top of page

என் இனிய இன்பனே 19

Updated: Aug 29


அதே காஞ்சிபுரத்தில் பழங்காலக் கட்டமைப்பின்படி ஓடு வேய்ந்த கூரையும் அதன் மேல் மச்சியுமெனச் சற்றுப் பிரமாண்டமாக இருந்த அவ்வீட்டின் முன்பு துள்ளலான மனநிலையுடன், நெடுநாட்கள் கழித்து மனைவியைக் காணப் போகும் ஆவலுடன் நின்றிருந்தான் இன்பா.


அந்த இரும்பு கதவினைத் தாண்டிச் சென்ற இன்பாவின் காதினில் விழுந்த தாயின் அவதூறான பேச்சில் திடுக்கிட்டு நின்றான் இன்பா.


'சிந்துவையா அம்மா இப்படித் திட்டிட்டு இருக்காங்க' கோபத்தின் எல்லையைக் கடந்திருந்தான் இன்பா.


"ஒழுக்கமானவளா இருந்திருந்தா அவளை ஏன் என் பையன் விட்டுட்டுப் போய்ருக்கப் போறான். இவளைப் பிடிக்காம தான் இந்தப் பக்கமே வராம இருக்கான். கூட்டிட்டுப் போங்க உங்க பொண்ணை. எங்க பையனுக்கு நாங்க வேற பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கிற முடிவுல இருக்கோம்" என்ற பூர்ணத்தின் வார்த்தைகளைக் கேட்டிருந்தவன் அவசரமாய் உள்ளே நுழைந்தான்.


அங்குச் சிந்து கண்ணீருடன் நின்று கொண்டிருக்க, முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்திருந்தனர் சிந்துவின் மாமாவும் அத்தையும்.

அவர்கள் முன்பு நின்று ஆங்காரமாகப் பேசிக் கொண்டிருந்தார் பூர்ணம்.


"அம்மாஆஆஆ" என்று கோபமாய்க் கத்தியிருந்த இன்பாவின் குரலில் அனைவருமே அதிர்ந்து வீட்டு வாசலைப் பார்த்தனர்.


இன்பாவின் பின்னே வந்து நின்றார் கந்தசாமி.


"என்னப்பா என்னாச்சு?" இவர்கள் வந்த ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வருவதற்குள் என்ன ஆயிற்று என்று புரியாமல் வீட்டுக்குள் எட்டிப் பார்க்க, அங்குச் சிந்துவின் பார்த்தசாரதி மாமாவும் அவரின் மனைவியும் இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.


"பூர்ணம் எதுக்கு இவங்களை வர வச்சிருக்க நீ?" எனக் கேட்டவாறு அவர் உள்ளே நுழைய,


"நான் சொல்றேன்ப்பா! உங்க பொண்டாட்டி என் பொண்டாட்டி மேல பழிப்போட்டு என்னை விட்டு விலக்கி வைக்க இவங்களை வர வச்சிருக்காங்க" கசப்பான புன்னகையுடன் உரைத்தான் இன்பா.


"என்ன பூர்ணம் இது?" என்று ஆத்திரத்துடன் கந்தசாமி பூர்ணத்தை நோக்கி கேட்க,


சிந்துவிடம் வந்து அவளின் தோளில் கைப்போட்ட இன்பா, "இப்ப நான் சொல்றதை எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டி சிந்து மட்டும் தான். அவளோட புருஷனான நான் அவளை முழுசா நம்புறேன்! அவளை மனசார விரும்பி பிடிச்சி செஞ்ச கல்யாணம் இது! இனி கண்டவங்க பேச்சுக் கேட்டு இப்படி இந்த வீட்டுப் பக்கம் வந்து நிக்காதீங்க" என்று கண்டவங்க என்பதில் தாயை முறைத்தவனாய், சிந்துவின் மாமாவையும் அத்தையையும் உஷ்ணத்துடன் பார்த்திருந்தான்.


அவர்கள் மறுவார்த்தைச் பேசாது அங்கிருந்து கிளம்பியிருக்க, "அப்பா நாங்க உடனே கிளம்புறோம். என் பொண்டாட்டியை அவமதிப்பா பேசின இந்த இடத்தில் இனி ஒரு நிமிஷமும் நான் இருக்க விரும்பலைப்பா!" என்றவனாய் சிந்துவை அவளின் உடைமைகளைத் தயார் செய்யச் சொன்னவன், இனி தானும் தனது மனைவியும் அந்த வீட்டுப் பக்கமே வர மாட்டோம் எனச் சபதம் போல் உரைத்தவனாய் அங்கிருந்து அன்றே கிளம்பியிருந்தான்.


கந்தசாமியும் அவர்களுடன் சென்னைச் சென்று புது வீட்டில் மகனையும் மருமகளையும் பால் காய்த்துக் குடியேற்றி விட்டு மறுநாள் காலை காஞ்சிபுரம் நோக்கி வந்திருந்தார்.


அவளாகவே தன்னிடம் ஏதேனும் கேட்பாளெனப் பார்த்தவன் அவளின் இறுக்கத்திலும் அமைதியிலும் தந்தை சென்றப்பின் பேசிக் கொள்ளலாம் என அமைதியாக இருந்தான்‌.


கந்தசாமியைக் காலைப் பேருந்தில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவன் வாசலில் அழைப்பொலியை அழுத்த, கதவைத் திறந்து விட்டவள் அவனது முகத்தைக் கூடப் பார்க்காதுத் திரும்பிச் சமையலறை நோக்கிச் சென்றாள்.


கதவைச் சாற்றி விட்டு "சிந்து" என்றவன் அழைக்க,


"என்னங்க? எதுவும் வேணுமா?" என்று கேட்டவளின் பார்வை அவன் மீது இல்லாமல் அறையைச் சுற்றி வந்தது.


"சிந்து என் முகத்தைப் பார்த்துப் பேசு! என் மேல கோபமா இருப்பனு தெரியும். சாரி நான்.." என்று அவன் பேச வரும் முன், கை நீட்டித் தடுத்தவள், "நான் உங்ககிட்ட எந்த விளக்கமும் கேட்கலை! கேட்கவும் விரும்பலை" முகம் கோபத்தில் செம்மையாகியிருக்கச் சத்தமாய் உரைத்தவள் சமையலறை நோக்கிச் சென்றாள்‌.


சிந்துவின் உள்ளம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது. ஆயினும் அவனிடம் தனது கோபத்தைக் காட்டவும் மனமில்லாது அடக்கியவாறே இருந்தாள்.


"சிந்து! ப்ளீஸ்" என்று அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், "நீ என் மேல எவ்ளோ கோபமா இருக்கனு புரியுது! நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு சிந்து" தன்னிலை விளக்கமளிக்க முன் வந்தான் இன்பா.


கோபமாய் அவன் கைகளை உதறியவள், "உங்களுக்கு வேணும்னா பிடிச்சிருக்குனு வந்து கல்யாணம் செய்வீங்க! அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டு போவீங்க! யாரும் கேட்க ஆளில்லாத அனாதை தானே நானு!" மேலும் பேச நா எழாமல் குரல் தழுதழுக்க அவள் கண்ணீரை உகுக்க,


அவளின் பேச்சில் கோபம் உச்சத்தைத் தொட, "அறைஞ்சேனா பாரு! அனாதையாம் அனாதை" எனக் கையை ஓங்கியவன், அவளின் மிரண்டப் பார்வையில் தன்னைக் கட்டுபடுத்தியவனாய்,


"இனி என் முன்னாடி இப்படிப் பேசாத சிந்து" என்று கத்தியிருந்தான்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க, உடல் நடுங்க அவனைப் பார்த்திருந்தவளைக் கனிவுடன் பார்த்தவனுக்கு நெஞ்சம் வலிக்க, அவளை இடையோடு வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தவன், "சாரிடா சிந்து மா! இனி இப்படி அனாதைனுலாம் சொல்லாதடா! கஷ்டமா இருக்கு. உனக்குனு தான் நான் இருக்கேன்! எப்பவும் உனக்காக நான் இருப்பேன்" என்றான்.


கண்ணீர் வழிந்த கண்களுடன் அவனை ஏறிட்டவளாய் அழுகையில் தொண்டைக் கமற, "இப்படித் தான் நான் எப்பவும் கூட இருப்பேன்னு சொல்லிட்டு சொல்லாம கொள்ளாம போய்டுவீங்க. உங்களுக்கு உங்க வேலை தான் முக்கியம் நான் முக்கியமில்லை! என்னை வேண்டாம்னு உங்க அம்மாகிட்ட சொன்னீங்களாமே" எனும் போது சிறுபிள்ளையாய் அழுகையில் கண்களைக் கசக்கியிருந்தாள் அவள்.


அவளின் முகம் பற்றிக் கண்ணீரைத் துடைத்தவனாய், "வேண்டாம்னு சொன்னேனா? நான் எப்ப வேண்டாம்னு சொன்னேன்? அம்மா உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க சிந்து மா?" என்றான்.

"நீங்க வேண்டாம்னு சொல்லாம தான் என் மாமாவையும் அத்தையும் உங்கம்மா வர வச்சாங்களா? உங்க வேலைக்காகத் தானே என்னை விட்டுப் போனீங்க! அது ஏன் உங்கம்மாக்கு புரியவே இல்லை. எவ்ளோ கொடுமைப்படுத்தினாங்க தெரியுமா! வேலைக்காரியா எல்லா வேலையும் பார்க்கிறது கூட எனக்குப் பெரிசு இல்லை! இது என் வீடுனு இழுத்துப்போட்டு எல்லாமே நானே செஞ்சிடுவேன் ஆனா உங்களை வேற யாருக்கோ கட்டிக் கொடுக்கிறேன்னு சொல்லி பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணு போட்டோவெல்லாம் காண்பிச்சாங்க. என் மனசு என்னப்பாடு பட்டடுச்சு தெரியுமா. எனக்கு உங்களை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா! என்னைத் தவிர உங்களுக்கு யாருமே முக்கியமா தெரியக் கூடாதுன்ற அளவுக்கு என் மனசு உங்களைக் காதலிக்குது! நிஜமாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனு நினைச்சு செத்துப் போகலாம்னு கூடத் தோணுச்சு தெரியுமா?" எனக் கூறியவாறு தேம்பித் தேம்பி அழுதவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தான் இன்பா.


அவனது கைகள் அவளது முதுகை ஆதரவாய் வருடியிருக்க, "வெரி சாரி மா! அம்மா இப்படிலாம் செஞ்சது எனக்குத் தெரியாதுடா! அப்பாகிட்ட பேசும் போதெல்லாம் உன்னைப் பத்தி கேட்டுட்டே தான் இருந்தேன். அவரு கூட என்கிட்ட சொல்லலை! நீயாவது என்கிட்ட போன்ல பேசும் போது சொல்லிருக்கலாமே! கல்யாணத்துக்கு முன்னாடி நான் சிங்கப்பூர் போனப்ப அவ்ளோ மெயில் போட்டியே! இப்பவும் அந்த மாதிரி எனக்கு அனுப்பிருக்கலாம்ல" ஆற்றாமையுடன் கேட்டான் இன்பா.


"கடல் கடந்து தனியா நீங்களே கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது நான் வேற உங்க மனசை கஷ்டபடுத்துறா மாதிரி ஏன் இந்த விஷயத்தை எல்லாம் சொல்லணும்னு தான் சொல்லலைங்க. மாமா எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டே தான் இருந்தாங்க. உங்களுக்கு வேலைலாம் முடிஞ்சி இங்கே வந்ததும் என்னைக் கூட்டிட்டு போவீங்கனு சொல்லிட்டு இருந்தாங்க. முடிஞ்ச வரைக்கும் அத்தையை கண்டிப்பாங்க மாமா. ஆனா மாமா சென்னைல பிசினஸ் வேலை பார்க்க ஆரம்பிச்ச பிறகு முழு நேரம் வீட்டுல இருக்கிறது இல்லை. அதனால் அத்தைக்கு என்னை வச்சி செய்ய வசதியாக போச்சு.

என்னைப் பிடிச்சி கல்யாணம் செஞ்சிக்கிட்டதா நீங்களே சொல்லிருந்த போதும், என்கிட்ட சொல்லாம சிங்கப்பூருக்கு போனதுல எனக்கு பெரிய ஏமாற்றம். அப்பப்ப போன்ல பேசும் போது பெரிசா எதுவும் என்கிட்ட நீங்க பேசலையே! புரிஞ்சிது மாமா போன்ல ஃபார்மலா தான் உங்களால பேச முடியும்னு! ஆனால் அத்தை வேற அப்படிச் சொல்லும் போது உங்களுக்கு என்னைப் பிடிக்கலையோ, பேருக்கு என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு வெளிநாட்டுல வேறப் பொண்ணைக் கட்டிக்கிட்டீங்களோனுலாம் நினைச்சு எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமா!" அவனது சட்டையை இறுகப் பற்றியவளாய், அவளின் கண்ணீர் அவனது சட்டையை நனைக்க மார்போடு உதட்டை அசைத்து அழுதவாறே தனது மனத்தின் வலிகளை எல்லாம் கூறியிருந்தாள் சிந்து.


"உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்கிறேன்னு சொல்லி ரொம்ப தவிக்க விட்டுட்டேன்ல! எவ்ளோ இன்செக்யூர்டா ஃபீல் செஞ்சிருக்க நீ! என்னை மன்னிச்சிடுடா சிந்து" என்றவனாய் அவளின் தலையை வருடினான்.


தனக்கு அவள் மீதிருக்கும் காதலை உணர்த்த முனைந்தவனாய் அவளின் நெஞ்சில் ஆழமாய் தனது காதல் பதியும் வண்ணம், அவளின் காதோடு தனது இதழைப் பொருத்தி, "எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் சிந்து மா! ஐ லவ் யூ சிந்து மா" என்றவனின் வார்த்தை அவளின் காதில் கூச்சத்தை அளித்து நெஞ்சை தாக்கி சிலீரென்ற உணர்வை அளிக்க, மார்பினில் இருந்து முகத்தை மட்டும் நிமிர்த்தி அவன் முகத்தினைப் பார்த்தவளாய், "நிஜமா? இனி என்னை விட்டு எங்கேயும் போக மாட்டீங்க தானே" எனக் கேட்டாள்.


அவனின் காதலையன்றி தனக்கு வேறெதுவும் தேவையில்லை என்ற காதல் மனத்தின் பித்து நிலையில் இருந்தாள் சிந்து. தான் வாழ அவனது காதல் மட்டுமே போதுமானது என்ற அன்பின் உயர் நிலை அது.


காதல் யாசகம் வேண்டியவளாய் அவனை அவள் பார்க்க,


அந்தக் கண்களில் தெரிந்த ஏக்கத்திலும் தவிப்பிலும் தன்னைத் தொலைத்தவனாய்,


அழுத்தமாய் அவளின் நெற்றியில் முத்தமிட்டு, "சத்தியமா உன்னை விட்டு போக மாட்டேன்" என்று அவளின் கன்னத்தில் தனது இதழை அழுத்தியவன், "லவ் யூ சிந்து" என்று உதட்டை அசைக்க, அவளின் உடலெல்லாம் சிலிர்க்க, நாணமிகுதியில் அவன் மார்போடு சாயப் போனவளின் முகத்தைப் பற்றித் தன்னைக் காணச் செய்தவனாய், "நானும் மனசார உன்னைக் காதலிக்கிறேன் சிந்து" என்று கூறிய நொடி அவளின் கண்களில் கண்ணீர் துளிகளுடன் வந்த சந்தோஷ மின்னலில் தன்னை இழந்தவனாய் அவளின் இதழோடு தனது இதழை பொருத்தியிருந்தான்.


ஆழ்ந்த காதல் முத்தம் அது!


இருவரும் இத்தனை நாள் பிரிவை முத்தத்தின் இணைவில் சமன்செய்ய முயன்றவர்களாய் தங்களது மனக்கவலைகளை அந்த இனிமையான உணர்வில் தொலைக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.


இரு மனங்களின் காதலும் முத்தத்தைத் தாண்டி மொத்தமாய்க் களவாடத் துடிக்க, அவளைக் கைகளில் அள்ளியிருந்தான் அவன்.


முன்னாள் காதலை உரைத்து வாழ்வைத் தொடங்க வேண்டுமென அவன் எண்ணியிருந்தவை எல்லாம், அந்நொடியில் பின்னே சென்றிருக்க, தனது காதலை நிரூபிக்கும் விதமாய் அவளின் கவலைப்போக்கும் மறந்தாய் தன்னையே அவளுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்த இன்பா, மெத்தையில் அவளை விட்டவனாய், ஒவ்வொரு முத்தத்திலும் அவளை நெகிழச் செய்து, கணவனாய் அவனது செயலில் அவளைச் சிலிர்க்கச் செய்து, அவளின் அனுமதியோடு தனது ஆளுகைக்குள் அவளைக் கொண்டு வந்து இல்லற சங்கீதத்தில் சிந்துவின் சந்தமாய் மாறிப் போனான் இன்பா!


அடுத்த வந்த நாட்கள் எல்லாம் இன்பாவின் இனிய இன்னிசையாய் மாறியிருந்தாள் சிந்து.


அதன் பின்பான சிந்துவின் வாழ்வினில் இன்பத்தை மட்டுமே நிறைத்திருந்தான் இன்பா. இன்பாவின் இன்பத்தை மீட்டெடுத்தவளாய் அவனுக்குத் திகட்டாத காதலை வழங்கி இன்பமுறச்செய்திருந்தாள் சிந்து.


-- தொடரும்


© KPN NOVELS COPY PROTECT
bottom of page