர் போல அது யார் பார்வைக்கும் புலப்படவில்லை. எல்லோர் முன்பும் இதுவரையில் அவள் ஜெனித்தாவாக நின்றிருக்கலாம். ஆனால் அது நிச்சயம் மாயாவின் முன்பு சாத்தியப்படாது. அவள் முன்னிலையில் அப்படி அவளை மறைத்துக் கொள்ளவும் முடியாது.


அத்தகைய நீண்ட நெடிய ஆழமான நட்பு அவர்களுடையது. யாரிடமும் அவள் பகிர்ந்து கொள்ளத் தயங்கும் விஷயங்களைக் கூட அவளிடம் மட்டுமே மனதுவிட்டுப் பேசிப் பகிர்ந்து கொள்ள முடியும்.


அவள் சொல்லாமல் விட்டுப் போன கதைகளைச் சொல்ல வேண்டுமென்ற துடிப்போடு மாயாவைக் காண ஆவலோடு வர, அவள் வீட்டின் முகப்பறையில் காத்திருந்தாள்.


மீண்டும் மூன்று வருடங்கள் கழித்து அந்தத் தோழிகள் இருவரும் எதிரெதிரே நின்று சந்திக்கும் தருணம் அமைந்தது.


மாயாவின் முகத்தில் அத்தனை வெறுப்பு. ஜென்னியின் முகத்தில் அவளை எப்படி எதிர்கொள்வதென்ற தவிப்பு. இந்த உணர்வுகளுக்கிடையில் அவர்களின் நட்பு தொலைந்து போயிருக்க,  புலப்படாத ஒரு  இரும்புத்திரை அவர்களை இணைய விடாமல் நின்றிருப்பதைப் போன்ற ஒரு மாயை.


அப்போது ஜென்னியை  பார்த்த ரூபா, "இவங்கதான் மாயா... உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க" என்க, மாயாவின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.


அவள், "ஓ...இவங்கதான் ஜெனித்தா விக்டரா..?" என்று கேட்டவளின் முகத்தில் இழையோடிய புன்னகையில் அத்தனை வெறுப்பு!


ஜென்னி தன் உணர்வுகளைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, ரூபாவின் புறம் திரும்பி அவளை சமிஞ்சையால் அங்கிருந்து போகச் சொன்னாள்.