top of page

காவல்தானே பாவையர்க்கு அழகு! (சிறுகதை)



காவல்தானே பாவையர்க்கு அழகு!


வழக்கத்துக்கு மாறாக மிகவும் சமர்த்துப் பிள்ளை போல் புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு படிப்பதாகப் பாவனை செய்துகொண்டிருந்த மகனைப் பார்த்து, 'இது இவனோட டிசையன்லயே இல்லையே... வெளியில எதாவது பெரிய சம்பவத்தை நடத்தி வெச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி சீன் போடறானோ' என்று வர்ஷினி மனக்குரலில் பேசிக்கொண்டிருக்க, அவளது சந்தேகத்தை நிவர்த்திசெய்யவென, "வர்ஷினி... வர்ஷினி..." என அவளை அழைத்தவாறு அங்கே வந்தாள் பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் காயு.


"வா காயு" என வர்ஷினி அவளை வரவேற்க, "எங்க உன் பையன் கோகுல்" என அதிகார குரலில் கேட்டாள் அவள்.


'ஓஹோ... இன்னைக்கு கோட்டாவுக்கு பையன் எதையோ இழுத்துவிட்டுட்டு வந்திருக்கான் போலிருக்கே' என்ற எண்ணத்தில் கொஞ்சம் உஷாரானவள், "நாளைக்கு ஏதோ டெஸ்ட் இருக்குன்னு இங்கதான் படிச்சிட்டு இருக்கான். ஏன்பா என்ன விஷயம்" என அவளது வேகத்தைத் தணிக்குமாறு நிதானமாகக் கேட்டாள் வர்ஷினி.


"என்ன விஷயம்னு இவ்வளவு பொருமையா கேக்கற நீ. அவன் நித்யாவை அடிச்சு வெச்சிருக்கான் தெரியுமா.


அவ வீட்டுக்கு வந்து ஓன்னு ஒரே அழுகை" எனப் படபடத்தாள் காயு.


"ப்ச்... காயு! அவன் கேள்ஸையெல்லாம் அடிக்க மாட்டான். அது தெரியாதா உனக்கு" என காயுவுக்கு பதில் சொன்னவள், "கோகுல்... ஒரு நிமிஷம் இங்க வா" என மகனை அழைக்க, அன்னையின் குரலில் கொஞ்சமாக எட்டிப்பார்த்த கடுமையை உணர்ந்தவன், 'கோகுலு... எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு. இல்லன்னா ஒன் வீக் டெரஸ்ல இருக்கற செடிக்கெல்லாம் தண்ணி போடா வெச்சிடுவாங்க அம்மா' என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அப்பாவியாக முகத்தை மாற்றிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான் கோகுல்.


"என்னடா... காயு ஆன்டி என்னவோ சொல்றாங்க; நீ நித்யாவை அடிச்சியா என்ன?" என அவள் கேட்க, மௌனமாகத் தலை குனிந்தான் அவன்.