top of page

என் இனிய இன்பனே 14

என் இனிய இன்பனே 14

காஞ்சிபுரத்தில் பழங்காலக் கட்டமைப்பின்படி ஓடு வேய்ந்த கூரையும் அதன் மேல் மச்சியுமெனச் சற்றுப் பிரமாண்டமாக இருந்த அவ்வீட்டின் இரும்பு கதவினைத் தாண்டி சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான் இன்பா‌.


அன்று போலல்லாது இன்று மனம் ஒருவித அமைதியுடன் இருக்க, அன்று தாவணியில் வந்து நின்ற சிந்துவை நினைத்துப் பார்த்துப் புன்னகைத்தவனாய் நின்றிருந்தான் இன்பா. அன்றைய நாளிற்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் இன்று தான் வீட்டிற்கு வருகிறான். சிங்கப்பூரில் இருந்து நேராக இங்கே தான் வந்திருந்தான். சிங்கப்பூரில் அவனது வேலை முடிந்து இனி‌ இந்தியாவில் தான் வேலையைத் தொடர வேண்டுமென்ற நிலையில் தான் இந்தியா வந்திருந்தான் இன்பா.


வீட்டின் வாயிற்கதவை ஆவலுடன் திறந்து இன்பாவை பூரிப்பான மகிழ்வுடன் பார்த்த சிந்து, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்க, மென்னகை புரிந்தவனாய் தலை அசைத்தவனின் செவியினில்,


"அத்தை சிந்துவை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீங்களா? எனக்கு வீட்டு வேலைக்கு உதவியாக இருக்கும்" பூர்ணத்திடம் திவ்யா கேட்டுக் கொண்டிருந்தது விழுந்தது.


அன்று போலவே இன்றும் மகனைக் கண்டதும் திவ்யா கேட்டதைக் காற்றினில் விட்டவராய் அவனை நோக்கி வந்தார் பூர்ணம்.


வீட்டினுள் வந்தவனைப் பாசத்துடன் அணைத்து வாஞ்சையுடன் முகத்தினை வருடி நெகிழ்ந்தவாறு நலம் விசாரித்தார் பூர்ணம்.


அமைதியான புன்னகையுடனேயே அவருக்குப் பதிலளித்தவன் அவரின் நலனைப் பற்றியும் விசாரித்தான்.


அறையிலிருந்து வெளியே வந்த தூயவனும் கந்தசாமியும் அவனிடம் நலம் விசாரித்து மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க, முகப்பறையின் மத்தியில் நின்றிருந்த இன்பாவின் கால்களைப் பிடித்துத் தவழ்ந்து தடவி எழுந்து நின்று பொக்கை வாய் தெரிய சிரித்த ஒன்றரை வயதான அண்ணன் மகனை கையினில் அள்ளிக்கொண்டு முத்த மழை பொழிந்தான் இன்பா.


"சித்தா டா.. சித்தா சொல்லு" சிங்கப்பூரில் இருக்கும் போது தூயவனிடம் காணொளி அழைப்பில் பேசும் போதெல்லாம் குழந்தை சித்தப்பா எனக் கூற வராமல் சித்தா என அழைத்துப் பழகியிருந்தான்.


முகப்பறையில் அமர்ந்து குழந்தையை மடியினில் வைத்துக் கொண்டு அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தவனின் கரத்தினில் காபியை அளித்தாள் சிந்து‌.


இளநகையுடன் அதனை எடுத்துக் கொண்டு அண்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் அனைவரிடமும் காபி கோப்பையை வழங்கி விட்டுச் சமையலறை செல்லும் வரை அவளையே பின் தொடர்ந்தது‌.


குளித்து ஓய்வெடுத்து விட்டு வருவதாய் உரைத்து மேலறைக்குச் செல்ல அவன் மாடிப்படி ஏற, அவனுடன் ஏறினாள் அவளும்.


"உன் வேலைலாம் எப்படிப் போகுது சிந்து?" எனப் பேசியவாறே படிக்கட்டில் ஏறினான்.


"ஹ்ம்ம் சூப்பரா போகுதுங்க" மகிழ்வாய் பேசினாலும் ஏனோ அவள் கண்களில் ஜீவனில்லாதது போன்று தோன்றியது அவனுக்கு.


"ஆமா ஏன் நீ நாலஞ்சு மாசமா மெயில் எதுவும் அனுப்பலை. அதுக்கு முன்னாடிலாம் மாசத்துக்கு ஒரு தடவையாவது மெயில் அனுப்பிடுவியே!" கேள்வியாய் அவளை நோக்கியவாறு கேட்டவன் அவளின் வீட்டினைத் தாண்டி சென்றப்போது, வரவேற்பறை வெறுமையாக இருப்பதைக் கண்டு, "ஆமா உங்க அத்தை எங்கே?" எனக் கேட்டான்.


"அத்தை கடவுள் கிட்ட போய்ட்டாங்க" குனிந்த தலையை நிமிர்த்தாது கண்களில் சூழ்ந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டு அவள் கூற,


அதிர்ச்சியுடன், "எப்ப? எப்படி? ஏன் என்கிட்ட சொல்லலை?" எனக் கேட்டான்.


இருவரும் அவனது அறையின் முகப்பறையில் நின்றிருந்தனர்.


கண்களைத் துடைத்தவளாய், "வயசாகிடுச்சுல! இந்த நோய் வேற! எதிர்பார்த்தது தான்!" என்று கூறியவளாய்த் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, "இதைச் சொல்லி உங்களை ஏன் சங்கடப்படுத்தனும்னு தான் சொல்லலை. ஆறு மாசமாகப் போகுது" என்றாள்.


"சரி உன்னோட பார்த்தசாரதி மாமா உன்னை எப்படி இன்னும் இங்கே விட்டு வச்சிருக்காரு?" எனக் கேட்டான்.


"அது.. அது வந்து" என்று தயங்கி கொண்டிருக்கும் போது உள்ளே வந்த கந்தசாமி, "என்னடா ரெஸ்ட் எடுக்கிறேன்னு வந்து இந்தப் பொண்ணுகிட்ட விசாரணை நடத்திட்டு இருக்க?" எனக் கேட்டார்.


"அப்பா! என்ன நடக்குது இங்கே? திவ்யா அண்ணி அவங்க வீட்டுல வேலை செய்றதுக்குச் சிந்துவை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க. இங்கே வந்து பார்த்தா, சிந்துவோட அத்தையே இல்லை. அவளோட பார்த்தசாரதி மாமா எப்படி அவளை இங்கே விட்டு வச்சிருக்காரு?" எனக் கேட்டான்.


இன்பா சிங்கப்பூரில் இருந்த நாட்களில், தனது அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் விளக்கி எழுதி மாதத்திற்கு ஒரு முறை பெரிய மின்னஞ்சல் அனுப்பிடுவாள் சிந்து.


தன் மீது பேரன்பும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் சிந்துவின் மீது அதீத அக்கறை கொண்டிருந்தான் இன்பா.


எட்டாவது படித்தவர்களும் அடிப்படை கோடிங் (coding) எழுதி ஆப் (app) தயாரிக்கலாம் என்று வந்த அறிவிப்பை இன்பாவிடம் அவள் கூற, அவளை அப்பயிற்சி வகுப்பில் சேரச் சொல்லி வலியுறுத்தினான் இன்பா.


அவள் அப்பயிற்சி வகுப்பில் தேர்ச்சிப்பெற்று முடித்ததும், இதே போன்ற வகுப்பிற்குப் பயிற்றுனராகப் பணிபுரியத் தொடங்கினாள். சில மாதங்கள் மட்டுமே பேட்ஜ் முறையில் நடக்கும் இந்தப் பயிற்சி வகுப்புக்கு இரண்டு மாதங்கள் அவ்வாறு பணிபுரிந்து விட்டு மீண்டுமாக டிடிபி வேலையிலேயே சேர்ந்திருந்தாள். அவளுக்கென ஒரு மடிகணிணி வாங்க வலியுறுத்தியவன், மாத தவணையில் பணம் செலுத்துமாறு உரிய இடத்தில் அவளுக்கு மடிக்கணினி வாங்கித் தர தந்தையிடம் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுக்க வைத்தான். இவ்வாறாக அவன் அயல்நாட்டில் இருந்த பொழுது இருவருக்குமிடையிலான நட்புறவு அதிகரித்து இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


"இன்பா! அந்தம்மா இறந்ததும், பார்த்தசாரதி வந்து கூட மாட ஈமக்காரியங்கள்லாம் பார்த்துட்டு அடக்கம் செஞ்சிட்டு வந்து, சிந்துவை கையோட கூட்டிட்டுப் போறதா தான் சொன்னாரு. ஆனா சிந்து தான், அவர் கூட அனுப்பிடாதீங்க அங்கிள். என்னை என் கால்ல நிக்க விட மாட்டீங்க. அடிமையாகவே வச்சிப்பாங்க. அவங்க பையன்களை மயக்குறேன்னு பேசியே என்னைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி என் வாழ்க்கைய நாசமாகிடுவாங்கனு சொல்லி கெஞ்சினாப்பா. ஆனாலும் அவங்க தானே கார்டியன், நாம என்ன செய்ய முடியும்னு யோசிக்கும் போது தான், இந்த வீட்டுல வேலைக்காரியா கூட நான் இருந்துக்கிறேன் அங்கிள்னு அவ சொன்னா" என்று அப்பா சொன்ன மறுநொடி,


"ஓ அவ சொன்னா! நீங்க உடனே ஒத்துக்கிட்டு வேலைக்காரியா வச்சிட்டீங்களா?" கோபமாகத் தந்தையைக் கேட்டவன், அவளைப் பார்த்து முறைத்தவனாய், "ஓஹோ மேடம் தானே முடிவு எடுக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆளாகிட்டீங்களோ! எல்லாத்தையும் என்கிட்ட கேட்டு முடிவு செய்றவ இப்ப மட்டும் ஏன் கேட்கலை" கோபத்துடன் கத்தியிருந்தான் இன்பா.


அவனின் கோபத்தில் கண்கள் கலங்கி அவள் அவனைப் பார்க்க, "ம்ப்ச் இன்பா! நடந்ததை முழுசா கேளு நீ முதல்ல! அவ மேல எதுவும் தப்பில்லை" என்ற கந்தசாமி தொடர்ந்து பேசினார்.


"அந்தப் பார்த்தசாரதி உடனே இவளுக்கு வரன் இருப்பதாகச் சொல்லி ஒரு மாசத்துல கல்யாணம்னு வந்து நின்னான். அவன் பார்த்திருந்த வரன் நல்லவன் இல்லை. இவங்க வரதட்சணை போடாம கட்டிக்க எவன் வந்தாலும் இவளை கட்டிக் கொடுத்துட்டு வெட்டி விட முடிவு செய்திருக்காங்கனு புரிஞ்சிது.

இப்போதைக்கு அவன் வாயடைக்க, சிந்து எங்க வீட்டுல வேலை செய்யட்டும். அதுக்கான சம்பளப் பணத்தை உன்கிட்டயே கொடுக்கிறேன். கொஞ்ச நாள் கழிச்சி நல்ல வரனா பார்க்கலாம்னு சொல்லி பேசி அனுப்பிட்டேன். அந்தச் சூழ்நிலைல சிந்துவை நம்ம கூட வச்சிக்க எனக்கு வேற வழி தெரியலைடா தம்பி" என்றார் அவர்.


ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னைச் சமன்படுத்தியவனாய் தண்ணீரை அருந்தி விட்டு அமர்ந்தவன், "நீங்களும் அவளை அடிமையாகத் தானே வச்சிட்டு இருக்கீங்க! அவ வாழ்க்கையைக் காப்பாத்த வேலையாளா வச்சிக்கிறோம்னு பேசிருக்கீங்கனா நம்ம குடும்பத்துல ஒரு ஆளா தான் அவளை இங்கே வச்சிருக்கனுமே தவிர இப்படி முழு நேர வேலைக்காரியா யூஸ் பண்ணிக்கக் கூடாது. அண்ணி என்னமோ அவங்க வீட்டு வேலைக்கு இவளை கூப்பிட்டுட்டுப் போறதா சொல்லிட்டு இருக்காங்க" எனக் கேட்டான்.


"இல்லடா இன்பா! அப்படிலாம் நான் ஒன்னும் அனுப்பிட‌ மாட்டேன். இப்ப இந்தச் சூழலை எப்படிச் சரி பண்ணலாம்னு நீயே சொல்லு" என்று மகனிடமே பந்தை திருப்பி விட்டார் கந்தசாமி.


கந்தசாமியின் மனதில் ஓர் ஆசையும் எண்ணமும் இருக்கிறது தான். ஆனால் மகனின் மனத்தில் என்ன இருக்கிறதென அறிந்து கொள்ள நினைத்தார் அவர்.


"ஹ்ம்ம் நாமளே சிந்துக்கு ஏத்த மாதிரி நல்ல பையனாகப் பார்த்துட்டு அவங்க மாமாகிட்ட சொல்லலாம்ப்பா. நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச புரோக்கர்கிட்டலாம் சொல்லி வைங்க" என்றான்.


"ஹ்ம்ம் சரி சொல்லிடுறேன். ஆமா உன் கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்க? உங்கம்மா புலம்பிட்டே இருக்கா! அவளால தான் நீ இப்படி இருக்கனு ரொம்ப ஃபீல் செய்றாடா அவ! உங்க அம்மாக்காகவாவது சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கலாம்ல" எனக் கேட்டார்.


சிந்து அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு நின்றிருக்க, சிந்துவின் முக உணர்வுகளை ஆராய்ந்தார் கந்தசாமி.


அவளோ மிக இயல்பாக, "நீங்க என்னை விடப் பெரியவங்க தானே! நீங்க முதல்ல கல்யாணம் செஞ்சிக்கோங்க. உங்களுக்குப் பிறக்கிற பிள்ளையெல்லாம் கொஞ்சிட்டு நான் கல்யாணம் செஞ்சிக்கிறேனே" என்றாள்.


"என்னைப் பார்த்த வயசானவன் மாதிரி தெரியுதா எனக்கு?" முறைப்பாகவே அவன் கேட்டிருக்க,


"அய்யோ அப்படி இல்லங்க" என்று பதறியவாறு அவள் பதில் கூற,

வாய்விட்டுச் சிரித்திருந்தார் கந்தசாமி.


"சிந்து! அங்கே என்ன செய்ற? உன்னைச் சுடு தண்ணீர் தானே வச்சி தர சொன்னேன்" பூர்ணத்திடம் இருந்து கட்டளையாக வந்த குரலைக் கேட்டு, "இதோ வரேன் ஆன்ட்டி" என்றவளாய் சிந்து கீழே செல்ல,


பல்லைக் கடித்தவனாய், "எதுக்கு இப்படி அதிகாரம் செஞ்சிட்டு திரியுறாங்க. அவ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? அவங்க பையனையே மீட்டுக் கொடுத்தவ அவ தான்னு சொல்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க உங்க பொண்டாட்டியை! சீக்கிரம் இவளுக்குக் கல்யாணம் செஞ்சி வச்சி இங்கிருந்து அனுப்பனும். இல்லனா இப்படித் தான் அவளோட அப்பாவிதனத்தை அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு யூஸ் செஞ்சிட்டு இருப்பாங்க" என்றவனாய் குளியலறைக்குள் சென்றான்.


மகனின் பேச்சில் நெஞ்சம் குளிர மனதோடு திட்டம் தீட்டியவராய் அங்கிருந்து நகர்ந்தார் கந்தசாமி.


அடுத்த இரண்டு நாட்களில் வெளியே செல்வதாய் இருச்சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றவன் காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.


லேசாய் ஏற்பட்ட விபத்தில் கை கால்களெல்லாம் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, கால் முட்டியில் அடிப்பட்டுக் கால்சாரை கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.


அவனைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாள் சிந்து.


"கொஞ்சம் பார்த்துப் பொறுமையா போகலாம்ல! அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? இப்படி அடிப்பட்டு வந்து நிக்கிறீங்களே! உங்களுக்குத் தேவையா இந்த வலிலாம். யாரையாவது கூடக் கூட்டிட்டு போய்ருக்க வேண்டியது தானே" கோபமாய் இன்பாவின் கை கால்களை வருடியவளாய் அழுகை குரலில் பேசிய சிந்துவை வாய்க்குள் சிரிப்பை மறைத்து அமைதியாகப் பார்த்திருந்தான் இன்பா.


தன்‌ மீதான அவளின் அக்கறையான பேச்சு நெஞ்சை இனிக்கச் செய்தது. அதுவும் இது வரை அவள் கோபமாய்ப் பேசியே கேட்டிராதவனுக்கு அவளின் இந்த உரிமையான பேச்சு மேலும் சிரிப்பை தான் வரவழைத்தது.


அவளின் பேச்சுச் சத்தத்தில் அறையிலிருந்து வந்த கந்தசாமி சிரிப்புடன் சிந்துவை பார்த்திருக்க, "எவ்ளோ கொழுப்பு இருந்தா என் பிள்ளைய கேள்வி கேட்ப நீ! என்று சிந்துவை அதட்டினார் பூர்ணம்.


"ம்ப்ச் விடு பூர்ணம். அவ சொன்னது சரி தானே. இவன் பார்த்து போய்ருக்கனும். வாடா தம்பி ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்தார் கந்தசாமி.


அன்று வேளா வேளைக்கு மாத்திரை அளித்து அவனைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டாள் சிந்துஜா.


மறுநாள் காலை அவனறைக்குக் கந்தசாமி சென்ற போது, அவனுக்கான உணவினையும் மாத்திரையும் அளித்து விட்டு வெளியே வந்தாள் சிந்து.


அவளைப் பார்த்து சிரித்தவாறு உள்ளே சென்றவர், மகனின் நலம் விசாரித்து விட்டு பொதுவான விஷயங்கள் பேசிய பிறகு, "உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் இன்பா" என்றார்.


"என்னப்பா? சொல்லுங்க" என்றான்.


"பேசாம சிந்துவை நீயே கல்யாணம் செஞ்சிக்கோயேன்" பட்டென்று விஷயத்தைப் போட்டு உடைத்தார்.


"என்னப்பா சொல்றீங்க?" என்று அதிர்வுடன் கேட்டான் இன்பா.


"நிஜமா தான் சொல்றேன்டா! உங்க அண்ணன் அளவுக்கு உனக்கு விவரம் இல்லை இன்பா. பார்க்க வெளில அழுத்தமானவனா கடுமையானவனா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள நீ ரொம்பச் சென்சிட்டிவ் அண்ட் சாஃப்ட் இன்பா. அதான் உங்கம்மாவை பத்தி தெரியாம எங்க மேல உள்ள பாசத்துல உன் காதலை விட்டுக் கொடுத்துட்டு வந்து நின்ன! அந்த நேரம் மட்டும் எனக்கு ஹார்ட் அட்டாக் வராம போயிருந்தா, ஆறப்போடு இப்ப எதுவும் முடிவு எடுக்காதடா தம்பினு சொல்லிருப்பேன். உன் அண்ணன் காதலுக்காக ஏற்கனவே உங்கம்மாகிட்ட போராடிட்டு இருக்கும் போது நீயும் வந்து நின்னதுல ஒன்னும் செய்ய முடியாம போச்சு. நீ நல்லா வாழலைனா, நல்ல பிள்ளைய பெத்து வளர்த்துட்டு நானே என் பிள்ளை வாழ்ககையைக் கெடுத்துட்டேனேனு என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்டா. நூறு சதவீதம் சிந்து உனக்கு ஏத்த மனைவியா இருப்பானு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ உடனே முடிவு சொல்லனும்னு இல்லை. கொஞ்சம் யோசி! உனக்கு என்ன தோணினாலும் அப்பாகிட்ட சொல்லு" என்றவராய் அவர் செல்ல, சிந்தையில் மூழ்கினான் இவன்.


© KPN NOVELS COPY PROTECT
bottom of page