என் இனிய இன்பனே - 23
அதே காஞ்சிபுரத்தில் பழங்காலக் கட்டமைப்பின்படி ஓடு வேய்ந்த கூரையும் அதன் மேல் மச்சியுமெனச் சற்றுப் பிரமாண்டமாக இருந்த அவ்வீட்டின் முன்பு பழைய நிகழ்வுகளை நினைவுக் கூர்ந்தவனாய் நின்றிருந்தான் இன்பா.
அந்த இரும்பு கதவினைத் தாண்டிச் சென்ற இன்பாவின் நினைவினில் தாவணியில் வந்து கதவைத் திறந்த சிந்துவின் நினைவுகள் வந்து இதழில் குறுநகையைப் படர விட்டது.
பூரிப்பும் நெகிழ்வுமாய் அந்த வீட்டைப் பார்த்தவாறு அவனுடன் நடையிட்டாள் சிந்து. அவளுக்கான வாழ்வை கண்டடைந்த இடம் அல்லவா இந்த இல்லம்! எப்பொழுதுமே இந்த இல்லத்தின் மீது தனிப்பிடித்தம் உண்டு அவளுக்கு.
அழைப்பொலியை அழுத்திவிட்டு மகனைக் கையில் ஏந்தியவாறு மனைவியின் தோளின் மீது கையைப் போட்டவாறு நின்றிருந்த இன்பாவின் மனத்தினில் கலவையான உணர்வுகள் சூழ்ந்திருந்தன.
வாரயிறுதி நாளான சனிக்கிழமை மாலை வேளையில் தங்களது மகிழுந்திலேயே காஞ்சிபுரம் நோக்கி பயணித்திருத்தனர் இன்பா குடும்பத்தினர். இங்கு வந்து சேர இரவு ஏழு மணி ஆகியிருக்க, கிட்டதட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு, தான் பிறந்து வளர்ந்து திருமணம் முடித்த வீட்டினைக் கண்டதும் மனத்திற்குள் இனம்புரியாத வலியையும் இன்பத்தையும் ஒருசேர உணர்ந்தான் இன்பா. சிந்துவிற்கு முழு மகிழ்ச்சி மட்டுமே! தனது பிறந்த வீட்டிற்கு வந்தது போன்ற மகிழ்ச்சி அவளுக்கு!
வேலையாள் ஒருவர் வந்து கதவைத் திறக்க, மகனை வாசலில் கண்டதும் ஓடோடி வந்த பூர்ணம் பேரனைக் கையில் வாங்கியவாறு, "வாடா இன்பா! வா மா சிந்து" என்றவராய் இருவரையும் உள்ளே அழைத்தவர், "என்னங்க இங்க வாங்க" எனக் கணவனையும் அழைத்தார்.
அவரின் குரலைக் கேட்டு தூயவனும் திவ்யாவும் அவர்களது அறையிலிருந்து வெளியே வர, பூர்ணத்தின் கரத்தினில் இருந்து இறங்கிய யுகேந்திரன் தாயிடம் சென்று ஒண்டிக் கொண்டான்.
"இதுக்குத் தான் பேரனை அடிக்கடி கூட்டிட்டு வரனும்னு சொல்றது! பாரு என் கைல நிக்காம யாரோ போல ஓடிப் போறான்" என்று சிந்துவைப் பார்த்துக் குற்றம் சாட்டியவராய் இன்பாவின் தாடையைப் பற்றி, "அம்மாவை இப்பவாவது மன்னிச்சிட்டியா இல்ல இன்னமும் முறுக்கிட்டு தான் இருப்பியா?" கண்கள் கலங்கக் கேட்டிருந்தார்.
"அம்மா" அவரின் கண்களைத் துடைத்தவன், "எனக்கு இப்ப உங்க மேல எந்தக் கோபமும் இல்லை. இப்படிக் கவலைப்படுறதை விட்டுட்டு உடம்பைப் பார்த்துக்கோங்க. ஆனா என் மனைவிக்கு அவளுக்கான மரியாதை கிடைக்கலைனா அப்புறம் நான் இந்தப் பக்கமே வர மாட்டேன். அதையும் மனசுல வச்சிக்கோங்க" என்றவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அறையில் இருந்து வெளியே வந்தார் கந்தசாமி.
தாத்தாவைக் கண்டதும் அவரிடம் ஓடினான் யுகேந்திரன். பேரனைக் கையில் தூக்கிக் கொஞ்சியவராய் புன்சிரிப்புடன் நின்றிருந்தார் கந்தசாமி.
பூர்ணத்தின் முகம் மகனின் பேச்சில் சுணங்கினாலும், "நான் ஏன்ப்பா உன் பொண்டாட்டியை மரியாதை குறைவா நடத்தப் போறேன்! அவளும் இந்த வீட்டு மருமக தானே! அதுவும் இரண்டாவது பிள்ளையைச் சுமந்துட்டு இருக்கவளை நான் ஏன் குத்தம் சொல்லப் போறேன்" என்றார்.
"இன்பா! உனக்கு மேலறை ரூமையே தான் ஏற்பாடு செஞ்சிருக்கோம். அங்கேயே தங்கிக்கோங்க. நாளைக்குக் காலைல சீக்கிரம் எழுந்து கிளம்பனும். காலைல குடும்பமாகக் காமாட்சி அம்மன் கோவில் போகலாம்னு பிளான் செஞ்சிருக்கோம்" என்றார் கந்தசாமி.
"ஆமாடா அப்படியே மதியம் வெளில சாப்பிட்டுட்டு மூவி போய்ட்டு வரலாம்னு பிளான்! உனக்கு ஓகே தானே" எனக் கேட்டான் தூயவன்.
"ஓகேண்ணா! ரிப்ரெஷ் ஆகிட்டு வரோம்" என்றவனாய் இன்பா மாடிப்படி ஏற, அவனுடன் சிந்துவும் ஏறினாள்.
யுகேந்திரன் தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, பூர்ணம் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
இன்பா முன்பு தங்கியிருந்த அதே மேலறை அப்படியே இருக்க, சுற்றி முற்றி பார்த்தவனாய் இன்பா உள்ளே செல்ல, அவனின் பின்னோடு உள்ளே சென்ற சிந்துஜா பின்னிருந்து இன்பாவின் முதுகோடு ஒண்டியவாறு அவனை அணைத்திருந்தாள்.
சட்டென்று எதிர்பாராத மனைவியின் அணைப்பில் சற்றுத் தடுமாறி பின் மெல்லச் சிரித்தவனாய், தனது வயிற்றை இறுக்கியிருக்கும் அவளின் கைகளின் மீது தனது கையை வைத்து மேலும் இறுக்கிக் கொண்டான்.
தனது முகத்தை அவனது முதுகினில் அழுந்த பதித்தவளாய் தொடர் முத்தமிட்டவளை முன்னே அவன் இழுக்க, அவனின் இடையைக் கட்டிக் கொண்டவளாய் அவனது கண்களை நோக்கியவளின் கன்னங்களைப் பற்றியவனாய் அவளை அவன் பார்க்க, "என் மேல நிறையக் காதல் வச்சிருக்க என் கணவன்! அன்பும் பாசமும் கொட்டி வளர்க்க பிள்ளைங்க! இத்தனை வருஷ தனிமையையும் வெறுமையையும் போக்க எனக்கே எனக்குனு இப்படி ஒரு குடும்பம் வேணும்ங்க. அது போதும். நான் நிம்மதியா இருப்பேன்.
இந்த இடத்தில் வச்சி தான் நான் உங்ககிட்ட இதைச் சொன்னேன். நான் கேட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டீங்கப்பா. இப்ப நான் ரொம்பச் சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்ப்பா!" என்றவள் ஆனந்த கண்ணீருடன் உரைக்க, அவளின் நெற்றியில் முத்தமிட்டிருந்தவனின் இதழை முற்றுகையிட்டிருந்தாள் அவள்.
இதழ்களின் இணைவில் இருவருமே தங்களது முதல் முத்த நிகழ்வினை நினைவு கூர்ந்தவர்களாய் இதழ்களுக்குள்ளேயே சிரித்து முத்தத்திலிருந்து விடுபட்டு ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்தவராய் வாய்விட்டு சிரித்திருந்தனர்.
"ஒரு உண்மையைச் சொல்லவா சிந்து! உன் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் அவங்களுக்காக இவ்ளோ யோசிச்சு இப்படி மாறிப்போயிருப்பேனானு தெரியலை சிந்து. உன்னோட ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் எல்லாமே உன்னைக் கல்யாணம் செய்யும் போதே எனக்குத் தெரியுமே. அதுக்கு ஏத்த மாதிரி நான் நடந்துக்கனும் உன்னைச் சந்தோஷமா வச்சிக்கனும்னு மட்டும் தான் அப்ப என்னுடைய ஆசையும் கனவுமாக இருந்துச்சு. உன்னுடைய காதல் என்னைச் செய்ய வச்சிது. தான் ஒருத்தரைக் காதலிக்கிறதை விட, தான் ஒருவரால் காதலிக்கப்படுவது எப்பேர்ப்பட்ட ஃபீல் தெரியுமா! அது கொடுத்த பலமும் தைரியமும் தான் இப்படிக் காதலான நம்ம வாழ்க்கை" என்றவாறு அவளை அணைத்துக் கொண்டான்.
"இன்பா! சிந்து! சாப்பிட வாங்க" எனக் கீழிருந்து கேட்ட கந்தசாமியின் குரலில் கலைந்தவர்களாய் ஓய்வறைக்குச் சென்று வந்து உணவருந்த கீழே சென்றனர்.
உணவை முடித்து விட்டு இவர்கள் மேலே வர, யுகேந்திரனை தங்களுடனேயே படுக்க வைத்துக் கொள்வதாய்க் கூறி தங்களது அறைக்கு அழைத்துச் சென்றார் கந்தசாமி.
அறைக்குள் நுழைந்து இலகுவான உடைக்கு இருவரும் மாறியதும் சிந்துவின் கையைப் பற்றித் தனதருகே அமர வைத்து முத்தமிட அவன் நெருங்கும் வேளை வாயை மூடிக் கொண்டு ஓய்வறைக்குள் ஓடினாள் சிந்து.
அவள் வாந்தி எடுக்க, இவன் அவளின் முதுகை தலையை வருட, வாயையும் முகத்தையும் கழுவி விட்டு வந்து அமர்ந்தவளின் முகத்தைத் துண்டை வைத்து துடைத்தவனாய், "என்னடா ஆச்சு?" எனக் கேட்டான்.
"டிராவல்லயே ஒரு மாதிரி இருந்துச்சுப்பா! புளிப்பு மிட்டாய் சாப்பிட்டு ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்னு பார்த்தா எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப வாந்தி எடுத்தாச்சு" சோர்வான குரலுடன் கூறியவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
கால் நீட்டி அவன் சாய்ந்தமர்ந்திருக்க, கால்களை நீட்டியவளாய் அவன் இடையைக் கட்டிக்கொண்டு அவனது நெஞ்சத்தில் சாய்ந்திருந்தாள் அவள்.
அவளின் முதுகை அவன் வருட, மார்பில் முகம் புதைத்தவளாய், "சாரிப்பா" என்றாள்.
"எதுக்கு?" என்றவன் வினவ,
"இல்ல! நீங்க என்னென்னமோ நினைச்சு ஆசைப்பட்டிருப்பீங்க. நான் வாந்தி எடுத்துக் கெடுத்துட்டேன்" மெல்ல அவன் முகம் நோக்கி சோகமாய் அவள் சொல்ல,
"ஆமா யுகி அம்மா அப்பா கூட இருக்கப் போறான்னதும் அன்னிக்கு நடக்காத ஃபர்ஸ்ட் நைட்டை இன்னிக்கு நடத்திடலாம்னு நினைச்சேன். நமக்கு அந்த மேட்டருக்கு இந்த ரூம் ராசியில்லை போல" எனக் கூறி சிரித்தவாறு அவளின் நெற்றியில் முட்டினான்.
நாணப் புன்னகை சிந்தியவளாய், "நானும் அப்படித் தான் நினைச்சேன்" என்றவள் அவனது மார்பில் முகத்தைப் புதைத்தாள்.
வாய்விட்டு சிரித்து அவளின் உச்சியில் முத்தமிட்டவனாய், "நம்ம பொண்ணு பிறக்கிற வரைக்கும் நாம சன்னியாசி வாழ்க்கை தான் வாழனும் போல" என்றான்.
"பிறக்கிறதுக்கு முன்னாடியே நம்மளை இப்படிப் பிரிச்சி வச்சி படுத்துறாளே! இன்னும் பிறந்தா என்ன செய்வாளோ!" என்றவளாய், "இங்க பாருங்க பொண்ணு பிறந்ததும் அவளோட சேர்ந்து என்னை டீஸ்லாம் செய்யக் கூடாது சொல்லிட்டேன்" என்று தீவிரமான பாவனையுடன் சிந்து சொல்ல, "சரி தான்! நம்ம பொண்ணு நமக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்காம இருந்தா சரி தான்" என்றான் தீவிரமாய்.
"என்னது டைவர்ஸ்ஸாஅஅ" என வாயைப் பிளந்தவள், "வாயில அடி வாயில அடி" என அவனின் வாயிலேயே அடித்தவள், "அதெல்லாம் உங்களை எங்கேயும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேனாக்கும்" அவனது இடுப்பு எலும்பு நொறுக்குமளவு இறுக்கமாய் வளைத்தவளாய் கட்டிக் கொண்டு அவனது கழுத்தோடு முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சிந்துஜா.
ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவனாய், "சீரியஸ்லி என் வாழ்க்கையோட வரம் நீ சிந்துமா" என்றவனாய் தானும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை எல்லாருமாகச் சேர்ந்து செல்வதற்கேற்றவாறு முன்பதிவு செய்யப்பட்டிருந்த வேன் வந்திருக்க, குடும்பமாகப் பயணத்திருந்தனர் அனைவரும்.
காஞ்சி காமாட்சி அம்மனைத் தரிசித்து விட்டு மதிய உணவை வெளியே உணவகத்தில் உண்டு விட்டு அப்படியே மதியம் திரையரங்கிற்குச் சென்று விட்டுப் படம் பார்த்து முடித்த பின் மாலை பொழுதில் வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.
சிந்துஜா தான் மிகவும் சோர்ந்து போனாள். அவளுக்கு எது தேவை எனப் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்து கவனித்தவாறே தான் அன்றைய நாளை கடத்தியிருந்தான் இன்பா.
"உங்க தம்பிக்கு பொண்டாட்டிதாசன்னு பேரு வைக்கலாம்ங்க" என்று திவ்யா தூயவனிடம் கூறி கேலி செய்யுமளவு அவனின் கவனம் முழுவதும் தனது மனைவியிடமே வைத்திருந்தான் அவன். கந்தசாமிக்கு மகனை நினைத்துப் பெருமையாக இருக்க, பூர்ணம் பொருமிக் கொண்டிருந்தார்.
அன்றைய நாள் அனைவருக்குமே அன்றாட மன அழுத்தமான அயர்வான வாழ்விலிருந்து இளைபாறுதலை அளித்து ஒருவித உற்சாக மனநிலையை அளித்திருக்க, மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு குடும்பமாகச் சந்திக்கலாம் என்ற முடிவுடன் இரு மகன்களும் அவரவர் இல்லத்தை நோக்கி தங்களது குடும்பத்துடன் பயணித்திருந்தனர். கந்தசாமி பூர்ணத்தின் மனது சந்தோஷத்தில் பூரித்துக் கிடந்தது.
அடுத்து வந்த நாட்கள் இன்பாவிற்கு அலுவல் வேலையிலும், சிந்துவிற்கு மசக்கையிலும் வீட்டு வேலையிலும் செல்ல, ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் ஒரு நாள் இன்பாவை கைபேசியில் அழைத்திருந்தான் ராஜன்.
இரவு உணவு வேளையில் ராஜன் அழைத்திருக்க, "என்ன இந்த நேரத்துல சுந்தர் கூப்பிட்டிருக்காரு" மனைவியிடம் உரைத்தவனாய் அழைப்பை ஏற்றான்.
ராஜன் கூறியதை தீவிர முகப்பாவனையுடன் கேட்டிருந்த இன்பா, "சரி சுந்தர்! கண்டிப்பாக நான் செய்றேன். அன்னத்துக்காக இதைக் கூடச் செய்ய மாட்டேனா!" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான்.
கேள்வியான பார்வையுடன் சிந்து அவனைப் பார்த்திருக்க, "மோகனை வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யச் சொல்லி கேட்டாரு மா" என்றவனாய் அவளுக்கு ஊட்டி விட்டவாறே தொடர்ந்து உண்டான்.
"அன்னத்துக்காக ஏன் மோகனை டிரான்ஸ்ஃபர் செய்யனும்? நீங்க நினைச்சா மாதிரி ஆகிப்போச்சா?" என அதிர்வுடன் சிந்து கேட்க,
ஆமெனத் தலையசைத்தான் இன்பா.
"ஹ்ம்ம் ஆமா! மோகன் இருக்க ஆபிஸ்ல அன்னம் இருக்கக் கூடாதுனு சொல்லி கேட்டனால தான் அன்னத்தை வேற சென்னை பிரான்ச் ஆபிஸ்க்கு மாத்தினேன். இப்ப அன்னம் இருக்க ஊருலேயே அவன் இருக்கக் கூடாதுனு நினைக்கிறாங்க" என்றான் இன்பா.
இருவரும் அன்னம் மற்றும் மோகனைப் பற்றிப் பேசியவர்களாய் அன்றிரவு உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை அலுவலகத்திற்குள் நுழைந்த இன்பா, மோகனைத் தனது இடத்திற்கு அழைத்தான்.
"ஏற்கனவே டீம்ல ஆட் குறைப்பு நடக்குறது தெரியும்லடா மோகன். அசோக்கைலாம் அதனால் தானே ரிலீஸ் செஞ்சோம். இப்போ இன்னும் சில பேரை ரிலீஸ் செய்யச் சொல்லி மேனேஜ்மெண்ட்ல சொல்லிருக்காங்க. அதனால் இந்த வாரத்துல உன்னை ரிலீஸ் செஞ்சிடுவோம். நல்லா வேலை செய்ற பையனை அனுப்ப எனக்கும் மனசில்லடா அதான் உன்னைப் பென்ச்க்கு அனுப்புறதுக்குப் பதிலா ஹெச் ஆர்க்கிட்ட ஏதாவது பிராஜக்ட்ல அசைன் செய்யச் சொல்லிருக்கேன்" என்றான் இன்பா.
திடீரென்று எதிர்பாராது கேட்ட இந்த அதிர்ச்சி செய்தியில் என்ன சொல்வதெனத் தெரியாது திகைத்து முழித்த மோகன், "சரி இன்பா. ஷிப்ட் இல்லாத பிராஜக்ட்டா கிடைச்சா நல்லா இருக்கும்" என்று சொன்னான்.
"அது நீ ஹெச் ஆர்க்கிட்ட பேசிக்கோ மோகன். உன்னோட வேலைலாம் பாலாஜிக்கு சொல்லி கொடுத்திடு" என்றான்.
"சரி இன்பா. தேங்க்ஸ்" என்று வெளியே வந்தவன் தனது இருப்பிடத்திற்குச் சென்றான்.
ராஜனுக்கு அழைத்த இன்பா, "ஹெச் ஆர்க்கிட்ட மோகனுக்குப் பூனே பிராஜக்ட் ஏதாவது கொடுக்கச் சொல்லிருக்கேன். ஒரு வாரத்துல இவன் அங்க போய்டுவான். ஹெச் ஆர் அவன்கிட்ட நேரடியாகப் பேசிடுவாங்க" என்றான்.
"தேங்க்யூ சோ மச் இன்பா" என்று ராஜன் நன்றியுரைக்க,
"நன்றிலாம் எதுக்கு! நங்கையை நான் பேசினதுக்கு அவளுக்குக் கொடுத்த கஷ்டத்துக்கு இது பிராயச்சித்தமா இருக்கட்டும்" இன்பா உரைக்க,
"செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா மத்தவங்களுக்கு உதவி செஞ்சி எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சா கர்மா விட்டுடுமா என்ன? இதை நினைச்சு நிம்மதி இல்லாம நீங்கப்படுற இந்த மனவலி தான் அதுக்கான தண்டனை இன்பா. ஒன்ஸ் அகைன் தேங்க்யூ சோ மச் இன்பா" என்று இணைப்பைத் துண்டித்தான் ராஜன்.
பகீரென்றது இன்பாவிற்கு. ஏற்கனவே பட்ட துன்பம் எல்லாம் போதாதா! இன்னும் துயரப்பட வேண்டுமா? கர்மா விட்டு விடாது தான்! ஆனால் அந்தக் கர்மாவின் பலனைத் தான், நான் அனுபவித்து விட்டேனே! இல்லை நான் அனுபவித்தது எல்லாம் போதாதென நினைக்கிறாரா? மிகுந்த மன உளைச்சலாகிப் போனது இன்பாவிற்கு.
அன்று பின் மாலை பொழுதில் வீட்டிற்கு வந்தவனின் சோர்ந்த கவலையான முகத்தைக் கண்ட சிந்துஜா, "என்னப்பா மோகனுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கலையா?" எனக் கேட்டாள்.
"இல்லமா அது ஹெச் ஆர்கிட்ட பேசி ஏற்பாடு செஞ்சிட்டேன்" என்றவன் தான் ராஜனிடம் கூறியதையும் அதற்கு ராஜன் அளித்த பதிலையும் உரைத்தான்.
"உங்களுக்கு, உங்க வாய்ல தான்ப்பா சனி இருக்கு" என்றவளாய் அவனை ஆத்திரத்துடன் முறைத்திருந்தாள் சிந்துஜா.
"இல்ல சிந்து! அது நான் வேற மாதிரி சொல்ல வந்து" என்றவன் இழுக்க,
"இனி எந்த மாதிரியும் நீங்க பேச வேண்டாம். இந்த விஷயத்தை இதோட விடுங்க. மேலும் ஏதாவது நங்கை குடும்பத்துக்காரங்ககிட்ட பேசி சாபத்தை வாங்கி வச்சிடாதீங்க" என்றவள் கோபமாய் அவனை முறைத்திருந்தாள்.
"நீங்க ஒழுங்கா வாயை மூடிட்டு இருந்திருந்தாலே உங்க வாழ்க்கைல பல பிரச்சனைகள் வந்திருக்கவே செய்யாது தெரியுமா! இனி என்னைக் கேட்காம எங்கேயாவது நங்கை பத்தி வாயை விடுங்க! அவ்ளோ தான் சொல்லிட்டேன்" ஆங்காரமாய் உரைத்தவள் அன்றைய நாள் முழுவதும் அவனை முறைத்துக் கொண்டே திரிந்தாள்.