என் இனிய இன்பனே 4

“எனக்கு ஏன் அவ்ளோ கோபம் வந்துச்சுனே தெரியலை சுந்தர்”
நள்ளிரவில் தனது அறையின் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தவாறு கணவனுடன் காணொளி அழைப்பில் பேசி கொண்டிருந்த நங்கையின் கண்களை நீர் நிறைத்திருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள் வீட்டை அடையும் பொழுதே மணி இரவு பத்தை நெருங்கி இருந்தது. வரும் பொழுதே குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, கட்டிலில் படுக்க வைத்து விட்டாள் நங்கை. அன்னமும் நங்கையின் அறையிலேயே குழந்தையின் அருகில் படுத்துக் கொள்ள, தனது கணவருடன் தனியாக பேசவென பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தவாறு அவனுக்கு அழைத்தவள், நிகழ்ச்சியில் நடந்த அனைத்தையும் அவனுக்கு தெரிவித்திருந்தாள்.
“நான் அப்படி பேசிருக்க கூடாது தானே சுந்தர்!” வருத்த குரலில் அவள் கேட்க,
அமைதியாக அவளை பார்த்திருந்தவன், “கண்டிப்பா நீ அப்படி பேசியிருக்க கூடாது நங்கை. அவரோட பாஸ்ட் பத்தி அவங்க மனைவிகிட்ட சொல்றதும் சொல்லாததும் அவரோட பர்சனல். அதை தெரிஞ்சிக்க நீ ஏன் விரும்புறனு கேள்வி வரும். இத்தனை வருஷம் கழிச்சும் அதை எல்லாம் கடந்து போக முடியாம நீ தவிச்சிட்டு இருக்கிறதா அவருக்கு தோணலாம். இப்ப நீ பேசினதை பார்த்து நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கிறதா கூட அவர் நினைக்கலாம் தானே” என்று சுந்தரராஜன் அமைதியாக கூறவும்,
பதறிய நங்கை, “அய்யய்யோ… நீ அப்படி நினைக்கிறியா சுந்தர்?” அதிர்ந்த பார்வையுடன் அவனை கேட்டாள். கண்களில் இருந்து பொங்கி கொண்டு வந்தது கண்ணீர்.
“எவ்ளோ பெரிய தப்பை செஞ்சி வச்சிருக்கேன்! எதையும் யோசிக்காம பேசிட்டு வந்திருக்கேன்” தலையிலேயே அடித்து கொண்டாள்.
“டேய் பப்ளிமாஸ்! உன்னை பத்தி எனக்கு தெரியாதா! கண்ணை தொட டா! என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுதுடா!” என்றான் அவன்.
அவள் கண்களை துடைக்க, “பக்கத்துல தண்ணீர் வச்சிருக்கியா? எடுத்து குடி” என்றான். அறைக்குள் சென்று தண்ணீர் அருந்துவிட்டு வந்து அமர்ந்தாள்.
“இன்பாவை பத்தி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றான் ராஜன்.
என்ன என்பது போல் அவள் பார்க்க,
“அன்னிக்கு நைட் இன்பாவும் உன்னை போல தூக்க மாத்திரை சாப்பிட்டு சூசைட் செய்ய இருந்தாரு. நான் சரியான நேரத்துல உன்னை சாப்பிட விடாம தடுத்தது போல அவரையும் அவரோட ரூம் மேட் அப்ப சரியாக போய் தடுத்து காப்பாத்திருக்காங்க” என்றவன் சொன்னதும்,
“என்னது” விழிகள் விரிய அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் நங்கை.
“ஆமா உன்னை பேசிட்டு அவரும் ஒன்னும் சந்தோஷமா இல்லை நங்கை. அவரோட அம்மாகாக காதலை விட்டு கொடுத்திருக்காரு. அதுக்கு உன்னை பலிகடாவாக்கிட்டாரு” என்றான் ராஜன்.
“ஆனாலும் அவன் என்னை பேசினது தப்பு தானே சுந்தர். அதனால் நான் அனுபவிச்ச அவமானமும் வலியும் வேதனையும் இல்லனு ஆகிடுமா சுந்தர். நீ மட்டும் இல்லைனா நான் என்னவாகிருப்பேன். என் வாழ்க்கை என்னவாகி இருக்கும். ஒரு பொண்ணோட பாவத்தை தானே வாங்க இருந்தான் அவன்” ஆற்றாமையுடன் பேசினாள்.
“கண்டிப்பாக இன்பா செஞ்சது தப்பு தான் நங்கை. அவரோட செயலுக்கான தண்டனையை ஏதோ ஒரு விதத்துல அவர் அனுபவிச்சிருப்பாருனு சொல்ல வரேன்டா. இது அவருக்கும் வலியையும் வேதனையையும் தான் கொடுத்திருக்குனு சொல்ல வரேன். மேலும் இதை குத்தி கிளறுற மாதிரி நீ பேசினதும் தப்புனு சொல்றேன்” என்றான் ராஜன்.
சரி தான் என அவள் சிந்திந்த வண்ணம் தலையசைக்க,
மேலும் தொடர்ந்தவனாய்,
“அந்த இன்சிடன்ட்க்கு பிறகு அவரை நீ பார்க்கவே இல்லைல! பார்த்திருந்தீனா அப்பவே இதெல்லாம் கொட்டிருப்ப! அவர் பக்கம் இருக்கும் காரணங்கள் உனக்கு புரிஞ்சிருக்கும்.
மறந்துடனும்னு எல்லாத்தையும் அடி மனசுக்குள்ள தள்ளிட்டு தான் பலரும் இங்க வாழ்ந்துட்டு இருக்காங்க நங்கை. அது இப்படியான சூழ்நிலைல வெளிபட துடிக்கும் போது சரியா கையாள கூடிய பக்குவம் இருக்கனும். உனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலை.
அதான் இத்தனை நாளா உன் ஆழ் மனசுல புதைஞ்சிருந்த கோபமெல்லாம் உன்னை மீறி இன்னிக்கு வெடிச்சு வெளில வந்துருக்கு. அதுக்கு நீ ஒன்னும் செய்யவும் முடியாது. அதனால இதை நீ நினைச்சு கவலைப்படாம ஜஸ்ட் ரிலாக்ஸ். காலத்தை விட பெரிய தண்டனையை யாராலயும் கொடுத்திட முடியாதுடா பப்ளிமாஸ். அது நம்ம கண்ணுக்கு தெரியாததுனால அவர் தண்டனையே அனுபவிக்கலைனு நாம நினைச்சிட கூடாது” என்றவன்,
“திரும்ப இன்பாவை நீ எங்க பார்த்தாலும் ஜஸ்ட் பீ நார்மல்! ரியாக்ட் செய்யாத! அது போதும்” என்றான்.
ஹ்ம்ம் என பெருமூச்சுவிட்டவளாய், “நீ மட்டும் என் கூட வந்திருந்தீனா நான் நார்மலா தான் பிஹேவ் செஞ்சிருப்பேன்னு தோணுது. அப்படியே பேசியிருந்தாலும் நீ என்னை கட்டுப்படுத்திருப்ப! அவன்கிட்ட பேசின பிறகு மனசு உன்னை தான் ரொம்ப தேடுச்சு” என்றாள்.
“ஆமா உனக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். என் பொண்ணை விட ரொம்ப மோசமா இருக்க நீ” என்று சிரிப்புடன் அலுத்துக் கொண்டான் ராஜன்.
“ஆமா நீ தான் என்னை அப்படி கெடுத்து வச்சிருக்க. நீ இல்லாம இங்கே ஒரு வேலையும் உருப்படியா ஓடல எனக்கு! இனி உன்னை எங்கேயும் தனியா அனுப்புற ஐடியாலாம் இல்லை” கண்களில் நீர் பளபளக்க புன்சிரிப்புடன் உரைத்திருந்தாள்.
ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்திருந்தான் அவன்.
“எப்படா வருவ? இப்படி உன்னை பார்க்க பார்க்க தான் ரொம்ப ஏக்கமா இருக்கு எனக்கு” என்றாள் நங்கை.
தன் மனைவி தன்னை இத்தனையாய் தேடுகிறாள் என்பதில் மனம் குளிர்ந்துப் போனது அவனுக்கு.
“இன்னும் இரண்டே நாள்! ஓடோடி வந்துடுவேன்” என்றவன், “அப்படியே என் பொண்ணை கொஞ்சம் காண்பிச்சீனா பார்த்துட்டு நிம்மதியா தூங்க போவேன்” என்றான்.
“அதெல்லாம் முடியாது! நேர்ல வந்து பார்த்துக்கோ! அப்ப தான் உன் பொண்ணை பார்க்கனும்னு சீக்கிரமா கிளம்பி வருவ” என்றாள் நங்கை.
“அடியேய் இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்” என்று அவன் கூற,
“பரவாயில்லை! அநியாயமாவே இருந்துட்டு போகட்டும்” என்று சிரித்தவளாய், வீடியோ இணைப்பை துண்டித்து விட்டு அலைபேசியில் பேசியவாறு முகப்பறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.
அறைக்கு வந்து மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டு, உறங்கும் மகளை அவனுக்கு காண்பித்து விட்டு இணைப்பை துண்டித்து படுத்தவளின் மனதை நிறைத்திருந்தான் ராஜன்.
“சுந்தர் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் இப்படி ஃப்ரீயா அவங்ககிட்ட பேசிருக்க முடியுமா! இவனை அடைய என்னமோ பெரிய புண்ணியம் செஞ்சிருக்கேன் நான்” மென்னகையுடன் எண்ணிக் கொண்டவளாய் உறங்கி போனாள் நங்கை.
*********
“கேவலமா ஒரு பொண்ணை திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?”
“யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்கு பழக்கமே இல்லையே”
“தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு”
“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னை சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன்”
நங்கையின் இந்த வதைக்கும் வார்த்தைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவனது செவியில் விடாமல் ஒலிக்க, திடுக்கிட்டு அதிர்ந்து எழுந்தான் இன்பா.
அதிர்ந்து எழுந்ததன் தாக்கத்தில் வேக மூச்செடுத்தவன் தன் நெஞ்சை நீவியவனாய், ‘இந்தளவிற்கா நங்கையின் சொல் தன்னை தாக்கியிருக்கிறது?’ என்றெண்ணியவனாய் அருகில் மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினான்.
கண்களை சுழற்றியவனாய் அறையை பார்த்தான். சிந்து அறையில் இல்லை. அருகில் அவன் மீது கால்களை போட்டவனாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவனது மகன்.
“ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ?” என்றெண்ணியவாறு நேரத்தை பார்த்தான்.
காலை ஆறு மணி என்று காண்பிக்க, “அதுக்குள்ள சிந்து எழுந்துட்டாளா?” என்று நினைத்தவனாய் சின்னவனின் உறக்கம் கலையாதவாறு அவனின் காலை பிடித்தவாறே சற்றாய் பின்னோக்கி சாய்ந்து அமர்ந்தான் இன்பா.
கண்களை மூடி சாய்ந்தவனுக்கு மீண்டும் மீண்டுமாய் அந்த சொற்களே செவியை நிறைக்க,
தன்னை இத்தனை கேவலமானவனாகவா அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என மனம் வெதும்பி போனான் இன்பா.
எவ்வாறேனும் அன்றிருந்த தனது நிலையை பற்றி அவளிடம் விளக்கிட வேண்டுமென துடித்தது அவன் மனது. அவளிடம் விளக்கி தன் மீதான அவளின் எண்ணவோட்டத்தை மாற்றினால் மட்டுமே தன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றியது அவனுக்கு.
இந்நிகழ்வினிலேயே உழன்றிருந்த மனதை மடை மாற்றும் முயற்சியாக அருகில் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிந்துவின் அலைபேசியை எடுத்தான்.
முந்தைய நாள் அவளது கைபேசியில் எடுக்கப்பட்டிருந்த தங்களது குடும்பப் புகைப்படங்களை பார்க்கலானான். அவற்றை புலனத்தின் மூலம் தனது கைபேசிக்கு அனுப்பியவன்,
நங்கையுடனும் அன்னத்தினுடனும் சிந்து எடுத்திருந்த புகைப்படங்களை தனது புலனத்தின் மூலம் நங்கையின் எண்ணிற்கு சிந்து அனுப்பியிருந்ததை பார்த்தான். உடனே நங்கையின் எண்ணை எடுத்து தனது கைபேசியில் சேமித்துக் கொண்டான்.
ஓய்வறையில் இருந்து வெளியே வந்த சிந்து, “என்னப்பா அதுக்குள்ள முழிச்சிட்டீங்க? இன்னிக்கு வர்க் ஃப்ரம் ஹோம் தானே சொன்னீங்க!” எனக் கேட்டாள்.
சட்டென கேட்ட மனைவியின் குரலில் உள்ளம் படபடக்க குற்றவுணர்வு மேலோங்க, “ஆமா தூக்கம் கலைஞ்சிடுச்சு!” என்றவன், “அன்னத்தோட அண்ணி நம்பரை நான் எடுத்திருக்கேன் சிந்து. அவங்க ஆபிஸ்ல வேகன்சி பத்தி பேச வேண்டியது இருக்கு” அவளிடம் பொய் கூற மனமில்லாது உண்மையும் பொய்யுமாக கலந்து உரைத்திருந்தான்.
அவள் பெரியதாய் எதையும் கண்டுக்கொள்ளாது சரியென தலையாட்டியவளாய்,
“நேத்தே கேட்கனும்னு நினைச்சேன்! உங்க மேனேஜர்கிட்ட பேசிட்டு வந்த பிறகு உங்க முகமே சரியில்லயே! எதுவும் பிரச்சனையாப்பா?” எனக் கேட்டவாறு கட்டிலில் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
“இல்லமா பிராஜக்ட் பத்தின டிஸ்கஷ்சன் தான். அதை பத்தியே யோசிச்சிட்டு வந்தனால உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கு போல” என்றவன்,
“நீ ஏன் சீக்கிரம் எழுந்துட்ட?” எனக் கேட்டான்.
அருகில் உறங்கி கொண்டிருந்த மகனின் தலையை கோதியவளாய், “நேத்து சாப்பிட்டது ஏதோ சேரலை போலப்பா! வயிறு வலி வந்து தான் முழிச்சேன்” என்றாள்.
“இன்னும் வலிக்குதாமா! ஓமம் தண்ணீர் எதுவும் குடிச்சி பார்க்கிறியா? இல்ல ஹாஸ்பிட்டல் போய் பார்ப்போமா? ” எனக் கேட்டவாறு அவள் உடுத்தியிருந்த நைட்டியின் மீதே வயிற்றில் கையை வைத்து வருடியிருந்தான்.
கூச்சத்தில் நெளிந்தவளாய் அவன் கரத்தின் தனது கரத்தினை வைத்து விலக்கியவள், “இப்ப பரவாயில்ல” என்றாள்.
அவளின் கையை பற்றியவனாய், “சரி கொஞ்ச நேரம் தூங்கு. சோர்வா தெரியுற! நான் உனக்கு பால் காய்ச்சி எடுத்து வந்து தரேன்” என்றான்.
“இல்ல இப்ப எதுவும் வேண்டாம்” என்றவளாய் அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய் அவளின் தலையை வருடினான்.
அவள் அப்படியே உறங்கியிருக்க, நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தவன் அப்பொழுதே நங்கைக்கு அன்றைய தனது சூழ்நிலையை விளக்கி குறுஞ்செய்தி அனுப்ப நினைத்தான். பிறகு எடுத்ததும் இதனை பேசி அவளின் மனநிலையை கெடுக்க வேண்டாமென நினைத்தவனாய் இயல்பாக உரையாடலை ஆரம்பிக்கும் பொருட்டு காலை வணக்கம் என்று மட்டும் அந்த எண்ணில் இருந்து அனுப்பினான்.
அவளிடமிருந்து பதில் வந்த பிறகு பேசலாம் எனக் காத்திருந்தான்.
காலை கண் விழித்து கைபேசியை பார்த்த நங்கைக்கு புதிய எண்ணிலிருந்து வந்திருந்த காலை வணக்கம் செய்தி புருவத்தை சுருங்கச் செய்தது.
யாருடைய எண்ணென ட்ரூ காலரில் தேட முற்பட்ட சமயம் அவளின் மகள் அழுது கூக்குரலிட, அவளை கவனிக்கச் சென்றதில் அந்த குறுஞ்செய்தியை பற்றி மறந்தே போனாள் நங்கை.
— தொடரும்