என் இனிய இன்பனே 21 & 22
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை வேளையில்! "ஏன்ப்பா இந்த வாந்தி பாடாய்ப் படுத்தது! யுகி வயத்துக்குள்ள எவ்ளோ சமத்தா இருந்தான்! இந்தப் பாப்பா என்னை வச்சி செய்யுதே" என்று வாந்தி எடுத்த சோர்வில் அருகில் நின்றிருந்தவனின் வயிற்றில் முகத்தைப் புதைத்தவளாய் புலம்பினாள் சிந்துஜா. அவளின் தலையை வருடி முதுகைத் தடவியவாறுச் சிரித்தவனாய், "பாப்பானு முடிவே செஞ்சிட்டியா?" எனக் கேட்டான். "ஆமா பொண்ணா தான் இருக்கும்னு தோணுது. பொண்ணு பிறந்து அந்தப் பொண்ணை நீங்க வளர்க்கிற விதத்தைப் பார்க்கனும்ப்பா! எனக்கே தனியா சொந்தக் கால்ல நிக்கனும்னு அவ்ளோ பார்த்து பார்த்துச் செய்றீங்களே! நம்ம பொண்ணுக்கு என்னலாம் செய்வீங்கனு பார்க்கனும். என்னை மாதிரி இல்லாம என் பொண்ணு தைரியமா வளர்வதைப் பார்க்கனும். வெளிநாட்டுக்குலாம் தனியா போய்ப் படிச்சி வேலை பார்க்கனும். மொத்தத்தில் நான் வாழாத வாழ்க்கையை என் பொண்ணு வாழுறதைப் பார்க்க ரொம்ப ஆசை ஆசையா காத்துட்டு இருக்கேன்ப்பா" என்று கனவுகள் மின்ன பேசிய மனைவியை ஆதூரமாய்ப் பார்த்திருந்தான் இன்பா. "நீ சொல்றது போல நம்ம பொண்ணை அவளோட சொந்த கால்ல நிக்கிற மாதிரி தான் நாம வாளர்ப்போம். ஆனா படிப்பு, வேலை, வாழ்க்கைத்துணை எல்லாம் அவங்கவங்க விருப்பம். அவங்க விரும்பி தேர்ந்தெடுக்கிறது சரியா தப்பானு கைட் செய்ற வேலை தான் நமக்கு. அப்படித் தான் பிள்ளைங்களை வளர்க்கனும்" அவனது தாய் தந்தையர் மூலமாகக் கற்றிருந்த அனுபவப்பாடத்தின் விளைவாக இவ்வாறு கூறியிருந்தான் இன்பா. அந்நேரம் அவனது கைபேசி அலறியது. அங்கே மேஜையில் இருந்த கைபேசியை எடுத்துப் பேசியவனின் முகம் தீவிரமாய் மாற, அவனுக்குக் காலைக் காபி தயாரிக்கும் பணிக்காக அடுக்களைக்குள் நுழைந்தாள் சிந்துஜா. அவனிடம் காபியைக் கொண்டு வந்து கொடுத்த சமயத்தில், "சரி பாலாஜி! நான் மோகன்கிட்ட பேசுறேன்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்துக் காபியைக் கையினில் வாங்கியவன், "ஆபிஸ்ல இஷ்யூவாம்! பாலாஜி தான் கால் செஞ்சாரு. நான் அவசரமா கிளம்பனும் சிந்து! கீதாக்கா வீட்டுல வேலை செய்றவங்களை இன்னிலருந்து நம்ம வீட்டுக்கும் வேலைக்கு வர சொல்லிருக்கத் தானே! நீ சமையலை மட்டும் பாரு! மத்த வேலைலாம் அவங்களை வச்சி செஞ்சிக்கோ! சம்பளம்லாம் நீயே பேசிடு" என்றான். சரியென்றவளாய் மகனுக்குப் பாலை ஆற்றிக் கொடுத்தாள் சிந்து. அதே நேரம் அங்கே அலுவலகச் சிற்றுண்டிச் சாலையில் (கேண்டீன்) அமர்ந்திருந்த அன்னத்தின் கண்கள் நீரைப் பொழிய, "அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல! எதுக்கு அழுதுட்டு இருக்க நீ! நீயே அழுது காட்டிக் கொடுக்காத" எனச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் மோகன். மோகனின் கைபேசி அலற, அழைப்பை ஏற்றவனாய், "சொல்லுங்க இன்பா" என்றான். "பாலாஜி போன் செஞ்சி சொன்னான் ஏதோ பிரச்சனைனு! எப்படிடா திடீர்னு சர்வர் டவுன் ஆகும். நம்ம சைட்ல எதுவும் பிரச்சனையா? நைட் ஷிப்ட்ல ஒழுங்கா தானே மானிட்டர் செஞ்சிட்டு இருந்தீங்க" எனக் கேட்டான் இன்பா. "நம்ம மேல எதுவும் தப்பில்லை இன்பா. இது வேற டீம் பிராப்ளமா தான் இருக்கனும். என்னனு நான் பார்த்து சரி செஞ்சிட்டு தான் கிளம்புவேன்" என்று இணைப்பைத் துண்டித்தான் மோகன். மோகனும் அன்னமும் முந்தைய நாள் இரவுப்பணியில் இருந்த போது, மோகன் உறங்கி விட, அன்னம் செய்த தவறான அப்டேட்டால் காலை சைட்டில் இஷ்யூ வந்து விட்டது. முதலில் அன்னத்திற்கே தன்னால் தான் இஷ்யூ வந்ததென்றே புரியவில்லை. ஆனால் மோகன் அதனை உடனே கண்டுபிடித்து விட்டான். இதைச் சரி செய்வதற்கான தீர்வு மோகனுக்குத் தெரிந்தாலும், அதற்கான அனுமதி (access) சர்வர் டீம்க்கு தான் உள்ளது என்பதால் அவர்களைத் தொடர்பு கொண்டு கூறினான். அதற்குள் காலை ஷிப்ட்காகப் பாலாஜி வந்து விட, அவரைப் பார்த்துக் கொள்ளக் கூறிவிட்டு அன்னம் அழுவதைக் கண்டு அவளைக் கேண்டீனுக்கு அழைத்து வந்து சமாதானம் செய்து கொண்டிருக்கிறான். இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய மாலையானது. அது வரை அன்னமும் மோகனும் அலுவலகத்தில் தான் இருந்தனர். முந்தைய நாள் இரவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் மறுநாள் மாலை வரை அலுவலகத்தில் தான் இருந்தனர். மாலை வரை நீடித்த இப்பிரச்சனை கிளைண்ட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரச்சனையைச் சரி செய்ததும் கிளைண்டுடனான தனி மீட்டிங்கில் இருந்தான் இன்பா. அதே நேரம் இங்கே வீட்டிலிருந்த சிந்துவின் கைபேசி அலற, மடித்துக் கொண்டிருந்த துணியை அப்படியே போட்டுவிட்டு கைபேசியை எடுத்தவள், "சொல்லுங்க திவ்யாக்கா! எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு மெத்தையில் அமர்ந்தாள். "நம்ம கண்ணாவுக்கு நாளைக்குப் பர்த்டே வருதுல! அதான் நம்ம ஃபேமிலி வரைக்கும் கெட் டூகதர் மாதிரி வச்சி செலிப்ரேட் செய்யலாம்னு பிளான் செஞ்சிருக்கோம். நீயும் இன்பாவும் வந்துடுங்க சரியா" என்று அழைத்தாள் திவ்யா. "பர்த்டே பார்ட்டியா?" என்று யோசனையுடன் கூறியவளாய், "நான் அவர்கிட்ட கேட்டு சொல்றேன்க்கா! ஏற்கனவே ஆபிஸ்ல ஏதோ இஷ்யூனு சொல்லிட்டு இருக்காரு! நைட் லேட்டா தான் வருவார் போல! நாளைக்கு எப்படி இருக்குமோ!" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, "சரி பிறந்தநாளைக்கு வர முடியலைனா வீக்கெண்ட் வாங்க!" என்றாள் திவ்யா. "நான் அவர்கிட்ட பேசிட்டு சொல்றேனேக்கா" என்று சிந்து சற்று தயங்கியவாறு கூற, சரி என வைத்து விட்டாள் திவ்யா. அடுத்த அரை மணி நேரத்தில் அவளது மாமியாரிடம் இருந்து அழைப்பு வர, கைபேசியைப் பார்த்தவளாய், 'ஆஹா இந்தக்கா எதுவும் பத்த வச்சிட்டாங்களா? இவங்களுக்கு இது தானே வேலை' என மனதோடு எண்ணியவளாய் அழைப்பை ஏற்றாள். "அத்த" என அவள் தொடங்கும் முன்னமே, "ஏம்மா மகாராணி! உங்க புருஷனை கேட்காம நீங்க எதுவும் செஞ்சதில்லையோ! இல்ல உன் பேச்சை மீறி தான் உன் புருஷன் நடந்திடுவானா இல்ல நீ தான் நடக்க விட்டுருவியா! சொந்த பந்தம்னு யார் கூடயும் அவனை ஒட்ட விடாம உனக்கே அடிமை மாதிரி அவனை வச்சிக்கலாம்னு நினைக்கிறியா?" என்று அவர் பொரிந்து தள்ள, 'ஆஹா பத்த வச்சிட்டியே திவ்யாக்கா! என்னைப் போட்டுக் கொடுத்தே மாமியார்கிட்ட நல்ல மருமகனு பெயரை நிலைநாட்டிக்கிறாங்க! என்ன மனுசங்களோ' அலுப்பாக மனதோடு எண்ணியவளாய், "இல்லத்த அவருக்கு வேலை இருக்கானு கேட்டுட்டு..." என்று சிந்து முடிக்கும் முன்பே, "வேலை இருக்குனா ஞாயித்துக் கிழமை வர வேண்டியது தானே! அன்னிக்கு அவனுக்கு லீவ் தானே! அதுக்கும் அவனைக் கேட்கனும்னு சொன்னியாமே! ஏற்கனவே என்னை விட்டு அவனைப் பிரிச்சி கூட்டிட்டு போய்ட்ட! இப்ப அவனோட அண்ணன் குடும்பத்துக் கூடவும் சேர விடாம உன்னை மாதிரி அவனை அனாதையா நிக்க வைக்கலாம்னு நினைக்கிறியா?" என்று கேட்டார். அனாதை என்ற வார்த்தையில் கடுப்பானவளாய், "அத்த நானும் என் பிள்ளையும் இருக்கும் போது அவர் எப்படி அனாதை ஆவாரு! நானா உங்கப்பிள்ளைய எங்கேயும் போகாதீங்க யார் கூடவும் ஒட்டாதீங்கனு சொல்லிட்டு இருக்கேன். அவர் அப்படி இருந்தாருனா நான் என்ன செய்யுறது! உங்க பிள்ளை என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே தான் உங்ககிட்ட பேசுறதை நிறுத்திட்டாருல! பின்னே ஏன் எல்லாத்துக்கும் என்னைக் குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க" எனக் கத்தியிருந்தாள் சிந்துஜா. அவளின் உடல்நிலை மாற்றங்களும் சோர்வும் ஏற்கனவே அவளைப் படுத்தி எடுத்திருக்க இதில் இவரும் சேர்ந்து கடுப்படிக்கவும் இத்தனை நாளாய் பொறுமையாகக் கேட்டிருந்தவள் இன்று பொங்கியிருந்தாள். "யாரு சொன்னது அவன் கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டான்னு. உன்னைக் கட்டிக்கிறதுக்கு முன்னாடி அவனுக்கு என் மேல வருத்தமும் கோபமும் இருந்துச்சு தான். ஆனா அதுக்காக என்னை மொத்தமா ஒன்னும் அவன் ஒதுக்கி வச்சிடலை. நேர்ல பார்க்கும் போது நாலு வார்த்தை நலம் விசாரிப்பான். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவான்! அவங்க அப்பா போன்ல என்கிட்ட பேசுவான். என்னிக்கு உன்னை இங்கிருந்து சென்னைக்குக் கூட்டிட்டு போனானோ அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் என்னைத் திட்ட மட்டும் தான் போன் செஞ்சிருக்கான் தெரியுமா! அதுவும் இந்தப் பத்து வருஷத்துல நாலு நேரம் தான் பேசியிருப்பான். இந்த வீட்டுப் பக்கமே வரவேயில்லை. உனக்குப் பிள்ளை பிறக்க தாமதமாகுதுனு நான் என்னமோ சொல்லிட்டேன்னு கொந்தளிச்சிட்டு போன் செஞ்சி ஏசினான். பேரனை பெத்தவளை கவனிக்கப் பெத்தவனு யாரும் உனக்கு இல்லையேனு நான் அங்கன ஒரு மாசம் வந்து இருந்தப்ப கூட அவன் மூஞ்சு கொடுத்து பேசலை தெரியுமா! என் பிள்ளை என்கிட்ட முகம் கொடுத்து பேசிட மாட்டானானு நான் தவிச்சி கிடக்கிறது உனக்கு எங்க புரிய போகுது" என்றவர் சொல்லும் போதே அவரின் குரல் தழுதழுத்தது. இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவிற்குப் பேரதிர்ச்சி! 'அப்ப எனக்காகத் தான் அவங்க அம்மாகிட்ட பேசாம இருக்காங்களா? அவரோட முதல் காதலுக்காக இல்லையா' இன்ப அதிர்ச்சியுடன் இதனை அவள் உள்வாங்கியிருக்க, தனது தழுதழுத்த குரலை செருமி சரி செய்தவராய் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பூர்ணம் ஆங்காரமாய், "நீ சொல்லிக் கொடுக்காமலா உன்னை நான் திட்டுறது அவனுக்குத் தெரியுது. பிள்ளையும் கிள்ளி விட்டுட்டு என்கிட்ட வந்து தொட்டிலை ஆட்டுறது தானே உன் வேலை. அப்பாவியா நடிச்சி என் பிள்ளையைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல! உன்னை விட அந்தத் திவ்யா எவ்வளவோ பரவாயில்ல தெரியுமா! அவ சம்பாதிக்கிற காசையும் என்கிட்ட மாசா மாசம் கொடுத்துடுவா! எனக்கு உண்மையாவும் நடந்துக்கிறா" பேசிக் கொண்டே போனார். 'ஆமா அப்படியே சம்பாதிக்கிற மொத்த காசையும் கைல கொடுக்கிறாங்களாக்கும். உங்களைக் காக்கா பிடிக்க உங்க கைல கொஞ்சம் காசு கொடுக்கிறாங்க. உண்மையா நடந்துக்கிறதா காண்பிக்க என்னை உங்ககிட்ட போட்டுக் கொடுக்கிறாங்க. இது தெரியாம ஏமாளியா அவங்ககிட்ட ஏமாந்து இருந்துட்டு இந்த அத்தைக்குப் பேச்சை பாரு' மனதோடு பேசிக் கொண்டவளாய் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு மேஜையில் வைத்து விட்டு எதிரே அமர்ந்து விட்டாள் சிந்துஜா. பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து பேசிய பூர்ணம், "ஞாயித்துக்கிழமையாவது உன் புருஷனைக் கூட்டிட்டு வர்றியா இல்லையா?" என அதட்டலாய் கேட்க, "வரோம் அத்தை" என்று சத்தமாய்க் கூறியவள், 'வந்து தொலையுறோம்' என்று வாய்க்குள் முனகிக் கொண்டாள். தனக்காக கணவன் தனது தாயிடம் பேசாமல் இருந்ததை எண்ணி மனம் பூரித்துப் போனது சிந்துவிற்கு. 'ச்சே இது தெரியாம அவரோட முதல் காதலுக்காகச் சண்டை போட்டுத் தான் அவங்க அம்மாகிட்ட பேசாம இருக்காருனு சொல்லிச் சண்டை வேற போட்டுட்டேனே' நினைத்தவாறு அமர்ந்திருந்தவளின் மனம் உடனே இன்பாவிடம் பேச வேண்டுமென ஆர்ப்பரிக்க, கைபேசியைக் கையில் எடுத்தாள். இங்குக் கிளைண்டுடன் பேசிவிட்டு வந்த இன்பா தனது டீமுடன் மீட்டிங் வைத்தான். இன்பாவின் முகத்தில் பிரச்சனை முடிந்த மகிழ்வை விட அதிகமான குழப்பமும் வாட்டமுமே தென்பட்டன. "சைட் இப்ப வர்க் ஆனாலும், நாம இதைச் சரி செய்ய லேட் செஞ்சிட்டதா கிளையண்ட் சொல்றாங்க. அவங்க நஷ்டத்துக்கு நாம பொறுப்பேத்துக்கனும்னு சொல்றாங்க. எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு கண்டுபிடிச்சு, எதிர்காலத்துல இந்த மாதிரி பிரச்சனை வராதுன்னு நாம உறுதி மொழி அளிக்கனும்னு சொல்றாங்க. கடைசியா ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க, அவங்களுக்கு இன்னிக்கு ஆன நஷ்டத்துக்கான பெனாலிட்டி (அபராதம்) நாம கட்டனும்னு சொல்றாங்க" மீட்டிங் அறையில் மொத்த குழுவின் முன் அமர்ந்து இன்பா இதைக் கூற, மோகனும் அன்னமும் ஸ்தம்பித்துப் போயினர். 'எதனால் இந்தப் பிரச்சனை வந்துச்சுனு பார்க்கும் போது நாம செஞ்ச தப்பு தான்னு கண்டுபிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கே! அவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாமளே சொல்லிட்டா என்ன' எனத் திருதிருத்த முழியுடன் யோசித்தாள் அன்னம். இந்த இடத்தில் தான் பிரச்சனையின் தீவிரம் மோகனுக்கும் அன்னத்திற்கும் புரிந்தது. இதற்கு மேல் இன்பாவிடம் இதனை மறைக்க முடியாது எனப் புரிந்தது மோகனுக்கு. இன்பா உதவி செய்தால் தான் அன்னத்தினால் தான் இந்தப் பிரச்சனை வந்தது என்பதைக் கிளைண்ட்டிடம் காண்பிக்காமலும் அபராதம் கட்டும் அளவுக்கு இந்தப் பிரச்சனை செல்லாமலும் தவிர்க்க முடியுமெனத் தீர்க்கமாகத் தெரிந்ததும் இன்பாவிடம் நடந்ததை உரைத்தான் மோகன். அன்னம் வெளிறிப்போன முகத்துடன் அமைதியாக நின்றிருக்க, மோகன் கூறியதை கேட்ட இன்பா, "இவ்வளோ கேர்லெஸ்னஸ் ஆகாது அன்னம். இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? கிளைண்ட்க்கு நாம பெனால்டி கட்டுற சூழ்நிலை வந்தா, இப்படித் தான் நஷ்டத்தோட பிராஜக்ட்டை நடந்துவியானு என் சீனியர் மேனேஜர் என்னைக் காரி துப்புவாங்க" கோபமாய் உரைத்திருந்தான். அன்னத்திற்குக் குற்றவுணர்வாகி போனது. அன்னத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, "விடு இன்பா! அந்தப் பொண்ணைத் திட்டி என்னவாகப் போகுது. இதை எப்படிச் சரி செய்றதுனு பார்க்கலாம்" என்றான் பாலாஜி. அந்நேரம் இன்பாவின் கைபேசி அலறியது. இருந்த கடுப்பில் அழைப்பை எடுக்க மனமில்லாது இருந்தாலும், மனைவிக்காக வைத்திருந்த பிரத்யேக ஒலியழைப்பு அவளின் உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனையோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க அவசரமாக அழைப்பை ஏற்றான் இன்பா. என் இனிய இன்பனே 22
"சொல்லு சிந்து! உடம்புக்கு எதுவும் செய்யுதா?" எனக் கேட்டான் இன்பா. அந்த அறையின் ஓரத்தில் நின்று கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே சாலையைப் பார்த்தவாறு மெதுவாக கைப்பேசியில் அவன் பேச, அந்த மீட்டிங் அறையிலிருந்த அனைவரின் பார்வையும் அவனின் முதுகை துளைத்தன. அவன் கேட்ட கேள்வியைக் கிடப்பில் போட்டவளாய், "என்னங்க எனக்காகத் தான் உங்கம்மாகிட்ட இத்தனை நாளா பேசாம இருந்தீங்களா?" உற்சாகத்துடன் கேட்டிருந்தாள் சிந்து. அவளின் கேள்வியில் கடுப்பானவனாய், "இப்ப இதைக் கேட்க தான் கால் செஞ்சியா?" பல்லை நறநறத்தவாறு அவன் கேட்கவும், 'ஆஹா சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும் போது போன் செஞ்சிட்டோம் போலயே' அச்சத்துடன் அவள் எண்ணும் போதே, "அறிவிருக்கா உனக்கு! செம்ம கடுப்புல இருக்கேன். ஏதாவது திட்டிடப் போறேன்" கடுப்பாக உரைத்தான். சில மணித்துளிகள் மறுபக்கத்தில் அவளிடமிருந்து பதில் வராதிருக்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவனாய், "உனக்கு உடம்புக்கு எதுவும் பண்ணுதா சிந்து?" எனக் கேட்டான். "எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன! உங்க வேலையவே கட்டிக்கிட்டு அழுங்க" என்றவளாய் இணைப்பைத் துண்டித்திருந்தாள் சிந்து. பெருமூச்சுடன் கைபேசியை எடுத்து பார்த்தவன், 'இருக்கிற பிரச்சனைல இவ வேற' என்று மனதிற்குள் புலம்பியனாய் அங்குமிங்குமாக நடந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், "அன்னம் நீ வீட்டுக்குக் கிளம்பு! இன்னிக்கு நைட் ஷிப்ட் வர வேண்டாம். இதை நாங்க சால்வ் பண்ணிட்டு சொல்றோம். உன்னைப் பார்க்க பார்க்க கடுப்புல ஏதாவது திட்டிடுவேனோனு இருக்கு! நீ கிளம்பு" என்றான் இன்பா. அவளை இந்தப் பிரச்சனையிலிருந்து தள்ளி வைத்து காப்பாற்றுவதற்காகவும் அவ்வாறு கூறினான் இன்பா. "ஆமா அன்னம்! இன்பா சொல்றது சரி தான். நீ கிளம்பு" என மோகனும் உரைக்க, "சாரி இன்பா! இப்ப என்னால உங்களுக்கு ரொம்பப் பிரச்சனைல" அழுகை குரலில் அன்னம் கேட்க, "ஆமா தான்! ஆனா சமாளிச்சிடலாம். இது கூடச் சமாளிக்க முடியலைனா அப்புறம் நான் என்ன மேனேஜர். யூ ஜஸ்ட் கோ அண்ட் டேக் ரெஸ்ட்" என்று அவளை அனுப்பி வைத்தான். சரியெனக் கிளம்பி விட்டாள் அன்னம். மோகனிடம் வந்த இன்பா, "எப்பவும் அவளை நீ காப்பாத்திட்டே இருக்கனும் நினைக்காத! அவ வேலையை அவ பார்க்கட்டும்" முறைத்தவாறு உரைத்தவனாய் சென்று விட்டான். அன்றிரவு தாமதமாக வீட்டிற்குச் சென்றான் இன்பா. யுகேந்திரன் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, கதவைத் திறந்த சிந்துவைப் பார்த்தவன், "சாப்பிட்டியா சிந்து" எனக் கேட்டவனாய் உள்ளே நுழைந்தான். ஹ்ம்ம் என்றாள் அவள். "உங்க ஆபிஸ்ல இஷ்யூ சரி ஆகிடுச்சா?" என்றவள் கேட்க, அவளிடம் நடந்ததைக் கூறியவாறே அறைக்குள் சென்றவன், "நீ தூங்கு சிந்து! நான் போட்டுச் சாப்பிட்டுக்கிறேன்" என்றவனாய் மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டான். அவளிடம் மாலை கோபமாகப் பேசியது கூட மறந்திருந்தது அவனுக்கு. அவளுக்குமே அவனின் பேச்சில் அது புரிந்தது. அவனுக்கான உணவை உணவு மேஜை மீது எடுத்து வைத்தவளாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் சிந்து. குளித்து முடித்து வந்தவன் மேஜை மீது தலை சாய்த்திருந்தவளை நோக்கி, "உன்னைப் படுக்கச் சொன்னேன்ல! எனக்காக ஏன் வெயிட் செஞ்சிட்டு இருக்க" எனக் கேட்டவாறு அமர்ந்தான். ஏதும் பதிலிறுக்காது, அவனுக்குத் தட்டு எடுத்து வைத்து உணவை அவள் பரிமாற, அவளின் இந்த வார்த்தையற்ற மௌனத்திலும் முகச்சுணகத்திலும் தான் மாலை அவளிடம் கோபமாகப் பேசியது நினைவுக்கு வந்தது அவனுக்கு. தலையில் தட்டிக் கொண்டவனாய், "சாரி சிந்து! ஆபிஸ்ல செம்ம டென்ஷன்ல இருக்கும் போது போன் செஞ்சியா அதான் கோபமா பேசிட்டேன்" என்றவாறு அப்படியே இட்லியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட, அவனை முறைத்தவாறே வாயில் வாங்கிக் கொண்டாள். "இன்னும் ஏன் முறைப்பு" என்றவனாய் அவளுக்கு ஊட்டி விட்டவாறே அவனும் உண்ண, "அத்தை போன் செஞ்சாங்க" என்றாள். 'ஆஹா இப்ப என்ன ஏழுரையைக் கூட்டினாங்கனு தெரியலையே' எண்ணியவாறு, "என்ன சொன்னாங்க?" எனக் கேட்டான். பிறந்தநாள் விழாவிற்குத் திவ்யா அழைத்ததை உரைத்தவள், அத்தையும் அதற்காகத் தான் அழைத்ததாகக் கூறினாள். அவள் கூறி முடித்த நொடி, "அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம் சிந்து!" என்றான் இன்பா. "ஆமா நீங்க இப்படித் தான் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியும். நீங்க எல்லாச் சொந்தத்துக்கிட்ட இருந்தும் ஒதுங்கி இருக்கிறதுக்குக் காரணம் நான் தான்னு உங்க அம்மா என்னைத் திட்டுறாங்க. நாளைப்பின்ன நம்ம பிள்ளைக்கு உறவுனு யாரும் வேண்டாமா! உங்க அண்ணன் மகனும் இவனும் அண்ணன் தம்பி தானே! இப்படியே ஒதுக்கி வச்சி வளர்த்துட்டா அவங்க எப்டி ஒட்டுறவா இருப்பாங்க" ஆதங்கத்துடன் அவள் பொரிந்து தள்ள, "என் அண்ணி உன்னை அவங்க வீட்டு வேலைக்காரி மாதிரி நடத்துறதைலாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது சிந்து. நீயும் அங்க நம்ம பார்ட்டிக்கு போய்ருக்கோம்றதையே மறந்துட்டு வேலையை இழுத்து போட்டு செய்வ! அவங்க உன்னை வேலை செய்ய விட்டுட்டு மத்தவங்ககிட்ட அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க. இப்படி அவங்க தேவைக்கு நம்மளை யூஸ் செஞ்சிக்கிற உறவுலாம் நம்ம பையனுக்கு உறவாவே இருக்கத் தேவையில்ல சிந்து" என்று ஆத்திரமாக உரைத்து விட்டு அவன் எழும்ப, 'இதுவும் எனக்காகத் தானா!' இன்ப அதிர்ச்சியுடன் இன்பாவைப் பார்த்திருந்தவள், அவன் கையைப்பிடித்து அமர்த்தியவளாய், "எதுக்கு இப்ப சாப்பாட்டுல கோபத்தைக் காண்பிக்கிறீங்க. ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிடுங்க" என்று மேலும் இட்லிகளை அவனது தட்டில் அவள் வைக்க, சட்னியைத் தொட்டு அவளுக்கு ஊட்டியவனைக் காதலுடன் பார்த்தவள் சட்னி பூசிய உதட்டுடன் அவனது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்திருந்தாள். மென்னகையுடன் கன்னத்தைத் தடவியவாறு அவளைப் பார்த்தவன், "எதுக்கு இந்த முத்தம்? உன்னைத் திட்டினதுக்கா?" எனக் கேட்டான். அவனின் புஜத்தைப் பற்றியவாறு தோளில் சாய்ந்தவள், "இன்னிக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்" என்றாள். "ஏன் நீங்க என்கிட்ட சொல்லலை?" என்றவாறு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். "என்ன சொல்லலை?" கேள்வியுடன் அவளை அவன் நோக்க, "எனக்காகத் தான் உங்கம்மாகிட்ட பேசலைனு ஏன் சொல்லலை? அன்னிக்கு நான் உங்க முதல் காதலுக்காகத் தான் பேசாம இருக்கீங்கனு சண்டை போடும் போதும் கூடச் சொல்லலை!" ஆதங்கத்துடன் கேட்டாள். "அன்னிக்கு எங்க என்னைப் பேச விட்ட நீ?" எனச் சிரிப்புடன் கேட்டான் அவன். சற்று நேரம் அமைதியாக அவன் தோள் சாய்ந்திருந்தவள், "ஆனாலும் அம்மாகிட்ட பேசாம இருக்கிறது தப்புங்க. எனக்காகத் தான் நீங்க பேசாம இருக்கீங்கனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே இதைச் சரி செஞ்சிருப்பேன்" என்றவள் நிமிர்ந்து அமர, எழுந்து சென்று தான் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்தான் இன்பா. "உனக்காகனு இல்லை சிந்து! என்னை அவங்க ஆட்டுவிக்கிற பொம்மைனு நினைச்சிட்டாங்களானு கோபம். முதல் காதலே அவங்களுக்காகத் தான் வேண்டாம்னு விட்டேன். அடுத்துக் கல்யாணம் செஞ்சி இருக்கப் பொண்டாட்டியை என்னைக் கேட்காம அனுப்ப பார்த்ததுல அவ்ளோ கோபம். அப்ப உன்னை அனுப்பிட்டு என்னைச் சமாளிச்சி அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்து கட்டி வச்சிடலாம்ற நினைப்பு தானே அவங்களுக்கு! நான் என்ன அவங்க அடிமையா! ஆமா அம்மானா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அவங்க இஷ்டத்துக்கு என்னை இழுக்கலாம்னு பார்த்தா ரப்பர் பேண்ட் ரொம்ப இழுத்தா என்னாகும்! கட்டாகி தானே போகும். அப்படித் தான் போய்டுச்சு எங்க உறவு" கூறியவனின் குரலில் அத்தனை வலி! அவனும் அன்னையுடன் பேசாததில் வேதனையுடன் இருக்கிறான் என்றே இன்று தான் புரிந்தது சிந்துவிற்கு. நிஜமாகவே என்ன சொல்லவெனத் தெரியவில்லை சிந்துவிற்கு. அமைதியாக அவனைப் பார்த்திருந்தவள் பேசத் தொடங்கினாள். "ஆனாலும் அம்மா அம்மா தானே! உங்களை எவ்ளோ ஆசை ஆசையா வளர்த்திருப்பாங்க. உங்களுக்காக என்னலாம் தியாகம் செஞ்சிருப்பாங்க. இப்ப கூட என் மனசு என் அம்மாவை தேடுதுப்பா! ஒருத்தங்க இருக்கும் போது நாம ஒதுக்கி வைக்கிற வலியை விட அவங்க இல்லாதப்ப இப்படிச் செஞ்சிட்டோமேனு குற்றவுணர்வு கொடுக்கிற வலி நரகமா இருக்கும்ப்பா! அதுக்கு இருக்கும் போதே நம்ம மன நிம்மதிக்காக அவங்களை மன்னிச்சுடலாம். நாம என்ன அவங்க கூடயேவா இருக்கப் போறோம். அப்பப்ப போய்ட்டு வர தானே போறோம்" என்றாள் சிந்து. பெருமூச்சுடன் எழுந்து நின்றவன், "பார்க்கலாம் சிந்து! என் மனசுக்கு எப்ப பேசனும்னு தோணுதோ அப்ப நான் கண்டிப்பாகப் பேசுவேன்" என்றவாறு அவளைக் கைப்பிடித்து எழுப்பிப் படுக்கையறை நோக்கிச் செல்ல, "சரி இந்த ஞாயித்துக்கிழமை உங்க அண்ணா வீட்டுக்குப் போகலாம் தானே! அது உங்களுக்கு ஓகே தானே" எனக் கேட்டாள். "இல்ல சிந்து! இந்தச் சண்டே என் டீமையும் செல்வா டீமையும் சேர்த்து கூர்க்கு டீம் அவுட்டிங் கூட்டிட்டு போகலாம்னு பிளான் செஞ்சிருக்கோம். ஹெச் ஆர்கிட்ட பட்ஜட் டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு! உன்னை இந்த நிலைமைல எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது! கீதாக்காவை உனக்குத் துணையா கூட இருக்க வச்சிட்டு தான் நான் போகனும்னு நினைச்சிருக்கேன்" என்றான். அவன் அலுவல் வேலையாய் இவ்வாறு அவளை தனித்து விட்டு சென்றிருக்கிறான் என்பதால் அது அவளைப் பெரியதாய் பாதிக்கவில்லை. அவனது தாயை எப்படி சமாளிப்பது என்கின்ற அச்சம் தான் மேலோங்கியிருந்தது அவளுக்கு. "அய்யோ உங்க அம்மாகிட்ட வரோம்னு சொல்லிட்டேனே! நாளைக்கு என்னை வச்சி செய்யப் போறாங்க. எனக்காகவாவது உங்க அம்மாகிட்ட பேச கூடாதா! பிரச்சனையை விட்டு ஒதுங்கி போறதை விட அதுக்கான தீர்வையோ சமாளிப்பையோ கண்டுபிடிச்சி வாழப் பார்க்கனும்ப்பா! எப்படிச் சமாளிக்கலாம்னு யோசிக்காம நீங்க இப்படி ஒதுங்கி இருக்கிறது தப்புங்க" அவனின் சட்டையைப் பற்றியவளாய் அவள் கூற, "டோண்ட் ஃபோர்ஸ் மீ சிந்து" சற்று காட்டமாகவே கூறினான். "சரி உங்க இஷ்டம்" என்றவாறு உதட்டை சுழித்தவளாய் படுக்கையில் அவள் படுத்துக் கொள்ள, அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய், "குட் நைட்" என்றவன், "ஆமா இன்னிக்கு வேலை செய்றவங்க வந்தாங்களா?" எனக் கேட்டவாறு மகனின் மறுபுறம் சென்று படுக்க, சிந்து சிறிது நேரம் வீட்டிற்குப் புதிதாய் வேலைக்கு வந்தவரைப் பற்றியும் மற்ற விவரங்களையும் மெல்லிய குரலில் அவனிடம் விவரிக்க, அவனும் அலுவலகத்தில் நடந்ததை அவளிடம் கூறியவனாய் உறங்கிப் போனான். --- மறுநாள் காலை சிந்து வாந்தி எடுத்து விட்டு அமர்ந்திருந்த வேளையில் அவளின் கைபேசி அலறியது. அதனை எடுத்து வெறித்தவாறு பார்த்திருந்தவளை நோக்கி வந்த இன்பா, "போன் எடுக்க வேண்டியது தானே! அதை ஏன் அப்படியே பார்த்துட்டு இருக்க" என்றவனாய் வாங்கிப் பார்க்க, அவனது அன்னை தான் அழைத்திருந்தார். "அம்மா தான் கூப்டுறாங்க! பேச வேண்டியது தானே" என்று அவளிடம் கொடுத்த போது அழைப்பு நின்றிருந்தது. "உங்களுக்கு என்ன! நீங்க பாட்டுக்கு பேசுனு சொல்லிட்டு போய்டுவீங்க. திட்டு வாங்க போறது நான் தானே" அவள் புலம்பும் போதே மீண்டுமாய்க் கைபேசி ஒலிக்க, இன்பாவின் கைப்பற்றித் தன்னருகே அமர வைத்தவள், "இன்னிக்கு உங்கம்மா பேசுறதை முழுசா கேளுங்க! அப்ப தான் அவங்ககிட்ட நான் படுற பாடு புரியும் உங்களுக்கு" என்றவளாய் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டவள் தனது இரு கன்னங்களையும் உள்ளங்கையில் தாங்கியவளாய் அமர்ந்து கொண்டாள். அமைதியாக அவளருகில் அமர்ந்தான் இன்பா. "என்னம்மா சொல்றான் உன் புருஷன்! ஞாயித்துக்கிழமை தூயவன் வீட்டுக்கு வரதை பத்தி அவன்கிட்ட சொல்லிட்ட தானே" என்று கேட்டார் பூர்ணம். "அத்தை அது வந்து.. அவருக்கு ஆபிஸ்ல டீம் அவுட்டிங் இருக்காம்! கூர்க்குப் போறாங்களாம்! வர முடியாதுனு சொல்லிட்டாரு அத்தை" சற்று தயங்கியவாறே அவள் கூற, "எனக்குத் தெரியும்! அவனே வரேன்னு சொல்லிருந்தாலும் நீ தான் அவனைக் கூர்க்குப் போறது தான் முக்கியம்னு சொல்லி திசை திருப்பி விட்டிருப்ப! எங்க குடும்பத்தைப் பிரிக்க வந்தவத் தானே நீ! புருஷன்காரன் அம்மாகிட்ட பேசாம இருக்கானே! அவனைச் சமாதானம் செஞ்சி பேச வைப்போம்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா! அவன் கோபத்துல கூடக் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி எங்க கூடச் சேராமலே வச்சிக்கனும்னு தானே நீ பார்க்கிற" ஆத்திரத்துடன் அவர் பேசிக் கொண்டே போக, ஏற்கனவே வாந்தி எடுத்துச் சோர்ந்திருந்த முகத்தினில் சோகம் வழிந்தோட கண்களில் தேங்கிய கண்ணீருடன் அமைதியாக அவனைப் பார்த்தாள் சிந்துஜா. தொடர்ந்த அவரின் ஐந்து நிமிட வசவுகளையும் பழிச்சொல்லையும் தாங்க முடியாதவனாய், "அம்மா! அடுத்த வாரம் கெட் டூகதர் வச்சிக்கலாம். அண்ணா வீட்டுக்குலாம் வர முடியாது. நம்ம காஞ்சிபுரம் வீட்டுக்கு வரேன். அவங்களை அங்க வர சொல்லிடுங்க. சாப்பாடுலாம் வேலைக்கு ஆளு வச்சிக்கோங்க. இல்லனா ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சிக்கோங்க. என் பொண்டாட்டி அங்க வந்துட்டு யாருக்கும் சமைச்சு போட்டுட்டு இருக்க மாட்டா! இப்ப மட்டுமல்ல எப்பவுமே நாங்க வரோம்னா சமைக்க ஆளு வச்சிடுங்க. இதுக்கெல்லாம் உங்களுக்கும் உங்க மூத்த பையன் பொண்டாட்டிக்கும் சம்மதம்னா மட்டும் சொல்லுங்க! அடுத்த வாரம் மீட் செய்யலாம்" திடீரெனக் கேட்ட மகனின் குரலில், "இன்பா" இன்ப அதிர்ச்சியுடன் அழைத்திருந்தார் பூர்ணம். "நிஜமாவா இன்பா?" என்றவர் கேட்க, "நிஜமா தான்மா! நான் சொன்னதுக்குலாம் சம்மதம்னா எனக்கு அங்க வரதுக்கு சம்மதம்" என்றவனாய் அவரின் பதிலுக்குக் கூடக் காத்திராது இணைப்பைத் துண்டித்தான் இன்பா. கண்களுக்குள் இருந்த கண்ணீர் காற்றோடு கரைந்திருக்க வியப்பில் விரிந்த விழிகளுடன் ஆச்சரியமும் இன்ப அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்திருந்தாள் சிந்துஜா. "நிச்சயமாக இது உனக்காக மட்டும் தான்! நேத்து நீ தானே சொன்ன! ஒதுங்கி போறதை விட்டுட்டு எப்டி சமாளிக்கலாம்னு பாருங்கனு! எனக்காக இனி நீ அம்மாகிட்ட திட்டு வாங்க வேண்டாம்" என்றவனாய் விரிந்திருந்த அவளின் கண் இமைகளில் இதழ் பதித்துச் சிரித்தான். அதீத மகிழ்ச்சியில் அவனது தோளில் முகம் புதைத்தவளாய் தன்னவனைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தாள் சிந்துஜா. -- தொடரும்