top of page

என் இனிய இன்பனே 16

என் இனிய இன்பனே 16


சிந்துவைத் தேடி வீடு முழுவதும் அலசியவனின் இதயம் தடதடவென வேகமாய்த் துடித்துக் கொண்டிருந்தது.


'இல்ல என் சிந்து என்னை விட்டு எங்கேயும் போக மாட்டா!' தனக்குத் தானே கூறிக் கொண்டவனாய் படுக்கையறையை எட்டிப் பார்த்தான்.


நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மகனின் இருபுறமும் அவன் உருண்டு கீழே விழுந்திடாதவாறு தலையணைகளை அடுக்கி வைத்துப் பாதுகாத்து விட்டு, சட்டையை எடுத்து அணிந்தவனாய் கதவைப் பூட்டி விட்டு வெளியே வந்தவன் நேரே மாடிப்படி நோக்கிச் சென்றான்.


மொட்டை மாடிக்கு வேகமாகச் சென்றவன் கண்டது கீதாக்காவின் மடியின் மீது மயங்கி கிடந்த சிந்துவை தான்.


"சிந்து! சிந்து" என்று பதட்டமாக அழைத்தவாறு அவர்களின் அருகில் சென்றவன், "என்னக்கா! என்னாச்சு?" எனக் கேட்டான்.


"இரண்டு பேரும் பேசிட்டே வடகத்தை எடுத்துட்டு இருந்தோம். அப்படியே மயங்கிட்டா! இங்கே அந்த பைப்ல தண்ணீர் எடுத்து வர்றீங்களா?" அவரும் பதட்டமாக உரைக்க, வேக வேகமாக கைகளில் தண்ணீரை பிடித்துக்கொண்டு வந்தவன் அவளின் முகத்தினில் தெளித்தான்.


கண்களைச் சிமிட்டியவாறு முழித்தவள் தடுமாறி எழுந்து அமர, "கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்ட சிந்துமா" அவளின் கைப்பற்றி உரைத்தவன், அவள் எழுவதற்கு உதவினான்.


"ஒழுங்கா திங்கிறாளா இல்லையா தம்பி இவ! இப்படியா உடம்பை கெடுத்து வச்சிருப்பாங்க. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காண்பிங்க தம்பி" என்றவராய் கீதாக்கா கீழே செல்ல,


"தேங்க்யூ அக்கா" என்று நன்றியுரைத்தவன், சிந்துவின் கைப்பற்றி பொறுமையாக கீழே அழைத்து வந்தான்.


ஒருவிதமான மயக்கத்திலேயே அவனைப் பற்றிக் கொண்டு நடந்து வந்தாள் சிந்து.


வீட்டினுள் அவளை மெத்தையில் அமர வைத்து குடிக்க நீர் அளித்தவன், படுக்கையறையை எட்டிப் பார்த்தான். மகன் விழித்துக் கொண்டு படுக்கையிலிருந்து கீழிறங்க முயன்றுக் கொண்டிருப்பதை பார்த்தவன், அவனை தூக்கப் போக, முகப்பறையில் இருந்து இதை பார்த்தவள், "என்னங்க" என்று அழைத்து, "எப்பவும் இதே வேலையா போச்சு உங்களுக்கு. அவனே இறங்கட்டும். பிள்ளை பழக வேண்டாமா?" சோர்வான குரலிலும் தன்னை ஏசியவளை பார்த்தவனின் இதழில் குறுஞ்சிரிப்பு அரும்பியது.


அவளிடம் வந்தவன், "கிளம்புடா சிந்து! ஹாஸ்பிட்டல் போவோம்" என்றவனாய் அவனும் கிளம்பி பிள்ளையையும் கிளப்பி விட்டு அவளும் கிளம்ப உதவி புரிந்தான்.


போகும் வழியில் அவளுக்கும் மகனுக்கும் பழச்சாறு வாங்கி கையில் கொடுத்து விட்டு மகிழுந்தை இயக்கி கொண்டிருக்க, பழச்சாறை குடித்தவாறே பின் இருக்கையில் இருந்து முன் கண்ணாடி வழியாக ஓட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.


இப்பொழுது உடலில் சற்று தெம்பு வர, முன்பொரு முறை இவ்வாறு அவனின் முன்பு மயங்கி விழுந்த நினைவு வந்து போனது அவளுக்கு.


அன்று அவர்களுக்கு முதலிரவு.


அவனது அறையில் தான் முதலிரவிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.


ஏற்கனவே பல முறை வந்திருந்த அறையாயினும், இன்று பலவிதமான உணர்வுகளுடன் பதட்டத்துடன் அறைக்குள் நுழைந்திருந்தாள் சிந்து.


பெரிய அலங்காரம் இல்லாமல் சாதாரண பருத்தி சேலையில் மிதமான ஒப்பனையில் வந்திருந்தவளை கண் கொட்டாது பார்த்தவனைக் கண்டு கொள்ளாது குனிந்த தலை நிமிராது உள்ளே வந்தவள், அவனிடம் பால் சொம்பை அளித்தாள்.


அதை வாங்கி அருகில் வைத்தவன் அவளின் கையைப் பற்ற, அதீத பதட்டத்தின் காரணமாக உடல் நடுங்க அவன் கையிலேயே மயங்கி சரிந்திருந்தாள் அவள்.


அவளைப் படுக்கையில் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளித்து பதட்டத்துடன் பார்த்திருந்தவன் அவள் கண் விழித்ததும் உக்கிரமாய் முறைத்திருந்தான். அவனது முறைப்பில் கண்கள் கலங்கியது அவளுக்கு.


"சாரி! அது வந்து" என்று திக்கித் திணறியவாறு அவள் பேச வர,


"எதுக்கு இந்த பயம்? எதுக்கு இவ்ளோ பதட்டம்? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? அப்படியே மேல பாஞ்சிடுவேன்னு நினைச்சிட்டியோ! என்னைப் பத்தி ரொம்ப நல்ல அபிப்ராயம் வச்சிருக்க போல மனசுல!" பற்களைக் கடித்தவாறு தாடை இறுக கோபத்துடன் பேசியவன், முகத்தை திருப்பிக் கொண்டு படுக்கையில் அவளுக்கு முதுகு காட்டியவாறு படுத்துக் கொண்டான்.


இப்பொழுது நினைக்கும் போது சிரிப்பாக வந்தது சிந்துவிற்கு. 'என்னிக்குமே அவர் என்னை கட்டாயப்படுத்தினது இல்லையே! முரட்டுத்தனமாவும் நடந்துக்கிட்டது இல்லையே! இதுல நான் வேற முதல் நாளே பயந்து வச்சி மயக்கம் போட்டு' இப்பொழுது நினைக்க நினைக்க சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. கண்ணாடி வழியாக அவனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தவளாய் அந்நாளின் நிகழ்வை அசைப்போட்டாள்.


அன்றிரவு அவனின் முறைப்பிலும், கோபமான பேச்சிலும், முகத்திருப்பலிலும் கலங்கியவளாய்,


'ஹய்யோ கோவிச்சிக்கிட்டாரு போலயே' என மனதோடு புலம்பியவாறு, "ஏங்க" என்று அழைத்தாள்.


அவன் வேண்டுமென்றே திரும்பாது படுத்திருக்க, மீண்டுமாக, "ஏங்க" சற்றுச் சத்தமாக அழைத்தாள்.


அவளை நோக்கி திரும்பி படுத்தவாறு, "என்ன?" என்று கேட்டான்.


"அது வந்து! நான்.. நான் அப்படிலாம் உங்களை.. உங்களை நினைக்கலைங்க! என்னமோ ஒரு பதட்டம்!" அச்சமும் நாணமும் முகத்தினில் போட்டிப்போட அவள் கூற,


ரசனையாய் அவள் முகத்தை ரசித்துப் பார்த்திருந்தவன் அவளை நோக்கிச் சென்றான். தன்னருகில் வரும் அவன் முகத்தையே பார்த்திருந்தவளின் முகத்தை உற்று நோக்கியவன், தனது உதட்டின் மீது நிலைத்திருக்கும் அவளின் விழிகளை கண்டு இதழ் விரியாது சிரித்தவனாய் புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினான்.


ஏதோ ஓர் உந்துதலில், "இல்ல பொதுவா பசங்களுக்குலாம் உதடு கருப்பா தானே இருக்கும். உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி பிங்க் கலரா இருக்கு" என்றவளின் பார்வையிலும் பேச்சிலும் உணர்வுவயப்பட்டு தன்னை இழந்தவனாய் அவளின் இதழோடு தனது இதழை பொருத்தியிருந்தான். இருவருமே தன்னிலை மறந்து ஆழ்ந்த முத்தத்தில் திளைத்திருந்த நேரம், அவளின் மேனி நடுங்குவதை அவளை அணைத்திருந்த அவனின் கரங்கள் உணர்ந்த நொடி சட்டென அவளை விட்டு பிரிந்திருந்தான் இன்பா.


தனது தலையில் அடித்துக் கொண்டவனாய், "சாரி! நீ படுத்துக்கோ சிந்து" என்றவாறு பால்கனிக்குச் சென்று விட்டான்.


அன்று ஏனெனப் புரியாது அவனது விலகலையும் ஏற்றுக் கொள்ள முடியாது உடலாலும் மனதாலும் பரிதவித்திருந்தவளுக்கு இன்று யோசிக்கும் போது அதற்கான காரணம் முன்னால் காதலின் நினைவோ என்று தோன்றிய நொடி சிரிப்பு மறைந்து நெஞ்சம் கனக்க கண்ணாடியின் வழியாக அவனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்திருந்தாள் சிந்து‌.


அமைதியாக மகிழுந்தில் இருந்து இறங்கி அவனுடன் நடந்து வந்தவளின் கைகளைப் பற்றிக் கொண்டான் இன்பா.


"இல்ல நான் நடந்துப்பேன்" என்றவளாய் கைகளை உருவிக் கொண்டாள் அவள்.


அவளின் முகத்தை பார்த்து உள்ளத்தை அறிய முற்பட்டவனாய் அவளைப் பார்த்தவாறே நடந்தான் இன்பா. அவளின் வேதனை சுமந்த முகத்தைக் கண்டு ஆறுதலாய் பேச துடித்த நாவை அடிக்கியவாறு நடந்தான் இன்பா.


மருத்துவமனையில் அவளையும் மகனையும் காத்திருப்பு இருக்கையில் அமர வைத்து விட்டு, வரவேற்பாளரிடம் மனைவியின் பெயரை பதிவு செய்ய பேசிக் கொண்டிருந்தவனிடம் நிலைத்திருந்தது சிந்துவின் பார்வை.


திருமணத்திற்குப் பிறகு பல முறை மருத்துவமனை வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளை அமர வைத்து விட்டு அவனே இங்கேயும் அங்கேயுமாய் விசாரித்து அலைந்து கொண்டிருப்பான். நான்கு வருடங்கள் தாமதமான பிள்ளைப்பேறு. சின்னதாய்க் கூட இதைப் பற்றி அவன் வருந்தி பேசியதில்லை. முகம் சுணங்கியதில்லை. அவளைக் குறை கூறியதில்லை. அவனின் அன்னை குறையாய்ப் பேசியபோதும் அவளுக்காக அவரிடம் சண்டையிட்டிருக்கிறான். இவள் பிள்ளை பேற்றுக்காக வருந்தி வேண்டி கோவில் பரிகாரமென அவனுக்குப் பிடிக்காதவற்றைக்கு எல்லாம் அவனை இழுத்து சென்றிருக்கிறாள்‌. உனக்கு இது தான் நிம்மதி தரும் என்றால் அதற்கும் நான் ஒத்துழைக்கிறேன் என அவளின் போக்கில் அனைத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்து ஆதரவாய் ஆறுதலாய் நின்றிருக்கிறான்.


இவை அனைத்தையும் யோசித்தவாறு அவனைப் பார்த்திருந்தவளின் பார்வையில் கோபம் குறைந்து கனிவு குடிக்கொண்டது.


கருவுற்றப்போது அவனின் மகிழ்வும் அதன் பின்பான மாதங்களில் கருவுடன் அவளையும் குழந்தையாய் பாவித்து அவன் கவனித்துக் கொண்ட பாங்குமென அவளின் சிந்தனை முழுவதும் இன்பா அவளிற்கு செய்த நற்காரியங்களில் சுழன்றிருந்த பொழுது வயிற்றை பிரட்டுவது போல் தோன்ற, சட்டென இருக்கையில் இருந்து எழுந்தாள்.


அப்போது தான் அவளருகில் அமர்வதற்காக வந்தவன் அவள் எழுந்து நிற்பதை கண்டதும், "என்னாச்சு சிந்துமா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? திரும்பவும் மயக்கம் எதுவும் வருதா?" எனக் கேட்டான்.


"ரெஸ்ட் ரூம் போகனும்" என்றதும்,


"யுகி இங்கேயே சமத்தா உட்கார்ந்திருக்கனும் சரியா. நாங்க இப்ப வந்துடுறோம்" என்றவனாய், அவளை ஓய்வறை நோக்கி அழைத்துச் சென்றான்.


பெண்களின் ஓய்வறைக்குள் நுழைந்தவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்க, 'என்னாச்சு இவளுக்கு திடீர்னு! சாப்பிட்டது எதுவும் சேரலையோ?' என்று ஓய்வறைக்கு வெளியே நின்று புலம்பி கொண்டிருந்தான் அவன்.


வாந்தி எடுத்து விட்டு முகத்தை கழுவியவளின் மனக்கண் முன் விடாது ஊர்வலம் போயின பிள்ளைபேற்றின் நினைவுகள். முன்பு பிள்ளை பேற்றின் பொருட்டு வாந்தி எடுத்தப் போது கனிவுடன் தலையைத் தாங்கி அரவணைத்து சுத்தம் செய்து, உணவு உண்ண வைத்த நினைவுகள் வந்து போயின. இவளுக்கென்று தாய் வீடு இல்லாமல் இருப்பதையும் கூட அவளை உணர விடாது தன்னோடு வைத்து பார்த்துக் கொண்டவன், சிசேரியன் செய்து துவண்ட கொடியாய் படுத்திருந்தவளுக்கு அன்னையாய் அனைத்து பணிவிடைகளும் பார்த்திருந்தான்.


அவனது தாய், குழந்தையை மட்டுமே கவனித்துக் கொள்ள, அறுவை சிகிச்சை செய்த பிறகு வந்த நாட்களில் அவளை அமரச் செய்து, குளிக்க வைத்து, குழந்தைக்கு பால் கொடுக்க வைத்து என உறக்கம் துறந்து அவளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு கவனித்திருத்தவன் செயலில் பன்மடங்கு காதலை உணர்ந்திருக்கிறாளே!


தன் மீது அவனுக்கு காதல் இல்லை என்று தான் கூறியதே அபத்தமென்று தோன்றியது இப்பொழுது அவளுக்கு.


என் மனைவியும் பிள்ளையும் என் பொறுப்பு என்று அன்பான கணவனாய் கடமை தவறாத குடும்ப தலைவனாய் வாழ்ந்திருப்பவனை எப்படி நான் ஏமாற்றியவன் என்று கூறினேன். கண்டிப்பாக அவனிடத்தில் ஏதேனும் காரணம் இருக்கும். அவனைப் பேச விடாது தான் பேசிய சொற்கள் யாவும் இப்பொழுது இவளைக் கொல்ல, ஓய்வறைக்கு வெளியே காத்திருந்த கணவனிடத்தில் வந்தவள், "முடியலைப்பா" என்றாள்.


"என்னடா சிந்துமா? என்னாச்சு திடீர்னு" கைத்தாங்கலாய் அவளை அமர வைத்தவன், "குடிச்ச ஜுஸ் எல்லாம் வாந்தி எடுத்துட்டியா?" எனக் கேட்டான்.


ஆமென தலையசைத்தவள், "என்னனு தெரியலை! ரொம்ப டயர்டா இருக்கு" என்று அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள். அவளை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்தவன் அவர்களுக்கான டோக்கன் எண் வந்ததும் உள்ளே அழைத்துச் சென்றான்.


மகனை தன்னுடன் வைத்துக் கொண்டு அவன் உள்ளே செல்ல, வாந்தி மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர் ஒவ்வொரு கேள்வியாய் கேட்கும் போது தான் கணவன் மனைவி இருவருக்குமே மண்டையில் மணி அடித்தது.


கண்கள் மின்ன சட்டென மனைவியை நோக்கி திரும்பியவன், "ஒரு வேளை அப்படி இருக்குமோ சிந்து மா" பூரிப்பான மகிழ்வுடன் கேட்டிருந்தான் இன்பா.


மருத்துவர் முன்பே இவன் இவ்வாறு கேட்டதில் இவளுக்கு சட்டென முகம் சிவந்து போனது. நாணத்தோடு குனிந்து கொண்டாள்.


அவனின் கேள்வியில் சிரித்த மருத்துவர், "நீங்க வெளில இருங்க" என்று அனுப்பி வைத்தவராய் சிந்துவைச் சோதனைச் செய்ய தொடங்கினார்.


மருத்துவர் இன்பாவை அழைத்து வாழ்த்து கூற, மகிழ்ச்சியில் நிரம்பி இருந்த மனைவியின் முகத்தை பார்த்தவாறு நன்றி உரைத்தான் மருத்துவருக்கு.


"பிபி கொஞ்சம் ஹையா இருக்கு! அது மட்டும் பார்த்துக்கோங்க" என்றவராய் மருந்து எழுதி கொடுக்க, வெளியே அவளை அமர வைத்து விட்டு, அனைத்தையும் வாங்கி வந்து அவளை அழைத்து சென்றவன், வெளியேவே உண்ணலாம் எனக் கூறி இரவுணவையும் வாங்கி கொடுத்து மாத்திரையும் போட வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.


இரவு எட்டு மணியளவில் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளை இறுக அணைத்திருந்தான் இன்பா. அவளின் கன்னம் பற்றி முத்த மழை பொழிந்தவன், "ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சிந்துமா" என்றான்.


அமைதியாக அவன் மார்போடு சாய்ந்து கொண்டவளிடம் அசாத்திய அமைதி நிலவ, "இன்னும் என் மேல கோபமா இருக்கியாடா சிந்து?" கவலையுடன் கேட்டான்.


இல்லையென தலையசைத்தவள், "உங்ககிட்ட நிறைய பேசனும்" என்றாள்.


"கண்டிப்பாக! நானும் நிறைய பேசனும்! நீ போய் துணி மாத்திட்டு வா! நான் பால் காய்ச்சி வைக்கிறேன். குடிச்சிட்டே பேசுவோம்" என்றவன் மகனை குளிக்க வைத்து விட்டு தானும் குளித்தவனாய் உடை மாற்றிவிட்டு வந்து அவளுக்கு பாலினை கொடுத்து விட்டு மகனுக்கும் கொடுத்தான்.


படுக்கையில் பொம்மைகளை வைத்து மகன் விளையாடிக் கொண்டிருக்க, முகப்பறையில் கணவனின் மடியில் படுத்திருந்தாள் சிந்துஜா.


அவளின் தலையை வருடியவனாய் அமர்ந்திருந்தான் இன்பா.


"எப்படி யோசிச்சாலும் நீங்க என்னை விரும்பி தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்கனு தான் மனசு சொல்லுதுப்பா. ஆனா ஏன் என்னை ஆறு மாசம் பிரிஞ்சி இருந்தீங்க. ஏன் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு அப்படி விட்டுட்டு பால்கனில போய் நின்னீங்க? அப்ப உங்க முதல் காதலை மறக்க முடியாம தவிச்சிட்டு இருந்தீங்களா?" எனக் கேட்டாள்.


இல்லையென தலையசைத்தவன், "எப்படி இரண்டாவதா ஒரு காதல் உன் மேல எனக்கு வந்துச்சுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன், உன்கிட்ட உண்மை சொல்லாம உன்னை நெருங்கவும் முடியாம நெருங்கினதை ஏத்துக்கவும் முடியாம மனதோடும் உடலோடும் போராடிட்டு இருந்தேன்!" எனக் கூறி சிரித்தான்.


-- தொடரும்

© KPN NOVELS COPY PROTECT
bottom of page