கூந்தல்.
முடி கொட்டுவது சாதாரண பிரச்சினை இல்லை என்று தொடங்கி கூந்தல் தொடர்பான எந்த விளம்பரம் பார்க்க நேரிட்டாலும் டென்ஷன்தான் ஸ்வேதாவிற்கு.
விவரம் புரிந்த நாள்தொட்டு தன் கூந்தல் பற்றி ஒரு பெருமை உண்டு அவளுக்கு. முப்பது வயது தொடங்கி கிட்டத்தட்ட ஐந்தாறு வருடமாக அந்த பெருமை மாறி அவள் கூந்தல் அவளுக்கு பெரும் தலைவேதனையாகப் போனதுதான் உண்மை.
பள்ளிகாலம் தொட்டு "வாவ் ஸ்வேதா! என்ன ஹேர்பா உனக்கு" எனும் தோழிகளாகட்டும் திருமண விழாக்களுக்கு செல்லும் பொழுது, "ஹேய்! இது நிஜ முடியா இல்ல சவுரியா?” என பின்பனலை இழுத்து டென்ஷன் ஏற்றும் மாமிகளாகட்டும் தப்பித்தவறி தலை முடியை விரித்து விட்டால், "ஸ்வேதாம்மா! தலைமுடிய முதல்ல கட்டு. யார் கண்ணாவது படபோரது” என அங்கலாய்கும் சரோஜா பாட்டியாகட்டும் அனைத்திற்கும் மேலே திருமணத்திற்கு முன், "உன் ஹேர் ரொம்ம்ம்...ப நீநீ...ளமா இருக்குமாமே.. அப்படியா?” என்று கேட்ட அவளுடைய ஹரியாகட்டும் அந்த பெருமையை வளர்த்துதான் விட்டார்கள்.
முதலில் அபி பிறந்த பிறகு லேசாக உதிரத் தொடங்கியது பின் சாரா பிறந்த பிறகு தாறுமாறாக கொட்டோ கொட்டென்று கொட்டியது (எது முடிதாங்க).
அதுவும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டே அவளின் கூந்தலுடன்தான். அதுவும் கொத்தாகப் பற்றி நன்றாக இழுத்து வலியில் ஆஆ... வெனக் கத்தினால், அதுவும் ஓர் விளையாட்டு என நினைத்து இன்னும் நன்றாக இழுக்க... விடுவிப்பதற்குள் கண்ணீரே வந்துவிடும்.
பிறகுதான் தொடங்கியது அனைவரின் அனுதாபப் படலம். ‘ஐயோ ஸ்வேத் என்ன உன் ஹேர் இப்படி ஆயிடுச்சு?’ எனும் தோழிகளின் நலம் விசாரிப்பில், ‘எங்க ஸ்வேதாக்கு தலைபின்னா முடி கை கொள்ளாது. இப்ப இப்படி கொட்டி போச்சே’ என்கிற பாட்டியின் புலம்பலில், சமயத்தில் சாப்பாட்டில் மாட்டி ஹரியிடம் மாட்டிவிட்டு வாங்கும் முறைப்பில், அனைத்திற்கும் மேலாக முகநூலில் கவனிக்காமல் முன்னால் போட்ட பின்னலுடன் பதிவிட்ட போட்டோவிற்கு, ‘ஐயோ ஸ்வேதா! உன் ஹேர்ர்ர்..’ என அதிர்ச்சி முகம் காண்பிக்கும் இமோஜியுடன் மாமாவின் மகள் மதியற்ற மதியின் கமென்டில், இவளது இமேஜ் பயங்கரமாக டேமஜ் ஆகி விட...
‘தானே வளர்ந்த முடி தாலிச்சரட்டோட! தாயார் தைலம் தடவி வளர்த்தது வாளிக்காதோட!’ எனும் பழமொழிக்கேற்ப பிறகுதான் தொடங்கியது அவளது தலைமுடி வளர்க்கும் (உள்ளதையும் கெடுக்கும்) போராட்டம்.
விளம்பரங்களில் வரும் அனைத்து ஷேம்பூக்கள், ஹேர் ஆயில்கள், அந்த தைலம் இந்த தைலம், ஹாட் ஆயில் மசாஜ் (வேற ஒண்ணும் இல்லைங்க அம்மா பாட்டியெல்லாம் செய்வதுதான். எண்ணையை காச்சி தேய்ப்பது) ஹேர்ஸ்பா(ஹப்பாஆஆ..) அனைத்தையும் முயற்சி செய்து, அடர்த்தி குறைந்து மெலிதாக நீண்ட முடியை பார்க்கவே பிடிக்காமல், செய்துகொண்ட யூ கட் பிறகு லேயர் கட் பிளா பிளா பிளா.
கடைசியாக மருத்துவர் ஆலோசனை படி எடுத்துக்கொண்ட மாத்திரை அதனால் ஏற்பட்ட வயிற்றில் எரிச்சல். போதும் போதும் என அனைத்தையும் விட்டு ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் கவலை மட்டும் தீர்ந்தபாடில்லை.
இப்படியிருக்க அவளது தங்கை நீலா அவளை போனில் அழைத்தாள். ஆனால் அவள் கூரிய செய்தி ஸ்வேதாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அது, அவர்களுடைய தோழி அகிலா பற்றியது.
ஸ்வேதாவின் குடும்பமும் அகிலாவின் குடும்பமும் ஒரே காலனியில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் குடியிருந்தனர்.
தன் தங்கையை விடவே சிறியவளான அகிலாவை ஸ்வேதாவிற்கு மிகவும் பிடிக்கும்.
மிகவம் இனிமையான பெண் அவள். திருமணமாகி அவளும் நீலா இருக்கும் பகுதியில்தான் தன் கணவர் ராஜன் மற்றும் ஐந்து வயது மகனுடன் குடியிருக்கிறாள்.
அகிலாவிற்கு மார்பகப்புற்று நோய் என்பது உறுதிசெய்யப்படுள்ளதாகவும் அவள் அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் நீலா கூறினாள்.
மேலும் மென்பொருள் துறையில் வேலைப் பார்க்கும் அவளது கணவருக்கு வேலையில் பிரச்சினை என்றும், அகிலாவும் அவள் உடல்நிலை காரணமாக வேலைக்கு செல்லவில்லை என்றும் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவள் கூற, ஸ்வேதா சற்று அதிர்ந்துதான் போனாள்.
அடுத்த நாளே தன் சகோதரியுடன் அகிலாவை பார்க்கவும் சென்றாள் அவள்.
புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சையும் அதைத் தொடர்ந்து கீமோ தெரபியிலும் கிழிந்த நாராகக் கிடக்கும் அகிலாவை காண தாங்கவில்லை அவளுக்கு.
தலை மொட்டை அடிக்கப் பட்டிருக்க புருவத்தில் உள்ள முடிகள்கூட நீக்கப்பட்டிருந்தது.
அந்த சிறு முடிகள் கொட்டுவதால் அவள் வாயில் சென்று விடுவதாலும் உணவு உண்ணும் போதும் உள்ளே சென்றுவிடுவதாலும் நீக்கிவிட்டதாக அவளுடைய மாமியார் கூறினார்.
ஆனால் அந்த நிலையிலும் அவளது குடும்பத்தினர் அவளிடம் காட்டிய அக்கறை அவளை நெகிழ வைத்தது.
அவள் நிலையை தான் முன்னரே அறியவில்லையே என வருந்தியவள், அவளை அடிக்கடி சென்று பார்த்து தன்னாலான உதவிகளை தன் மனதாலும் பணத்தாலும் செய்தாள். அவளுடன் மருத்துவமனை செல்வதும் உண்டு. அங்கே அவள் சந்தித்த பிற கேன்சர் நோயாளிகளும் அவர் குடும்பமும் படும் இன்னல்கள் மனம் பதறச் செய்தன.
ஸ்வேதா ஹரியின் மூலமாக ராஜனுக்கு நிரந்தரமான வேலைக்கும் ஏற்பாடு செய்தாள். அகிலாவின் அம்மா மற்றும் மாமியார் இருவரும் அவளையும் அவளுடைய மகனையும் அக்கறையுடன் கவனிக்க, அவள் கணவரும் மிகவும் அருமையாக அவளை கவனித்துக் கொண்டார்.
கீமோ எடுக்கும் சமயங்களில் அதிக அசதியும் மயக்கமும் ஏற்பட, அவள் உணவு உண்ணவே முடியாமல் வருந்துவாள். இருப்பினும் தன் துயரை வெளிக்காட்டாமல் முடிந்த அளவு மலர்ந்த முகத்துடன் இருக்க அவளெடுக்கும் முயற்சிகள் ஸ்வேதாவை அதிசயிக்க வைத்தது. பல மாத போராட்டத்திற்கு பிறகு அகிலா ஒருவாராக உடல் தேறி மருத்துவ கண்காணிப்பினூடே வேலைக்கும் செல்லத் தொடங்கினாள்.
பல மாதங்களுக்குப்பிறகு அவளைக் காண ஸ்வேதா சென்றிருந்தாள். முதலில் பாய்கட் போன்ற ஹேர்ஸ்டைலில் இருந்தவள் போனிடெயிலூக்கு மாறி கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாள்.
அவளது ஸ்கூட்டியில் தன்னை ட்ராப் செய்ய வந்தவளைக் கண்ட ஸ்வேதாவிற்கு மனம் மகிழ்ச்சி அடைந்தது.
மேலும் தன்னாலான நன்மையை அவளுக்கு செய்ததில் ஒரு நிறைவு ஏற்பட்டது.
இதற்கு நடுவில் தன் கூந்தல் பற்றிய கவலையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதை நன்றாகவே உணர்ந்தாள்
அன்று ஸ்வேதா பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவில் வந்த அந்த விளம்பரம் அவளை மிக மனவருத்தத்தில் ஆழ்த்தியது. அது ஒரு சிறு பெண் குழந்தை மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டையும் மறுத்து உலக அழகி பட்டம் பெற விரும்புவதாக வரும் ஒரு விளம்பரம்.
ஸ்வேதா ஒரு பெண்ணியவாதியெல்லாம் இல்லை. ஆனாலும் இந்த விளம்பரம் அவளை பாதித்தது. எத்தனையோ இன்னல்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்தப் பெண்ணினம் சிறகு விரிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவராக, பொறியாளராக, பைலட்டாக, விஞ்ஞானியாக இப்படியெல்லாம் இருக்க பெண்களை அழகு எனும் மாயைக்குள் அ(டை)டக்கும் இவைகளிலிந்து வெளிவரவேண்டியது எவ்வளவு முக்கியம். அழகு மனிதருக்கு மனிதர் வேறுபடும்தானே? வெண்மை நிறத்தவர்தான் அழகென்றால், கறுமை அழகில்லையா? மெலிந்த உடல்வாகுதான் அழகென்றால், பிறகு உடல் பருத்தவர்கள்?
ஒவ்வொரு அன்னைக்கும் தன் பிள்ளை தான் அழகென்றால் ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் அன்னை... தந்தை...
உண்மைக் காதல் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தன் இணைதான் பேரழகு.
"உடலினை உறுதி செய்" பாரதி சொன்னது. கூடவே நம் மனதினையும் உறுதி செய்வது எவ்வளவு அவசியம்?
அடுத்த தலைமுறையின் அறிவை வளர்கக வேண்டிய கல்வி முறையாகட்டும், அவர்கள் அதிகமாக தங்கள் பொழுதைக் கொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகட்டும் அவர்கள் தன்னம்பிக்கையை அதிகமாகக் கொல்கிறதோ?
நான் என்னை உயர்வாக நினைக்க நான் ஒன்றும் உலகையே ஆளும் அரசியாக இருக்க வேண்டியதே இல்லையே. நானிருப்பது மிகச்சிறிய வட்டமாயிருந்தாலும் அதில் சிம்மாசனமிட்டு நானேஅரசியாக இருக்க வேண்டாமா. என்னை நானே தாழ்த்திக்கொள்வதா?
நம்மை மேலும் மேலும் அழகுபடுத்த நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் தாழ்வு மனப்பான்மையின் எதிரொலியோ?
எனக்கு அழகுக் குறை
நிறம் குறை
உயரம் குறை
பணம் குறை என
நம் மனதையே குறைக்க செய்யலாமா.
இதையெல்லாமா போதிப்பது?
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நாம் என்ன நன்மையை செய்து விட்டோம்?
இன்னும் நாம் கடந்துவர வேண்டிய பாதை எவ்வளவோ உள்ளதே எனத் தோன்றியது அவளுக்கு.
தன் மகள் சாராவிற்கும் மகன் அபிக்கும் இதைத்தான் உணர்த்த வேண்டும் என்று நினைத்தாள் அந்த மிகச் சாதாரண அன்னை!
vமுற்றும்v
Comments