top of page

என் இனிய இன்பனே 9


பத்து வருடங்களுக்கு முன்பு!

பிரேக் அப்!

காதல் முறிவு!

சொல்வதற்கு எவ்வளவு எளிதோ அதனை கடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல உண்மையாய் காதலித்தவர்களுக்கு! உயிரற்று வெற்றுடலாய் வாழும் நிலை அது! அத்தகைய நிலையில் தான் இருந்தார்கள் இன்பாவும் நங்கையும்‌. "நான் தவறானவனை காதலிச்சு வாழ்க்கைல தவறான முடிவை எடுத்துட்டேன்! அதுக்கான தண்டனையாக இந்த வலியையும் வேதனையும் அனுபவிக்கிறேன்" எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சுந்தரராஜனின் நட்பான அரவணைப்புடனும் உதவியுடனும் இவ்வலியினை கடந்து வர நங்கை பழகிக்கொண்டிருந்த நாட்களில் தனிமையை துணையாக்கி மனவலியின் உயர்நிலையில் இருந்தான் இன்பா. ஒவ்வொரு நொடியும் ரசித்து சுகித்து சுவாசித்து, எண்ணற்ற வருங்கால கனவுகளுடன் விருட்சமாக தான் வளர்த்திருந்த தனது முதல் காதலை, மனம் எங்கிலும் அவளை நிரப்பி கண்ணின் மணியாய் பிரியமாய் நேசித்தவளை, தானே அவமதிப்பாய் பேசி, தன்னை அவளை வெறுக்கச்செய்து பிரியச்செய்த அவனின் செயலே அவனுக்கு ரணவலியை அளித்திருந்தது. தன்னைத் தானே தவறானவனாக அவளிடம் வெளிப்படுத்திக் கொண்டு ஒதுங்கி போக அச்சூழலை பயன்படுத்திக் கொண்டவனின் மனமோ, அடுத்து வந்த நாட்களில் அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்டு மீண்டும் அவளுடன் இணைந்திட துடித்தது‌. பிரிவிற்கான வலியும், இணைவிற்காக ஏக்கமுமென இரண்டுக்குமிடையில் மனத்துடன் போராடி தத்தளித்துக் கொண்டிருந்தான் இன்பா. எங்கே தான் இங்கேயே இருந்தால், தானே நங்கையிடம் சென்று பேசியவைக்காக மன்னிப்புக் கேட்டு அவளது காதலை வேண்டி சரணடைந்திடுவோமோ என்று பயம் கொண்ட இன்பா, சென்னைக்கு பணியிட மாற்றம் கிடைத்த பின்னும், அங்கே இருக்காது புனேவில் இருந்த பிராஜக்ட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்குச் சென்று விட்டான். அங்கு ஒற்றை படுக்கை கொண்ட அறையில் தனிமையில் வாழ தன்னை தயார்படுத்திக் கொண்டான். எவரிடமும் பேச விரும்பவில்லை அவன். தனது செயலுக்கான காரணத்தை எவரிடமும் விளக்கவும் விரும்பவில்லை அவன். தனது வாழ்வின் இன்பமான நாட்களை தொலைத்து துயரமான நினைவுகளாய் அதை நெஞ்சில் தேக்கி வலியுடன் வாழ பழகி கொண்டிருந்தான் இன்பா. அடுத்து வந்த நாட்களில் இன்பாவின் வாழ்வில் தனிமையும் மனவலியும் ஓயாத உழைப்பும் மட்டுமே நிரம்பியிருந்தன. தன்னை முழுமையாக பணிச்சூழலுக்குள் புகுத்தி, ஓய்வில்லாது பணியில் ஆட்படுத்திக் கொண்ட போதிலும், இரவின் தனிமை அவனது தலையணையை நனைந்திருந்தது. தாயின் செயலினால் தான் எடுத்த முடிவும் அதன் தாக்கமும் அவனைத் தனது இல்லத்தை விட்டுப் பிரிய செய்திருந்தது. புனேவிற்கு சென்றவன் அடுத்த ஆறு மாதங்களுக்கு வீட்டிற்கு செல்லாதிருந்தான். இன்பா புனே சென்று ஏழு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் அவனது அண்ணன் தூயவன் அவனுக்கு அழைத்து அந்த வாரயிறுதி நாளில் தந்தையை மருத்துவமனைக்கு மாதாந்திர பரிசோதனைக்காக இன்பா தான் அழைத்து செல்ல வேண்டுமெனவும், தான் அலுவல் காரணமாக சில மாதங்கள் வெளியூருக்கு செல்வதால் தன்னால் அழைத்து செல்ல இயலாதெனவும் கூறி இன்பாவை வற்புறுத்தி வீட்டிற்கு வர பணித்தான் தூயவன். காஞ்சிபுரம் தான் இன்பாவின் சொந்த ஊர். அங்கு அவர்களின் பரம்பரை இல்லத்தில் வசித்து வந்தனர் அவனது பெற்றோர். இன்பாவின் தந்தை அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி ஓய்வுப் பெற்றிருந்தார். இன்பாவின் அண்ணன் தூயவனும் அவனது காதல் மனைவி திவ்யாவும் சென்னை சோலிங்கநல்லூரில் வீடெடுத்து தங்கி ஐடியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் தூயவனுக்கு பெங்களூரில் சில மாதங்கள் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்க, பெற்றோரை பேணி காக்கும் கடமையை தம்பியிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தான் அவன்‌. அண்ணனின் வற்புறுத்தலுக்காகவும் தந்தையின் நலனை கருத்தில் கொண்டும் தங்களது சொந்த ஊரான காஞ்சிபுரம் நோக்கி பயணப்பட்டான் இன்பா. காஞ்சிபுரத்தில் பழங்கால கட்டமைப்பின்படி ஓடு வேய்ந்த கூரையும் அதன் மேல் மச்சியுமென சற்று பிரமாண்டமாக இருந்த அந்த வீட்டின் இரும்பு கதவினை தாண்டி சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான் இன்பா‌. கதவை திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த இன்பாவின் கண்கள் இடுங்கி புருவங்கள் நெறிந்தன. தாவணியில் நின்றிருந்த அந்த பெண்ணைப் பார்த்து 'இது தனது வீடு தானா' என்று ஐயங்கொண்டு மீண்டுமாய் கண்களைச் சுற்றி ஓட்டினான் இன்பா. "யாரு நீங்க? யாரைப் பார்க்கனும்?" என்று அப்பெண் கேட்டதும், "இது.. இது பூர்ணம் கந்தசாமி வீடு தானே" என்று தயங்கியவாறு கேட்டவனாய் அப்பெண்ணை தாண்டி வீட்டினுள் சென்றது அவனின் பார்வை. "ஆமா அவங்க வீடு தான். அவங்களை பார்க்க வந்தீங்களா? உள்ள வாங்க!" என்றுரைத்து வழியை விட்டு அவள் தள்ளி நிற்கவும், 'வீட்டு வேலைக்கு அம்மாவை கவனிச்சிக்க வந்த பொண்ணா இருக்குமோ' என்று மனதோடு எண்ணியவனாய் உள்ளே நுழைந்தவனை, தரைத்தளத்தில் தனது அறையிலிருந்து வெளியே வந்த அவனது அன்னை பூர்ணம் பார்த்த நொடி, "இன்பா" என்று அவனை நோக்கி சற்று விரைவாக வந்தவராய், "நல்லாயிருக்கியாடா?" கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க மகனின் முகத்தை கையால் வருடியவாறு கேட்டார். 'ஓ இவர் தான் இந்த வீட்டோட இரண்டாவது மகன் இன்பாவா?' என்று மனதோடு நினைத்தவாறு நின்ற அந்தத் தாவணிப்பெண், 'அவர்கள் வீட்டு பேச்சினில் நாம் தலையிடக்கூடாது' என்று எண்ணியவளாய் மாடி படியேறிச் சென்றாள். பூர்ணத்தின் குரலைக் கேட்டு மற்றொரு அறையிலிருந்து அவனின் தந்தை கந்தசாமி வெளியே வர, இன்னொரு அறையிலிருந்து வெளியே வந்தாள் தூயவனின் மனைவி திவ்யா. தாயின் கைகளை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்தவனாய் தனது வெறுப்பை முகத்திலேயே காண்பித்தவன் தந்தையிடம் சென்று, "எப்படி இருக்கீங்கப்பா?" எனக் கேட்டான். மகனின் இந்தச் செயலில் கண்கள் சிவப்பேற இன்பாவின் அருகே வந்த பூர்ணம், "இன்னும் அந்த பொண்ணை நினைச்சிட்டு தான் எங்களை பார்க்காம இருந்தியோ? அதனால தானே என்னை இப்படி அலட்சியப்படுத்திட்டு போற!" எனக் கேட்டார். இன்பாவின் தாடை இறுக கோபமாய் வாயை திறக்க முனைந்த நேரம், "பூர்ணம் அவனே இப்ப தான் மனசு இறங்கி ஊர்ல இருந்து வந்திருக்கான்! ஏதாவது பேசி திரும்பவும் அவனை அனுப்பிடாத?" என்று மனைவியை அதட்டியவர், மகனின் கைகளை பற்றியவராய், "ஏன்ப்பா இப்படி இளைச்சி போய்ட்ட? பாதி ஆளா வந்து நிக்குறியேயா! எப்பவும் துள்ளலும் துடிப்புமா இருப்பியே! முகமே களையிழந்து இறுகி போயிருக்கியேப்பா! அப்பா உனக்காக ஏதாவது செஞ்சிருக்க வேண்டிய நேரத்துல போய் படுத்துட்டேன்ல" எனக் கேட்டுக் கண் கலங்கினார். "ப்பாஆஆஆ என்னப்பா பேச்சு இது!" தந்தையை அவன் அதட்டிய அதே நேரம், "ஓஹோ நல்லா இருந்திருந்தீங்கனா அந்த பொண்ணை கட்டி வச்சிருந்திருப்பீங்களா! ஏற்கனவே ஒருத்தன் என் பேச்சை கேட்காம ஒருத்தியை கூட்டிட்டு வந்துட்டானேனு அம்மாவா இவனை நான் என் விருப்பப்படி நடக்க சொன்னது எப்படி தப்பா போகும். அதுக்கு நீங்களும் ஒத்து ஊதி பேசுறீங்களே" என்று ஆதங்கமாய் கேட்டு முறைத்திருந்தார் பூர்ணம். "ஏன் அத்தை இன்னும் எத்தனை நாள் என் புருஷன் உங்க பேச்சை கேட்காம என்னை கட்டிக்கிட்டாருனு போறவாங்க வாராவங்ககிட்டலாம் சொல்லிட்டு இருப்பீங்க" திவ்யா சற்று கோபத்துடனேயே கேட்க, "இல்லமா! ஒரு கல்யாணம் தான் சண்டையும் சச்சரவுமா நடந்துச்சு! இன்னொன்னாவது எங்க விருப்பப்படி நடக்கனும்னு தான் சொல்றேன். மத்தபடி நான் உன்னை ஒன்னும் குறை சொல்லலியே! எங்க வாரிசை சுமக்கிறவ இப்படி டென்ஷன் ஆகலாமா! உடம்புக்கு ஏதானும் வந்துட போகுது. நீ போய் ரெஸ்ட் எடு" என்று திவ்யாவிடம் இணக்கமாக பதிலளித்த அம்மாவை அதிர்ந்து பார்த்தான் இன்பா. தனது காதலுக்காக எட்டு வருடங்கள் போராடிய அண்ணன் தூயவன் பெற்றோரிடம் கூறாமல் அண்ணியை மணம் முடித்து வீட்டிற்கு வந்த அன்று, "நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணா இருந்தா இப்படி ஓடி போய் கல்யாணம் செய்துட்டு வந்திருப்பியா? இப்படிப்பட்ட குடும்ப பொண்ணுலாம் நமக்கு வேண்டாம்னு தானே தலையிலே அடிச்சிக்கிட்டேன் தூயவா?" என்று அண்ணியை அன்னை கேட்டதும், "அப்ப என் கூட ஓடி வந்து என்னை கட்டிக்கிட்ட உங்க பையன் மட்டும் எப்படி நல்ல குடும்பத்து பையனா இருக்க முடியும்" என திவ்யா பேசியதும், இருவருக்குமான வாக்குவாதம் சண்டையாகி நீண்டு அண்ணன் அண்ணியை அழைத்துக் கொண்டு அண்ணியின் வீட்டிற்கே சென்று தங்கி கொண்டதும், "என் பையன் இப்படி நம்ம கை விட்டு போய் வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டானே" என்று அம்மா கதறி அழுததும் என அனைத்து நிகழ்வுகளும் வரிசையாய் இன்பாவின் மனக்கண் முன் நிழலாடிட, இந்நிகழ்வுகளின் தாக்கத்தினால் தானே, தனது அன்னை அன்று தனது காதலை பற்றிய அறிந்ததும் சாவப்போவதாக தன்னை அச்சுறுத்தி தன்னிடம் வாக்குறுதி வாங்கினார். இன்று குடும்ப வாரிசை சுமந்ததும் அதே அண்ணியுடன் பாசமாய் பேசும் இவரை நம்பி என் நங்கையை விட்டு வந்தேனே எனத் தலையிலேயே அடித்துக் கொண்டான் இன்பா. மூடன் நான்! கூறுகெட்டவன் நான்! உணர்ச்சிகரமான முட்டாள் நான்! தாயை நம்பி ஏமாந்த தனையன் நான்! உள்ளம் எல்லாம் காந்தியது அவனுக்கு. தனது கன்னத்திலே தானே மாறி மாறி அடித்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றியது அவனுக்கு. பூர்ணத்தை அதிர்ந்து நோக்கியவாறு தலையில் அடித்துக் கொண்ட இன்பாவை கண்ட கந்தசாமி, அவனருகில் வந்து தலை கோதியவராய், "எங்களை மன்னிச்சிடுடா இன்பா?" என்றார். தந்தையின் கைகளை பற்றியவனாய், "மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்னப்பா தப்பு செஞ்சீங்க! செஞ்சவங்களுக்கு தானே மனசு உறுத்தனும்" என்றவனாய் அன்னையை முறைத்தான். "நான் என்ன செஞ்சிட்டேன்னு என்னை குத்தி பேசிட்டு இருக்க நீ! உன் நல்லதுக்கு தானே நான் சொன்னேன். உனக்கு ஏத்த நல்ல பொண்ணா பார்க்க வேண்டியது எங்க பொறுப்பு. அதை நாங்க சரியா செய்வோம்" என்றார் பூர்ணம்‌. "என் வாழ்க்கையை உங்களை நம்பி பணயம் வைக்கிற தெம்பு என் மனசுக்கு இல்லை! எனக்கு கல்யாணமே வேண்டாம்! ஆளை விடுங்க சாமி" விரக்தியோடு கைகளை தூக்கி கும்பிட்டவனாய் உரைத்தவன் தனது அறை நோக்கி செல்ல மாடியில் ஏற, "இன்பா மாடில ஒரு அறையை கொஞ்சம் எடுத்துக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கோம்ப்பா! பக்கத்துல இருக்க சிங்கிள் ரூம்மை உனக்கு அரேஞ்ச் செஞ்சி வச்சிருக்கோம். அதுல தங்கிக்கோப்பா" என்றவராய் அவனிடம் சாவியை வழங்கினார் கந்தசாமி. விறுவிறுவென மாடிப்படியில் ஏறி மேலே சென்றவன் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டினைக் கடந்துச் சென்று தனக்கு அளித்திருக்கும் ஒற்றை அறையின் கதவினை திறந்தான். வீட்டிற்குள் சென்று கோபத்துடன் தோள் பையை தூர வீசியவன், அந்த அறையின் பின்னே இருந்த கதவை திறந்து பால்கனிக்கு சென்று கைகளைக் கட்டிக்கொண்டு மேகம் சூழ்ந்த வானத்தை வெறித்தான் இன்பா. ஓ என ஓலமிட்டுக் கொண்டிருந்த மனத்தை அடக்கும் வழி தெரியாது முகத்தோடு அடித்து வீசிய காற்றினாலும் ஆற்ற முடியாத மனத்தின் ரணத்தை தனக்குள் விழுங்க முயன்று கொண்டிருந்தான் இன்பா. நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு பக்கத்து அறையிலிருந்து காற்றோடு கலந்து வந்த ரட்சகனின் பாடல் கூட அவனை ரட்சிக்க மறந்து காயத்தை கிளறி வலியை கூட்ட, சிவந்த விழியுடன் வானை வெறித்தவனின் முகத்தினில் தெறித்து விழுந்தது மழைத்துளி. சரசரவென சாரலாய் வான்மழை தூவி அவனின் முகத்தை நனைக்க, சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாக பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ பக்கத்து பால்கனியில் இந்த பாடலை பாடியவாறு காய்ந்து நனைய தொடங்கியிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் அந்த தாவணிப்பெண்‌. அவளது குரலின் ஓசையில் அவனின் பார்வை அப்பெண்ணை தீண்ட, காற்றின் இசைவுடன் அசைந்த தனது முன் நெற்றி முடிகளை ஒதுக்கியவாறு திரும்பியவளாய் இன்பாவை பார்த்தாள் அவள். 'அய்யோ நான் பாடியதை கேட்டிருப்பாரா?' மனதோடு பேசியவாறு நாக்கை கடித்தவளாய், அவனை நோக்கி அசட்டுப் புன்னகை சிந்த, "சிந்து" என்று வீட்டினுள் இருந்து வந்த அழைப்பில், "இதோ வரேன் அத்தை" என்றவாறு அறைக்குள் சென்றிருந்தாள் சிந்து. மீண்டுமாய் தனது பார்வையை மேகத்தை நோக்கி நகர்த்தியவனாய் சாரலாய் இருந்து பெருந்தூரலாய் பெருகிய மழையில் மனத்தின் வெம்மை தீர முகத்தை நனைத்த வண்ணம் நின்றிருந்தான் இன்பா.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page