என் இனிய இன்பனே 8
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரிப்பிடத்தில் சுரேந்தருடன் நின்றிருந்தான் இன்பா.
சுரேந்தரை வழியனுப்ப அவருடன் பேசியவாறே கீழே வந்திருந்தான் இன்பா.
சுரேந்தர் தனது மகிழுந்தின் அருகில் வந்து நின்று இன்பாவின் கையைப்பற்றினார்.
அவனது உள்ளங்கையில் உணர்ந்த சில்லிப்பில், "என்ன இன்பா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி படபடப்பா இருக்க?" எனக் கேட்டார்.
சுரேந்தரின் மீது பெரும் மரியாதையும் அன்பும் ஏற்பட்டிருந்த காரணத்தினால் தனது மனதிலுள்ளதை வெளிப்படையாக உரைக்க முன் வந்தான் இன்பா.
"அங்கிள்..." அவரின் முகத்தைப் பார்த்தவாறு தயங்கி அவன் நிறுத்த,
"சிந்துகிட்ட உங்க முன் காதலை பத்தி இதுவரைக்கும் எதுவும் சொல்லலையா இன்பா?" சரியாக விஷயத்தைக் குறிப்பிட்டு அவர் கேட்டதும்,
"அங்கிள்" ஆச்சரியமான பார்வையுடன் விளித்தான் அவன்.
"அங்கிள் உங்களுக்கு எப்படித் தெரியும்?" தயங்கியவாறு கேட்டான்.
"சிந்து என்கிட்ட இயல்பாகச் சிரிச்சி பேசினாலும் அவங்க கண்ணுல வெளில வரவானு உள்ளேயும் வெளியேயும் ஆட்டம் காட்டிட்டு இருந்த கண்ணீரும், உங்களை அவங்க முறைப்பாய் பார்த்த பார்வையும் என்னமோ சரியில்லைனு தோணுச்சு. நங்கையைப் பத்தி பேசாம சிந்து தவிர்த்து அன்னத்தைப் பத்தி மட்டுமே பேசினதுல தான் சந்தேகம் வந்துச்சு" என்றவர் சொன்னதும்,
"ஆமா அங்கிள்! நான் இது வரைக்கும் சொன்னதில்லை. தெரிஞ்சா எப்படி எடுத்துப்பாளோனு பயந்து சொல்லாமலே விட்டுட்டேன்" என்றவனாய் தலை தாழ்த்தினான்.
"தப்பு இன்பா! நங்கைக்குக் கல்யாணம் ஆக லேட் ஆன காரணமே அவளுக்கு ஏற்கனவே லவ் ஃபெயிலியர் இருக்குனு பார்க்கிற மாபிள்ளை எல்லார்கிட்டயும் அவ சொன்னது தான். அடுத்து ஒரு பையன் கூடக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி நின்னதையும் எல்லார்கிட்டயும் சொன்னா! நாளைப்பின்ன இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சி அவரை நான் ஏமாத்திட்டதா சொன்னா என்னால் தாங்கிக்க முடியாதுப்பா! என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி சரின்னு சொல்லி யாராவது என்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா கட்டிக்கிறேன் இல்லனா இப்படியே இருந்துடுறேன்ப்பானு சொல்லிட்டா! ஏதோ கடவுள் அருளால சுந்தரே அவளை விரும்பி கல்யாணம் செஞ்சிக்கிட்டான். இல்லனா அவ வாழ்க்கை என்னாகிருக்குமோ!" என்று அன்றைய நாள்களின் நினைவில் பெருமூச்சு விட்டார்.
"இதைப் பத்தி திரும்ப திரும்ப உங்ககிட்ட பேச கூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனாலும் மனசை அரிச்சிக்கிட்டு இருக்கிற இந்த விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியலை. நீங்க உங்க வாழ்க்கைல எடுத்த தவறான ஒரு முடிவு என் பொண்ணோட வாழ்க்கையையும் எப்படிப் பாதிச்சிருக்குனு உங்களுக்குப் புரியனும்னு தான் சொல்றேன்"
"காதலிக்கிறது தப்பில்லை இன்பா! ஆனா தன்னோட குடும்பச் சூழலை புரிஞ்சி தெரிஞ்சி காதலிக்கனும். உங்க வீட்டுல ஏற்கனவே பல வருஷமா உங்க அண்ணனோட காதலை ஏத்துக்காம இருந்த நிலைல நீங்க நங்கையைக் காதலிச்சது தான் உங்க வாழ்க்கைல நீங்க செஞ்ச மிகப்பெரிய தப்பு! அந்த வயசுல எல்லாரும் ஈசியா உணர்வுக்கு ஆட்பட்டு எடுக்கும் முடிவு தான் இந்தக் காதல். இதை மட்டும் கொஞ்சம் அறிவு வச்சி கையாண்டு தள்ளி வச்சிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும். என் பொண்ணு மேலயும் தப்பு இருக்கு. நம்ம வாழ்க்கைல தேவையில்லாம பிரச்சனை ஏற்படுத்தும்னு நினைக்கிற எந்த ஒரு விஷயத்தையும் வாழ்க்கைக்குள்ள வரவே விட்டுட கூடாது இன்பா. அப்பா அம்மாவே சொன்ன பொண்ணோ பையனோவாவே இருந்தாலும் அவங்களைக் கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்காதுனு தோணுச்சுனா அந்தக் கல்யாணத்தை ஒத்துக்கக் கூடாது. காதலும் கல்யாணமும் ஒருத்தரின் வாழ்க்கையை எப்படி வேணாலும் புரட்டிப் போடும். அதை மட்டும் சரியா அமைச்சிக்கிட்டா போதும். வாழ்க்கையின் பாதித் துயரம் குறைஞ்சிடும்"
"இப்பவும் உன் வாழ்க்கையைக் கிரிட்டிக்கல் ஆக்கிட்டு தான் இருக்க இன்பா. நம்மளை நம்பி வர பொண்ணுக்கிட்ட நம்மளை பத்தின எல்லா விஷயத்தையும் சொல்றது தான் நல்ல மனுஷனுக்கு அழகு இன்பா. இதுவே சிந்துக்கு இப்படி ஒரு காதல் இருந்து அது இப்ப இப்படித் திடீர்னு உங்களுக்குத் தெரிய வந்தா நீங்க என்ன நினைப்பீங்க? சிந்து உங்களை ஏமாத்திட்டதா தானே நினைப்பீங்க! இப்ப அவங்களும் அந்த மனநிலைல தான் இருப்பாங்க. அவங்க எவ்ளோ கோபப்பட்டாலும் பொறுமையா ஹேண்டில் செய்யுங்க. கோபப்படாதீங்க. முடிஞ்சா அவங்க கால்ல விழுந்துடுங்க. வேற வழியே இல்லை" என்று கூறி சிரித்தார் சுரேந்தர்.
முகத்தில் கலவரமிருந்தாலும் மெல்ல சிரித்தவனாய், "புரியுது அங்கிள். சிந்து இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை. அவ கோபத்தைத் தணிக்க என்னனாலும் செய்வேன்" என்றான்.
மென்னகை புரிந்தவராய், "ரொம்ப நல்ல பொண்ணு இன்பா. உங்க மேல இருக்கும் அவ்ளோ கோபத்திலும் என்கிட்ட உங்களை விட்டுக் கொடுக்காம பேசினாங்களே! சின்னச் சண்டைக்கே புருஷனை பலர் முன்னாடி அவமானப்படுத்துறவங்க மத்தியில நீங்க அவங்ககிட்ட சொல்லாம ஏமாத்திருக்கீங்கனு தெரிஞ்சும் என்கிட்ட உங்களைப் பத்தி உயர்வா பேசுறாங்கனா உங்க மரியாதைக்கு இழிவு வர மாதிரி என்னிக்கும் சிந்து எதுவும் செய்ய மாட்டாங்க. உங்களை அவ்ளோ காதலிக்கிறாங்க அவங்க. அவங்க பேச்சுலேயே அது தெரிஞ்சிது இன்பா. இந்தக் காலத்துல இப்படிப் பொண்ணு கிடைக்கிறதுக்குலாம் புண்ணியம் செஞ்சிருக்கனும். ராஜனுக்கு நங்கை மாதிரி இன்பாவுக்குச் சிந்து தான் சரியான ஜோடி" என்று அவனது கையைக் குலுக்கினார்.
"உங்க வார்த்தை ஏதோ ஒரு மாதிரி தெம்பை கொடுக்குது அங்கிள். சிந்து எப்படியும் என்னைப் புரிஞ்சிப்பானு நம்பிக்கையைக் கொடுக்குது. கண்டிப்பாக முடிஞ்சளவு பொறுமையா இருந்து என்னைப் புரிய வைக்கிறேன்" என்றவன்,
"நீங்க என்கிட்ட வா போன்னே உரிமையா பேசலாம் அங்கிள். ஏன் வாங்க போங்க வா போனு கலந்துக்கட்டி பேசுறீங்க?" எனக் கேட்டான்.
"அது முதல் தடவையாக ஒருத்தர்கிட்ட பேசும் போது வரும் குழப்பம். போகப் போக இன்னும் உரிமையாகவே பேச வந்துடும். எப்ப என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம எனக்கு நீ கால் பண்ணலாம் இன்பா" என்றவராய் தனது கைபேசி எண்ணை அவனுக்கு அளித்தார்.
"ஆல் த பெஸ்ட் மேன்" என்று விட்டு தனது மகிழுந்தை இயக்கியவாறு கிளம்பி சென்றார் சுரேந்தர்.
தடதடக்கும் மனத்துடன் சிந்துவிடம் எப்படிப் பேசுவது என்று மனதோடு ஒத்திகை செய்தவனாய் மாடிப்படியேறி தனது வீட்டினை அடைந்து உள்ளே நுழைந்தவனின் பார்வை சிந்துவை தேடியது.
சமையலறையில் காய்களை வெட்டிக் கொண்டிருந்தவளிடம் வந்து நின்றவன், சுவாசத்தை உள்ளிழுத்து விட்டவாறு மனத்தைத் திடப்படுத்தியவனாய், "சிந்து" என மென்மையாக அழைத்தான்.
"ஹ்ம்ம்" என்றவளின் கண்களில் இருந்து சரேலெனக் கண்ணீர் கீழிறங்கியது. சட்டெனக் கத்தியை வைத்திருந்த கையைக் கொண்டே புறங்கையால் கன்னத்தைத் துடைத்தவளாய்க் கோபமாகப் பட் பட்டெனக் காய்களை அவள் வெட்டிக் கொண்டிருக்க, அவளின் கைப்பற்றி வெட்டுவதை நிறுத்தினான் இன்பா.
கண்ணில் நீருடன் உக்கிரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் சிந்துஜா.
வாழ்வில் முதல் முறையாக அதீத பயத்தை உணர்ந்தான் இன்பா. ஆயினும் அவளின் கண்களை நேராகச் சந்தித்தவனாய்க் கையிலிருந்த கத்தியை வாங்கித் தள்ளி வைத்தவன் அவளின் உள்ளங்கையோடு தனது கையைக் கோர்த்துக் கொண்டான். கண்ணீரை மறைக்கக் குனிந்தவளின் கண்ணீர் உள்ளங்கையிலிருந்த அவனது கரத்தின் மீது பட்டு தெறித்தது.
"சிந்துமா அழாத பிளீஸ்!" என்று அவளை அணைக்க அவன் முற்பட,
"என்னைத் தொடாதீங்க" பின் வாங்கியவாறு கோபமாகக் கத்தியவளாய் சட்டெனத் தனது கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.
"சிந்து.. நான் சொல்றதை" என்று அவன் மீண்டுமாய் ஏதோ பேச வர,
தனது கையைக் காட்டி அவனது பேச்சை நிறுத்தியவள், "உங்ககிட்ட நான் இப்ப எதுவும் பேச விரும்பலை" அதீத ஆத்திரத்துடன் கத்தினாள்.
"சிந்துமா" அவளின் கோபத்தில் அதிர்ந்தவனாய் அவன் அழைக்க,
"கோபத்துல என்னை மீறி உங்களைக் காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்குப்பா! ப்ளீஸ் இப்ப எதுவும் பேச வேண்டாமே" தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழுகையின் விம்மலுடன் அவள் கூறவும், வேதனையுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான் இன்பா.
வரவேற்பறையில் இருந்தே சமையலறையைப் பார்ப்பது போல் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான் இன்பா.
'ஆண்டவா! இவளை சமாதானம் செய்ய ஒரு வழியைக் காண்பிங்களேன்' என மனதோடு புலம்பியவனாய் அவளையே பார்த்திருந்தான்.
மனம் கொதிநிலையில் இருந்தது சிந்துவிற்கு. எதையும் யோசிக்கக் கூடாது, நினைக்கக் கூடாது எனத் தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டவளாய் சமையலில் கவனத்தைக் குவித்துச் செய்து முடித்தவள், "யுகி! அப்பாவை சாப்பிட வரச் சொல்லு" என்றவளாய் உணவு மேஜையில் உணவினை எடுத்து வைத்தாள்.
அவளின் பார்வையிலேயே அமர்ந்திருப்பவனைக் கண்டு கொள்ளாது அவனிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்காகவே மகனிடம் உரைப்பது போல் சொன்னவளாய் அடுக்கி வைத்தாள்.
இவன் எழுந்து சென்று மகனை தூக்கி வந்து உணவு மேஜையில் அமர்ந்தான்.
"நீயும் உட்கார் சிந்து! சேர்ந்து சாப்பிடலாம்" என்று அவளுக்காக அவன் நாற்காலியை இழுத்துப்போட, "எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்று வாய்க்குள்ளேயே முனகியவாறு பரிமாறினாள் சிந்து.
"உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம். நீ சாப்பிட்டா தான் நான் சாப்பிடுவேன்" என்று கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவனுக்கு அவள் பரிமாறிய உணவுகள் தட்டில் அப்படியே இருக்க, இவளோ அவனது பேச்சே காதில் விழவில்லை என்பது போல், மகனுக்கு உணவை பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அமைதியாக மனைவியையும் மகனையும் பார்த்தவாறு இருந்தவன் பத்து நிமிடம் தாண்டியும் அவளிடம் இருந்து பதில் வராது போக, இருக்கையை விட்டு எழ முற்பட்ட சமயம், அவனின் கைப்பற்றி முறைத்தவளாய் அமருமாறு கண்களைக் காண்பித்தவள், தனக்கொரு தட்டினை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அவளுக்கான உணவை அவனே பரிமாற, அமைதியாகச் சாப்பிட்டாள் சிந்து.
அவள் பாத்திரங்களைக் கழுவி சமையலறையைச் சுத்தம் செய்து விட்டுப் படுக்கையறை சென்று பார்க்க, இன்பா மகனை தனது மார்பு மீது போட்டு உறங்க வைத்திருந்ததைப் பார்த்தவள் அப்படியே வரவேற்பறையின் சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.
இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை கண்களில் ஆறாய் பெருகி காதோடு வழிந்து மெத்தையை நனைத்துக் கொண்டிருந்தது.
அவளின் தலையை யாரோ வருடுவது போல் தோன்ற சட்டெனக் கண்களைத் திறந்து எழுந்தமர்ந்து மெத்தை அருகே நின்றிருந்த இன்பாவை எரிப்பது போல் பார்த்தாள்.
"சிந்து நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன் ப்ளீஸ்!" என்றவனாய் அவளின் அருகில் அமர்ந்தவன், "நீ என்னலாம் கேட்டனு கூட எனக்குத் தெரியலை" என்றவனாய் அவளைப் பார்த்தான்.
"ஏன் எதெல்லாம் கேட்டேன்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி பொய் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு பார்க்கிறீங்களா? இத்தனை நாளா என்னை அப்படித் தானே ஏமாத்தி வச்சிருக்கீங்க?" என்று கோபமாய்க் கேட்டாள் சிந்துஜா.
"சிந்து நான் எப்ப உன்னை ஏமாத்தினேன். கோபத்துல வாய்க்கு வந்ததைப் பேசாத! என்னோட முன்னால் காதலை சொல்லாம விட்டதைத் தவிர வேற என்ன தப்பு செஞ்சேன் நான்?" அவளின் பார்வையை நேராகச் சந்தித்தவனாய் கேட்டான்.
"உங்க அம்மாகிட்ட இத்தனை நாளா பேசாம இருக்கிறதுக்குக் காரணம் உங்க முதல் காதல்! எத்தனை தடவை கேட்டிருப்பேன்? எப்பவாவது சொன்னீங்களா? அன்னிக்கு என்கிட்டயே கேட்டு நங்கை நம்பர் வாங்கி எனக்குத் தெரியாம அவங்ககிட்ட பேச முயற்சி செஞ்சிருக்கீங்க! அது ஏமாத்துறது இல்லையா? என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு உங்களை நம்பி வாழ்ந்துட்டு இருந்த என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிருக்கீங்களே அது ஏமாத்துறது இல்லையா?" ஆக்ரோஷமாகக் கத்தியவள்,
அழுகையில் குரல் விம்ம தொடர்ந்தவளாய், "கேட்டேன்! ஒரு வார்த்தை விடாம எல்லாத்தையும் முழுசா கேட்டேன். எனக்குக் கிடைச்சிருக்க மாதிரி நல்ல புருஷன் யாருக்குமே கிடைச்சிருக்க மாட்டாங்கனு இறுமாப்போட இருந்தேன். ஆனா என்னை நீங்க முட்டாளா தானே நினைச்சி வச்சிருந்திருக்கீங்க! நீங்ங ஆட்டி வைக்கிற பொம்மை மாதிரி எல்லாத்துக்கும் மண்டை மண்டையை ஆட்டிட்டு இருந்திருக்கேன்" என்றவளாய் தேம்பி அழுதாள்.
அவளின் அழுகையில் நெஞ்சம் விம்ம, "நீ நினைக்கிற மாதிரி இல்லை சிந்து" 'எப்படி இவளுக்குச் சொல்லி புரிய வைப்பது' என்று தவித்துக் கொண்டிருந்தான் இன்பா.
"என்ன இல்லை? என்னைக் கட்டிக்கிட்ட பிறகு ஆறு மாசம் என்னைப் பார்க்க கூட வராம இருந்தீங்களே! அது முதல் காதல் நினைப்புல தான்னு இப்ப தானே தெரியுது. அப்ப கூட உங்க ஆபிஸ் வேலைன்னு நீங்க சொன்ன காரணத்தை நம்பி முட்டாளா தானே நான் இருந்திருக்கேன். உங்க அம்மா மட்டும் என்னைக் கொடுமைப்படுத்தாம நல்லா பார்த்துக்கிட்டு இருந்திருந்தாங்கனா என்னைக் கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்திருக்க மாட்டீங்க தானே"
அந்நாட்களில் அவனது மனநிலை அவ்வாறு தானே இருந்தது. இதற்கு அவன் என்னவென்று விளக்கம் அளிப்பான். அவளின் கேள்வியினில் முழி பிதுங்க அவளையே பார்த்திருந்தான் இன்பா.
"உங்க கூட வாழ ஆரம்பிச்சதுல இருந்து இது வரைக்கும் எனக்குனு யாரும் இல்லைனு நான் நினைச்சதே இல்லை. உங்களைக் கட்டிக்கிறதுக்கு முன்னாடி அப்பா அம்மாவை நினைக்காத நாளில்லை. ஆனா உங்க கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பிறகு அம்மா அப்பா இல்லாததை நான் குறையாகவே நினைச்சதில்லை!
ஆனா இப்ப உங்களை விட்டு உங்க பார்வையை விட்டு தூரமா எங்கேயாவது போய்டனும்னு நினைக்கும் போது, அப்படிப் போய்த் தங்கியிருக்கக் கூடப் போக்கிடம்னு எதுவும் இல்லாத அனாதையாகத் தானே இருக்கேன்னு தோணுது. மடி சாஞ்சி அழ அப்பா அம்மா வேணும்னு தோணுது" என்று அவள் மனதின் வலியோடு கண்ணீருடன் உரைத்த நொடி, அவளை இழுத்து தனது மார்போடு அணைத்திருந்தான் இன்பா.
அவளின் கண்ணீர் அவனது மார்பை நனைக்க, அவளின் கைகள் அவனது சட்டையை இறுக பற்றியிருந்தது.
கண்களில் சூழ்ந்த நீருடன், "ஏன்டி அப்படிச் சொல்ற! நான் சாகுற வரைக்கும் நீ அனாதை கிடையாது. நான் செத்த பிறகும் நீ சந்தோஷமா வாழுற அளவுக்கு எல்லாம் செஞ்சிட்டு தான் நான் சாவேன்!" உறுதியுடன் வந்த அவனது வார்த்தைகளில் கண்ணீர் துளிகளுடன் மார்பில் இருந்து நிமிர்ந்து அவனை நோக்கியவளாய் பட் பட்டென அவன் வாயிலேயே அடித்திருந்தாள் சிந்து.
பின்னர் அவனது அணைப்பிலிருந்து ஆவேசமாக விலகி எழுந்தவள் கோபமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
அவனிடமே ஆறுதல் தேடி நிற்கும் மானங்கெட்ட மனத்தினைத் தன் போக்கில் திட்டியபடி மெத்தையை ஆக்ரமித்திருந்த மகனின் வலது புறத்தில் சென்று படுத்துக் கொண்டாள்.
மகனின் முன்பு கண்டிப்பாக எதையும் பேச மாட்டான் என்ற நம்பிக்கையில் படுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளைப் பார்த்து பெருமூச்செறிந்தவனாய் மகனின் இடது புறத்தில் அவளின் முதுகை பார்த்தவாறு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான் இன்பா.
சுரேந்தரும் இன்பாவும் பேசியதெல்லாம் அவளின் மனம் மறுஒலிபரப்புச் செய்ய, "என்னை விட அவருக்கு முதல் காதல் தானே பெரிசா போச்சு. இல்லனா நங்கைகிட்ட பேச நினைச்சிருப்பாரா? அவருக்கு என் மேல காதலே இல்லையா?" அந்த எண்ணமே மனத்தைக் கத்தியால் கீறிய வலியை கொடுக்க, முதுகு குலுங்க அழுதிருந்தாள் சிந்து.
"எனக்குப் பேச வாய்ப்பே கொடுக்காம, நீயா ஒன்னு கற்பனை செஞ்சிட்டு உன்னை நீயே வருத்திக்காதம்மா" அவளின் முதுகு குலுக்கலில் அழுகையை உணர்ந்தவனாய் உரைத்தவன், "இப்போதைக்கு ஒன்னு மட்டும் மனசுல திடமாக வச்சிக்கோடா! இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி நீ மட்டும் தான்! என்னோட மொத்த காதலும் உனக்கு மட்டும் தான். அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு நிம்மதியா தூங்கு" அவளின் முதுகை பார்த்தவாறு உரைத்தான்.
அழுகை குறைந்து விசும்பலாய் தேய்ந்து சீரான மூச்சுடன் அவள் படுத்திருப்பதை முதுகின் அசைவு மூலம் உணர்ந்தவனாய் கண்களை மூடினான் இன்பா.
'இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி நீ மட்டும் தான்' கேட்டவளின் நினைவினில் பல நிகழ்வுகள் வந்து போயின.
'எந்த நிலையிலும் அவன் உன்னை விட்டுக்கொடுத்ததே இல்ல சிந்து! உன்னைக் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிட்டான் தானே. உன் மேல காதல் இல்லாமலா அதெல்லாம் செஞ்சான்' அந்நிகழ்வுகளின் தாக்கத்தில் மனசாட்சி அவனுக்காகப் பரிந்து வந்து பேச, அவளும் அவனும் முற்றிலும் எதிர்பாராது நடந்த அவர்களின் திருமண நாளுக்குப் பயணித்திருந்தது அவளின் நினைவு.
-- தொடரும்