top of page

என் இனிய இன்பனே 15

என் இனிய இன்பனே 15

இரு வாரங்கள் விடுப்புக்கு பிறகு சென்னையிலே தனக்குக் கிடைத்த வேலைக்குச் செல்ல தொடங்கினான் இன்பா. இம்முறை சிந்துவின் இன்மையை இன்பா அதிகமாக உணர்ந்தான். அவளின் உணவின் ருசியும், ஏதேனும் அவனிடம் பேசியவாறே பாசமாய் அவள் பரிமாறும் பாங்கும், அவன் உடல் நலன் மீது அக்கறை கொண்டு கடிந்து கொள்ளும் அன்பான முறைப்புமென இந்த இரு வாரங்களும் தன்னிடம் முழுமையாக உரிமை எடுத்து பேசிய சிந்துவை கூடவே வைத்துக்கொண்டு அவளின் அன்பில் நனைய ஏங்கியது அவனின் மனது.


பல மாதங்கள் இந்தப் பக்கமே வர மாட்டானெனப் பெற்றோர்கள் இருவருமே எண்ணியிருக்க அந்த வாரயிறுதி நாளிலேயே வீட்டிற்கு வந்திருந்த இன்பாவை இன்ப அதிர்ச்சியுடன் தான் வரவேற்றார் பூர்ணம்.


திவ்யாவும் தூயவனும் சோலிங்கநல்லூரில் அவர்களுடைய சொந்த வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்துக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருக்க, போரூரில் இவனுக்கென ஒரு விடுதியில் அறையை எடுத்துக் கொண்டு தங்கியிருந்தான் இன்பா.


ஒவ்வொரு வாரயிறுதி நாளும் வீட்டிற்கு வரத் தொடங்கியிருந்தான் இன்பா. அவ்வாறு சில வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் வாரயிறுதி நாளில் அவனது வீட்டிற்கு வந்திருந்தார் பார்த்தசாரதி.


"வாங்க மாமா! உட்காருங்க" என்ற சிந்துவின் குரலில் மேலறையில் இருந்து வெளியே வந்து கீழே பார்த்த இன்பா, "யார் இவரு?" என்றெண்ணியவாறு கீழே வந்தான்.


கந்தசாமி பார்த்தசாரதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவர்களுக்குக் காபி எடுத்து வரச் சென்றாள் சிந்து‌. பூர்ணமும் இன்பாவும் இவர்கள் முன் வந்து அமர்ந்தனர்.


இயல்பான பொது விசாரிப்புகளுக்குப் பிறகு, தான் வந்ததற்கான காரணத்தைக் கூற விழைந்தார் பார்த்தசாரதி.


"கந்தா! உனக்குத் தான் தெரியும்ல, சிந்துக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கிறது. இப்ப ஒரு வரன் வந்திருக்கு! அதான் சிந்துவை கூட்டிட்டு போலாம்னு வந்தேன்" என்றார் பார்த்தசாரதி


"அய்யோ அவ போய்ட்டா இங்கே வேலைலாம் யாரு பார்க்கிறது?" என்று பூர்ணம் கேட்க,


இன்பா தாயையும் அந்தப் பார்த்தசாரதி மாமாவையும் முறைத்தவாறு அமர்ந்திருந்தான்.


"என்ன பார்த்தா! திடீர்னு வந்து சொல்ற! நாங்க எங்க வீட்டு வேலைக்கு ஆள் பார்த்துச் செட் பண்ண பிறகு தான் அனுப்ப முடியும். அதுவும் இல்லாம நீ பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு என்ன? ஆள் எப்படினு சொல்லு! நாங்க விசாரிக்கிறாம். எங்களுக்கும் சிந்து மேல அக்கறை உண்டு‌" என்றார்.


"இல்ல கந்தா! இந்த வரன் என் பொண்டாட்டியோட நெருங்கின சொந்தம்! அவளை மீறி நான் ஒன்னும் முடிவெடுக்க முடியாது. அந்தப் பையனுக்கு விவாகரத்து ஆகிட்டு. இரண்டாம் திருமணத்துக்குப் பார்த்துட்டு இருக்காங்க. எங்கேயும் செட் ஆகலைனு சொல்லி என் பொண்டாட்டிக்கிட்ட புலம்பிருக்காங்க. அவ தான் இந்த ஐடியா கொடுத்திருக்கா" என்றார்.


"என்னப்பா அநியாயம் இது! இந்தப் பொண்ணுக்கு முதல் கல்யாணம் இது! அவளைக் கேட்காம நீங்க பாட்டுக்கு ஒரு முடிவு பண்ணிட்டு சொல்லிட்டு இருக்கீங்க. இரண்டாம் தாரமா அவ ஏன் போகனும்" என்று சற்று கோபமாகவே கேட்டார் கந்தசாமி.


"இந்தப் பொண்ணை வரதட்சணை இல்லாமல் கட்டிக்க வரவனுக்குக் கட்டிக்கொடுத்துட்டுக் கை கழுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போகனும் கந்தா. எங்க பசங்க கல்யாணம்லாம் நாங்க பார்க்க வேண்டாமா! நாளைக்கு ஊர் உலகம் இவளை நாங்க ஒத்தையா நிக்க வச்சிட்டோம் சொல்லிட கூடாதேனு தான் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்துறோம். இல்லனா இவ எங்க வீட்டுல பார்த்த வேலைக்கு எப்படியோ போகட்டும்னு விட்டிருப்போம்" அலட்சியமாக சிந்துவை ஏறிட்டவராய் உரைத்தார் பார்த்தசாரதி.


தான் பேசுவது எத்தனை அபத்தமானது என்ற எண்ணமே இல்லாமல் இயல்பாகப் பேசியவரை அருவருப்புடன் பார்த்தான் இன்பா.


கண்களில் நீரை உள்ளிழுத்தவாறு அமைதியாக அவர்களுக்குக் காபியை வழங்கினாள் சிந்துஜா.


சிந்துவின் முகத்தை அமைதியாகப் பார்த்திருந்த இன்பா, "அப்பா!" என்று சற்றுச் சத்தமாக அழைத்தவாறு நிமிர்ந்து அமர்ந்தான்.


அனைவரின் பார்வையும் அவன் மீதிருக்க, "அன்னிக்கு நீங்க கேட்டதுக்கு இன்னிக்குப் பதில் சொல்றேன். எனக்குச் சிந்துவை கல்யாணம் கட்டிக்கச் சம்மதம். யாருக்கும் நான் சிந்துவை விட்டுக் கொடுக்கிறதா இல்லை" என்றவாறு அவளை அழுத்தமாய்ப் பார்த்தவனின் பார்வை பார்த்தசாரதியின் மீது கோபமாய் விழுந்தது.


அனைவரின் பார்வையும் அவன் மீது அதிர்ச்சியாய் விழ, சிந்துவின் கண்கள் அகல விரிந்திருக்க, கண்ணீர் வெளியானது.


"டேய் என்னடா! என்னென்னவோ சொல்ற! நமக்கு எதுக்கு இந்த மாதிரி பொண்ணு? ஏங்க என்னனு கேளுங்க அவனை" என்று பூர்ணம் அதிர்ந்தவாறு பதட்டத்துடன் கணவனிடம் கூற, "நீ ரிலாக்ஸ்ஸா இரு பூர்ணம். நான் பேசிக்கிறேன்" என்றவர், "உங்களுக்கு வரதட்சனை இல்லாமல் யாராவது இந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா போதும். உங்க வேலை முடிஞ்சிதுனு நீங்க கை கழுவி விட்டு போய்டுவீங்க. அப்படித் தானே. அதுக்கு இந்தப் பொண்ணை எங்க வீட்டுக்கே கட்டிக் கொடுத்துடுங்க. எங்களுக்கு வரதட்சனை எதுவும் வேண்டாம்" என்றார் கந்தசாமி.


"ஏங்க என்னங்க நீங்களும்" என்று பூர்ணம் அதிர,


"இவ உங்க பையனையும் மயக்கிட்டாளா? அதானே பார்த்தேன். போன முறை என்னமோ பொண்ணுக்கு நல்லது சொல்றா மாதிரி நீங்க பேசும் போதே எனக்குச் சந்தேகம் வந்துச்சு" என்று பார்த்தசாரதி மேலும் பேசும் முன்,


"பார்த்தா வாயை மூடு" எனக் கத்தியிருந்தார் கந்தசாமி.


"அவ்ளோ தான் உனக்கு மரியாதை. இந்தப் பொண்ணு தான் எங்க வீட்டு மருமகள். நீ போலீஸ்க்கு வேணாலும் போ! அவ மேஜர்! அவ விருப்பப்படி தான் அவ கல்யாணம் நடக்கும்" என்ற கந்தசாமி, "சிந்து இங்க வாம்மா" என்றழைத்து, "இன்பாவை கட்டிக்க உனக்குச் சம்மதமா சொல்லு" என்றார்.


அவள் கண்ணீர் விழிகளுடன் இன்பாவை பார்க்க, அவன் கண்களை மூடி தலை அசைத்துச் சம்மதம் உரைக்குமாறு கூறினான்.


தன்னைப் போல் அவனின் சைகையில் தலையை அசைத்தவளாய் சம்மதம் என்றவாறு குனிந்து கொண்டாள் சிந்து.


"ஹ்ம்ம் அவ்ளோ தான் பார்த்தா! நீங்க சம்மதிக்கலைனா போலீஸ் வரைக்கும் போய்க் கூட இந்தக் கல்யாணத்தை நடத்துவேன்" என்று கந்தசாமி தீர்க்கமாகக் கூற, அனைவரையும் முறைத்தவாறு எழுந்து நின்ற பார்த்தசாரதி, "என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டு வரேன்" என்றவாறு கிளம்பி சென்றார்.


"என்னங்க இது?" என்று பூர்ணம் கந்தசாமியை பார்க்க, அவரை அறைக்கு அழைத்துச் சென்றார் கந்தசாமி.


இன்பா மேலறைக்குச் செல்ல, அவன் பின்னேயே அவனுடன் சென்ற சிந்து, "நான் வேண்டாம் உங்களுக்கு! பொதுவில் வைத்து உங்களை அவமதிக்கிற மாதிரி இருக்குமேனு தான் நான் சம்மதம் சொன்னேன். என் தகுதி என்ன? உங்க தகுதி என்ன? நான் உங்களுக்கு எப்படி சமமாவேன்? இந்தக் கல்யாணம் வேண்டாம்! நீங்க நல்லா இருக்கனும். உங்களுக்கு ஏத்த மாதிரி படிச்ச பொண்ணா வேலைல இருக்கப் பொண்ணா பார்த்து கட்டிக்கோங்க. நான் வேண்டாம் உங்களுக்கு" முகம் சிவக்க குலுங்கி அழுதவாறு தேம்பியபடி கூறிய சிந்துவை கனிவுடன் பார்த்திருந்தான் இன்பா.


அவளருகில் வந்து நின்றவன், அவளின் கன்னங்களைக் கைகளில் தாங்கியவனாய் கண்களுக்குள் ஊடுருவி, "இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி நீ மட்டும் தான் சிந்துமா" என்றான்.


------


இன்று


"எனக்குப் பேச வாய்ப்பே கொடுக்காம, நீயா ஒன்னு கற்பனை செஞ்சிட்டு உன்னை நீயே வருத்திக்காதம்மா" அவளின் முதுகு குலுங்கலில் அழுகையை உணர்ந்தவனாய் உரைத்தவன், "இப்போதைக்கு ஒன்னு மட்டும் மனசுல திடமாக வச்சிக்கோடா! இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி நீ மட்டும் தான்! என்னோட மொத்த காதலும் உனக்கு மட்டும் தான். அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு நிம்மதியா தூங்கு" அவளின் முதுகை பார்த்தவாறு உரைத்தான்.


அழுகை குறைந்து விசும்பலாய் தேய்ந்து சீரான மூச்சுடன் அவள் படுத்திருப்பதை முதுகின் அசைவு மூலம் உணர்ந்தவனாய் கண்களை மூடினான் இன்பா.


'இந்த ஜென்மத்தில் என் பொண்டாட்டி நீ மட்டும் தான்' கேட்டவளின் நினைவினில் வந்து போன இந்நிகழ்வுகள் மனசாட்சியை உசுப்பி விட்டிருந்தன.


'எந்த நிலையிலும் அவன் உன்னை விட்டுக்கொடுத்ததே இல்ல சிந்து! உன்னைக் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிட்டான் தானே. உன் மேல காதல் இல்லாமலா அதெல்லாம் செஞ்சான்' அந்நிகழ்வுகளின் தாக்கத்தில் மனசாட்சி அவனுக்காகப் பரிந்து வந்து பேச, அமைதியான மனநிலையில் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றிருந்தாள் சிந்து.


வாரயிறுதி நாட்களில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் சமயங்களில், இவ்வாறான குடும்பத்துடனான மதிய உறக்கம் என்பது எழுதப்படாத விதியாகி இருந்தது இன்பாவின் இல்லத்தில்.


இன்று இருவருமே மனச்சோர்வுடன் இருந்ததினால் மனத்தில் ஏற்பட்ட அயர்ச்சியில் நன்றாகவே உறங்கி போயினர்.


மாலை ஐந்து மணியளவில் எழுந்த இன்பா கண்களைச் சுழற்றிப் பார்க்க, அருகே மகன் உறங்கி கொண்டிருந்தான். ஆனால் மகனின் அருகே மனைவி இல்லை.


'அய்யோ தூங்க வச்சிட்டு கோபத்துல எங்கேயும் போய்ட்டாளா?' உள்ளம் அதிர, எழுந்து வீடு முழுவதும் அவளைத் தேடியவனின் பார்வையில் எங்கேயும் அவள் காணக் கிடைக்காமல் போக, அதீதமாய்ப் படபடவென்று துடித்த தனது இதயத்தின் ஓசையை செவியில் உணர்ந்தான் இன்பா.



© KPN NOVELS COPY PROTECT
bottom of page