என் இனிய இன்பனே 3

நிகழ்ச்சி துவங்கவும், இவர்களின் குழுக்காக கொடுக்கப்பட்டிருந்த வட்ட மேஜை இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டனர் அனைவரும்.
"சிந்து அக்கா! நான் நம்ம மேனேஜர் சாரை முதல் முதல்ல இன்டர்வியூல பார்க்கும் போது என்ன நினைச்சேன் சொல்லுங்க" எனக் கேட்டாள் அன்னம்.
"என்ன நினைச்ச அன்னம்?" என ஆர்வமாக சிந்து கேட்க,
"சொட்டை தலையும் தொந்தியுமா வயசானவரா இந்த மேனேஜர் இருப்பாருனு பார்த்தா இவர் என்னடா ஹேண்ட்சம்மா சின்னப்பையனா இருக்காருனு நினைச்சேன்! அதனாலேயே அவருக்கு கல்யாண ஆகலைனு நானே நினைச்சிக்கிட்டேன்! சாரி" கண்ணைச் சுருக்கி கூறினாள் அன்னம்.
அவளின் பேச்சில் நங்கையும் சிந்துவும் மோகனும் சிரித்திருக்க, 'அடப்பாவி' என்பது போல் அவளை பார்த்திருந்தான் இன்பா.
பாலாஜிக்கும் அசோக்கிற்கும் தமிழ் தெரியாது என்பதால் புரிந்தும் புரியாததுமாக அவர்கள் மென்னகை புரிந்தவாறு அமர்ந்திருந்தனர்.
"ஹ்ம்ம் அவர் சொன்னாரு. நீ இன்டர்வியூல உங்க முழு பேரே இன்பா தானானு கேட்டியாமே! அது என்ன பொண்ணுங்களால முடியாத வேலைன்னு பொண்ணுங்களையே உங்க டீம்க்கு எடுத்ததில்லைனு பெருமையா சொல்லிட்டு இருக்கீங்கனு அவர்கிட்ட கோபமா கேட்டியாமே! அதுக்கு பிறகு நீ செலக்டட்னு சொல்லி நைட் ஷிப்ட்ல வரனும்னு சொன்னதும் நீ திருதிருனு முழிச்சிட்டு அசடு வழிஞ்சதை பத்தி அன்னிக்கு நாள் முழுக்க நினைச்சு நினைச்சு சொல்லி சிரிச்சிட்டு இருந்தாரு" என்று சிந்துஜா விளக்கமாக அன்னத்துடனான நேர்முக தேர்வில் நடந்தவற்றை இன்பா தன்னிடம் கூறியதை இங்கே சிரித்தவாறு அப்படியே கூறியிருக்க அசடு வழிந்தாள் அன்னம்.
இன்பா அன்றைய தினத்தை எண்ணி புன்னகைத்தவனாய் அமர்ந்திருக்க, மோகனும் நங்கையும் வாய்விட்டு சிரித்திருந்தனர்.
"உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி தான் அன்னம்" என்றவாறு மேலும் சிரித்திருந்தாள் நங்கை.
அவளின் சிரிப்பை கனிவுடன் பார்த்திருந்தான் இன்பா.
"ம்மாஆஆ! ம்மாஆஆ" என்று குழந்தை சிணுங்கவும், "என்னடா நந்துக்குட்டி! பசிச்சிருச்சா?" எனக் கேட்டவாறு தனது பையினில் மகளுக்காக எடுத்து வந்திருந்த உணவினை எடுத்து கொடுத்த நங்கையிடம்,
"குழந்தைக்கு எத்தனை வயசாகுது?" என சிந்துஜா கேட்க, அதற்கு பதிலளித்த நங்கையும் யுகேந்திரனை பற்றி சிந்துஜாவிடம் கேட்டாள். இருவரும் அவரவர் குழந்தைகளின் சேட்டைகள், செயல்கள், அவர்களின் பிறப்பு, கர்ப்பமான நேரத்தில் வந்த உடல் உபாதைகள் என இப்பேச்சினில் மூழ்கி போக, அமைதியாக இதனை கேட்டவாறு அமர்ந்திருந்தான் இன்பா.
அச்சமயம் நங்கையின் கைபேசி அலற, பையினுள் இருந்த கைபேசியை எடுத்த அன்னம், "அண்ணி, அண்ணா தான் கால் செய்றாங்க" என்றவாறு நங்கையிடம் கொடுத்தாள்.
"சொல்லு சுந்தர்!" என்றவாறு காதில் கைபேசியை வைத்து அவள் பேச துவங்கவும், சட்டென திரும்பி அவளை பார்த்தான் இன்பா.
கைபேசியில் நங்கையின் சுந்தர் என்ற விளிப்பில் அவளை அதிர்வுடன் பார்த்தான் இன்பா.
'சுந்தரையா இவ கல்யாணம் செஞ்சிருக்கா' பேரதிர்ச்சியான செய்தியாய் இருந்தது அவனுக்கு.
கண்கள் ஒளிர அந்த அழைப்பை ஏற்று பேசியவளின் முகம் அவனுடன் பேசிய சில நொடிகளில் சுருங்கி போக, "சரி நான் இப்ப பிசியா இருக்கேன்! அப்புறம் வீட்டுக்கு போய் பேசுறேன்" என்று உரைத்து அழைப்பை துண்டித்தாள்.
அவளின் முக மாற்றங்களை கவனித்தவனாய் அமர்ந்திருந்த இன்பாவிற்கு அவள் சுந்தருடன் மகிழ்வாய் வாழவில்லையோ என்று தோன்றியது. என்றோ தான் செய்த பாவச்செயல் இன்றும் அவளின் வாழ்வை வருத்திக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணும் போதே அவனின் நெஞ்சில் சுருக்கென வலி வந்து போனது.
அன்னத்தின் அண்ணா என்ற விளிப்பிலேயே நங்கையின் கணவனிடம் தான் பேசுகிறாள் என்பதை உணர்ந்த சிந்துஜா, "நங்கை உங்க ஹஸ்பெண்ட் வரலையா?" எனக் கேட்டாள்.
"அண்ணா வேலை விஷயமா ஹைத்ராபாத் போயிருக்காங்க. அதான் அண்ணி பசலை நோய் வந்து வாடிப் போயிருக்காங்க" என்று கண் சிமிட்டி அன்னம் கேலி செய்ய, விழிகளை உருட்டியவளாய் அன்னம் என்றவாறு அவளின் கையினில் இடித்தாள் நங்கை.
"They both are made for each other you know. கல்யாணம் செஞ்சா இவங்களை மாதிரி வாழனும்ங்கிற ஆசையை எனக்கு உண்டு பண்ணினவங்க இவங்க" என்று மென்னகையுடன் உரைத்தாள் அன்னம்.
"போதும் போதும் அன்னம் எங்க புகழை பாடினது" என்று அழுத்தமாய் கூறி அவளை அடக்கினாள் நங்கை.
அவள் மகிழ்வான நிம்மதியான மணவாழ்வை வாழ்கிறாள் என்பதை கேட்டு அத்தனை நிம்மதியாக உணர்ந்தான் இன்பா. நெடுங்காலமாக மனத்தினை அழுத்தியிருந்த பாரம் குறைவதாய் உணர்ந்தான் அவன்.
அந்நேரம் நிகழ்ச்சி துவங்கவும் அனைவரின் கவனமும் அந்த பக்கம் திசை திரும்பியது. மேடையை கவனித்த வண்ணம் இருந்தாலும் நங்கையின் கண்கள் கலங்கி அவள் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதை பார்த்தும் பாராதது போல் பார்த்திருந்தான் இன்பா.
அன்னம் அந்நிகழ்ச்சிக்குள் மூழ்கி போனவளாய் நங்கையை கவனிக்கவில்லை.
அன்னம் குறிப்பிட்டதுப் போல் கணவனின் பிரிவாற்றாமையில் அழுகிறாள் என எண்ணிக்கொண்டான் இன்பா.
சில மணி நேரங்களுக்கு பிறகு விழா மேடையில் இவர்களின் பிராஜக்ட்டை குறிப்பிட்டு அழைக்க, இன்னபாவின் குழு மொத்தமாக அங்கே செல்ல, அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்திருந்து கைத்தட்டி மகிழ்ந்திருந்தனர்.
அந்த குழுவில் ஒரே பெண்ணாக புடவை அணிந்து அழகு பதுமையாக நின்றிருந்த அன்னத்தை தான் ரசித்து பார்த்தன அனைவரின் கண்களும்.
"அன்னம் செம்ம அழகுல நங்கை!" கைத்தட்டியபடி மேடையை பார்த்தவாறு உரைத்தாள் சிந்துஜா.
நங்கை மென்னகை புரிய, "இன்பாக்கு அன்னத்தை பார்க்கும் போது அவரை பார்த்த மாதிரியே இருந்துச்சுனு சொன்னாரு. அவரோட டிவின் மாதிரி ஃபீல் ஆகுதுனு சொன்னாரு. அவர் வேலைக்கு சேர்ந்த புதுசுல இவளை மாதிரி தான் இருந்தாராம். அப்புறம் வாழ்க்கையோட அனுபவம் கூடவே அவரோட வேலை கொடுத்த அனுபவம்னு அமைதியாகிட்டதா சொல்வாரு. முதல் நாள் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு வந்து, வீட்டுல தானா சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. என்னனு கேட்கும் போது தான் அன்னத்தை பத்தி இதையெல்லாம் சொன்னாரு. அதுக்கு பிறகு தினமும் அவ செய்ற சேஷ்டைகள் எல்லாமே சொல்வாரு. என்னடா அவ இவனு பேசுறேன்னு நினைக்க வேண்டாம். தினமும் அவளை பத்தி பேசி பேசி அவ எங்க வீட்டுல ஒரு ஆளு போல தான் எனக்கு. அன்னத்தை பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிருக்கு" என்று சிந்துஜா பேசிக் கொண்டே போக,
"so sweet of you சிந்து. நீங்க இவ்வளோ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை" என்றாள் நங்கை.
அனைவரும் சேர்ந்து வெற்றி கோப்பையை வாங்கி விட்டு அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
அதன் பின்பு சினிமா பாடல்களுடன் மெல்லிசை கச்சேரி நடைபெற, பஃபே முறையில் தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் வைக்கப்பட்டிருந்த பலவிதமான உணவினை அவரவருக்கு பிடித்தவாறு எடுத்து வந்து அமர்ந்து உண்டு கொண்டே கேட்டு ரசித்திருந்தனர்.
சூப்பர் சிங்கர் பாடல் போட்டி மூலம் பிரபலமான இளம் பாடகர் ஒருவரும், பாடகி ஒருவரும் இந்த இசை கச்சேரியில் பாடல்கள் பாடி தெறிக்க விட்டிருக்க, உணவை உண்டவாறே ரசித்து கொண்டிருந்தனர் பணியாளர்கள்.
நன்றியுரை பேசியவாறு நிகழ்ச்சி நிறைவு பகுதியை எட்டியிருந்த சமயம், சிந்துஜா தனது மகனை தூக்கியவாறு கழிவறைக்கு செல்ல வேண்டுமென வழி கேட்க, தானே அழைத்து செல்வதாய் கூறி உடன் சென்றாள் அன்னம்.
"சிந்து அக்கா உங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ்ஜா லவ் மேரேஜ்ஜா?" எனக் கேட்டவாறு சிந்துவுடன் நடந்தாள் அன்னம்.
"எங்களை பார்த்தா உனக்கெப்படி தோணுது?" ஆவலுடன் சிந்து கேட்க,
"எங்க மேனேஜர் இருக்கிற அமைதிக்கு அவர்லாம் லவ் செய்ற ஆளு போல தெரியலையே! அரேஞ்ச் மேரேஜ்ஜா தான் இருக்கனும்" என்றாள் அன்னம்.
அவளின் கூற்றில் புன்னகைத்தவளாய், "கல்யாணமே ஆகாதோனு நினைச்சிட்டு இருந்த எனக்கு கடவுளா பார்த்து கொடுத்த வரம் இவர்" என்றாள் சிந்துஜா.
"அடடா புருஷனை பத்தி பேசினா முகமெல்லாம் சிவக்குதே" என்று அன்னம் கேலி செய்ய,
வாய்விட்டு சிரித்த சிந்துஜா, "ஒத்துக்கிறேன்மா உனக்கு வாய் ஜாஸ்தி தான். அதுக்குனு என்னை இப்படி கேலி செஞ்சி நிரூபிக்க வேண்டாம்மா" என்று அவளை கிண்டல் செய்ய,
முகத்தை சுருக்கி, "சிந்துக்கா" எனச் சிணுங்கினாள் அவள்.
அங்கே மற்ற டீம் ஆட்கள் ஆங்காங்கே நின்றுக் கொண்டு பேசியவாறு உண்டு கொண்டிருக்க, இன்பாவும் நங்கையும் அந்த வட்ட மேஜையில் தனித்து அமர்ந்திருந்தனர். நங்கை உறங்கி கொண்டிருந்த தனது மகளை மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள்.
அவளிடம் என்னவெல்லாமோ பேச மனம் துடித்தாலும், வார்த்தை வராது தடுமாறியவனாய் நங்கையை இன்பா பார்த்திருக்க, "அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க இன்பா?" எனக் கேட்டாள் நங்கை.
தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்பதில் நெஞ்சில் நிம்மதி படர, குரலை செருமியவனாய், "நல்லா இருக்காங்க" என்றான்.
"உங்க அண்ணன் அண்ணி கூட உன் குடும்பம் சேர்ந்தாச்சா?" எனக் கேட்டாள்.
"ஹ்ம்ம் அம்மா அப்பா அவங்க கூட தான் இருக்காங்க" என்றான்.
"சிந்து உங்கம்மா பார்த்த பொண்ணா? ஐ மீன் அரேஞ்ச் மேரேஜா?" எனக் கேட்டாள்.
ஆமென அவன் தலையசைக்க,
"குட்"
"குட் செலக்ஷன்" என்றவள்,
"உன் பாஸ்ட் லவ் பத்தி உன் மனைவிக்கு தெரியுமா?" எனக் கேட்டாள்.
'எதுக்கு இப்ப இதை கேட்குறா?' என யோசித்தவாறே இல்லையென அவன் தலையசைக்க,
"ஹ்ம்ம் கேவலமா ஒரு பொண்ணை திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?" நக்கலாய் கேட்டிருந்தாள் நங்கை.
வெகு இயல்பாக இருந்த அவளின் முகத்தில் இருந்து அவளின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.
"நங்கை" என்றவன் அதிர்ந்தவாறு பார்க்க,
"பட் பாஸ்ட் இஸ் பாஸ்ட்ல! அதை போய் எதுக்கு ப்யூச்சர் லைஃப் பார்ட்னர்கிட்ட சொல்லிட்டு இருக்கனும். யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்கு பழக்கமே இல்லையே" வெகு இயல்பாய் கூறியிருந்தாள் நங்கை.
அவளின் பேச்சில் கோபம் பொங்க, "நங்கை" என அடிக்குரலில் சீறியவனோ, தன்னை கட்டுப்படுத்தியவனாய்,
"இன்னுமா அதெல்லாம் மறக்காம இருக்க நீ" என அதிர்வுடன் கேட்டான்.
தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்று மகிழ்ந்தவனுக்கு, அவள் அந்நிகழ்வினை மறக்காமல் இருப்பதினால் தான் தன்னை மறக்காமல் இருக்கிறாள் என்று புரிந்தது.
"இதெல்லாம் ஆயுளுக்கும் மறக்க முடியாதுனு தான் ஒரு காலத்துல நினைச்சேன். தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு" என்றாள் நங்கை.
சுருக்கென நெஞ்சில் நெருஞ்சி முள் குத்திய வலி அவனுக்கு.
"ஏன் இப்படி பேசுற நங்கை" குற்றவுணர்வுடன் அவன் கேட்க,
"எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னை சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன். சுந்தர் மட்டுமே என் மொத்த வாழ்க்கையிலும் நிறைஞ்சி இருந்திருப்பான். கரும்புள்ளியா கூட உன்னை என் வாழ்க்கைல நுழைய விட்டிருக்க மாட்டேன்" மென்மையான குரலில் சீறியிருந்தாள் அவள்.
இன்பா ஏதோ கூற வாயெடுக்கும் போது, சிந்துஜா தனது மகனுடன் அங்கு வந்து விட, அமைதியாகி விட்டான் இன்பா.
இத்தனை தவறானவனாகவா தன்னை அவள் நினைத்து வைத்திருக்கிறாள்? இன்பாவிற்கு மனது ஆறவேயில்லை.
தன் மீது இன்னும் இத்தனை கோபமாய் அவள் இருப்பாளென அவன் நினைத்திருக்கவே இல்லை. ஏதேனும் வகையில் அன்று தான் அவ்வாறு பேசியதற்கான சூழ்நிலையையும் காரணத்தையும் அறிந்திருப்பாள் என்றே நினைத்திருந்தான் அவன்.
ஆனால் அவளின் இந்த நேர்முக தாக்குதல் அவனை நிலைகுலைய செய்திருந்தது. குற்றவுணர்வு அதிகமாகி மனது பாரமாகி போனது.
நங்கைக்கு நெஞ்சமெல்லாம் கோபத்தில் காய்ந்து கிடந்தது. ஏன் தான் இத்தனை கோபம் கொள்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.
அச்சமயம் அவளின் அலைபேசி அலற, மகளை தோளில் தூக்கியவாறு கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நடந்தவாறு சென்றவள் அழைப்பை ஏற்றாள்.
"என்னடா பப்ளிமாஸ்! இன்னும் வீட்டுக்கு போகலையா?" மறுபக்கம் கேட்ட கணவன் சுந்தரின் குரலில் இங்கு சரேலென கண்களில் இருந்து நீர் வழிந்தது.
"எனக்கு உன்னை இப்பவே பார்க்கனும்! கட்டிப்பிடிச்சிட்டு அழனும்" கமறிய குரலில் உரைத்தாள் நங்கை.
பதறி விட்டான் சுந்தர். "என்னடா? என்னாச்சு? அங்கே எதுவும் பிரச்சனையா?" என பதறியவாறு கேட்டான்.
"இல்ல இல்ல! அதெல்லாம் ஒன்னுமில்லை!" அவனின் பதட்டமான குரலில் தன்னை மீட்டுக் கொண்டவளாய்,
"ஐ மிஸ்டு யூ சோ மச்! அதான் அப்படி சொல்லிட்டேன்! இங்க ஒரு பிரச்சனையும் இல்லை" என்றாள்.
"உஃப்" என்ற அவனின் பெருமூச்சு கேட்டது அவளுக்கு.
"அதான் நான் வர இன்னும் மூனு நாள் ஆகும்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னேன்" என்றவன் சொன்னதும் தான், தான் அவன் மீது அந்நேரம் கோபம் கொண்டு பிசியாக இருப்பதாக உரைத்து பின்பு பேசுவதாக கூறி அழைப்பை துண்டித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
"ஸ்ஸ்ஸ் ஆமால்ல! உன் மேல நான் கோபமா இருந்தேன். உன்கிட்ட பேசவே கூடாதுனு நினைச்சேன்" என்றாள்.
அவளின் பேச்சில் சிரித்தவனாய், "ஏன் பப்ளிமாஸ் இந்த மூட் ஸ்விங்! என்னமோ சரியில்லைன்னு தோணுதே" என்றான்.
தன்னை அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவனது அன்பில் நெக்குருகி போனாள்.
"எனக்கு உடனே உன்னை பார்க்கனும் போல இருக்கு!" மீண்டுமாய் கண்களில் நீர் சூழ அவள் உரைக்க,
"இப்ப என் பப்ளிமாஸ் பத்திரமா வீட்டுக்கு போய் சேருவியாம். அப்புறம் உன் புருஷனுக்கு வீடியோ கால் போடுவியாம். அப்புறம் நைட் முழுக்க என்னை பார்த்துட்டே இருப்பியாம்! சரியா! கண்ணை தொட" என்றதும்,
கைபேசி வைத்திருந்த கையை கொண்டே கண்களை துடைத்துக் கொண்டு, "சரி நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றேன்" என்றவளாய் தனது இருக்கைக்கு சென்றாள்.
இன்பா அவனது டீம் மக்களை வழியனுப்பி விட்டு அவனது மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அங்கே அன்னம் இல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு, "அன்னம் எங்கே சிந்து" என்று கேட்டாள் நங்கை.
"மோகன் கூப்பிட்டாங்கனு போனா நங்கை" என்றாள் சிந்துஜா.
"ஓ இந்த பொண்ணு வந்துட்டா கிளம்பலாம்னு பார்த்தேன்" என்றவாறு அமர்ந்து விட்டாள் நங்கை.
"டயர்ட்டா தெரியுறீங்களே? எதுவும் குடிக்கிறீங்களா?" என வாஞ்சையுடன் சிந்துஜா கேட்க, வேண்டாமென தலையசைத்து சிந்துவின் கன்னத்தை வருடியவளாய், "உங்களை கட்டிக்கிட அன்னம் மேனேஜர் ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கனும்" என்றாள்.
"இல்ல இல்ல! அவரை கட்டிக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும் நங்கை. இப்படி அன்பான அக்கறையான கணவன் கிடைக்கிறதே வரம் தானே" பெருமை பொங்க தூரத்தில் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த கணவனை பார்த்தவளாய் சிந்துஜா கூற, புன்னகைத்தாள் நங்கை.
அன்னம் வரவும் சிந்துவிடம் விடைபெற்று நங்கையும் அன்னமும் கிளம்ப, தனது மேனேஜரை வழியனுப்பி விட்டு வந்த இன்பாவுடன் கிளம்பியிருந்தாள் சிந்துஜா.
இரவு பத்து மணியளவில் வீட்டை அடைந்தனர் இன்பா குடும்பத்தினர்.
வீட்டிற்கு வரும் போதே யுகேந்திரன் உறங்கியிருக்க, அவனை கட்டிலில் கிடத்திவிட்டு சிணுங்கிய மகனை போர்வை போர்த்தி உறங்க வைத்தவனாய் இன்பா அமர்ந்திருக்க, ஓய்வறைக்கு சென்று சுத்தப்படுத்திக் கொண்டு இலகுவான உடைக்கு மாறி வந்திருந்தாள் சிந்துஜா.
"பால் எதுவும் குடிக்கிறீங்களாப்பா? யுகிக்கு ஆத்தி எடுத்து வைக்க போறேன். உங்களுக்கும் வேணும்னா எடுத்துட்டு வரேன்" என்று கேட்டாள் சிந்து.
"இல்லமா வேண்டாம்" என்றவன் கூறியதும், அவன் முகம் பார்த்து தலையை வருடியவளாய், "முகம் ஏன் இவ்வளோ சோர்வா இருக்கு. வண்டி ஓட்டிட்டு வந்த டயர்ட்டாப்பா?" எனக் கேட்டாள்.
தனது தலையில் இருந்த அவளின் கைப்பற்றி வருடியவனாய் ஏக்கத்துடன் அவள் முகத்தை ஏறிட்டான். நடந்தவை அனைத்தையும் அவளிடம் கூறி அவளின் மடியில் தஞ்சமடைய ஏங்கியது அவன் உள்ளம்.
பெருமூச்செறிந்தவனாய் எழுந்தவன், "நீ போய் யுகிக்கு பால் எடுத்துட்டு வா! நான் டிரஸ் சேஞ்ச் செஞ்சிட்டு வரேன்" என்று ஓய்வறைக்குள் சென்றான்.
'என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்காரு. பரிசு வாங்கின பிறகு அவ்ளோ ஹேப்பியா இருந்தாரே! மேனேஜர்கிட்ட பேசிட்டு வந்த பிறகு தான் ஏதோ யோசனைலயே இருக்காரு. ஏதோ ஆபிஸ் பிரச்சனையை யோசிச்சிட்டு இருக்காரு போல்! என்னனு கேட்கனும்' என்று மனதோடு நினைத்துக் கொண்டவளாய் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓய்வறையில இருந்து இன்பா வெளியே வரும் போது படுக்கையில் மகனின் வலது புறமாய் படுத்தவளாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் சிந்துஜா.
மகனின் இடதுபுறமாய் சென்று படுத்த இன்பாவிற்கு உறக்கம் கண்களை எட்டவில்லை.
அன்றிரவு நெடுநேரம் உறங்காது நங்கை பேசியதை பற்றியே சிந்தித்திருந்தவன், நங்கையிடம் அன்று நடந்த அந்த நிகழ்விற்கான காரணத்தை விளக்கி, அவளுக்கு தன் மீதிருக்கும் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டுமென முடிவு எடுத்த பின்பே சற்று நிம்மதியாகி உறக்கத்திற்குள் ஆழ்ந்தான்.
-- தொடரும்