top of page

என் இனிய இன்பனே - 24 (FiINAL)

என் இனிய இன்பனே - 24


அதே நாள் மாலை வேளையில் அங்கே தனது வீட்டில், தான் இன்பாவிடம் கோபமாகப் பேசியதை நங்கையிடம் கூறிக் கொண்டிருந்தான் ராஜன்.


அதனைக் கேட்டவாறு சமையலறையில் இருந்து முகப்பறைக்கு வந்த சுரேந்தர், "ஏன்டா அப்படிப் பேசின?" எனக் கேட்டார்.


"இன்பா அப்படிப் பேசினதும் கோபம் வந்துடுச்சு மாமா! தப்பு செஞ்சிட்டுப் பிராயச்சித்தம் செஞ்சா மட்டும் சரியாகிடுமா? தப்பே செய்யாம நங்கை வலி அனுபவிச்சதுக்கான பலனை இன்பா அனுபவிச்சி தானே ஆகனும். அது தானே கர்மா" என்றான் ராஜன்.


"ஆமாடா அது தான் சரி! ஆனா நங்கையை அப்படிப் பேசினதுக்காக அவன் வருந்தினான்டா! அதைத் தான் இப்படிச் சொல்லி வச்சிருக்கான். அவன் ஏற்கனவே நிறைய அனுபவிச்சிட்டான் சுந்தர்" என்றதும்,


"உங்களுக்கு எப்படித் தெரியும்?" என நங்கை அவரைப் பார்த்து கேட்க, தான் இன்பாவை சந்தித்தது முதல் அவன் தன்னிடம் அழுதுக் கண்ணீர் சிந்தி பாவ மன்னிப்பு கேட்டது சிந்துவிற்கு இந்த விஷயம் தெரிந்தது வரை அனைத்தையும் அவர்களிடம் கூறியிருந்தார் சுரேந்தர்.


நங்கைக்கு ஸ்தம்பித்த நிலை தான்! எப்பேர்பட்ட தந்தையைத் தான் பெற்றிருக்கிறோம் என மனம் நெகிழ்ந்து போக, "அப்பா" என அவரை அணைத்திருந்தாள் நங்கை‌.


"நீங்களும் சுந்தரும் இறைவன் எனக்குக் கொடுத்த வரம்ப்பா" கண்ணில் நீருடன் கூறியவளை ஆதூரமாய் அணைத்திருந்தார் சுரேந்தர். மகிழ்வான புன்னகையுடன் இதைப் பார்த்திருந்தான் சுந்தரராஜன்.


*****


அடுத்து வந்த மாதத்தில் ஒரு வாரயிறுதி நாளில் அன்னம் இன்பாவின் வீட்டிற்கு வந்திருந்தாள்‌.


"இன்பா எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க சிந்துக்கா! இந்தக் கல்யாணம் நல்லபடியாக நடக்கிறதுக்கு அவரும் முக்கியமான காரணம். அதனால நீங்க இரண்டு பேரும் கண்டிப்பாக வரனும்" என்று தாம்பூலத்துடன் திருமண அழைப்பிதழை கொடுத்து அவர்கள் இருவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தாள் அன்னம்.


"கண்டிப்பாக" என ஏதோ இன்பா பேச வாயெடுக்க,


"நிச்சயமா வர பார்க்கிறோம் அன்னம்! ஆனா அப்ப சூழ்நிலை எப்படி இருக்கும்னு பார்க்கனும். அப்ப அஞ்சு மாசம் முடிஞ்சிருக்கும். நாங்க டாக்டர்கிட்ட கன்செல்ட் செஞ்சிட்டு சொல்றோம்" என்றாள் சிந்து.


அன்னத்தை அங்கேயே சாப்பிட வைத்து அவளுடன் நிறைய உரையாடி விட்டே அவளை அனுப்பி வைத்தாள் சிந்துஜா.


அன்னத்தை வழியனுப்பி வைத்ததும் சிந்துவிடம் வந்த இன்பா, "அன்னம் கல்யாணத்துக்குப் போக வேண்டாம்னு நினைக்கிறியா சிந்து! அதான் டாக்டர் ஏற்கனவே உனக்கு டிராவல்லாம் செய்யலாம். எதுவும் பிராப்ளம் இல்லைனு சொல்லிருக்காரே" என வினவினான்.


"அதெல்லாம் போக இஷ்டம் தான். ஆனா நங்கையும் அவங்க கணவனும் வருவாங்களே! நீங்க எதையும் வாயை விட்டுட கூடாதுன்ற யோசனைல தான் அப்ப பார்க்கலாம்னு சொல்லிட்டேன்" என்றாள் சிந்துஜா.


இதற்கு இவன் என்ன சொல்லி விளக்க முடியும்!


"சரி உன் இஷ்டம்! ஆனா போற ஐடியா இருந்தா முன்னாடியே சொல்லிடு! நான் ஆபிஸ்ல அதுக்கு ஏத்த மாதிரி அரேஞ்ச்மெண்ட்ஸ் செய்யனும்" என்றதோடு அவளின் முடிவாக இதனை விட்டு விட்டான்.


*****


அன்னத்தின் கல்யாண நாள்!


ஒப்பனையற்ற மிதமான இயல்பான அலங்காரத்துடன் தங்க பதுமையாய் மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அன்னம்.


அன்னத்துடன் அன்ன நடையிட்டு வந்து கொண்டிருந்த நங்கையும் மீனாட்சியும் மேடையில் வந்து நின்றதும், "எங்கேயும் இடிச்சிக்காம பார்த்து பத்திரமா நில்லு பப்ளிமாஸ்" என்று நங்கையிடம் கூறிவிட்டு தனது மகளைத் தூக்கி கொண்டு ராஜன் செல்ல,


மீனாட்சியைத் தூக்கச் சொல்லி அவளின் மகள் புடவையை இழுத்தவாறு அடம்பிடிக்க, அதனைப் பார்த்து அங்கே வந்த ஈஸ்வரன் மகளைத் தூக்கியவனாய், "ரொம்ப நேரம் நிக்காத பச்சக்கிளி! கால் வலிச்சிதுனா போய் உட்கார்ந்துக்கோ" என்று கூறி விட்டுச் சென்றான்.


"பாருங்கடா இந்த அண்ணன்களின் அலப்பறையை" கல்யாணி கூற, சிரித்திருந்தனர் மீனாட்சியும் நங்கையும்‌.


கல்யாணியின் பேச்சில் அனைவரும் சிரித்திருக்க, ஈஸ்வரனும் ராஜனும்  வந்திருந்த விருந்தினர்களைக் கவனித்த வண்ணம் இருந்தனர். கல்யாணியின் கணவர் கருணாகரன் தனது மகனுடன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார்.


இன்பா தனது மனைவி மகனுடன் வந்திருக்க, அவனை வரவேற்று பேசி அமர வைத்த ராஜன், அன்னத்தின் மேலாளரென அவளின் தாய் தந்தையரிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தான்.


"கெட்டி மேளம்! கெட்டி மேளம்" என்ற ஓசையுடன் மேள வாத்தியங்கள் முழுங்க மணமகளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டியிருந்தார் மாப்பிள்ளை.


மேடையில் திருமண நிகழ்வுகள் நடந்த வண்ணமிருக்க, "சிந்து! எத்தனை மாசம்? சொல்லவே இல்லை" என்று அவளின் அருகினில் வந்தமர்ந்தாள் நங்கை.


"அஞ்சு மாசம் நங்கை! நீங்க?" என அவளின் வயிற்றைப் பார்த்துக் கேட்ட சிந்துவிடம் பதிலளித்தவளாய், "எப்ப வந்தீங்க? இப்ப தான் பார்த்தேன் உங்களை! சென்னைலருந்து மதுரைக்கு எப்படி வந்தீங்க? எங்ககிட்ட சொல்லிருந்தா ரூம் போட்டிருப்போம்ல" என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க, மென்னகையுடன் பதிலிறுத்திருந்தாள் சிந்துஜா.


அருகில் அமர்ந்து அமைதியாக இவர்களின் பேச்சைக் கேட்டிருந்தான் இன்பா.


அந்நேரம் அந்தப் பக்கமாகச் சென்ற ராஜனைப் பிடித்து நிறுத்திய நங்கை, "சிந்துவும் பிரக்னென்ட்டா இருக்காங்கடா" என்றாள்.


"ஓ அப்படியா! கங்கிராட்ஸ் இன்பா" என்று மகிழ்வுடன் இன்பாவின் கையைக் குலுக்கி வாழ்த்துக் கூறினான் ராஜன்.


சுரேந்தரும் அச்சமயம் அங்கு வந்தவராய் இவர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருந்தார்.


மேடையில் ஒவ்வொருவராகப் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, "வாங்க யாரும் இடிக்காம உங்களை நான் கூட்டிட்டு போறேன்" என்று கூறியவாறு ராஜன் எழுந்து நிற்க, கூடவே எழுந்தாள் நங்கை.


"நீ எங்கே வர! நீ இங்கேயே இரு" என்றான் ராஜன்.


"இல்ல அவங்களும் வரட்டும்" என்றாள் சிந்து‌.


மணமக்களின் ஒரு புறம் இன்பாவும் சிந்துவும் மகனுடன் நின்றிருக்க, மறுபுறம் நங்கையும் ராஜனும் மகளுடன் நின்றிருக்க அழகாய்ப் பதிவாகியது அந்தப் புகைப்படம்.


சிந்துவும் இன்பாவும் உணவினை உண்டு விட்டு மீண்டும் மண்டபத்தில் இருந்த நாற்காலியில் வந்து அமர, அங்கு வந்து அமர்ந்தாள் நங்கை.


யுகேந்திரன் ஓய்வறைக்குச் செல்ல வேண்டுமெனக் கூறவும், இன்பா அவனை அழைத்துச் சென்றான்.


திருமண நிகழ்வுகள் நிறைவடைந்து உண்ணும் இடம் நிரம்பியிருக்க, மண்டபத்தின் முகப்பறை சற்று அமைதியாக இருந்தது.


"தேங்க்யூ நங்கை" என்றாள் சிந்து.


"எதுக்கு?" என நங்கை கேட்க,


"எல்லாத்துக்கும்! என் புருஷனை விரோதியா பார்க்காம இப்படி இயல்பாக எங்ககிட்ட பேசுறதுக்கு! ஃப்ரண்ட்டா என்கிட்ட நீங்க பழகுறதுக்கு! என் புருஷனை மன்னிச்சதுக்கு! மன்னிச்சிட்டீங்க தானே?" கெஞ்சும் பாவனையுடன் குற்றயுணர்வான குரலில் சிந்து கேட்டிருக்க,


சிந்துவின் கரத்தினை மென்மையாகப் பற்றியவளாய், "உங்களைக் கட்டிக்க நிஜமாவே இன்பா பெரிய புண்ணியம் செஞ்சிருக்கனும் சிந்து. நான் இப்ப இயல்பாக இப்படிப் பேச முடியுறதுக்குக் காரணமே நீங்க இப்படி என்கிட்ட இயல்பாக இருக்கனால தான் சிந்து.


சுந்தர் தான் எனக்கானவன்ற மாதிரி இன்பா தான் சிந்துவிற்கானவன். அன்னிக்கு நடந்த கெட்ட நிகழ்வுல எனக்கு நல்லது தான் நடந்திருக்கு. என் சுந்தர் எனக்குக் கிடைச்சிருக்கான். உங்க இன்பா உங்களுக்குக் கிடைச்சிருக்கான். அதனால் இதை மறந்துடுவோம் சிந்து" என்றாள் நங்கை.


அந்நேரம் அங்கு வந்த இன்பா, "கிளம்பலாமா சிந்து? டைம் ஆகிடுச்சு" எனக் கேட்டான்.


"அதுக்குள்ள கிளம்புறீங்களா?" என நங்கை இன்பாவைப் பார்த்துக் கேட்க, "ஆமா நங்கை! ரூமுக்கு போய்ட்டு கிளம்பனும். எனக்கு நாளைக்கு ஆபிஸ் லீவ் இல்லை" என்றான்.


தான் அவனை மன்னித்து விட்டதாய் காண்பிக்கும் செயலாய் சிந்துவின் முன்பே இன்பாவிடம் சில வார்த்தைகள் பேசியிருந்தாள் நங்கை.


அந்நேரம் நங்கையைத் தேடி ராஜன் அங்கே வர, இருவருமாய் இணைந்து இன்பாவின் குடும்பத்தினரை வழியனுப்பி வைத்தனர்.


******


ஈராண்டுகள் கழித்து!


சாரல் மழையாய் வானம் தூறிக் கொண்டிருக்க, தனது மகிழுந்தை நிறுத்தியவனாய் அந்தப் பள்ளி வளாகத்தினுள் நுழைந்தான் இன்பா.


"அப்பா" எனக் கத்தியவாறு யுகேந்திரன் அவனை நோக்கி ஓடி வர, மகனைக் கைகளில் தூக்கியவளாய் மழையில் அவன் நனையாத வண்ணம் குடை பிடித்து நடந்து சென்றான் இன்பா.


குடைக்குள் இருந்து வெளியே கை நீட்டி மழை நீரை கைகளில் தட்டி விளையாடியவனாய் அன்றைய நாள் பள்ளியில் நிகழ்ந்ததை எல்லாம் தந்தையிடம் கூறியவாறு யுகி இருக்க, பொறுமையாக ம்ம்ம் கொட்டியவாறே கேட்டவனாய் தனது மகிழுந்தை நோக்கி சென்றான் இன்பா.


மகனை கீழிறக்கி குடையை மடித்து விட்டு மகிழுந்தின் கதவினைத் திறக்க, "ஹாய் யுகி" என்று மகனை நோக்கி கை நீட்டினாள் சிந்துஜா.


"ம்மாஅஅஅ" என்று சந்தோஷமாய்ப் பின்னிருக்கையில் இருந்த தாயிடம் தாவியவன், அருகில் முட்டிக்கால் போட்டு விளையாடிக் கொண்டிருந்த தங்கையின் கன்னத்தைக் கிள்ளினான்.


"எப்பவும் நீ தானேமா வருவ! இன்னிக்கு நீ வரலைனு நினைச்சு யுகி ஃபீல் செஞ்சான்" என்று அவன் கூறவும்,


மகனின் பேச்சைக் கேட்டு சிரித்தவாறே இன்பா மகிழுந்தை இயக்க,


"அப்படியா தங்கம்! யுகி என்னைத் தேடுவான்னு சொல்லி தான் அம்மா தங்கச்சி பாப்பாவையும் கூட்டிட்டு அப்பா கூட வந்துட்டேன்" அவனின் தலை முடியை கோதியவளாய் உரைத்தாள் சிந்து.


"இந்துமா" எனத் தங்கையைத் தூக்கி மடி மீது வைத்து விளையாடிய மகனைப் பார்த்து சிரித்திருந்தாள் சிந்துஜா.


இன்பா சிந்துஜாவிற்கு இரண்டாவதாக அவர்களின் ஆசைப்படியே பெண் குழந்தை பிறக்க, இவர்கள் இருவரின் பெயரும் கலந்த பெயராய் இந்திரஜா என்னும் பெயரை இன்பா தான் தேர்வு செய்து சூட்டினான்.


இன்று இன்பா வீட்டிலிருந்தே வேலை செய்திருந்ததால் மகனை அழைக்கக் குடும்பத்துடன் பள்ளிக்குச் சென்றிருந்தான்.


பின் மாலை பொழுது வரை இன்பாவின் அலுவல் பணி சென்று கொண்டிருக்க, யுகியையும் இந்துவையும் கவனித்தவளாய் சிந்துவின் நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.


அன்றைய ஓய்வற்ற நாளின் சோர்வையும் அழுத்தத்தையும் போக்க, மனதிற்கு இதமான படத்தைக் காணலாம் என எண்ணியவனாய் இரவு பத்து மணியளவில் இணையத்தில் படத்தினைத் தேடியவனின் கைகள் தானாக அந்தப் படத்தினில் வந்து நின்றது.


அன்றொரு நாள் குற்றயுணர்வோடும் பதைபதைப்போடும் இறுகிப் போய் பார்த்திருந்த  அப்படத்தை இன்று முற்றிலும் மாறான மனநிலையில் பார்க்க எண்ணினான் இன்பா.


முகப்பறையில் குட்டி மெத்தையைத் தரையில் விரித்து மகளைப் படுக்க வைத்திருக்க, அவளின் அருகில் அவளுடன் விளையாடியவளாய்ப் படுத்திருந்தான் யுகேந்திரன்.


சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, தங்களின் மகவுகளைப் பார்வையில் வைத்தவாறே கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள் சிந்துஜா.


"நான் என் அம்மா கூட இருந்ததை விட அப்பா கூட இருந்ததை விட உன் கூட நல்லா இருக்கேன்! சந்தோஷமா இருக்கேன்"


படத்தினில் ஓடிய இக்காட்சியினில் இன்பாவை தழுவின அவளின் கண்கள்.


இன்பாவுடனான வாழ்வு தனக்களித்திருக்கும் இன்பத்தினையும் நிறைவினையும் உணர்ந்தவளாய் மென் ஸ்பரிசமாய் அவனை வருடின அவளின் கண்கள். மனதினுள் நிரம்பி வழிந்த அவன் மீதான நேசத்துடன் அவனின் முன்னங்கையை இறுகப் பற்றிக் கொண்டு தோள் சாய்ந்தாள் சிந்துஜா.


அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவனாய் அவள் தோள் மீது கைப்போட்டுத் தன்னோடு அணைத்தவாறு வாகாய் அமர்ந்து மீண்டுமாய்ப் படத்தினுள் மூழ்கிப் போனான் இன்பா.


மணாளனாகி மனதிற்கினியவனாய் மாறிப்போன மன்னவனுக்குள் மூழ்கிப்போகத் தவித்த மனத்தினை அடக்கி ஆசையாய் அவன் மார்போடு சாய்ந்திருந்தாள் சிந்துஜா.


கணவனை எண்ணி நெஞ்சம் நெகிழ, படத்தில் கேட்ட ஜோதிகாவின் குரலாய் அவளின் உள்ளமும் தன்னவனிடம் அதையே உரைத்திட சித்தமாயிருந்தது. மார்பில் இருந்து நிமிர்ந்து பார்க்க கணவனைக் காதலாய்த் தழுவின கண்கள்.


சில்லுனு ஒரு காதல் படத்தினை இணைய வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா.


சில திரைப்படங்கள் நம்முடன் உறவாடி வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வைத்து விடும்.


இன்பாவிற்கும் சிந்துவிற்கும் இந்தப் படத்தின் பல காட்சிகள் அவர்கள் வாழ்வின் பக்கத்தைப் புரட்டிக் காண்பித்த வண்ணம் நகர்ந்து சென்றது.


"I'm the happiest man in the world"


சூர்யாவின் மகிழ்வான குரல் தொலைக்காட்சியின் வழியாகச் செவியை நிறைக்க, தன்னை ஊடுருவும் மனைவியின் பார்வையை நோக்கி பயணித்தன அவனின் கண்கள்.


நேசிப்பதை விட நேசிக்கப்படுவதின் சுகம் பேரின்பம் அல்லவா! இன்பாவின் பேரின்பம் அவள்! தன்னை ரசிக்கும் மனைவியை அதே ரசனை பார்வையுடன் பார்த்திருந்தான் இன்பா. படக்காட்சியினுள் ஊடாடிக் கொண்டிருக்கும் காதல் இவர்களையும் தாக்கிக் கொண்டிருந்தது.


கணவனை நிமிர்ந்து பார்த்தவள், "உங்களுக்கு என்னிக்காவது இப்படித் தோணிருக்காப்பா" அவனின் கை வளைவுக்குள் இருந்தவளாய் ஆவலுடன் கேட்டாள்.


"எப்படி?" புருவம் உயர்த்தியவாறு கேட்டான் இன்பா.


"இப்படி! இந்த நொடி! இந்தப் பொழுது, உலகத்திலேயே மகிழ்வானவன் நான் தான்னு உங்களுக்கு என்னிக்காவது தோணிருக்கா?" எனக் கேட்டாள் சிந்துஜா.


"ஹ்ம்ம் ஆமா! என் பொண்டாட்டியால என்னை எந்த நிலையிலும் வெறுக்க முடியாதுனு தெரிஞ்ச அந்த நாள்! ஒரு முழு நாளுக்குக் கூட அவளால என் மேல கோபத்தைப் பிடிச்சி வைக்க முடியாதுனு நான் தெரிஞ்சிக்கிட்ட அந்த நாள்! நீ இரண்டவதா கர்ப்பமா இருக்கிறதா தெரிஞ்சிக்கிட்ட அந்த நாளின் இரவில், என் முன்காதல் பற்றி தெரிந்தும், என் வாழ்வில் நான் செய்த தவறுகள் எல்லாம் தெரிந்தும் என்னை மன்னிச்சி அள்ளி அரவணைச்சிக்கிட்ட அந்த இரவில் நான் நினைச்சேன் சிந்து! I'm the happiest man in the world"


கண்களில் ஆனந்த கண்ணீரும் காதலும் மின்ன மகிழ்வுடன் கணவனைப் பார்த்திருந்தாள் சிந்து‌.

இது போதும் எனக்கு

இது போதுமே

சிந்துவின் உள்ளம் கூக்குரலிட எதையோ சாதித்த உணர்வு அவளுக்கு!


"லவ் யூப்பா" என்றவளாய் அவனை அணைத்து மார்போடு சாய்ந்து கொண்டாள்.


இத்தனை வருட வாழ்வில் தனது செயலினால் உணர்த்தியிருந்த காதலை இன்று வாயினால் உரைத்திருந்தாள் சிந்து.


"லவ் யூ டூ டா சிந்து மா" அவளின் உச்சியில் முத்தமிட்டவனாய் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் இன்பா.


இவர்களின் காதலுடனான இந்த இல்லற வாழ்வு இப்படியே தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.


அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்

© KPN NOVELS COPY PROTECT
bottom of page