என் இனிய இன்பனே 6

தங்களை அலைபேசியில் அழைக்கவா என்ற சுந்தரின் குறுஞ்செய்தியை பார்த்த இன்பா அதிர்ந்து, என்ன கூறவென தெரியாது தடுமாற, "உங்க நம்பரை ஏற்கனவே அன்னம்கிட்ட நான் வாங்கிட்டேன். ஆர் யூ ஃப்ரீ நௌ? (இப்ப நீங்க ஃப்ரீயா?)" எனக் கேட்டான் சுந்தரராஜன்.
"யெஸ்" என மட்டும் இன்பா அனுப்பியிருக்க, உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விட்டான் சுந்தரராஜன்.
"ஹாய் இன்பா! எப்படி இருக்கீங்க?" என இயல்பாய் பேச்சை ஆரம்பித்தான் சுந்தரராஜன்.
இருவரும் பரஸ்பரம் அவரவர் வேலையை பற்றி பேசிய பிறகு,
"குட்" என்ற சுந்தர், "நம்ம நாட்டுல முக்கால்வாசி லவ் ஃபெய்லியர் பசங்க செய்ற தப்பை தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க இன்பா" என்றான்.
"சுந்தர், அது வந்து" என்று தயங்கியவாறே அவன் ஆரம்பிக்கவும்,
"உங்க மனைவிக்கு நீங்க இப்படி நடுராத்திரில வேறோரு பொண்ணுக்கிட்ட பேசுறது தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க" எனக் கேட்டான் ராஜன்.
"அய்யோ சுந்தர்! நான் அப்படிப்பட்ட ஆளு இல்லை. இப்ப தான் அன்னம் ஐடி மூலமாக நங்கை ஐடி கண்டுபிடிச்சேன். அதான் மெசேஜ் அனுப்பி வச்சா காலைல பார்த்துப்பானு நினைச்சு அனுப்பினேன். உடனே பார்த்து ரிப்ளை செய்யனும்னுலாம் நினைச்சு அனுப்பலை சுந்தர். நீங்களும் நங்கை மாதிரி என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கீங்களா?" என ஆதங்கமாய் கேட்டான் இன்பா.
"நீங்க தப்பானவரு இல்லை இன்பா. ஆனா நீங்க செஞ்சிட்டு இருக்கிறது தப்பானதுனு சொல்றேன்" என்றான் ராஜன்.
"இல்ல சுந்தர்! நங்கையை பார்த்ததுலருந்து மனசு வலிக்குது சுந்தர்! என்னை அவ பேசின பேச்சு, கேவலமா பார்த்த பார்வை அதெல்லாம் என் நெஞ்சை குத்தி கிழிக்குது சுந்தர்" வருத்தமான குரலில் உரைத்தவன் மேலும் தொடர்ந்தவனாய்,
"நான் அவ மேல வச்சிருந்த காதல் உண்மை. அவளை திட்டிட்டு நானும் அதே மனவலியோட தான் இருந்தேன்னு அவளுக்கு சொல்லனும் சுந்தர். அவளை கடந்து வர நான் பட்ட வேதனையை சொல்லனும். எனக்கும் அதெல்லாம் சுலபமாக இருந்திடலைனு சொல்லனும் சுந்தர். ஒரே ஒரு தடவை அவகிட்ட பேசி என்னை புரிய வச்சா என் மனசு நிம்மதியாகிடும்னு தோணுச்சு. அதான் மெசேஜ் செஞ்சேன். எங்கிருந்தாலும் அவ சந்தோஷமா வாழனும்னு தான் நான் எப்பவும் நினைப்பேன் சுந்தர். அவளுக்கு நான் கொடுத்த வலிக்கு நிறையவே குற்றவுணர்வோடும், அவ வாழ்வு நல்லா இருக்கனும்ன்ற வேண்டுதலோடும் தான் இத்தனை வருஷ வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருந்தேன் சுந்தர். நங்கை உங்களை கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழுறானு தெரிஞ்சதுல என் மனம் அடைஞ்ச நிம்மதிக்கு அளவே இல்லை சுந்தர். ஆனால் இன்னும் அவள் பார்வைக்கு நான் கெட்டவனா இருக்கேனே...." துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்தினான் இன்பா.
அமைதியாக இன்பா கூறியதை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரராஜன் குரலை செருமியவனாய், "நல்லவேளை வச்சிருந்த காதல்னு பாஸ்ட்ல சொன்னீங்க. இல்லனா ஃபோனை கட் செஞ்சிட்டு போய்ட்டே இருந்திருப்பேன். இதை நீங்க வார்னிங்கா எடுத்தாலும் சரி! அட்வைஸ்ஸா எடுத்துக்கிட்டாலும் சரி! இனிமேலும் என் மனைவிக்கிட்ட பேச முயற்சி செய்யாதீங்க! நீங்க அவளோட வாழ்க்கைல முடிஞ்சி போன அத்தியாயம். உங்களை பத்தி அவளுக்கு தெரிய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
ஒன்ஸ் ஒரு விஷயம் ஓவர்னா ஓவர் தான் இன்பா. எந்தவிதமான காரணமா இருந்தாலும் இந்த மாதிரி ரிலேஷன்ஷிப்லாம் தொடருவது இரண்டு பேரோட வாழ்க்கைக்கும் நல்லதில்லை. இந்த காலத்துல இது நிறைய பேருக்கு புரியுறதில்லை. என்னமோ நாகரிகம் ஃபேஷன்னு உணர்வுகளை குழப்பிக்கிட்டு உண்மையா வாழுறதுனா என்னனு தெரியாம வாழ்க்கையை கிரிட்டிக்கல் ஆக்கிட்டு இருக்காங்க. நீங்க நங்கையை பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு உங்க மனைவியை பத்தி யோசிக்கிறது தான் சரியா இருக்கும்.
என் மனைவி அன்னிக்கு உங்ககிட்ட பேசினது தப்பு தான். நீங்க ஒரு காலத்துல அவளுக்கு கொடுத்த வலியை இன்னிக்கு உங்களுக்கு கொடுத்துட்டா! அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா அதுக்காக உங்களை அவகிட்ட பேச என்னால் அனுமதிக்க முடியாது. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்! இனி உங்ககிட்ட இருந்து என் மனைவிக்கு மெசேஜ் அண்ட் கால்ஸ் வராதுனு நம்புறேன்" என்றவனாய் இணைப்பை துண்டித்தான் ராஜன்.
ராஜன் தனது அறையின் பால்கனியில் இருந்து பேசியதை, பக்கத்து அறையின் பால்கனியின் வாயிலில் இருந்து கேட்டவராய் யோசனையுடன் நின்றிருந்தார் நங்கையின் தந்தை சுரேந்தர்.
அச்சமயம் தூக்கத்திலிருந்து விழித்து ராஜனை தேடியவாறு பால்கனி வந்த நங்கை கண்களை தேய்த்தவாறு சுருக்கி பார்த்தவளாய், "என்ன இங்க உட்கார்ந்திருக்க? தூக்கம் வரலையா?" எனக் கேட்டாள்.
மகளின் குரலில் கலைந்தவராய் பால்கனியை விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டார் சுரேந்தர்.
அவளின் கையினை பற்றி இழுத்து, தன்னோடு அணைத்தவாறு அவளை ஊஞ்சலில் அமர்த்தி கொண்ட ராஜன்,
இன்பா முகநூலில் அனுப்பிய குறுஞ்செய்திகளை அவளிடம் காண்பித்தான். அவள் பார்த்து முடித்ததும், "அந்த ஐடியை பிளாக் செய்திடவா" என அவளிடம் கேட்டு விட்டு பிளாக் செய்தவன், இன்பாவை அழைத்து தான் பேசியதை அவளிடம் கூறினான்.
"சாரி அன்னிக்கு நான் அவன்கிட்ட அப்படி பேசினது தானே இப்படி அவனை இவ்வளோ தூரம் என்கிட்ட பேசனும்ன்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு!
அவன் வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்து பயந்தே போய்ட்டேன் தெரியுமா! ஃபேஸ்புக்ல அவன் மெசேஜ்ஜை நானே பார்த்திருந்தாலும் பிளாக் செஞ்சி விட்டிருந்திருப்பேன் சுந்தர்! பேசியிருக்க மாட்டேன்" என்றாள் நங்கை.
"ஐ நோ யூ டார்லிங் (உன்னை பத்தி எனக்கு தெரியும்)" என்றவனாய் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான் ராஜன்.
"யூ ஆர் மை கிரேட்டஸ்ட் பிளஸ்ஸிங்டா (நீ எனக்கு கிடைச்ச வரம்டா)" என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நங்கை.
----
தனது இல்லத்தில் முகப்பறையில் இருந்த சோஃபாவில் பின்னோக்கி தலையை சாய்த்து அமர்ந்திருந்த இன்பாவின் மனசாட்சியே அவனை கடிந்தவாறு இருந்தது.
'அவ என்ன நினைச்சா உனக்கென்னனு போய்ருக்கனும் நீ! அவன் மனைவிக்கு அவன் உண்மையா இருக்கான். நீ அப்படியா இருக்க! இன்னமும் உன்னோட பழைய காதலை உன் மனைவிக்கிட்ட சொல்ல முடியாம தானே இருக்க! சொன்னா என்னாகுமோனு பயந்து இருக்கிறவன் எப்படி இருக்கனும்' என கடிந்துக் கொள்ள, தனது நிலையிலிருந்து தாழ்ந்து விடலை பையன் போல் நடந்துக் கொண்டோமே என தன்னை தானே திட்டிக் கொண்டான் இன்பா.
ஆனாலும் அன்னம் கூறியது போல் நங்கையின் மீதான ராஜனின் காதலை அவனது உரிமையான பேச்சில் அறிந்துக் கொண்டதில் நெஞ்சில் நிம்மதி பரவியது.
சுந்தரராஜனின் சொல் இப்பொழுது இன்பாவின் குற்றயுணர்வை மனைவியிடம் திருப்பி இருந்தது.
"நான் இப்படி நங்கைகிட்ட பேச முயற்சி செஞ்சேன்னு தெரிஞ்சா சிந்து என்ன செய்வா? அன்னிக்கு என்னை நங்கை கேவலமானவனா நினைச்சதை விட கேவலமானவனா தானே சிந்து நினைப்பா?" எண்ணும் போதே உள்ளம் பதறி நடுங்கியது இன்பாவிற்கு.
'அய்யோ நங்கை எப்படி நினைச்சா எனக்கென்ன? எனக்கு என் மனைவி முக்கியம்! அவள் பார்வையில் இருக்கும் அன்பு மாறி வெறுப்பா அவ என்னை பார்த்தாலே..' நினைக்கும் போதே அய்யோ என்று நெஞ்சம் தவிக்க நிமிர்ந்து அமர்ந்தான் இன்பா.
'தொலைஞ்ச வாழ்க்கையை புரிய வைக்கிறேன்னு இருக்கிற வாழ்க்கையை விட்டுடாதடா இன்பா' அவனின் மனசாட்சி அவனுக்கு எடுத்து கூற, இனி நங்கை என்றொருவள் தனது வாழ்வில் இருந்ததையே மறந்து விட வேண்டுமென சபதமெடுத்துக் கொண்ட பின்பே இயல்பாகி மனம் ஒரு நிலைக்கு வந்தது அவனுக்கு.
அச்சமயம் இன்பாவின் அருகே வந்த சிந்துஜா, "இன்னும் தூங்காம என்ன செய்றீங்க? ஆபிஸ் கால் எதுவும் வந்துச்சா?" எனக் கேட்டாள்.
மனைவியை பார்த்து மெல்ல சிரித்தவாறு இல்லையென தலையசைத்தப்படி சிந்துஜாவின் கைகளை பற்றி தன்னருகே அமர வைத்தான்.
"நீ ஏன் எழுந்து வந்துட்ட? தூக்கம் வரலையா?" அவளின் கலைந்த தலைமுடியை சரி செய்தவனாய் கேட்டான்.
"பக்கத்துல நீங்க இல்லைனதும் தூக்கம் கலைஞ்சிடுச்சு" என்றவளாய் அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்.
"நான் உன்னை சந்தோஷமா வச்சிருக்கேனா சிந்து? நான் உனக்கு எப்படிப்பட்ட புருஷன்?" எனக் கேட்டான்.
சுந்தரராஜனின் பேச்சு அவனை இவ்வாறு கேட்க வைத்தது.
"நீங்க இப்படிலாம் கேட்க மாட்டீங்களே! என்ன திடீர்னு இப்படியொரு கேள்வி?" அவன் முகத்தை பார்த்தவாறு அவள் கேட்க,
"சும்மா கேட்கனும்னு தோணுச்சு" மென்னகையுடன் உரைத்தான்.
"நீங்க கண்டிப்பா நல்ல புருஷன் தான். அன்பா அக்கறையா என்னையும் நம்ம பையனையும் பார்த்துக்கிறீங்க. எந்த கஷ்டமும் தராம என்னை நீங்க சந்தோஷமா தான் வச்சிருக்கீங்க. என்னை கேட்காம எந்த முடிவையும் எடுக்கிறதில்லை. வீட்டுலேயே இருக்கிறவளுக்கு எதுக்கு ஆபிஸ் கதைனு இல்லாம உங்க ஆபிஸ்ல நடக்கிற எல்லாத்தையும் என்கிட்ட வந்து சொல்வீங்க. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். இவ்ளோ படிச்சி பெரிய வேலைல இருக்கிறவருக்கு படிக்காத என்னை கட்டி வைக்கிறாங்களேனு கல்யாணமான புதுசுல பயந்தேன் தான். ஆனா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் அவள்.
சிரித்தவாறு அவளின் நெற்றியில் முட்டியவன், அன்றைய தினம் தனது அலுவலகத்தில் நிகழ்ந்ததை அவளிடம் கூறலானான்.
அன்னத்தை பற்றி அவன் கூறியதை கேட்டவளாய்,
"ஆமா அழகும் அறிவும் கூடவே வெகுளித்தனமும் உள்ள பொண்ணு. நல்லா வாழுற இடத்துல தான் கட்டிக் கொடுக்கனும்! அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட மாப்பிள்ளை பார்க்கும் போது சொல்லுங்க" என்றாள் சிந்துஜா.
மனைவியின் இந்த அன்பான அக்கறையான பேச்சில் நெகிழ்ந்தவனாய், "அவங்கள மீட் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது சொல்றேன். நீயே நேரடியா பேசு" என்றான்.
சரியென தலையசைத்தவளாய், "வாங்க படுக்கலாம். ரொம்ப நேரமாகிடுச்சு" என்றவாறு அறைக்கு அழைத்து சென்றாள்.
அந்த வாரயிறுதி நாளில் இன்பா வீட்டில் அமர்ந்து யுகேந்திரனுடன் விளையாடிக் கொண்டிருக்க, "என்னங்க மாடியிலே வடகம் காய போட போறேன். வரதுக்கு ஒரு மணி நேரம் மேலே ஆகும். யுகியை பார்த்துக்கோங்க" என்றவளாய் கையில் பாத்திரமும் துணியுமாய் கதவை மூடி விட்டு வெளியே சென்றாள்.
சரி என்றவனாய் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்க அவனது வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டது.
யாரது என கதவை திறந்து பார்க்க, ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து ட்ரிம் செய்யப்பட்ட அழகான தோற்றத்துடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வாசலில் நின்றிருந்தார்.
"இன்பா வீடு இது தானே! நீங்க இன்பா வா?" எனக் கேட்டார் அவர்.
ஆமென அவன் கூறவும், "உங்களை பார்க்க தான் வந்தேன்" என்றார் அவர்.
'யார் இவரு?' என மனதோடு யோசித்தவனாய், "உள்ளே வாங்க! உட்காருங்க" என்றவன், "யுகி ரூம்ல போய் விளையாடு" என்று மகனை உள்ளே அனுப்பி விட்டு அவனது விளையாட்டு பொருட்களை அவனிடம் எடுத்து கொடுத்து விட்டு, அந்த முதியவர் குடிக்க நீர் அளித்து விட்டு அவர் எதிரில் அமர்ந்தான்.
"சொல்லுங்க! யார் நீங்க? என்ன விஷயமா வந்திருக்கீங்க? என்னை எப்படி தெரியும் உங்களுக்கு?" கேள்விகளை அடுக்கினான்.
"நாம இரண்டு பேரும் பல வருஷம் முன்னாடி ஃபோன்ல பேசியிருக்கோம். ஆனா நேர்ல பார்த்ததில்லை" என்றவரை சுருங்கிய நெற்றியுடன் யோசனையாக பார்த்தான் இன்பா.
"நான் சுரேந்தர்! நங்கையோட அப்பா" என்றவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அதிர்ந்து எழுந்தே நின்று விட்டான் இன்பா.
-- தொடரும்