
என் பெயர் வசந்தி!
(இந்த பேய் ஆவி இதுபோன்ற விஷயங்களில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை!
உண்மையோ பொய்யோ தெரியாது, நான் சிறு வயதில் மேற்கு மாம்பலத்திலிருந்த பொழுது பலர் பரவலாகப் பேசி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புனைந்ததே இந்த சிறுகதை.
கதையைக் கதையாக மட்டும் படிக்கவும்.)
1988... மேற்கு மாம்பலம்...
ஒரு தனியார்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் ஸ்வேதா பள்ளி நேரம் முடித்து வீட்டுக்கு வர, "பால் வாங்கிட்டு வந்துடுடி; தடுப்புச் சுவரின் மேல காசு வெச்சுருக்கேன். பக்கத்துலேயே பாத்திரம் வெச்சுருக்கேன்!
அரை லிட்டர் எருமைப் பால்; இருநூறு பசும்பால்.
சீக்கிரம் போ; பால் தீர்ந்து போயிட போகுது"
அந்த தடுப்புச் சுவருக்கு அந்த பக்கத்திலிருந்து அம்மா குரல் கொடுக்க, "ப்ச்... இப்பதானே வந்தோம்! முடியல" என முணுமுணுத்தவாறே சொம்புகளையும் காசையும் எடுத்துக்கொண்டு பால் டெப்போவை நோக்கிச் சென்றாள் ஸ்வேதா.
பால் வாங்க நின்ற அந்த நேரத்தில் அங்கே இருந்த பெண்மணிகளுக்கிடையில் நடந்த உரையாடல் அவளது கவனத்தைக் கவர, அந்த தகவல் அந்த ஒரு வாரத்தையே ஓட்ட போதுமானதாக இருந்தது அவளுக்கு.
ஓட்டமாகப் போய் பாலையும் மீதம் இருந்த சில்லறையையும் வீட்டில் வைத்துவிட்டு அவள் நேரே சென்றது அவளது உயிர்த் தோழி சித்ராவின் வீட்டுக்குத்தான்.
இருவரும் எல்.கே.ஜி முதலே ஒன்றாகப் படிக்கும் தோழிகள்.
இவளுக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் சித்ராவிடம்தான் பகிர்வாள் ஸ்வேதா.
"சித்து... ஏய் சித்து" என அழைத்தபடி மாடிப்படிகளில் ஏறி வந்தவளை, "ஏய் வாடி! ஹோம்வர்க் முடிச்சிட்டியா" என்று கேட்டாள் அப்பொழுதுதான் வீட்டுப்பாடம் செய்யத்தொடங்கியிருத்த சித்ரா.
"ப்ச்... எங்கடி! முக்கா மணி நேரம் பால் டிப்போல நின்னுட்டு இப்பதான் வரேன்" என்றவள், "ஏய்... இன்னைக்கு அங்க நம்ம வசந்தி பத்தி ஒரு சூப்பர் ந்யூஸ்டி.
அந்த வீட்டுக்கு புதுசா குடித்தனம் வந்தவங்க கிட்டயும் அவ வேலையை காட்டிட்டா தெரியுமா!
அவங்க வேற வீடு பாக்கறாங்களாம்" என்று சொல்ல,
"என்னாது... நம்ம வஸந்தியா!
ஏய் ஆளை விடுடி!
தயவு செஞ்சு அவளைப் பத்தி பேசாத! அப்பறம் ராத்திரி எனக்குத் தூக்கம் வராது?"
என்றாள் சித்ரா மெல்லிய நடுக்கத்துடன்.
"ப்ச்... என்னால நம்பவே முடியலடி சித்து!
ஆனா எல்லாரும் சொல்றத கேக்கும்போது நம்பாமலும் இருக்க முடியல"
என ஸ்வேதா சொல்ல, "அப்பறம் ஏண்டி யாரும் அந்த வீட்டுல நிரந்தரமா குடி இருக்க மாட்டேங்கறாங்க" என்று கேட்டாள் சித்ரா.
"அதாண்டி எனக்கும் புரியல!
ஒரு நாள் நாம அந்த வீட்டுக்குள்ள போய் பார்க்கலாமா?" என ஆர்வமாக ஸ்வேதா கேட்க, "அடப்பாவி! ஆனாலும் உனக்கு இவ்வளவு கொலை வெறி ஆகாது!" என்று சொல்லி தலையில் கை வைத்துக்கொண்டாள் சித்ரா.
"போடி பயந்தான்கொள்ளி! உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு!" என நொடித்துக்கொண்டு, "நான் போய் ஹோம்வொர்க் பண்ணப்போறேன் போ" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்தே போனாள் ஸ்வேதா.
நடந்தது இதுதான்...
மேற்கு மாம்பலத்தின் பிரதான சாலையிலிருக்கும் ஒரு பிரபல திரை அரங்கத்தின் அருகில் இருந்தது அந்த வீடு.
பெரிய வீட்டைச் சிறு சிறு பகுதிகளாகத் தடுத்து வாடகைக்கு விடப்பட்டிருக்கும் ஒண்டுக்குடித்தன வீடு அது.
அங்கே இருந்த போர்ஷனில் எண்பதுகளின் தொடக்கத்தில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக்கொண்டு இறந்துபோன ஒரு பெண்தான் வசந்தி.
அது ஒரு தற்கொலை என்றும் கொலை என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
சம்பவம் நடந்த பிறகு பூட்டியே கிடந்த வீடு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வாடகைக்கு விடப்பட்டது.
அதன் பிறகுதான், நண்பகல் வேளைகளில் வசந்தி தன் வேலையைக் காட்டத்துவங்கினாள்.
அவளைப் பற்றி அறியாமல், அந்த சம்பவம் நடந்ததற்குப் பிறகு முதன்முதலாக அங்கே தன் மனைவி உமா மற்றும் இரு பிள்ளைகளுடன் குடிவந்தான் மெட்ராஸுக்கு புதியவனான மௌலி என்பவன்.
மௌலி வேலைக்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் சென்றதும் வீட்டில் தனியாக இருப்பாள் உமா.
ஒரு நாள் மதியம், நேரம் பன்னிரண்டு இருக்கும், ஜன்னல்கள் படபடவென அடித்துக்கொள்ள, மாட்டப்பட்டிருந்த திரைச் சீலையில், சிவப்பில் கருப்பு பூக்கள் போட்ட புடவை உடுத்திய ஒரு பெண்ணின் உருவம் நிழலாடுவதுபோல் தோன்ற, முதலில் திடுக்கிட்டாலும் அது சில நொடிகளுக்குள்ளேயே மறைந்துபோகவே அதை தன் கற்பனை என்றே எண்ணிக்கொண்டாள் உமா.
ஒரு சில நாட்களில் அவள் வீட்டில் தனிமையிலிருந்த சமயம் அழுகுரல் ஒன்று கேட்கத் தொடங்கியது.
ஓவென்ற அலறலும், 'ஐயோ! எரியுதே! எரியுதே!' என்ற சத்தமும் காதை கிழிக்க, அந்த சிறிய வீட்டில் அவளால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
அக்கம் பக்கத்தினர் யாரும், நன்று பழகியவர்களும் கூட அவளிடம் எதையும் சொல்ல முற்படவில்லை.
அங்கே குறைந்த வாடகையில் வீடு கிடைப்பதே கடினம். அதனால் அந்த வீட்டிற்குச் சொந்தக்காரரைப் பகைத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை, அவ்வளவே.
மௌலியிடம் இதைப் பற்றிக் கூறினாலும் கூட, "தனியா இருக்கற பயத்தில் இப்படியெல்லாம் உனக்கு தோணுது.
ரேடியோ நாடகமா இருக்கும்!" என முடித்துவிடுவான் அவன்.
அப்பொழுதெல்லாம் பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடையாது.
ஒரு நாள் மதியம் உமா உண்டுவிட்டு சற்று கண் அயர, யாரோ தலையில் தட்டுவதுபோல் தோன்றவே திடுக்கிட்டு எழுந்தாள் அவள்.
அருகில் எதோ பொசுங்கும் வாடை வரக் கூடவே அழுகுரலும் கேட்கவும் பயந்தே போனாள்.
"யார்... யாரது?" என உமா பயத்துடன் கேட்க, "அக்கா... பயப்படாதக்கா; என் பேரு வசந்தி" என்ற பெண்ணின் குரல் மட்டுமே கேட்டது.
"என்ன... வஸந்தியா? யாரும்மா நீ?" முழு பீதியுடன் அவள் கேட்க, "ஆமாங்கா... என் ஊர் கன்னியாகுமரி;
சினிமால நடிக்கவெக்கறேன்னு என்னைக் இங்க கூட்டிட்டு வந்தான் கா குமார்னு ஒருத்தன்.
என்னை கண்டபடி உபயோகப்படுத்திட்டு, ஒருநா தூங்கற மருந்த பால்ல கலந்து கொடுத்து, இதே நேரத்துல மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திட்டான் பாவி!
நான் பாவமில்லையா கா?" என கேவலுடன் அந்த வசந்தி கேட்க, உறைந்தே போனாள் உமா.
பின் தன்னை கொஞ்சம் திடப்படுத்திக்கொண்டு பக்கத்துக்கு வீட்டிற்குச் சென்றவள், நடந்ததைச் சொல்ல அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
'இது இங்கே சகஜம்' என்பது போல் அவர்கள் இருக்க, சிறிது நேரத்துக்குப்பின் வீட்டிற்கு வந்தவள் பயத்துடனே பொழுதைக் கழித்தாள்.
மௌலி வந்ததும் அவள் நடந்ததைக் கூற அது பகல் கனவென்று முடிவே கட்டிவிட்டான் அவன்.
அதன்பின் வசந்தியின் வரவு அங்கே தொடர்கதையானது.
'அக்கா இன்னைக்கு ரசத்துக்கு புளி கொஞ்சம் அதிகமா கரைச்சுட்ட!'
'இன்னைக்கு ஏன் குழம்புல உப்பை அதிகமா போட்ட?'
'அக்கா சாம்பாரை தீயவிட்டுட்ட; நாத்தம் அடிக்குது'
என்கிறவரையில் வசந்தி அவளிடம் சரளமாகப் பேசத்தொடங்க, உமாவுக்கோ பயம்! பயம்! பயம் மட்டுமே.
ஒவ்வொருநாள் 'எனக்கு மல்லிகை பூ கொடு; கண்ணாடி வளையல் கொடு' என்று கத்துவாள் வசந்தி.
பதறிப்போவாள் உமா.
ஒருநாள் அனைத்தையும் சொல்லி வீட்டை மாற்றியே ஆகவேண்டும் என மௌலியிடம் உமா பிடிவாதம் பிடித்து அழ, அவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை அவனால்.
"சரி... ஒருநாள் மத்தியானம் நான் தனியா இங்க இருந்து பாக்கறேன்!
அப்பறமா வீடு மாத்தறத பத்தி முடிவு பண்ணிக்கலாம்" என்றவன், மனைவி மற்றும் மக்களை அவனுடைய சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு, ஒருநாள் வேலைக்கு விடுப்பெடுத்துக்கொண்டு அதைச் செயல்படுத்தவும் செய்தான்.
பாவம்! அவனுக்கு அப்பொழுது தெரியாது வசந்தி பெண்களிடம் மட்டுமே அமைதியின் ஸ்வரூபமாக இருப்பாள் என்று.
மௌலி தனியாக இருந்த தினம் அவளது கத்தல் வழக்கத்தை விட அதிகமாக இருக்க, அரண்டே போனான் அவன்.
அலறியடித்துக்கொண்டு வெளியே சென்றுவிடலாம் என எண்ணியவன் அவனது சட்டையை எடுக்கத் துணிகளை வைக்கும் பீரோவைத் திறக்க, இறுகிப்போய் அதைத் திறக்கவே முடியவில்லை அவனால்.
அதேநேரம் அந்த பீரோவின் மேல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பழைய செய்தித்தாள்கள் எல்லாம் சரிந்து அவன் தலை மேலே கொட்ட, ஆடிப்போனான் அவன்.
வீட்டிலிருந்த பொருட்களெல்லாம் தாறுமாறாக விழுந்து நொறுங்க, சமையற்கட்டின் வாயிலில் மாட்டியிருந்த திரைச்சீலை தீ பற்றி எரியத் தொடங்கியது.
அதன் பொறி பறந்துவந்து அவன்மேல் பட்டு சிறு சிறு காயங்களை ஏற்படுத்த, அடித்து பிடித்து வெளியே வந்தவன், 'ஐயோ! உமா சொன்னத நம்பாம போனோமே! அவ சொன்னத அப்பவே கேட்டிருக்கலாம்' என முதன்முறையாக வருந்தியவன் அப்படியே சரிந்து அமர்ந்தான்.
அவை அனைத்தும் நிமிட நேரத்துக்குள் நடந்து முடிந்ததுதான் வியப்பிலும் வியப்புக்குரியது.
அதற்குப்பின்னும் அந்த வீட்டில் குடியிருக்க அவன் ஒன்றும் பைத்தியமல்லவே!
அடுத்து அவர்கள் குடிவந்தது ஸ்வேதா வசிக்கும் போர்ஷனுக்கு பக்கத்து போர்ஷனில்தான்.
உமா மூலம் இதைக் கதையாகக் கேட்ட ஸ்வேதாவுக்கு அதை நேரில் சென்று ஆராய்ந்துபார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டானது.
அடுத்து வந்த நாட்களில் வசந்தியின் ஆவி குடியிருக்கும் அந்த வீட்டுக்குச் சிலர் குடி வருவதும் சில நாட்கள் கூட இருக்காமல் காலி செய்வதும் தொடர்ந்தது.
அந்த விஷயங்கள் பால் டிப்போ... மளிகைக் கடை... தண்ணீர் பிடிக்கும் குழாயடி என விவாத பொருளாகிப்போக ஸ்வேதாவுக்கு அதைத் தொடர்வது ஒரு பொழுதுபோக்காகிப் போனது.
மேலும் அந்த வசந்தி மேல் அவளுக்கு அப்படி ஒரு பரிதாபம்.
ஆனால் ஸ்வேதாவின் அம்மாவோ, "இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.
உமாவுக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை.அவள் கதை கட்டிவிட்டதால் அங்கே குடியிருக்க எல்லாரும் பயப்படறாங்க! இனிமேல் இதைப்பத்தி பேசாத" என மகளை கண்டித்துவைத்தார்.
வசந்தி என்பவள் கதையோ அல்லது நிஜமோ மேற்கொண்டு அவளைப் பற்றி ஆராய நேரமில்லாமல் நாட்கள் ரக்கை கட்டிக்கொண்டு பறக்க, ஸ்வேதாவும் சித்ராவும் பள்ளிப்படிப்பை முடித்தனர்.
மேற்கொண்டு படிக்கவைக்காமல் சித்ராவை, மாம்பலத்திலேயே வசிக்கும் அவளுடைய அத்தை மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.
ஸ்வேதாவின் வாழ்க்கையோ மேற்படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைகள் என ஒரு சீராகச் சென்றது.
ஸ்வேதா அவளுடைய கணவரின் வேலை நிமித்தம் இந்தியத் தலைநகரத்தில் குடியேறியிருக்க, விடுமுறை சமயங்களில் பிறந்த வீட்டிற்கு வரும் சமயம் தவறாமல் சித்ராவை சந்தித்துவிட்டுப் போவாள்.
மேலும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் சித்ராவின் நட்பைத் தொடர்ந்த ஸ்வேதாவுக்கு வசந்தி என்பவள் நினைவை விட்டே அகன்றிருந்தாள்.
2020... மேற்கு மாம்பலம்...
சித்ராவின் மகளுடைய திருமணத்திற்காக மாம்பலம் வந்திருந்தாள் ஸ்வேதா.
தன பிள்ளைகள் இருவரும் பள்ளிப் படிப்பிலிருக்க, தன தோழியின் மகளுக்குத் திருமணம் என்பது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
நேராக பிறந்த வீட்டிற்கு வந்தவள், பெற்றோரையும் தம்பியின் குடும்பத்தையும் சந்தித்துவிட்டு திருமண மண்டபத்திற்கு வந்திருந்தாள்.
மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருந்த சென்ட்ரலைஸ்ட் ஏ.சியுடன் கூடிய அந்த திருமண்டபம் அவளைப் பெரிதும் கவர்ந்தது.
அவள் வந்ததை அறிந்து ஓடி வந்து அவளைத் தழுவிக்கொண்ட தோழியிடம், "சூப்பர்டி சித்து! மாமியாராக போற" என மகிழ்ந்தவள், அவளுடன் அந்த மண்டபத்திற்குள் நுழைத்தாள்.
உணவு உபசரிப்புக்குப் பின் விருந்தினருக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகளுக்குள் ஒன்றிற்கு அவளை அழைத்துப்போன சித்ரா, "நாலு மணிக்குத்தாண்டி நிச்சயதார்த்தம்.
நீ மூணு மணிக்கு ரெடியாகி வந்தால் போதும்!
அதுவரைக்கும் இங்கேயே ரெஸ்ட் எடு" என்றவள், "இங்கதான் ஜுவெல்ஸ் எல்லாம் இருக்கு!
உள்ள லாக் பண்ணிக்கோ" என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
தொலைதூர பயணத்தால் சோர்ந்திருந்தவள் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு தோழிக்கு எதாவது உதவலாம் என்ற எண்ணத்தில் அங்கே இருந்த கட்டிலில் படுத்துக்கொண்டு சற்று கண் அயர, சில நிமிடங்கள் கடந்த நிலையில் யாரோ தலையில் தட்டுவதுபோல் தோன்றத் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.
அருகில் எதோ பொசுங்கும் வாடை வரக் கூடவே அழுகுரலும் கேட்கவும் பயந்தே போனாள் ஸ்வேதா.
"யார்... யாரது?" என ஸ்வேதா பயத்துடன் கேட்க, "அக்கா... பயப்படாதக்கா; என் பேரு வசந்தி" என்ற பெண்ணின் குரல் மட்டுமே கேட்டது.
ஆம் அந்த வீடு இடிக்கப்பட்டு அங்கே கட்டப்பட்டிருந்த திருமண மண்டபம்தான் அது!
முற்றும்
Comments