top of page

என் இனிய இன்பனே 13

என் இனிய இன்பனே 13

பூனே நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான் இன்பா.


வாழ்வினைப் பற்றிய சிந்தனைகள் இல்லாத நெடுந்தூரப் பயணங்கள் அரிதானவை.


காதினில் மாட்டியிருந்த ஒலிதாங்கி செவியினில் பாடல்களை ஒலிக்கவிட்டிருந்த போதிலும் மனமோ அதில் லயிக்காமல் அதன் போக்கில் சிந்தையில் மூழ்கியிருந்தது.


இருக்கையைச் சாய்த்துக் விழிகளை மூடிப் படுத்திருந்தவனின் செவிகளில் சிந்து கூறிய அவளது வாழ்வின் நிகழ்வுகளே வந்து போனது. அதிலிருந்து அப்படியே தனது வாழ்வைப் பற்றி யோசித்தவனின் மனம் நங்கையிடம் வந்து நின்றது.


'அவ இப்ப எங்க எப்படி இருக்காளோ? சிந்து இங்கே அவளோட குடும்பத்து ஆளுங்க பேசியதை நினைச்சி மறுகிட்டு இருக்க மாதிரி தானே நங்கையும் நான் பேசியதை நினைச்சிட்டு இருப்பா! சிந்து மாதிரியே நங்கையும் தனக்குள்ளேயே ஒடுங்கி போய்ருப்பாளோ?


இல்ல இல்ல நங்கைக்குப் படிப்பும் வேலையும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் மெச்சூரிட்டியும் இருக்கு. எப்படியும் இதெல்லாம் கடந்து அடுத்த வேலையைப் பார்க்க போய்ருப்பா'


தானே கேள்வியும் தானே பதிலுமாய்த் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்ட இன்பாவிற்குத் தெரியவில்லை, தானே தனது இயல்பைத் தொலைத்து ஒடுங்கித் தான் இருக்கிறோம் என்று.


மனச்சோர்வு வாட்ட, எப்பொழுது தான் நங்கையின் நினைவு தன்னை விட்டு நீங்குமோ என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.


வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வருங்காலம் காயம் ஆற்றும்.


அந்நேரம் காதினில் ஒலித்த இவ்வார்த்தைகள் அவனுக்குத் தேறுதலை அளிக்காது மனத்தினைத் தடுமாறச் செய்ய,


தந்தையையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே

இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும் போது

எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்


அடுத்த வந்த வரிகள் எல்லாம் காயத்தில் அமிலத்தைக் கொட்டிய வலியை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க, ஆத்திரத்தோடு காதிலிருந்து வயர்களைக் கழட்டி எறிந்தான் இன்பா.


இயலாமையின் வெளிபாடாய் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கரைப்புரண்டோடியது.


*****

சிந்திக்கத் தொடங்கியிருந்தாள் சிந்து.


தன்னைப் பற்றி, தனது எதிர்காலத்தைப் பற்றி, தனது விருப்பு வெறுப்புகளைப் பற்றியெனச் சகலத்தையும் ஆராயத் தொடங்கியிருந்தாள் சிந்து!


சிந்துவிற்கு வாழ்வின் மீதான பிடித்தத்தை உண்டாக்கியிருந்தான் இன்பா.


இன்பாவின் மீதான தனது பிடித்தத்தைக் காதல் என்றெல்லாம் எண்ணவே இல்லை அவள். அன்பான ஆன்மாவின் மேல் தனக்கேற்பட்டிருக்கும் ஈர்ப்பும் பிடித்தமும் அன்புமெனவே அவ்வுணர்வை உள்வாங்கிக் கொண்டாள் அவள்‌. அவளுக்கான வாழ்க்கை பின்னாளில் எப்படியேனும் அமையலாம், ஆனால் தனது வாழ்வில் இன்பா இருக்கும் இந்த அத்தியாயங்கள் எல்லாம் வாழ்நாளுக்கும் தனக்கு இனிமையான நினைவுகளை அளிப்பவையாக இருக்கும் என்ற மனப்பக்குவத்துடன் தான் வரும் நாட்களில் அவனுடன் பேசினாள் பழகினாள் சிந்துஜா.


அடுத்த முறை இன்பாவை சந்திக்கும் போது அவனது அறிவுரைப்படி ஏதேனும் செய்து அவனிடம் பாராட்டுப் பெற்றிட வேண்டுமெனச் சிந்தித்திருந்தது அவன் மீது அபிமானம் கொண்டிருந்த அவளின் மனது.


ஆனால் எவ்விதமாக யோசித்தாலும் தனக்குப் பிடித்தவைகள் எவையெனக் கண்டறியவே முடியவில்லை வீட்டுச் சங்கிலியில் வளர்க்கப்பட்ட சிந்துவால்.


வீட்டைத் தாண்டி அவளால் எதுவும் யோசிக்கவே முடியவில்லை. இரு வாரங்களாகப் பலவாறு சிந்தித்தப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது தடுமாறியவள் அடுத்த வந்த நாட்களில் மளிகை காய்கறி வாங்க கடைத்தெருவிற்குச் செல்லும் வேளைகளில் வழியில் இருக்கும் பலவிதமான அலுவலகங்கள், கடைகள் மீது பார்வையை ஓடவிட்டே வந்தவளுக்குத் தட்டச்சு பயிற்றுவிக்கும் அலுவலகத்தைக் கண்டதும் ஒரு யோசனைக் கிடைக்க அதனைக் கந்தசாமியிடம் கூறி அத்தையிடம் பேசி அனுமதிப்பெற வைத்துச் செயல்படுத்த தொடங்கினாள் சிந்துஜா.


அடுத்த வந்த நாட்களில் ஒரு நாள் பூனே அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவைக் காணவென அவனது இருக்கைக்கு அருகே வந்து நின்றப் பெண் யோசனையுடன் அவனைப் பார்த்தாள். அந்த அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக அருகருகில் அமர்ந்து வேலை செய்வது போன்ற அமைப்புடன் இருக்கைகள் அமைந்திருந்தன.


இன்பாவின் திட்டப்பணியில் (பிராஜக்ட்டில்) வேலை செய்த ஐந்து பேரும் அவனைச் சுற்றியே அமர்ந்திருந்தனர். இந்தத் திட்டப்பணியில் முதன்மையானவனாக இருந்து அனைவரையும் ஒன்று கூட்டி பணிகளைப் பங்கிட்டு இயக்குபவனாக அவனுடைய மேலாளர் அவனை நியமித்திருக்க, தனக்கு அருகிலேயே அனைவரும் அமர்ந்திருக்குமாறு இருக்கையை அமைத்துக் கொண்டான் இன்பா.


இன்பா கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே வேலை செய்திருந்த நேரத்தில் தங்களது திட்டப்பணி குழுவில் புதியதாகச் சேர்ந்திருந்த இப்பெண்ணிடம் அலுவலக இணையக்குழு கூட்டத்தில் ஒலிவாங்கியில் பேசியிருந்த போதிலும் இன்று தான் நேரில் காண்கிறான்.


இன்பாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியவாறே அவனது முகத்தை உன்னிப்பாய் கவனித்த அப்பெண், "நீங்க நங்கையைக் காதலிச்ச இன்பா தானே! எப்படிச் சார் ஒரு பொண்ணோட மனசை குதறிப்போட்டுட்டு உங்களால சந்தோஷமா இருக்க முடியாது?" எனக் கேட்டாள். நிர்மலமாய் இருந்த அவளின் முகத்தில் கோப ரேகைகள். சர்வ நிச்சயமாகத் தான் கேட்டது அநாகரிகமான கேள்வி எனத் தெரியும் அவளுக்கு. ஆனால் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.


அப்பெண்ணின் கேள்வியிலேயே சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் மீது படிந்தது.


'ம்ப்ச் எங்கே போனாலும் இது என்னை விடாதா?' என்பது போன்ற அசூயை உணர்வு மேலோங்க, 'சோ வாட்? தட்ஸ் மை பெர்சனல்!' என்றான் இன்பா.


அவனின் பதில் அலட்சியமாக அவளுக்குத் தோன்ற, இப்படித் தானே அன்று நங்கையை அலட்சியமாகப் பேசிவிட்டுப் போனான் என்ற கோபம் மேலும் அவளைக் கொந்தளிப்புக்குள்ளாக்க,


"சாரி ஃபார் ஆஸ்கிங் திஸ் இன்பா சார். உங்க பர்சனல் தான். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டது ஒரு பெண் என்பதால் என்னால் கேட்காமல் இருக்க முடியலை.

நீங்க இங்கே இல்லாத நாளில் உங்களைப் பத்தி அவ்ளோ உயர்வா சொன்னாங்க. முக்கியமா பொண்ணுங்களை மதிச்சு நடப்பீங்கனு சொன்னாங்க. எனக்குத் தெரிஞ்சி பொண்ணுங்களை மதிச்சு நடக்கிறவங்க யாரும் நடு வீதியில ஒரு பொண்ணை, அதுவும் தான் காதலிச்ச பொண்ணைத் தரகுறைவாகப் பேச மாட்டாங்க. அவமானப்படுத்த மாட்டாங்க. இதெல்லாம் செஞ்சவரை இந்த உலகம் எப்படி நல்லவன்னு தூக்கி வச்சி பேசுதுனு தான் எனக்குப் புரியலை!" அவனுக்கு மட்டும் கேட்க வேண்டுமெனக் குரலினைத் தாழ்த்தி மென்மையாகத் தான் கேட்டிருந்தாள் அப்பெண். ஆனால் நெருக்கமான‌ இருக்கையினால் அருகிலிருந்தவர்களின் செவியையும் தீண்டிருந்தன அவளின் வசவுகள்.


கடந்த சில நாட்களாக இன்பாவைப் பற்றி அத்தனை நல்ல விதமாக இக்குழு ஆட்களின் மூலமாகக் கேட்டறிந்திருந்தாள் அவள். நேரடியாக இன்பாவிடம் அலுவலக ஆடியோ மீட்டிங்கில் பேசும் போது அவளும் அதையே உணர்ந்தாள்.


குரலில் இறுக்கமிருந்தாலும் மென்மையானவன், அலுவல் வேலையில் மட்டும் சற்று கண்டிப்பானவன் என்றெல்லாம் நன்மதிப்புடன் உயர்வாக நினைத்திருந்தவனை நேரில் கண்டதும் அனைத்தும் பொய்பித்துப் போனதில், அதிலும் பெண்ணை மதிக்காதவனை அனைவருமே தூக்கி வைத்து பேசியதை ஜீரணிக்க முடியாது ஏற்பட்ட கோபத்தில் இவ்வாறாகப் பேசியிருந்தாள் அவள்.


ஆம் அவளைப் பொறுத்த வரையில் இன்பா தவறு செய்தவன், பெண்ணை மதிக்கத் தெரியாதவன். இவ்வாறு பலரும் நினைக்கும் வண்ணம் நடந்து கொண்டதே அவன் தான் எனும் போது யார் சென்று அது இல்லை என்று அவனுக்காகப் பேச முடியும்.


சுற்றியிருந்தவர்களின் பார்வை முழுவதும் இவர்கள் இருவரின் மீதே இருக்க, ஒரு மாதிரியான அவமான உணர்வில் கொந்தளித்த இன்பா, "ஜஸ்ட் ஸ்டாப் இட் பிரியா" எனக் கத்தியிருந்தான்.


"நங்கை கஷ்டப்படுறதை அவங்க கூடவே இருந்து பார்த்தவ நான் இன்பா சார். நீங்க லீட் செய்ற இந்தப் பிராஜக்ட்ல வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை இன்பா சார். சாரி எனக்கு இந்தப் பிராஜக்ட் வேண்டாம்" என்றவளாய் அந்தத் திட்டப்பணி மேலாளரின் அறை நோக்கிச் சென்றாள் பிரியா.


நங்கையுடன் அவளது அறைத்தோழியாய்த் தங்கியிருந்தவள் தான் இந்தப் பிரியா என்று அவளைப் பார்த்ததுமே கண்டுகொண்டான்‌ இன்பா. நங்கையுடன் தன்னைக் காணும் போதெல்லாம் அண்ணாவென விளித்து அன்பாகப் பேசியிருந்தவள் இன்று இவ்வாறு தன்னை அவமதிப்பாளெனத் துளியும் எண்ணியிருக்கவில்லை அவன்.


சுற்றிலும் இருந்த அவனது குழு மக்கள் இதனைக் கண்டும் காணாது அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் ஏனோ தன்னையே அவர்கள் பார்ப்பது போன்ற குறுகுறுப்பில் கடுப்பானவனாய் விடுப்பு எடுத்து அறைக்குச் சென்று விட்டான் இன்பா. அன்று தான் நங்கையை வீட்டு வாசலில் வைத்து பேசிய பொழுது அவளும் இவ்வாறு தானே அவமானமாக உணர்ந்திருப்பாள். அன்று அச்சூழலின் தாக்கத்தில், தான் எடுத்த முடிவைச் செயல்படுத்த செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்து நொந்து போனான் இன்பா.


மேலாளரின் அறைக்குச் சென்ற பிரியா இன்பாவைப் பற்றி ஏதும் கூறாது, தனக்கு இப்பிராஜக்ட்டில் சேர விருப்பமில்லையெனக் கூறி விட்டுச் சென்றிருந்தாள்.


தந்தையிடம் அன்றாடம் தனது மனக்கிலேசங்களைப் புலம்பலாய் பகிரப் பழகியிருந்தான் இன்பா. அவரின் அறிவுரைகளும் வழிகாட்டுதலும் அவனுக்குச் சற்று இளைப்பாறுதலை வழங்கியிருந்தது. தந்தையிடம் பேசும் சமயங்களில் அவ்வப்போது அன்னையிடமும் அண்ணனிடமும் பேசுவான்‌ இன்பா.


குடும்பத்தினரைத் தவிர அனைவருக்கும் தான் தவறானவனாகத் தான் தெரிகிறோம் என்ற குறுகிய மனப்பான்மை வந்திருந்தது இன்பாவிற்கு.


அடுத்தச் சில வாரங்களில் மற்றவர்களின் பார்வையில் தான் இறங்கிப் போன உணர்வு மேலோங்கி அவனை வதைக்க, அந்தப் பிராஜக்ட்டிலிருந்து வெளியேறி இருந்தான் இன்பா.


அனைத்தையும் விட்டுத் தூரமாக எங்கேனும் செல்ல வேண்டுமென நிம்மதியில்லாத மனம் பரிதவிக்க, தந்தையின் அறிவுரைப்படி இடமாற்றம் மனமாற்றத்தை உண்டு செய்யும் என நம்பியவனாய் அயல்நாட்டு வேலைக்காக முயற்சி செய்தான் இன்பா.


ஏதோ வாழ்கிறோம் என்ற விரக்தியின் விளிம்பில் இருந்தவனுக்குக் கிடைத்த சிங்கப்பூர் வேலை பெரும் மனமகிழ்வை அளித்தது. தந்தையிடம் இதனைக் கூறி மகிழ்ந்தவன் அவரையே வீட்டினரிடம் பகிர்ந்து கொள்ளக் கூறினான். உடனே வேலையில் சேர வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்ததால் வீட்டிற்குச் செல்லாமல் அங்கிருந்தே சிங்கப்பூருக்கு கிளம்ப ஆயத்தமானான் இன்பா.


சிங்கப்பூருக்குப் பயணிக்கத் தயாராகி நின்றிருந்த அந்நாளில் அவனுக்கு அழைத்துப் பேசிய கந்தசாமி, "சிந்துவுக்கு உன்கிட்ட பேசனுமாம்" எனக் கூறி அவளிடம் கைபேசியை அளித்தார்.


தனது ஆதர்ச நாயகனிடம் பேசுவதற்காக மகிழ்வுடனும் பூரிப்புடனும் பதட்டத்துடன் காத்திருக்கும் அபிமானி போல் காத்திருந்தவளின் செவியை, "ஹலோ சிந்து! எப்படி இருக்க?" என்ற அவனது கேள்வியே இன்பமாய் உணரச் செய்தது‌.


அவளின் குரலில் அவன் மீதான அபிமானம் வெளிப்பட, "ஹலோ! நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? அதுக்கப்புறம் ஏன் நீங்க வரவேயில்லை. இன்னியோட நீங்க இந்த வீட்டுக்கு வந்து நூத்தியம்பத்து இரண்டு நாள் ஆகுது தெரியுமா! நீங்க வந்தா சொல்லனும்னு நிறைய விஷயங்கள் மனசுல வச்சிருந்தேன். நீங்க சிங்கப்பூர் போறதா அங்கிள் சொன்னதும், எங்கே இது எதுவும் சொல்ல முடியாம போய்டுமோனு கவலையா இருக்குனு அங்கிள்கிட்ட சொன்னதும் உங்களுக்குப் போன் போட்டு கொடுத்துட்டாரு" படபடவெனப் பூரிப்பாக உணர்ச்சி மேலிட பேசிய சிந்துவை இன்பமாய் உள்வாங்கியிருந்தான் இன்பா.


"நல்லா இருக்கேன் சிந்து. நாள் கணக்குலாம் ஞாபகம் வச்சிருக்கியா? ஆச்சரியமாக இருக்கு" மென்சிரிப்புடன் அமைதியாக அவன் பேச,


"ஆமா எப்படி மறக்க முடியும்? என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிற நல்ல மனுஷன் நீங்க" அந்த நல்ல மனுஷன் என்ற வார்த்தை அவனுள் பல உணர்வுகளைக் கிளறி நெகிழச்செய்தது.


"என் வாழ்நாள்ல ஒருத்தருக்காவது நான் நல்லவனா தெரிஞ்சிருக்கேனேனு சந்தோஷமா இருக்கு சிந்துமா" நெகிழ்ச்சியுடன் உரைத்திருந்தான் இன்பா.


அவன் கூறுவதில் இருந்த உட்பொருளை எல்லாம் ஆராயும் மேதைமை இல்லாதவளாய்,


"ஏன் அப்படிச் சொல்றீங்க? நீங்க நல்லவர் தான்! என் சொந்தக்காரங்களே என்னை நம்பாம இருக்கும் போது என் அத்தை பேசினதை வச்சி நீங்க ஒன்னும் என்னைத் தப்பா நினைக்கலையே!

நீங்க சொன்னப் பிறகு தான் எனக்குனு நான் ஏதாவது செய்யனும்ன்ற உந்துதல் வந்துச்சு எனக்கு! பக்கத்துல இருக்க டைப் ரைட்டிங் கிளாஸ்ல சேர்த்து விடச் சொன்னேன் அங்கிள்கிட்ட. அங்க டைப் ரைட்டிங் கத்து முடிச்சதும், அந்தக் கிளாஸ் எடுத்த ஓனரே எனக்கு அவரோட கம்ப்யூட்டர் சென்டர்ல DTP operator வேலை கொடுத்தாரு. ஆனால் என்னால முழு நேரம் வேலை பார்க்க முடியாதுனு அத்தையோட உடல்நிலை பத்தி சொல்லி சொன்னதும் காலைல நாலு மணி நேரம் வேலைக்கு வந்துட்டுப் போனா போதும்னு வேலை கொடுத்தார். இப்ப அந்த வேலை தான் பார்த்துட்டு இருக்கேன். மனசு ஒரு மாதிரி ரிலாக்ஸ்ஸா இருக்கு. வெளில நாளு பேர் கிட்ட பேசி பழகுறனால ஒரு மாதிரி மனசுக்குத் தைரியம் வந்திருக்கு. எல்லாமே உங்களால் தான்! நீங்க எப்படி நல்லவங்களா இல்லாம போவீங்க" அவளறியாமலே அவனுக்காகவே அவனிடம் வாதாடி பேசிக் கொண்டிருந்தாள் சிந்துஜா.


சிந்துவின் அருகில் அமர்ந்திருந்த கந்தசாமியின் முகம் புன்னகையில் மிளிர்ந்தது. மகனுக்கான பெருமிதமும் அதில் ஒளிர்ந்திருந்தது.


இன்பாவின் இன்பத்தை மீட்டு தந்திருந்தாள் சிந்து.


"தேங்க்யூ சிந்து! ஹேப்பி டு ஹியர் திஸ். நீ இன்னும் நிறையக் கத்துக்கிட்டு முன்னேறனும்" என்றான்.


"ஹ்ம்ம் கண்டிப்பா! உங்க மெயில் ஐடி தாங்க. நான் அப்ப அப்ப உங்ககிட்ட சொல்லனும்னு நினைக்கிறதெல்லாம் மெயில் செய்றேன். வாழ்நாள் முழுமைக்கும் நீங்க இப்படி என்னோட வெல் விஷ்ஷரா இருக்கனும்னு தான் என்னோட ஆசை" என்றவள் மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டுக் கந்தசாமியிடம் கைபேசியை அளித்தாள்.


இன்பா சிங்கப்பூர் சென்று ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்குத் திரும்பி வந்தப்போது, தனது வீட்டு வேலையாளாய் சிந்து மாறியிருந்ததைக் கண்டு கொதித்துப் போனான் இன்பா.0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page