top of page

என் இனிய இன்பனே 7

என் இனிய இன்பனே 7

இனி நங்கை என்ற பெண்ணை தனது வாழ்வில் சந்தித்ததையே மறந்து விட்டு வாழ வேண்டுமென சபதமெடுத்து வெகு பிரயத்தனப்பட்டு அதை கடைப்பிடித்திருப்பவனை விதி வலிய சென்று சுரேந்தர் என்பவரின் மூலமாக சோதனை செய்ய விழைந்தது.


எழுந்து நின்ற இன்பாவை பார்த்து, "ஏன் எழுந்துட்டீங்க? உட்காருங்க" என்றார் சுரேந்தர்.


அவனின் அதிர்ந்த தோற்றத்தினை கண்டும் காணாதவராய் இயல்பாய் பேசினார் சுரேந்தர்.


'நானே இனி நங்கையை பத்தி யோசிக்க கூடாதுனு முடிவோட இருக்கும் போது இவர் எதுக்கு இப்ப வந்திருக்காரு. ஒரு வேளை நான் நங்கை கிட்ட பேச முயற்சி செஞ்சதை இவர்கிட்ட சுந்தர் சொல்லிருப்பாரோ?' யோசனையுடன் அவர் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்தான் இன்பா.


"அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க இன்பா? அப்பாக்கு ஹார்ட் பிராப்ளம் இருந்துச்சுல! இப்ப சரியாகிடுச்சா?" எனக் கேட்டார்.


'இதெல்லாம் இவருக்கு ஞாபகம் இருக்கா?' ஆச்சரியமாக அவரை பார்த்தவனாய், "ஹீ இஸ் ஃபெர்பக்ட்லி ஃபைன் நௌ (அவர் இப்ப நல்லா இருக்காரு) அங்கிள்" என்றான்.


"உங்க அண்ணா எப்படி இருக்காங்க? உன் அண்ணனோட லவ் மேரேஜ்ஜை ஏத்துக்கிட்டாங்களா உங்க வீட்டுல?" எனக் கேட்டார்.


அவரின் கேள்விகள் அனைத்தும் அவர் தன்னையும் தான்‌ பேசியவைகளையும் துளியளவும் மறக்கவில்லை என்பதை பறைச்சாற்றியது அவனுக்கு.


"ஹ்ம்ம் ஆமா அங்கிள். இப்ப அவங்க கூட தான் அப்பா அம்மா இருக்காங்க" என்றான்.


தான் அவரின்‌ நலனை பற்றியோ அவரது குடும்பத்தினரை பற்றியோ கேட்க வேண்டுமென்ற நினைவே இல்லாமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் இன்பா.


"ஓ நைஸ் டு ஹியர் தட்! (கேட்கவே சந்தோஷமா இருக்கு)" என்றவரின் கண்கள் அந்த வரவேற்பறையினை சுற்றி சுழன்றன.


சுவரில், மகிழ்வுடன் மனைவியின் தோளின் மீது கையை போட்டவனாய் மறு கையில் மகனை தூக்கியவாறு இன்பமாய் காட்சியளித்த இன்பாவின் குடும்ப புகைப்படத்தினை பார்த்திருந்த சுரேந்தரின் விழிகளில் கனிவு குடிக்கொண்டது.


"ரொம்ப அழகான ஃபேமிலி போட்டோ இன்பா" என்றார் அவர்.


"தேங்க்ஸ் அங்கிள்" மென்னகையுடன் அவன் கூற,


"இன்பாக்கு வைஃப் மேல லவ் அதிகமோ?" எனக் கேட்டார்.


"ஆமா அங்கிள்! அவளும் மகனும் தான் என் வாழ்வின் ஆதாரமே அங்கிள்! சிந்து எனக்கு கிடைச்ச வரம். என்னை மீட்டெடுத்தவளே அவ தான்" தீர்க்கமான பார்வையுடன் திடமாகவே உரைத்தான்.


அவனின் பதிலில் நிம்மதியுடன் புன்னகைத்தவராய், "லவ் மேரேஜ்ஜா இன்பா?" எனக் கேட்டார்.


அவரின் கேள்வி அவனது நெஞ்சை சுருக்கென குத்தியது.

மலர் விட்டு மலர் தாவும் வண்டாய் தான் தன்னையும் தனது காதலையும் நினைத்து வைத்திருக்கிறாரா இவர்? அவரது மகளை காதலித்து குடும்பத்திற்காக வலிய வேண்டாமென ஒதுக்கியவன் வேறொருவளை எப்படி காதலித்திருப்பான் என்ற கேள்வியே வரவில்லையா அவருக்கு? பொழுதுபோக்கிற்காக அவரது மகளை காதலித்தேன் என்று எண்ணியிருந்தாரா?


'பின்னே நீ தான் அவர்கிட்ட பேசும் போதெல்லாம் அவர் பொண்ணை கட்டிப்பங்கிற நம்பிக்கையை கொடுக்கவேயில்லையே! இதுல உன்னோட காதலை காவிய காதல்னு போற்றி புகழுவாங்களா மிஸ்டர் இன்பா?' என்று அவனது மனசாட்சியே அவனை கேலியாய் கேள்வி கேட்டது.


இப்படி நங்கையை சார்ந்த அனைவரும் தன்னை இத்தனை கேவலமாய் நினைத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவனால். நெஞ்சில் நெருஞ்சி முள் தைத்த வலியை உணர்ந்தான்.


தான் அப்படி அல்ல என கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.


முகத்தில் படர்ந்த வேதனையை மறைத்து சிரிக்க முனைந்தவனாய்,


"இல்ல அங்கிள்! அம்மா பார்க்கிற பொண்ணை தான் கட்டிப்பேன்னு அம்மாக்கு கொடுத்த வாக்குனால தானே என் காதலையே கொன்னு என்னை விட்டு தள்ளி வச்சேன்" வருத்தக் குரலில் உரைத்தான் இன்பா.


திடுக்கிட்டது அவர் உள்ளம்.


அவனது வருத்தம் தோய்ந்த குரலும், வேதனையில் சுருங்கிய முகமும் அவரை திடுக்கிடச் செய்தது.


இன்னும் தனது மகளின் மீதான காதல் அவனுள் வாழ்ந்து கொண்டு தான்‌ இருக்கிறதா? அதனால் தான் மகளிடம் பேச முனைந்தானா? இது தனது மகளின் வாழ்வையே சிதைத்திடும் அல்லவா?


"இன்னும் அந்த காதல் உனக்குள்ள இருக்கா இன்பா? அதான் என் பொண்ணுக்கிட்ட பேச முயற்சி செஞ்சிட்டு இருக்கியா?" அமைதியாக கேட்க நினைத்து பதட்டமாக விழுந்தன அவரின் வார்த்தைகள்.


இல்லையென தலையசைத்தவனாய், "நானே கொன்ன என் காதல் இன்னும் உயிர்ப்போட எப்படி எனக்குள்ள இருக்கும்‌ அங்கிள். உயிரில்லாத நடை பிணமாக வாழ்ந்துட்டு இருந்தவனுக்கு உயிர் கொடுத்தவ என் சிந்து! இப்ப என் காதல் முழுக்க என் சிந்துவிற்கு மட்டும் தான்" அழுத்தமாய் விழுந்த அவன் வார்த்தைகளில் அத்தனை ஆசுவாசமாய் உணர்ந்தார் சுரேந்தர்.


இரவு சுந்தரின் கைபேசி பேச்சினை கேட்டதிலிருந்து மனத்தை அழுத்தியிருந்த பாரம் சட்டென மாயமாய் மறைந்து போனதாய் உணர்ந்தார் அவர். கண்களில் ஆசுவாசமும் உள்ளத்தில் ஆழ்ந்த அமைதியும் இதழில் புன்னகையும் பூத்தன.


மகளின் வாழ்வில் மீண்டும் நுழைந்து அவளின் நிம்மதியை குலைக்க வந்து விட்டானா இவன் என்ற பதட்டத்தில் அல்லவா சுந்தரராஜனிடம் கூட உரைக்காமல் அன்னத்திடம் பேசி இவனை பற்றி அறிந்து கொண்டு வந்திருக்கிறார். அவனின் இந்த திடமான வெளிப்படையான பேச்சில் மனம் சற்று ஆசுவாசமானாலும், சில விஷயங்கள் பற்றி அவனிடம் கேட்டுத் தெளிவுற நினைத்தார்.


"அப்புறம் ஏன் நல்லா இருக்க உன் வாழ்வை நீயே குழப்பிக்கிற இன்பா? என் பொண்ணு வாழ்க்கையும் சேர்த்துல நாசம் செய்ய பார்க்கிற" சற்று கோபமாகவே கேட்டிருந்தார்.


"அங்கிள்" என அவன் தொடங்கவும்,


"ஏன் என் பொண்ணுக்கிட்ட பேசனும்னு நினைக்கிற இன்பா?" நேரடியாகவே கேட்டார்.


"சுந்தர்கிட்ட பேசுற வரைக்கும் நங்கைகிட்ட எப்படியாவது பேசனும்னு தவிச்சிட்டு தான் இருந்தேன். ஆனா இப்ப அப்படி நினைக்கலை அங்கிள். நான் செஞ்ச தப்புக்கு வாழ்நாளுக்கும் இந்த குற்றயுணர்வுலேயே இருந்து செத்து போறேன். அது தான் நான் செஞ்ச பாவத்துக்கான தண்டனை. நான் செஞ்ச பாவம் என்னோட போகட்டும். அது என் பிள்ளையை பாதிச்சிட கூடாதுனு தான் என்னோட வேண்டுதல்" வேதனையுடன் உரைத்தவனை கனிவுடன் பார்த்தார் சுரேந்தர்.


"என் பொண்ணு வாழ்க்கைல நுழைஞ்சி அவளோட நிம்மதியான வாழ்க்கையை பாழாக்க வந்திருக்கீங்களானு கேட்க தான் வந்தேன் இன்பா. ஆனா நீங்களே என் பொண்ணோட நல்வாழ்வை யோசிக்கும் நல்லவராக இருக்கனால என்னோட கவலைலாம் காணாம போய்டுச்சு. இந்த மகிழ்ச்சியான மனநிலைல சொல்றேன். நீங்க நங்கைகிட்ட என்ன சொல்ல தவிச்சிட்டு இருக்கீங்களோ அதை என்கிட்ட சொல்லுங்க. அதை சொல்றனால உங்க மனப்பாரம் குறையும்னா உங்க குற்றவுணர்வுலருந்து வெளில வருவீங்கனா உங்க பாவம் தொலையும் நம்புறீங்கனா என்கிட்ட சொல்லுங்க இன்பா!" ஆதுரத்துடன் உரைத்தார் சுரேந்தர்.


சட்டென கண்களில் நீர் பெருக சுரேந்தர் முன்பு பாவமன்னிப்பு கேட்பவன் போல் மண்டியிட்டு அமர்ந்து அவரின் கைகளை பற்றிக் கொண்டான் இன்பா.


நெஞ்சம் படபடக்க பேச தொடங்கினான்.


"பெத்த அம்மா, நீ அவளை கட்டிக்கிட்டா நான் எரிச்சிக்கிட்டு செத்துடுவேன்னு சமையலறையை மூடிட்டு சிலிண்டரை ஓபன் செஞ்சிட்டு நிக்கும் போது ஒரு மகனா நான் என்ன செய்ய முடியும் அங்கிள்" கண்களில் நீர் வழிய கேட்டான் இன்பா.


நெஞ்சம் திடுக்கிட 'ஓ மை காட்' எனச் சத்தமில்லாமல் முணுமுணுத்தன சுரேந்தரின் உதடுகள்.


"நீங்க நங்கையை திட்டி அவ மேல பழி சுமத்தி உங்க வாழ்க்கையை விட்டு விரட்டினதுக்கு காரணம் உங்க அம்மாவா? உங்க அப்பா அம்மா ஒத்துக்காதனால நங்கையை அப்படி பேசினீங்கனு சுந்தர் சொல்லி கேள்விப்பட்டேன். ஆனா இந்தளவுக்கு உங்க அம்மா போனது எனக்கு தெரியாது இன்பா" அதிர்வுடன் கூறினார் சுரேந்தர்.


பெருமூச்செறிந்தவனாய்,

"அந்த நேரத்துல நீங்க சொல்ற பொண்ணை தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்மானு பிராமிஸ் செய்றது தவிர வேற வழி தெரியலை அங்கிள்! அம்மாவோட இந்த செயல்னால அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு! அப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து கொஞ்சம் நேரத்துல அம்மாக்கு பிபி ஏறி மயங்கி விழுந்துட்டாங்க. அண்ணாவை வர வழைச்சு அப்பா அம்மாவை பார்த்துக்கிட்டு இருந்ததுல, என் காதலுக்கு துரோகம் செய்ற நிலை வந்துடுச்சேனு நினைச்சு அழ கூட நேரமில்லாம மனசு மரத்து போன நிலைல இருந்தேன் அங்கிள். மூனு நாள்ல எல்லாம் நார்மல் ஆன பிறகு தான் பெங்களூர்ல நங்கை என்னோட பதிலுக்காக காத்துட்டு இருப்பானு நினைப்பு வந்துச்சு.

என்னை அவ்ளோ ஆவலோட ஊருக்கு பஸ் ஏத்தி அனுப்பி வச்சா! வரும் போது எங்க கல்யாண செய்தியோட வருவேன்னு ஆவலாக காத்துக்கிட்டு இருந்தவ, என்கிட்ட இருந்து எந்த தகவலும் வராம, நான் திங்கட்கிழமை ஆபிஸ்க்கும் வராம இருக்கவும் எனக்கு ஏதோ ஆக்சிடெண்ட் ஆகிப்போச்சுனு பயந்து பதறி விசாரிச்சிட்டு இருந்திருக்கா! பாவம் நான் இங்கே ஹஸ்பிட்டல்ல அல்லாடிட்டு இருந்தது அவளுக்கு தெரியாதுல. நான் அவளுக்கு சொல்லிருக்கனும். என்னோட நிலையை விளக்கி சொல்லிருக்கனும். அதுக்கு பதிலா என்னை விட்டு விலக்கி நிறுத்துறேன்னு அவளை தப்பா பேசிட்டேன்" என்று நிறுத்தியவனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது‌.


அன்றைய நாளின் வலியை இன்னும் பசுமையாய் அவன் மனத்தில் சுமந்து கொண்டிருப்பதை அவனது கண்ணீர் தெரிவித்தது.


அவனை எழுப்பி அமர வைத்த சுரேந்தர், "இதெல்லாம் நேரடியாகவே சொல்லி அவளை கல்யாணம் செஞ்சிக்க முடியாதுனு சொல்லிருக்கலாமே இன்பா. ஏன் அவ மேல அப்படி ஒரு பழியை போட்டு பேசின? அதை கடக்க முடியாம அவ பட்டப்பாடு தெரியுமா உனக்கு? இப்பவும் அன்னத்துக்கிட்ட யாரையும் காதலிச்சிடாத, அது உன் சந்தோஷத்தை பறிச்சி வாழ்க்கையை வெறுமையாக்கிடும்னு அட்வைஸ் செய்றானா எந்தளவுக்கு அவ கஷ்டப்பட்டிருப்பானு நினைச்சு பாருங்க இன்பா"


சுரேந்தரின் பேச்சில் அவரை அதிர்ந்து நோக்கியவனுக்கு, நங்கையின் மனத்தில் தனது காதல் ஏற்படுத்தியிருக்கும் காயத்தின் விளைவாக தான் அவள் அன்று விழாவில் தன்னிடம் அவ்வாறு பேசியிருக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது‌.


"என் பொண்ணு சுந்தரோட நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா! ஏன் இந்த சுந்தரை தான் முதல்லயே காதலிக்காமல் போய்ட்டோம்னு அவ சொல்லாத நாள் இல்லை இன்பா. வாழ்க்கைல முதல் முதலா காதல்ங்கிற பேர்ல அவ செலக்ட் செஞ்ச உங்களால அவ மனசுல காதலுக்கான அர்த்தமா காயங்களும் வலிகளும் வெறுமையும் தான் இருக்குனு சொல்ல வரேன்" தான் கூறிய வார்த்தைகளுக்கான விளக்கத்தினை அளித்தார் சுரேந்தர்.


"எனக்கும் சுந்தருக்கும் உங்க மேல இருக்க கோபம் எல்லாம் நீங்க அத்தனை பேருக்கு முன்னாடி நங்கையை சுந்தரோட சேர்த்து வச்சி தப்பா பேசினது மட்டும் தான்‌ இன்பா. உங்க வார்த்தையை கேட்டு அங்க ஆபிஸ்லயே நங்கையை ஒருத்தன் லிவ் இன் டுகதருக்கு வரியானு கேட்டது உங்களுக்கு தெரியுமா? இந்த வார்த்தைகளை கடந்து வர அவ பட்டப்பாடு உங்களுக்கு தெரியுமா? பல வருஷமா கல்யாணமே வேண்டாம்னு இருந்தா! அவ அம்மாக்காக அப்புறம் ஒருத்தனை கட்டிக்க சம்மதிச்சு தன்னை தயார்ப்படுத்திக்கிட்டு கல்யாணத்துக்காக காத்திருந்தவளுக்கு அவனோட இறப்பு செய்தி தான் வந்து சேர்ந்துச்சு. கல்யாணத்துக்காக ஆன்சைட்ல இருந்து இந்தியாவுக்கு வந்தவன் ஃபிளைட் ஆக்சிடெண்ட்ல பிணமாக தான் வந்து சேர்ந்தான். இந்த அதிர்ச்சியில அவ அம்மா போய் சேர்ந்துட்டா" ஆதங்கத்துடன் தன்னை மீறி ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார் சுரேந்தர்.


"என்னது ஆன்டி இறந்துட்டாங்களா? இவ்வளோ கஷ்டத்தை அனுபவிச்சாளா நங்கை" அவனது கண்ணீர் நின்று அதிர்ச்சியில் விரிந்தன கண்கள்.


"ஆமா இன்பா. ஆனா அவப்பட்ட கஷ்டமெல்லாம் போதும்னு தான் அவளை நல்லா தெரிஞ்சி கண்ணுல வச்சி பார்த்துக்கிற புருஷனை அவளுக்கு கொடுத்துட்டான் போல இறைவன். சுந்தரராஜன் என் பொண்ணுக்கு கிடைச்ச வரம்" சுந்தரின் நினைவில் மென்மையாய் மாறின அவரின் குரலும் முகமும்.


மீண்டுமாய் அவரின் முன் மண்டியிட்டு அமர்ந்தவனாய், "நங்கை என்னை புரிஞ்சிக்காம அன்னிக்கு ஃபங்ஷன்ல திட்டிட்டானு ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா நானும் அவ நிலைமையை புரிஞ்சிக்காம இருந்திருக்கேனேனு இப்ப கில்டி ஆகுது அங்கிள். அந்த நாளுக்கு பிறகு அவ இவ்வளோ கஷ்டப்பட்டிருப்பானு நான் நினைக்கலை அங்கிள். என்னோட பேச்சு அவளை இந்தளவுக்கு காயப்படுத்தி இருக்கும்னும் நினைக்கலை. என்னை அவ வெறுக்கனும்னு தான் அப்படி பேசினேன் அங்கிள். நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன். அதான் உங்ககிட்ட கூட மேரேஜ்கான ஹோப் கொடுத்து பேசலை. அப்ப கூட என்னை திட்டினாலும் எப்பவும் என்னை விட்டு போய்ட கூடாதுனு திடமா இருந்தா. என்னை விட எங்க காதல் மேல அவ தான் அவ்ளோ உறுதியாக இருந்தா. அதனால நான் என்ன காரணம் சொல்லி அவளை வேண்டாம்னு சொல்லிருந்தாலும் அவ என்னை விட்டு போய்ருக்க மாட்டா! என்னை வெறுக்குற அளவுக்கு நான் ஏதாவது செஞ்சா மட்டும் தான் அவ என்னை விட்டு போவானு என்ன சொல்லனு நான் யோசிச்சு மனசோட போராடிட்டு இருக்கும் போது, சரியா நங்கை வந்து கல்யாண செய்ய துப்பில்லாதவன்லாம் எதுக்குடா காதலிக்கிறனு வீட்டுக்கு வெளில நின்னு கத்தினா அங்கிள். ஏற்கனவே இருந்த மன உளைச்சல்ல அவளோட இந்த பேச்சு என் கோபத்தை தூண்டி விட்டிருச்சு. அப்ப இருந்த கோபக்கார இன்பா வேற ஆளு. அதுக்கு நான் கோபத்துல பேச அந்த நேரத்துல சரியா சுந்தர் வரவும், ராம் ஒரு தடவை என்கிட்ட நங்கை சுந்தரை லவ் செஞ்சி கழட்டி விட்டவனு சொன்னது ஞாபகம் வந்துச்சு. சுந்தரும் நங்கையும் எந்தளவுக்கு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னு எனக்கு தெரியும். ஆனாலும் அந்த சூழ்நிலைல நங்கை என்னை வெறுக்கனும்றதுக்காகவே அப்படி சொன்னேன். ராம் சொன்ன மாதிரி நான் இல்லைனு தெரிஞ்சதும் உன்னோட பழைய பாய் ஃபிரண்ட் கூட ஒட்டிக்கலாம்னு வர வச்சிட்டியானு கேட்டேன். அவளோட ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கும் எவ்ளோ தவறான வார்த்தை இதுனு தெரிஞ்சே தான் கேட்டேன். என் மனசை கொன்னுக்கிட்டு வலிக்க வலிக்க தான் அப்படி கேட்டேன். அப்ப ராஜன் என் கன்னத்துல அடிச்ச அடிலாம் வலிக்கவே இல்ல அங்கிள். நான் கேட்டப்பிறகு அவ என்னை பார்த்த பார்வை, என்னை காதலா அன்பா கோபமா கூட பார்த்திருந்த அந்த கண்கள், என்னை வெறுப்பா பார்த்துச்சு. அப்பவே என்னை யாராவது கொன்னுருந்தா கூட சந்தோஷமா செத்து போய்ருப்பேன். இப்பவும் அவ அதே போல என்னை வெறுப்பா பார்த்தப்ப தாங்கிக்க முடியலை அங்கிள்" கண்களில் நீர் வழிய மண்டியிட்டவாறு அவரின் மடியினில் தலை சாய்த்தவன் முதுகு குலுங்க அழுதிருந்தான்.


அவரின் கைகள் தானாக அவனின் தலைமுடியை கோத, விழிகளில் சூழ்ந்திருந்த நீருடன் அவரின் கைகளை பற்றியவனாய் அவரை பார்த்தவன், "எனக்கு மன்னிப்பு வேணும் அங்கிள். நான் பேசின அந்த வார்த்தைக்கு எனக்கு பாவ மன்னிப்பு வேணும் அங்கிள். என் பக்கம் நான் எவ்ளோ நியாயம் சொன்னாலும் சரி செய்ய முடியாத அந்த வார்த்தைக்கு மன்னிப்பு வேணும் அங்கிள். எனக்கு அந்த குற்றயுணர்வுல இருந்து வெளி வர மன்னிப்பு வேணும் அங்கிள்" என்றவனாய் மண்டியிட்டு பாவ மன்னிப்பு வேண்டி நின்றான் இன்பா.


"எப்ப ஒருத்தன் தான்‌ செஞ்ச தவறை தன்னோட வாயாலேயே தப்புனு சொல்லி அதுக்கான துயரத்தையும் ஏத்துக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கானோ அப்பவே அவன் ஆண்டவனின் பார்வையில் மன்னிக்கப்பட்டவன் தான் இன்பா. ஆண்டவனே உன்னை மன்னிச்ச பிறகு நாங்க யார் உன்னை மன்னிக்க!" என்றவராய் அவனின் தோள் பற்றி எழுந்து நிற்க செய்து அவனின் கண்ணீரை துடைந்து விட்டார்.


"மறந்துடுங்க இன்பா! உங்க வாழ்க்கைல இப்படி ஒன்னு நீங்க பேசினதையே மறந்துடுங்க. உங்க மேல எந்தவிதமான கோபமோ வருத்தமோ எனக்கு இப்ப இல்லை இன்பா. நிம்மதியா சந்தோஷமா நீங்க வாழனும். ஆனா என்னிக்கும் சுந்தர்கிட்டயும் நங்கைகிட்டயும் இந்த இளக்கத்தை எதிர்பார்க்காதீங்க. அவங்களோட கோபமும் ஆதங்கமும் நியாயமானது. ஒரு வேளை என் வயசு வரும் போது மனசுல ஏற்பட்டிருக்கும் பக்குவத்துல அவங்களும் உங்களை மன்னிக்கிற‌ மனநிலைக்கு வரலாம். ஆனால் இதையே நினைச்சு நீங்க இனியும் குற்றயுணர்வுல தவிக்க வேண்டாம். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க" என்று அவனது தோளை தட்டியவாறு உரைத்த நேரம் வாசல் கதவை திறந்து கொண்டு நுழைந்தாள் சிந்துஜா.


கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு புன்னகைத்தவளாய், அறையினுள் நுழைந்து கொண்டாள்.


'அய்யோ நாங்க பேசியதை கேட்டிருப்பாளா?' இன்பாவின் மனது இரயிலின் தண்டவாளமாய் தடதடத்துக் கொண்டிருக்க, "நான் கிளம்புறேன் இன்பா" என்று சுரேந்தர் கூறிய நொடி,

அறையிலிருந்து வெளியே வந்த சிந்துஜா, "இருங்கப்பா! நீங்க நங்கையோட அப்பா தானே! நான் நங்கையோட டிபில உங்க ஃபோட்டோவை பார்த்திருக்கேன். ஏன் வந்ததும் போறேன்னு சொல்றீங்க. இருங்க காபி சாப்பிட்டு போங்க" என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தவள் மீண்டுமாய் வந்து, "நீங்க காபி குடிப்பீங்க தானே? இல்ல ஜுஸ் ஏதாவது குடிக்கிறீங்களா?" எனச் சிரித்த முகமாய் கேட்டாள். அவள் முகத்தினை கழுவியிருந்ததற்கான அடையாளமாக முகத்தில் ஆங்காங்கே மிச்சமிருந்தன நீர் துளிகள்‌.


சிந்து அளித்த காபியை பருகியவாறு இன்பாவை பற்றியும் அன்னத்தை பற்றியும் சிந்துவிடம் அளவளாவிய சுரேந்தர் சிறிது நேரம் கழித்து கிளம்பியதும், சிந்துவிடம் வந்து நின்ற இன்பாவை எரித்து விடுவது போல் பார்த்தாள் சிந்துஜா.


'அய்யோ என்னலாம் கேட்டானு தெரியலையே!' அவளின் பார்வையில் வாழ்வில் முதல் முறையாக அதீத பயத்தை உணர்ந்தான் இன்பா.


தென்றல் புயலாக உருமாறிக் கொண்டிருந்த தருணம் அது.© KPN NOVELS COPY PROTECT
bottom of page