தேன் சிந்தும் பூ வனம்! (சிறுகதை)

தேன் சிந்தும் பூ வனம்!
{மிகப்பெரிய வெல்லக் கட்டி ஒன்றை மொய்த்து, தன் சிறு நாவினால் தான் சுவைத்த இனிமையை விவரிக்க ஒரு சிற்றெறும்பு முனைவதுபோல், பொன்னியின் செல்வன் எனும் கடலில் மூழ்கிய தாக்கத்தில், முழுக்க முழுக்க எனது கற்பனை கொண்டு இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன்.
பிழை இருந்தால் பொருத்தருள்க.}
திரண்ட தோள்களும் திண்ணிய மார்புமாய், ஒரு வீரனுக்கே உரித்தான சர்வ லட்சணங்களுடன், புயலெனப் பாய்ந்து வரும் அந்த வெண்ணிற புரவியின் மேல் வீற்றிருந்தான் ஆதித்தன். வேங்கை தேசத்தின் இளவரசன்.
ஒரு மிகப்பெரிய போரின் முழு வெற்றியைச் சுவைத்து அவன் திரும்பிக்கொண்டிருந்தாலும் அது எந்தவிதத்திலும் அவனுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.
அந்த ராஜ பாட்டையின் இருமருங்கிலும் அரண் போன்று ஓங்கி வளர்ந்து குளுமையை பரப்பிக்கொண்டிருந்த தேக்கு, சந்தனம், ஆல், அகில் போன்ற பல்வேறு மரங்களும், இடையிடையே காணப்பட்ட மா.. பலா எனக் கனிகளைத் தாங்கிய விருட்சங்களும் கூட அவன் மனதின் வெம்மையைக் கொஞ்சம் கூட தனிக்கவில்லை.
அவனது நிழல் போன்று மற்றொரு குதிரையில் வந்துகொண்டிருந்த அவனது மெய்க்காப்பாளன் முத்தழகன், "இளவரசே! புரவிகளுக்குத் தண்ணீர் வேட்கை போலும்... சற்று இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா?" என பணிவுடன் வினவினான்.
"வேட்கை புரவிகளுக்கு மட்டும்தானா... இல்லை சோர்வு ஆட்கொள்ள அதன் மேல் வீற்றிருக்கும் பரிமேல் அழகனுக்குமா?" எனக் கேட்டு இடி இடி என சிரித்தவாறே புரவியிலிருந்து குதித்து இறங்கினான் ஆதித்தன்.
அவனது கேலிப்பேச்சில் புன்னகை அரும்ப, தானும் புறவியிலிந்து இறங்கிய முத்தழகன் அதன் சேணத்தைப் பற்றியவாறு, இளவரசனை பின் தொடர்ந்து, பாலாற்றை நோக்கிச் சென்றான்.
ஆதித்தனின் முகம் மலர்ந்து இருந்தாலும், அவனுடைய அகத்தில் அந்த மலர்ச்சி சிறிதும் இல்லை என்பது அவனுக்கும் புரியவே செய்தது.
அதன் காரணம் விளங்கினாலும், தனது மதிப்பிற்கும், அதனை விட மேலான அன்பிற்கும் பாத்திரமான அவனுடைய இளைய அரசனுக்கு அவனால் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்ற நிலைமையில் இருப்பதற்கு தனக்கு தானே வெட்கிப்போனான் முத்தழகன்.
ஆற்றின் கரையை நெருங்கியதும் புரவிகளை அதன் போக்கில் இருவரும் விட்டுவிட, தண்ணீரை நோக்கி ஓடின இரண்டும்.
"பார்த்தாயா அழகா! இந்த சித்திரை கோடையிலும் ஆற்று நீரின் வேகத்தை!" என வியந்தவாறு, அந்த நதி தேவதையை வணங்கி, சிரம பரிகாரம் செய்து கொண்டு, அங்கே இருந்த புற்களின் மேல் கால்களை நீட்டிப் படுத்தான் ஆதித்தன்.
அரணாக அருகிலேயே நின்றான் முத்தழகன்.
அன்று காலையிலோ, முந்தைய தினத்திலோ மழை அங்கே ஆசி நல்கியிருக்கக்கூடும்! அது விட்டுச்சென்ற குளுமையுடன், மாலை காற்று இதமாகத் தழுவிச்செல்ல, தாழம்பூக்களின் நறுமணம் சுகமாக வந்து நாசியைத் தீண்டியது.
ஆங்காங்கே குட்டை போல் தேங்கி இருந்த தண்ணீரில், செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கண்களுக்கு விருந்தளிக்க, தன்னை மறந்து கண்களை மூடினான் ஆதித்தன்.
அந்த நொடிப் பொழுதிற்குள், அவனது இதயத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த சுநந்தினி தேவியின்யின் முகம் கண்களுக்குள் மேலெழும்பி வர, தாழையின் நுனியில் உள்ள கூர் பகுதி கண்ணுக்குள் தைத்ததைப்போன்று கண்களை வேகமாகத் திறந்தான் ஆதித்தன்.
உள்ளே சென்றவள் வெளியேற அவன் வாய்ப்பு கொடுத்தும் கூட வெளியேறாமல் அங்கேயே நிலைத்திருந்தாள் அந்த பிடிவாதக்காரி!