"தூயவா! தகவல் எதுவும் தெரிஞ்சிதாடா! ஒரு வாரம் ஆகுதுடா" என்று கைபேசியில் மூத்த மகனிடம் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார் கந்தசாமி.
"அவன் தங்கியிருக்க ரூம்லாம் பார்த்துட்டேன்ப்பா! அங்கேயும் இல்லை. அங்க அவனோட ஃப்ரண்ட்ஸ்னு யாருமே இல்லை. ஆபிஸ்லயும் ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இல்லை. எங்க போனான்னே தெரியலையே! எல்லாம் உங்களால் தான்ப்பா! அவனுக்குப் பிடிக்காத பொண்ணைக் கட்டி வச்சனால தான் எங்கேயோ சொல்லாம கொள்ளாம போய்ட்டான் போல" எனக் கோபமாய்ப் பேசியிருந்தான் தூயவன்.
"டேய் அப்படிலாம் இல்லடா! பிடிக்காத பொண்ணுக்காகத் தான் அன்னிக்கு நடுக்கூடத்தில் நின்னு எல்லார்கிட்டயும் சண்டை போட்டானா! அவன் சம்மதத்தோட தான் இந்தக் கல்யாணம் நடந்துச்சு. அவன் சென்னைக்குப் போன பஸ் டிராவல்ஸ்ல கடைசியாக அவன் எங்கே இறங்கினான்னு விசாரிச்சா தெரியும்னு நினைக்கிறேன். எந்தப் பஸ்ல போனான்னு கூட எந்த விவரமும் என்கிட்ட இல்லையேடா! உனக்கு எதுவும் தெரியுமா?" தவிப்புடன் வந்தது தந்தையின் வார்த்தைகள்.
"அதுலாம் எனக்குத் தெரியாதுப்பா" என்ற தூயவனின் பதிலில் கடுப்பானவராய்,
"அவன் என்ன செய்றான் ஏது செய்றான்னு கூடத் தெரிஞ்சிக்காம எதுக்குடா நீ அண்ணன்னு இருக்க!" என்று கடிந்து கொண்டார்.
"அப்பா கல்யாணம் முடிஞ்சிடுச்சுனா அவனவன் குடும்பம் வேலைன்னு பார்க்கவே இங்கே நேரம் சரியா இருக்கு! இதுல தம்பி என்ன செய்றான்னு நினைவு வச்சி பார்த்துட்டு பேசிட்டு இருக்க முடியுமா? இல்ல அவன் தான் என்கிட்ட அண்ணானு பாசமா பேசிக்கிட்டு இருக்கானா? என்னை மட்டுமே குத்தம் சொல்றீங்க" என்ற தூயவனின் பேச்சில்,
"சரி எல்லா டிராவல்ஸ்லயும் விசாரிடா! இன்னும் உங்க அம்மா சிந்துக்குலாம் அவன் காணாம போனது தெரியாதுடா" என்றவர் கவலையுடன் கூறி முடிக்கும் முன்,
"அப்பா நான் ஆபிஸ்ல இருக்கேன். அவன் என்ன சின்னப் பிள்ளையா! எப்படியாவது வந்து சேருவான். என்னைய நை நைனு நச்சரிக்காம இருங்க. வீட்டுக்கு போனா அங்க ஒருத்தி என்னை வச்சி செய்றா! நீங்க போன் செஞ்சி வச்சி செய்றீங்க. மனுஷனைக் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுங்க" என்று விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டான்.
அந்த வீட்டின் பின்கட்டில் நின்று கைபேசியில் பேசியிருந்தவர் பெருமூச்செறிந்தவராய் இறைவனிடம் வேண்டுதல் வைக்கக் கோவிலை நோக்கிச் சென்றார்.
எப்போதும் தந்தையின் எண்ணிற்குத் தான் அழைத்துப் பேசுவான் இன்பா. சிந்துவிற்கெனக் கைபேசி வாங்கியிருக்கவில்லை இன்னும்.
சிந்துவிடம் அடுத்த மாதம் தனது சம்பளத்திலேயே கைபேசி வாங்கித் தருவதாக உரைத்து விட்டுத் தான் சென்றிருந்தான். அதனால் இன்பா அழைத்தானா பேசினானா என்று கந்தசாமியிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தாள் சிந்து.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அவனிடமிருந்து அழைப்பு வராமல் போகவும் தான் சற்றுப் பயம் வந்தது கந்தசாமிக்கு. அப்பொழுதும் அவன் வேலை என்று வந்து விட்டால் அனைத்தையும் மறந்து விடுவான் என்று தெரிந்தவராகையால் மேலும் இரு நாட்கள் காத்திருந்து விட்டு தான் மூத்த மகனிடம் இன்பா முன்பு தங்கியிருந்த அறைக்கு நேரில் சென்று பார்க்கக் கூறியிருந்தார்.
பூர்ணத்திடமும் சிந்துவிடமும் இன்பாவிடம் தான் பேசியதாகவும் ஓய்வின்றிப் பணியில் இருப்பதால் அந்த வாரயிறுதி நாளில் வர முடியாது என அவன் உரைத்ததாகவும் கூறிச் சமாளித்து விட்டார் கந்தசாமி.
*****
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தது போன்ற உணர்வில் விழித்தான் இன்பா.
கண்களைக் கடினப்பட்டுச் சிமிட்டிப் பார்த்தவனின் பார்வைக்குப் பளீரென்ற அறையின் வெளிச்சம் கண்களைக் கூசச்செய்தன.
மீண்டுமாய்க் கண்களை மூடித் திறந்தவனின் பார்வையில் செவிலியர் ஒருவர் அவனருகில் வந்து, "சார்! சார்! நான் பேசுறது கேட்குதா?" என்று கேட்பது மெல்லியதாய்க் கேட்க மீண்டும் மயக்கத்திற்குள் ஆழ்ந்திருந்தான் இன்பா.
****
அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே நின்றிருந்தனர் தூயவனும் கந்தசாமியும்.
தூயவன் விசாரித்த பல்வேறு பேருந்து நிறுவனங்களில் ஒன்றில் ஒரு பேருந்து வாரயிறுதி நாளில் விபத்துக்குள்ளாகியது தெரிய வர, அதன் மூலம் இந்த மருத்துவமனையின் முகவரிப்பெற்று வந்து பார்த்துத் தான் இன்பாவிற்கு விபத்தாகி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர் இருவரும்.
வீட்டினில் எவருக்கும் இந்த விஷயத்தைக் கூறவில்லை இருவரும்.
அன்றொரு நாள் கண் விழித்தவன் அடுத்துக் கண் விழிக்க மேலும் இரு நாட்கள் ஆகியிருந்தன.
அந்தப் பேருந்து ஓட்டுநர் மீது தான் தவறு என்பதால் அப்பேருந்து நிறுவனமே முழுச் செலவினையும் ஏற்று அந்த விபத்தில் அடிப்பட்டிருந்த பலருக்கும் அங்கே வைத்துச் சிகிச்சைக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதில் இன்பாவையும் தங்களது பொறுப்பினிலேயே எடுத்துக் கொண்டு கவனித்திருத்தனர்.
***
"என்னது? ஆக்சிடெண்ட் ஆகியிருந்துச்சா உங்களுக்கு" என்று நெஞ்சம் அதிரக் கேட்டிருந்தாள் சிந்து.
அவன் அறை வாங்கியதை கேட்டதற்கே கன்னத்தை வருடியவள் இப்போது அவனின் இந்தச் சொல்லில் நெஞ்சம் திடுக்கிட அவளது கைகள் அவனது இடையையும் கால்களையும் வருடி முகத்தை வருடியது. அவனது உடலில் ஆங்காங்கே அவள் கண்டிருந்த காயத்தழும்புகளை எல்லாம் வருடியிருந்தவள் தன் மார்போடு அவனை அணைத்துக் கொண்டாள்.
"ஏன்ப்பா? ஏன் என்கிட்ட சொல்லலை" ஆற்றாமையுடன் அவள் கேட்க, அவளின் அன்பான மொழியிலும் மென்மையான அணைப்பிலும் நெகிழ்ந்தவனாய் அவளின் மடியில் முகத்தைப் பதித்து மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.
***
மண்டையில் ஏற்பட்ட பலத்த அடியில் ஒரு வாரம் மயக்கத்தில் கண் விழிக்காது இருந்தவன், ஒரு வாரம் கழித்து முழித்ததில் தான் அவன் அபாயக் கட்டத்தைத் தாண்டியதாய் கூறினர் மருத்துவர்கள். அதன் பின்பான துரித சிகிச்சையில் இரண்டு நாட்களில் ஓரளவிற்கு விழித்துப் பேசும் நிலைக்கு வந்திருந்தப் பொழுது தான் அவனது அண்ணனும் தந்தையும் அங்கு வந்திருந்தனர்.
உடலில் ஆங்காங்கே எலும்பு முறிவும் காயங்களுமாக அசைய முடியாது வலியில் சுருங்கிய முகத்துடன் படுத்திருந்தவனின் அருகே கண்ணீர் கண்களுடன் நின்றிருந்தனர் இருவரும்.
"அப்பா! சிந்து!" என்றவனிடம்,
"சிந்துவை வரச் சொல்லவா இன்பா?" எனக் கேட்டார் கந்தசாமி.
"வேண்டாம். சிந்துகிட்ட இதைப் பத்தி சொல்லாதீங்க" என்றவனாய் மருந்தின் விளைவாய் மயக்கத்திற்குள் ஆழ்ந்திருந்தான் இன்பா.
அவன் மீண்டும் கண் விழித்தப் போது தனது மனத்தின் ஆதங்கத்தை எல்லாம் கொட்டியிருந்தார் கந்தசாமி.
"படவா! என்னடா இது! இப்படி வந்து அனாதையா கிடக்கனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?
எங்க போற வரனு சொல்லிட்டு செய்டானு எத்தனை தடவை சொல்லிருப்பேன். ஒரு வாரமாக உன்னைத் தேடி என்னாச்சோ ஏதாச்சோனு பயந்துட்டு இருந்தது எனக்குத் தான் தெரியும்" என்று திட்டித் தீர்த்திருந்தார் கந்தசாமி.
"உன் அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் நான் என்ன பதில் சொல்றது?" என்றவர் கேட்க,
"இப்போதைக்கு யார்கிட்டயும் எதையும் சொல்லாதீங்கப்பா" என்று விட்டான் இன்பா.
அடுத்த இரு நாட்களில் முட்டியில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தது.
"நான் வேணும்னா சிந்துவை வர சொல்லவா இன்பா! உன்னை அவ நல்லா கவனிச்சிப்பாடா" என்று கந்தசாமி கேட்க,
"அப்பா! நான் அவளை மகாராணியா வச்சி பார்த்துக்கனும்னு நினைக்கிறேன். நீங்க வேலைக்காரியா கூட்டிட்டு வரேன்னு சொல்றீங்க"
"டேய் ஓவரா பண்றடா நீ! உன் பொண்டாட்டிக்கு உன் கூட இருக்கிறது தான்டா சந்தோஷமா இருக்கும்"
"எது சந்தோஷம்? அவ அத்தைக்குச் செஞ்ச பணிவிடையை எனக்கு வந்து பார்க்கிறது சந்தோஷமா? அதுவும் என்னை இப்படிப் பார்த்துட்டு அவ எப்படி நிம்மதியா இருப்பா? என்னைக் கவனிச்சிக்கத் தான் இங்கே ஆள் இருக்காங்கலே! ஏன் நீங்க என்னைப் பார்த்துக்க மாட்டீங்களா?" சிடுசிடுவென மகன் பேசினாலும், அதில் இருந்த மனைவியின் மீதான அக்கறையில் மனத்தில் லேசாய் நிம்மதிப் படர்ந்தது அவருக்கு.
"உன் பொண்டாட்டி செய்யக் கூடாது ஆனா நான் உனக்குப் பணிவிடை செய்யலாம். ஹ்ம்ம் நல்லா இருக்குடா உன் நியாயம்" என்று அலுத்துக் கொண்டாலும் சிரித்தவாறே மகனுக்குத் தேவையானவற்றைச் செய்திருந்தார் கந்தசாமி.
சென்னையில் புது ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய இருப்பதாகவும் அதற்காக நண்பரையும் இடங்களையும் பார்க்கப் போவதாகக் கூறியே வாரத்திற்கு நான்கு நாட்கள் எப்படியேனும் இன்பாவைப் பார்த்து அவனுடன் தங்கியிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கந்தசாமி. இன்பாவைக் கவனிக்கவெனத் தனியாக ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார் கந்தசாமி.
அவர் இல்லாத நாட்களில் தூயவன் வந்து பார்த்து விட்டுச் செல்வான். திவ்யாவிடம் கூட அவன் தம்பியைப் பற்றி உரைக்கவில்லை.
இன்பாவை மருத்துவமனையில் அனுமதித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் முன்பு முப்பொழுதும் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருந்தவன் இப்பொழுது சற்றுத் சுயநினைவில் பல மணி நேரங்கள் இருக்க ஆரம்பித்தான்.
அலுவலக பணியில் விடுப்பிற்காக மேனேஜரிடம் பேசி விட்டு, தங்களுக்காக பார்த்திருந்த வீட்டை இப்பொழுதைக்கு வேண்டாம் எனக் கூறி தனது மருத்துவச் செலவிற்கான மெடிக்கல் இன்சூரன்ஸ்ஸிடம் பேசுவது என அடுத்த வந்த நாட்கள் இந்த வேலைகளில் சென்று விட, கொஞ்சம் ஓய்வுடன் அமர்ந்திருக்கும் நேரம் வந்த பொழுது சிந்துவின் இன்மையை மனது வெறுமையாய் உணரத் தொடங்கியிருந்தது.
அதிலும் இவனை பாரத்துக் கொள்ள ஆள் வைத்து விட்டு கந்தசாமி ஊருக்கு செல்லும் நாட்களில் எல்லாம் மனம் ஏனோ யாருமற்ற அனாதையாய் தான் இருப்பதை போன்ற உணர்வை அளித்து கழிவிறக்கத்தில் அவனைத் தள்ளியது.
சிந்துவும் தாயை தந்தையை இழந்து இவ்வாறான மனநிலையில் தானே இருந்திருப்பாள் என்ற எண்ணமும் அவளை சுற்றிய நினைவுகளும் அவனை வதைத்தன. இப்பொழுது தன் நிலையைப் பற்றி கூறினாலும் உடனே உடனிருந்து சேவை செய்ய வந்திடுவாள் என சர்வ நிச்சயமாக தெரியும் அவனுக்கு. அவளுக்கு அவ்வாறான துன்பத்தை அளிக்க வேண்டாமெனத் தான் இவ்வாறு தனிமையில் வாடி நிற்கிறான் இவன்.
அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் சக்கர நாற்காலியில் மகனை மருத்துவமனையைச் சுற்றி காற்று வாங்க அழைத்துச் சென்றார் கந்தசாமி.
"அப்பா சிந்துகிட்ட என்னனு சொல்லி வச்சிருக்கீங்க? நான் வேற அவளுக்குப் போன்ல கூடப் பேசலையே! அம்மாவையும் அவளையும் எப்படிச் சமாளிக்கிறீங்கப்பா?" எனக் கேட்டான் இன்பா.
"ரொம்பச் சீக்கிரம் கேட்டுட்டடா!" என நொடித்துக் கொண்டவராய், "நீ பாட்டுக்கு யார்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்கனு சொல்லிட்ட! நான் என்னனு சொல்றது! நீ வேலை விஷயமா திரும்பவும் சிங்கப்பூருக்கு போய்ட்டனு சொல்லிட்டேன்" என்றார்.
"ஏன்ப்பா அப்படிச் சொன்னீங்க?" அதிர்வுடன் அவன் கேட்க,
"வேறென்ன சொல்ல சொல்ற என்னை! உனக்கு அடிப்பட்டதையும் சொல்ல கூடாது! புதுசா கல்யாணமாகி போனவன் வரவும் இல்லை போனும் செய்யலைனா என்னனு நினைப்பாங்க. அதான் அப்படிச் சொன்னேன்" என்றார் கந்தசாமி.
"சரி தான்! ஆனா என்னை நினைச்சு கவலைப்பட்டிருப்பால! எல்லாம் அவ சந்தோஷத்துக்காகத் தானே! அவ புரிஞ்சிக்குவா" என்றவன் கூறவும் பொங்கி விட்டார் கந்தசாமி.
"ஆமா நீ எதுவும் சொல்லாம அவளா புரிஞ்சிக்குவா! நீ உன் வாழ்க்கைல செய்ற தப்பே எதையும் வாயைத் திறந்து முழுசா சொல்லாம, எடுத்தோம் கவிழ்தோம்னு முடிவு செய்றது தான் தெரியுமா இன்பா" என்றார்.
"நானா போய் எப்படிப்பா விளக்கம் கொடுக்க முடியும். அவங்களா ஏதாவது கேட்டா தானே பதில் சொல்ல முடியும்" என்று இன்பா கேட்க,
"ஆமா கேட்டா மட்டும் அப்படியே விலாவாரியாக விளக்கம் சொல்லிடுவ பாரு! அட போடா! கோபப்பட்டுக் கத்த மட்டும் தான் தெரியும் உனக்கு" என்ற கந்தசாமியின் பேச்சில் அமைதியானவனாய்,
"சிந்துகிட்ட பேசனும் போல இருக்குப்பா! அவளுக்கும் அப்படி தானே இருக்கும். ஆமா நீங்க சிந்துக்கு போன் வாங்கி கொடுத்தீங்களா? லாப்டாப்லாம் வாங்கி கொடுக்க சொன்னேன் ஆனா அப்ப போன் அவளுக்கு தேவைப்படாதுனு வேண்டாம்னு விட்டுட்டேன். இப்ப வாங்கி கொடுக்குறனு சொல்லிருந்தேன். அதுக்குள்ள இப்படி வந்து படித்தாச்சு! என் ஃபோன் ஆக்சிடெண்ட்ல எங்க போச்சுனு தெரியலைனு தானே இந்த புது போன் வாங்கி கொடுத்தீங்க. அதே மாதிரி அவளுக்கும் வாங்கி கொடுத்திருக்கலாம்லப்பா! அவ என்கிட்ட பேசனும்னு நினைக்கிற நேரமெல்லாம் பேசியிருப்பால! கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆகிடுச்சு அவக்கிட்ட பேசி! கல்யாணம் முடிஞ்ச ஈரத்தாலியோட அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்ல" ஏக்கமான பெருமூச்சுடன் உரைத்தான் அவன்.
"அவ உன்கிட்ட பேசக் கூடாதுனு தான் வாங்கி தரலைடா" என்றவர் சொன்னதும் அதிர்ச்சியானவனாய்,
"என்னப்பா சொல்றீங்க?" எனக் கேட்டான்.
"ஆமாடா! ஒன்றரை மாசம் கிட்ட நீ தூக்கத்துலயும் மயக்கத்துலயும் தான் இருந்திருக்க! நீ பேசினாலே கண்டிப்பா உனக்கு என்னமோ ஆகிருக்குனு கண்டுபிடிச்சிருப்பா. அப்படியும் போன தடவை வீட்டுக்கு போனப்ப மனசு கேட்காம, நான் போன் வாங்கி தரேன். உன் புருஷன்கிட்ட பேசவாவது தேவை தானேனு சொன்னேன். இல்ல மாமா! அவர் சம்பளத்துல அவரே வாங்கி தரேன்னு சொல்லிருக்காரு! எனக்கு அவர் வாங்கி தந்தா போதும் மாமானு சொல்லிட்டாடா" என்றார் கந்தசாமி.
மனம் சிந்துவை எண்ணி உருகிப்போனது அவனுக்கு.
"நீங்க போன் வாங்கி கொடுங்கப்பா! நான் சிங்கப்பூர்லருந்து வாங்கி கொடுக்க சொன்னதா சொல்லுங்க!" என்றான்.
"சரி அவ வீடியோ கால் வரச் சொன்னா என்ன செய்வ? நீ இருக்கிறது ஹாஸ்பிட்டல் இடம். சுத்தி கேட்குற பேச்சு சத்தம்லாம் வச்சி கண்டுபிடிக்க மாட்டாளா!" எனக் கேட்டார்.
"சரி என்ன செய்யலாம் சொல்லுங்க. என் உடம்பு முழுசா சரியாக இன்னும் நாலு மாசம் ஆகும்னு டாக்டர் சொல்லிருக்காரே! அது வரைக்கும் எப்படிப்பா பேசாம இருக்க முடியும்? அவ ஏங்கிப் போய்ட மாட்டாளா?" என்றவன் கேட்க,
"என் மருமக ஏங்குறாளோ இல்லையோ நீ என் ஏங்கிப் போய்டவனு நல்லா தெரியுதுடா" என்று கூறி சிரித்தாரவர்.
"நான் நம்ம வீட்டுல இருக்க நேரம் உனக்கு போன் செய்றேன். நீ உன் பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாம பார்த்து பேசிக்கோ! நான் சிந்துக்கு போன் வாங்கி கொடுக்கிறேன் ஆனா அவ வாங்கிக்கலைனா என்னை கேட்க கூடாது" என்றவர் அடுத்த முறை வீட்டிற்கு சென்ற போது தனது கைபேசியில் அழைப்பு விடுத்து பேசி விட்டு தாயிடமும் அவனை பேச வைத்தவர் சிந்துவை பேச வைத்தார்.
கந்தசாமி முன் பெரியதாக பேச முடியாவிட்டாலும் அவனது நலனைப் பற்றி பேசி தெரிந்து கொண்டாள். இருவருக்குமே அந்த அலைபேசி பேச்சு பெருத்த ஆசுவாசத்தை அளித்திருந்தது.
அவசர சூழ்நிலையில் சொல்லாமல் சிங்கப்பூர் செல்ல வேண்டியதாகி விட்டதாக அவளிடம் கூறியவன், தந்தை அளிக்கும் கைபேசியை வாங்கி கொள்ளுமாறும் உரைத்தான். ஆனால் அவள் தனது வாழ்நாளில் உபயோகிக்கப் போகும் முதல் கைபேசி அவனது கையாலேயே வாங்கிக் கொடுத்ததாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவதாய் உரைத்தவள் காத்திருப்பதாகவும் உரைத்தாள். தேவை என்றால் மாமாவின் அலைபேசியில் அவனிடம் பேசிக் கொள்வதாய் உரைத்து விட்டாள்.
இன்பா முழுவதுமாகக் குணமாகி, அவனது வேலையை அவனே இயல்பாகச் செய்வதற்குத் தயாராக ஆறு மாதங்கள் ஆனது.
இந்த ஆறு மாதங்களில் மொத்தமாக சிந்துவிடம் பத்து தடவை தான் பேசியிருப்பான் இன்பா. அதிலும் பரஸ்பர நலனைப் பற்றி விசாரிப்பதாகத் தான் அந்த பேச்சு வார்த்தை இருந்தது. பெரியதாக எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை இருவரும்.
இன்பாவின் உடல்நிலை பரிபூரணமாக நலமடைந்ததும் அலுவல் வேலைகளைச் சரி செய்து, வீடு பார்த்துத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்து என அனைத்தையும் மகனுடன் இணைந்து ஏற்பாடுச் செய்து விட்டு சிந்துவை சென்னைக்கு அழைத்து வருவதற்காக மகிழ்வுடன் காஞ்சிபுரம் நோக்கிப் பயணப்பட்டிருந்தனர் இன்பாவும் கந்தசாமியும்.
Comments