நான் அவளில்லை - 30 (இன்ப அதிர்ச்சி)
இன்ப அதிர்ச்சி
உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களைப் பிரிந்திருப்பது உணர்வுப்பூர்வமாக எத்தனை வலி என்பதை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
எல்லோருமே ஏதோ ஒரு சூழ்நிலையில் அத்தகைய இழப்பையும் வலியையும் கடந்து வரவே நேரிடும். அது மரணமாகவோ பிரிவாகவோ ஏதோ ஒரு வகையில் நிகழவே செய்கிறது. ஆனால் ரொம்ப சொற்பமான சிலருக்கு மட்டுமே தான் பிரிந்த உறவை மீண்டும் அதே போல் பெற இயலும். சையத்திற்கு அத்தகைய அதிசயம் நிகழ்ந்தது.
அவன் வாழ்வும் வீடும் இப்போதுதான் நிறைவு பெற்ற உணர்வு. அவன் பெற்ற வெற்றிகள் தர முடியாத நிறைவையும் சந்தோஷத்தையும் அவன் அம்மாவோடும் தங்கையோடும் பூரணமாய் இருந்த அந்த ஐந்து நாட்களில் அனுபவித்திருந்தான்.
இறைவனின் அருளோ? அல்லது விதியின் செயலோ? எதுவாயினும் அத்தகைய இன்பத்தை அவன் பெற துணை புரிந்தவள் அவளே!
அவளைப் பார்க்கவும் பேசவும் உள்ளுக்குள் தவிப்பும் ஏக்கமும் இருந்தாலும் அவளைச் சென்று பார்க்க ஏதாவதொரு அழுத்தமான காரணம் வேண்டுமே?!
ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தவன் தன் கைப்பேசியில் அவளின் முகத்தை ரசித்தபடி வீட்டின் வாசல்புறம் இருந்த ஊஞ்சலில் ஆடியபடி கனவுலகில் மிதந்திருந்தான் .
தன்னை மறந்த நிலையில் அவளின் காந்தமான விழிகளுக்குள் உள்ளார்ந்து சென்றிருக்க, சட்டென்று அவன் கைப்பேசியை தங்கை அப்ஃசானா பறித்துக் கொண்டாள்.
அவன் அதிர்ச்சியடைந்த நேரம், அவள் அந்தக் கைப்பேசியை எடுத்துக் கொண்டு விலகி ஓடியவள், "என்ன ண்ணா இத?" என்று புருவத்தை உயர்த்திப் பரிகசித்து கேட்க,
அவன், "அப்சானா போஃனை கொடுத்திரு" என்று அதட்டினான்.
"உம்ஹும் மாட்டேன்... நான் இந்த போட்டோவை அம்மாகிட்ட காட்ட போறேன்" என்று ஒழுங்கெடுத்துவிட்டு அவள் ஓட,
"ஏ வேணா வேணா ப்ளீஸ்" என்று அவன் பதட்டமடைந்து கெஞ்ச,
"முடியாது... என்கிட்ட நீ பொய் சொல்லிட்ட இல்ல" என்று முகத்தைச் சுருக்கினாள்.
"என்ன பொய் சொன்னேன்?" இருவரும் வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டபடியே பேச,