top of page

என் இனிய இன்பனே 2"ஹலோ அத்தை! எப்படி இருக்கீங்க?" காதோடு கைபேசியை வைத்து பேசியவளாய் சமையலறையில் அடுப்பில் கடாயில் காய்கறியை கிண்டிக் கொண்டிருந்தாள் சிந்துஜா.


மறுபுறம் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவளாய்,


"நல்லா இருக்கேன் அத்தை! அவருக்கு ஃபோன் செஞ்சீங்களா? எடுக்கலையா? இன்னிக்கு வர்க் ஃப்ரம் ஹோம் அத்தை! ஏதாவது ஆபிஸ் மீட்டிங்க்ல இருந்திருப்பாரு! என்னது அவர்கிட்ட போனை கொடுக்கவா?" எனக் கேட்டவாறு அடுப்பை சிறு தீயில் வைத்தவளின் மனமோ, 'ஆமா அப்படியே நான் கொடுத்த உடனே வாங்கி பேசிட போறாரு' என்றெண்ணியவாறு இருக்க,


"யுகி பார்த்து விளையாடுடா! விழுந்து தொலைக்காத" வரவேற்பறையில் சோஃபாவில் இருந்து குதிக்க தயாராகிக் கொண்டிருந்த மகனை பார்த்து கத்தியவளாய் ஃபோனை மியூட்டில் போட்டுக் கொண்டே இன்பா வேலை செய்துக் கொண்டிருந்த அறை நோக்கி சென்றாள்.


கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவள், "அத்தை உங்ககிட்ட பேசனுமாம்" மடிகணிணியில் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருந்தவன் முன்பு நின்று கூறினாள்.


காதில் இருந்த ஹெட்செட்டை காண்பித்து மீட்டிங்கில் இருப்பதாய் சைகை செய்தவன் அவளை வெளியே போக சொன்னான்.


அவனின்‌ சைகை புரிந்தும் புரியாதவளாய், "எனக்கு அங்க அடுப்புல இருக்க காய் தீஞ்சிடும்ங்க! இந்தாங்க அதை நீங்களே உங்கம்மாகிட்ட சொல்லுங்க" என்று கைபேசியை அவனது கையினில் வைக்க,


கோபம் உச்சத்தில் ஏற, தனது மீட்டிங்கை மியூட்டில் போட்டவன், "அடியேய் அறிவுக் கெட்டவளே! கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு! மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றேன். வந்து நொய் நொய்யினுட்டு இருக்க" என்று கத்தினான்.


அவனை பார்த்து முறைத்தவளாய், "அத்தை கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்" என்று கைபேசி இணைப்பை துண்டித்தவள் சமையலறைக்கு சென்று அடுப்பை அணைத்து விட்டு மீண்டுமாய் அறைக்குள் வந்து, "யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க? அது ஒன்னும் அவ்ளோ முக்கியமான மீட்டிங்கா இருக்காதுனு எனக்கு தெரியும். உங்களுக்கும் உங்க அம்மாக்கும் இடையில் நான் தான் கிடந்து அல்லாடிட்டு இருக்கேன். நீங்க அவங்ககிட்ட பேச மாட்டீங்கனு தெரிஞ்சும் இடைல உங்கம்மா என்னை கோர்த்து விட்டா, இது தான் சாக்குனு அவங்க மேல உள்ள கோபத்தைலாம் என்கிட்ட காண்பிச்சிட்டு இருக்கீங்க! அவ்ளோ தான் சொல்லிட்டேன்" அவனை நோக்கி விரல் நீட்டி கண்களில் நீர் மின்ன பேசினாள்.


அவளின் பேச்சிலும் கண்களை நிறைத்த நீரிலும் பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்தவனாய் எழுந்து அவளருகில் செல்ல, தன்னை நோக்கி வந்த அவனின் கையை தட்டி விட்டவளாய் கண்களை துடைத்தவாறு வெடுக்கென வெளியே சென்றாள்.


"ம்ப்ச்" என தலை முடியை அழுந்த கோதியவன், "மனுசனை நிம்மதியா வேலை பார்க்க விடுறாங்களா? இதுக்கு தான் வர்க் ஃப்ரம் ஹோமே எடுக்கிறது கிடையாது" தனக்குள்ளேயே புலம்பியவனாய் அலுவலக வேலையை பார்க்கலானான்.


அன்று மாலை அலுவலக நிகழ்ச்சிக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டிலிருந்தே வேலை பார்த்து விட்டு மாலை குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் என திட்டமிட்டிருந்தான் இன்பா."அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நான் தான் கிள்ளுக்கீரையா கிடைச்சேன் போல! என் கல்யாணம் முன்னாடிலருந்தே தான் அவர் அவங்கம்மாகிட்ட பேசாம இருக்காரே! என்னமோ கல்யாணத்துக்கு பிறகு நான் தான் இவரை முந்தானைல முடிஞ்சிக்கிட்டு இவரை பேச விடாம செய்றேன்னு அந்தம்மா என்னை கேள்வி கேட்குறாங்க" கண்களில் நீர் துளிர்க்க புலம்பியவாறே சமைத்திருந்தாள்.


இவளின் கைபேசியை அவனின் அறையிலேயே அவள் வைத்துவிட்டு வந்திருக்க, மீண்டுமாய் அவளின் அலைபேசியில் அவளின் அத்தை பூர்ணம் அழைக்க, அதை பார்த்த இன்பா, அந்த கைபேசியை எடுத்து அழைப்பை துண்டித்து விட்டு தனது கைபேசியில் தந்தைக்கு அழைத்தான்.


அவரின் மூலம் அன்னை பேச வந்த செய்தியை அறிந்துக் கொண்டவன், தனது பதிலை கூறிவிட்டு கைபேசியை வைத்து விட்டான்.


மதிய உணவினை சமைத்து முடித்தவள், அவனின் அறையை எட்டிப் பார்த்தவளாய், "சாப்பிட வாங்க" என்று அவன் முகம் பாராது உரைத்து விட்டு வந்து முகப்பறையில் அமர்ந்தாள்.


உணவு மேஜையில் அவனுக்கான உணவினை அவள் பரிமாறிக் கொண்டிருக்க, நாற்காலியில் அமர்ந்திருத்தவன், "நீ சாப்பிட்டியா?" எனக் கேட்டான்.


'ஆமா இப்ப தான் அக்கறை அரகரானு ஆடுது. மனசாட்சி இல்லாம திட்டும் போதுலாம் எங்கே போச்சாம்' என வாய்க்குள் முனங்கியவளாய் அவனை முறைத்துப் பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் உணவினை பரிமாறினாள்.


அவளின் முனங்கலையும் முறைப்பையும் பார்த்தவனாய், "நீ பதில் சொல்லாம நான் சாப்பிட மாட்டேன்" எனக் கைகளை கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தவாறு நிமிர்ந்து அமர, கோபம் கொண்டவளாய், "ஏன் எனக்கு கோபப்படக்கூட உரிமை இல்லையா? நீங்க செய்ற அழிசாட்டியத்துக்குலாம் உங்கம்மா என் மேல தான் பழியை தூக்கி போடுறாங்க. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடிலருந்தே நீங்க உங்கம்மாகிட்ட பேச மாட்டீங்க தானே. அதுக்கான காரணத்தை இது வரைக்கும் நீங்க என்கிட்ட சொல்லிருக்கீங்களா? இப்ப நீங்க போன் பேசாம இருந்ததுக்கும் நான் தான் காரணம்னு எனக்கு போன் போட்டு திட்டுவாங்க. எனக்காக ஒரு வார்த்தை உங்கம்மாகிட்ட பேச கூடாதா?"


அவளின் பேச்சை கைக்கட்டி கேட்டுக் கொண்டிருந்த இன்பா, டம்ளரில் தண்ணீரை ஊற்றி அவளிடம் பருக நீட்டினான். அதை வாங்காது மேலும் அவள் அவனை முறைக்க, அவளின் கைப்பற்றி தன்னருகில் அமர வைத்தவனாய், "சாரி" என்றான்.


"நிஜமா முக்கியமான மீட்டிங்கல தான் இருந்தேன் சிந்து" கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில் உரைத்தான்.


அவனை முறைத்தவாறே அவனளித்த நீரை வாங்கி பருகியவள், "எனக்காக உங்கம்மாகிட்ட பேச மாட்டீங்களா?" எனக் கேட்டாள்.


"என்னை வச்சி அம்மா உன்னை ரொம்ப திட்டுறாங்களா?" எனக் கேட்டான்.


ஏற்கனவே இப்படியான ஒரு சூழலில் தான் அவளை தாயிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனமாக இங்கே அழைத்து வந்தான்.


அதை நினைத்தவளாய், "அது எப்பவும் நடக்குறது தானே!" என்றாள்.


"நான் அப்பாகிட்ட பேசி அம்மாவை கண்டிக்க சொல்றேன்" என்றதும்,


"ஆமா அப்படியே உங்கம்மா கேட்டுடுவாங்க பாருங்க! எனக்கு பழகிடுச்சு விடுங்க. எதுக்கு மாமாவை வேற இதுல இழுத்து கஷ்டப்படுத்தனும்" என்றவாறே அவனுக்கு உணவினை அவள் பரிமாற, அவளின் இந்த குணம் தானே தன்னை அவளிடம் சரணடைய வைத்தது என்றெண்ணியவனாய் மென்னகை புரிந்தவாறு உண்ண ஆரம்பித்தான்.


மேஜை மீது அமர்ந்திருந்த மகனுக்கு உணவினை ஊட்டியவாறு அவளை தன்னுடன் அமர்ந்து உண்ண வைத்து என அந்த மதிய ‌உணவுப்பொழுது குடும்பத்துடனான அழகிய பொழுதாக கழிந்திருந்தது அவனுக்கு.


'பரவாயில்லை இதுக்காக அப்பப்ப வர்க் ஃப்ரம் ஹோம் எடுக்கலாம்' மனதோடு நினைத்துக் கொண்டவனாய் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.


மாலை நான்கு மணியளவில் மகனை குளிக்க வைத்து அவனை இன்பாவிடம் கொடுத்து உடை அணிவிக்குமாறு கூறியவள் குளிக்க சென்றாள்.


மகனை தயார் செய்து முகப்பறையில் அவன் விளையாடும் பொம்மைகளை கொடுத்து உட்கார வைத்தவன் படுக்கையறையின் கதவை தட்டியவாறு உள்ளே சென்று, "யுகி மேல ஒரு பார்வை வச்சிட்டே கிளம்பு சிந்து" என்று புடவை உடுத்திக் கொண்டிருந்த மனைவியிடம் உரைத்தவனாய் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.

குளித்து விட்டு இடையில் துண்டுடன் வெளியே வந்தவன் முழுவதுமாக தயாராகி கிளம்பி நின்ற மனைவியை பார்த்தான்.


"அழகா இருக்கடா சிந்து" என்றவனாய் மனைவியை இறுக அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல, தன்னுடலில் உணர்ந்த அவன் உடலின் சில்லிப்பும் தன் மீது தெறித்திருந்த அவனது தலைமுடியின் ஈரத்துளிகளும் அவளை சிலிர்க்கச் செய்திருந்தது.


அவனை கண்டும் காணாத பார்வையுடன் நாணப்புன்னகை சிந்தியவளாய் முகப்பறைக்கு சென்றாள்.


மகனை தூக்கிக் கொண்டு படுக்கையறைக்கு வந்தவள் கிளம்பி நின்ற கணவனை கண்டு மெச்சுதலாய் புருவத்தை உயர்த்தினாள்.


தனது நெற்றியில் வைப்பதற்காக தண்ணீரில் கலந்து வைத்திருந்த சந்தனத்தை எடுத்து, கணவனை லேசாக தலையை தாழ்த்தக் கூறி நெற்றியில் சிறு கீற்றாய் வைத்தவள், மகனுக்கும் வைத்தாள்.


"இப்ப பெர்ஃபெக்ட்" என்றவள், "செம்ம ஹேண்ட்சம்மா இருக்கீங்கப்பா" என்று அவனை லேசாக அணைக்க, "நானு நானு" என தாய் தந்தையரின் காலை மகன் கட்டிக்கொள்ள இருவரும் வாய்விட்டு சிரித்திருந்தனர். இன்பா குனிந்து மகனை தூக்கிக்கொண்டு மனைவி மகனுடன் தற்படங்கள் எடுத்துக் கொண்டான்.


"கேஸ் சிலிண்டர் ஆஃப் பண்ணியாச்சா? எல்லா ரூம்லயும் லைட் ஃபேன்லாம் ஆஃப் பண்ணியாச்சா? எல்லா வாட்டர் டேப்பும் கிளோஸ் ஆகிருக்கா?" என இன்பா ஒவ்வொன்றாய் சரி பார்த்து கதவின் சாவியை எடுத்து வெளியே வர, மகனை தூக்கியவாறு வெளியே வந்தாள் சிந்துஜா.


"குடும்ப சகிதமாக வெளில கிளம்பிட்டீங்க போலருக்கே" என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்களின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த கீதாக்கா இவர்களின் வீட்டை கடந்தவராய் கேட்க, "ஆமாக்கா அவரோட ஆபிஸ் ஃபங்கஷனுக்கு போறோம்" என்று அவருடன் சிரித்தவாறு பேசியவாறே லிப்டின் அருகே சென்று நின்றாள் சிந்துஜா.


கதவை பூட்டிவிட்டு சரி பார்த்து கொண்டவனாய் அவர்களுடன் லிப்டினுள் நுழைந்தான் இன்பா.


மாலை ஐந்தரை மணியளவில் மகிழுந்தில் அலுவலகம் நோக்கி பயணித்திருத்தனர் இன்பா குடும்பத்தினர்.


அலுவலக தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்தி விட்டு இறங்கிய இன்பா, மகனை கைகளில் தூக்கியவனாய் மனைவியின் கையை பற்றியவாறு விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.


*****


குழந்தையை கொஞ்சியவாறு விழா இடத்தை நோக்கி அன்னமும் அவளின் அண்ணி மதுர நங்கையும் நடந்து சென்றிருந்தனர்.

"எப்படி அன்னம் புடவை கட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கி வச்சிக்கிட்டு மேனேஜ் செய்ற! எனக்கு இன்னும் புடவையை கட்டிக்கிட்டு மேனேஜ் செய்ய தெரியாது" என்றவளாய் அன்னத்திடம் இருந்த தனது மகள் நந்திதாவை தன் கையில் வாங்கி கொண்டாள் மதுர நங்கை.


மிதமான வேலைப்பாடுகள் உள்ள நீளமான கவுன் போன்ற சல்வாரை உடுத்தியிருந்தாள் நங்கை. மெல்லிய பட்டுப்புடவையை உடுத்தியிருந்தாள் அன்னம்.


"அது சின்ன வயசுலருந்தே பண்டிகைனாலே புடவை கட்டிக்கனும்னு அடிக்கடி கட்டினதால வந்த பழக்கம் அண்ணி" என்றாள் அன்னம்.


"என்னோட உருண்டு திரண்ட உடம்புக்கு புடவை சரிவராதுனு ரொம்ப கட்ட மாட்டேன் நான். கண்டிப்பாக தேவைனா மட்டும் தான் கட்டுறது! அதுவும் என் புருஷனுக்காக கல்யாண டைம்ல யூ டியூப் பார்த்து புடவை கட்ட பழகினது தான். உன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா புடவை கட்டக்கூட தெரியலை பாருன்னு அவனை யாரும் குறை சொல்லி பேசிட கூடாதேனு நினைச்சே கத்துக்கிட்டேன்" என்றாள் நங்கை.


"சோ ஸ்வீட்! மேட் ஃபார் ஈச் அதர் தான் நீங்க இரண்டு பேரும்" என்றாள் அன்னம்.


அவளின் கூற்றில் சிரித்தவளாய், "அப்படி ஈசியா தானா மேட் ஃபார் ஈச் அதர் ஆகலை. மேட் ஃபார் ஈச் அதரா நாங்க எங்களை மாத்திக்கிட்டோம்னு சொல்லலாம்" என்றாள் நங்கை.


"ஹ்ம்ம் ராஜாண்ணா பத்தி பேசினாலே மூஞ்சில பல்ப் எறிஞ்சிடுதே உங்களுக்கு" அன்னம் அவளை கேலி செய்ய,


சிரித்தவளாய், "இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு இன்னும் ஃபோனே செய்யலை அவன். நானும் பாப்பாவும் ரெடியாகிட்டு போட்டோ அனுப்பி விட்டோம். பார்த்தானா இல்லையானு தெரியலை" வாட்டமான குரலில் உரைத்தாள்.


மதுர நங்கையும் சுந்தரராஜனும் உற்ற தோழமைகளாய் இருந்து கணவன் மனைவி பந்தத்திற்குள் வந்தவர்கள். இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் மென்பொருளாளராய் பணிபுரிகிறார்கள்.


பணி நிமித்தமாக ராஜன் ஹைத்ராபாத் சென்றிருந்ததினால் தான் அவனால் இந்நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.


திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக அவனை பிரிந்திருக்கிறாள் மதுர நங்கை.


"அண்ணாவை ரொம்ப மிஸ் செய்றீங்களா அண்ணி?" அன்னம் கேட்க,


"அப்படியா வெட்ட வெளிச்சமா மூஞ்சுல தெரியுது" என்று சிரித்த நங்கை, "என்னை விட என் பொண்ணு அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் செய்றா" என்றாள்.


இருவரும் பேசியவாறு நிகழ்ச்சி அரங்கை நோக்கி நடந்து கொண்டிருந்த நேரம், வழியில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற பெண்ணை அங்கு கண்ட நங்கை, "அன்னம்! அந்த பொண்ணு பிரவீணா என் கூட காலேஜ்ல படிச்ச பொண்ணு அன்னம். இங்கயா வேலை செய்றா! நான் போய் பேசிட்டு வரேன்" என்றவளாய் அந்த பெண்ணை நோக்கி செல்ல,


"அண்ணி என் டீம்லருந்து கால் செய்றாங்க! நான் போய் பேசிட்டு இருக்கேன். நீங்க பேசிட்டு வாங்க" என்றவாறு குழந்தையுடன் முன்னே சென்றாள் அன்னம்.


விழா இடத்தினை அடைந்த அன்னத்தினை நோக்கி, "ஹாய் அன்னம்! யூ லுக் சோ பியூட்டிபுல் டுடே" என்ற பாலாஜி, அவனருகில் நின்றிருந்த மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.


"சோ கியூட் பேபி! யாரோட பாப்பா?" எனக் கேட்டவாறு மோகன் அன்னத்தின் கையிலிருந்த குழந்தையை தனது கைகளில் வாங்கிக் கொள்ள,


"அண்ணியோட பொண்ணு! அண்ணி வந்துட்டு இருக்காங்க" என்றாள் அன்னம்.


"பாப்பா பேரு என்ன? சொல்லுங்க" என்று குழந்தையிடம் மோகன் பேச,


அச்சமயம், "ஹாய் கைஸ்" என்ற வண்ணம் அவர்களின் அருகில் வந்து நின்றான் இன்பா.


தனது குழு மக்களிடம் சிரித்த முகமாய் முகமென் கூறியவனை பார்த்து அனைவரும் சிரித்தவாறு பேசினர்.


"புடவைல ரொம்ப அழகா இருக்க அன்னம்" என்ற இன்பாவின் கரத்தினை பற்றியவாறு நின்றிருந்தான் அவனது மகன் யுகேந்திரன்.


"ஆமாங்க! அப்படியே அன்னம்ன்ற பேருக்கேத்த மாதிரி இருக்கீங்க" என்றாள் சிந்துஜா.


அவளின் பாராட்டுதலில் மென்னகை புரிந்தவளாய், "தேங்க்யூ" என்ற அன்னம், யாரிந்த பெண் என்பது போல் இன்பாவை பார்த்தாள். இன்பாவின் கரத்தை விட்டு ஓடியாட துடித்து கொண்டிருந்த அந்த சிறுவனையும் பார்த்தாள்.


"இவங்க தான் என் மனைவி சிந்துஜா. இது என் பையன் யுகேந்திரன்" என்றான் இன்பா.


அதிர்ச்சியில் அன்னத்தின் கண்கள் விரிய, 'என்னது இன்பாக்கு கல்யாணம் ஆகிடுச்சா' என்ற மைண்ட் வாய்ஸூடன் அவள் பார்த்திருக்க,


"உங்களை பத்தி இன்பா என் கிட்ட பேசாத நாளில்லை அன்னம்" என்றாள் சிந்துஜா.


சுழற்சி முறையில் அனைத்து ஷிப்ட்டும் இருக்கும் அவர்களின் பிராஜக்ட்டில் பெரும்பாலும் பெண்களை எடுக்க மாட்டான் இன்பா‌. இது வரைக்கும் பெண்களையே எடுத்ததில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு நெருக்கடியான சூழலில் தான் அன்னத்தை அந்த பிராஜக்ட்டிற்கு எடுத்திருந்தான் இன்பா. அதிலும் கல்லூரி முடித்த கையோடு இந்த அலுவலக வேலையில் சேர்ந்த அன்னத்திற்கு இது தான் முதல் பிராஜக்ட் என்பதால் அவளது குழுவில் அனைவருமே அவளை சிறுப்பெண்ணாய் பாவித்து தான் பழகினர்.


"பாருங்க என்னை பத்தி உங்ககிட்ட சொல்லிருக்க என் மேனேஜர், உங்களை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல. நம்ம டீம்ல கூட யாருமே என்கிட்ட சொல்லவே இல்லை" என்ற அன்னம்,


"ஹாய் குட்டிப்பையா! அப்படியே உங்கப்பா மாதிரியே இருக்கீங்க" என்றவாறு சிறுவனின் உயரத்தினளவு அமர்ந்து அவனது கன்னத்தை கிள்ளியவாறு கூறினாள்‌.


தந்தையின் கால்களை கட்டிக் கொண்டான் அவன்.


"புது ஆளுங்ககிட்ட சட்டுனு பழக மாட்டான்" என்றவாறு மகனை கைகளில் தூக்கி கொண்டான் இன்பா.


"உங்களை மாதிரியேனு சொல்லுங்க" என்று சிரித்தாள் அன்னம்.


அன்னத்தின் செயல்களை பார்த்து சிரித்தவாறு நின்றிருந்த சிந்துஜா,


"இந்த பேச்சு தான் அவருக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயம். நீங்க இருக்கிற இடம் கலகலனு தான் இருக்கும்னு சொல்வாரு. அன்னிக்கு நீங்க மயங்கி விழுந்ததுல ரொம்பவே பயந்துட்டாருனு சொன்னாரு. ஆமா இப்ப உடம்பு எப்படி இருக்கு?" என்று வாஞ்சையுடன் அன்னத்தின் கைப்பற்றி சிந்துஜா கேட்க, நெகிழ்ந்து விட்டாள் அன்னம்.


அலுவலகத்தில் மோகன் விளையாட்டாய் அவளை பயமுறுத்த செய்த வேலை தான் அவளை மயங்க செய்திருந்தது. அதன் பின்பு சிறிது நாள் ஓய்வெடுத்து விட்டு வேலைக்கு வந்திருந்த அன்னத்தை இன்று முதல் முறையாக பார்த்ததினால் அதனை கூறி அவளின் நலனை விசாரித்திருந்தாள் சிந்துஜா.


மேனேஜரின் மனைவி என்ற எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் சகஜமாக நட்புணர்வுடன் பேசிய சிந்துஜாவை நிரம்ப பிடித்து விட்டது அன்னத்திற்கு.


இன்பாவும் மனைவியின் இந்த இயல்பான பேச்சை கனிவுடன் பார்த்திருந்தான்.


"நான் நல்லா இருக்கேன்க்கா! எல்லாம் இந்த மோகன் செஞ்ச வேலை தான்" என்றவாறு அருகில் நின்றிருந்த மோகன் கையில் ஒரு அடி வைத்தாள்.


இன்பாவின் கையிலிருந்த குழந்தையிடம், "அக்கா கிட்ட வா! நான் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தரேன்" என கைகளை நீட்டி அன்னம் அழைக்க, தாவினான் அவளிடம்‌.


"ஸ்வீட் பாய்" என்றவாறு அவன் கன்னத்தை வருடியவளின் கைபேசி அலற, ஒரு கையால் அவனை தூக்கி கொண்டு மறுகையால் அழைப்பை ஏற்று கைபேசியை காதினுள் வைத்தாள்‌ அன்னம்.


அசோக் மற்றும் பாலாஜியுடன் பேசியவாறு இன்பா நின்றிருக்க, அன்னத்துடன் நின்றிருந்தாள் சிந்துஜா.


"ஹான் அண்ணி! எங்க இருக்கீங்க?" என்றவளாய் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கான பாதையை உரைத்தாள்.


"ஹான் பார்த்துட்டேன் அன்னம்" என்றவாறு அவர்களின் அருகே வந்த நங்கையை கண்டு ஸ்தம்பித்து நின்றான் இன்பா. 


பெரும் அதிர்ச்சி நெஞ்சை தாக்க, கண்கள் அவளை விட்டு துளியும் அசையாமலிருக்க, மூச்சடைப்பது போன்ற உணர்வு அவனுக்கு.


'நங்கை' அன்னிச்சையாய் மொழிந்தன அவன் இதழ்கள்.


"ஹாய் அன்னம்" என்று அவளின் அருகே வரவும், மோகன் கையிலிருந்த குழந்தை, "ம்மாஆஆஆ ம்மாஆஆஆ" என நங்கையிடம் தாவினாள்.


நங்கையையும் குழந்தையையும் பார்த்தவனின் கண்கள் சுற்றுப்புறம் சுற்றி பார்த்தவாறு அவளின் கணவனை தேடின.


குழந்தையை கையில் வாங்கியவாறு மோகனிடம் பேசிய நங்கையை தன் பக்கமாக திருப்பி, "இவங்க தான் என் மேனேஜர் இன்பா! இவங்க அவங்க மனைவி சிந்துஜா! இந்த குட்டிப்பையன் அவங்க மகன் யுகேந்திரன்" என்று அறிமுகம் செய்தவள், "இவங்க என் அண்ணி மதுர நங்கை! இது அவங்க மக நந்திதா" என்று அறிமுகம் செய்தாள்.


முகம் முழுக்க மகிழ்வாய் குழந்தையுடன் நின்றிருந்த நங்கையை பார்த்தவனின் மனமும் மகிழ்வில் திளைத்தது.


அனைவரிடமும் மென்னகை புரிந்தவாறு, "ஹாய்" என்ற நங்கையின் முகத்திலும் பேச்சிலும் எவ்வித மாற்றமும் இல்லை.


முகத்தில் சிறு துளி மாற்றமோ அதிர்வோ இல்லாமல் இயல்பாக நங்கை தன்னை எதிர்கொண்ட தன்மையில் குழம்பிப் போனான் இன்பா.


அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன்னை, தனது முகத்தை  இவள் மறந்தே விட்டாளா என்ற கேள்வி அவனின் மனதை குடைந்தது.


'ஏன் என்னை தெரியாதது போல் தவிர்க்கிறாள்? இயல்பாக பேசலாமே!' என்றவன் உள்ளுக்குள் மருக, 'அவள் இயல்பாக பேசுமளவா நீ நடந்துக் கொண்டாய்' என்று அவனை குற்றம் சாட்டியது அவனின் மனசாட்சி.


-- தொடரும்© KPN NOVELS COPY PROTECT
bottom of page