top of page

என் இனிய இன்பனே 5


அன்றைய நாள் முழுவதும் வீட்டிலிருந்தே அலுவல் வேலை பார்த்தவாறு இன்பாவே சமையலும் செய்தான். சிந்துவிற்கு வயிறு வலி மட்டுப்பட்டிருந்தாலும் தானே சமைப்பதாய் உரைத்து பருப்பு சாதம் செய்து கொடுத்தான். மதியம் மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருக்க, அலுவல் சம்பந்தமாக அன்னத்துடன் பேசிக் கொண்டிருந்த இன்பா, அன்னத்திடம் இயல்பாய் பேசி நங்கையின் திருமணம் எவ்வாறு சுந்தருடன் நிகழ்ந்ததென அறிந்துக் கொண்டான். அவர்கள் வீட்டில் நிச்சயித்து செய்த திருமணமாய் இத்திருமணம் நிகழ்ந்ததை கேட்டு மகிழ்ந்து போனான் இன்பா. மேலும் சுந்தர் மற்றும் நங்கையின் புரிதலையும் காதலையும் அன்னம் மூலம் அறிந்து கொண்டவனுக்கு, சுந்தர் தான் அவளுக்கானவன் என்று நன்றாக புரிந்தது. அவள் மகிழ்வாய் வாழ்வதை கேட்டு மனம் சந்தோஷித்தது. காலை வணக்கத்திற்கு இரவு வேளை வரை நங்கை பதில் அனுப்பாமல் இருப்பதை பார்த்தவனுக்கு அவள் தன்னை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாளோ என்று தோன்றியது. தனது அலைபேசி எண் அவளுக்கு தெரியாதிருந்தாலும், புலனத்தில் முகப்பு படமாய் வைக்கப்பட்டிருந்த தனது மகனின் படத்தை வைத்து தன்னை அடையாளம் கண்டு பதிலளிப்பாள் என எண்ணியிருந்தான் இன்பா. ஆணோ பெண்ணோ தங்களுடைய முன்னாள் காதலருடன் தங்களது இணையருக்கு தெரியாமல் பேசுவது அவர்களுக்கு செய்யும் துரோகமென ஏனோ இன்பாவிற்கு புரியவே இல்லை. இதனை தனது மனைவி அறியும் போது ஏற்படப்போகும் கலவரத்தையும் அவன் உணரவே இல்லை. தன்னை அவளுக்கு புரிய வைத்திட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவனின் மனதில் பிரதானமாய் இருந்தது. அவளிடம் தன்னை விளக்கி விட்டு விலகிவிட வேண்டுமென்று எண்ணியே அவளிடம் பேச முனைந்தான் இன்பா. அதனால் மீண்டும் முயற்சிப்போம் என எண்ணியவனாய் அவளுக்கு இரவு வணக்கம் அனுப்பி வைத்தான். அந்த இரவு பொழுதில் தன்னுடைய எண்ணிற்கு வந்த இரவு வணக்கம் குறுஞ்செய்தியை பார்த்து விட்டு யாருடைய அலைபேசி எண்ணென ட்ரூ காலரில் பார்த்தவளுக்கு, இன்பா என்ற பெயரை பார்த்ததும் பேரதிர்ச்சி. 'இவன் எதுக்கு எனக்கு மெசேஜ் செய்றான்' ராஜன் கூறியதை போல், தன்னுடைய பேச்சு, தான் இன்னும் அவனை நினைத்து கொண்டிருப்பதாய் அவனை எண்ண வைத்து விட்டதோ என்றெண்ணி பயந்து போனாள் நங்கை. நங்கை தனது குறுஞ்செய்தியை பார்த்துவிட்டதை நீல நிற குறியீட்டின் மூலம் அறிந்து கொண்ட இன்பா, "ஹாய் நங்கை! ஹௌ ஆர் யூ (எப்படி இருக்க?)" எனக் கேட்டு அனுப்பியிருந்தான். அந்த புலனத்தின் எண்ணிலிருந்த புகைபடத்தை பார்த்தாள் நங்கை. இன்பாவின் மகன் அதிலிருப்பதை பார்த்தவள், ஏதும் பதில் அனுப்பாது உடனே அந்த எண்ணை பிளாக் செய்து விட்டாள். அவள் தனது எண்ணை பிளாக் செய்து விட்டதை உடனே அறிந்துக் கொண்டான் இன்பா. அமைதியாக கைபேசியை பார்த்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தவனின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது‌. 'நான் என்‌ன செஞ்சிட்டேன்னு இப்ப பிளாக் செஞ்சிருக்கா இவ? ஒரு வார்த்தை எதுக்காக மெசேஜ் செஞ்சிருக்கேன்னு கேட்குறதுல என்ன ஆகிட போகுது இவளுக்கு? என்னை பத்தி என்ன‌ நினைச்சிட்டு இருக்கா இவ?' கோபத்தில் தோன்றிய வார்த்தைகளை கடித்து குதறி துப்பிக் கொண்டிருந்தான் மனதினுள்‌. 'நான் வாழ்க்கைல செஞ்ச ஒரே தப்பு அது தானே கடவுளே! எத்தனை நாள் அவ எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காளோ நல்லா இருக்காளோ இல்லையோனு நினைச்சி கவலைப்பட்டிருப்பேன். ஒரு காலத்தில் என் மனசு முழுக்க நிறைஞ்சிருந்தவ அவ! நம்ம மனசுக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்மளை கெட்டவங்களா நினைச்சா மனசு எப்படி கலங்காம இருக்கும். அதிலும் அவ என்னை இத்தனை நாளும் இவ்ளோ கெட்டவனா நினைச்சிட்டு இருக்கிறதை எப்படி நான் தாங்கிப்பேன். நான் தப்பு செஞ்சேன் தான். ஆனால் அதுக்கான காரணம்னு ஒன்னு இருக்கும்னு ஏன் அவ யோசிக்கவே இல்லை. மனசறிஞ்சி அவளை நான் காயப்படுத்துவேன்னு எப்படி அவ நினைச்சா? அவக்கிட்ட ஒரே ஒரு தடவை எதனால அப்படி பேசினேன் அன்னிக்கு என் சூழ்நிலை என்னனு சொல்லிட்டேன்னா இத்தனை நாளா குற்றவுணர்வுல தவிச்சிட்டு இருக்க எனக்கு நிம்மதி கிடைக்குமேனு தானே அவகிட்ட பேச நினைக்கிறேன். அவ ஏன் அதை புரிஞ்சிக்காம ஏதோ பொறுக்கியை ட்ரீட் செய்ற மாதிரி என்னை பிளாக் செஞ்சிருக்காள்!' கோபம் எல்லை மீற தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பெருமூச்செறிந்து எழுந்து நின்று உடலை அப்படியும் இப்படியுமாக வளைத்து விட்டு திரும்பி பார்த்த போது முகப்பறையில் கண்களில் நீருடன் அமர்ந்திருக்கும் சிந்துஜா கண்ணில் பட்டாள். "என்னாச்சு? ஏன் அழுதிட்டு இருக்கா?" என்று பதட்டமானவனாய், "சிந்து" என்றவாறே அவளை நோக்கி சென்றான். நங்கை பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு சென்றிருந்தது‌. சோஃபாவில் அமர்ந்திருத்தவளின் அருகில் சென்று தோளை தொட, அருகில் நின்றிருந்தவனின் இடையை கட்டிக்கொண்டவள், "இந்த படத்துல விஜய் சங்கீதா கூட சேர்ந்திருக்கலாம். ஒரு செடில ஒரு முறை தான் பூ பூக்கும்னு பேசி இப்படி தனியா நின்னுருக்க வேண்டாம்" என்று தொலைகாட்சியில் பார்வையை பதித்தவளாய் அவள் கூற, "அடியேய்" என குரலை உயர்த்தி நெற்றியில் அடித்துக் கொண்டான் இன்பா. ஆனாலும் இதழில் முறுவல் எட்டிப் பார்த்தது மனைவியின் இந்த செய்கையில். அவள் அவனது இடையை விடாமல் நிமிர்ந்து பார்க்க, நீர் பளபளத்திருந்த விழிகளை பார்த்தவனுக்கு இப்பொழுது சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது‌. "எத்தனை தடவை தான்டி பார்த்த படத்தையே பார்த்து அழுவ நீ" வாய்விட்டு சிரித்தவாறே கேட்டான். "ம்ப்ச் என் ஃபீலிங்க்ஸ் எங்கே உங்களுக்கு புரியப்போகுது" அவனை விட்டு நீங்கியவாறே உதட்டினை சுழித்தாள். அவளின் சுழித்த இதழை பிடித்து இழுத்து முத்தமிட்டவனாய், "லைப்ல லவ் அண்ட் பிரேக் அப்லாம் பாசிங் கிளவுட்ஸ் மாதிரி சிந்து! அப்படியே கிளவுட்ஸ் மாதிரி மூவ் ஆகிட்டே இருக்கனும். அதுலயே தேங்கி நின்னுட்டோம்னா வாழ்க்கை நாசமா போய்டும்" என்றான். "ம்ப்ச் போங்கப்பா!" என் அவனை தள்ளி விட்டவளாய், "நீங்க சொல்றதுலாம் என்னால் ஏத்துக்க முடியாது. ஒன்னு யாரையும் காதலிக்காம இருக்கனும்! அப்படி யாரையாவது காதலிச்சா எப்பாடுப்பட்டாவது அவங்களையே கல்யாணம் செஞ்சிக்கனும். அப்படி கல்யாணம் செஞ்சிக்க முடியலைனா.‌.." என அவள் ஏதோ கூற வரும் முன், "அப்படி செஞ்சிக்க முடியலைனா அவங்களை நினைச்சுக்கிட்டே வேற கல்யாணம் செஞ்சிக்காம வாழ்க்கையை நாசமாக்கிக்கனும்! அப்படி தானே?" என்று சற்று கோபமாகவே கேட்டிருந்தான் இன்பா. தான் அவ்வாறு நின்றிருந்தால் இன்று சிந்துவும் அவளின் மூலமாக இத்தகைய அழகான குடும்பமும் தனக்கு கிடைத்திருக்குமா என்ற எண்ணமே மனைவியின் இந்த கூற்றில் கோபப்பட வைத்தது. வாழ்வின் நிதர்சனம் இது தானே! இதை மனைவியும் புரிந்துக் கொள்ள வேண்டுமே என்று நினைத்தே இவ்வாறு கூறியிருந்தான் இன்பா. அவனின் கோபத்தில் சற்று தணிந்தவளாய், "சரி சரி கோபப்படாதீங்க! விடுங்க‌‌. அந்த படத்துக்காக நாம் ஏன் சண்டை போட்டு நம்ம நேரத்தை வீணடிக்கனும்" என்றவளாய் அவனது மடியில் சாய்ந்து கொண்டு, முந்தைய நாள் அவள் நங்கை மற்றும் அன்னத்துடன் பேசியது, விழாவில் மற்றவர்களிடம் அவள் பேசியது என அனைத்தையும் அவனிடம் கூறினாள். "அதான் பக்கத்துலேயே உட்கார்ந்து நீ பேசினதைலாம் கேட்டுட்டு இருந்தேனே சிந்து! திரும்பவும் இது எல்லாத்தையும் சொல்லனுமா" மென்னகையுடன் கேட்டான் இன்பா. "அது என்னமோப்பா! டெய்லி நைட் இப்படி எல்லாத்தையும் உங்ககிட்ட பேசிட்டு படுத்தா தான் எனக்கு மனசுக்கு ஹேப்பியா இருக்கு. இல்லனா என்னமோ மிஸ் செய்ற ஃபீல் வந்துடுது‌. நேத்து எதுவும் பேசாம டயர்ட்டுல தூங்கிட்டோம்ல! அதான் இன்னிக்கு சொல்றேன்" என்றவளுக்கு இன்றைய நாள் அவனுடனேயே கழிந்ததினால் கூற எதுவுமில்லாமல் போக அமைதியாகி போனாள். தொலைகாட்சியில் வேறு நகைச்சுவை காட்சிகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த கணவனை பார்த்தவாறே அவனது மடியில் படுத்திருந்தாள் சிந்து. அவன்‌ சிரிக்கும் போது விரியும் உதடுகளை பார்த்தவளுக்கு முதன் முதலாக அவனை நெருங்குகையில், "பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு உதடு கலரா இருக்கே! எப்படி? பசங்களுக்கு கறுப்பா தானே இருக்கும்" என ஆராய்ச்சி பார்வையில் அவள் கேட்டதும், அதற்கு அவன் வாய்விட்டு சிரித்தவண்ணம் செயலில் பதிலளித்ததும் நினைவிற்கு வந்து வெட்கம் கொள்ள செய்ய, மனைவியின் கன்னச்சிவப்பில் அவளின் உள்ளத்தின் எண்ணத்தை உணர்ந்தவனாய் அதே செயலை இப்பொழுது தொடர்ந்தவண்ணம் கணவனாய் அவளுள் மூழ்கி போனான். ***** அடுத்த இரண்டு நாட்களில் வெளியூரிலிருந்து வந்திருந்தான் ராஜன். அன்றிரவு ராஜனின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த நங்கையின் அலைபேசியில் தொடர்ந்து கேட்ட குறுஞ்செய்தி சத்தம், ராஜனின் உறக்கத்தை கலைக்க, நங்கையை அருகே மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளின் கைபேசியை எடுத்து பார்த்தான். நங்கையின் முகநூல் உள் பெட்டியில் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. யாரிடமிருந்து வருகிறது என திறந்து பார்த்தவனுக்கு முகம் கோபத்தில் இறுகியது. "எப்படி இருக்க நங்கை?" "நல்லாருக்கியா?" "ஏன் என் நம்பரை பிளாக் செஞ்ச நங்கை?" "ஒரே ஒரு தடவை மட்டும் என்கிட்ட பேசு நங்கை" "நீ என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்க நங்கை" "நீ நினைக்கிற மாதிரி நான் இல்லைனு உனக்கு புரிய வைக்கனும் நங்கை" இவ்வாறாக தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தான் இன்பா. பால்கனி ஊஞ்சலில் அமர்ந்த ராஜன், "நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கிறது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்கு புரியுதா இன்பா" எனக் கேட்டு பதில் அனுப்பினான். அங்கே தனது வீட்டின் முகப்பறையில அமர்ந்திருந்த இன்பா, நங்கை தான் பதில் அளிப்பதாய் எண்ணி மகிழ்ந்தவனாய், "சாரி மிட் நைட்ல டிஸ்டர்ப் செய்றது தப்பு தான். இப்ப தான் உன் ஐடி கண்டுபிடிச்சேன். அதான் உடனே மெசேஜ் செஞ்சேன் நங்கை" என்று அனுப்பினான். "இது நங்கை இல்ல! நான் அவ ஹஸ்பண்ட் சுந்தர் பேசுறேன்! ஐ வாண்ட் டு டாக் டூ யூ (உன்கிட்ட கொஞ்சம் பேசணும்)! கேன் ஐ கால் யூ நௌ (இப்ப உனக்கு ஃபோன் செய்யவா)" எனக் கேட்டான். திக்கென நெஞ்சம் அதிர அந்த குறுஞ்செய்தியை பார்த்திருந்தான் இன்பா.


-- தொடரும்

© KPN NOVELS COPY PROTECT
bottom of page